PDA

View Full Version : காயமே பொய்யடா



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
23-06-2009, 03:38 PM
இதமாய் வருடும் சுகந்தங்களிலும்
கூரை கீற்று வழி வந்து விழும்
புழுதி வடியும் வெளிச்சத்திலும்
நிரம்பி வழிகின்றன பொய்கள்

கதறிக் கொட்டியழும் மேகங்களையும்
மலரிறைக்கும் நந்தவனங்களையும் கூட
மிச்சமிட்டு வைக்கவில்லை அவைகள்

ஒவ்வொரு வீட்டு முகவாய்களிலும்
அதில் தறிக்கும் மாந்தர் மனங்களிலும்
மண்டிக்கிடக்கின்றன கபடங்களாய்

சுவடிட்டுச் செல்லும் காலணிகளாய்
பொய்யிட்டுச் செல்கிறான் மனிதன்
தன் வழி நெடுக

கழிந்த நேற்றையப் பொழுதுக் கதையை
மெய் பட பொய்யுரைக்கிறார்
எதிர்ப்பட்டவரிடம் ஒருவர்
இடை இடையே
சர்க்கரைப் பொங்கலாய் சத்தியங்களும்

விட்ட உடன் தைக்குமொரு பொய்யை
யோசித்த படி விரைகிறான்
நேரம் கழிந்து செல்லும் காதலனொருவன்

காக்காசு பெறாததிற்கெல்லாம்
கத்தியின்றி இரத்தமின்றி
பாட்டியைக் கொல்கிறான் மாணவன்

அழும் குழந்தை தேற்றும்
அன்னையின் வார்த்தைகளில் கூட
அணுவளவும் உண்மையில்லை

காயமே பொய்யடா
அனைவர் வாயுமே பொய்யடா.

இளசு
23-06-2009, 06:58 PM
இந்திரன் சந்திரன் படத்தில் ஒரு காட்சி -
போதையில் (பிறந்தநாளுக்காக வாங்கிவைத்த) கேக் மேல் அமர்வார் மேயர்..
குழகுழத்த பின்பக்கம் தடவியவுடன் சட்டென அவர் சொல்வது -
''நான் இல்லேப்பா''.

எங்கே ஆரம்பம் இது?

வீட்டில் '' இங்கே இருந்த சில்லறை எங்கே காணோம்'' என்றபோதா?
வகுப்பில் '' இவன் பென்சிலைக் காணுமாம்..பார்த்தீங்களா?'' என்றபோதா?

தன் மேல் தவறில்லை என தேவையின்றியும் நிரூபிக்க -
சத்தியங்களும் , முழக்கங்களும்...
பொய்களைச் சுவாசித்து, அருந்தி, உண்டு திளைக்க எப்படிப் பழகினோம்???


ஓர் உயிர் காக்க, ஒரு நிறுவனம் காக்க எனப் பெரிய அளவு நோக்கங்களுக்கு மட்டும்
பொய் சொன்னால் கூட - புரைதீர்ந்த எனப் பொறுக்கலாம்..

ஏன் தாமதம்?
ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை?


என சாதாரண நிகழ்வுகளில் கூட
அஞ்சாமல், அசராமல், கூசாமல் பொய்சொல்லும்
பண்பாடு எப்படி வந்திருக்கும்?

பொய்க்குளத்தில் முக்கியபடியே எனக்குள் முகிழ்க்கும் வினாக்கள் இவை..

ஜூனைத்தின் சாட்டையடிக் கவிதையில் உண்மை விவரணம் உண்டு..
காரண விவரம் இல்லை!!

தேடுகிறேன் இன்னும் விடையை..


பாராட்டுகள் ஜூனைத்!

நாகரா
24-06-2009, 04:28 AM
பொய் பற்றி
மெய்யுரைக்கும்
ஹசனீக் கவி அருமை!

இளசுவின் பின்னூட்டம்
கவிதைக்குப் பெருமை

வாழ்த்துக்கள் ஹஸனீ.

இயற்கை மண் மெய் மீது
பூசி மழுப்பும்
செயற்கைக் கான்க்ரீட் பொய் மீது
உக்கிரமாய் வலம் வருகிறது
இயந்திர மிருகம்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-06-2009, 06:50 AM
இளசண்ணாவின் பின்னூட்டத்திற்காகவே கவிதை எழுதலாம் போலிருக்கிறதே!

அசராமல் அலுக்காமல் பொய்யுரைப்பவர்களுக்கு அண்டப்புழுகன் ஆகாயப்புழுகன் என்கிறோம். ஆனால் இப்படி யதார்த்தமாய் அலட்டாமல் பொய்யுரைப்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் இளசு அண்ணா?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-06-2009, 06:51 AM
இயற்கை செயற்கை உதாரணம் கலக்கல் நாகரா அவர்களே.