PDA

View Full Version : அது



ஐரேனிபுரம் பால்ராசய்யா
30-06-2009, 10:13 AM
அந்த பழையகால பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டி, அதில் பயன்படுத்திய பழைய மேசை, பெஞ்ச்,டெஸ்க், நாற்காலி போன்றவற்றை ஏலம் விட்ட போது, அதிக ஏலம் கேட்டு வாங்கி வந்தான் ஆனந்த்.

ஆனந்தின் மனைவி சந்திரா அவனை கிண்டல் செய்தாள்.

`` அவன் படிச்ச பள்ளிக்கூடம் இருந்தப்போ, இது நான் படிச்ச பள்ளிக்கூடமுன்னு நாலு பேருகிட்ட பெருமையா சொல்வான், இப்போ கட்டடம் போன பிறகு அதுல பயன்படுத்தின மரச்சாமான்களைப் பார்த்தாலாவது ஒரு சந்தோஷம் கிடைக்குமுன்னுதான் ஏலம் எடுத்திருப்பான், இல்லையாடா?’’ ஆனந்தின் தந்தை அவனுக்கு ஆதரவாக சொன்னபோது ‘ ஆமாம் ‘ என்று தலையாட்டினான்.

அன்று மாலை வெளியே சென்றுவிட்டு வந்த ஆனந்திடம் ஆச்சரியப்பட்டுச் சொன்னாள் சந்திரா.

’’ படிக்கற பசங்க டெஸ்க் மேல காம்பஸ்ஸால சுரண்டி சுரண்டி I LOVE YOU DA ன்னு எழுதியிருக்காங்க பாருங்க!!’’ என்று அந்த டெஸ்கை காட்டினாள்.

அதில் எழுதியிருந்த DA என்ற வார்த்தைக்கு தர்ஷனா ஆனந்த் என்று அவன் முன்னாள் காதலி தர்ஷனா சுரண்டிவிட்டுப்போனது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் மெய்மறந்து அந்த டெஸ்க்கையே கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான் ஆனந்த்.

த.ஜார்ஜ்
30-06-2009, 01:19 PM
எப்படி உங்களுக்கு இப்படி வித்தியாசமான ஐடியாக்கள் கிடைக்கின்றன. பால் ராசய்யா. சின்ன சின்ன விசயங்களை சுலபமாக கதையாக்கி விடுகிறீர்களே

சிவா.ஜி
30-06-2009, 01:45 PM
பழைய மரச் சாமானில் ஒளிந்திருந்த காதல் வெளிவந்து, ஆனந்துக்கு மீண்டும் அந்த வசந்தகாலத்தை நினைவுப்டுத்தியதே....

அழகான குறுங்கதை. வாழ்த்துகள் ஐ.பா.ரா அவர்களே.

அமரன்
30-06-2009, 04:29 PM
உடல் மரத்தாலும் உள்ளம் மரத்தாலும் முதல் காதல் மறப்பதில்லை. மரத்தாலும் காதல் வாழுமெனப் பாடம் நடத்திய பள்ளிக் காதல் அருமை. பாராட்டுகள் ஐபாரா.

மஞ்சுபாஷிணி
30-08-2009, 05:34 PM
மலரும் நினைவுகள் சொல்லும் காதல் கதை இது... காதலித்தவரை மணக்காது போகும் வலியும்... அவர் சம்மந்தப்பட்ட பொருளை பத்திரமாக காப்பது பார்த்திருக்கேன்.. அழகான கதை... நன்றி பால்ராசய்யா...

கா.ரமேஷ்
31-08-2009, 05:39 AM
அவர் மனைவிக்கு அது பழைய மேசை, அவருக்கு பழைய நினைவுகள்...

நிச்சயமாக பள்ளி காலங்களில் மேசையை கிறுக்காதவர்கள் இருக்க முடியாது....

நல்ல நினைவுகள் வாழ்த்துக்கள்..

ஐரேனிபுரம் பால்ராசய்யா
31-08-2009, 08:23 AM
பராட்டிய அனைத்து இதயங்களுக்கும் நன்றி. குறிப்பாக மஞ்சுபாஷிணிக்கும் ரமேஷ்க்கும் சிறப்பு நன்றி. பலமாதங்களுக்கு முன்பு எழுதிய கதையை அடையாளம் கண்டு தற்பொழுது பாராட்டியமைக்கு.

ஓவியன்
01-09-2009, 05:26 AM
நல்ல காலம் அதில் ஆனந்தின் முழுப்பெயரில்லாமல் A என்ற எழுத்து மட்டும் இருந்தது... :)

வித்தியாசமான கதைக் கருவில் வித்தியாசமான குறுங்கதை, வாழ்த்துகள் ஐயா..!! :icon_b: