PDA

View Full Version : மகுடம் சூடிய லியாண்டர் பயஸ்!



பரஞ்சோதி
21-06-2009, 08:11 AM
மகுடம் சூடிய லியாண்டர் பயஸ்!


பிரெஞ்சு ஓபன் போட்டியில் பெடரர் பெற்ற வரலாற்று வெற்றியே இந்திய டென்னிஸ் ரசிகர்களைப் பொறுத்தவை இரண்டாமிடம் பெற்றுவிட்டது. இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் பெற்ற வெற்றி தான் காரணம்.

இந்தியர் லியாண்டர் பயஸும், செக் நாட்டவரான லூகாஸ் டுலோகியும் சேர்ந்து தென் ஆப்பிரிக்காவின் வெஸ்லி மூடி, பெல்ஜிய வீரர் டிக் நார்மனைத் தோற்கடித்து இரட்டையர் பட்டம் வென்றனர். இந்திய- செக் ஜோடி இணைந்து பெறும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.

இந்தப் போட்டியில் மூன்றாவது தகுதிநிலை அளிக்கப்பட்டிருந்த லியாண்டர்- லூகாஸ் இணை, முதல் `செட்' தோல்வியிலிருந்து மீண்டெழுந்து, வெஸ்லி மூடி- டிக் நார்மன் இணையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒன்றே முக்கால் மணி நேரம் போராடி, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பயஸ்- லூக்காஸ் ஜோடி வெற்றியை எட்டிப் பிடித்தது.

பயஸுக்கு இது மூன்றாவது பிரெஞ்சு ஓபன் பட்டமும், மொத்தத்தில் ஐந்தாவது பட்டமும் ஆகும். கடந்த 17-ம் தேதி தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடிய பயஸுக்கு பிரெஞ்சு இரட்டையர் பட்டம் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது.

லியாண்டர் பயஸ் இதற்கு முன்பாக இதே பிரெஞ்சு களத்தில் மகேஷ் பூபதியுடன் இணைந்து 1999, 2001-ம் ஆண்டுகளில் வென்றார். மேலும் பூபதியுடன் இணைந்து 1999-ம் ஆண்டில் விம்பிள்டனிலும், மார்ட்டின் டாமுடன் இணைந்து 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும் வென்றார்.

நான்கு கலப்பு இரட்டையர் பட்டங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், இது லியாண்டர் பயஸின் ஒன்பதாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். லிஸா ரேமண்ட் (விம்பிள்டன்- 1999), மார்ட்டினா நவரத்திலோவா (ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன்- 2003), கேரா பிளாக் (அமெரிக்க ஓபன்- 2008) ஆகியோருடன் சேர்ந்து இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார் பயஸ்.

தற்போது பயஸுடன் இணைந்து பிரெஞ்சு இரட்டையர் பட்டத்தை வென்றிருக்கும் லூகாஸ், பயஸை விட 10 ஆண்டுகள் இளையவர். அவருக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். கடந்த 2007-ம் ஆண்டில் பேவல் விஸ்னருடன் இணைந்து இரண்டாவது இடம் பெற்றார் லூகாஸ். பிரெஞ்சு ஓபனில் கடந்த ஆண்டு ஜோடி சேர்ந்தனர் பயஸும், லூகாஸும். முதலாவது முறையாகக் கடந்த அமெரிக்க ஓபன் போட்டியில் இறுதியாட்டத்துக்கு முன்னேறியது இந்த ஜோடி. ஆனால் பாப், மைக் பிரியன் ஜோடியிடம் இவர்கள் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.


இருவரும் சேர்ந்து முதல் ஏ.டி.பி. போட்டி வெற்றியாக பாங்காக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற போட்டியில் வென்றனர். ஆனால் வேறு மூன்று போட்டிகளில் இரண்டாவது இடத்தையே பெற நேர்ந்தது. அவற்றில் சமீபமாக, கடந்த பிப்ரவரி மாதம் நினாட் ஜிமோன்சிக்- டேனியல் நெஸ்டர் இணையிடம் வீழ்ந்தனர்.

தங்களின் வெற்றி குறித்துப் பயஸ் கூறுகையில், ``நாங்கள் இருவரும் சரியாக ஓராண்டுக்கு முன்பு இணைந்து விளையாடத் தொடங்கினோம். இது எங்களுக்கு ஸ்பெஷலான வாரமாக அமைந்தது. நாங்கள் கடந்த முறை இங்கு தோற்றபோது, மீண்டும் இங்கு வந்து வெல்ல வேண்டும் என்று உறுதிகொண்டோம். இங்கு வந்திருந்து ஊக்குவித்த அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் எங்களின் நன்றி'' என்றார் பயஸ் மகிழ்ச்சி பிளஸ் நெகிழ்ச்சியாக.

இந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் நிலை பெற்றிருந்த ஜோடியான ஜிமோன்சிக்- நெஸ்டருக்கு அரையிறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அளித்தனர்.

ஆனால் இறுதிப் போட்டியின் முதல் `செட்'டில் மிக விரைவாக பின்தங்கிவிட்டனர் பயஸும், லூகாஸும். அதில் தோல்வியைத் தழுவியபோதிலும், இரண்டாவது `செட்'டில் 5-0 என்ற முன்னிலையைப் பெற்றுவிட்டனர். `செட்'டை வெல்லும் 7-வது `கேமில்' சர்வீஸ் போட்ட பயஸ், அதைக் கோட்டை விட்டார். எனவே `கேம்' கணக்கு 5-2 என ஆனது. அடுத்து லூகாஸ் சர்வீஸ் போட்டு `செட்'டை தங்கள் வசமாக்கினார்.

வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது `செட்'டில் பயஸும், லூகாஸும் மூடியின் சர்வீஸை இருமுறை முறியடித்து 5-2 என்ற முன்னிலைக்குச் சென்றுவிட்டனர். வலை அருகே பல அருமையான `ரிட்டர்ன் ஷாட்'களை அடித்தார் லியாண்டர். சாம்பியன்ஷிப்பை வெல்லும் முக்கியமான கேமில், பயஸ் ஒரு `ஏஸ் சர்வீஸை' போட்டு `செட்'டையும் போட்டியையும் கைப்பற்றிவிட்டார்.

பார்வையாளர் பகுதியில் அமர்ந்து போட்டியை ஆர்வத்தோடு பார்த்த தனது தோழியும், முன்னாள் கலப்பு இரட்டையர் ஜோடியுமான மார்ட்டினா நவரத்திலோவாவை போட்டிக்குப் பின் ஓடி அணைத்துக்கொண்டார் பயஸ்.

``மூன்றாவது `செட்'டின்போது எனக்கு ஊக்கம் அளித்த மார்ட்டினாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினேன்'' என்றார் பயஸ்.

அதேநேரம் தங்களை எதிர்த்து சிறப்பாக விளையாடிய எதிரணி வீரர்களைப் பாராட்டவும் பயஸ் தயங்கவில்லை. ``அவர்கள் மிகவும் அருமையாக சர்வீஸ் போட்டனர். அவற்றை முறியடிப்பது உண்மையிலேயே சவாலாக இருந்தது'' என்றார்.

நன்றி: தினத்தந்தி

நேசம்
21-06-2009, 08:18 AM
பயஸ் வெற்றி நல்ல விஷயம்.ஆனால் அதை புஉபதியுடன் இணைந்து வாங்கி இருந்தால் இந்தியர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்து இருக்கும்

அமரன்
21-06-2009, 06:59 PM
பூபதி இல்லாமல் பயஸ் வென்ற முதல் இரட்டையர் டென்னிஸ் வெற்றி என்று கேள்விபட்டேன்.

மகுடம் சூடிய பயசுக்கும் ஜோடிக்கும் வாழ்த்துகள்.

பரஞ்சோதி
22-06-2009, 06:57 AM
அமரன் தம்பி,

லியாண்டரும் பூபதியும் பிரிந்து பல ஆண்டுகள்.

இருவரும் வேறு வேறு ஒருவருடன் இணைந்து பல போட்டிகளில் வென்றிருக்காங்க.

2006ம் ஆண்டு யு.எஸ். ஓபனில் மார்ட்டின் டாமுடன் இணைந்து கோப்பையை வென்றார்.

அதன் பின்னர் கிடைத்த கோப்பை தான் இது.

பால்ராஜ்
08-09-2009, 07:29 AM
நட்புக்குள் அனாவசிய இகோ இல்லாமல் இருந்திருந்தால் ...
எங்கோ போயிருக்கலாம்...
ஹும்... மீண்டும் பெருமூச்சு....