PDA

View Full Version : நிதானம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-06-2009, 02:07 PM
ஒவ்வொரு விரைவுகளிலும்
தெறித்தெழுந்து ஓடுகிறது
அதைப் பற்றியிருக்கும்
மரண பயமொன்று

உடலின் ஒட்டு மொத்தத்தையும்
உள்ளங்காலின் நடுவிலேற்றி
ஊன் உருக்கியோடுகிறது

கரடு முரடான பாதைகள்
சுவரில் முட்டி நிற்கும் பாதைகள்
விரிந்த சீர் பாதைகளென்றல்லாம்
பேதம் வகுத்தறிந்துச் செல்ல
நேர விசாலமில்லை
அந்த எலிக்கு

அதைப் பொறுத்த மட்டில்
மரணமெதிர்த்த மா போர்
எதிரியார் பூனைக்கோ
அந்த வேளை உணவு
அவ்வளவே!

வியூக வகுத்தல்கள்
சீறிய பாய்ச்சல்கள்
இறுதி கட்ட அவசரங்களெல்லாம்
எலியினளவில் கால் பகுதியில்லை
அந்த பூனைக்கு

நின்று நோக்கும் நிதானிப்புகளில்
வென்று விடுகிறது பூனை
எல்லா முறைகளிலும்.

சிவா.ஜி
28-06-2009, 03:28 PM
எந்த ஒரு போருக்குமுன்பும் அல்லது போரின் போதும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு என்றுமே வெற்றிதான். வாழ்க்கைப்போரிலும்தான்.

தேர்ந்த வார்த்தைகளில், எலி-பூனை கதையோடு நல்ல கருத்து சொன்ன கவிதை.

வாழ்த்துகள் ஜுனைத்.

பாலகன்
28-06-2009, 07:14 PM
பூனையிடம் எலி போர் புரியமுடியுமா? இது வாழ்க்கை போராட்டம். ஒன்றிக்கு உணவாக மற்றொன்று

இளசு
30-06-2009, 06:33 PM
வல்லான் வகுத்ததே வாய்க்கால்..

பூனை - எலி
புலி - மான்
சிலந்தி - பூச்சி


இவையாவது இயற்கையின் விதிப்படி -
உணவுச்சங்கிலியின் கண்களாய்...


அரசன் - ஆண்டி
வெள்ளையன் - கறுப்பன்
மேற்கு - கிழக்கு
ஆண் - பெண்
அரசியல் தலைவன் - தொண்டன்..

இயற்கையின் தராசில் ஏறக்குறைய சமதட்டுகள்..
இருந்தாலும் ஏய்ப்பவர் - ஏமாளி என இரு தளங்கள்..

புரிபடாத விந்தை!

சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் என டார்வின் நியாயப்படுத்திவிட்ட சந்தை!


பாராட்டுகள் ஜுனைத்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
06-07-2009, 05:57 AM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரர்களே.

நாகரா
06-07-2009, 06:58 AM
மரண பயமே
மனித எலியை
மாயைப் பூனைக்கு
உணவாக்கும்!
மரண பயம் விட்ட
அகத் தவ நிதானத்தில்
எலிப் பூனைப் பிரமைகள் நீங்கி
மனிதம் அமர நிலை எய்தும்!

எலிப் பூனைப் போரைக் காட்சிக்குக்
கொண்டு வரும் கவிதை அபாரம்
வாழ்த்துக்கள் ஹஸனீ