PDA

View Full Version : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு



புதியவன்
15-06-2009, 04:19 PM
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்துகொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கின்றோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகார சபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசகைளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்
அனைவரும் உங்களின் நல்லாதரவைத் தெரிவியுங்கள்.

praveen
15-06-2009, 04:43 PM
நண்பரே, மாற்றுக்கருத்து பதிக்க வேண்டும் என்பதற்காக பதிக்கவில்லை, உண்மையிலே இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன்.

அனைத்துலக புலிகள் இயக்கத்தின் தலைமை பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டதை மீதமுள்ள புலிகள் இயக்கத்தவர் ஏற்றுக்கொண்டார்களா?.

தமிழகத்தில் இயங்கும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமும் அவர் தலைமையை ஏற்றுக்கொண்டதில்லை, அதற்கு முக்கிய காரணம் அவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொண்டதே ஆகும்.

இது பற்றி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழ் சகோதரர்கள் கருத்தை அறிய நினைக்கிறேன்.

அய்யா
15-06-2009, 04:54 PM
தற்போதையநிலையில் புலிகள் முற்றிலும் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள். இதுபோன்ற எவ்வித நடவடிக்கைகளையும் (அதனால் பயனுண்டா என்பது வேறு விடயம்) எடுக்கும் அளவுக்கு அவர்கள் கட்டமைப்பு இல்லை என்பதே நிதர்சனம்.

புலிகள் இன்னும் இயங்கும் நிலையில் உள்ளார்கள் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்து, புலம்பெயர் தமிழர்களிடம் பெறும் கப்பத்தை தொடரும் முயற்சியாகவே இது எனக்குப் படுகிறது.

இன்பா
15-06-2009, 05:19 PM
அனேக புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள், பிரபாகரன் உயிருடன் இல்லை...
ஆனால் பிரச்சனை இன்னும் முடிந்துவிடவில்லை...

அது முடியும் பிரச்சனையும் இல்லை...!!!

தற்ப்போது எதுவும் செய்ய முடியாத புலிகள் நிலையில் இருப்பது உண்மையே..! பின்னாளில் பாதிக்கப்பட்டவர்கள் தக்க பதிலடி கொடுத்தே தீருவார்கள்...!!! என்னபதும் உண்மையே...!!!

அமரன்
15-06-2009, 07:35 PM
தலைவனாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை கேபி. அப்படி அறிவித்தாலும் மக்கள் ஒப்ப மாட்டார்கள். இந்த இரண்டுமே மிகவும் ஆபத்தானது. "தமிழீழ மக்களவை" நிறுவப்பட்டு, புது நிறம் கொடுக்கபட்டு, புலிகளை முற்றாக முடக்கி, செயற்குழுவை தலைமையாக்கியாச்சு. இது ஒரு விதத்தில் மயிரைக்கட்டி மலையை இழுக்கும் செயல்தான். பல மயிர் திரண்டு மிடுக்குடன் இழுத்தால் ஒழிய வெற்றி சாத்தியமில்லை.

இதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிய டக்ளஸ், வரதர் போன்றோரின் பிந்திய அறிக்கைகளைப் படித்துப் பாருங்கள்.

அமரன்
15-06-2009, 07:43 PM
புலிகள் இன்னும் இயங்கும் நிலையில் உள்ளார்கள் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்து, புலம்பெயர் தமிழர்களிடம் பெறும் கப்பத்தை தொடரும் முயற்சியாகவே இது எனக்குப் படுகிறது.

சுதந்திரத்துக்கு உதவும் மக்கள் உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வெற்றியைக் கொடுத்து நம்பிக்கையூட்டி மண்மீட்பு நிதி வாங்கினார்கள். தோல்வியைக் கொடுத்துவிட்டு கப்பம் கேட்டால் கப்பல்தான் கவிழும். :)

புதியவன்
16-06-2009, 04:13 PM
சுதந்திரத்துக்கு உதவும் மக்கள் உங்கள் கருத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வெற்றியைக் கொடுத்து நம்பிக்கையூட்டி மண்மீட்பு நிதி வாங்கினார்கள். தோல்வியைக் கொடுத்துவிட்டு கப்பம் கேட்டால் கப்பல்தான் கவிழும். :)

நண்பர்களே! தயவு செய்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீர்கள். புலிகள் ஒன்றும் பணத்துக்காக மாரடிக்கும் கூட்டமல்ல, தம் இனத்துக்காக பல்லாயிரம் மாவீரர்களை அந்த மண்ணிலே தந்திருக்கிறார்கள். அதேவேளையில் மண்மீட்பு நிதியாக அவர்கள் வாங்கியதை பலருக்கு திருப்பி தந்திருக்கிறார்கள். மாவீரர் தினக் காலங்களில் மண்மீட்பு நிதி மீளளிப்பு குலுக்கல் முறையில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க தமிழ்மக்களினை நம்பியே இவ்வளவு காலமும் போராட்டத்தை நடத்தியவர்கள், இன்று பல வல்லரசுகளின் துணையோடே இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளைக் குறை சொல்வதிலேயும், தலைவர் பிரபாகரனை சாகடிப்பதிலேயுமே பல்லாயிரம் தமிழ்மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது மறைக்கப்பட்டு வருகின்றது.

பல்லாயிரம் உறவுகளை இழந்த வேதனையை ஈழத்தமிழ் உறவுகளுக்கு உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுமே ஆறுதலாக இருப்போம்! ஆதரவாக இருப்போம்!

உலகத்தில் வாழும் எல்லா தமிழர்களும் ஒன்று பட்டாலே போதும்.

பல்லாயிரம் தமிழர்களின் உயிர்களை பலியாக்கிய
சிங்கள இனவெறி பயங்கரவாத அரசும், அந்த அரச பயங்கரவாதத்திற்கு துணைபோகும் ஏனைய நாடுகளும் எம் தமிழ் உறவுகளின் வலியை எப்படி அறிவார்கள்???

புதியவன்
16-06-2009, 04:33 PM
இது ஒரு விதத்தில் மயிரைக்கட்டி மலையை இழுக்கும் செயல்தான். பல மயிர் திரண்டு மிடுக்குடன் இழுத்தால் ஒழிய வெற்றி சாத்தியமில்லை.

இதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிய டக்ளஸ், வரதர் போன்றோரின் பிந்திய அறிக்கைகளைப் படித்துப் பாருங்கள்.

டக்ளசுக்கோ வரதருக்கோ தமிழர்களைப்பற்றி பேசும் யோக்கியதை இல்லை.

பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது குறைந்தபட்சம் வருத்தங்கூட தெரிவிக்காதவர்கள்; இவர்களை எப்படி தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்வது !

கூலிக்கு மாரடிப்பவர்கள்.....

அமரன்
16-06-2009, 06:40 PM
புதியவன்..

எங்கள் விடுதலைப் போராட்டம் ஆயுத வழியிலிருந்து விலகி அரசியல் வழியில் பயணிக்கிறது. அரசியல் நகர்வுகளில் ஒவ்வொரு சொற்களும் கூர்மையான ஆயுதங்கள். ஒவ்வொன்றும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை...

அடிப்படை மனித உரிமைகளை மறுக்கப்பட்ட தமிழர்களில் நானும் என் குடும்பமும் அடக்கம்.

அமரன்
17-06-2009, 07:06 AM
உருத்திரகுமாரின் அறிக்கை.



மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சார்ந்த நிறுவனங்களும், பன்னாட்டு அரச நிறுவனங்களும், செய்தியாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியற்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாகவுள்ளது.

ஸ்ரீலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்;த நிகழ்வாயுள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டுவருகின்றது.

இலங்கைத தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமைவெளியும் அழிந்துபோயுள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல்; தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது. இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தருவகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை. இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமேயில்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam)ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிகமுக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும், சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க்குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும்; குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogensஅடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்ட பூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு சர்வதேச சட்டமரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

தமிழர் ஓர் தேசிய இனம்

வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது

2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3. சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4. உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்;தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5. ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6. அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7. உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8. தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9. வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள் மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009ம் ஆணடு மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
16.06.2009

தூயவன்
18-06-2009, 11:20 AM
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை
இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல்
இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

இப்போது கே பி யும் புலனாய்வுயும் ஒரு கருத்தில் உடன் படுகின்றனர்.....

ஆனால் இந்த செய்தி தமிழ் வின் இணைய தளத்தில் மட்டுமே காணப்படுகிறது. தமிழ் வின் கே பி கு ஆதரவு வழகுகிறதா ???

praveen
18-06-2009, 12:09 PM
மேலே கண்ட பதிவிற்கு ஒரே ஒரு வரி கருத்து தான்.

வேலிக்கு ஓணான் சாட்சி

அமரன்
18-06-2009, 12:29 PM
அவசியமான இந்த அறிக்கையை எதிர்பார்த்தேன். தமிழ் மக்களிட்டத்தில் ஏற்பட்ட பிளவு நிரவப்படட்டும்.

Honeytamil
18-06-2009, 01:34 PM
பொட்டுஅம்மான் எங்கே ? அதைப் பற்றி எந்தத்தகவலும் இல்லையே?

இந்த செய்தி தமிழ்நெட் இணையத்தளத்திலும் வெளிவரவில்லை.

அமரன்
18-06-2009, 07:29 PM
அய்யாமாரே.
மக்களுக்கு பிரபா உயிருடன் தேவை. உலகுக்கு பிரபா உடலமாகத் தேவை.
இந்த இரு கரைகளுக்கும் நடுவில், நல்லது கெட்டதை பகுத்தறிந்து எங்கள் பயணம் தொடரட்டும்

நாகரா
19-06-2009, 03:34 AM
அய்யாமாரே.
மக்களுக்கு பிரபா உயிருடன் தேவை. உலகுக்கு பிரபா உடலமாகத் தேவை.
இந்த இரு கரைகளுக்கும் நடுவில், நல்லது கெட்டதை பகுத்தறிந்து எங்கள் பயணம் தொடரட்டும்
சூரியப் பிரபாகரம் நம்வீரிய மெய்யைக்
காரியஞ் செய்விக்கும் உயிர்

பயணந் தொடர்வோம் படிகளின் முடிவில்
பயனாய்ப் பெறுவோம் ஈழம்

காழ்ப்புக் கரைகளை விட்டே அன்புசாகரம்
மூழ்க ஈழ முத்து

சிந்திக்க வைத்த வரிகளுக்கு நன்றி அமரன், நெஞ்சங்கள் ஒன்றிச் செயல்படுவோம்!

அன்புரசிகன்
19-06-2009, 03:53 AM
நாகரா சொல்வது போல் சிந்தித்து ஒன்றிச்செயற்படவேண்டியது தான் ஈழத்தமிழரின் கடப்பாடாகிறது... கோரிக்கைகளுக்கு முன் முகாம்களுக்குள் இருக்கும் மக்களுக்கு புனர்வாழ்விற்காய் தகுந்த வழியில் போராடவேண்டும்.

நாகரா
19-06-2009, 04:17 AM
எங்கள் விடுதலைப் போராட்டம் ஆயுத வழியிலிருந்து விலகி அரசியல் வழியில் பயணிக்கிறது. அரசியல் நகர்வுகளில் ஒவ்வொரு சொற்களும் கூர்மையான ஆயுதங்கள். ஒவ்வொன்றும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை...


ராஜ தந்திர ஆயுதம் இனிநம்
ஈழ சுதந்திர மார்க்கம்

அருமையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி அமரன், குழு மனப்பான்மைகள் யாவும் விட்டு, அரசியல் தீர்வாய்ச் சுதந்தர ஈழம் காண ஒன்று படுவோம்!

கொந்தளிக்கும் உணர்வுகளை உள்ளே வேதித்து
நொந்திருக்கும் உறவுகளைக் காப்போம்

அய்யா
19-06-2009, 05:24 AM
இப்போழுது எனக்கு ஒரு சந்தேகம்.. பழைய கேள்விகள்தாம்..

நெருக்கடியான சூழ்நிலையில், 'வீரகாவியம்' தீட்டப் புறப்படும் ஒருவர், மழுங்க முகச்சவரம் செய்துகொண்டு புறப்படுவாரா?

இன்னும் கேள்விகள் உள்ளன. பிறகு கேட்கிறேன்.

அமரன்
19-06-2009, 12:46 PM
அய்யா..

நூல்களிலும் வாய்ச்சொல்லிலும் கண்ட எங்கள் இனத்தின் வீரகாவியத்தை எங்கள் கண் முன் நிகழ்த்திக் காட்டி, தன் வாழ்வின் மூலம் உலகில் பதிவு செய்த அந்த ஒப்பற்ற தலைவன் பௌதீக ரீதியில் வீரமரணம் அடைந்து விட்டான் என்றுதான் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

காட்டப்பட்ட உடலம் அவனுடையது என்று எங்கேயும், எவரும் உறுதிப்படுத்தவில்லை.

உங்கள் இந்தக் கேள்விக்கும், எந்தக் கேள்விக்கும் இது போதும் என்று நினைக்கிறேன்.

இலங்கையில் தமிழினம் படுமல்லல் தரும் வேதனையில் இந்த மாதிரிக் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை என இருந்தேன். ஆனால் இவ்வறிக்கையின் பேரில் எழுப்பப்படும் கேள்விகள் தமிழனின் சுதந்திரத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளைப் பாதிக்கும் முகம் காட்டத்தக்கதை என்ற அடிப்படையில் பதில் சொல்ல நேரிட்டது.

அய்யா
19-06-2009, 01:07 PM
அய்யா..

நூல்களிலும் வாய்ச்சொல்லிலும் கண்ட எங்கள் இனத்தின் வீரகாவியத்தை எங்கள் கண் முன் நிகழ்த்திக் காட்டி, தன் வாழ்வின் மூலம் உலகில் பதிவு செய்த அந்த ஒப்பற்ற தலைவன் பௌதீக ரீதியில் வீரமரணம் அடைந்து விட்டான் என்றுதான் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

காட்டப்பட்ட உடலம் அவனுடையது என்று எங்கேயும், எவரும் உறுதிப்படுத்தவில்லை.

.

இந்த பதிலால் உங்களுக்குச் சமாதானம் கிடைத்தால் எனக்கும் மகிழ்வே அமரண்ணா!

இத்திரியில் இனி நான் அமைதி காக்கிறேன்.

Honeytamil
19-06-2009, 01:40 PM
உலகில் பிரபாகரனைப் போல வேறெந்த தலைவனின் மரணம் அல்லது நலன் குறித்தாவது இப்படியெல்லாம் செய்திகளும் வதந்திகளும் வந்திருக்குமா என்று தெரியவில்லை.

யாரைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் ஈழம் குறித்தும், பிரபாகரன் குறித்தும் செய்திகளையும் வதந்திகளையும் வரைந்து தள்ளிவிட்டார்கள். அறிக்கை என்ற பெயரில் அடித்த, அடிக்கிற கூத்துக்களுக்கும் அளவே இல்லை.

இல்லாவிட்டால்?

சும்மா இருக்கலாம், தப்பில்லை. யாருக்கும் தொந்தரவில்லாத, இருக்கிற மக்களை நிம்மதியாக இருக்கச் செய்ய உத்தமமான வழி இது.

17 வயதில் தமிழர் வாழ்வுரிமைக்காக ஆயுதம் தொட்டு, 34 ஆண்டுகள் அந்த மண்ணைவிட்டு அகலாமல் மக்களோடு மக்களாக நின்று போராடும் ஒரு தேசிய இனத்தின் சுத்தமான தலைவனைப் பற்றி ஒரே ஒரு உண்மையான தகவலைத் தரவும் துப்பில்லாத கூட்டத்துக்கு, அவர் இருக்கிறாரா இல்லையா என்ற விசாரம் மட்டும் எதற்கு?

பேடித்தனமாக ஒரு உடலைக் காட்டுவதும் பின்னர் அதை மறுப்பதும் பின்னர் வேறொன்றைக் காட்டுவதும், முன்னுக்குப் பின் முரணாக, ஏதோ கேழ்வரகு ரொட்டி சுட்டோம் என்பது போல, ஒரு தேசியத் தலைவனைச் சுட்டுவிட்டோம் என்று பினாத்திக் கொண்டிருப்பதற்கும் அரசாங்கங்கள் எதற்கு… தன் சொந்த மக்களையே சுட்டுக் கொண்டிருக்கும் இவை உண்மையிலேயே அரசாங்கங்கள்தானா…

அவன்
இருக்கிறானா இல்லையா
என்று தெரியாமலே கைதொழும்
பக்தர்களில் ஒருவனாக மாறிவிடவே
நானும் முயற்சிக்கிறேன்!

-பிரபாகரனைக் கொன்றோம் என இந்திய-இலங்கை ராணுவத்தினர் கூட்டாக அறிவித்தபோது நமது நண்பர் எழுதிய கவிதை இது.

நவம்பர் 27-ம் தேதி வரை இந்த நம்பிக்கை மட்டுமாவது, எல்லாவற்றையும் இழந்த எமது உறவுகளுக்கு ஒரு பற்றுக் கம்பியாக மிச்சமிருக்கட்டும்… விட்டுவிடுங்கள்.

தூயவன்
19-06-2009, 04:04 PM
எனக்கு என்னவோ
நவ 27 இல் பொட்டு தான் வருவார் போல இருக்கு..
காரணம் தலைவரை பற்றி சொன்ன புலனாய்வு இத் துறையை உருவாக்கியவர் பற்றி கூறவில்லை :S

விக்ரம்
19-06-2009, 06:05 PM
தன் சொந்த மக்களையே சுட்டுக் கொண்டிருக்கும் இவை உண்மையிலேயே அரசாங்கங்கள்தானா… இந்தக் கேள்வி இந்தியாவுக்கும் சேர்த்தே!



மற்ற இந்தியர்களுக்கு என்ன உணர்வு வந்துதோ தெரியலை. எனக்கு பொத்துக்கிட்டு வந்திச்சு.. இனிமே இந்த மாதிரி எழுத வேண்டாம் என்று அன்பா கேட்டுக்கிறேன்.

அமரன்
19-06-2009, 08:02 PM
இந்த பதிலால் உங்களுக்குச் சமாதானம் கிடைத்தால் எனக்கும் மகிழ்வே அமரண்ணா!

இத்திரியில் இனி நான் அமைதி காக்கிறேன்.

நீங்க அமைதி காக்கக் கூடாது அய்யா.

பேசனும்.. பேச வேண்டிய நேரத்தில பேசனும். அப்போதான் பலருக்குப் பல விடயங்கள் புரியும்.

உங்களுக்கு அளித்த பதில் உங்களுக்கானது மட்டுமல்ல.

பிரபா இருக்காரா இல்லையா, காட்டபட்ட உடலம் பிரபாவுடையதா போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் காலத்தை தகனிக்கும், தகனித்த ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குமானது.

ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவர் என்ற உண்மையைப் புரியாத ஈழத்தமிழனுக்காக..

ஆக உங்கள் குரலால் நன்மையே விளையும்.

ஆகையால் நீங்கள் அமைதி காப்பதை மீள் பரிசீலினை செய்யுங்கள்.

-அமர்

அமரன்
19-06-2009, 08:15 PM
இனிமே இந்த மாதிரி எழுத வேண்டாம் என்று அன்பா கேட்டுக்கிறேன்.

ஆமோதிக்கிறேன்..

நீங்கள் சுட்டிய வாக்கியம் நீக்கப்படுகிறது.

-பொறுப்பாளர்.

ஆனால் அவர் சொன்னதை நீங்கள் ஆமோதிப்பது காந்திதேசத்தை நீங்களும் தரக்குறைவாகப் பேசுவதுக்குச் சமானம். இல்லையா?

பழிக்குப் பழி தொடர்ந்தால்... உலகில் ஏது அமைதி?

-அமரன்

விக்ரம்
19-06-2009, 09:03 PM
இதத்தான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்தேன்...



ஆனால் அவர் சொன்னதை நீங்கள் ஆமோதிப்பது காந்திதேசத்தை நீங்களும் தரக்குறைவாகப் பேசுவதுக்குச் சமானம். இல்லையா?

பழிக்குப் பழி தொடர்ந்தால்... உலகில் ஏது அமைதி?

-அமரன்
காந்தி என்று பெயர் வைத்தவர்கள், காந்தியின் உபதேசத்தை மதிக்கிறீர்களா? புத்த மதத்தை பின்பற்றும் நாடுகள், போர்க் குற்றம் செய்யும் போது, அன்னை ...... காந்தி பழிவாங்குனது தப்பு இல்லைனு சொல்ல வரலை..

எதிரியை கொல்றதுக்கு, எதிரியோட ஊரையே தீ வைச்சு அழிச்சதுக்கு சமம் தான் இந்தச் செயல்..

காந்தி சொன்னதை செய்யணும்னா, கொஞ்சம் உப்பு கம்மியா போட்டுத் தான் சாப்பிடணும்.. உப்பு கம்மியா போட்டு சாப்பிடுறதால உடம்புக்கு மட்டும் நல்லது இல்லைங்க.. மனசுக்கு, நம்ம உயிருக்கு, அடுத்தவங்க உயிருக்கு என்று பல நன்மைகள்...

ஒரு நீண்ட கடற்கரையில நடந்துட்டே, கடல் நீரில் தெரியும் நீல வானத்தையும், வானில் பறக்கும் வெள்ளைப் பறவையையும் ரசிக்கணும்..

நம்ம இறைநேசன் அவர்களின் பதிவுகளை (சில கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருந்தாலும்), படிக்கும் போது, மேற்கண்ட ஃபீலிங்ஸ் தான் வரும்...

எப்படி இவருக்கு மட்டும் கோபமே வரமாட்டேங்குதுனு... நான் திரும்ப, திரும்ப இதே கருத்தை பல இடங்களில் சொல்லிக் கொண்டிருந்தால், படிப்பவர்களுக்கும் இறைநேசன் மீது நல்ல அபிப்ராயம் வரும். எல்லாருக்கும் இறைநேசன் மீது நல்ல அபிப்ராயம் இருக்குனு, அவருடைய கேரக்டரையும் அவர் மென்மேலும் மேன்மை படுத்துவார்..

அந்த வகையில், ஒரு இயக்கத்தின் இமேஜ் இப்ப அதே இயக்கத்தின் கையில் இருக்கு..

உள்ளுக்குள்ளே பெரிய அயோக்கியனா இருந்திட்டு போ... வெளியே நல்லவனா வேடம் போடு.. இது தான் போலி காந்தியம்.. இந்த போலி காந்தியத்தை பயன்படுத்தினால், எங்கயோ போயிடலாம்.. அதுசரி நம்ம தான் காரம், சாரமா அதிகம் உப்பு போட்டு சாப்பிடுறவங்க ஆச்சே.......

இப்போ விடுதலைப் புலிகளுக்கு தேவை, நல்ல கேரக்டர் இமேஜ்.. நல்ல கேரக்டர் இமேஜை தோற்றுவிட்டு, வெற்றியடையப் பார்க்கணும்... அதைவிட முக்கியமான வேலை, முகாம்களில் இருக்கும் அகதிகளின் மறுவாழ்வு...

இனிமேல் இலங்கைக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களும், புலிகள் செய்யமாட்டார்கள் என்று இலங்கை அரசு நம்பும்வரை (அட்லீஸ்ட் போலியாகவாது நம்ப வைக்கும் வரை) மக்களை அமைதியா வாழவிட மாட்டான்..

போலி அரசியல்வாதிகள், போலி ஆன்மீகவாதிகள் இப்படி போலி, போலி.. னு எல்லா இடத்திலயும் போலி இருக்கும்போது, போலி காந்தியவாதியா இருந்தா, காந்தி திரும்ப வந்து கேள்வி கேட்கவா போறாரு..

அய்யா
20-06-2009, 04:07 AM
மற்ற இந்தியர்களுக்கு என்ன உணர்வு வந்துதோ தெரியலை. எனக்கு பொத்துக்கிட்டு வந்திச்சு.. இனிமே இந்த மாதிரி எழுத வேண்டாம் என்று அன்பா கேட்டுக்கிறேன்.

விக்ரம் அண்ணாவை நான் வழிமொழிகிறேன்!

இதுபோன்ற பதிவுகளால் எங்கள் இதயங்களில் இருந்து தாம் தூரமாகப் போகிறோம் என்பதை தொடர்புடையோர் உணர்வார்களா?

அய்யா
20-06-2009, 04:23 AM
இனிமேல் இலங்கைக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களும், புலிகள் செய்யமாட்டார்கள் என்று இலங்கை அரசு நம்பும்வரை (அட்லீஸ்ட் போலியாகவாது நம்ப வைக்கும் வரை) மக்களை அமைதியா வாழவிட மாட்டான்..

.

இதை புலி ஆதரவாளர்கள் உணரவேண்டும்!

இணையத்தில் புலிகளை தூக்கி எழுதும் ஒவ்வொரு எழுத்தும் சாதாரண ஈழ மக்களின் நல்வாழ்வைத் தாமதப்படுத்தும்!

உள்ளுக்குள்ள பக்காவா தயாராகுங்க புலிகளா.. அதை ஏன் வெளியில காட்டிக்கறீங்க? புலிகள் முச்சூடும் அழிஞ்சுட்டதாகவே சிங்களத்தான் நெனச்சுட்டுப் போகட்டுமே ! தமிழ் மக்கள் மீதுள்ள சந்தேகம் சிங்கள அரசுக்கு குறையட்டுமே!!

ஆனா அப்படி செய்யமாட்டாங்க புலிப்பினாமிகள்! அதோ இருக்காரு.. இதோ வாராரு.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. சிங்களத்தானுக்கு இருக்கு ஆப்பு.. இப்படிச் சொன்னாதானே கல்லா கட்டமுடியும்?!!

நடுநிலையாளர்கள் கோபப்படாமல் இதுகுறித்து சிந்திக்க வேண்டுகிறேன்!

அமரன்
20-06-2009, 08:04 AM
விக்ரம்..

காந்திதேசத்துக்குள் இன்னும் ஆழமாகப் போயிருக்கலாம். நான் கூட்டிப் போவதானால் காலம் கனியட்டும்.

அய்யா..

இதுக்காகத்தான் சொன்னேன் நீங்கள் பேசவேண்டும் என்று. எது தேவையோ அதை ஆணியடித்தாற்போல் சொல்லி உள்ளீர்கள்.

அய்யா
20-06-2009, 08:17 AM
நன்றி அமரண்ணா!

இன்பா
20-06-2009, 09:14 AM
போர் நடந்துக் கொண்டிருக்கும் தருவாயில், உயிர்கள் கொத்துக் கொத்தாய் நரக வேதனையுடன் மாய்ந்துக் கொண்டிருக்கையில் நானும் சாதாரணமாய் ஆவேசப் பட்டேன்.

இன்று நிலைமை அப்படியல்ல, போர் முடிந்துவிட்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பு வளைத்துகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது முந்தைய நிலையை விட பாதுகாப்பாக இருக்கிறார்கள் அதாவது கொத்து குண்டுகளாலும் கனரக ஆயிதங்களாலும் தாக்கப்படாமல் இருக்கிறார்கள். என்றாலும் இன்னும் அவர்கள் நரகத்தில் தான் இருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.

அகதிமுகாமுக்குள் பல புலிகள் ஒடுங்கியிருக்கிறார்கள் என்பது சிங்கள்வனின் சந்தேகம். அந்த சந்தேகம் இருக்குவரை அல்லல் படுத்திக்கொண்டுதான் இருப்பான். இச்சமயத்தில் பத்திரிக்கைகள் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவதால் சந்தேகம் வலுக்கும் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக அமையும்.

புலிகள் இயக்கமும் சரி, இலங்கையும் சரி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தீவிரமாக அலசி காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. நடப்பது நடக்கும் என்று வேடிக்கை மட்டும் பார்ப்பது இப்போதைக்கு உசிதம்.

விக்ரம்
20-06-2009, 01:44 PM
விக்ரம்..

காந்திதேசத்துக்குள் இன்னும் ஆழமாகப் போயிருக்கலாம். நான் கூட்டிப் போவதானால் காலம் கனியட்டும்.
காந்தி தேசத்தை பற்றி ஆழமாக ஆராயும் அளவுக்கு என் மண்டையில் இடமில்லை. ஆழம் தெரியாம காலை விடவும் விருப்பமில்லை அமரன்.

என்னால யாரையெல்லாம் மிரட்ட முடியுமோ, அவங்களையெல்லாம் மிரட்டுவேன். யார் என்னை மிரட்டுகிறார்களோ, அவர்களிடம் அடங்கியும் போவேன். எனக்குத் தேவை நான் நல்லா இருக்கணும். Singular-க்கும் Plural-க்கும் ஒரு S மட்டும் தான் வித்தியாசம்.