PDA

View Full Version : சர்தார்ஜியுடன் ஓர் பயணம்...!!



பூமகள்
25-06-2009, 02:54 AM
சர்தார்ஜியுடன் ஓர் பயணம்..!


வெளி நாட்டு வாழ்க்கையின் எல்லா வித சாதக பாதகங்களும் ஓரளவு அறியப் பெற்ற நாட்களின் ஓர் நாளின் பின் மாலைப் பொழுதில் இரவுணவு முடித்துவிட்டு டாக்சி ஏறி அமர்ந்தோம்.

அது வரை வேற்று நாட்டு முகங்களையே ஓட்டுனர் இருக்கையில் பார்த்தும், புரியாத பெயர் கொண்டு ஒட்டப்பட்ட அடையாள அட்டை கொண்ட காரின் முன் கண்ணாடியும், புரியாத மொழியில் இரைச்சல் பாடல் கேட்டும், அரைகுறை ஆங்கிலம் பேசும் ஓட்டுனரையுமே பார்த்துப் பயணப்பட்ட எனக்கு அன்று வித்தியாசமான அனுபவம்...

ஆம்.. எப்போதுமே டாக்சி ஏறியதும் செய்யும் முதல் காரியம், பெயரைப் பார்த்துப் படித்துக் கொள்வது.. ஏறி அமர்ந்த உடனேயே அழகிய ஆங்கிலத்தில் இயல்பாக பேசும் அந்த வயதான ஓட்டுனரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்..

பின் பெயரைப் பார்த்ததும் மேலும் ஆச்சர்யம்.. சுக்வந்தர் சிங்.. ஆஹா.. இந்தியர் ஒருவரின் காரில் பயணப்படும் முதல் பயணம் இது என்று மனம் குதூகளித்தது.. ஆனால், சிங்குக்கான தலைப்பாகையும் தாடி மீசையும் இல்லாமல் சாதாரண மனிதர் போலவே இருந்தது மேலும் பல்மடங்கு ஆச்சர்யத்தை அளித்தது..

மெல்ல பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.. என்னவரோடு உரையாடிய உரையாடல், அவர்கள் பற்றி "அபியும் நானும்" படத்தில் தலைவாசல் விஜய் பிரகாஷ்ராஜுக்கு சொல்கையில் பிரகாஷ் ராஜ் கொடுக்கும் ஆச்சர்ய முக பாவமே எனக்கும் பயணம் முழுதும் ஏற்பட்டது..

அவரோடு உரையாடியதிலிருந்து என் நினைவில் இருக்கும் சிலவற்றை இங்கு பகிர்கிறேன்..

பேச்சு முதலில் பரஸ்பர ஆரம்பம், இந்த நாடு பிடித்திருக்கிறதா?? எத்தனை ஆண்டுகள் இங்கு இருக்கிறீர்கள்?? என்று வரிசையாக கேட்டு பதில் பெற்ற ஓட்டுனர் அவரே அவர் பற்றி பல தகவல்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்..

சில காலம் இந்தியாவின் சென்னையில் தங்கியிருந்ததாகவும்.. அங்கே சாலை விதிகளையும், சிக்னல்களையும் மதித்து நடக்காத மக்களின் போக்கையும் நகைச்சுவையோடு சொல்லி சிரிப்பில் ஆழ்த்தினார்..

இவரின் அன்றாட பொழுதுபோக்கு, தினமும் சைக்கிளில் சென்று சென்னையில் ஏதேனும் ஒரு ட் ராப்பிக் சிக்னல் இருக்கும் இடத்தில் நின்று அங்கு பணி செய்யும் டிராப்பிக் போலீஸையும் மக்களின் போக்கையும் படம் பிடித்து வேடிக்கை பார்ப்பது என்று சொன்னார்..

இன்கிரிடிபில் இந்தியா என்று நகைச்சுவை பொங்க சொன்னார்... என்ன தான் வெளி நாடு ஆயினும் நம்ம நாடு போல வருமா?? எத்தனை மகிழ்ச்சிகரமான இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நாடு.. இங்கு எங்கு திரும்பினாலும் வணிக வளாகங்கள் தானே?? என்று கேட்டு நம் துக்கத்தில் பங்கெடுத்தார்..

பின்னர் அவரின் அழகிய ஆங்கிலப் பேச்சுக்காண காரணம் புரிந்தது.. கொஞ்ச காலம் அமெரிக்காவில் டாக்சி ஓட்டி வந்ததாகவும், போர் அடித்ததால் இங்கு வந்து சில வருடம் ஆகிறதென்றும் சொன்னார்..

இந்த நாட்டில் இந்தியர்கள் வந்து படும் பாடு பற்றி சொன்னார்.. அத்தனையும் நிஜமென்றே ஆமோதிக்கும் படி இருந்தது.. திரைகடல் ஓடி திரவியம் தேட வரும் நம்மவர்கள் வந்ததும் இங்கு தங்கும் செலவுக்கே பாதிக்கும் மேல் வருமானத்தை இழந்து தவிக்கும் போக்கைப் பற்றி வருத்ததோடு விளக்கினார்..

சென்னையில் தனக்கு அடையாரில் சொந்தமாக வீடு இருப்பதாகவும், அதை யாரோ ஒருவர் ஆக்கிரமித்துவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.. ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட அவருக்கு அளிக்கப்பட்ட யோசனையை நகைச்சுவை பொங்க கூறியது தான் உச்சம்..

இவரது நண்பர் ஒருவர், ரவுடி கும்பலுக்கு பணத்தைக் கொடுத்து சொத்தை மீட்டுவிடலாம் என்று சொல்ல, மற்றொருவரோ, பிரபல அரசியல் தலைவர் அவரின் பெயர் சொல்லி அவரைச் சந்திக்க கூட்டிச் செல்வதாக சொல்லியிருக்கிறார்.. மற்றுமொருவர், அந்த தலைவரின் மகனைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்..

இவற்றுக்கெல்லாம் இவர் அளித்த பதில் தான் பெரும் காமெடி..

தாதா கும்பலுக்கு பணம் கொடுத்தால் கொஞ்ச பணம் போகும்..
தலைவரின் மகனைச் சந்தித்தால் பாதி சொத்து போகும்..

தலைவரைச் சந்தித்தாலோ முழு சொத்துமே போகுமே என்று சொல்லிச் சிரித்தார்.. அதில் இருக்கும் உண்மை உறைத்தது..

இறுதியில் நேர்மையாகவே போராடுவோம் என்று வழக்கு தொடுத்து, பல வருடங்களாக சிவில் கேஸ் நீதிமன்றத்தில் நடப்பதாகச் சொன்னார்..

அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடவே, மேலும் பேசும் ஆவல் இருந்தும் ப்ரியாவிடை பெற்றோம்..

அத்துணை நேரம் பேசிய பேச்சிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் விளங்கியது..

சர்தார்ஜிக்கள் உண்மையிலேயே மிக அதிக தைரியமும் அறிவுக் கூர்மையும் நிறைந்தவர்கள்... அவர்களின் தொலை நோக்குப் பார்வையும் ஒரு விசயத்தை ஆராயும் போக்கும் உண்மையிலேயே வியக்க வைத்தது..

இப்போதெல்லாம் எங்கள் பகுதியில் இருக்கும் நூலகத்துக்கு செல்லும் போதெல்லாம் அங்கு செக்குயூரிட்டியாக நிற்கும் சர்தார்ஜி தாத்தாவைத் தாமாகவே என் கண்கள் தேடுகிறது.. எந்த சர்தார்ஜியை வழியில் பார்த்தாலும் பெருமை கொள்கிறது மனம்..!

shibly591
25-06-2009, 03:37 AM
அடடடடடடா

அருமையிலும் அருமையாக உங்கள் பயண அனுபவத்தை தொகுத்துள்ளீர்கள்..வாழ்த்துக்கள்..

சொல்லப்போனால் நான் ஒரு சர்தாஜி ஜோக்குகளின் மிகப்பெரிய விசிறி..அவர்கள் அறிவிற்கூர்மையானவர்கள் என்று தெரியும்..இவ்வளவு மனிதாபிமானமுள்ளவர்கள் என்பதை உங்கள் கட்டுரை வாயிலாகவே அறிகிறேன்...

வாழ்க சர்தாஜிகள்

அன்புரசிகன்
25-06-2009, 04:21 AM
அபியும் நானும் திரைப்படம் சர்தார்களைப்பற்றிய பேச்சுக்களை பொய்மையாக்கி தெளிவுபடுத்தியது... அது போல் அமைந்தது உங்கள் பகிர்வும். பகிர்வுக்கு நன்றிகள்.

அமரன்
25-06-2009, 08:22 AM
புது இடம். பழக்கப்படாத களம். கலை, பண்பாடு, கலாச்சாரம், விழுமியங்கள் எல்லாமே மாறுபட்டது. இப்படியான ஒரு இடத்தில் இருந்து எங்கள் வாழ்வை எழுதுவது கஷ்டம்.

இல்லையில்லை.. எங்கள் வாழ்வோடு ஒப்பிட்டோ எங்கள் ஆட்களை இத்தைகைய களத்தில் உலவவிட்டோ எழுதுவது வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் அமையும்.

சர்தாயியுடனா உங்கள் குறுந்தூரப் பயணம் உங்களை நெடுந்தூரம் கொண்டு சென்றிருக்குமே. நேரம் கிடைத்தால் நீங்கள் என்ற தொலைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆங்கிலத்தைத் தப்பில்லாமல் பேசுவதும் தமிழை சப்பித் துப்புவதும் சுக்விந்தர்சிங்குகளுக்கே உரித்தானது பூமகள்.

இளசு
25-06-2009, 08:59 PM
அன்புத்தங்கைக்கு

நலமா பூ?

இந்த உன் பதிவும் உன் பூமன வாசம் கொஞ்சும் அழகுப்பதிவு..

என் மனதில் ஏற்கனவே உயர்ந்த இடத்தில் இருக்கும் சீக்கியர்களை
இன்னும் உயர்த்திய உன்னதப் பதிவு..

நல்லதிர்வுகளை ஏற்படுத்தும் ஆக்கங்களின் அதிதீவிர ஆதரவாளன் நான்..
என் வாழ்த்துகள் பூரணமாய் இப்பதிவுக்கு..

தொடரட்டும் எழுத்து வேள்வி!

அறிஞர்
25-06-2009, 09:09 PM
அருமையான படைப்பு....
ஒவ்வொரு இனத்தவரிடம் ஒரு சிறப்பு இருக்கும்....
சீக்கியர் மீது தங்களுக்கு தோன்றிய எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி...

பூமகள்
26-06-2009, 02:43 PM
பதிவிட்டவுடனே முதல் முத்தான பின்னூட்டமளித்து ஊக்கமளித்த ஷிப்லி அண்ணாவுக்கு எனது நன்றிகள்..
--
சர்தார்ஜிக்கள் பற்றிய நம்மில் உலவும் நகைச்சுவை போன்றே நம் பற்றியும் அங்கு உலவுவதாக அறிந்திருக்கிறேன்.. ஆயினும், அவர்கள் திறன் கண்டு மனம் திறவாமல் இருப்பது சிறந்த மரபல்ல என்பதால் இங்கு இப்பதிவைப் பதிப்பதில் மகிழ்கிறேன்..

உங்கள் மனங்களில் இருக்கும் தெளிவு மேலும் இப்பதிவு மூலம் வலுப்பெற்றதெனில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..

நன்றிகள் அன்புரசிகன் அண்ணா..

--
ஒவ்வொரு முறையும் என் எழுத்துகள் தாண்டி என்னை மேலும் ஆழமாக சோதிப்பது அமரன் அண்ணாவின் திறன்.. என்னை அதிக தூரம் சிந்திக்க வைப்பதும் வளர்ப்பதும் இதுவே.. அவ்வகையில் இப்பதிவில் அவர் என் மனதை மேலும் படிக்க உத்தேசித்துள்ளது தெரிகிறது..

காலம் தான் இடையூறாக இருப்பதால் காலம் கை கொடுத்தால் நிச்சயம் பகிர்கிறேன் என்ற வாக்குறுதியை மட்டுமே கொடுக்கும் நிலையில் உள்ளேன்.

இனிய நன்றிகள் அமர் அண்ணா. :)

--

பெரியண்ணா வந்த சுவடுகள் பின்பற்றியும் வரவேற்க இயலாத தங்கையை இனிதே வாழ்த்தும் பெரியண்ணாவுக்கு என் முதல் வந்தனங்கள்..

மிக்க நலம் அண்ணா.. தாங்களும் நலமுடன் இருப்பீர்களென்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு..

உங்கள் மனம் மகிழ்வித்த பதிவு படைத்தமைக்கு உளம் மகிழ்கிறேன்.. நன்றிகள் பெரியண்ணா.. :)

--

நன்றிகள் அறிஞர் அண்ணா..

சீக்கியர் பற்றி எனக்கு கேள்வி ஞானம் இருந்த போதும், இந்த நேரடி உரையாடல் பல தெளிவுகளை ஏற்படுத்தியது உண்மையே..

பின்னூட்டமிட்டு ஊக்குவித்த அனைவருக்கும் நன்றிகள். :)

அக்னி
26-06-2009, 06:10 PM
சிரிப்புத்திரியில் இருக்கவேண்டிய பதிவு, சுவையான சம்பவங்கள் பகுதியிலிருக்கின்றதே என்ற எண்ணத்துடன் வந்தால்,
பூமகள் தனது அனுபவத்தை அழகாகப் பதிவிட்டுள்ளார்.

சர்தாஜி நகைச்சுவைகளை வாசித்து வாசித்து,
அவர்களைப் பற்றி நான் கொண்டிருந்த தவறான கருத்தை மாற்றிய பதிவிது எனலாம்.

நினைவில் நின்று வந்தாலும், நிறைவாகப் பல விடயங்கள் பதிவில்...

எமது நாடுகளில் மாற்றமடைய வேண்டிய பலவற்றை, உரையாடலில் சர்வசாதாரணமாகச் சர்தார்ஜி பகிர்ந்துள்ளார் எனலாம்.

இதுவரைக்கும்,
சர்தார்ஜிகளைச் சந்திக்கையில் என்னையறியாமல் எழுந்த சிரிப்பு,
இனி அவர்கள்மேல் ஒரு மதிப்பாக மாறும்.

பகிர்தலுக்கு பாராட்டுக்கள்...

ரங்கராஜன்
27-06-2009, 04:55 AM
நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது பூமகள், அதைவிட அதை நீங்கள் பார்த்த பார்வை வித்தியாசமாக இருக்கிறது. இதுவரை நான் சர்தார்ஜீகளுடன் பேசியது இல்லை. ஒரு முறை ரோட் சைட் தாபாவில் சாப்பிட சென்றேன் சுக்கா ரொட்டி மட்டும் தான் வைத்து இருந்தான். இரண்டு வாங்கினேன் கடித்தேன் கடித்தேன் கடித்துக் கொண்டே இருந்தேன், மோளங்கள் செய்யும் மாட்டின் தோளை போல இருந்தது. அரை மணி நேரம் ஆனது இன்னும் கால்வாசி ரொட்டியைக் கூட சாப்பிட வில்லை, பேசாமல் ஒரு ரொட்டியை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் மெதியடியாக உபயோகம் படுத்தலாமா என்று நினைத்து இருந்தேன், அதுவும் அங்கு போடப்பட்டு இருக்கும் அந்த கட்டிலில் உக்காருவதே பெரிய கஷ்டம் அதில் சாப்பிட வேண்டும் என்றால் எப்படி?. அப்பொழுது என் எதிரில் இருந்த ஒரு வயதான சர்தார்ஜீ டிரைவர் (65 வயது இருக்கு) 15 ரொட்டிகளை அடுக்கி வைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல அழகாக சாப்பிட்டார். எனக்கு பயங்கர ஆச்சர்யம் இந்த ரொட்டியை மிக்சியில் போட்டால் கூட குறைந்தது 15 நிமிடம் ஆகும் அரைக்க, இவர் எப்படி இப்படி சாப்பிடுகிறார், அவரை பார்த்துக் கொண்டே இருந்தேன். எனக்கு வயிறு நிரம்பி விட்டது, அப்படியே எழுந்து வந்துவிட்டேன். ஆனால் அவர்களுடன் பேசுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, வந்தால் மகிழ்வேன்,

நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்

அக்னி
27-06-2009, 06:46 AM
15 ரொட்டிகளை அடுக்கி வைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல அழகாக சாப்பிட்டார்.
உண்மையில் ஆச்சரியம்தான் தக்ஸ்...
பின்னே என்ன.., உங்களால் கடிக்க முடியாததை, அவர் நக்கிச் சாப்பிட்டால் ஆச்சரியம்தானே... :rolleyes:

ரங்கராஜன்
27-06-2009, 08:27 AM
உண்மையில் ஆச்சரியம்தான் தக்ஸ்...
பின்னே என்ன.., உங்களால் கடிக்க முடியாததை, அவர் நக்கிச் சாப்பிட்டால் ஆச்சரியம்தானே... :rolleyes:

ஆஹா அக்னி ரொம்ப நாளுக்கு அப்புறம் வரமாதிரி தெரியுது.

நான் சொன்னது ஐஸ்கிரீமை போல சுலபமாக சாப்பிட்டார் என்று அது ஒரு உவமை ....... இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு அதிகம் தான்:aetsch013::aetsch013::aetsch013:

விகடன்
27-06-2009, 09:15 AM
சொந்த நாட்டில்த்தான் மதம் இன தொழில் வேறுபாட்டை வைத்து தரம் பிரித்து பழகுவார்கள். வேற்று நாடு என்று வந்துவிட்டால் இந்தியன் என்ற ஒற்றை இனந்தான் இருக்கும். அது போலத்தான் உங்கள் நிலமையும் போல....

சுகமான அனுபவமும் ஆரோக்கியமான பகிர்வும்.

சிவா.ஜி
27-06-2009, 03:52 PM
சர்தார்ஜிகள் நல்ல உழைப்பாளிகள் கூடவே மிகத்தேர்ந்த வியாபார நுணுக்கமுள்ளவர்கள்.

பூம்மா ரொம்ப ஆச்சர்யப்படுத்துற. யாரோ என்னவோ பேசறாங்கன்னு இல்லாம, கவனமாக் கேட்டு, அதை சுவாரசியமா பதியறதப்பாத்துதான் அந்த ஆச்சர்யம். பாவம் அவரோட அடையார் சொத்தைப் பற்றிப் படித்து வேதனைதான் மிஞ்சுகிறது.

அப்படியிருந்தும் சென்னை மக்களைப் பற்றி தவறாக எதுவும் சொல்லாத அந்த நல்ல மனிதருக்கு தலை வணங்குகிறேன். நிறைய பேர் ஒரு ஊருக்குப் போய் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் நேர்ந்துவிட்டால், உடனே அந்த ஊர்க்காரங்களே இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்திவிடுவார்கள். அந்த வகையில் இவர் உயர்ந்து நிற்கிறார்.

நல்ல பகிர்வும்மா. வாழ்த்துகள்.

பா.ராஜேஷ்
03-07-2009, 04:09 PM
என்னுடைய அலுவலகத்தின் வாயிலாக அளிக்கப் பட்ட வீட்டில், என்னுடன் சேர்ந்து ஒரு சர்தார்ஜியும் தங்கி உள்ளார். பழகுவதற்கு மிகவும் மென்மையானவர், அன்பானவர், பண்பானவர். அவரை காணும் முன்னர் வரை எனக்கும் சர்தார்ஜிகளை பற்றிய இளக்காரம் இருந்தது. அவரை கண்ட பின்னர் சர்தார்ஜிகளின் மீது தனி மரியாதை தோன்றியது உண்மை. என்னுடைய வயது அவருடைய அனுபவம், இருப்பினும் மிக பண்புடனே பேசுவார். அவருடன் சேர்ந்து குரு த்வாரா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு மேலும் பல சீக்கியர்களுடன் பழகும் அனுபவம் நேர்ந்தது. அனைவரும் உண்மையில் மிக திறமையானவர்கள்.
இந்தியாவின் பிரதமரும் ஒரு சீக்கியர் என்பதை நினைவில் வையுங்கள். இனி ஒருபோதும் சர்தர்ஜிக்களை பற்றி இழிவாக எண்ணாதீர்கள்.
நல்ல அனுபவம்! பகிர்ந்தமைக்கு நன்றி பூ!

சாலைஜெயராமன்
06-09-2009, 07:07 PM
சர்தார்ஜிக்களைப் பற்றி மேலும் ஒரு உயர்வான செய்தி.

அதீத நாட்டுப் பற்றும் போர்க்குணமும் ஒருங்கே பெறப்பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிவோம். எத்தகைய தொழிலையும் எவரும் கேவலம் கருதாது உழைப்பு ஒன்றே குறியாய்க் கொண்ட இவர்கள் எந்தத் தொழிலையும் செய்யவல்லவர்கள். எப்படிப்பட்ட ஏழ்மை னிலையிலும் கௌவரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழத் தெரிந்த சுயமரியாதைக் காரர்கள்.

எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதாது வாழக்கூடிய அவர்கள் பார்க்காத தொழிலே இல்லை எனலாம். ஆனால் அவர்கள் செய்யாத ஒரே தொழில் பிச்சையெடுப்பது ஒன்றுதான்.

என்ன கஷ்டம் வந்தாலும் பிச்சை எடுத்து வாழ்வது என்பதை எந்த ஒரு சர்தார்ஜியும் செய்ய மாட்டார். பிச்சைக் காரர்களே இல்லாத ஒரு சமூகம் உண்டென்றால் அது மேன்மையான இக்குலத்து சமூகம்தான். பிச்சைக்கார சர்தார்ஜியை யாராவது பார்த்தது உண்டா?

மஞ்சுபாஷிணி
06-09-2009, 07:20 PM
சர்தார்ஜிகளை பற்றிய அருமையான தகவல்.. நன்றி சாலை ஜெயராமன் அவர்களே...

மஞ்சுபாஷிணி
06-09-2009, 07:23 PM
அருமையான பதிவு பூமகள்.. நன்றி... சீக்கியர்கள் பற்றிய உயர்வான எண்ணம் பகிர்ந்தமைக்கு...