PDA

View Full Version : நண்பனில்லாத பொழுதுகள் கொலைகாரனுக்கு ஒப்பானவை



shibly591
21-06-2009, 02:04 AM
நண்பனில்லாத பொழுதுகள் கொலைகாரனுக்கு ஒப்பானவை

ஒவ்வொரு முறையும் வெ வ்வேறு விதமாய்
அடர்ந்த இருள் சுமந்து வருகின்றன
நண்பனில்லாத நிமிடங்கள்..

குழந்தையாக இருக்கும்போதே
தூய்மையின் வெற்றிடம் நிரப்பும்
முதல் ஸ்நேகம்..

தொடரும் பள்ளி நாட்களில்
கேலியும் கிண்டலும் சண்டையுமாய்
தொடரும் நட்புக்காலங்கள்..

அழுகையில் அழுது
சிரிப்பில் சிரித்து
அவன் துயர் துடைக்கும் விரல்களாய்
நம்மை மாற்றி விடுகிறது தோழமையின் சக்தி..

எவ்வளவுதான் சண்டைபோட்டாலும்
மறக்கமுடிவதில்லை நண்பனை..

கல்லூரிக்காலங்களில்
காதலி தரும் வலிகளை
நண்பன் ஒருபோதும் தருவதில்லை


மச்சி
டேய்
மாமு
எப்படியெல்லாம் அழைக்கிறேன்..
அதைவிட
தகப்பனாய்
தாயாய்
சகோதரனாய்
சமயத்தில் காதலியாய்
பல பாத்திரங்களில் நிறைகிறான் என் வாழ்வில்..

நண்பனில்லாத பொழுதுகள் பற்றி
எழுதவே நடுங்குகிறேன்..
நிழலாய்த்தொடர்நதவன்
நிஜத்தில் அருகிலில்லை
என்பது உயிரை உலுக்குகிறது..

காதலி பிரிந்த போது
நண்பனிடம் சொல்லியழுதேன்..
இன்று
நண்பன் பிரிந்தபோது
சொல்லியழ யாருமில்லை..

கடன் அன்பை முறிக்குமா?
இல்லவே இல்லை
கடன் அன்பை வளர்க்கும்..

அவன் தாய் இறந்தபோது
அதிகம் அழுதது நான்தான்..
அவள் அவனைவிட
என்னைத்தானே அதிகம் வளர்த்தாள்..?

பொருளாதராரம் துரத்திய அவன் வாழ்க்கை
நடுத்தெருவில் நர்த்தனம் ஆடியபோது
துயர் சுமந்த நெஞ்சுடன் தூரதேசம் போய்விட்டான்..

இன்று நண்பனில்லாத பொழுதுகள்
முழுவதுமாய் என்னைக்கொன்று
தீர்க்கிறது..

மின்னஞ்சல்
எஸ.எம்.எஸ்
அலைபேசி அழைப்பக்கள்
எதுவுமே அவன் அருகாமையை
தருவதாயில்லை..
என் கண்ணீர் முகம் தாங்கும்
அவன் தோள்களை அவைகள் எப்படித்தரும்?

அவசர வாழ்க்கையின் சடுதியான வேகத்தில்
அவனை மட்டும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்..
அதுதான் நட்பின் வலிமை..

இப்போது தனித்தனியே தொடர்கிறது
எங்கள் பயணம்..
எங்கோ ஒரு புள்ளியில்
மீண்டும் சந்திப்போம்..
அதுவரை
நண்பனில்லாத பொழுதுகள் கொலைகாரனுக்கு ஒப்பானவை

நிந்தவூர் ஷிப்லி

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-06-2009, 06:45 AM
கவிதை நடையில் உங்கள் உள்ள உரையாடல்கள். உண்மையில் கொடுத்துவைத்தவர்கள் உங்களை நண்பனாய் அடையப்பெற்றவர்கள்.வாழ்த்துக்கள் கவிதைக்கு.

நேசம்
21-06-2009, 08:08 AM
இக்கவிதை இது போன்று ஆத்மார்ந்த நட்பை கொடுக்கவில்லை என்று எங்க செய்கிறது.உண்மையில் உங்கள் வாட்பை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.வாழ்த்துகள் ஷிப்லி

kalaiselvan2
21-06-2009, 03:06 PM
தோழரே உங்களைப் போல எனக்கு ஒரு நண்பர் இல்லையே என என்னை ஏங்க வைத்துவிட்டது உங்கள் வரிகள். அருமையாக உள்ளது.

அமரன்
22-06-2009, 03:03 PM
நட்பு என்பது வாழ்க்கைப் புத்தகத்தின் ஒரு அலகு போன்றது. காலந்தோறும் ஒவ்வொருவர் அதன் பக்கங்களை நிரப்புகின்றனர். அவர்கள் இல்லாவிட்டாலும் அவர்களுடைய வாசனையைத் தருவன நாம் வா(வ)சிக்கும் அந்தப் பக்கங்கள்.

அதிசங்களைத் தனக்குள் வைத்தபடி வரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் என் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகின்றன. அதில் சினேக அலகும் தீண்டி எனைப் பூக்கவைக்கும்.

உங்கள் நட்புப் பக்கங்களை படிக்கத் தந்தமைக்கு நன்றி ஷிப்லி.

இன்பக்கவி
22-06-2009, 05:24 PM
என் சோகங்களை தாங்கும்
தோழியாய் அன்று நீ
இன்றும் சோகமாய் நான்....
தாங்க நீ இல்லை...
தாங்கிக்கொள்ளவும்
என்னால் இயலவில்லை....

நட்பிலும் தோல்வி எனக்கு....
நட்பாய் யாரேனும் வந்தால்
நட்புக் கொள்ள இயலாத
கோழையாய் போனேனே....

தோழியே
நீ வருவாய்....
என்னை உணர்வாய்...
புரிதல் தான் பிரியத்தை தரும்...
புரிந்துகொள் என் பிரியத்தை.....




நட்பின் பிரிவை அனுதினமும் அனுபவிப்பவள் நான்...
உங்கள் வேதனை என்னால அறிய முடிகிறது....இது வெறும் கவிதையாக இருந்தால் நன்று....
நிஜமாய் இருந்தால் இதை விட கொடுமை ஏதும் இல்லை.....

அமரன்
22-06-2009, 09:40 PM
உன்
நெஞ்சத் துடிப்புகள்
கைதட்டி அழைக்கின்றன.

என் கண்களோ
உனை நோக்கித் திரும்புகின்றன.

உன்
முகத்தில் வழியும்
தாகத்துளிகள்
பாதங்களுக்கு விலங்கிடுகின்றன.

உன்
எண்ண அரூபங்கள்
என்னை இழுத்து வருகின்றன.

வினாடிதான்...

மனமேகம் பொழிய
விழிக்குளம் நிரம்புகின்றது.
மடலணைகளை மேவுகிறது.

கோடையின் தகிப்பில்
பிறந்த உன் தோள்வெடிப்புகளை
நிரவுகின்றது.

வெக்கையும் குளுச்சியும்
கொஞ்சிப் பேசும் வாசத்தில்
நிறைகிறது என் சுவாசம்...

தேக*தேசமெங்கும்
விசாலிக்கிறது சுகந்தம் ..

உனக்கும் அப்படித்தானிருக்கும்..

என்னுலர் தோள் பிளவுகள்
உவர்நீர்க் குழிகளாகிட்டனவே!!