PDA

View Full Version : இன்னும் பெயர் வைக்கவில்லை....-புதிய தொடர்கதைleomohan
13-06-2009, 05:52 PM
1
http://www.ipmc.cnrs.fr/~duprat/neurophysiology/images/brain2.jpg

சென்னையின் மிகவும் பிரபலமான அதே நேரத்தில் ஒரு மணிக்கு பல ஆயிரம் கறக்கும் மனோதத்துவ மருத்துவரின் முன் அமர்ந்திருந்தேன்.
ஒரு சிறிய இருட்டறை. தூரத்தில் சிறிய விளக்கு. நன்றாக சாய்ந்து அமர ஒரு தோல் இருக்கை அருகில் சிறிய குவளையில் குடிநீர். எதிரே ஒரு சிறிய முக்காலியில் மருத்துவர்.

பல நிமிடம் அமைதியாக இருந்தோம். அந்த அமைதி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. யுகமாகியிருக்கும் போல் தோன்றியது. காத்திருந்தேன். காத்திருக்க செய்திருந்தார் அவர்.

வயது அறுபது இருக்கும். என்னைப்போல பல பேரை பாத்திருப்பாரா அல்லது உலகிலேயே நான் ஒருவன் தான் இதுபோலா. பல பேர் இவரிடம் ஆலோசிக்க சொல்லியிருந்ததால் கடைசி முயற்சியாக இவரிடம் வந்திருக்கிறேன்.

சொல்லுங்க என்றார் நேரிடையாக.

மணிக்கு காசு வாங்குவதால் நேரம் ஆக ஆக நான் கொடுக்க வேண்டிய பணமும் அதிகமாகிவிடும் என்ற பயத்தில் இருந்தேன். படபடவென்று பேசினேன். என்னுடைய பிரச்சனைகளை சில நிமிடத்தில் சொல்லி முடித்தேன்.

அவர் ஒப்பவில்லை. மீண்டும் அமைதியாக இருந்தார். என்னையும் பேசவிடாமல் கையமர்த்தினார்.

சொல்லுங்க என்றார் மீண்டும்.

கடுகு வெடித்துவிடும் போல என்ன சார் எல்லாத்தையும் சொல்லிட்டேனே என்றேன் அலுப்புடன்.

மீண்டும் அமைதியானார். இவர் என்ன தான் செய்யப் போகிறார் என்று யோசித்தேன்.

மென்மையாக சிரித்தார். இந்த நேரத்தில் என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு என்பது போல் அவர் மீது என் பார்வையை வீசினேன்.

உங்க கிட்டே யார் சொன்னது என்று கேட்டார் மொட்டையாக.
யாரா. எதைப்பத்தி என்றேன் குழப்பத்துடன்.
நான் ஒரு மணிக்கு பத்தாயிரம் வாங்குறேன்னு.
என் மனதை படித்தது போல் இருந்தது.

எதுக்கு கேக்கறீங்க என்றேன்.

இல்லை இப்படி ரயில் பிடிக்க ஓடற மாதிரி படபடன்னு பேசிட்டீங்களே.
ஆமாம் சார். இங்க என்னை போகச் சொன்ன நண்பர் சொன்னார் என்றேன் சற்று வெட்கத்துடன்.

கவலை படாதீங்க. இங்க மணிக்கு எல்லாம் காசு வாங்கறதில்லை. ஒரு மருத்துவர் பிரபலமாயிட்டா அவரை பத்தி இப்படி வதந்திகள் வரது சகஜம் தான். நீங்க இந்த கன்சல்டேஷனுக்கு 150 ரூபாய் கொடுத்தால் போதும். குணமான பிறகு என்னுடைய ஃபீஸை நான் கேட்டு வாங்கிக்கறேன். போதுமா என்றார்.

நன்றியுடன் அவரை பார்த்தேன். சார், இந்த கன்சல்டேஷன் எத்தனை நிமிஷத்திற்கு என்று இன்னும் சந்தேகம் தீராமல் கேட்டேன்.
ஹா ஹா என்று பெரியதாக சிரித்தார். ஒரு நாள் போதுமா. இரண்டு நாள். நீங்க எத்தனை மணி நேரம் வேணா எடுத்துக்கலாம் என்றார்.
நான் நம்பவில்லை.

இங்க பாருங்க கதிர் – அது தான் என் பெயர். கதிரவன். காசை பத்தி இப்ப கவலை வேண்டாம். உங்க பிரச்சனையை சொல்லுங்க. எத்தனை மணி நேரமானாலும் நான் கேக்கறேன். என் வீடு மேலே தான் இருக்கு.
அது சரி சார். அந்த கவலையில்லை எனக்கு. ஆனா நான் பிரச்சனையை இப்பத்தானே சொன்னேன் என்றேன் மீண்டும் அலுப்பு தட்டும் குரலில்.
கதிர், நீங்க படபடன்னு பேசினதை நான் கேட்கலை. பொறுமையா சொல்லுங்க. பதட்டம் வேண்டாம். பயம் வேண்டாம்.
எனக்கென்ன பயம். என்னை பார்த்து மத்தவங்க தான் பயப்படனும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

அமைதியானேன். எங்கிருந்து ஆரம்பிப்பது.
சார், என்னுடைய பத்தாம் வகுப்பிலிருந்து எனக்கு கதைகள் படிக்கறதுன்னா ரொம்ப இஷ்டம்.

சரி.

ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு புஸ்தகம் படிச்சிடுவேன்.

சரி.

படிக்கறது நல்லதுன்னு எங்கப்பா எல்லா புஸ்தகத்திற்கும் எப்ப கேட்டாலும் பணம் கொடுப்பாரு.

சரி.

அப்ப எங்க வீட்ல டிவி இல்லை. காலேஜ் படிக்கும் போது தான் டிவி வந்தது. அப்பலேர்ந்து படிக்கறது குறையாட்டாலும் நெறைய டிவியும் பார்க்க ஆரம்பிச்சேன்.

சரி.

எம்எஸ்சி மைக்ரோ பயாலாஜி படிச்சேன். ஃபர்ஸட் கிளாஸ்.
அப்படியா. ரொம்ப நல்ல விஷயம் பலே.
அதுக்கப்புறம் வேலைக்கு போனேன். ஆராய்ச்சி விஞ்ஞானியா வேலை கிடைச்சுது. ஜூனியர் போஸ்ட் தான். ஒரு வருஷம் வேலை செஞ்சேன். அப்புறம் உடம்பு சரியில்லாமே போச்சு. ஒரு மாசம் லீவுல இருந்தேன். அதுவே மூணு மாசம் ஆயிடுச்சு. அந்த நேரத்திலே பொழுது போகாம இன்னும் புக்ஸ் படிச்சேன். அதுகப்புறம் என்னாச்சுன்னு தெரியலை. வேலைக்கும் போகலை. இப்ப மூணு வருஷமா சமுதாயத்திலேர்ந்து எல்லாருமே என்னை தூக்கி வெளியே போட்ட மாதிரி இருக்கு.

சரி. நான் புரிஞ்சிகிட்ட வரைக்கும் சொல்றேன். சரியான்னு சொல்லுங்க என்று ஆரம்பித்தார் மருத்துவர். கண்ணாடியை கழற்றி கீழே வைத்தார். தன் புருவங்களை நன்றாக அழுத்திக் கொண்டார் ஒரு முறை.
உங்களுக்கு நிறைய படிக்கிற பழக்கம் சின்ன வயசிலேர்ந்து. நாவல், கதைகள், கவிதைகள், சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், ஆட்டோபையோகிராபிஸ் அப்படி எல்லாத்தையும் படிப்பீங்க. எம்எஸ்சி முடிச்சீங்க. வேலைக்கு சேர்ந்தீங்க. கொஞ்ச நாளைக்கு பிறகு உடம்பு சரியில்லைன்னு விடுமுறை எடுத்தீங்க. அப்பவும் நிறைய படிச்சீங்க. அப்புறம் திடீர்னு ஒரு நாள் உங்களுக்கு நீங்க படிக்கும் புத்தகங்களின் கதாநாயகனோ கதாநாயகியோ என்னென் உணர்ச்சிகள் எல்லாம் அனுபவிக்கிறாங்களோ அதையே நீங்களும் அனுபவிக்கற மாதிரி உணர ஆரம்பிச்சீங்க. அவங்களுக்கு வலிச்சா உங்களுக்கு வலிக்கற மாதிரி இருக்கு. அவங்க சந்தோஷமா இருந்தா நீங்க சந்தோஷமா இருக்கீங்க. அவங்க பிரஸ்டேட்டா இருந்தா நீங்களும் அதை அனுபவிக்கறீங்க. சரியா.

ஆமாம் சார்.

ம்ம் என்று யோசித்தார். பிறகு தன்னுடைய மேசையின் மேல் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார். ஒரு சிறிய மாத்திரையை என்னிடம் கொடுத்தார். தண்ணீர் குவளையை நீட்டினார்.

இந்த மாத்திரை போட்டுக்கோங்க. உங்களை நாளைக்கு இதே நேரத்தில் சந்திக்கிறேன் என்று சொல்லி எழுந்தார்.

நன்றி சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்.


தொடரும்.....

அமரன்
13-06-2009, 09:08 PM
உங்கள் கதைப்பயணம் தொடர்கதையானதின் மகிழ்ச்சி மோகன்.

வாசித்து முடித்த நொடியில் கற்பனைக் கம்பளம் பறந்தது.

கதை எங்கெல்லாம் செல்லும்? எதை எல்லாம் சொல்லும்? தலைப்பில் புதைந்திருக்கும் இரகசியம் என்ன? மனோவியல் கதை சொல்லியாகப் பரிணமித்த மோகனின் மனதில் என்னதான் உள்ளது?

ஆவலைத் தூண்டி விட்டீர்கள் மோகன்.

அக்னி
13-06-2009, 09:52 PM
தலைப்பின் மர்மம் என்னவோ என ஆராய்ந்து தோற்குது என் மனது...

அமரனைப் போன்றே நானும் கற்பனைக் கம்பளத்தில்.., பிடிமானம் ஏதும் இல்லாமல்...

leomohan
13-06-2009, 10:40 PM
2
http://departments.weber.edu/psychology/Psychology%20Image.jpg

வீட்டுக்குள் நுழைந்ததும் கவனித்தேன். கயல் அமர்ந்திருந்தாள். கயல்விழி. என்னுடைய காதலி. முன்னாள் காதலி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். எனக்கு இப்படியானதும் கழன்றுக் கொண்டது முதலில் இவள் தான்.

எங்கே தனியா போயிட்டு வரீங்க.

எங்கே போனால் உனக்கென்ன.

என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் உங்க கூட வந்திருப்பேனே.

உங்க வீட்ல தான் பைத்தியத்தோட என்ன சகவாசம் சொல்லிட்டாங்களே.
கதிர், நீங்க பைத்தியம் இல்லை. எனக்குத் தெரியும்.

இப்பத்தான் தெரியுமா.

எப்பவுமே தெரியும். ஆனா நீங்க நடந்துகிட்ட வித்ததாலே நான் எத்தனை பிரச்சனைகளை சந்திச்சேன் தெரியுமா.

அம்மா எனக்கு இவகிட்ட பேச இஷ்டம் இல்லை. அவளை போகச் சொல்லுங்க என்று காட்டமாக கூறிவிட்டு என் அறைக்குள் நுழைந்தேன்.

அறைக்குள் ஒரு காலத்தில் பல ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். இப்போதைக்கு சுண்டல் மடித்து வரும் தினசரி செய்தித்தாள் கூட வராமல் என் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொள்கிறார்கள்.
வெறுமையாக இருந்தது. மருத்துவர் கொடுத்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. மூளைக்கும் உடலக்கும் இருந்த இணைப்பு துண்டித்துவிட்டது போல உணர்ந்தேன்.

என்னுடைய படுக்கையின் ஓரத்தில் சென்று அமர்ந்தேன். தலைகாணியை வயிற்றின் மேல் வைத்து இறுக்கிக் கொண்டேன்.

அம்மா நீங்களே சொல்லுங்கள்....கயல் அம்மாவிடம் முன்னறையில் பேசிக் கொண்டிருந்தாள்.

போன தடவை போலீஸ் வரைக்கும் பிரச்சனை போற வரையிலும் நான் இவருக்கு வந்த எல்லா பிரச்சனையிலும் தோள் கொடுக்கலையா. போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் விவகாரம் போனதால என் வீட்டுல எத்தனை சண்டையின்னு உங்களுக்கே தெரியும். எங்க அண்ணாவும் அப்பாவும் இந்த பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லி வைச்சிருக்காங்க. அதையும் மீறி நான் இவரை பார்க்க வரேன்னா அதுக்கு என்ன அர்த்தம். அவருக்கு ஏன் புரியலை என்றாள் அழுகையை அடக்கிக் கொண்டு.

என் தாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

என் தந்தை வீட்டில் இல்லை. ஏதாவது ஜோசியக்காரனுக்கு 100 ரூபாய் தண்டம் அழுது என் பையனோட எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்க போயிருப்பார். இல்லை ஏதாவது மலையாள மாந்தரீகர் என் உடம்பில் மோகினி பிசாசு ஒன்று இருப்பதாக சொல்லி அவரிடமிருந்து பணத்தை விரட்டிக் கொண்டிருப்பார்.

முகத்தை துடைத்துக் கொண்டு கயல் என் அறைக்கு வந்தாள். நான் அமைதியாக இருந்தேன். யோசிக்கும் திறன் மாத்திரையால் தளர்ந்து போயிருந்த்து.

எங்க போயிருந்தீங்க கதிர்.

டாக்டர் ரதீசன். சைக்கியாட்ரிஸ்ட்.

என்ன சொன்னாரு.

ஒன்னும் சொல்லலை.

அப்புறம்...

நாளைக்கு வர சொல்லியிருக்காரு.

போலீஸ் பிரச்சனையை பத்தி சொன்னீங்களா.

இல்லை. என்னுடைய பிராப்ளம் மட்டும் தான் பேசினோம்.

சமீபத்தில ஏதாவது புக் படிச்சீங்களா.

இல்லை.

கட்டாயமா.

கட்டாயமா தான். இல்லாட்டா நானா எப்படி தனியா அவரை பாக்க போயிருக்க முடியும்.

என்னை கூப்பிட கூடாதா.

கயல், எனக்கு உடம்பு சரியாற வரைக்கும் நீ இங்க வந்து போறது சரியில்லை. உனக்கும் பிரச்சனை. எனக்கும் பிரச்சனை. எனக்கு சரியாகுதோ இல்லையோ உங்க வீட்ல ஒரு தடவை என்னை பைத்தியமா பாத்துட்டாங்க. அதை அவங்க மாத்திக் முடியாது. நானும் அவங்க சொன்ன வார்த்தைகளை மறக்கமாட்டேன். இந்த சம்பந்தம் நடக்காது. நீ நேரத்தை வேஸ்ட் பண்ணாதே. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.

அதை நான் பாத்துக்கறேன். நீங்க என்னை பத்தியோ என் கல்யாணத்தை பத்தியோ என் வீட்ல இருக்கறவங்களை பத்தியோ கவலைப்படாதீங்க. இப்ப ஒரு வாரமா புக் படிக்காம இருக்கீங்களா.

ஆமா.

புக் படிக்கறது விட்டுட்டா இத்தனை பிரச்சனை போயிடும் இல்லையா.
கயல், புக் படிச்சாலும் பிரச்சனை வராம இருக்கனும். அப்பத்தான் குணமானதா அர்த்தும். டிவி பார்த்து பிரச்சனை வந்தா?

சரி. நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் நாளைக்கு உங்களோட வரேன்.

வேண்டாம், வர வேண்டாம்.

நான் வரேன் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு என் தலையை கோதிவிட்டு என் தாயிடம் விடைபெற்று வெளியேறினாள்.

தொடரும்...

leomohan
13-06-2009, 10:47 PM
3
கஜேந்திரனை தீர்த்துக் கட்டினால் தான் ராதிகாவின் பிரச்சனை தீரும். ராதிகாவை கோர்ட்டுக்கு இழுப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம்.

கஜேந்திரன் எங்கே போகிறார் எங்கே வருகிறார் என்று எல்லா விஷயத்தையும் சேகரித்துவிட்டேன். நாளைக்கு அவர் மெரினாவில் ஜாக்கிங் செய்ய வரும் போது அவரை தீர்த்துக் கட்ட வேண்டியது தான்.
அதற்கு முதலில் எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும். சைலன்ஸரோடு கிடைச்சா நல்லா இருக்கும். ராயபுரத்துல போனா கிடைக்கும். இன்னிக்கி ராத்திரி போய் அதை வாங்கிக்கனும். ஒரு லட்சம் ஆகலாம்.

எனக்கு உடலில் முறுக்கேறியது. உடனே வீட்டிலிருந்து வெளியேறி ஒரு ஆட்டோவை பிடித்தேன். ராயபுரம் சென்றடைந்தேன். அங்கிருந்து சிறிய சந்துக்களில் நுழைந்து தேடினேன். எங்கே கிடைக்கும் துப்பாக்கி.

கறுப்பாக குண்டாக லுங்கியை தூக்கி கட்டிக் கொண்டு ஒரு மீன்பாடி வண்டியில் ஒருவன் சென்றுக் கொண்டிருந்தான். சட்டென்று அவனை நிறுத்தினேன்.

எனக்கு சரக்கு வேணும் என்றேன் படபடப்புடன்.

என்ன சரக்கா. என்ன சரக்கு?

துப்பாக்கி.

யோவ். என்னய்யா வெளையாடறியா. நான் மீன் விக்கற ஆளுப்பா.

உனக்கு யாரையாவது தெரியுமா. எனக்கு துப்பாக்கி வேணும். அர்ஜன்ட்.

வேற ஆளைபாருய்யா என்று அவன் அகன்றான்.

நான் பரபரப்புடன் தேடினேன். யார் கொடுப்பார் எனக்கு துப்பாக்கி. கஜேந்திரனை தீர்த்துக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் ராதிகா கோர்ட் ஏற வேண்டியிருக்கும்.

என்னை தாண்டி அந்த ஆள் போனதையும் அவன் அங்கிருந்த ஒரு காவல் அதிகாரியிடம் பேசியதை நான் கவனிக்க வில்லை.

இன்னும் சந்துக்களில் நுழைந்து பலரிடம் கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்லவில்லை.

மெல்லிய உருவத்துடன் கறுப்பு நிற சட்டையும் காக்கி நிற கால் சட்டையும் அணிந்த ஒருவன் என்னருகில் வந்தான்.

என்ன வேணும்.

சரக்கு.

சரக்குன்னா கஞ்சாவா

இல்லை இல்லை. துப்பாக்கி வேணும். சைலன்ஸரோட கிடைச்சா நல்லாயிருக்கும்.

எத்தனை ரூபாய் வைச்சிருக்கே.

எத்தனை ரூபாய் ஆகும்.

அது ஆகும் 60-70 ஆயிரம். உன் கிட்ட லைசன்ஸ் இருக்கா.

லைசன்ஸா. இல்லை.

லைசன்ஸ் இல்லைன்னா. திருட்டு துப்பாக்கி வேணுமா.

ஆமா. இங்கே கிடைக்கும்னு சொன்னாங்க.

யார் சொன்னாங்க.

எனக்கு தெரியும்.

சரி. எதுக்கு வேணும் துப்பாக்கி உனக்கு.

அது உனக்கு தேவையில்லாத விஷயம்.

சரி என்னோட வா என்று என்னை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தான். சட்டென்று ஒரு ஆட்டோவில் என்னையும் ஏற்றிக் கொண்டு அவனும் ஏறி அமர்ந்தான்.

எங்கே போறோம்.

துப்பாக்கி வேணுமில்லையா.

ஆமா.

அப்ப பேசாம வா.

சிறிது நேரத்தில் ராயபுரம் காவல் நிலையத்தில் ஆட்டோ வந்து நின்றது. என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொண்டு இறங்கி ஓடும் முன் இன்னும் இருவர் வந்து என்னை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
சிறைக்குள் தள்ளிவிட்டு மேலதிகாரியை அழைத்து வந்தனர்.

டேய். யாருடா நீ. உன் பேர் என்ன.

கதிர். கதிரவன்.

யாரை போட்டுத்தள்ள போற.

யாரையும் இல்லை.

அப்புறம் எதுக்கு உனக்கு துப்பாக்கி என்று சொல்லி காலால் என்னை
எட்டி உதைத்தார்.

யாரை போட்டுத்தள்ளப்போற.

கஜேந்திரன்.

யார் கஜேந்திரன்.

அவரு ராதிகா வேலை செய்யற கம்பெனியில் மானேஜர்.

யாரு ராதிகா.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் குழம்பினேன்.

உன் வீட்டு நம்பர் என்ன.

சொன்னேன்.

சிறிது நேரத்தில் என் அம்மா அப்பா கயல் அவருடைய அண்ணன் அனைவரும் வந்திருந்தனர்.

அவர்கள் வருவதற்கு முன் இன்னும் பல அடிகள் வாங்கினேன்.
காவல் அதிகாரியிடம் பேசி என்னுடைய மருத்துவ சான்றிதழ்களை காட்டி வெளியே அழைத்து வந்தனர்.

கயலுடைய அண்ணன் என்னைப்பார்த்து கத்தி தீர்த்தான். என் தந்தை தாயை திட்டினான். என்னை வீட்டில் பூட்டி வைக்கச் சொன்னான்.

கயல் இன்னொரு தடவை இந்த பைத்தியத்தோட சகவாசம் வைச்சிகிட்டே அவ்வளவுதான் உன் கதை என்று கையை உயர்த்தி அதட்டினான். அவளை இழுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான்.

அருகில் இருந்த மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று காயத்திருக்கு மருந்திட்டு என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என் பெற்றோர்.

தொடரும்....

மதுரை மைந்தன்
14-06-2009, 04:00 AM
கதை அருமையாக ஆரம்பித்து தொடர்கிறது. மேலும் படிக்க ஆவலாயுள்ளேன். தொடருங்கள் மோகன்.

சிவா.ஜி
14-06-2009, 06:48 AM
வித்தியாசமான முறையில் மனோதத்துவ ரீதியாகப் போகும் கதையை எழுதும் பாங்கு நன்றாக இருக்கிறது மோகன். கதிரின் இந்த குறைபாட்டால் யாருக்கு என்ன நேரப்போகிறதோ என திகிலாய் இருக்கிறது. கயலின் கேரக்டர் மிக அருமையாய் வடிவமைக்கப்ப்ட்டிருக்கிறது.

தொடருங்கள்...தொடர்கிறோம்.

leomohan
14-06-2009, 02:40 PM
4


http://www.uml.edu/wuml/podcast/media/nanotechnology-kd-001.jpg

கயல்விழியை ஏன் தான் மருத்துவருக்கு அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கும்படி ஆகிவிட்டது. என்னை பார்த்து புன்னகைத்த அவர், நீங்க கொஞ்ச வெளியே வெயிட் பண்ணுங்க என்று என்னை அனுப்பிவிட்டு அவளிடம் பேசத்துவங்கினார்.

Albert Camusன் தமிழ் மொழி பெயர்ப்பு நாவலான அந்நியனில் வருவது போல என்னை கண்ணாடி அறையில் அடைத்துவிட்டிருந்தார். அவர்கள் செய்கைகள் எனக்கு புரியாவிட்டாலும் என்ன பேசுகிறாள் கயல் என்பது எனக்கு புரியாமல் இல்லை.

தேர்வுக்கு சென்ற மாணவன் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுவது போல காவல் துறைக்கு நான் சென்ற கதையை தான் அவள் சொல்லிக் கொண்டிருக்கிறாள் போலும்.

எனக்கு எரிச்சலாக இருந்தது. என்னுடைய பிரச்சனையைப் பற்றி என்னை வைத்து பேசுவதை விட்டு அவளிடம் தனியாக என்ன பேச்சு.


-----

கதிரவனுக்கு வந்திருக்கும் பிரச்சனையை சீரியல் பார்த்து கதை சொல்லும் ஒரு சராசரியான பெண்ணைப் போல கண்களை அகலப்படுத்திக் கொண்டு நடுவில் விசும்பல்களுடன் கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கயல்.

சார் நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. ஏதோ ஒரு புக் படிச்சவரு அதில் கதாநாயகி கல்யாணத்துக்கு போகறதுக்காக தயார் ஆகிகிட்டு இருந்ததை விபரமா எழுதி தொலைச்சிருக்காரு. அதை படிச்சிட்டு இவரு புடவை கட்டிக்கிட்டு மேக்கப்பெல்லாம் போட்டுக்க ஆரம்பிச்சிருக்காரு. இவங்க வீட்ல இளவயசு பொண்ணுங்க யாரும் இல்லை. அதனால வீட்ல எந்த மேக்கப் பொருளும் இல்லை. கடைக்கு போய் இதையெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காரு.

இப்படித்தான் இன்னொரு புக்கை படிச்சிட்டு அதுல யாரோ கிரின்னு ஒரு பாத்திரம். மூணு தடவை ஐஏஎஸ்ஸில் பெயில் ஆனதால ரயில் தண்டவாளத்தில போய் படுத்துகிட்டானாம். அதனால இவரும் போய் அப்படி செஞ்சிருக்காரு. நல்ல வேளையா யாரு காப்பாத்தி கொண்டு வந்தாங்க.

ம் என்று சொல்லியபடி அவளை மேலும் பேச வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்.

சரிம்மா. இதுவரைக்கும் யாராவது உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருக்காங்களா. யாராவது இவரு மேல் உங்க வீட்ல புகார் செஞ்சிருக்காங்களா.

சார் இதுவரைக்கும் இவரு பண்ண கூத்தால இவருக்குத் தான் பிரச்சனையே. ஆனால் இது ஜாஸ்தியாட்டா யாருக்கு பிரச்சனை வரும்மோன்னு ரொம்ப பயமா இருக்கு.

சரி. இதுவரைக்கும் என்ன மருத்தும் செஞ்சிருக்கீங்க.

நிறைய டாக்டர் கிட்டே காட்டியாச்சு. அவரை புக் படிக்க விடாம பார்த்துக்கிட்டாச்சு. ஒரு பேப்பர் கூட கண்ணுக்கு படறதில்லை. ஆனா சின்ன விஷயம் படிச்சாலும் அவருக்கு ரொம்ப பாதிக்குது. யாராவது செத்திட்டாங்கன்னு படிச்சா இவரு அழுவ ஆரம்பிச்சிடராரு. எங்கேயாவது மலேரியா வந்தா இவருக்கு உடம்பு சூடாகிடுது.

சரி. ஒரு புத்தகம் படிக்கும்போதே அவருக்கு இந்த மாதிரி பாதிப்பு ஏற்படுதா அல்லது படிச்சு முடிச்சப்பிறகு இந்த மாதிரி ஆகாது.

அது சரியா தெரியலை சார். சில நேரத்தில பாதி புஸ்தகம் படிக்கும்போது இப்படி ஆகுது.

குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எழுதின புத்தகம் படிக்கும்போது ஆகுதா இல்லை....

யாரு எழுதினாலும் இப்படித்தான்.

இங்கிலீஷ் புக்கா தமிழா.

அவரு இரண்டு புக்கையும் படிப்பாரு.

இந்த பாதிப்பு எத்தனை மணி நேரம் நீடிக்குது.

சில சமயம் 20-30 நிமிஷத்திலே சரியாயிடுத்து. சில நேரம் இரண்டு மூணு நாள். சில சமயம் வாரம் கூட. அன்னிக்கு போலீஸ்ல அடி வாங்கின உடனேயே சரியாயிடுத்து. இல்லை எல்லாரும் சேர்ந்து திட்டினா சரியாயிடுத்து.

இவரு அந்த மாதிரி நேரத்தில உங்களை அடையாளம் தெரிஞ்சிக்கிறாரா.

அவருக்கு எங்களை பார்த்தா யாருன்னு தெரியுது. ஆனாலும் ஒரு மூணாவது மனுஷனை பார்க்கறமாதிரி தான் பார்க்கறாரு.

அப்ப நீங்க ஏதாவது பேச்சுக் கொடுத்தா பதில் கொடுக்கறாரா.

இல்லை சார். எந்த காரெக்டரா இருக்காரோ அந்த காரெக்டர் மாதிரி தான் பதிலும் வரும்.

ம்ம்.

இது எத்தனை நாளா இருக்கு.

மூணு வருஷமா சார்.

ஏதனால அவருக்கு வேலை போச்சு.

நானோ டெக்னாலாஜில கண்டுபிடிக்கற நானோ பாட்ஸ்னால உலகம் அழியபோகுதுன்னு அப்படிங்கற மாதிரி ஏதோ புக் படிச்சிருக்காரு அதுக்கு மறுநாள் ஆபீஸூக்கு போய் லாப்பெல்லாம் உடைக்க ஆரம்பிச்சிட்டாரு. புத்தி ஸ்வாதீனம் இல்லையின்னு வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க.

சரிம்மா. நீங்க கொஞ்சம் வெளியே இருங்க. கொஞ்ச நேரம் அவர் கிட்ட பேசிட்டு அப்புறம் உங்களை கூப்பிடறேன்.


----


அவர் எழுந்து வந்த கதவை திறந்தார். என்னை உள்ளே அழைத்தார். கயல் வெளியே வந்தாள். அவளை முறைத்துப் பார்த்தேன். அவள் முகம் தெளிவாக இருந்தது போல் இருந்தது. அவள் என்ன பேசியிருப்பாளோ என்று என் முகம் தான் குழம்பி போயிருந்தது.

தொடரும்...

மதி
15-06-2009, 08:15 AM
ஆரம்பிச்சிட்டீங்களா.....
மற்றுமொரு மனவியல் சம்பந்தப்பட்ட கதை சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல். அத்துடன் அழகாக பொருந்தும் படங்களுடன்....

தொடருங்க லியோ.. பின் தொடர்கிறோம்.

அமரன்
15-06-2009, 09:24 AM
ஒவ்வொரு பாகத்திலும் வாசகனை கவனம் சிதறவிடாது உளவியல் வசியம் செய்யும் வல்லுனரின் கதை என்பது படித்த மாத்திரத்தில் புரிந்து விடுகிறது. விறுவிறுப்பான திரைக்கதை. விறுப்பு விறுப்பு சற்றும் குறையாத எழுத்தியக்கம். கதையின் போக்கில் என்று கதையை அலச இன்னும் அவகாசம் உள்ளது போலும். குறுக்குச் சிறுத்து பாகங்களை தருவதுக்கு நன்றியும் பாராட்டும் லியோ.

leomohan
15-06-2009, 01:19 PM
5

மோகன் கணினியில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான். ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் முழு நேர வேலை. பகுதி நேரத்தில் இணையத்தில் கதை கவிதை கட்டுரைகள் எழுதுவது. சில நேரத்தில் கருத்துக் களங்களில் சூடான திரிகளில் கருத்துக்கள் எழுதுவதும் கூட. அவன் மனைவி பின்னால் இருந்து குரல் கொடுத்தாள்.

இந்தாங்க காபி. என்ன மறுபடியும் மன்றமா? வேற வேலையில்லை உங்களுக்கு. நாள் முழுக்க ஆபீஸில் இருக்கீங்க. வீ்ட்டுக்கு வந்ததும் மன்றம் மன்றம்னு உக்காந்துக்கிட்டா கடை கன்னிக்கு யாரு போறது.

மன்றம் இல்லை. நாவல் எழுதிகிட்டு இருக்கேன்.

என்ன நாவல்.

கணினிக் காதல்.

அதான் எல்லா தமிழ் மன்றத்திலும் முன்னாடியே எழுதிட்டீங்களே.

அது முன்னாலே எழுதினது தான். இப்ப பிடிஎஃப்பா மாத்தி இஸ்னிப்ஸல போட்டுக் கிட்டு இருக்கேன்.

சட்டென்று கணினியின் பின்னால் வந்து கணினியின் திரையை பார்த்தாள் அவன் மனைவி.

அது என்ன மோகன் கிருட்டிணமூர்த்தி. மோகன் கிருஷ்ணமூர்த்தி தானே.

ஆமாம் மா. ஆனா இது சுத்த தமிழ். சொல்லும் போது கிருஷ்ணமூர்த்தி. எழுதும்போது கிருட்டிணமூர்த்தி. ஷ வந்து வடமொழிக்காக நாம அடாப்ட் பண்ணிகிட்டது. இப்ப மோஹன் தான் உச்சரிக்கறோம். ஆனா மோகன்னு எழுதறோம்.

அப்ப உங்க நாவல்ல ஷ வர இடத்திலே ட்டி தான் போடுவீங்களா.

நாவல்ல கதை எழுதும் போது இரண்டு பகுதி இருக்கு. ஒன்னு எழுத்தாளர் எழுதறது. அதுல எத்தனை முடியுமோ அத்தனை சுத்த தமிழ் பயன்படுத்த முயற்சி செய்யறோம். இன்னொரு பகுதி. பேச்சுத் தமிழ். அதுல நாம சுத்த தமிழ் எழுதறோம்னா படிக்கறவங்களால ரிலேட் பண்ண முடியாது. அதனால புஸ்தகம், பொஸ்தகம், கஷ்டம், இஷ்டம் அப்புறம் ஆங்கில வார்த்தைகள் இதையெல்லாம் பயன்படுத்தறோம். அதுக்க காரணம் மக்கள் சாதாரணமா எதை பேசறாங்களோ அதையே படிச்சா படிக்கறவங்களுக்கு அவங்க காதலு வசனம் வந்து விழற மாதிரி இருக்கும். இயற்கையா இருக்கும்.

ஓ அதுல இத்தனை விஷயம் இருக்கா. என்னமோ போங்க. எனக்கு கதை படிக்கறதே பிடிக்காது.

நல்லதா போச்சு நான் எத்தனை அதிர்ஷ்டம் செஞ்சவன் பாத்தியா என்ற தன் மனைவியை நக்கலடித்துக் கொண்டிருக்கும்போது அவன் கைபேசி ஒலித்தது. ஒரு புதிய எண். யாராவது மன்றத்து நண்பர்களாக இருக்குமோ என்று யோசித்தப்படி எடுத்து ஹலோ நான் மோகன். நீங்க என்றான்.

வணக்கம். மோஹன். நான் டாக்டர் ரதீஸன் பேசறேன். ஸைக்கியாட்ரிஸ்ட். என்னுடைய நண்பர் உங்களை பத்தி சொன்னாரு. இப்பத்தான் உங்களோட என் கைபிடித்தவன் நாவலை படிச்சி முடிச்சேன். நல்லா இருந்தது. இரண்டு பேரோட உணர்வுகள் ஈகோ பாதுகாப்பின்மை பத்தி நல்லா எழுதியிருக்கீங்க. எனக்கு உங்களால ஒரு உதவி ஆகனும்.

சொல்லுங்க டாக்டர் என்னால முடிஞ்சா செய்யறேன் என்றான் மோகன்.

நாளைக்கு மத்யானம் என்னை வந்து பாக்க முடியுமா.

கஷ்டம் டாக்டர். எங்க ஆபீஸ்ல டைம் அண்ட் அட்டென்டன்ஸ் ரொம்ப ஸ்டிரிக்ட். நாளைக்கு சாயந்திரம்?

சரி. வாங்க. இதான் என்னுடைய அட்ரெஸ். நன்றி.

நன்றி டாக்டர் என்று போனை துண்டிக்கும் போது அவனுடைய எழுத்தாளன் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது. தலை கால் இல்லாமல் ஒருவர் திடீரென்று உதவி என்கிறார். என்னவாக இருக்கும்.

யாருங்க போன்ல.

யாரோ டாக்டர் ரதீஸனாம். பேர் கேள்விபட்ட மாதிரி இருக்கு. ஏதோ உதவி வேணும்னு சொல்றார்.

அப்படியா. என்ன உதவி.

நாளைக்கு போய்தான் பாக்கனும் என்று யோசனையுடன் இஸ்னிப்ஸ் தளத்தில் அப்லோட் எனும் கோப்பு தரவேற்ற பொத்தானை அமுக்கிவிட்டு கணினியை மூடினான்.

தொடரும்.....

leomohan
15-06-2009, 02:13 PM
6

http://www.breaktech.net/EmergingWritersBrochure/images/author_caricature.gif

மோகன் அலுவலகத்திலிருந்து ரதீஸனை பார்க்க விரைந்தான்.

இவனுக்காகவே அவர் காத்திருந்தது போல இவன் நுழைந்ததுமே அவர் கதை திறந்துக் கொண்டு வரவேற்றார். உள்ள அழைத்துச் சென்ற அவனை

அமரச் செய்தார்.

என்ன சாப்பிடறீங்க.

காபி வித் மில்க் அண்ட் ஷூகர்.

ஓ காபி பிரியரா நீங்க என்று தொலைபேசியை எடுத்த ஒரு எண்ணை தட்டி கமலா கெஸ்ட். ஒரு காபி என்று சொல்லி வைத்தார்.

மோகன் அவர் அறையை சுற்றிப்பார்த்தான். பிரபல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை அறை என்று சொல்ல அனைத்த விஷயங்களும் இருந்தது.

அவருடைய மேசையில் இவன் எழுதிய என் கைபிடித்தவன் புத்தகம் கணினி பிரிண்ட் அவுட்டாக காட்சியளித்தது.

அவன் கண் போன திசையை பார்த்த அவர். ஹா ஹா, எனக்கு கம்ப்யூட்டரில் படிக்கும் பழக்கம் இல்லை. அதனால என் நண்பர் பிரிண்ட் பண்ணிக்

கொடுத்துட்டார். ரொம்ப நல்லா இருந்தது. இப்ப உங்களோட இன்னொரு நாவலையும் படிச்சிட்டு இருக்கேன்.

நன்றி டாக்டர். உங்களை மாதிரி வாசகர் கிடைக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. நான் ஏதோ விளையாட்டா இணையத்துல எழுதறேன்.

ஓ. இல்லை இல்லை. நல்ல முயற்சி தான். நீங்க இதை பப்ளிஷ் பண்ண முயற்சி பண்ணலையா.

இல்லை டாக்டர். இணையத்துல எழுதறது ஒரு சுகமான அனுபவம். உடனடியா படிச்சு மக்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்லிடறாங்க. சில பேர்

இமெயில் எழுதறாங்க. இப்ப இணையத்துல வெளியிடறது ரொம்பவும் சுலபம். தமிழ் ஃபாண்ட்ஸ் நிறை வந்திருக்கு. தமிழ் தளங்களும் அதிகரிச்சிகிட்டு

இருக்கு. இணையத்துல ஒரு ஆயிரம் பேர் படிக்கறது புத்தகமா வந்த பத்தாயிரம் பேர் படிக்கறதுக்கு சமம். ஏன்னா முன்னாடி மாதிரி போஸ்ட் கார்ட்

வாங்கி எழுத்தாளருக்கு பாராட்டு எழுதவோ கிரிடிஸைஸ் பண்ணவோ மக்கள் கிட்ட நேரம் இல்லை. எல்லாம் டிவி வந்ததாலே. இட் ஹாஸ் ஈட்டன்

அப் தேயர் டைம் என்றான்.

ஆமா. நீங்க சொல்றது சரிதான்.

சொல்லுங்க டாக்டர் என்னால உங்களுக்கு என்ன உதவி ஆகனும்.

எங்க தொழில்ல பொதுவாக எங்களோட நோயாளிகளை பத்தி வெளியே பேசறது இல்லை. ஏன்னா அது ஒருத்தரோட இமேஜ் பாதிக்கும். ஆனா சில

நேரத்தில நோயாளியோட பிரச்சனைகளை பத்தி வேற தொழில்ல இருக்கற சில நிபுணர்களோட நாங்க பேசறது வழக்கம். எங்களோட தொழிலே

மக்களை எத்தனை நல்லா புரிஞ்சிகிட்டு இருக்கோங்கறதுல தான் இருக்க. மருத்துவம் ஒரு பகுதி தான்.

சொல்லுங்க டாக்டர் என்று ஆர்வமாக கேட்டான் மோகன்.

மோஹன், இப்ப என்னோட நோயாளியை பத்தி உங்களுக்கு எல்லா உண்மைகளையும் சொல்றேன். நீங்க அதை ரகசியமா வைச்சிருக்கனும். அவர்

பெயர் கதிரவன் என்று துவங்கி அவன் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளையும் சொல்லி முடித்தார்.

சார் இது ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஹா ஹா. அடுத்த கதையில பயன்படுத்திக்கலாம்னு என் மூளை சொல்லுது.

பாத்தீங்களா இது தான் உங்களை மாதிரி எழுத்தாளர்களோட பிரச்சனையே. எல்லா விஷயங்களுக்கு உங்களுக்கு கதைக்கு ஒரு கரு தான். இல்லையா.

ஓ. சார் நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க. சும்மா தமாஷூக்கு சொன்னேன் என்றான் சற்றே மன்னிப்பு கேட்டுக்கும் தோரணையில்.

ஹா ஹா. இல்லையில்லை. நானும் சும்மா தான் சொன்னேன்.

சார் இது மாதிரி நிச்சயமா நடக்குமா.

மோஹன், சில நேரத்துல நாங்களே எங்களோட நோயாளிகளை சந்தேகப்படறது உண்டு. காரணம், பல பேருக்கு டாக்டர் கிட்ட போறதும் ஒரு வியாதி

தான். சில பேருக்கு ரொம்ப சுத்தமா இருக்க நினைப்பாங்க. யாருக்கும் கை கொடுக்க மாட்டாங்க. கை கொடுத்தா கையை டெட்டால் போட்டு

கழுவிப்பாங்க. சில பேர் பல தடவை குளிப்பாங்க. பல தடவை பல்லு தேச்சிப்பாங்க. சில பேர வீட்டை பத்து தடவை சுத்தம் பண்ணுவாங்க. சில

பேருக்கு முனுக்குன்னா டாக்டர் கிட்டே போயிடுவாங்க. சில பேரு இல்லாத ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு அந்த வியாதி தனக்கும் வந்துட்டதா

நினைச்சிகிட்டு டாக்டர் கிட்டே போவாங்க. அதனால இது உண்மையா பொய்யான்னு சீக்கிரம் தெரியவந்துடும். ஆனா இந்த கேஸ்ல கயல்விழியோட

கருத்துக்களும் ரொம்ப அவசியம். அவங்க சொன்னதை வைச்சி இதை நிஜம்னு எடுத்துகிட்டு தான் குணம் செய்ய முயற்சி பண்ணணும்.

சரி டாக்டர் இந்த வியாதி விபரீதமாயிட்டா என்னவெல்லாம் நடக்கலாம்.

என்ன வேணுமானாலும் நடக்கலாம் மோஹன். இப்போதைக்கு இது வந்து வந்து போகுது. ஆனா சில நேரத்துல கதையின் பாத்திரங்களை மாத்திரம்

உணராமல் அந்த பாத்திரமாகவே மாறிட்டா பிரச்சனை அதிகமாயிடும். ஹிட்லரோட ஆட்டோபயோகிராபி மெய்ன் கெம்ப், கேள்விப்பட்டிருக்கீங்களா.

ஆமா டாக்டர். படிச்சிருக்கேன்.

அதை படிச்சிட்டு தான் தான் ஹிட்லர்னு நினைச்சிகிட்டு மீண்டும் கதிரவனாகவே மாறாம போயிட்டா அவரை நிரந்தரமா மன நோய்

மருத்துவமனையில் சேக்கறதை தவிர்த்து வேற வழியில்லை.

ஐய்யோ இன்னொரு ஹிட்லர் வேண்டாம் டாக்டர் நமக்கு.

ஓ. கவலை படாதீங்க. உங்க உதவி கிடைச்சா சீக்கிரம் அவரை குணப்படுத்திடலாம்.

சொல்லுங்க டாக்டர். என்ன வேணும்னாலும் செய்யத்தயாரா இருக்கேன். ஆனா நான் இருக்கறது ஐடி சிஸ்டம் இன்டக்ரேஷன் வேலை. சில நாள்

வேலையில்லாமல் இருக்கும். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாது. அதை பொருத்து தான் என்னுடைய உதவியும்.

அது புரியுது.

சொல்லுங்க டாக்டர்.

நான் இப்ப இந்த பிரச்சனையை இரண்டு விதத்துல அணுகப்போறேன். ஒன்னு ஏற்கனவே முடிவு செஞ்சிட்டேன். அந்த முயற்சியை நாளைக்கு செய்யப்

போறேன். இன்னொன்னு உங்களோட முயற்சி செய்யனும். நீங்க என்னை பத்தி கதை எழுதனும்.

பயோகிராபி மாதிரியா.

ம்ம். இல்லை. என்ன மாதிரி ஒரு மனோதத்துவ நிபுணரோட வாழ்கை தொழில் பத்தி எழுதனும். நான் சந்திச்ச வித்தியாசமான கேஸூகளும் அதுக்கு

நான் தந்த தீர்வுகளும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்றேன். அதை கதையா எழுதனும். ஒவ்வொரு அத்யாயமா எனக்கு தரனும்.

முடியுமா.

ஓ தாராளமா சார்.

சரி நாம அடுத்த வாரம் சந்திப்போம். நான் சொல்ல சொல்ல நீங்க எனக்கு எழுதிக் கொடுங்க. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.

வணக்கம் டாக்டர் என்று சொல்லி யோசனையுடன் எழுந்தான் மோகன்.

தொடரும்....

அக்னி
15-06-2009, 10:53 PM
அடடே... நம்ம மோகனும் கதைக்குள்ள வந்துட்டாரே...
சுவாரசியமும் எதிர்பார்ப்பும் அதிகரிதுக் கொண்டே...

சிவா.ஜி
16-06-2009, 06:56 AM
கதையில் உபயோகப்படுத்தும் வழக்கு தமிழ் மற்றும் சுத்த தமிழைப் பற்றி சொன்னது மிக மிக சரி.

கதை அழகாகப் போகிறது. கதிரவனைக் குணப்படுத்த மருத்துவர் தேர்ந்தெடுத்திருக்கும் முறை வித்தியாசமாக இருக்கிறது. எப்படி குணப்படுத்தப் போகிறார் என்று அறிய ஆவல் கூடுகிறது.

தொடருங்கள் மோகன்.

அமரன்
16-06-2009, 08:52 AM
கடந்து செல்லும் போது மழைத்தூவலைப் போட்டு தன் தடங்களைப் பதிக்கும் மேகம் போல போற போக்கில் கருத்துகளை தூவி தடம் பதித்துச் செல்கிறது கதை. கதையில் வளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. தெரிந்த பாதையும் தெரியாத பாதையுமாக சுவாரசியம் கூட்டும் கதையுடன் பயணிக்க ஆவலுடன் காத்திருக்கேன் இளைப்பாறியபடி.

leomohan
17-06-2009, 11:18 AM
7
மருத்துவர் ரதீஸனின் சோதனைக்கு நான் பலியான கதை சொல்லியே ஆக வேண்டும். பல பிரச்சனைகளை சந்தித்தபின்னும் நான் குணா கமல் குண்டக்க மண்டக்க பார்த்தீபன் அந்நியன் விக்ரம் என்று என் காதுபட பட்டப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தவர்கள் ஒரு புறம் இருக்க நானாக போய் ஏதாவது படிக்கப் போய் மாட்டிக் கொண்டு நண்பர்களிடமும் உறவினர்களிடமும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்க, எதுவுமே வேண்டாமடா என்று எதையும் படிக்காமல் சில நாட்கள் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை கொடுத்து அதை நான் படிக்க வேண்டும் என்றும் அவர் என்னையும் என்னில் ஏற்படும் மாற்றத்தையும் கூர்ந்து கவனிக்க அவருடைய விருந்தனர் அறையிலேயே என்னை தங்கவும் சொல்லியிருந்தார்.

நோயிலிருந்து முற்றிலும் விட பட வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் மறுபுறம் என்னை பார்த்த தினமும் வருந்தும் பெற்றோர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் என்னை உந்தித் தள்ளியது. அவர்களுக்கு வந்திருப்பதும் ஒரு நோய் தான். மகனாக நான் பிறந்த நோய். இந்த இரண்டு நோய்களும் குணமாகி மறுபடியும் என்னை தாழந்து பார்த்தவர்களை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்ற வெறி உருவாகியிருந்த்து. அதனால் ரதீஸன் சொல்லும் எந்த சோதனைக்கும் நான் தயாராக இருந்தேன்.

அவர் கொடுத்த புத்தகத்தை படித்ததால் வந்த வினை இதோ.
---
தோலில் ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு ஒருவன் என்னை நோக்கி நடந்து வந்தான். வணக்கம் வக்கீல் சார்.

வணக்கம்.

உங்க பேரு.

நான் வக்கீல் சீனிவாசன். என்ன பிரச்சனை சொல்லுங்க என்று கையில் இருந்த கருப்பு அங்கியை சரி செய்துக் கொண்டே கேட்டேன்.

சார் தெருவிலே விளையாடிக்கிட்டு இருந்த ஒரு கொழந்தையை என் தம்பி பைக் ஏத்தி கொன்னுட்டான்.

அடப் பாவமே.

அதுக்கு அந்த தெருவில இருந்த எல்லாரும் சேர்ந்து என் தம்பியை அடிச்சு துவைச்சிட்டாங்க. அவன் இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கான்.

ஐய்யோ. அடி பலமா.

இல்லை சார். கண்ணு முழுச்சிகிட்டான். ஆனா இப்ப அந்த கொழந்தையோட அப்பா என் பையன் மேல கேஸ் போட்டுருக்காரு. நீங்க தான் ஏதாவது செஞ்சி அவனை காப்பாத்தனும்.

ஓ. அப்படியா. விபரங்களை கொடுங்க. கேஸை எடுத்துக்கலாம்.
இப்படி நான் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு காவல் அதிகாரி என்னை நோக்கி வந்தார்கள்.

யெஸ் இன்ஸ்பெக்டர். என்ன வேணும்.

கொஞ்சம் தனியா வரீங்களா என்று என் தோளை அமுக்கி ஒரு ஓரத்திற்கு அழைத்து சென்றார் அந்த இருவரில் ஒருவர்.

சொல்லுங்க இன்ஸ்பெக்டர்.

நீங்க எந்த வருஷம் சட்டம் முடிச்சீங்க.

வருஷம்....

நீங்க பார் அஸோசியேஷன்ல மெம்பரா

ம்ம்.

எத்தனை வருஷமா லா ப்ராக்டீஸ் பண்றீங்க.

நீங்க எதுக்கு கேட்கறீங்க இதெல்லாம்.

சார் நீங்க லாயரே இல்லைன்னு ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு.

என்ன விளையாடறீங்களா. நான் லாயர் சீனிவாசன். மெட்ராஸ்ல பெரிய வக்கீல். யாரை வேணாலும் கேட்டுப்பாருங்க.

உங்க சர்டிபிகேட்ஸ் காட்டறீங்களா. வாங்க உங்க வீட்டுக்கு போகலாம் என்று என்னை இழுக்காத குறையாக இழுந்து சென்று ஹயூண்டையில் ஏற்றினார். சில நிமிடங்களில் என் வீடு என்று சொல்லி எங்கோ அழைத்துச் சென்றனர்.

வீட்டில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் ஒரு இள வயது பெண்ணும் தென்பட்டனர். அந்த அம்மா என்னை ஓடி வந்து கதிரு இப்ப என்னடா செஞ்சித் தொலைச்சே ஏன்டா போலீஸ் வந்திருக்கு என்ற அழுதுக் கொண்டே வந்து என்னை கட்டிக் கொண்டார்.

யாரு கதிரு என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த காவல்
அதிகாரி, அம்மா இவங்க உங்க பையனா.

ஆமாம் சார்.

என்ன படிச்சிருக்காரு.

எம் எஸ் சி மைக்ரோ பயாலஜி என்று அந்த இளம் பெண் பதிலளித்தாள்.

நீங்க யாரு.

சார் என் பேரு கயல்விழி. இவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

அம்மா, இவரு மைக்ரோ பயாலஜி படிச்சிருக்காருன்னு சொல்றீங்க. இவங்க கதிருன்னு சொல்லி கூப்பிட்டாங்க. இவரோ வக்கீல் சீனிவாசன்னு சொல்லிகிட்டு கோர்ட்ல கேஸெல்லாம் எடுத்துகிட்டு இருக்காரு. என்னம்மா பிரச்சனையெல்லாம்.

சார் என்று அந்த பெண் கயல்விழி ஏதோ சொல்ல முயலும் போது வெள்ளை நிற மாருதி சட்டென்று வந்து நிற்க அதிலிருந்து அறுபது வயது கொண்ட ஒருவர் வந்திருங்கினார்.

காவல் அதிகாரியை பார்த்து கையசைத்தார். என்னை வைத்து அந்த குடும்பத்தை அலசிக் கொண்டிருந்து இரண்டு காவல் அதிகாரிகளும் சட்டென்று அங்கிருந்து விலகினர்.

அந்த அறுபது வயது பெரியவர் கையிலிருந்த பெட்டியை எடுத்து ஒரு ஊசியை எடுத்து என் கைகளில் செலுத்தினார். மெதுவாக கண்கள் இறுக்க நான் மயங்கி விழுந்தேன்.

தொடரும்...

leomohan
17-06-2009, 11:20 AM
8

மோகன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். இது அவனுக்கு புதிய வேலை. ஒருவர் கதை சொல்லி அதை எழுதுவது. கதை எழுதுவது என்பது ஒரு கைதேர்ந்த மருத்துவர் செய்யும் அறுவை சிகிச்சை போன்றது. மருத்துவருக்கு அனைத்து அத்தியாயங்களும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். சிகிச்சை ஆரம்பித்த பிறகு நடுவில் இதயத்தை அறுப்பதை நிறுத்திவிட்டு யோசிக்க முடியாது. அல்லது கடைசியில் எப்படி முடிக்கப் போகிறோம் என்று நடுவில் திணற முடியாது.

கதையாசிரியருக்கும் அதே நிலைமை தான். ஒரு வரி கதை கொண்டு எழுது ஆரம்பிப்பது என்பது வியாபார ரீதியாக எழுத தான் முடியும். மாதம் ஒரு முறை பாக்கெட் நாவல் எழுதுவது இந்த ரகம். Quantity இருக்கும் Quality இருக்காது. அது போலவே எழுதுவதை தொழிலாக கொண்டு எழுதுபவர்களும். இந்த பிரசுரத்திற்கு எழுதி தரவேண்டும் அந்த பிரசுரத்திற்கு எழுதி தர வேண்டும். எதை எழுதினாலும் படிப்பார்கள். எதை எழுதினாலும் வெளியிட்டு விடுவார்கள். ஒரு தடவை பெயர் கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நாமே வெளியிடும் போது தரம் நாம் சொல்லும் தரம் தான். இப்படி பல விதங்கள்.

தொலைகாட்சி தொடர்கள் எப்போதும் இந்த ரகத்தை சேர்ந்தவை. கதை எப்படி வேண்டுமானாலும் மாறிக் கொண்டே போகும். மக்கள் மத்தியில் பெயர் கிடைத்துவிட்டதென்றால் இன்னும் கொஞ்சம் இழுக்கலாமே என்று இயக்குனர் சொல்ல கதையாசிரியர் பேனாவில் மை நிரப்ப ஆரம்பித்துவிடுவார். பிறகு தயாரிப்பாளர் விளம்பரதாரருடன் TRP rating வைத்து வியாபாரம் செய்ய துவங்குவார்.

மோகன் எழுதும் இந்த கதைக்கு பிரசுரகர்த்தா தேவையில்லை. அச்சு வேலை இல்லை. ஏனென்றால் இதற்கு ஒரே ஒரு வாசகன் தான். கதிர் எனும் கதிரவன். அவனும் படித்து கருத்திடப் போவதில்லை. படிப்பவனுக்கு இதை எழுதியது மோகன் எனும் எழுத்தாளன் என்று தெரியப்போகிறதா என்பதும் தெளிவில்லை.

இது ஒரு மருந்து. முதல் முறையாக மருந்து தயாரிப்பில் ஒரு பகுதி நேர எழுத்தாளன். இணையத்தால் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வளரும் ஒரு எழுத்தாளன். இவனுக்கு இவனுடைய கதைகள் அச்சில் ஏறி பார்த்து பழக்கம் இல்லை. அதனால் image எனும் தொல்லையும் இல்லை. விரும்பியதை எழுதுவான். படித்தால் படிப்பார்கள். படித்தவர்கள் கருத்திட்டால் இடுவார்கள். இல்லையென்றால் இல்லை.

ஆனால் இங்கு இவனுக்கு ஒரு பிரச்சனை. கதை அத்தியாயம் ஒவ்வொன்றாக எழுத வேண்டும். முடிவு என்ன என்று இவனுக்கே தெரியாது. இது ஒரு வரி கதையின் கருவை விட மோசம். இதற்கு முன் இவன் மனதில் தோன்றிய பல கருக்கள் கதையாகாமலேயே மறைந்துவிட்டிருந்தது. காரணம் இதை எங்கோ படித்தது போல் இருக்கிறது, இது ஒரு ஆங்கிலப் படத்தில் வந்த கதை மாதிரி இருக்கிறதே இதுபோலவே முன்னொரு முறை ஒருவர் எழுதியிருக்கிறாரே என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்று ஒரு பயம் தான். இதனாலேயே பல ஆண்டுகளாக கதைகள் படிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். சில பிரபல எழுத்தாளர்களின் கதைகளை பற்றி பிறர் பேசுவதையும் கேட்பதை தவிர்ப்பான். பாதிப்பு எந்த வகையில் படிப்பவர்கள் மீது ஏற்படுகிறதோ அதே பாதிப்பு எழுதவர்கள் மீதும். எழுதுபவர்களே வாசகர்களாக மாறும் போது இந்த தாக்கம் அதிகம். காரணம் இப்படி எழுதுவாரோ அப்படி எழுதுவாரோ என்று கதையின் போக்கை அறியும் ஆவல் எழுத்தாளர்களுக்கு அதிகம்.

முடிவு தெரியாமல் கதை எழுத மோகன் தயாராக இல்லை. முழுவதும் கேட்ட பிறகு எழுதுகிறேன் என்று சொன்னால் டாக்டர் ரதீஸன் அதற்கு தயாராக இல்லை.

நடு நடுவில் டாக்டர் இப்படி எழுதினால் என்ன என்று ஆர்வக் கோளாறில் கேட்கப்போக மோஹன், நான் சொன்னதை மட்டும் எழுதுங்க. இது நீங்க எழுதற கதையில்லை. நான் சொல்லி நீங்க எழுதற கதை. நான் டாக்டர் வேலையை செய்யறேன் நீங்க எழுத்தாளர் வேலையை செய்யுங்க என்றார்.

டக்கென்று மோகனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து, தப்பா நினைச்சிக்காதீங்க மோஹன், கதை எழுதறது ஒரு அறுவை சிகிச்சை செய்யற மாதிரி என்று துவங்கி மேல் சொன்ன லெக்சரை மீண்டும் சொன்னார். எனக்கு மட்டும் தான் கதையோட முடிவு தெரியனும். அப்பத்தான் நான் செய்யற ட்ரீட்மெண்ட் சரியா வரும். தயவு செஞ்சி இதை சென்சேஷனலைஸ் பண்ணிடாதீங்க. காரியம் கெட்டுப்போயிடும் என்று பொறுமையாக சொன்னார்.

புரியுது டாக்டர். நீங்க மேலே சொல்லுங்க என்றான் மோகன் முற்றிலும் தெளிந்தவனாக.

தன்னுடைய வாழ்கையில் அவருடைய ஆரம்ப காலம் முதல், படித்தது, பட்டம் பெற்றது, முதல் நோயாளியை அவர் பரிசோதனை செய்தது என்று மெல்ல ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டும் லாவகத்துடன் தன்னுடைய அனுபவங்களை சொல்லி வந்தார்.

ஓ ஒருவேளை கதை எழுதுவது ஒரு கட்டிட கலைஞனின் வேலை போன்றதோ. நல்ல பலமான அடித்தளம் அமைத்து மெதுவாக தளங்களை அமைத்து பிறகு கடைசியில் வெள்ளையடித்து அலங்காரம் செய்து இதோ தயார் என்று சொல்லும் வேலை போலத்தானோ என்று அவன் மனதில் தனியாக ஒரு பாதையில் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து சட்டென்று மீண்டு மீண்டும் அவருடன் இணைந்தான் மோகன்.

அவருடைய செல்பேசி ஒலித்தது. என்ன என்றார் சற்றே பதட்டத்துடன். என்ன தான் எதற்கும் பதற்றம் கூடாது என்று அறிவுரை செய்யும் மனோதத்துவ நிபுணராக இருந்தாலும் மனித நேயம் உள்ளிருந்து தலைகாட்டியது.

மோஹன், கதிரை காணோம். என்னோட கொஞ்சம் வர முடியுமா என்றார்.

ஞாயித்து கிழமையும் வெளியே போயிட்டா நான் என்ன செய்யறது என்று தன் மனைவியின் குரலை நாடா இல்லாமலே ஒலி பெருக்கி மூலம் கேட்டது போல் இருந்தாலும் அதை ஒடுக்கிவிட்டு சரி டாக்டர் என்று சொல்லி தன் நீல நிற மாருதி 800ஐ நோக்கி ஓடினான். அவர் காரை சுற்றி வந்து ஏறி அமர்ந்தார்.

தொடரும்...

பா.ராஜேஷ்
17-06-2009, 05:17 PM
மிக அருமை மோகன். கதிரின் நிலையில் இருந்து படிப்பதால் படிப்பவர்களும் சற்றே கதிரை போல் சிந்திக்க தொடருகிறது. இது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி எனவும் கருதலாம். பாராட்டுக்கள். தொடருங்கள்!

kavitha
19-06-2009, 04:55 AM
புரியுது டாக்டர். நீங்க மேலே சொல்லுங்க என்றான் மோகன் முற்றிலும் தெளிந்தவனாக.
ஆமாம். எனக்கும் கதை இப்போதுதான் தெளிவாகப்புரிந்தது. இடையிடையே வரும் மனைவி கேரக்டர் தான் கதையை ஜாலியாக்குகிறார். அறுவைச் சிகிச்சை= கதை = கட்டிடம் உங்கள் ஒப்பீடு சரி தான் எனினும் கதைக்கு சீக்கிரம் வாருங்கள். கதை சுவாரசியமாகச் செல்கிறது மோகன். அடுத்த பாகம் எங்கே? (இந்தக்கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டுமா? இல்லை மருத்துவரிடமா??)

leomohan
22-06-2009, 11:46 AM
மிக அருமை மோகன். கதிரின் நிலையில் இருந்து படிப்பதால் படிப்பவர்களும் சற்றே கதிரை போல் சிந்திக்க தொடருகிறது. இது உங்கள் கதைக்கு கிடைத்த வெற்றி எனவும் கருதலாம். பாராட்டுக்கள். தொடருங்கள்!

நன்றி ராஜேஷ் அவர்களே.

leomohan
22-06-2009, 11:47 AM
ஆமாம். எனக்கும் கதை இப்போதுதான் தெளிவாகப்புரிந்தது. இடையிடையே வரும் மனைவி கேரக்டர் தான் கதையை ஜாலியாக்குகிறார். அறுவைச் சிகிச்சை= கதை = கட்டிடம் உங்கள் ஒப்பீடு சரி தான் எனினும் கதைக்கு சீக்கிரம் வாருங்கள். கதை சுவாரசியமாகச் செல்கிறது மோகன். அடுத்த பாகம் எங்கே? (இந்தக்கேள்வியை உங்களிடம் கேட்கவேண்டுமா? இல்லை மருத்துவரிடமா??)

நன்றி கவிதா அவர்களே. சற்றே வேலை பளூ. விரைவில் மற்ற அத்தியாயங்களை பதிக்கிறேன். ஆதரவிற்கு நன்றி.

leomohan
22-06-2009, 12:01 PM
9

எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முதலில் எனக்கு ஏற்பட்டுள்ள குறையால். அடுத்து என்னை சுற்றி இருப்பவர்களின் கண்டிப்புகளால். இப்போது இந்த மருத்துவரின் பரிசோதனைகள். என்னையும் என்னுடைய சமுதாயத்தில் கொஞ்சம் நஞ்சம் பாக்கி இருந்த மரியாதையையும் வைத்து.

எனக்கு ரதீஸனின் மேல் மிகவும் கோபமாக வந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். என்னை தேட வேண்டாம். மனம் அமைதியானதும் திரும்பி வருகிறேன். தற்கொலை செய்துக் கொள்ள மாட்டேன். கவலை வேண்டாம் என்று எழுதிவிட்டு கொஞ்சம் பணமும் சில துணி மணிகளும் எடுத்துக் கொண்டு அன்றே இரவோடு இரவாக புறப்பட்டேன்.

கயலை நினைத்து வருத்தமாக இருந்தது. அம்மா அழுது புலம்புவாள். ஆனால் எனக்கு வேறு வழி தோன்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவு எடுக்கும் சக்தியை இழந்துக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது.

டில்லிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு ரயிலில் வந்து அமர்ந்தேன். சுற்றும் முற்றம் அனைவரும் என்னை பார்ப்பது போல் ஒரு உணர்ச்சி தோன்றியது. நேராக கழிவறைக்கு சென்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டேன். சாதாரணமாக தான் இருந்தது. யாரும் என்னை பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டேன். எனக்கு உள்ளே இருக்கும் பிரச்சனை வெளியே தெரிய வாய்ப்பில்லை என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

எனக்கு எதிரே ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். பழுத்துப் போன தாடி, 70 வயது மேலிருக்கும் போல் இருந்தது. காவி உடைகள் ஏதோ ஒரு சாமியார் என்பதை உறுதிபடுத்தியது. ஒரு ஜோல்னா பையில் ஏதோ வைத்திருந்தார். கையில் ஒரு ஆங்கில புத்தகம். கண்ணாடி இல்லை.

ரயில் பயணம் துவங்கி இருந்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும் அவர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னை பார்க்கிறார் என்பதை அறிந்ததும் நான் அவருடைய பார்வைகளை தவிர்த்தேன்.

ஆனால் அவர் என்னை மீண்டும் மீண்டும் பார்க்கிறார் என்பதை நன்கு உணர்ந்திருந்தேன். என் மனதை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் அவரை உற்றுப் பார்த்தேன்.

தம்பி உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்று பேச்சை துவக்கினார்.

என்னையா கேட்கறீங்க பெரியவரே என்றேன் தெரியாதது போல.

ஆமாம் பா. உன்னைத்தான்.

ஒன்னும் பிரச்சனையில்லையே.

ஓ அப்படியா. எங்கே போயிகிட்டு இருக்கே.

இந்த டிரயினும் டெல்லி தானே போகுது. எல்லாரை மாதிரியும் நானும் டெல்லி தான் போறேன் என்றேன் காட்டமாக.

ஹா ஹா. இந்த டிரெயின் டெல்லி தான் போகுது. ஆனால் எல்லோரும் டெல்லி போகலை. வழியில பல தடவை நிக்கும். அங்கெல்லாம் மக்கள் இறங்குவாங்க தெரியுமா என்றார் அவரும் விடாமல்.

இலக்கில்லா பயணம் என்பது அவர் சொன்னதும் உறைத்தது.

டெல்லி தான் போறேன் என்றேன்.

அப்படியா டெல்லில எங்கே என்றார்.

அட இவர் விடமாட்டார் போலிருக்கிறதே.

டெல்லில எங்கே போனா என்ன உங்களுக்கு பெரியவரே என்றேன் மிகவும் காட்டமாக.

அட ஏம்பா கோவிக்கறே. 30 மணி நேர பயணம். பேசிக்கிட்டே போலாம் தான் என்றார் சற்றே என்னை அமைதிப்படுத்தும் முயற்சியுடன்.
தெரியலை என்றேன். எனக்கும் யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது.

எங்கிருந்து வரே

மெட்ராஸ்.

என்ன வேலை பாக்கறே

வேலையில்லை

அப்ப வேலை தேடி போறியா

ஆமாம்

அங்கே உனக்கு யாரையாவது தெரியுமா

தெரியாது.

எனக்கு அங்கே நிறைய பேரை தெரியும். வேலை வாங்கித் தரட்டுமா.

அவருடைய ஆர்வத்தை ஏன் கெடுப்பானேன் என்று நினைத்துக் கொண்டே, ஓ தாராளமா. அட்ரஸ் போன் தாங்க நான் போய் பாக்கறேன்.

ஓ. அவசியம் தரேன். அங்கே போய் எங்கே தங்கப்போறே.
தெரியலை.

ம்ம். சரி. எனக்கு தெரிஞ்ச ஆசிரம்ம் ஒன்னு இருக்கு. நான் அங்கே தான் போறேன். என்னோட வரியா.

ம் என்றே என்ன செய்வது என்று தெரியாமல்.

வீட்டை விட்டு ஓடி வந்திட்டியா

அடப்பாவி. என் முகத்துல எல்லாம் எழுதி ஒட்டியிருக்கும் போல என்று முகத்தை துடைத்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

வீட்டுல பொண்டாட்டியோட சண்டையா

இல்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

அப்ப அம்மா அப்பாவோட சண்டையா.

பெரியவரே நீங்க ரொம்ப குடைஞ்சி குடைஞ்சி கேள்வி கேட்கறீங்க. என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. ஏதோ பேச்சுத் துணைக்குன்னு சொல்லிட்டு ரொம்ப ப்ர்ஸனலா பேசறீங்க என்றேன் கடுகு வெடிப்பது போல்.

கோச்சிக்காதேப்பா என்றார் மீண்டும். நடு நடுவில் அவர் எழுந்து செல்வதும் பல நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமருவதுமாக இருந்தார். அதுவும் எனக்கு எரிச்சலாக இருந்தது.

அவருடைய கண்களில் ஒரு ஒளி இருந்தது. அவருடைய குரலில் என்னை தாலாட்டும் அன்னையின் அரவணைப்பு இருந்தது. அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஆனால் அவர் கேட்கும் கேள்விகள் தான் எனக்கு கோபத்தை தந்தது. அந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்.
கேள்விகளில் இருந்து தப்புவதற்கு ஒரே வழி நானே கேள்விகளை கேட்க ஆரம்பிப்பது தான். அப்பாடா என் புத்தி இன்னும் மழுங்கவில்லை என்று என்னுடைய சாமார்த்தியத்தை பாராட்டிக் கொண்டே அவரை துளைக்க ஆரம்பித்தேன் என் கேள்விகள் மூலம்.

உங்க பேரு என்ன பெரியவரே.

ஹாத்தீம்

என்ன ஹாத்தீமா. முஸ்லீம் பெயரா இருக்கே.

ஆமாம். அதுல என்ன இப்போ.

இல்லை. பார்த்தா...

பார்த்தா ஹிந்து சாமியார் மாதிரி இருக்கா

ஆமாம். மதம் மாறிட்டீங்களா

இன்னொரு மதத்தை பின்பற்றனும்னா அந்த மதத்துக்கு மாறனும்னு
அவசியமா. கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்று போட்டியில் அவரே இன்னும் வென்றுக் கொண்டிருந்தார்.

இல்லை. ஆனா...

ஆனா என்ன.

ஹிந்து முஸ்லீமாகி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா முஸ்லீம் ...

தம்பி நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி எடுத்துக் கனும். இது ஒரு
தேடல். அந்த தேடல் இன்னும் முடிவாகலை

என்ன தேடறீங்க

அது தெரியலை

என்ன தொலைச்சீங்க

அதுவும் தெரியலை

என்ன தொலைச்சீங்கன்னும் தெரியலை என்ன தேடறீங்கன்னும் தெரியலை உங்களுக்கு.

உனக்கு தெரியுமா. எங்கே போறேன்னும் தெரியலை எதுக்கு போறேன்னும் தெரியலை என்றார் என்னை மடக்கிவிட்டதாக நினைத்துக் கொண்டே.

சற்று நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம்.

நீங்க புரியாத புதிரா இருக்கீங்க. இல்லாட்டி என்கிட்டே ஏதோ மறைக்கறீங்க என்றேன் ஹாத்தீம் காவி உடையை அணிந்துக் கொண்டு என் முன்னால் அமர்ந்திருக்கும் குழப்பம் தீராமல்.

இப்பதானே பார்த்தே. அதுக்குள்ளே என்னை எப்படி புரிஞ்சிக்க முடியும். அதை விடு. எனக்கு வாழ்கை முடிவுல இருக்கு. இப்பவோ அப்பவோ. நீ வாழ வேண்டிய வயசு. உனக்கு என்ன பிரச்சனையின்னு சொல்லு. என்னால முடிஞ்சா தீர்த்து வைக்கறேன். எனக்கும் கொஞ்சம் வாழ்கையில் அனுபவம் இருக்கு.

டாக்டர் ரதீஸனிடம் சொன்னது போல் முதலில் இருந்து ஆரம்பித்து வக்கீலான கதை வரை அனைத்தையும் சொல்லி முடித்தேன். யமுனாவின் மீது வண்டி சென்றுக் கொண்டிருந்தது.

அவர் தன்னுடைய பொருட்களை ஒரு பாலீத்தீன் கவரில் கட்டினார். எனக்கும் ஒரு பாலீத்தீன் உறையை கொடுத்து என்னுடைய பொருட்களையும் கட்டச் சொன்னார். பிறகு என்னுடன் வா என்று என்னை அழைத்தார், என்னவென்று கேட்கத் தோன்றாமல் அவர் பின்னால் நடந்து வண்டிப் பெட்டியின் கதவின் அருகில் வரைச் சென்றோம்.

வண்டி பாலத்தின் மீது சற்றே மெதுவாகச் சென்றது. என்ன நடக்கிறது என்பதை நான் உணருவதற்குள் என்னை ஆற்றில் சட்டென்று தள்ளிவிட்டு அவரும் பின்னாலேயே குதித்தார். கத்துவதற்கு கூட தெரியாமல் நீரின் ஆழத்தில் கலந்தேன்.

தொடரும்.....

மதி
22-06-2009, 12:23 PM
பரபரன்னு போகுது. எல்லா சம்பவங்களும் முடிச்சுகளும் சேருவது எப்போ?

kavitha
23-06-2009, 09:15 AM
ஆ......ஹா.... எனக்கென்னவோ....சின்ன பைத்தியம், பெரிய பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டா மாதிரி தெரியுது.

leomohan
23-06-2009, 03:17 PM
ஆ......ஹா.... எனக்கென்னவோ....சின்ன பைத்தியம், பெரிய பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டா மாதிரி தெரியுது.

ஐயோ பைத்தியம்னு சொல்லக்கூடாதும்மா அது சட்டப்படி குற்றம். மனநோயாளி அப்படின்னு சொல்லனும்.

செவிடு - காது கேளாதவர்
குருடு - கண் தெரியாதவர்
நொண்டி - கை கால் செயலிழந்தவர்

Mentally Challenged, Physically Challenged, Visually Challenged, Hearing impaired அப்படில்லாம் தான் சொல்லனும் இப்பவெல்லாம்.

kavitha
24-06-2009, 05:01 AM
ஐயோ பைத்தியம்னு சொல்லக்கூடாதும்மா அது சட்டப்படி குற்றம். மனநோயாளி அப்படின்னு சொல்லனும்.

செவிடு - காது கேளாதவர்
குருடு - கண் தெரியாதவர்
நொண்டி - கை கால் செயலிழந்தவர்

Mentally Challenged, Physically Challenged, Visually Challenged, Hearing impaired அப்படில்லாம் தான் சொல்லனும் இப்பவெல்லாம்.
__________________
அன்புடன்,

லியோமோகன்

சரி சாரி. கதை யின் பிடியில் ஏதோ உளரி விட்டேன். அடுத்த பாகம் எங்கே?

leomohan
24-06-2009, 06:20 AM
சரி சாரி. கதை யின் பிடியில் ஏதோ உளரி விட்டேன். அடுத்த பாகம் எங்கே?

ஐயோ தப்பா எடுத்துக்காதீங்க. நானும் சும்மா தான் சொன்னே :) அடுத்த பாகம் விரைவில். நன்றி.

த.ஜார்ஜ்
24-06-2009, 04:24 PM
தொடர் கதை படிப்பது எனக்கு பிடிக்காது.
பிறகென்ன..
இப்படி பரபரவென்று கதை போய் கொண்டிருக்கையில் திடுமென ஒரு சஸ்பென்ஸ் வைத்து முடித்து விட்டால்....
அடுத்த அத்தியாயம் எப்போது வருமென்று படக்படகென்று நெஞ்சு அடித்துக் கொண்டு.... முடியலை சாமி...

ஆனாலும் காத்திருக்கிறேன். முழுவதும் எழுதிய பிறகு,மொத்தமாய் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

பூமகள்
25-06-2009, 07:03 AM
நானும் முடியட்டுமென்று காத்திருந்தேன்.. ஆனாலும் ஆர்வக் கோளாரில் ஒரே மூச்சில் இதுவரை வந்த அனைத்து பாகங்களையும் படித்து விட்டேன்..

கதைக்கான விமர்சனம் இறுதியில்... இப்போது ஒரே கேள்வி.. எப்போது எல்லா பாகத்தையும் அளிப்பீர்கள் என்பதே..

லியோமோகன் அண்ணாவுக்கு ஒரு ஜே..!! :)

பாராட்ட வார்த்தைகள் இல்லை.. தொடருங்கள்.. கதை விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது.

அக்னி
25-06-2009, 06:22 PM
அட... நாளாச்சே... இத்தனைக்கும் லியோமோகன் முடிச்சிருப்பாருன்னு பார்த்தால்,
முடிச்சோட கதை நிற்குதே...

முடிச்சவிழக் காத்திருக்கின்றேன் நானும்...

பா.ராஜேஷ்
26-06-2009, 05:43 PM
என்ன மோகன் இது! இப்படி அந்தரத்தில் தொங்க விட்டுடீங்களே! சீக்கிரம் தொடருங்கள்.

leomohan
26-06-2009, 08:12 PM
மன்னிக்க வேண்டும் நண்பர்களே. சில டென்டர் வேலைகளால் அடுத்த பகுதிகள் எழுத முடியவில்லை. சில நாட்களில் தொடர்கிறேன்.

நன்றி

பாரதி
13-07-2009, 08:57 AM
முன்பே அவ்வப்போது படித்திருந்தாலும், இன்று மீண்டும் எல்லா அத்தியாயங்களையும் படித்தேன். நன்றாக இருக்கிறது மோகன்.
உங்கள் வேலைகள் நிறைவு பெற்று, விரைவில் இந்த கதையைத் தொடர்வதைக் காண காத்திருக்கிறேன்.

leomohan
14-07-2009, 09:15 AM
முன்பே அவ்வப்போது படித்திருந்தாலும், இன்று மீண்டும் எல்லா அத்தியாயங்களையும் படித்தேன். நன்றாக இருக்கிறது மோகன்.
உங்கள் வேலைகள் நிறைவு பெற்று, விரைவில் இந்த கதையைத் தொடர்வதைக் காண காத்திருக்கிறேன்.

உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றி பாரதி. 23ம் தேதி வரை தலை எங்கே கால் எங்கே என்ன சாப்பிட்டோம் என்று தெரியாமல் சுத்த வேண்டியதிருக்கும் என்று நினைக்கிறேன்.

விரைவில் தொடர்கிறேன். நன்றி.

leomohan
30-07-2013, 12:58 PM
அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றத்தில் பதிக்கிறேன். பல காரணங்களால் எழுதவதை விட்டிருந்தேன். முடிக்காத இந்த கதை என்னை துரத்திக் கொண்டிருந்தது. அதனால் மீண்டும் வருகை.

மீண்டும் இதனை தொடரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை.

நான்கு ஆண்டுகாலம் பெரிய இடைவெளி. அதனால் நீங்கள் ஏற்கனவே பதித்த 9 அத்தியாயங்கள் படித்து வாருங்கள். மீதி தயாராகிறது.

நன்றி.

அன்புடன்
மோகன்.

shreyan
30-07-2013, 03:12 PM
மோகன் சார்,

முதலில் இந்த கதையை படித்ததும் எனக்கு தோன்றியது, நல்ல வேளை இந்த கதையை இப்போதுதான் படித்தோம். இந்த கதை வெளிவந்த போதே படிக்க ஆரம்பித்திருந்தால் இவ்வளவு நல்ல கதையின் அடுத்த பாகத்திற்காக இந்த 4 வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருக்குமே!

ஆனால் அதே நேரத்தில் மனதிற்குள் தோன்றிய எண்ணம் இப்போதாவது முழுவதும் வருமா? இல்லை இதுபோல் இன்னும் ரெண்டு மூணு பகுதிகள் எழுதிவிட்டு இன்னும் சில வருடங்கள் காத்திருக்கவைத்துவிடுவாரோ?!

எது எப்படியோ நல்ல கதை என்பதால் எத்தனை ஆண்டுகளும் காத்திருக்க தயார்.

அது சரி சார், அந்த பெரியவர் யார்? அவர் ஏன் கதிரை ஆற்றில் தள்ளி தானும் குதித்தார்? இது உண்மையில் நடக்கிறதா? அல்லது டாக்டரின் கதையில் வருகிறதா? தெரிந்துகொள்ள ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறேன்...

leomohan
31-07-2013, 06:50 AM
10

அந்த புது சுவாமிஜி ஆங்கிலத்திலும் தமிழிலும் தத்துவங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பலரும் அவர் பேசுவதை உன்னிப்புடன் கவனித்தாலும் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த புது சுவாமிஜி வேறு யாரும் இல்லை நான் தான். என்னை அழைத்துக் கொண்டு வந்த பெரியவர் என்னை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டிருந்தார். சும்மா இல்லாமல் பல புத்தகங்களையும் என் அறைக்குள் வைத்துச் சென்றிருந்தார். நானும் புது அவதாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தேன்.

நீரில் குதித்து எத்தனை நாட்களுக்கு பிறகு எனக்கு விழிப்பு வந்ததென்றே தெரியாது. ஏதோ நாட்டு வைத்தியம் செய்திருந்தார்கள் எனக்கு.

பல நாட்களுக்கு பிறகு என்னை இரண்டு பேர் பார்க்க வந்திருந்தார்கள்.

“வணக்கும் சுவாமிஜி நாங்க இரண்டு பேரும் தமிழ் நாட்டிலேர்ந்து வந்திருக்கோம். எங்க ஊரில் ஒரு ஆன்மீக விழிப்புணர்வு பேரவை நடத்தறோம். அதுல தமிழ் தெரிஞ்ச உங்களை மாதிரி மஹான் வந்து பேசனா நல்லா இருக்கும்னு நினைக்கறோம். நாங்களே உங்களுக்கு போற வர செலவு எல்லாம் செஞ்சி அழைச்சிகிட்டு போறோம். சம்மதமா?”

அவர் என்னை மஹான் என்று அழைத்தது எனக்கே விநோதமாக இருந்தது, சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர்கள் இருவரும் என்னை அழைத்து வந்த பெரியவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட எத்தனித்தார்கள். அந்த பெரியவர் என் கையில் சிறிய விபுதி பொட்டலதை கொடுத்தார். என்னை ஆழமாக பார்த்தார்.

“உனக்கு ஏதாவது பிரச்சனையின்னா மறுபடியும் என்னை வந்து பாரு. இங்கே எத்தனை நாள் வேணும்னாலும் நீ தங்கலாம்” என்றார்.

எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. இருந்தாலும் நன்றாக இருந்தது. நானே முற்றும் துறந்தவன் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது. ஏதோ லெக்சர் செய்ய அழைக்கிறார்கள். திரும்பவும் கொண்டு வந்து விடப்போகிறார்கள் அதெற்கு ஏதற்கு இந்த பெரியவர் இவ்வளவு பீடிகையுடன் பேசுகிறார் என்று நினைத்தபடியே புறப்பட்டேன்.

தொடரும்..

leomohan
31-07-2013, 07:04 AM
11
கதிரை தேடிச் சென்று பல இடங்களில் தேடிய பிறகு அவனை ஊருக்கு அழைத்து வந்தனர் மோகனும் ரதீஸனும்.
தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம், காவல் துறை செய்ய வேண்டிய வேலை என்று இருவரும் நினைத்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஒரு உந்துதலில் காரியத்தில் இறங்கி விட்டனர்.

மோகனுக்கு அலுவலத்தில் விடுப்பு சொல்லி விட்டு இறங்கியிருந்தான்.

இருவரும் களைப்பாறிய பின் மாலையில் சந்தித்தனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

டாக்டர் கதிரவனுக்கு எப்படி இருக்கு.

இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு மோகன். சீக்கிரம் நம்ம நாவலை அவரை படிக்க வைக்கனும்.

உங்க திட்டம் என்ன டாக்டர்?

நீங்க எழுதின என்னோட கதையை படிக்க வைக்கப் போறேன். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போது அவருக்குள்ள ஏற்படற மாற்றங்களை ஊர்ந்து கவனிக்கப் போறேன். அவரு என்னை மாதிரி மனோதத்துவ மருத்துவரா மாறனும். அதுக்கப்புறம் நிஜமான என்னோட நோயாளிகளை அவருக்கு அனுப்பப் போறேன். அதுக்கப்புறம் நீங்க புது நோயாளியா அவர் கிட்டே வரீங்க.

என்ன நான் நோயாளியாகவா எதுக்கு டாக்டர்?

சொல்றேன். இப்ப அவரு தன்னை ஒரு பெரிய மருத்துவரா நினைச்சிகிட்டு இருப்பாரு இல்லையா?

ஆமாம்.

அப்ப நீங்க நோயாளியா வந்து அவருக்கு என்ன வியாதி இருக்கோ அதே வியாதி உங்களுக்கு இருக்கறதா சொல்லப் போறீங்க.

அப்படியா? என்று வியப்பாக கேட்டான் மோகன். நம் மாதிரி எழுத்தாளர்களை விட இவரு மாதிரி மருத்தவர்களிடம் பல கதைகள் இருக்கும் போலே என்று நினைத்துக் கொண்டான்.

ஆமாம். இப்ப கதிருக்கு வந்திருக்கிற வியாதிக்கு அவரிடமே தான் வைத்தியமும் இருக்கு. அவர் உங்களுக்கு கொடுக்கபோற ட்ரீட்மென்ட் தான் அவருக்கு நான் கொடுக்கப் போற மருந்தும் குணம் செய்யற வழியும்.
பலே டாக்டர். நோயாளிகிட்டேயே மருந்தும் கண்டுபிடிச்சி அவருக்கே கொடுக்கப் போறீங்களா. பலே என்றான் மோகன்.
அது மட்டுமில்ல மோகன். உங்களுடைய வியாதிக்கு குணமாகிற வழி சொல்லும் போதே அவருக்கு குணமாயிடலாம். ஏன்னா இப்ப நமக்கு தேவை அவருடைய செல்ஃப் ரியலைசேஷன் தான். அவரே உணர்ந்தா தான் அவருடைய மாய வலையிலேர்ந்து வெளியே வரமுடியும் என்றார் சற்றே களைப்புடன்.

கேட்க நல்லா இருக்கு டாக்டர். இது மாதிரி நடந்துட்டா அற்புதமாக இருக்கும். அப்புறம் உங்க கிட்ட வந்து நான் இதை கதையா எழுதறக்கு அனுமதி கேட்பேன்.

அவர் ஏதோ சொல்ல முயன்றபோது அவருடையை மனைவி உங்கள பார்க்க போலீஸ்காரங்க வந்திருக்காங்க என்று படபடப்புடன் சொன்னாள்.

மறுபடியும் போலீஸா, கதிர் இங்கே இருக்கும்போது வேறு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று யோசித்தவாறே எழுந்தார். மோகனும் பின் தொடர்ந்தான்.

சென்ற முறை வக்கீலாக நினைத்து நடந்த கூத்தில் மாட்டிக் கொண்ட காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் இன்னொருவருடன் வந்திருந்தார்.

வணக்கம் சார். வாங்க. என்ன வேணும் என்றார் ரத்தீஸன்.

வணக்கம் சார். கதிரவன் விஷயமா கொஞ்சம் பேசனும் என்றார் காவல் அதிகாரி சற்றே தயக்கத்துடன்.

மோகன் தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயமாக நான் கிளம்பறேன் டாக்டர். அப்புறமாக பார்க்கலாம் என்றவாறே நடக்க முயன்றான்.

காவல் அதிகாரியுடன் வந்திருந்தவர் நீங்களும் இருங்க மோகன் உங்க இரண்டு பேர்கிட்டேயும் தான் பேசனும் என்றார் பீடிகையுடன்.

ரத்தீஸனும் மோகனும் குழப்பத்தில் சொல்லுங்க என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்தனர்.

பிறகு அவர்கள் பேசிய விஷயம் இவர்கள் இருவரையும் வேர்க்க செய்திருந்தது.

தொடரும்...

leomohan
31-07-2013, 07:06 AM
12
அவர்கள் இருவரும் பல மணி நேரம் பேசினர். நடுவில் ரதீஸனின் மனைவி இருமுறை வந்து காபி சாப்டறீங்களா என்று கேட்க தண்ணி மட்டும் கொடுத்துட்டு உள்ளே போ என்ற காட்டமாக கூறியிருந்தார். அவருடைய மனைவியும் என்ன பிரச்சனையோ என்று குழப்பத்துடன் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.

அவர்கள் சென்ற பிறகு இருவரும் அமைதியாக இருந்தனர்.

என்ன சார் ஏதோ உங்களுக்கு உதவி பண்ண வந்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கிட்டேன என்றான் மோகன்.

இருங்க மோகன் பதட்டப்படாதீங்க. இது மாதிரியெல்லாம் வரும்னு யாரு ஏதிர் பார்த்தது. நம்ம இரண்டு பேருக்கும் நல்ல புத்தி சுவாதீனம் இருக்கும்போதே நாம இந்த பிரச்சனையை பார்த்து கலங்கறோமே, பாவம் கதிர் அவரு இருக்கும் நிலையில் எப்படி இதை சமாளிப்பாரு? சொல்லுங்க.

மன்னிக்கனும் சார். நான் என்னோட வேலை பளுவில் ஏதோ பிரச்சனையில் மாட்டிக்க வேண்டாம்னு சுயநலமா பேசிட்டேன். நீங்க சொல்லறது சரிதான். கதிருக்கு உதவி பண்ணனும். ஆனா இந்த கட்சிக்காரர் அவங்க ஆளுங்க செஞ்ச கொலையை கதிரை ஏத்துக் வைக்கனும்னு சொல்றாரே. அதவும் அவங்க கொலை பண்ணது ஒரு எதிர் கட்சி எம்எல்ஏவை. இது பெரிய விவகாரம் சார். எத்தனை நாள் நாம வேலை வெட்டியில்லாம சுத்தனுமோ என்றான் பதட்டத்துடன்.

கொஞ்சம் அமைதியா இருங்க மோகன். நாம தான் ஒரு நாள் அவகாசம் கேட்டிருக்கோமே. ஏதாவது யோசிக்கலாம் என்றவாறே ஒரு எண்ணை தொலைபேசியில் தட்டி பேசத்துவங்கினார்.

வணக்கம் சுரேஷ். நான் ரதீஸன் பேசறேன். ஒரு சின்ன பிரச்சனை. வர முடியுமா. லேட்டாயிடுத்தே பரவாயில்லையா. மன்னிக்கனும். ரொம்ப நன்றி. வாங்க. காத்திருக்கோம் என்று சொல்லி வைத்தார்.

ஐயோ இன்னும் எத்தனை நேரம் இங்கு இருக்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டு மோகன் யோசனையில் ஆழ்ந்தான். அவன் கணினி தொழில் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல அவனில் இருந்த எழுத்தாளன் இன்னும் ஆழமாக போய் பார்க்கலாமே என்று தூண்டிக் கொண்டிருந்தது. கதையில் மர்மங்களை போட்டுத் தாக்கலாம். நிஜத்தில் சந்திக்க எத்தனை துணிவு வேண்டும் என்று உணர்ந்துக் கொண்டிருந்தான்.

சுரேஷ் – சங்க கால வழக்கறிஞர்களை போல இல்லாமல் இளைமையாக சுறுசுறுப்பாக தென்பட்டான். வெள்ளை நிற போலோ மேல் சட்டை. நீல நிற ஜீன்ஸ் ஒரு மாற்றமாக வெளுத்துப் போகாமல் இருந்தது. காபி பொடி நிறத்தில் ஒரு காலணி. இடது கையில் ஒரு காஸியோ ஜீஷாக் கடிகாரம். அடே பார்த்தவுடன் நான் எழுதும் கதைகளில் வரும் ரமேஷ் போல இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

ரத்தீஸன் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டான். பேசுவதை பொறுமையாக கேட்கும் மனிதர்களும் இன்னும் இருக்கின்றார்களா என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டான் மோகன்.

ஸோ நீங்க முடியாதுன்னு சொல்லிப் பார்த்திட்டீங்க ஆனா அவங்க விடறதா இல்லை. அப்படித்தானே.

ஆம். என்றார் ரத்தீஸன்.

ஜென்டிலா மிரட்டிட்டும் போயிருக்காங்க. இல்லையா

ஆம்.

இன்ஸ்பெக்டரும் துணை போறாரு அப்படித்தானே.

ஆம்.

சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு தெளிவாக பேசினான் சுரேஷ். பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துவிடும் அளவிற்கு அவனுடைய பேச்சு மற்றும் பாவனைகள்.

அவங்க மோகனை ஒரு கதை எழுத சொல்றாங்க. அதுல அந்த எம்எல்ஏ மேலே கதிருக்கு கோபம் வர மாதிரி செய்யனும். அவேரே அந்த எம்எல்ஏவை கொலை பண்ணதா ஒத்துக்கனும். அப்படித்தானே.

ஆமாம்.

அப்புறம் கேஸ் கோர்டுக்கு போகும். அங்கே அவரை மனநிலை சரியில்லாதவன்னு சொல்லி விடுவிச்சிடலாம் அப்படின்னு உறுதியளிக்கறாங்க இல்லையா.

ஆமாம்.

இப்ப நமக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்னு இந்த கேஸ் கோர்டுக்கு போயி அவங்க நினைக்கிறமாதிரி முடிவு வந்துட்டா கதிர் நிரந்தரமா கொலையாளின்ற பட்டத்தோட அப்புறம் பைத்தியக்காரன்ற பட்டத்தோடவும் வாழ வேண்டியிருக்கும். அவரை இந்த இக்கட்டான நிலையிலிருந்து காப்பாத்தனும்.
இரண்டாவது நிஜமான குற்றாவாளி தப்பிக்காம பார்த்துக்கனும். இல்லையா.

ரத்தீஸன் சற்றே ஆசுவாசத்துடன் இல்லை சுரேஷ். முதல் பாயிண்ட் சரி. இரண்டாவது நிஜமான குற்றாவளியை பத்தி எங்களுக்கு கவலை இல்லை. அது அரசியல் விவகாரம். அந்த சகதிக்குள்ள மாட்டிக்க நாங்க விரும்பலை. இரண்டாவது முக்கியமான விஷயம் இந்த அரசியல்வாதிங்க கிட்டேர்ந்து எங்க இரண்டு பேரை காப்பாத்தனும். ஏன்னா எனக்கும் பிராக்டீஸ் இருக்கு குடும்பம் இருக்கு. மோகனும் பிஸியான ஆள். அவருக்கும் குடும்பம் இருக்கு. எங்க குடும்பத்தினரும் தொழிலும் பாதிக்காம இருக்கனும். அவங்களுக்கு உதவனாலும் பிரச்சனை உதவாட்டாலும் பிரச்சனை.

அப்ப அவங்களுக்கு உதவுங்க என்றான் சகஜமாக.

என்ன என்று இருவரும் கண்களை விரித்துக் கேட்டனர்.

தொடரும்....

leomohan
31-07-2013, 07:08 AM
மோகன் சார்,

முதலில் இந்த கதையை படித்ததும் எனக்கு தோன்றியது, நல்ல வேளை இந்த கதையை இப்போதுதான் படித்தோம். இந்த கதை வெளிவந்த போதே படிக்க ஆரம்பித்திருந்தால் இவ்வளவு நல்ல கதையின் அடுத்த பாகத்திற்காக இந்த 4 வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருக்குமே!

ஆனால் அதே நேரத்தில் மனதிற்குள் தோன்றிய எண்ணம் இப்போதாவது முழுவதும் வருமா? இல்லை இதுபோல் இன்னும் ரெண்டு மூணு பகுதிகள் எழுதிவிட்டு இன்னும் சில வருடங்கள் காத்திருக்கவைத்துவிடுவாரோ?!

எது எப்படியோ நல்ல கதை என்பதால் எத்தனை ஆண்டுகளும் காத்திருக்க தயார்.

அது சரி சார், அந்த பெரியவர் யார்? அவர் ஏன் கதிரை ஆற்றில் தள்ளி தானும் குதித்தார்? இது உண்மையில் நடக்கிறதா? அல்லது டாக்டரின் கதையில் வருகிறதா? தெரிந்துகொள்ள ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கிறேன்...

நன்றி ஸ்ரேயன். மன்றத்தில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக. அவசியம் இம்முறை நடக்காது என்று நம்புகிறேன். விரைவில் முழுவதும் பதிக்கப்படும். ஆதரவுக்கு நன்றி.

leomohan
01-08-2013, 08:08 AM
13
டாக்டர் முதல்ல நீங்க கயல்விழி கிட்டே விபரமா பேசி கதிரை எந்தெந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் கூட்டிக் கிட்டு போனாங்கன்னு பட்டியல் தயார் பண்ணுங்க. அவரோட போன கம்பெனியில் எல்லாரையும் சந்திச்சு விபரங்கள் சேகரிங்க. அவங்க வீட்டு பக்கத்துவீடு எதிர்த்த வீடு இப்படி எல்லாரையும் சந்திச்சு அவரைப்பத்தின கருத்துக்களை சேகரிங்க. நான் அரசியல்வாதி பக்கத்து கதை, கொலை விபரங்கள், போலீஸ் இன்வால்மென்ட் இப்படி கோணத்துல விபரங்களை சேகரிக்கிறேன். ஆமாம் போன தடவை அவரு போலீஸ்ல மாட்டும்போது கேஸ் ஏதாவது புக் ஆச்சா?

அவரு மேல எந்த கேஸூம் புக் ஆயிருக்காது. அதுக்கு முன்னாடியே நான் போயிட்டேன்.
இந்த வாட்டி பொய் கேஸ் தான் போடனும் அவங்க. அப்படி ஆயிருந்தா அதை பொய் கேஸூன்னு நிருபிச்சிடலாம். வேணும்னா இன்னும் ரெண்டு மூணு பொய் கேஸூகளை அந்த போலீஸ் ஸ்டேஷன்லே போட வச்சிட்டு இப்படித்தான் பொய் கேஸூகள் உருவாக்கறாங்கன்னு உடைச்சிடலாம்.
சுரேஷ் அவரு பைத்தியமாக இருக்காருன்னு நீதபதி நினைச்சா அவரு கொலை கேஸூலேர்ந்து தப்பிக்கவாவது வழி இருக்கு. ஒரு வேளை அவர் நல்ல மனநிலையிலதான் இருக்காருன்னு அவங்க நம்பினா அவருக்கு ஆபத்து இல்லையா. ஏன்னா இந்த அரசாங்க தரப்பு வக்கீலை நம்ப முடியாது. கோர்ட்டுக்கு போன பிறகு கொலை நிரூபணம் ஆன பிறகு கதிரை காப்பாத்தாமா விட்டுட்டா?

இல்லை டாக்டர். இதை அவங்க வழியில் போய் பிடிக்கறதுங்கறது புலி வால பிடிச்சிகிட்டு போற மாதிரி. ரொம்ப டேஞ்சரஸ். நாம கேஸை உடைக்கறது மட்டுமில்லாம நிஜ குற்றவாளியையும் பிடிச்சுக் கொடுக்கனும். ஆனா பயப்படாதீங்க நாம எது செஞ்சாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்வோம். உங்க இரண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் வராது. அரசியல் பிரச்சனையில் நானும் மாட்டிக்க விரும்பலை.

அப்ப அவங்களுக்கு உதவுங்கன்னு நீங்க சொன்னது?

முதல்ல ஒரு அநாமத்து பேர்ல உங்களுக்கு ஒரு ப்ரீபெய்ட் சிம் வாங்கித் தரேன். அது மூலமா அவங்க கிட்ட பேசுங்க. கட்டாயம் அவங்க ரிக்கார்ட் செய்வாங்க. நீங்களும் ரிக்கார்ட் செய்யுங்க. அவங்க கிட்டே அவங்க எதிர்பார்த்த மாதிரியே அவங்களுக்கு ஒத்துழைப்பு தர்றதா சொல்லுங்க. மோகன் நீங்க அவங்க எதிர்பார்த்த மாதிரியே கதை எழுதுங்க. கையால வேண்டாம். கம்ப்யூட்டரில் எழுதுங்க. இமெயில்ல யாருக்கும் அனுப்ப வேண்டாம். பிரிண்ட் எடுத்துக் கொடுங்க. பிரிண்ட் வீட்டுப் பிரிண்டர்ல வேண்டாம். வெளியேர்ந்து எடுங்க. நீங்க போகாதீங்க. எழுதி முடிச்சோன்னே லாப்டாப்பில் சேஃப் ஏரேஸ் பண்ணிடுங்க. நான் சொல்றமாதிரி எழுதுங்க. ஆனா அவங்க சொன்ன மாதிரி எழுதின மாதிரி இருக்கனும். நான் உங்க இரண்டு பேரையும் சந்திக்கப் போறது இங்கே இல்லை. ஒகே?

அவன் பேசியதை எல்லாம் கண் இமைக்காமல் இருவரும் கேட்டனர். ஒரு மனோதத்துவ நிபுணர். ஒரு கணிணி நிபுணர். இருவரும் சட்டத்திற்கு முன் நெடுஞ்சான்கிடையாக விழுந்திருந்தார்கள். ஆனாலும் இருவரின் ஆர்வத்திற்கு குறைவில்லை. அப்பாவி கதிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள். கதையாசிரியருக்கு பல கருக்கள் கிடைத்துக் கொண்டே வந்தன. கதை தொழிற்சாலை 24 மணி நேரம் இயங்கிக் கொண்டே இருந்தது.

தொடரும்....

leomohan
01-08-2013, 08:09 AM
14
கதிர் ஏதோ தொகுதி பிரச்சனையா அவருக்கு மனு கொடுக்க வந்திருக்காரு. சட்ட மன்ற உறுப்பினர் சரியா பேசலை. அடுத்த வாட்டி உனக்கு ஓட்டு போடமாட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. உன்னால ஆனதை பாத்துக்கோன்னு எம்எல்ஏ சொல்லிட்டாரு. அப்பலேர்ந்து அவரை பழி வாங்க வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்காரு. அவரு காலையில வாக்கிங் போகும்போது அரிவாள் எடுத்து வெட்டிட்டாரு. அந்த நேரத்துல அவரு படிச்சிக்கிட்டு இருந்த புத்தகம் ஒரு அரசியல்வாதியை பழி வாங்கற புத்தகம் மாதிரி இருக்கனும். சரியா என்றார் அந்த அரசியல்வாதியின் கையாள்.

என்ன சார் சொல்றீங்க. இப்ப நான் கதை எழுதி தரனும்னு சொல்றீங்க. கொலை நடந்த சமயம் அவர் ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு சொல்றீங்க. நானே இணையத்தில் வெளியிடாத புத்தகத்தை அவரு படிச்சாருன்னும் எப்படி சார் நிரூப்பிக்க போறீங்க.

மோகன். நீங்க இப்ப அவருக்கு எழுதி தர வேண்டிய கதை அவரு கோர்டுல கொலை செஞ்சேன்னு ஒத்துக் வேண்டிய கதை. எங்க வக்கீல் சொல்ல போறது அவர் கொலை செஞ்ச நேரத்துல வேறு ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு. அது தேடனா கிடைச்சிடும். எல்லா மர்ம நாவல்லை கொலை கொள்ளை தானே என்றார் என்னமோ அவர் அரசியலில் எல்லாம் சுத்த சைவம் மாதிரி.

ரத்தீஸன் இடைமறித்தார். சார் கதிர் கொலை பண்ணும்போது அவர் அந்த புத்தகத்தின் பிடியில் இருந்தார்னு சொல்றிங்க. சரி. ஆனா அந்த தொகுதி பிரச்சனையில் அவரு எம்எல்ஏ கிட்ட சண்டை போட்டது கதிர் என்கிற மனுஷனா இருக்கும் போது. இது இடிக்கிறதே. அவரு சண்டையும் கதையில வர ஒரு பாத்திரமா செய்யனும். கொலையும் அந்த பாத்திரமாகவே செய்யனும். ஒன்னும் முழு சுவாதீனத்திலும் இன்னொன்னு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் செஞ்சதா பேசினா கேஸ் உடைஞ்சிடும்.

என்ன சொல்ல வரீங்க டாக்டர் என்றார் அரசியல்வாதி.

சார் கதிரால உங்களுக்கு பிரயோசனம் இல்லை. நீங்க வேற வழியை பாருங்க.

அதை விடுங்க டாக்டர். நீங்க சொல்ல வந்த விஷயத்தை முதல்ல சொல்லுங்க.

சார். கதிர் சாதாரணமா இருக்கும் போது எம்எல்ஏ கிட்டே சண்டை போட்டு அதே கோபத்துல அவரை கொன்னுட்டாரு. இப்படி போச்சின்னா உங்க ஆளு கொலைலேர்ந்து தப்பிச்சிடுவாரு. கதிரு மாட்டிப்பாரு.

மாட்டிகிட்டு போகட்டுமே. அவரு ஒரு பைத்தியம். அவரால யாருக்கு பிரயோசனம். அவங்க குடும்பத்துக்கு வேணா ஒரு பெரிய தொகை கொடுக்கறோம்.

அது முடியாது சார். அவர் என்னோட பேஷண்ட். அவருக்கு குணப்படத்த முடியாத வியாதி ஒன்னும் இல்லை. அவரு சீக்கிரம் குணமாகி பழைய படி ஆராய்ச்சியில் இறங்குவாரு. இது உறுதி. ஒருத்தரோட வாழ்கையை அழிக்க நான் ஒப்புக்க மாட்டேன்.

சரி விடுங்க. பைத்தியம் சொல்லி கேஸூலேர்ந்து காப்பாத்திட்டா?

அதுக்கு நீங்க சொல்ற வழி சரியாகாது. அவரு புத்தகம் படிச்சதால இன்ஃபூளுயன்ஸ் ஆகி எம்எல்ஏவை கொலை பண்ணதா இருந்தா மட்டுமே அவரை விடுவிக்கலாம்.

சரி அப்படியே பண்ணிடுங்க. அவருக்கு முன் விரோதம் இருந்த மாதிரி சொன்னது வேண்டாம். அவரு ஏதோ ஒரு புத்தகத்தை படிச்சிருக்காரு. அதுல இருந்த எம்எல்ஏவோட பெயரும் இப்ப கொலையான ஆளோடே பெயரும் ஒரே மாதிரி இருக்கட்டும். அவரு மனநிலை சரியில்லாம கொலை பண்ணதா இருக்கட்டும். கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு நானே அவரை ரீலீஸ் பண்ணித் தரேன் என்றார் முடிவாக.

இப்போது மோகன் – அதுல ஒரு பிரச்சனை சார் என்றான்.

என்ன சார் இப்போ பிரச்சனை என்றார் அ.வா. கடுப்புடன்.

கோர்ட்ல நாம சொல்ல போற கதையில் வர புத்தகம் ஏற்கனே பிரசிரிச்ச புத்தகமா இருக்கனும். அதை படிச்சி தான் அவரு கொலை பண்ணியிருக்காருன்னா அதை இனிமே எழுதின புக்கா எப்படி காண்பிக்கிறது. அப்படியே நான் அந்த கதையும் எழுதினா பேக் டேட்டடா இணையத்துல வெளியிடனும். இப்ப இருக்கற தொழில்நுட்பத்துல என்னிக்கி அப்லோட் பண்ணினேன்னு சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க. அதுமட்டமல்ல கதிரு அன்னிக்கு இணையத்திலேர்ந்து எடுத்தாரு அப்படிங்கறதுக்கும் ஆதாரம் உருவாக்க வேண்டியிருக்கும். அதெல்லாம் பிரச்சனை. நீங்க முதல்ல அது மாதிரி ஏற்கனவே பப்ளீஷ் ஆன ஒரு புக்கை தேடுங்க, நான் கோர்ட் ஸீன் எழுத ஆரம்பிக்கறேன். நாங்க வரோம்.

ஒரு நிமிஷம் என்று அவர்கள் சொன்னதை காதில் கேட்காத மாதிரி நகர்ந்தார்கள் இருவரும்.

தொடரும்...

leomohan
01-08-2013, 08:19 AM
15
உங்கள் பெயர்.

கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க.

என்ன படிச்சிருக்கீங்க.

எம்எஸ்சி மைக்ரேயாலஜி.

எங்க வேலை பாக்கறீங்க.

இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன்.

உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா?

ஒரு தடவை பாத்திருக்கேன்.

அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா

ஆமாம்.

எதுக்காக வெட்டினீங்க.

இந்த மாதிரி அரசியல்வாதியால ஒரு பிரயோசனமும் இல்லை. சொந்த தொகுதிக்கு கூட ஒரு நல்ல காரியம் செய்யலை. இவங்களையெல்லாம் நடு ரோட்ல வெட்டனும்.

உங்களுக்கு மனநிலை சரியில்லையா

ஏன் சார் என்னை பாத்தா மனநிலையில்லை சரியில்லாத மாதிரியா இருக்கு.

நீங்க ஏன் உங்க ஆபீஸ் பொருட்களை போட்டு உடைச்சீங்க.

சம்பள உயர்வு கேட்டிருந்தேன். கொடுக்கலை. அதனால கோபிசிகிட்டு உடைச்சிட்டேன்.

உங்க மனநிலை சரியில்லாதற்காக நீங்க ஏதாவது மருத்துவம் பாத்தீங்களா.

சார் எனக்கு மனநிலை சரியாதான் இருக்கு. நான் எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை. வேணும் என் குடும்பத்தாரை கேட்டுப் பாருங்க. என் காதலி கயல்விழியை கேட்டுப்பாருங்க.

சரி. சரி. இந்த கொலைக்கு உங்களுக்கு மரண தண்டனை கிடைக்கலாம் இல்லையா.

ஆமாம் சார்.

அப்ப குற்றத்தை ஒப்புக்கறீங்களா.

இத்தனை நேரம் அதைத்தானே சார் செஞ்சிகிட்டு இருக்கேன்.

நீதிபதி நடுவில் குறுக்கிட்டு நீங்க அநாவசியமா ஏன் நேரத்தை வீண் பண்றீங்க. அவரே குற்றத்தை ஒத்துகிட்டாரு. நீங்க போலீஸ் தரப்பு விபரங்களை போஸ்ட் மார்டம் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் FIR எல்லாம் விபரமா கொடுங்க. யாரும் கண்டஸ்ட் பண்ணாத கேஸூக்கு ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் என்றார்.

இல்லை. அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி அரசாங்க வக்கீல் இழுத்தார்.

என்ன சொல்றீங்க. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு சொல்லி எக்ஸம்ஷன் கேட்க போறீங்களா. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு ஏதாவது எவிடன்ஸ் இருக்கா? அதை செய்யுங்க. கேஸை தள்ளி வைக்கிறேன்.

தொடரும்...

கீதம்
01-08-2013, 10:57 AM
வெகுநாட்களுக்குப் பின்னர் மன்ற வருகை புரிந்து தொடர்கதையை புது உத்வேகத்துடன் தொடர்வதற்கு மிக்க நன்றி தங்களுக்கு. கதையை முழுவதும் வாசிக்க இன்னும் நேரம் எனக்குத் தோதாக அமையவில்லை. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். ஊக்கமுடன் தொடர்வதற்குப் பாராட்டுகள்.

leomohan
01-08-2013, 01:23 PM
வெகுநாட்களுக்குப் பின்னர் மன்ற வருகை புரிந்து தொடர்கதையை புது உத்வேகத்துடன் தொடர்வதற்கு மிக்க நன்றி தங்களுக்கு. கதையை முழுவதும் வாசிக்க இன்னும் நேரம் எனக்குத் தோதாக அமையவில்லை. விரைவில் வாசித்துக் கருத்திடுவேன். ஊக்கமுடன் தொடர்வதற்குப் பாராட்டுகள்.

மிக்க நன்றி கீதம்.

leomohan
02-08-2013, 08:25 AM
16
என்ன மோகன் நாவல் எப்படி வந்துகிட்டு இருக்கு?

ஹாஹா என்ன நாவல் டாக்டர். இதுவா?

ஆமாம். இதுவும் நீங்க எழுதற கதை தானே. என்ன பெயர் வைச்சிருக்கீங்க.
ஒரே ஒரு வாசகன். எடிட்டர்ஸ் பல பேர். இதுக்கு என்ன பெயர் வைக்கறது. இன்னும் பெயர் வைக்கவில்லை அப்படின்னு வேணா பெயர் வைக்கலாம்.

ஹா ஹா. இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவே புதுமையான டைட்டில் தான். கொடுங்க படிக்கலாம்.

ஒரு நிமிடம் அந்த நீதி மன்ற காட்சியை படித்து பார்த்தார். ம்ம். இப்படியே போனா கதையில வர கதிரும் நிஜ கதிரும் இணைஞ்சிருவாங்க. அவரு மன நிலை திடமானவன்னு நீதிபதி நம்பினாருன்னா கொலையும் அவரு தான் செஞ்சாருன்னு ஆயிடுமே. அப்புறம் அந்த அரசியல்வாதி வேற படிச்சி இதை அப்ரூவ் செய்யனுமே என்றார் குழப்பத்துடன்.

அப்போது தான் உள்ளே நுழைந்த சுரேஷ் என்னை மிஸ் பண்றீங்களா என்று கேட்டான் ஆர்வத்துடன். மோகன் டாக்டரிடமிருந்த தன்னுடைய கதை தாட்களை எடுத்து அவனிடம் நீட்டினான்.

தானும் அதை ஆமோதித்தவாறே, டாக்டர் சொல்றது சரிதான். அப்புறம் இவரை மனநிலை சரியில்லாதவன்னு நிரூபிக்க நான் உள்ளே நுழைய வேண்டி வரும்.

சரி அப்படியா இந்த அடுத்த அத்தியாத்தை பாருங்க என்று மேலும் சில காகிதங்களை நீட்டினான். ஒரு பிரதியானதால் இருவரும் சேர்ந்து படிக்கத் துவங்கினர்.

leomohan
02-08-2013, 08:29 AM
17

நீதிபதி வந்து அமர்ந்தவுடன் அரசாங்க தரப்பு வக்கீலை பார்த்து நீங்க அவரை மனநிலை சரியில்லாதவர் அப்படின்னு சொன்னீங்க போன ஸிட்டிங்கல. அங்கேர்ந்து கண்டின்யூ பண்ணுங்க என்றார்.

அரசாங்க தரப்பு வக்கீல் தொடர்ந்து பேசினார்.

கதிர் நீங்க நல்ல மன நிலையில் தான் இருக்கீங்கன்னு நீங்களும் இந்த நீதி மன்றமும் ஒப்புக்கிட்டா நீங்க பண்ண கொலைக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்கும். இல்லையா

ஆமாம்.

எனக்கு வேலை சுலபமாயிடும். இத்தோட என் வாதத்தையும் நான் முடிச்சிக்கலாம். ஆனா நீங்க மன நிலை திடமில்லாதவர்னு எனக்கு தெரியும். உங்களுக்கு உதவி செய்யத் தான் நான் இருக்கேன். ஒன்றும் அறியாமல் நீங்க செய்த கொலைக்கு உங்களுக்கு தண்டனை வாங்கித் தரதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால நான் கேட்கற கேள்விகளுக்கு நீங்க சரியா பதில் சொல்லுங்க. அதுக்கப்புறமும் நீங்க உங்க நிலையில் திடமா இருந்தீங்கன்னா நாமை வழக்கை முடிச்சிடலாம். சரியா

சரி சார். கேளுங்க.

உங்க பெயர் நிஜமாகவே கதிரா அல்லது நீங்க சமீபத்துல படிச்ச கதையில் வந்த கதாபாத்திரமா.

நீங்க என்ன கேள்வி கேட்கறீங்க என்று நீதிபதி கேட்டார்.

லார்ட்ஷிப் குற்றம் சாட்டப்பட்டுள்ள கதிர் மனநிலை சரியில்லாதவர். அவர் சமீபத்தில் இந்த நான்கு வைத்தியர்களிடம் தன் பிரச்சனைக்காக வைத்தியம் பார்த்துள்ளார். இவர் தான் படிக்கும் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவதால் பல தவறுகள் அவர் அறியாமலேயே நடந்துள்ளன. அதனால் இவருடைய மன நிலையை கருதி இவரை விடுதலை செய்து இவருக்கு முறையான மருத்துவம் கிடைக்க வழி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவரு சென்று வந்த மருத்துவமனைகளும் அவர் உட்கொண்ட மருந்து விபரங்களும் இதோ.
இப்படி கொலை செய்யறவங்க எல்லாருமே மனநிலை சரியில்லாதவங்கன்னு வாதாடினா கோர்ட் எதுக்கு நீதி மன்றம் எதுக்கு என்று கேட்டார் நீதிபதி காட்டமாக. வேறு ஏதாவது ஆதாரம் இருக்கா?

இவர் சமீபத்தில் சென்று வந்த மனோதத்துவ நிபுணர் ரதீஸனை சாட்சியாக அழைக்கிறேன் என்றார் அ.சா.த வழக்கறிஞர்.

டாக்டர் ரதீஸன்.

ஆமாம்.

இவருடைய நிலைமையை விளக்க முடியுமா.

முடியும் சார் என்று சொல்லி குறைந்த வார்த்தைகளில் கதிரின் நிலையை விளக்கினார்.

அதுக்கு ஆதாரம் இருக்கா.

இருக்கு சார். அவரு வக்கீலா நினைச்சு போலீஸ்ல போனது. அந்த விபரங்கள் இதோ. அவரு என் கிட்ட வந்த செஸஷன்ஸ் விபரம். ஆடியோ பதிவுகள் என்று அனைத்து விபரங்களை தந்தார்.

நன்றி டாக்டர். லார்ட்ஷிப் உங்கள் பார்வைக்கு என்று அனைத்து விபரங்களையும் நீதிபதியிடம் சேர்த்தார். அவர பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்துவிட்டு, சரி தீர்ப்பு வர திங்கட்கிழமை என்று ஒத்திவைத்தார்.

குற்றவாளி கொலை செய்தது காவல்துறை சரியான ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. கதிரவனுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இல்லாவிட்டாலும் அரசாங்க தரப்பே சிரத்தையாக அவரை பற்றி விபரங்களை சேகரித்ததற்கு எனது பாராட்டுக்கள். கொலையாளி மாட்டிவிட்டான் என்று வழக்கை மூடித்தள்ளாமல் மனித நேயத்துடன் இதை அணுகியிருக்கிறார்கள். கதிரவன் தான் படிக்கும் கதாபாத்திரமாக மாறிவிடுகிறான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஆகையால் அவருக்கு தக்க சிகிச்சை அளிக்க உத்தரவு இடுகிறேன். ஆனால் இதுபோன்ற ஆபத்தான வியாதியுள்ளவரை சுகந்திரமாக நடமாடவிட்டதற்காக அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கிறேன். மேலும் உயிர் இழந்த குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் எச்சரிக்கிறேன். கதிரவனை பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்த்து மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு ஈடுகிறேன் என்று தீர்ப்பை படித்து முடித்து கையெழுத்திட்டார்.

தொடரும்...

leomohan
02-08-2013, 08:35 AM
18

ஐயோ இந்த போக்கில் பார்த்தா கொலையிலேர்ந்து கதிர் தப்பிச்சாலும் மனநோய் மருத்துவமனைக்கு நிரந்தர விருந்தாளி ஆகிடுவாரு போலிருக்கே என்று வருந்தினார் ரதீஸன்.

வேற வழியில்லையா என்று கேட்டான் மோகன். இருந்தா சொல்லுங்க எனக்கு நிஜ குற்றவாளி தப்பிக்கறதுல ஆர்வம் இல்லை. அதே சமயம் கதிரவன் நிரந்தர நோயாளியாக மாறுவதற்கும் விடக்கூடாது என்றான் உறுதியாக.

அடுத்த நாள் அந்த காபி கபே டேயில் ஒரு ஓரமான இடத்தில் மூவரும் அமர்ந்தனர்.

சொல்லுங்க டாக்டர்.

கதிர் எந்த ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனாரோ அவரு என்கிட்ட வந்தது உட்பட அந்த பட்டியல் தயார்.

பலே. ரொம்ப ஃபாஸ்ட்.

சரி டாக்டர். ஒன்னு சொல்லுங்க மோகன் எழுதி தர கதைப்படி அவரு தானே சட்ட மன்ற உறுப்பினரை கொலை செய்ததா ஏத்துக்கறாரு. அவருக்கு மனநிலை கோளாருன்னு நிரூபிச்சு ஆஸ்பத்திரியில் சேர்க்க சொல்லி ஜட்ஜ் உத்தவிடராரு. ஒரிஜனல் கொலையாளி தப்பிச்சிடரான். இவரும் மரண தண்டனையிலேர்ந்து தப்பிச்சிடராரு. இது தானே அவங்க திட்டம்.

ஆமாம்.

உங்க பேஷண்ட எவ்வளவு புத்திசாலி. நான் பாக்கனுமே.

பார்க்கலாம் சுரேஷ் நான் ஏற்பாடு பண்றேன். எவ்வளவுன்னா?

அவரு கதையில் வர மாதிரியே மாறிடராரா.

ஆமாம் என்றான் மோகன் நீண்ட நேர அமைதிக்கு பின்பு.

இல்லை என்றார் ரதீஸன்.

என்ன என்று ஆச்சர்யமாக கேட்டான் மோகன். அவனிடம் சொன்னது அப்படித்தானே. இதென்ன புதுக் கதை. நீங்க என்கிட்ட சொல்லாம விட்டது ஏதாவது இருக்கா டாக்டர் என்று நம்பிக்கை இழந்தவாறே.

இல்லை மோகன். உங்க கிட்ட சுரேஷ்கிட்ட சொன்னதெல்லாம் உண்மை. ஆனால் அதில் ஒரு அநாலிஸிஸ் இருக்கு. நல்லா ஆழ்ந்து பார்த்தோம்னா கதிர் ஒரு ஜீனியஸ். அவரு எக்கச்சக்கமா புத்தகங்களை படிச்சிருக்காரு. அதில் படிச்ச விஷயங்களை ஆழமா உள்வாங்கியிருக்காரு. அப்படி இல்லைன்னா நீ ஒரு வக்கீல் அப்படின்னு புக் சொன்னதை வைச்சிகிட்டு அவரு கறுப்பு அங்கி வேணா போட்டுத் திரியலாம். ஆனா சட்ட நுணுக்கங்கள் எப்படி தெரியும் அவருக்கு. நீங்க போலீஸ்ன்னு நான் சொல்றேன். அட்லீஸ்ட் எப் ஐ ஆர்ன்னா என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டாமா.

அப்படின்னா?

அப்படின்னா கதையோட இம்பாக்ட்-தாக்கம் அவரு மேலே போட்ட சட்டை மாதிரி. அவரோட அறிவு அந்த கதாபாத்திரமா அவரை மாற வைக்குது. நாளைக்கு அவரை ஒரு மீனவனா சித்தரிச்சா அவரு மீனவனா மாறலாம். ஆனால் கடல்ல தூக்கிப்போட்டா நீச்சல் தெரியாததால அவரு செத்துடுவாரு.

ஓஹோ. அப்படின்னா ஹி கேன் ரீட் பிட்வீன் த லைன்ஸ். கதையை படிச்சாலும் அதன் உள் அர்த்தம் மூலமா அவருடைய உள் மனதில் தாக்கம் ஏற்படுத்த முடியும் அப்படித்தானே.

அமேஸிங்க சுரேஷ். எக்ஸாக்டலி. நீங்க ஒரு புத்திசாலி. ஆமாம். அப்படி செய்ய முடியும்.

மோகன் முடியை பிய்த்துக் கொள்ளாத குறையாக என்ன சார் பேசிக்கிறீங்க இரண்டு பேரும் என்றான்.

நீங்க எஸ்பிபி மூச்சுவிடமா பாடின பாட்டை கேட்டிருக்கீங்களா என்றான் சுரஷ்.

ஆமாம் என்றான் மோகன் குழப்பத்துடன்.

அது பாலாவோட திறமையா இல்லை வைரமுத்துவோட வரிகளா. எதை எழுதினா மூச்சுவிடமா பாட முடியும்?

எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அமுதமும் அவள் அல்லவா

என்று ஜோராக பாடினான்.

மோகன் உங்களுக்கு ஒரு சவால். நீங்க எழுத வேண்டிய கதை சமுதாய அக்கறை கொண்ட வேலையில்லாத ஒரு இளைஞன் ஒரு எம்எல்ஏவை கோபத்தினால் கொலை செய்துவிட்டான் – அப்படிங்கற கதை. ஆனா அதுல ஊடுருவியிருக்க வேண்டிய செய்தி அந்த இளைஞனை வேறு ஒரு கும்பல பயன்படுத்தி மாட்டி விடப்பாக்கறாங்கன்ற செய்தி. படிச்சா கதிர் மாத்திரம் தான் புரிஞ்சிக்கனும். இது விசு படத்துல வர மாதிரி என் பொண்டாட்டி என் கண்ணுக்கு மாத்திரம் அழகா இருக்கனும் மத்தவன் கண்ணுக்கு அழகா இருகக்ககூடாது. புரிஞ்சுதா?

ஆக நான் எழுதிய இரண்டும் கோர்ட் ஸீன்லேயும் அவனுக்கு வைத்தியத்தை புகுத்தனும்னு சொல்றீங்க இல்லையா என்றான் வாத்தியார் கேள்வி கேட்டு எனக்கு பதில் தெரிந்துவிட்டது என்று உற்சாகம் அடையும் மாணவன் போல.

பிரஸைஸ்லி என்றான் சுரேஷ்.

அப்படி எழுத முடியுமா மோகன் என்று அப்பாவியாக கேட்டார் ரதீஸன்.

ஒரு பெரிய விஷயத்தை சகஜமாக சொல்லி விட்டான் சுரேஷ். பிரம்மிப்பாக இருந்தது. சவாலாகவும் இருந்தது. யெஸ் முடியும் என்றான் மோகன் நிறைவாக.
மற்றவை நீதி மன்றத்தில் என்றான் செய்தி வாசிப்பாளரை போல. பிறகு வெளியில் ஐந்து ரூபாயில் குடித்திருக்க வேண்டிய காப்பிக்கு 210 ரூபாய் தண்டம் அழுதுவிட்டு சென்றார்கள்.

தொடரும்....

leomohan
03-08-2013, 05:50 AM
19
கதிரவன் அவன் பெற்றோர் காதலி கயல்விழி மோகன், சுரேஷ் அனைவரும் டாக்டர் ரதீஸனின் வீட்டில் குழுமியிருந்தன். கதரிவனின் அப்பா சங்கீதா உணவகத்திலிருந்து அனைவருக்கும் பலகாரங்கள் தரவைத்திருந்தார். எங்கும் மகிழ்ச்சி மயம்.

கதிரவன் ரதீஸன் முன் நெடஞ்சாணிக்கிடையாக விழுந்து எழுந்தான். ரொம்ப நன்றி சார் எனக்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து மட்டுமல்லாமல் என்னுடைய வியாதியையும் குணப்படுத்திட்டீங்க. நீங்க மட்டுமில்லாட்டா என்ன ஆயிருக்கும்னே நினைச்சுப் பார்க்க முடியலை. உங்களுக்கு வாழ்
நாள் முழுசா கடமை பட்டிருக்கேன் என்றான் நெகிழ்ச்சியுடன்.

அடேடே அதக்கு நான் மட்டும் காரணமில்லைப்பா. அங்க பாரு சுரேஷ் கோர்டுக்கே போகாம திறமையா வெளியிலேர்ந்தே வழக்காடிய வக்கீல். பிரசுத்திற்கே அனுப்பாம தந்திரமா கதை எழுதிய மோகன், அப்புறம் கயல்விழியோட காதல் உன் மேல வைச்ச நம்பிக்கை உங்க அப்பா அம்மாவோட வேண்டுதல் இப்படி பல காரணங்களும் சேர்ந்து தான் இந்த சாதனையே என்றார் தன்னடக்கத்துடன்.

சார் நான் செஞ்சது ஒன்னுமே இல்லை. ஜஸ்ட் ஒரு திரி பிடிச்சு கொடுத்தேன், மோகன் சார் தான் அற்புதமா ஒரு கதையை எழுதினாரு. டாக்டர் தான் உங்களை குணப்படுத்த எல்லாம் முயற்சியும் செய்தாரு என்றான் சுரேஷ் அவன் பங்கிற்கு தன்னடக்கமாக.

மோகனும் இல்லை கதிரவன் அரசியல் பிரச்சனையின்னு சொன்னதும் நான் பயந்த்து என்னவோ உண்மைதான். ஆனால் சாதாரணமா கதை எழுதிகிட்டு இருந்த என்னை ஒரு மருத்துவ கதாரியனாக மாத்தினது இவங்க இரண்டு பேரும் தான் என்றான்.

கயல்விழியின் கைபிடித்தவாறு அமர்ந்திருந்த கதிரவன் அது சரி சார் இந்த மாதிரி அரசியல் பிரச்சனை வந்த்தும் பயந்து என்னை கைவிடாம எல்லாரும் சேர்ந்து போராடி என்னை காப்பாதிவிட்டதற்கு என்ன சொல்ல என்றான் நன்றியுணர்ச்சியுடன்.

அதெல்லாம் சரிப்பா முக்கியமான வேலையால நான் இன்னிக்கு கோர்டுக்கு வரமுடியலை என்ன நடந்த்துன்னு யாராவது சொல்லுங்களேன். எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு. நிஜ கொலையாளி யார். எப்படி நீங்க குணமானீங்க. நீங்க விடுதலையானதை அவங்க அந்த அரசியல்வாதிங்க எப்படி சுலபமா ஏத்துகிட்டாங்க. எனக்கு எல்லாம் சொல்லுங்க என்றார் ரதீஸன்.

ஹாஹா அதுக்குத்தான் ஒரு கதாசிரியரை கூட வச்சிருக்கோம்ல. அவரு சொல்வார் கதையை என்று சுரேஷ் மோகனை பார்த்து சமிக்கை செய்ய மோகன் வழக்கமான கதை சொல்லும் பாணியில் தொடங்கினான்.

leomohan
03-08-2013, 05:53 AM
20
உங்கள் பெயர்.

கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க.

என்ன படிச்சிருக்கீங்க.

எம்எஸ்சி மைக்ரேயாலஜி.

எங்க வேலை பாக்கறீங்க.

இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன்.

உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா?

ஒரு தடவை பாத்திருக்கேன்.

அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால வெட்டினீங்களா

இல்லை.

என்ன இல்லையா. அப்ப போலீஸ் எதுக்கு உங்களை கைதி பண்ணியிருக்கு.

அதை அவங்க கிட்டே தான் கேட்கனும்.

நீங்க அவரை கொன்னதை பார்த்த சாட்சி இதோ உங்க முன்னே நிற்கிறாரு. வாங்க சரவணன் என்று ஒருவரை அழைத்தார்.

இவரா நான் கொலை செய்யும் போது பார்த்தது ஆச்சர்யமா இருக்கே.

சரவணன் நீங்க கதிரவன் சட்ட மன்ற உறுப்பினரை அரிவாளால் வெட்டும் போது பாத்தீங்களா.

ஆமாம் சார்.

என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.

அவரு வேகமா ஓடி வந்து எம்எல்ஏ சட்டையை பிடிச்சிகிட்டாரு. கையிலே அரிவாள் வேற இருந்தது. .... ஒரு சாதி பேரை சொல்லி நாம ஒரு சாதிக்காரன் தானேடா உன்னால நம்ம சாதிக்கு என்ன லாபம்னு கத்தினாரு.

அப்புறம்...

அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு.

அப்புறம்...

அவரை ஓங்கி வெட்டிட்டு நான் கதிருடா. மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். ஒவ்வொரு செல்லையும் ஒவ்வொரு மிருகத்துக்கு இரையாக்கிடுவேன்னு சொல்லிட்டு
ஓடிட்டாரு.

எதுக்காக வெட்டினீங்க கதிர் சொல்லுங்க என்றார் சற்றே குரலை உயர்த்தி.

சில நிமிடங்கள் மௌனமாக இருந்தான் கதிரவன். சில நிமிடங்கள் சுற்று முற்றும் பார்த்தான். தூரத்தில் கயல்விழி தெரிந்தாள். அவளருகில் சில நபர்கள். யாரும் தெரிந்த முகம் இல்லை. அப்பா அம்மா இன்னும் தூரத்தில் தென்பட்டனர். கயல்விழி உதடுகள் குவித்து ஓசையில்லாமல் கைகள் இரண்டையும் பிரித்தும் இணைத்தும் காட்டினாள். அவன் தன் கையில் இருந்த சிறிய காகித்தை எடுத்துப் பார்த்தான். மெதுவாக படித்தான். பிறகு மீண்டும் மௌனமான்.

சொல்லுங்க கதிர் எதுக்காக கொன்னீங்க.

ஐயா கொஞ்சம் தண்ணி வேணும் என்றான். அவனுக்கு குடிநீர் கொடுக்கப்பட்டது. பிறகு மெதுவாக சரவணனை காண்பித்து நீங்க சொன்னதை மறுபடியும் சொல்லுங்கள் என்றான்.

சரவணன் பொய் சாட்சி தானே. சொன்னதையே மீண்டும் வெட்டி ஒட்டினான்.

நீதிபதி அவர்களே இது ஒரு பொய் வழக்கு. சோடிக்கப்பட்ட வழக்கு என்றான் தீர்க்கமாக.

அரசியல்வாதியின் கையாள் சட்டென்று முகம் மாறினார். மோகனை பார்த்து என்ன நடக்குது என்பது போல சைகை காட்டினார். எழுதியதை பேசாமல் வேறு ஏதாவது உளறப்போகிறானோ என்கிற பயம் அவருக்கு. மோகன் அமைதியாக உதட்டை பிதுக்கி என்ன நடக்கிறது என்று எனக்கும் தெரியிவில்லை என்று செய்கை செய்தான்.
அவன் மீண்டும் பேசத்துவங்கினான்.

ஐயா என் பெயர் கதிரவன்.

அதை தான் சொல்லிட்டீங்களே.

நீதிபதி இடைமறித்து அவரை பேச விடுங்கள் என்றார்.

ஐயா என் பெயர் கதிரவன். நான் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கேன். இந்த எம் எல் ஏவை நான் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை.

என்ன இப்பத்தானே பார்த்திருக்கேன்னு சொன்னீங்க – வக்கீலும் தடுமாறிப்போனார்.

சொல்றேன் சார். எனக்கு மன நிலை சரியில்லை. நான் எந்த புத்தகம் படிச்சாலும் அந்த கதாபாத்திரமா மாறிடுவேன். அதனால சில வைத்தியமும் செஞ்சிகிட்டு வரேன். இப்போ கூட பாருங்க இந்த கோர்ட்ல நடக்க வேண்டியதை எனக்கு கதையா எழுதி கொடுத்திருக்காங்க. கதையில வர முக்கிய பாத்திரத்தோட பெயரும் கதிரவன். அவனும் மைக்ரோபயாலஜி படிச்சிருக்கான். என்னோட வீக்கனஸ் தெரிஞ்ச யாரோ தான் இந்த மாதிரி கதையை எழுதி என்னை மாட்டிவிட பார்த்திருக்கனும் என்றான் தெளிவாக.

என்ன சொல்றீங்க. அப்ப ஆரம்பத்துல நீங்க பேசின அஞ்சு நிமிஷம் சுயநினைவில் இல்லையா.

ஆமாம் ஐயா.

இப்ப எப்படி சுயநினைவுக்கு வந்தீங்க.

ஐயா, இவரு சாட்சியம் சொல்லும்போது நாம ரெண்டு பேரும் ஒரு சாதிக்காரங்க அப்படின்னு சொன்னாரு. செத்துப்போன எம்எல்ஏ ... சாதி. நான் வேற ... சாதி. – இது எனக்கு அடிச்ச முதல் அலாரம்.

என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு....ன்னு அவரு சொல்லும் போது எனக்கு இரண்டாவது மணி அடிச்சுது. அப்ப தான் அந்த இடைவெளி கிடைச்சுது. கையில் இருந்த பக்கங்களை படிச்சேன். கோட்ல் நடக்கற கதையாக இருந்தது. அதுல என் பேரையை பார்த்தோன்னே எனக்கு புரிஞ்சுது. என்னையே நானாக மாத்தி ஏதோ நடக்கதுன்னு நினைச்சேன். அதனால தான் அவரை மறுபடியும் பேச சொன்னேன்.

நீங்க மனநிலை சரியில்லாதவர்னு எங்களுக்கு தெரியும். அதை சொல்லித்தான் நான் உங்களுக்கு விடுதலை வாங்கிதரதா இருக்கேன். ஆனா கொலை நீங்க தான் செஞ்சீங்க என்றார் வக்கீல் மிகவும் தளர்ந்து போய்.

சார் நான் மன நிலை தெளிவாக இருந்து அந்த கொலை செஞ்சிரந்தேன்னா நான் அந்த சாதிக்காரன்னு சொல்லி கொன்னு இருக்க மாட்டேன். அப்படி ஏதோ கதையின் பாதிப்புல இருந்தேன்னா இப்ப இந்த கதையை எழுதி கொடுத்தது யாரு? என்று கேட்டான் சற்றே வலிமையுடன்.

நீதிபதி குறுக்கிட்டு என்ன நடக்குது இங்கே. பொய் கேஸா. சாட்சியை மேனிபுலேட் பண்றீங்களா. ஹை ஃப்ரோபைல் கேஸூன்னு சொன்ன உடனே சந்தேகம் வந்தது. எப்படிப்பா இவ்வளவு சுலபமா முடியும்னு. கதிரவன் நீங்க மனநிலை சரியில்லை அப்படிங்கறதுக்கு என்ன ஆதாரம்.

சுமார் 20 நிமிடம் கழித்து நீதிபதி, நீங்க கொலை செய்யலை. யாரோ உங்களை இந்த கொலையில் மாட்டிவிட பார்த்திருக்காங்க. யாரு என்றார் யோசனையுடன்.
வக்கீல் தடுமாற்றமாக இருந்தார்.

சார் அதுக்கும் என்கிட்டே பதில் இருக்கு என்றான் கதிரவன்.

வக்கீல் கடுப்புடன் ஏம்பா மனநிலை சரியில்லாதவன்னு சொல்லிட்டே அப்புறம் என்ன வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு கொலையாளி யாருன்னு போலீஸ் பாத்துக்கும் என்றார்.

சார் கவலை படாதீங்க. கொலையாளி யாருன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த பொய் சாட்சி யாருன்னு சொல்றேன். இவரு 13ம் வாடு செயலாளர். போன மாசம் இவங்க கட்சி தலைவர் வந்தப்ப ஆளுயர மாலையோட தெருத் தெருவா போஸ்ட்ர் ஒட்டிக்கிடாரு. இவரு ஆளுங்கட்சி. செத்தது எதிர் கட்சி எம்எல்ஏ. சாட்சி சொல்ல வேற வந்திருக்காரு. இந்த நிலைமையில இருக்கு கதை என்றான் கதிரவன் முற்றும் தெளிந்தவனாக.

அப்புறம் கோர்டு ரொம்ப நேரம் நடந்தது. அதெல்லாம் நமக்கு தேவையா. நம்ம ஆளு வெளியே வந்தாச்சு. நீதிபதி காவல்துறைக்கு நிஜ குற்றவாளியை தேடுங்கப்பான்னு உத்தரவு போட்டுட்டாரு. எல்லாம் சுபமே என்று சொல்லி முடித்தான் மோகன்.

leomohan
03-08-2013, 05:56 AM
21

பிரில்லியண்ட் என்றார் ரதீஸன்.

அது சரி இந்த ஸ்கிரிஃப்டை அரசியல்வாதி எப்படி அனுமதிச்சாரு. அவருக்கு சந்தேகம் வரலையா என்று கேட்டாள் கயல்விழி அதுவரையில் மௌனமாக கொண்டாடிக்கொண்டு இருந்தவள்.

மோகன் உடனே, வந்தது. அவன் ஏன் கொலை செஞ்சது நான் தான் ஒத்துகலைன்னு கேட்டாரு. நான் சொன்னேன் சார் முதல்லே கொலையை ஒப்புகிட்டா கோர்டுக்கு சந்தேகம் வராதான்னு சொல்லி சமாளிச்சேன்.

அப்புறம்..

ஒரே சாதிக்காரங்கன்னு நீங்க எழுதின வரில அவங்களுக்கு சந்தேகம் வரலையா.

ஹாஹா. அது தான் நாம் செஞ்ச அதிர்ஷ்டம். ஆனா அடுத்த வரியை பிடிச்சிட்டாங்க. ஏன் “அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு” இந்த வரி தேவையான்னு கேட்டாரு. அதுக்கு நான், சார் அவன் மனநிலையில்லை சரியில்லைன்னு இங்கே எஸ்டாப்ளீஷ் பண்ணாதான் பின்னாடி அவரை விடுவிக்கலாம் அப்படின்னு சொல்லி சமாளிச்சேன்.

மத்தக் கதை...

மத்தக் கதை எங்கே. இந்த இடத்துல கதிரவன் குணமாயிட்டாரு. மத்த கதையை எழுதினது அவருடைய ஞாபக சக்தியும் புத்திசாலித்தனும் தான். நான் கூட இப்படி ஆளுங்கட்சியை போட்டு துவைப்பாருன்னு எதிர்பார்க்கலை. எதுக்கும் நீங்க எல்லாரும் கொஞ்ச ஜாக்கிரதையாகவே இருங்க என்று முடித்தான்.

இருங்க இருங்க அந்த கதை பேப்பர்ஸ் மறுபடியும் கதிரவன் கைக்கு எப்படி போச்சு என்றார் ரதீஸன் இன்னும் புதிரிலிருந்து விடுபடாதவராக.

டாக்டர் சட்ட நுணக்கங்கள் தெரிஞ்ச ஒரு வக்கீல் நான் இங்கே இருக்கேன் மறந்துட்டீங்களா. சட்டமும் தெரியும் நீதிமன்றத்தோடு சந்து பொந்துக்களும் தெரியுமே என்றான் நகைச்சுவையுடன்.

அது சரி கயல்விழிக்கு என்ன ரோல் இதில் என்றான் மோகனும் அவனுக்கும் சில புதிர்கள் இருந்தன போலும்.

அட மோகன் சார், நானும் டாக்டரும் கயலுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி வைச்சோம். ஒரு வேளை கதிரவனுக்கு நல்ல நினைவு திரும்பிட்டா அவரால அவங்களையும் அவரோட அப்பா அம்மாவையும் தான் சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியும்.

அது சரி ஆனால் எனக்கு இன்னொரு டவுட் டாக்டர் என்றாள் கயல்விழி கண்களை அகலப்படுத்திக் கொண்டே.

சொல்லும்மா.

மோகன் சார் எழுதின ஸ்கிரிஃப்டை கதிரவன் தான் ஜெயில்லே படிச்சிட்டாரே. அப்பவே ஏன் அவருக்கு தெளிவு ஏற்படலை.

முதல்ல கதிரவன் எந்த கதை படிச்சாலும் அதோட முக்கிய பாத்திரமாக மாறராரு. அதனால அவருக்கு மத்த பாத்திரங்களோட தாக்கம் இல்லை. இரண்டாவது அவரு ஒரு கதாபாத்திரமாக முழுசா மாறனும்னா அந்த சூழ்நிலையும் அதுக்கு தக்கமாதிரி இருந்தா சுலபமா இருக்கும். இப்ப ஒருத்தும் இல்லாத இடத்துல அவரு மாறினா அந்த மாற்றம் அவராலேயே உணர முடியாது. மூணாவது இது என்னோட கணிப்பு தான் ஏன்னா நான் கோர்ட்டுக்கு வரலையே – சரவணன் சாட்சி சொல்லும் போது அவரோட பேச்சால அவருக்கு மனமாற்றம் டிரிகர் ஆயிருக்கு. படிக்கும் போது அவரு கதிர் கதாபாத்திரத்தோட அதிகமா நூல்பிடிச்சு போனதால அப்ப அந்த மாற்றம் ஏற்படலை. அதுக்கும் மேலே இன்னும் சில நாட்கள்ல நாங்க முன்னாடி யோசிச்சு வைச்ச வைத்தியத்தை செஞ்சிருந்தாலே அவரு குணமாகியிருப்பாரு. ஏன்னா இயற்கையாகவே அவர் ஒரு ஜீனியஸ். ஆனா இப்படியெல்லாம் நடந்து போச்சு என்று சொல்லி முடித்தார்.

அது என்ன வைத்தியம் டாக்டர் என்று ஆர்வமாக கேட்டாள் கயல்விழி.

அது வேண்டாம்மா. அது இன்னொரு பெரிய கதையாயிடும்.

எது எப்படியோ எனக்கு வண்டி நிறைய கதைகள் கிடைச்சிடுத்து என்றான் மோகன். எனக்குதான் இந்த வழக்கால ஒரு வழக்கும் வரலை என்றான் சுரேஷ் பொய்யாக கோபித்துக் கொண்டே.

கவலைப்படாதீங்க சுரேஷ் உங்களை பத்தி கதை எழுதிய பிரபலமாக்கிடறேன் என்றான் மோகன்.

கதிரவன் மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தான்.

சுரேஷ் புன்னகையுடன் மறுபடியும் ஒரு கேஸ் வந்தா என்கிட்டே வாங்க. கோட்டுக்கு போகாமலேயே சால்வ் பண்ணிடலாம் என்றான்.
ஆமாம்பா என் பேஷண்ட் எனக்கு ஃபீஸே கொடுக்க வேண்டாம். வக்கீலுக்கு மாத்திரம் கொடுத்தா போதும் என்றார் ரதீஸன் மன நிறைவுடன்.

முற்றும்.