PDA

View Full Version : தாலாட்டு மாறிபோனதே



ரங்கராஜன்
29-06-2009, 06:46 PM
தாலாட்டு மாறிபோனதே

உன் சோகம் என் ராகம்
ஏனென்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யார் என்று பார்க்கிறாய்

உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே
இது போதுமே (ஏஏஏஏஏ)

தாலாட்டு மாறிபோனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்த நீ (ஈஈஈஈஈஈஈ)

இளையராஜாவின் குரலில் அந்த தெய்வீகப்பாடல் பஸ் முழுவது ஒலித்தது, பஸ்ஸில் இருந்த சொர்ப்ப பயணிகள் அனைவருக்கும் கண்கள் சொக்கியது அந்த பாடலை கேட்டவுடன். ரமேஷ் அந்த பஸ்ஸின் இடது ஓரத்தில் அமர்ந்து இருந்தான், பாடலை ரசித்தபடியே தூங்காமல் ஜன்னல் வழியாக இயற்கையை ரசித்துக் கொண்டே வந்தான், பழனி டூ கொடைக்கானல் ரூட் என்பதால் பல விதமான அழகு காட்சிகள் தென்பட்டது. மிதமான குளிர் இருந்தது. மலை ஏறும் பொழுது பலருக்கும் வாந்தி வருவதை போல இருந்தாலும் இளையராஜாவின் குரல் அதை வராமல் தடுத்து நிறுத்தியது. ரமேஷ் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது
ஒரு கார் அந்த பஸ்ஸை கடக்க முயன்றது, காருக்குள் ரமேஷ் பார்த்தான், அழகான 2 வயது குழந்தை தன்னுடைய அம்மாவின் மடியில் அமர்ந்துக் கொண்டு ஜன்னல் வழியாக இவனை பார்த்து சிரித்தது. அந்த குழந்தை நல்ல புசுபுசுவென்று மெத்தை போல தன்னுடைய அம்மாவின் மடியில் அமர்ந்து இருந்தது. அது ரமேஷை பார்த்து சிரிக்கும் பொழுது அழகாக அதனுடைய கொழு கொழு கன்னத்தில் குழி விழுந்தது, தன்னுடைய பிஞ்சு விரலை எடுத்து ரமேஷை நோக்கி ஆட்டியது.

ரமேஷுக்கு சந்தோஷமாக இருந்தது, அவனை பார்த்து சிரிப்பவர்களே மிகவும் கம்மி, ஏன் என்று தெரியவில்லை அவனுக்கு?. சின்ன வயதில் இருந்து அவனிடம் யாரும் நட்பு பாராட்டுவது கிடையாது. ஏன் அவன் கருப்பாக இருப்பதாலா? பெரிய அந்தஸ்து இல்லாத குடும்பம் என்பதினாலா? சிரித்து பேசத்தெரியாததினாலா? பெண்களை கவர தெரியாததினாலா? அறிவு கொஞ்சம் கம்மி என்பதினாலா? எது என்று சரியாக தெரியவில்லை. அவன் படித்த பி.பி.ஏ வுக்கு ஏற்றார் போல கொடைக்கானலில் ஒரு சின்ன டீ எஸ்டேட்டில் அவனுக்கு ஒரு அக்கவுண்டண்ட் வேலை கிடைத்தது, சொந்த ஊர் பழனி.
சின்ன வயதில் இருந்து தனியாகவே தன்னுடைய பொழுதுகளை கழித்ததால் அவனுக்கு யாருடனும் தானாக பேசும் விருப்பமும் இருந்தது இல்லை. குறிப்பாக குழந்தைகளிடம் இவனை கண்டாலே குழந்தைகள் அலறிக் கொண்டு அழ ஆரம்பித்து விடும், இவன் தெருவில் பல குழந்தைகளுக்கு அவர்களின் அம்மாவின் சொல்படி பல ஆண்டுகளாக பூச்சாண்டியாக இருந்து இருக்கிறான். அப்படி மனம் நொடிந்து இருந்த அவனை நோக்கி அந்த காரில் இருந்த குழந்தை கையை அசைக்க அவனால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. இவனும் கையை அசைத்தான், அந்த குழந்தை இன்னும் சந்தோஷத்துடன் தன்னுடைய முன் சின்ன இரண்டு பற்கள் தெரிய
சந்தோஷத்துடன் வேகமாக கையை அசைத்தது. இவன் மனதில் பல பூக்கள் பூப்பது போல இருந்தது, ஆனால் அந்த பூக்கள் கொஞ்ச நேரத்திலே மறைந்தது, காரணம் அந்த கார் வேகமாக அந்த பஸ்ஸை கடந்து சென்றது. இவனுக்கு அந்த பிரிவை தாங்க முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு தெய்வத்திடம் தானாக முறையிட ஆரம்பித்தான்.

“என்னை எதற்கு படைத்தாய், ஏன் என்னை ஒரு செல்லாத காசாக படைத்தாய், யாருக்கும் உபயோகம் இல்லாமல், யாரும் என்னை காதலிக்கவில்லை, நானும் யாரையும் காதலிக்கவில்லை. வயது பசங்களுக்கு உள்ள எந்த ஒரு சந்தோஷத்தையும் நான் அனுபவித்தது இல்லை. சிகரெட் குடித்தது இல்லை, தண்ணி அடித்தது இல்லை, என் அப்பா அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. பெண்களை இதுவரை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது இல்லை, ஏன் நினைத்தது கூட இல்லை. நல்லவனாக தான் வாழ்ந்து வருகிறேன். நான் எதிர்பார்ப்பது எல்லாம் என்ன ஒரு நண்பன், நான் சாயந்து இளைபாற ஓரே ஓரே தோள், என் கண்ணீரை துடைக்க ஓரே ஓரே விரல், நான் சிரித்தால் கூட சிரிக்க ஒரு உதடு, அவ்வளவு தானே கேட்கிறேன். என்னை ரசிச்ச ஒரு சின்ன குழந்தையை கூட என்னிடம் ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க வைக்க மாட்டாயா?. உன்னிடம் எத்தனை முறை தான் முறையிடுவது........... செவுடன் டா நீ” என்று அவன் கோபத்தில் அந்த கடைசி வார்த்தைகளை மட்டும் வாயை திறந்து சொன்னான்.

பஸ் அந்த குறுவான வலைவில் பேர் இரைச்சலுடன் நின்றது, பயணிகள் எல்லாரும் தங்களின் முன்னாடி சீட்டில் இடித்துக் கொண்டார்கள். மூக்கு, வாய், தலை என்று சிலருக்கு அடிப்பட்டது. எல்லாரும் டிரைவரை நோக்கி கத்தினார்கள். ஆனால் டிரைவர் பஸ்ஸைவிட்டு அவசர அவசரமாக இறங்கி கீழே ஓடினான். எல்லாரும் திபு திபு வென கீழே ஓடினார்கள். ரமேஷ் தன்னுடைய ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான் கொஞ்ச தூரத்தில் எதோ ஆக்ஸிடண்டு போல இருக்கு, கூட்டம் விலக விலக அவன் ஜன்னல் வழியாக பார்த்த அந்த கார் தெரிந்தது, அப்பளம் போல நொறுங்கி இருந்தது. ரமேஷுக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றுவிடும் போல ஆகிவிட்டது. அவசரமாக எழுந்தான் சீட்டு தடுக்கி கீழே விழுந்தான். அவசரத்தில் தன்னுடைய ஊன்றுகோலை எடுக்க மறந்துவிட்டான். ஆம் ரமேஷுக்கு ஒரு கால் இல்லை, அவசர அவசரமாக படிக்கட்டில் இருந்து இறங்கினான். வேகமாக நொண்டிக் கொண்டு அந்த இடத்திற்கு சென்றான். கார் அப்பளம் போல நொறுங்கி இருந்தது, உள்ளே டிரைவர் சீட்டில் ஓரு ஆண் மாட்டி இருந்தார், உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார், காரின்
ஸ்டேரிங் அவரின் மார்பில் குத்தி கொண்டு இருந்தது, ரத்தம் வேகமாக கசிந்துக் கொண்டு இருந்தது. எல்லாரும் அவரை காப்பாற்ற உதவி செய்துக் கொண்டு இருந்தார்கள், கொஞ்ச தூரத்தில் புடவை விலகிய
நிலையில் அந்த குழந்தையை வைத்து இருந்த தாய் கிடந்தாள். உடல் முழுவதும் ரத்தம். ரத்தம் முழுவதும் சதைகளாக இருந்தது அவள் உடல். அவள் இறந்து விட்டாள் அதனால் இருக்கும் கொஞ்ச கூட்டமும்
உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் அந்த ஆணை காப்பாற்ற உதவிக் கொண்டு இருந்தார்கள், சிலர் ரத்தத்தை பார்த்தவுடன் வாந்தி எடுத்தபடி தூரம் நின்றுக் கொண்டு இருந்தார்கள், சிலர் அவசரமாக வேறு பஸ்ஸை பிடித்து போய் கொண்டு இருந்தார்கள். உடைகள் விலகிய நிலையில் இருந்த அந்த தாயை பார்க்க ரமேஷுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது, ரத்தகரையுடன் விலகி இருந்த அந்த சேலையை எடுத்து அந்த பெண்ணின் மீது போர்த்தினான்

அவன் கைகள் முழுவது ரத்தமாக மாறியது. அந்த தாய் கண்களை திறந்தபடியே இறந்து இருந்தால். கொஞ்ச நேரம் ரமேஷ் அப்படியே அந்த மதில் சுவரின் மீது சோர்வில் அமர்ந்தான், அப்பொழுது தான் அவனுக்கு அந்த குழந்தையின் ஞாபகம் வந்தது. தன்னுடைய ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு அந்த கார் இருக்கும் இடத்திற்கு நொண்டிக் கொண்டு சென்றான். கார் உள்ளே ரத்த சகதியாக இருந்தது, குழந்தை அந்த விபத்தில் இருந்து தப்பிப்பதற்கு சாத்தியமே இல்லை.

ஆம்புலன்ஸ் வந்தது, அதற்குள் அந்த ஆண் இறந்தும் போனான், ஆம்புலன்ஸ் தான் வந்த வேலையை அதாவது பிணங்களை தூக்கிக் கொண்டு சென்றது. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ரமேஷ் பஸ்ஸில் ஏறி போகவில்லை, விபத்து நடந்த இடத்திலே அந்த மதில் மீது உக்கார்ந்தான். அவனும் ஒரு பிணம் போல இருந்தான், அவன் சற்று முன் பார்த்த காட்சிகள் அவன் கண்முன் ஓடியது,

“கொழு கொழு குழந்தை பார்த்து சிரிக்கிறது,.............. கையை ஆட்டுகிறது............... சிரிக்கிறது.............முன் பக்க இரண்டு பற்களை காட்டுது......... ரசித்து சிரிக்கிறது............ இப்பொழுது ரத்தத்துடன் ரத்தமாக கூழாகி விட்டது”

ரமேஷுக்கு அழு வேண்டும் போல இருந்தது, ஆனால் அழுகை வரவில்லை. அமைதியாக அமர்ந்து இருந்தான் அந்த விபத்து நடந்த இடத்தை பார்த்தபடியே, ரத்த கறைகள் கூட வாகனப் போக்குவரத்தால் மறைய தொடங்கியது. அந்த இறந்த தாயின் கண்களை அவனால் மறக்க முடியவில்லை, இறந்தும் திறந்து இருந்த கண்கள், வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் அந்த தாய், அதற்கு நேராக மதிலின் மீது தான் ரமேஷ் அமர்ந்து இருந்தான். அவள் அங்கு இருப்பது போல
நினைத்து அவளையே அங்கையே பார்த்துக் கொண்டு இருந்தான். ஏன் அவள் இந்த பக்கம் பார்த்தாள், என்று நினைத்தவாரே அந்த மதிலுக்கு பின்னாடி பார்த்தான், ஒரு புதருக்கு நடுவில் நர்க்கி டவல் தெரிந்தது. உடனே எகிறிச் சென்று அந்த புதரை விலக்கி பார்த்தான், அழகாக டர்க்கி டவல் சுத்திய படி உதடுகளை பால் குடிப்பது போல சப்பிக்கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தது அந்த கொழு கொழு பாப்பா. அதை பார்த்தவுடனே ரமேஷுக்கு கண்களில் பொல பொலவேன கண்ணீர் வந்து விட்டது. அப்படியே அதை தூக்கினான். ஒரு கையால் குழந்தையை தன்னுடைய நெஞ்சில் அணைத்துக் கொண்டான், மறுகையால் கட்டையை வைத்து சந்தோஷத்துடன் தன்னுடைய வீட்டை வந்து அடைந்தான். வீட்டிற்கு வந்தவுடன் குழந்தைக்கு எங்கையாவது அடிப்பட்டு இருக்கிறதா? என்று டிரஸை அவிழ்த்து பார்த்தான், எதுவும் இல்லை, குழந்தை அப்படியே இருந்தது. தெய்வத்தை முதல் முறையாக பாராட்டினான்.

“அட ஆண்பள குழந்தை, இந்த குழந்தையை இப்போ என்ன செய்வது போலீஸிடம் ஒப்படைத்து விடலாமா? இல்ல நாமே வைத்துக் கொள்ளலாமா? ஐய்யய்யோ குழந்தை அசிங்கம் எல்லாம் செய்து வைக்குமே அதை யார் துடைப்பது தினமும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் கூட பரவாயில்லை. தினமும் எல்லாம் நம்மால் செய்ய முடியாது. பால் வேற குடுக்குணும் நமக்கு வேற அது வராதே, அதான் பால் போடற பாட்டி வராதே. எப்படி பாலை காய்ச்சி குடுப்பது. வேண்டாம் இந்த ரிஸ்கு காலையில் முதல் வேலையா இந்த குழந்தையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துவிடலாம்........ எதோ ஒரு வேகத்தில் செய்யப்போய் இப்படி பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமே. நமக்கே ஒரு கால் தான் இருக்கு, நம்மே கீழே விழுந்தால் வேறு யாராவது தான் தூக்கிவிடவேண்டும், இதில் எங்கு இருந்து நாம் குழந்தையை வளர்ப்பது” என்று தனக்குள் பல விவாதங்களை செய்துக் கொண்டான் ரமேஷ்.

மணி பத்தானது அவனுக்கு சந்தேகம் வந்தது குழந்தை உயிருடன் இருக்கா கண்னே விழிக்கவில்லையே என்று சந்தேகத்தோடு குழந்தையை கிட்டே சென்று பார்த்தான். அந்த சின்ன மூக்கில் விரலை வைத்து பார்த்தான், லேசாக காத்து வந்தது, அப்புறம் துணியை விலக்கி குழந்தையின் தொப்பையை பார்த்தான், சற்று ஏறி இறங்கியது, குழந்தையின் நெஞ்சில் காதை வைத்து பார்த்தான், பட்டாம்பூச்சியின் இரக்கைகள் அடிப்பது போல குழந்தையின் இதயம் அடித்தது. ஆஆஆஆ அப்பாடா குழந்தை உயிருடன் இருக்கு, பரவாயில்லையே சத்தமே போடவில்லை நல்ல குழந்தையா இருக்கே என்று நினைத்துக் கொண்டு குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து விட்டு இவன் கீழே படுத்தான். கண் இழுத்துக் கொண்டு சென்று அவனுக்கு “வீல்ல்ல்ல் ” என்று சத்தம் கேட்டது. அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் ரமேஷ்,

அந்த புசுபுசுப்பாப்பா எழுந்து குப்புற படுத்தபடி கைகளை சப்போர்ட்டுக்கு வைத்துக் கொண்டு தலையை தூக்கிக் கொண்டு அழுதது...... ஐய்யய்யோ போச்சுடா என்ன பண்றது, பால் இல்லையே எப்படி அழுவதை நிறுத்துவது?, ஏன் அழுவுது? ஒரு வேளை உடம்பு வலியா இருக்குமோ அமிர்தாஞ்சன் தடவலாமா? இல்லை எதாவது அசிங்கம் பண்ணி வச்சி இருக்கா என்று குழந்தையின் கால்களை தூக்கிப்பார்த்தான் எதுவும் இல்லை? அப்பாடா தப்பிச்சேன் என்று நினைத்துக் கொண்டான்.

“இப்ப எதுக்கு அழுவுற நீ” என்று குழந்தையை பார்த்து கேட்டான். அது இன்னும் அதிகமான சத்தத்தில் அழுதது.

“பசிக்குதா? எனக்கும் தான் பசிக்குது, உன்னை தேடவே எனக்கு நேரம் போச்சு இப்ப தான் நானே வீட்டுக்கு வந்தேன்”

“ஞஞஞஞஞஞஞஞ”

“நீ என்ன தான் கத்தினாலும் என்னிடம் உன்னுடைய சாப்பாடு இல்லை, சும்மா பேச்சுக்கு தான் என்னிடம் இருக்கு, அதுல நீ எதிர்பார்க்கிற சமாச்சாரம் இல்லை”

“ஞஞஞஞஞஞஞஞ”

“தமிழ்ல தானே சொல்றேன் ஒரு வாட்டி சொன்னா புரியாதா உனக்கு, ஒருவேளை நீ இந்திக்காரன் குழந்தையோ...... ஓ ஓ சாரு அதான் சும்மா பொழுக்கு மொழுக்குன்னு இருக்கீயா”

“ஞாஞாஞா ஞாஞாஞா”

“எனக்கு இந்தி வராது, மாலும் நைய் மாலும் நைய்” என்றான் அந்த குழந்தையிடம் சென்று, இவன் கிட்ட போகவும் குழந்தை பம்பை திறந்துவிடவும் சரியாக இருந்தது, சரியாக முகத்தில் அடித்தான் நம்பர் ஒண்ணை. ஒரு நிமிடம் ரமேஷுக்கு ஒன்றும் புரியவில்லை எங்கு இருந்து வருகிறது தண்ணி அதுவும் இவ்வளவு வேகமாக என்று குழம்பினான், அப்புறம் தண்ணீர் வரும் குழாயை பார்த்துவிட்டு ........................ஐய்யய்யோ என்று பாத்ரூமுக்கு சென்று முகத்தை சோப் போட்டு அலம்பினான் மூன்று முறை. முகத்தில் டவல் போட்டபடி நடுவில் இருக்கும் ஓட்டை வழியாக குழந்தையிடம் வந்து பார்த்தான் குழந்தை இப்போ அழவில்லை, சிரித்தது கை கால்களை ஆட்டிக் கொண்டும், தன்னுடைய நாவாப்பழ கண்களை உருட்டிக் கொண்டும். குழந்தைக்கு அடியில் இருந்த ஈர டவலை எடுத்து வேறு டவல் வைத்தான் ரமேஷ். மறுபடியும் குழந்தை அழ ஆரம்பித்தது, குழந்தையின் வயிறு ஒட்டி இருந்தது, பசியால் குழந்தை அழுகிறது, என்ன செய்வது என்று தெரியவில்லை

“சரி வரீயா வெளியே போய் சாப்பிட்டு விட்டு வரலாம்”

“ஞஞஞ”

“பரோட்டா சாப்பிடுவீயா”

“ஞஞஞஞஞஞஞஞ”

“சரி சரி பால் மட்டும் தான் வேணுமா”

“ஞஞ”

“சரி வா, குளிரு தாங்குவீயா, இரு டவலை சுத்தி விடுறேன், இந்த மஃப்லரை சுத்திக்கோ..............டேய் சும்மா வல்லரசு விஜயகாந்த் மாதிரி இருக்கடா”

“ஞஞஞஞஞஞஞஞ”

“சரி சரி சிவாஜீ படத்துல வர மொட்டை ரஜினி மாதிரி இருக்கடா”

“ஞஞ”

ரமேஷ் குழந்தையை ஒரு கையால் தோளில் போட்டுக் கொண்டு, மறுகையால் தடியை பிடித்தபடி வெளியே குளிரில் நடக்க ஆரம்பித்தான். குழந்தையின் காதில் போய் பேச ஆரம்பித்தான்

“டேய் சேட்டு மகனே கத்தி கித்தி தொலையாத, இந்த தெருவில் தெரிஞ்சவங்க எல்லாம் இருக்காங்க, அப்புறம் நாம மாட்டிக்குவோம், என்னால வேகமா எல்லாம் நடக்க முடியாது, புரியுதா? நானே நொண்டி டா, ஒரு கால் தான் இருக்கு, உனக்கு என்ன கேடு இரண்டு கால் இருக்கு இல்ல நடந்து வர மாட்டீயோ, ஹா ஹா ஹா என்ன ஜோக்கு புரியலையா. நான் சொல்றது புரியுதா? இல்ல இந்தியில சொல்லட்டுமா?”

“ஞஞ”

“எனக்கு இந்தி தெரியாது டா சேட்டு மகனே, என்ன முறைக்குற..........முறைச்சாலும் நீ அழகா தாண்டா இருக்க, உங்க அம்மா அப்பா செத்துட்டாங்களே உனக்கு அது தெரியுமா????”

“ஞஞாஞாஞாஞாஞா”

“தெரியாதா, அப்ப சரிவிடு அவங்க நல்ல தான் இருக்காங்க, ஊருக்கு போய் இருக்காங்க. என்கிட்ட உன்னை விட்டுட்டு சரியா.............., நாளைக்கு வந்துடுவாங்க..........இல்லை இல்லை ஒரு வாரம் ஆவும்னு நினைக்கிறேன்”

“ஞஞஞ”

“சரி போர் அடிக்குது ஒரு பாட்டு பாடேன்,.......... சரி ஒரு திருக்குறளாவது சொல்லேன்........... ஓ நீ இந்திகாரனா....... மொறியாரே பாப்பா மொறியாரே அந்த பாட்டு தெரியுமா........ தெரியாதா, என்ன சிரிக்குற சிரிக்காத போக்க வாயா”

“ஞஞாஞாஞாஞாஞா”

“என்ன தான் தெரியும், நல்லா பால் குடிக்க தெரியும், லோடு ஆனவுடனே அன்லோடு செய்ய தெரியும். இதோ பாரு என்னால உன்னை சுத்தம்படுத்த முடியாது, அப்படி எதாவது உனக்கு வந்தா நீயே தான் போய் பாத்ரூமில் செஞ்சிக்கனும் சொல்லிட்டேன்”

“ஞஞாஞாஞாஞாஞா” என்று வேகமாக தலையை ஆட்டியது அந்த புசுபுசுப்பாப்பா.

“அந்த பயம் இருக்கட்டும்....... சரி எதுக்கு என்னை பார்த்து நீ காரில் போகும் போது சிரிச்ச......... என்னை புடிச்சி இருக்கா உனக்கு”

“ஞஞஞ”

“அப்படியா...(கலங்கிய கண்களுடன்) ரொம்ப சந்தோஷம் டா, நீ என் கூடவே இருந்துடுறீயா நான் உன்னை நல்லா பார்த்துப்பேண்டா, என் கூட யாருமே பேசறது இல்லடா, நீயாவது இருடா.......... உன்னை நல்லா பார்த்துப்பேன், பாத்ரூம் எல்லாம் நானே கூட்டினு போறேன் டா
சத்தியமா டா இறந்துப்போன.....இல்ல இல்ல ஊருக்கு போன உங்க அம்மா மேல சத்தியமாடா”

“ஞஞஞ”

“இருக்கியா சத்தியமாவா, என் கையில் சத்தியம் போடு சத்தியம் போடு (அந்த குழந்தையின் பிஞ்சு கையை எடுத்து இவன் தன் கையில் வைத்து சத்தியம் செய்துக் கொண்டான்) டேய் சேட்டு பையா சத்தியம் செஞ்சி இருக்க மகனே எங்கையாவது என்னை விட்டு ஓடின அவ்வளவு தான் உன்னை, தேடி வந்து உன் மூக்கில் குத்துவேன்
அப்புறம் பொல பொல வேன ரத்தம் வரும்,............சரி என்ன எதுக்கு உனக்கு புடிச்சி இருக்க்னு சொல்லேன்.........ப்ளீஸ் டா சொல்லுடா,,,,,,,,,,ம்ம் பரவாயில்லை இந்தியிலே சொல்லு நான் புரிஞ்சிக்கிறேன். சொல்லமாட்டீயா, இனிமேல் நீ தான் டா எனக்கு எல்லாம், எனக்கு இந்த உலகமே பிடிக்கலை டா சேட்டு பையா...... நீ ஒருத்தன் போதும் டா. எனக்கு நீ தான் கொல்லி போடனும் டா......... உங்க அம்மாவும் அப்பாவும் எனக்காக தான் உன்னை விட்டுட்டு போய்ட்டாங்க..........ஊருக்கு தான் ஊருக்கு தான். பாரேன் உன்னை பார்த்து முழுசா ஒரு நாள் கூட ஆகலை. அதுக்குள் என் வாழ்நாளே நீன்னு ஆயிடுச்சு டா சேட்டு பையா..........சரி என்ன எதுவுமே பேச மாட்ற, ஞஞஞ எதாவது சொல்லுடா. சரி இரு எனக்கு மூச்சு வாங்குது டா, கொஞ்ச நேரம் இப்படி உக்காரலாம்”

என்று அங்கு இருந்த ஒரு கல்லின் மேல் உக்கார்ந்தான் ரமேஷ், மடியில் குழந்தையை போட்டுக் கொண்டு, குழந்தையை பார்த்தான் குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது, பின் மண்டையிலும் ரத்தம் வழிந்து இருந்தது, குழந்தையின் மூக்கில் விரலை வைத்து பார்த்தான் ரமேஷ், சுவாசம் இல்லை

“டேய் சேட்டு பையா, சேட்டு பையா ...........எந்திரிடா எந்திரிடா........... இப்ப தானே என் கையில் அடிச்சி சத்தியம் செஞ்ச என் கூடவே இருக்கிறேன்னு........ எங்கடாப்போன டேய் டேய் நான் பேசறது கேட்குதா........எனக்கு இந்தி தெரியாதுடா........ ஏந்திரிடா டேய் சேட்டு சேட்டு நிஜமாவே செத்துட்டீயா டா................ டேய் இப்பதானே என்ன பார்த்து சிரிச்ச......,,,,,,,,,,, டேய் சேட்டு உன் மூக்குல ரத்தமா இருக்குடா ........... எங்க அம்மா சத்தியமா நான் உன் மூக்குல குத்தல டா..... அதுவாவே வருதுடா ........டேய் இப்ப தானடா சொன்னேன் எனக்கு நீ தான் கொல்லிப்போடனும்னு, தலையை தலையை ஆட்டினீயே டா ............... சரியான பொய் சொல்ற கம்ணாட்டிடா நீ.......... ஒழுங்க நான் பாட்டுக்குனு என் வழியை பார்த்து போயி இருப்பேன் இல்ல, எதுக்கு என்ன பார்த்து சிரிச்ச, எதுக்கு சிரிச்ச சொல்லுடா சேட்டு சேட்டு........... எதுக்கு சிரிச்ச சொல்லு.....சொல்லு... சரி தூக்கம் வருதா இப்ப தூங்கு காலையில் நாம பேசிக்கலாம் சரியா....... ஆனா காலையில் நீ பேசணும் என்ன பார்த்து ஏன் சிரிச்சன்னு சொல்லனும்” என்று அந்த இறந்த குழந்தையை நெஞ்சில் போட்டபடி நடு இரவில் குழந்தையின் முதுகை தட்டிக் கொண்டு இருந்தான் ரமேஷ். உடல் விறைத்தபடியே இருந்த அந்த புசுபுசு குழந்தையின் ஆன்மா தன்னுடைய பெற்றோறை அடைந்தது.
ரமேஷின் காதுகளில் குழந்தையின் அந்த “ஞஞஞஞ” சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

எங்கோ டீ கடையில் பாடல் ஒலித்தது.

கண்ணீரில் சந்தோஷம் நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு என் தோளில்
கண்மூடு சுகமா இரு (ஊஊஊஊ)

தாலாட்டு மாறிபோனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண்மூடு
என் சொந்த நீ (ஈஈஈஈஈஈஈ)

http://www.babble.com/CS/blogs/strollerderby/2008/10/23-End/baby.jpg

samuthraselvam
30-06-2009, 04:35 AM
என்ன சொல்வதென்றே தெரியவில்லை....

அண்ணா மனது மிகவும் பாரமாக இருக்கிறது...

கதையின் போக்கிலேயே மனமும் பயணிக்கிறது...

காட்சிகள் கண் முன்னே விரிகிறது...

படித்து முடித்தும் மனம் அதிலிருந்து இன்னும் விலக மறுக்கிறது...

கண்களின் ஈரம் படிக்க படிக்க அதிகரிக்கிறது...

உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை...

இக்கதைக்கு ஐந்து நட்சத்திரம் தந்து வாழ்த்துகிறேன்...

கீதம்
30-06-2009, 05:08 AM
ஒரு நாளைக்குள் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் என்றாலும் பலநாட்கள் நம் நெஞ்சம் விட்டு அகலாது. அது நிச்சயம். வாழ்த்துகள்.

த.ஜார்ஜ்
30-06-2009, 01:15 PM
தக்ஸ்-
துயரம் பெருக்கெடுக்கிறது. இது போன்ற குழந்தை மரணம் சமீபத்தில் சந்தித்து ரணமாகி இருந்தேன்.அது இன்னும் அதிகமாகி......

ஆயினும் கதையின் சுய புலம்பல் பகுதியை சற்று சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எனக்கு தோன்றியது

சிவா.ஜி
30-06-2009, 01:57 PM
கொஞ்ச நேரத்துக்கு முன்னால முகம் கொள்ளா சிரிப்போட இருந்த குழந்தை, இறந்த குழந்தையாகி மடியில் கிடக்கும் வேதனை வரிகளில் தெரிகிறது தக்ஸ்.

சின்ன சம்பவம் ஆனால் கனமாக மனதில் விழுந்துவிட்டது. இயலாத ஒருவனுக்கு, அன்புகாட்ட யாருமில்லாத ஒருவனுக்கு இறைவனே கொடுத்த பரிசைப்போல வந்த குழந்தை, சொற்ப நேர சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டு, ஆயுள் முழுக்க ரணத்தையும் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டதே.

மனதை பாதித்த கதை.

ரங்கராஜன்
01-07-2009, 03:09 AM
இக்கதைக்கு ஐந்து நட்சத்திரம் தந்து வாழ்த்துகிறேன்...

நன்றி பாசமலரே

கதை உனக்கு பிடித்து இருந்ததை கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உனக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்

ரங்கராஜன்
01-07-2009, 03:15 AM
ஒரு நாளைக்குள் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் என்றாலும் பலநாட்கள் நம் நெஞ்சம் விட்டு அகலாது. அது நிச்சயம். வாழ்த்துகள்.


நன்றி கீதம்

நீங்கள் சொல்வது 100 உண்மை தான், ஒரு விஷயம் நம்மை பாதிக்க கால அவகாசம் முக்கியம் இல்லை, ஒரு நொடிப் பொழுது போதும். அது நம் மனதில் எந்த அளவு இறங்குகிறது என்பது தான் முக்கியம் கீதம். அதில் மிக முக்கியமானது

குழந்தையின் சிரிப்பு

பெண்ணின் கொஞ்சும் பார்வை

அப்பாவின் அதட்டல்

அம்மாவின் அழுகை

நண்பனின் சந்தேகம்

ஆசிரியரின் பாராட்டு

ரங்கராஜன்
01-07-2009, 03:29 AM
தக்ஸ்-
துயரம் பெருக்கெடுக்கிறது. இது போன்ற குழந்தை மரணம் சமீபத்தில் சந்தித்து ரணமாகி இருந்தேன்.அது இன்னும் அதிகமாகி......

ஆயினும் கதையின் சுய புலம்பல் பகுதியை சற்று சுருக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என்று எனக்கு தோன்றியது

நன்றி ஜார்ஜ்

கதையை உணர்ந்து படித்தீர்கள் என்பதற்கு உங்களின் விமர்சனமே ஒரு சான்று, சமீபத்தில் ஒரு குழந்தையின் மரணத்தை பார்த்தீர்களா??? ஐய்யோ எனக்கு அந்த அளவு தைரியம் இல்லை ஜார்ஜ், சமீபத்தில் இலங்கையில் நடந்த போரில் ஒரு குழந்தையை அடிப்பட்டு உயிர் இறக்கும் கடைசி நேர வீடியோ காட்சியை நம் மன்றத்தில் நண்பர் ஒருவர் பத்தி இருந்தார், அதை பார்த்து விட்டு பல நாட்கள் தூங்காமல் அந்த குழந்தையின் முகம் என் கூரையில் வந்துக் கொண்டே இருந்தது.

அதனுடைய பாதிப்பில் உருவான கதை தான் இந்த கதை.

இதில் கொஞ்ச சுயபுலம்பல் அதிகமாக இருக்கிறது என்று உணர்ந்தீர்களா?. அது எதற்கு என்று உங்களுக்கு நான் புரியவைக்கும் நிலையில் இருக்கிறேன். ஒரு இளைஞனாக இருப்பவன் என்ன செய்வான், அவனுடைய எண்ணங்கள் எதில் இருக்கும், சினிமா, பெண்கள், போதை, இல்லை படிப்பு, இல்லை விளையாட்டு இதில் தான் இருக்கும். அவர்களை குறை சொல்லவில்லை, அவர்களின் வயது வாழ்க்கை அப்படிபட்டது. அப்படி இருக்கும் ஒரு இளைஞன் இப்படி பாசமாக இருக்க என்ன காரணம்?. அவன் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள், வெறுத்து ஒதுக்கப்பட்டது எல்லாம் சேர்த்து தான். அப்படி அவன் இருந்தாலும் அவனுக்குள் பல டைலமாக்கள், தேவை இல்லாத பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமோ என்ற மனக்குழப்பம். மனிதாபிமானம் கூட அவனுக்கு சுயநலமாக தான் வருகிறது. அவனுடைய புலம்பல்கள் கூட பேச ஆளில்லாத ஒருவன் செடி, மரம், சுவர் கூட பேசுவது போல அந்த குழந்தையிடம் பேசி வந்தான்.

அதனால் தான் புலம்பலில் அளவு அதிகம், அந்த புலம்பலின் ஒவ்வொரு வார்த்தையில் இருந்தும் ஒவ்வொரு கதைக்கு தேவையான விஷயம் நமக்கு புரியும்.

நன்றி ஜார்ஜ்

ரங்கராஜன்
01-07-2009, 03:34 AM
கொஞ்ச நேரத்துக்கு முன்னால முகம் கொள்ளா சிரிப்போட இருந்த குழந்தை, இறந்த குழந்தையாகி மடியில் கிடக்கும் வேதனை வரிகளில் தெரிகிறது தக்ஸ்.

சின்ன சம்பவம் ஆனால் கனமாக மனதில் விழுந்துவிட்டது. இயலாத ஒருவனுக்கு, அன்புகாட்ட யாருமில்லாத ஒருவனுக்கு இறைவனே கொடுத்த பரிசைப்போல வந்த குழந்தை, சொற்ப நேர சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டு, ஆயுள் முழுக்க ரணத்தையும் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டதே.

மனதை பாதித்த கதை.

ரொம்ப நன்றி அண்ணா

உங்கள் மனதை பாதித்த கதை என்பதில் எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாக இருக்கிறது அண்ணா

நன்றிகள் கோடி

அமரன்
01-07-2009, 08:15 AM
பாலைவனச்சோலையில் தாகத்துடன் அலைபவனுக்கு சொட்டுத்தண்ணீர் கிடைத்தால்.. அதில் உப்புக் கரித்தால்... தாகம் அதிகரிக்கும். அதேபோலத்தான் சிலரது நிலையும். தேர்ந்த சொல்லோவியன் போல் அதனை தத்ரூபமாக வரைந்துள்ளீர்கள்.

கானல்நீர் சொந்தத்தின் இழப்பீடாக குழந்தை மனம் பெற்ற முடிவு முத்தாய்ப்பு. உளப்பிறழ்வுகளுக்கு உள்ளானவர்களை அசிங்கங்களாக நோக்கும் உலகில், அண்டத்தின் மிக அழகான அம்சமான குழந்தையாக பதிவு செய்திருப்பது நெஞ்சைத் தொடுகிறது. உங்கள் மனமுணர்ந்து என் மனமுவக்கிறது.

பாராட்டுகள் தக்ஸ்.

MURALINITHISH
28-09-2009, 08:06 AM
சின்ன குழந்தையின் புன்னகை அவனை எவ்வள்வு ஆனந்த பட வைக்கிறது அப்படி என்றால் அவன் எவ்வளவு துக்கத்தில் இருப்பான் வருந்த வைக்கிறது அவனின் வாழ்க்கை

மஞ்சுபாஷிணி
29-09-2009, 01:10 PM
உருக்கமான கதை தக்ஸ்...

அழகான புசுபுசு குழந்தை...

எல்லாரும் தன்னை வெறுப்பது ஏன்னு கேட்கிற ஒரு கேரக்டர்.. அவனிடம் குழந்தை கிடைக்கிறது...

நல்லா சிரிச்சிட்டே போன குடும்பம் சட்டுனு இறந்து குழந்தை இவனிடம் கிடைக்கிறது அதுவும் சொற்ப நேரமே..

மனம் கனக்க செய்துவிட்டீர்கள் தக்ஸ்... நன்றிப்பா..

இராஜேஸ்வரன்
09-04-2012, 08:16 AM
அழகான 2 வயது குழந்தை தன்னுடைய அம்மாவின் மடியில் அமர்ந்துக் கொண்டு ஜன்னல் வழியாக இவனை பார்த்து சிரித்தது. அந்த குழந்தை நல்ல புசுபுசுவென்று மெத்தை போல தன்னுடைய அம்மாவின் மடியில் அமர்ந்து இருந்தது. அது ரமேஷை பார்த்து சிரிக்கும் பொழுது அழகாக அதனுடைய கொழு கொழு கன்னத்தில் குழி விழுந்தது, தன்னுடைய பிஞ்சு விரலை எடுத்து ரமேஷை நோக்கி ஆட்டியது.


அவனை நோக்கி அந்த காரில் இருந்த குழந்தை கையை அசைக்க அவனால் சந்தோஷத்தை தாங்க முடியவில்லை. இவனும் கையை அசைத்தான், அந்த குழந்தை இன்னும் சந்தோஷத்துடன் தன்னுடைய முன் சின்ன இரண்டு பற்கள் தெரிய சந்தோஷத்துடன் வேகமாக கையை அசைத்தது. இவன் மனதில் பல பூக்கள் பூப்பது போல இருந்தது,

இப்படி அவனின் புண்பட்ட மனதுக்கு ஆறுதல் அளித்த குழந்தை தனது தாய் தந்தையை விபத்தில் இழந்து அவனிடம் வந்து சேர்வதையும், அவன் அந்த குழந்தையிடம் கொஞ்சுவதையும் மிகவும் அழகாக சொன்ன நீங்கள் கடைசியில் அந்த குழந்தை இறந்து விடுவதை சொல்லும் போது படிக்கும் மனது கனக்கிறது.

மனதை தொட்ட ஒரு கதை. பாராட்டுக்கள்.