PDA

View Full Version : அலை..அலை..- அலம்பல்கள்!!



poo
26-09-2003, 07:50 PM
இன்று காலை கடற்கரை போனேன்.. காற்றுவாங்க அல்ல.. கவலைகளை கரைக்க.. அலைகளை ரசித்தவேளையில் தோணியதை பஸ் டிக்கெட்டில் குறிப்பெடுத்து.. இங்கே..



**

மீண்டும் மீண்டும்
புரட்டியும் கிட்டவில்லையா
காதலியின் விலாசம்?!

**

இது பட்டினஜாதி அலை..
அடப்பாவி இங்கேயுமா?!

***

என்னைச்சுற்றி
இருந்தவர்களைக்கண்டு
கோபம்கோபமாய்..
உன்னழகை
அவர்களும் ரசிப்பதால்!

***

எத்தனைமுறை
கழுத்தைப் பிடித்து
தள்ளினாலும்
கரைசேர மறுக்கிறாய்..
உப்பிட்டவனை உள்ளளவும்?!!..

**

அலையே..
சற்றுநேரம் ஒளிந்துகொள்..
அழகுப்பெண்கள்
சுற்றுலாக் கூட்டம்!!

**

ஆனாலும்
இத்தனை வெகுளியாய் இராதே..
இங்கே மனிதர்கள்(?) வசிக்கிறோம்!!..

**

கடவுள் வரமொன்று தருவாரானால்..
காவல்காப்பேன் காலமெல்லாம்...
எவர்காலும் உன்மேல் பட்டுவிடாமல்!

**

ஏன் திடீர் ஆவேசம்..
ஓ.. மந்திரி வாக்கிங் வருகிறாரா?!..

**

நிறையமுறை படையெடுத்தாய்..
தொடமுடியாத பாதம்..
வெற்(று)றி வெற்றி...
திரும்பிவருகையில்
தோல்வியை உணர்ந்தேன்..

**

இத்தனை நேரமாய்
பேசினோம்..
என்ன சொன்னாயென
புரியவில்லையே!!

**

கரைமுழுக்க காத்திருப்பு..
திரும்பி திரும்பிப் போகிறாய்..
உன் எண்ணக்காதலன்
எப்படித்தானிருப்பான்?!!

**

வாழ்வு...சாவு..
மணல்மேலெழுதி
ஒன்றுதொட உன்னையழைத்தேன்..
மொத்தமாய் அழித்துச்சென்றதின்
அர்த்தமென்னவோ?!..

**

உன்னால் மட்டுமெப்படி
நொடிகளில் மறுபிறப்பெடுக்க முடிகிறது..
நுரையே?!!

**

உன் கடல்கணவன்
அப்படியென்ன சொல்லிவிட்டான்..
இத்தனை ஆற்றாமை?!!..

**

அன்பே அழாதே..
அடுத்தமுறை வரும்போது
கடிகாரத்தை
கழட்டிவைத்து வருகிறேன்!!

********

puppy
26-09-2003, 07:55 PM
ஒவ்வொன்றும் அருமை........

பாரதி
27-09-2003, 02:10 AM
அருமை..அருமை பூ..
என் மனம்கனிந்த பாராட்டுக்கள்.
இத்தனை கவிச்சரங்களை பயணச்சீட்டில் எப்பிடி குறிப்பெடுக்க முடிந்தது?

puppy
27-09-2003, 03:01 AM
அலை என்று குறிப்பு எடுத்து இருப்பார்..கணனி முன் வந்ததும் அலை போல
எல்லாம் வந்து இருக்கும் ..அப்படி தானே பூ அவர்களே

Nanban
27-09-2003, 06:04 AM
அலைஅலையாய் கவிதைகள்...
அலைகளை நேரில் கண்ட ஆனந்த அனுபவம்.......

karavai paranee
27-09-2003, 07:59 AM
இத்தனை நேரமாய்
பேசினோம்..
என்ன சொன்னாயென
புரியவில்லையே!!


பூவின் அலையடிப்பில்
எதை எடுத்து வாழ்த்துவது
எல்லாமே ஓன்றையொன்று விஞ்சுகின்றனவே !
வாழ்த்துக்கள்

இருந்தும் என்னை ஆழமாக வருடிய அலை

சேரன்கயல்
27-09-2003, 02:38 PM
எத்தனை மாலைப் பொழுதுகள்...எத்தனை இரவுகள்...மெரினாவில் அலைகளின் ஓசையில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதை அண்ணாந்து பார்த்தபடியே...ம்ம்ம்ம்ம்ம்...
இரவு நேரத்து அலைகளின் ஆர்ப்பரிப்பிலும் ஒரு முரட்டு இனிமை உண்டு பூ...
அலைகளின் அலம்பல்களை...அலம்பாமல் அள்ளித் தந்தமைக்கு பாராட்டுக்கள்...

sOliyan/சோழியான்
28-09-2003, 01:22 AM
அலைந்தலைந்து அலையலையாய் அலை சிந்தும் துளிகள்... பாராட்டுக்கள்.

இக்பால்
28-09-2003, 05:14 AM
பூ தம்பி.... மறுபடியும் எப்பொழுது கடற்கரைக்குப் போவீர்கள்?

தினமும் போங்களேன். கவிதைகள் அவ்வளவு அருமை.

-அன்புடன் அண்ணா.

gans5001
28-09-2003, 12:47 PM
மீண்டும் மீண்டும்
புரட்டியும் கிட்டவில்லையா
காதலியின் விலாசம்?!

**
ஆனாலும்
இத்தனை வெகுளியாய் இராதே..
இங்கே மனிதர்கள்(?) வசிக்கிறோம்!!..


முதல் கவிதையில் காதல் சொட்டுகிறது.. மற்றொரு கவிதையோ நம் முதுகை சற்றே திரும்பிப்பார்க்க சொல்கிறது..
உங்கள் எண்ண அலைகளும் மீண்டும் மீண்டும் மன்றத்தில் மோதட்டும்.. நாங்கள் பயன் பெறுவோம்

இளசு
29-09-2003, 01:05 AM
எசப்பாட்டு தருவதால் மனஸ்தாபம் வந்ததை முன்பு பார்த்தவன் நான்.
இருப்பினும் தம்பியின் இந்த அலைவரிசை கண்டு அதே அலைவரிசையில்
துள்ளாத என் மனமும் துள்ள இதோ பாராட்டை பதில் பாட்டாய் பதிக்கிறேன்.
கடல் தாசன், அலைநேசனின் பார்வைகள் இனி...

எத்தனை அழுத்தமான நீலநிறப்புடவை..
ஆனால்
வெள்ளி ஜரிகைக்குத்தான்
இத்தனை விமரிசை!**

உள்ளே நிகழும்
ஊழிப் பிரளயத்தின்
ஓரங்க நாடகமே
எத்தனை பிரமாண்டம்!
**

இவ்வளவு நீள வரிகளா?
கின்னஸில் இடம் பிடித்தால்தான்
கன்னத்தில் முத்தமென்று
சொல்லிவிட்டாளா உன் காதலி?

**
அழகாய் இருக்கும் போலிருக்கு
உன் கவிதை வரிகள்...
எனக்குப் புரியாத மொழிகளில்
இன்னும் ஒண்ணு கூடிப்போச்சு!
**
என் காதலி போல்தான் நீயும்
பழகும்போதெல்லாம்
அ(பக)ரித்துக்கொள்வதில்
நீ காலடி மண்ணையும்
அவள் என் காதல் மனதையும்
**
பௌர்ணமி மேல் எனக்குப் பொறாமை...
நித்தம் வரும் என்னை விட
மாதத்தில் ஒரு முறை வரும்
அவனைக் கண்டால்தான்
நீ ஆர்ப்பரிக்கிறாய்..
**

எடுத்ததை திருப்பிக்
கொடுத்துவிடுவாயாமே..
நான் மட்டும் விதிவிலக்கா?
எங்கே என் இதயம்?
**
வாயாடிகளைக் கண்டால்
ஒதுங்குபவன் நான்..
உன்னிடம் மட்டும்
மயங்கியது ஏன்?
**

உன்னைப்போலவே தம்பியும் நானும்
விசை கொண்ட பெரிய அலை என் தம்பி..
அதைக் கண்டு ஆசை கொண்ட
சிறிய அலை நான்.. :D

பாரதி
29-09-2003, 02:13 AM
பிரமாதம்.

சேரன்கயல்
29-09-2003, 04:09 AM
பௌர்னமி கண்டு ஆர்ப்பரிக்கும் அந்த அலைமகள் வாயாடியின் மீது மயக்கத்தால் விசைக் கொண்ட பெரிய அலை (அண்ணன் இளசு, பூ) அதைக் கண்டு ஆசைக் கொண்ட சிறிய அலையாய் (நான்)...

இனிய இளசுவின் அலை அலம்பல் அழகாக தழுவிச்செல்கிறது...பூ போன்ற அலைகளாக...
பாராட்டுக்கள்....

poo
29-09-2003, 05:35 AM
அண்ணா.. உண்மையில் உங்கள் விசையால் தள்ளப்படுபவன் நான்!

(எசப்பாட்டென்றால் எனக்கு அல்வாவென தாங்கள் அறிந்திருப்பீர்கள்.. நேற்றுகூட அரித்தது மனம்.. எசப்பாட்டு எழுத.. உங்கள் அறிவுரையால் அடங்கிப்போகிறேன் அடிக்கடி!!)

அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்... நானெல்லாம் சும்மாவென வெட்கப்பட வைத்துவிட்டீர்கள்..

அலையை நேரிடையாய் காணும்போது எனக்கு இத்தனை கவிநயமாய் தோணவில்லை.. ஆனால் என் அலம்பல்களை மட்டுமே கண்டு.. எப்படியண்ணா இது?!! (நிச்சயம் அலைமுன் அமர்ந்து தாங்கள் இதை எழுதியிருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்!!... (ஆமா. கணனிமுன் அமர்ந்துதான் எழுதியிருப்பார் என மணியா தலை வந்துடப்போறார்..) (அவர்தான் இங்கேயெல்லாம் வருவதேயில்லையே!!))

என்னை கௌரவப்படுத்தியமைக்கு நன்றி!!

இனியும் சொல்லாதீர்கள்.. கவிவளம் இல்லையென... (KADALவளம் நிறையவே இருக்கிறது...)

(அப்பா..."KADAL" கடலா.. காதலா?!!)

gankrish
29-09-2003, 09:39 AM
பூ சற்று முன் `என்ன வளம் இல்லை' என்ற உன்னுடைய தொகுப்பை படித்தேன். அப்புறம் இந்த உன்னுடைய அலை தொகுப்பை படித்தேன்.
படித்தவுடன் கூற தோன்றுகிறது...

`என்ன வளம் இல்லை இப் பூவிடம்...
ஏன் படித்துவிட்டு போக வேண்டும் வேறிடம்..
அலை அலை வரிகள் மனதில் திரும்ப வரும்.. (உன் வரிகள்)
உயரும் உன் மதிப்பு இம்மன்றத்தில் (மன்றம் மட்டுமல்ல பூவே... நீ இதை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தால்... புகழ் தேடி வரும் உன்னிடம்).

இதற்க்கு தோதாக மற்றொரு கரையில் இருந்து என் அருமை நண்பன் இளசு எழுதியிருக்கிறார்.

என்னவென்று சொல்வது. படிக்கிறேன்... வியக்கிறேன்.. பாராட்டுகிறேன்.

சேரன்கயல்
29-09-2003, 04:05 PM
அழகாய் சொல்லியிருக்கும் கான்கிரீஷ் நண்பா...உன் வார்த்தைகளில் என் எண்ணங்கள்...