PDA

View Full Version : தலைவர் பிரபாகரன் புதிய தொடர்



Honeytamil
10-06-2009, 12:52 PM
http://i42.tinypic.com/2n9mkp5.jpg

கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே'' என்றார் காண்டீபன்.

`அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?' என்று இன்பம் கேட்டார்.

``கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.

அலுவலகமெல்லாம் சரிப்படாது. நடு வீதியில் நாயைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளவேண்டும். வீட்டுக்கே போய் வேலையை முடித்துவிடலாம். காரில் போகும்போது சுட்டுவிடலாம். ஏதாவது விழாவுக்கு வருவான். மேடையில் முடித்துவிடலாம்...''

இடம், தேதி, தருணம் தீர்மானித்து, ஒரு திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டுவிட்ட விவரம் தெரியாமல் நண்பர்கள் லொக்கேஷன் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கோப்பை தேநீர் போதும். குடித்துவிட்டு மணிக்கணக்கில், சமயத்தில் முழுநாள் கூட உட்கார்ந்து விவாதிப்பார்கள். பேச்சில் சூடு பறக்கும். சிந்திக்கும் கணத்திலேயே செய்து முடிக்கும் வெறி கண்ணில் ஒரு மின்னல்போல் வெட்டும். எதைச் செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏராளம் இருந்தாலும், ஏதாவது செய்தாகவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது எண்ணமில்லை.

ஏதாவது செய்வதற்கு ஒரு தொடக்கம் வேண்டும். முந்தைய தலைமுறையின் `ஏதாவதுகள்' எதுவுமே பிரயோஜனமில்லை. அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஊர்வலம் போனார்கள். கறுப்புக் கொடி காட்டினார்கள். மேடை போட்டுப் புலம்பினார்கள். கைதாகி, அடிபட்டு, எலும்பு முறிந்து படுத்தார்கள். என்றாவது ஒருநாள் ஏதாவது நடக்கும் என்கிற வண்ணமயமான கனவைச் சாப்பிட்டபடி வாழ்ந்து முடித்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

இனி அந்த வழி உதவாது. மறு கன்னத்தைக் காட்டிய பெரியவர்களே, உங்களை மதிக்கிறோம். ஆனால் பின்பற்றுவதற்கில்லை. அறவழிப் போராட்டங்கள் மனிதர்களுக்குப் புரியும். சிங்களர்களுக்குப் புரியாது. எங்கள் பாதை வேறு. எங்கள் பயணம் அபாயகரமானது. பணத்தையல்ல; எங்கள் உயிரை நாங்கள் முதலீடு செய்கிறோம். நாளைய சந்ததிக்கு சுதந்தரம் அசலாகவும், நிம்மதி வட்டியாகவும் கிடைத்துவிட்டுப் போகட்டும்.

இதோ, தொடக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக துரையப்பாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஆல்ஃப்ரட் தங்கராஜா துரையப்பா. தமிழர்தான். ஆனால் தொகுதியில் எந்தத் தமிழரோடும் உறவற்றவர். பிறகு எப்படி வோட்டு வாங்கி 1960 முதல் 65 வரை யாழ்ப்பாணம் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார் என்று உடனே கேட்பீர்கள். தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடைய, சுயேச்சையாக நின்ற துரையப்பா வெற்றி பெற்றது எப்படி என்பீர்கள். அடுத்த ரவுண்டில் மேலும் எப்படி மேயரானார் என்பீர்கள்.

நாங்கள் அரசியல்வாதிகளல்லர். ஆனால் அருவருப்பு அரசியலின் ஆணிவேர் வரை எங்களுக்குத் தெரியும். கோட்டைக்குப் போகும் வேட்கையில், வோட்டுக்குப் பேசும் பேச்சுகளின் அபத்தம் சாத்வீகிகளுக்குப் புரியாதிருக்கலாம். அந்தத் தலைமுறைதான் அவனை நம்பி உட்காரவைத்தது. எங்களிடம் அது பலிக்காது.

எத்தனைபேர் முயற்சி செய்திருக்கிறார்கள்! அமைதியல்ல; ஆயுதமே தீர்வு என்று முடிவு செய்து களமிறங்கிய தலைமுறையின் முதல் நபர் தொடங்கி அன்றைக்கு அத்தனை பேருக்குமே அதுதான் முதல் கனவாக இருந்தது. துரையப்பாவைக் கொல்லவேண்டும். சிவகுமாரன் முயற்சி செய்திருக்கிறார். சத்தியசீலனுக்கு அந்த எண்ணம் இருந்திருக்கிறது. அவரது தமிழ் மாணவர் பேரவையில் இருந்த அத்தனை பேரும் ஆசைப்பட்டார்கள். பேரவைக்கு வெளியே இருந்த இளைஞர்களிடையேயும் அது கனவாக இருந்தது. இது கொலையல்ல; களையெடுப்பு.

யாராலும் முடியவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை. துரையப்பா லேசுப்பட்ட ஆளில்லை என்பதும் ஒரு காரணம். மாநகரத் தந்தை. பாதுகாப்பு பந்தோபஸ்துகள் அதிகம். அரசியலின் மேல்மட்டம்வரை தொடர்புகள் உண்டு. கொழும்பு செல்வாக்கு அதிகம். ஆனாலும் யாழ்ப்பாணம்தான் அவரது தலைநகரம். அங்கே இங்கே நகரமாட்டார். எதிரே யாரும் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. போகிற வழியெல்லாம் மூக்குக்கு நேரே இரு கைளையும் உயர்த்திக் கும்பிட்டபடி போகிற பழக்கம் வந்துவிட்டது. அத்தனை மக்களுக்கும் நண்பன் என்று சொல்லிக்கொள்வார். வடக்கில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க்குடும்பமும் தனக்கு உறவு என்பார். கிறிஸ்தவர் என்றாலும் ஹிந்து கோயில்களுக்குப் போவார். கடவுள் ஒரு பொருட்டில்லை என்றாலும் அது ஒரு கம்பீரம். ஆஹா, மத நல்லிணக்கவாதி. நம்மில் ஒருவர். நமக்காக இருப்பவர்.

அவருக்குத்தான் கட்டம் கட்டினார்கள். நாங்கள் கொலை செய்யப் போவதில்லை. கொசு மருந்தடிக்கப் போகிறோம். கொசு மருந்தடிப்பது கொலை என்றால் இதுவும் அப்படியே ஆகுக.

`சீக்கிரம் சொல். எங்கே செய்யப் போகிறோம்?' காண்டீபன் கேட்டார். அவர் அமிர்தலிங்கத்தின் மகன். எனவே அப்பாவின் வட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட பொன்னாலை வேண்டாம் என்று நினைத்தார்.

இது ஒரு பிரச்னை. பெரிய பிரச்னை. ஒரு பொதுக்காரியம் என்று எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு சொந்த விருப்பு வெறுப்புகள் குறுக்கே வருவது அடுக்காது. இங்கேதான் தடுக்கும். இதுதான் காலை வாரும். இதற்கு உண்ணாவிரதம் தேவலை. ஊர்வலமே போதும். பொதுக்கூட்டம் இதனினும் பெரிது. ஏன் நண்பர்களே உங்களுக்கு இது புரியவில்லை?

போட்டுவைத்த திட்டத்துக்கு மாற்றாக வந்த அனைத்து யோசனைகளையும் அந்த இளைஞன் நிராகரித்தான். ``காண்டீபன், நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். இன்பம், நீங்களும். நமது நட்பு எப்போதும் தொடரும். ஆனால் கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றுவது காரியத்தைக் கெடுக்கும். நாம் பேசித்தான் முடிவெடுத்தோம். ஆயிரம் முறை பேசலாம். ஆனால் முடிவு என்பது ஒருமுறை எடுப்பது. இன்னொரு விஷயம். நம்மில் சிலர் இந்தத் திட்டம் பற்றி வெளியே பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். வேண்டாம், அவர்களும் விலகிக்கொள்ளட்டும். ஒரு துளி பயம் என்பது ஒரு துளி விஷத்துக்குச் சமம். எனக்கு அது இல்லை. எனவே நான் முடித்துவிடுகிறேன்.''

1954 நவம்பர் 26ம் தேதி பிறந்த பிரபாகரன், ஆல்ஃப்ரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்றபோது வயது 21. அவரது நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதான். அவர்களுக்கெல்லாம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. செய்து முடிக்கும் வல்லமை பிரபாகரனுக்கு இருந்தது.

திட்டத்தில் அவர் எந்த மாறுதலையும் ஒப்புக்கொள்ளவில்லை. அதே வட்டுக்கோட்டை தொகுதி. பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் வாசல். வெள்ளிக்கிழமை தோறும் துரையப்பா அங்கே வருவார். மாலை வேளை பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்வார்.

அன்றைக்கும் வந்தார். பிரபாகரன் காத்திருந்தார். உடன் சில நண்பர்கள். கிருபாகரன், கலாபதி, பற்குணம்.

துளி பதற்றமில்லை. பயமில்லை. கரங்கள் உதறவில்லை. நான் இதைச் செய்யப்போகிறேன். ஒரே சாட்சி, பொன்னாலை வரதராஜப் பெருமாள். அவ்வளவுதான். காரிலிருந்து இறங்கிய துரையப்பா, பிரபாகரனால் சுடப்பட்டார்.

இறந்து விழுந்தவரை இழுத்துப் போட்டார்கள். அருகே கிடந்த துண்டு அட்டை ஒன்றை எடுத்து பிரபாகரன் வேகமாக ஏதோ கிறுக்கினார். அதைத் தூக்கி துரையப்பாவின்மீது போட்டார். அதில் TNT என்றிருந்தது. அவர் வந்த காரிலேயே ஏறிக்கொண்டார்கள். பற்குணம் வண்டியை ஓட்டினார்.

நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ம் நம்பர் பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஏறி, யாழ்ப்பாணம்.

இறங்கியதும், ``சரி பாப்பம்'' என்று பிரபாகரன் விடைபெற்றார். இன்னொரு பஸ் பிடித்து வல்வெட்டித்துறைக்குப் போனார்.
வீட்டில் அப்பா திருவாசகம் படித்துக்கொண்டிருந்தார். பார்த்ததும் புன்னகை செய்தார். அப்பா என்றால் அன்பு. அப்பா என்றால் புன்னகை. அப்பா என்றால் சாந்தம். ``சாப்பிட்டீர்களா அப்பா?''

பிரபாகரன் சாப்பிட்டுவிட்டுப் படுத்தார். நிம்மதியாகத் தூங்கினார். செய்தது பற்றிச் சிந்தனை ஏதுமில்லை. இனி செய்யவேண்டியது பற்றித்தான்.

தொடரும்....

Honeytamil
15-06-2009, 04:55 AM
http://i44.tinypic.com/2i12izc.jpg

ஐந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

அவர்களுக்கு விளையாட வேண்டும். பள்ளிக்கூடம் போகவேண்டும். வீட்டுக்கு வந்தால் தாய்மடி. நல்லதாக நாலு கதை கேட்டுப் படுத்தால் தீர்ந்தது விஷயம். சூழலின் சூடு ஓரளவு தாக்கியிருப்பினும் அடிப்படை விருப்பங்களில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

ஆனால் அந்தப் பையன் முற்றிலும் வேறு மாதிரி இருந்தான். அவனது ஆர்வங்கள் இன்னது என்று அவனது பெற்றோருக்கு சரியாகப் புரியவில்லை. படிக்கிறாயா? படிக்கிறேன். கோயிலுக்குப் போகிறாயா? போகிறேன். விளையாடுகிறாயா? விளையாடுகிறேன். அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே? ஆனால் ஏன் அடிக்கடி தனியே போய் உட்கார்ந்து யோசிக்கிறாய்? என்ன ஓடுகிறது உன் புத்தியில்? இந்த வயதில் என்ன சிந்தனை? பெரியவர்கள் பேசுமிடத்தில் நீ வந்து நிற்பதை அவ்வப்போது பார்க்கிறேன். உன்னால் தொந்தரவில்லை. குறுக்கே பேசுபவனில்லை நீ. ஆனாலும் இந்தப் பேச்சில் உனக்கு என்ன புரியும்?

பதில் சொல்லமாட்டான். கணப்பொழுதுப் புன்னகை. ஓடியேவிடுவான். ஆனால் திரும்பி வருவான். அதே மாதிரி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான். என்ன ஆர்வம் இது? என்ன மாதிரியான அக்கறை இது? அக்கறைதானா? ஏதாவது புரியுமா இவனுக்கு?

அன்றைக்கு அப்படித்தான் அவனது அப்பாவும் நண்பர்களும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கலவரத்தில் கொளுத்தப்பட்ட பாணந்துறை குருக்கள் பற்றி. நல்லவர். மிகவும் சாது. ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர். கோயிலில் புகுந்த கலவரக்காரர்கள், குருக்களை இழுத்து வந்து நிறுத்தி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். யார் என்ன செய்ய முடியும்? ஊரே பற்றி எரிகிறது. கண்மூடித்தனமாக அடிக்கிறார்கள். கட்டி வைத்து எரிக்கிறார்கள். பார்த்த இடத்தில் உயிரைப் பறிக்கிறார்கள். வீட்டை விட்டு, ஊரை விட்டு ஓடலாம். நாட்டை விட்டல்லவா ஓடச் சொல்கிறார்கள்? விதி. வேறென்ன சொல்வது?

பெரியவர்கள் சொந்த சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தபோது அந்தச் சிறுவன் முதல்முறையாக வாயைத் திறந்தான். ``அப்பா, ஒரு நிமிடம். தாக்கத்தான் வருகிறார்கள் என்று தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?''

தூக்கிவாரிப்போட்டது வேலுப்பிள்ளைக்கு. வல்வெட்டித்துறையில் அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கேள்வியை யாராலும் கேட்டிருக்க முடியாது. பிரபாகரன் கேட்டான். சிறுவன். மிகவும் சிறுவன். தெரிந்துதான் கேட்கிறானா? தற்செயலாக வந்துவிட்ட கேள்வியா?

வாய்ப்பே இல்லை. வேலுப்பிள்ளையின் மகன் அப்படியெல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. எத்தனை சாது! எப்பேர்ப்பட்ட ஒழுக்க சீலர். அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத அணில் குஞ்சு அவர். அவர் மனைவி பார்வதி, அவருக்கு மேல். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கோயில், கடவுள், பதிகம். கொஞ்சம் வெளியே வந்தால் தமிழரசுக் கட்சி. தந்தை செல்வா. அவரது அறவழிப் போராட்டங்கள். தந்தை சொன்னால் சரி. தந்தை செய்வது சரி. பேப்பரைப் பார். அவர் என்ன பேசியிருக்கிறார் இன்றைக்கு?

`திருமேனியார் குடும்பம்' என்பார்கள். வல்வெட்டித்துறையில் அவர்கள் மிகவும் பிரபலம். வேலுப்பிள்ளையின் பாட்டனார் திருமேனி வெங்கடாசலம் கட்டிய வைத்தீஸ்வரன் கோயில் இன்றளவும் வல்வெட்டித்துறையில் பிரபலமானது. தான் கட்டிய கோயிலுக்கு மட்டுமல்ல. யார் வந்து கேட்டாலும் கோயில் பணி என்றால் அள்ளிக்கொடுக்கும் வம்சம் அது. அரசாங்கத்தை நம்பிப் பயனில்லாதபோது ஆண்டவனைத்தான் நம்பியாகவேண்டியிருக்கிறது.

என்றாவது விடியும் என்ற ஒற்றை நம்பிக்கை அவர்களிடம் மிச்சமிருந்தது. நிம்மதியாக ஒரு வாழ்க்கை. சுதந்தரமாக ஒரு வாழ்க்கை. கலவரமில்லாத ஒரு வாழ்க்கை. படுத்தால், யார் கதவு இடிப்பார்களோ என்று அஞ்சாமல் உறங்க ஒரு வாழ்க்கை. இரவிருந்தால் பகலிருக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தவர்கள் அவர்கள். எல்லாம் ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஆணி வேரைத்தான் சிறுவன் பிரபாகரனின் கேள்வி அன்றைக்கு முதல்முறையாக அசைத்துப் பார்த்தது.

குருக்கள்தானே? தினசரி கோயில் திருப்பணி செய்கிறவர்தானே? கடவுளா காப்பாற்றினார்? அல்லது நீங்கள்தான் காப்பாற்றினீர்களா? யாரால் என்ன முடிந்தது? தாக்க வந்தவர்களை அவர் திருப்பித் தாக்கியிருக்கவேண்டும். நிச்சயமாக, தாக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசி என்ன பயன்?

அதிர்ந்து போனார் வேலுப் பிள்ளை. திருப்பித் தாக்குவதா?

ஆம். அதிலென்ன தவறு என்று பிரபாகரன் கேட்டபோது வல்வெட்டித்துறை மட்டுமல்ல; இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதுமே அறவழிப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்தது. தந்தை செல்வா என்கிற எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சிதான் ஒரே நம்பிக்கை. இலங்கை தமிழ் காங்கிரஸ் இருந்தாலும் செல்வா மட்டுமே செல்லுபடியாகக் கூடியவர். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், மறியல்கள், அறிக்கைகள் மற்றும் அழுகைகள். ஆயுதம் என்று சிந்திக்கக்கூடிய தலைமுறை அப்போது இல்லை.

அது அப்போதுதான் பிறந்திருந்த தலைமுறை. பிரபாகரன் அதில் முதல் செட்.

`தம்பி, இதோ பார். இதுதான் இந்தியா. நமக்கு வடக்கே இருக்கும் தேசம். கூப்பிடு தூரம். ஒரு காலத்தில் நம் ஊரிலிருந்து மதியம் புறப்பட்டுப் படகில் போய் மாலைக்காட்சி சினிமா பார்த்துவிட்டு இரவு ஊருக்குத் திரும்பி வந்துவிடுவார்கள்.எத்தனை பாகவதர் படங்கள், சின்னப்பா படங்கள், எம்.கே. ராதா படங்களெல்லாம் பார்த்திருக்கிறோம் தெரியுமா? யாரும் பாஸ்போர்ட் கேட்டதில்லை. விசா கேட்டதில்லை. அத்தனை இணக்கமான தேசம். நம் மக்களுக்கு அங்கே வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நம் ஊரிலேயே பல குடும்பங்கள் அங்கே பெண் எடுத்திருக்கின்றன. நடுவில் இருப்பதை ஒரு கடலாகவே யாரும் நினைத்ததில்லை. சற்றே பெரிய கால்வாய். அவ்வளவுதான். ஆனால் எல்லாம் ஒரு காலம். இப்போது இல்லை. நான் சொல்ல வந்ததும் அது இல்லை. இந்தியாவில் ஒரு சுதந்தரப் போராட்டம் நடந்தது. ஆ, அதற்கு முன்னால் நான் உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொல்ல வேண்டும்...'

பிரபாகரன், காந்தி கதையை அப்பாவிடம் கேட்டுக்கொண்டாலும் தனியே எடுத்துப் படித்த புத்தகங்கள் சுபாஷ் சந்திர போஸைப் பற்றியதாகவே இருந்தன. அந்த வயதில் அவனுக்கு சுபாஷின் சாகசங்கள் பிடித்திருந்தன. பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தேசம் விட்டுத் தப்பிப் போன சுபாஷ். ஜெர்மனியில் ஹிட்லரைச் சந்தித்த சுபாஷ். நீர்மூழ்கிக் கப்பலில் ஜப்பானுக்குத் தப்பிய சுபாஷ். தனி மனிதனாக ஒரு ராணுவத்தையே உருவாக்க முடிந்த அவரது பேராற்றல்.

பிறகு பகத்சிங்கைத் தெரிந்துகொண்டான். எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?

அப்பா, நான் காந்தியை மதிக்கிறேன். ஆனால், இந்தியாவின் கதை வேறு. நமக்கிருக்கும் பிரச்னைகள் அவர்களுக்கு இருந்ததில்லை. வெள்ளைக்காரன் ஆட்சியைப் பிடித்ததுதான் அங்கே பிரச்னை. இந்தியர்களைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவா பார்த்தான்? அங்கே ஒரே ஒரு ஜாலியன் வாலாபாக். இங்கே ஊருக்கு ஊர் சொக்கப்பனை. எப்படி ஒப்பிடுவீர்கள்? பிரிட்டிஷாருக்கு அங்கே அதிகாரம் செலுத்துவது ஒன்றே குறி. இனப்படுகொலை அல்ல. எந்தப் பாணந்துறை குருக்கள் அங்கே உயிரோடு கொளுத்தப்பட்டார்? நேற்றைக்கு அத்தை வந்திருந்தாரே, அவரது கணவரை அடித்தே கொன்ற கதையைச் சொல்லி அழுதாரே. அதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்க முடியுமா? அத்தையின் கணவருக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நமது போராட்ட வழிகளை நாம் தீர்மானிப்பதில்லை அப்பா. நம் எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்...

வேலுப்பிள்ளை கலவரமடையவில்லை. ஆனால் கவலைப்பட்டார். இது வேறு தலைமுறை. வேறு விதமாகச் சிந்திக்கிறது. மாவட்டக் காணி அதிகாரியாக உத்தியோகம் பார்த்து, செய்தித்தாள் அரசியலில் திருப்தியுற்று, கோயில் பணிகளில் கவலை கரைக்கும் தன்னைப் போலில்லை தன் மகன். சிந்திக்கிறான். ஆனால் வேறு விதமாக. ஆபத்தாக ஏதும் வராதவரை பிரச்னையில்லை. பார்வதி, தம்பி எப்போதும் படித்துக்கொண்டிருக்கிறானே, என்னவென்று எப்போதேனும் பார்த்தாயா?

பெற்றோருக்கும் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுக்கும் மட்டுமல்ல. திருமேனியார் வீட்டுக் கடைக்குட்டி, ஊருக்கே தம்பி. பின்னாளில் ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும்கூட அதுவே உறவு முறையாக இருக்கும் என்று வேலுப்பிள்ளை நினைத்திருக்க மாட்டார் அப்போது.

தொடரும்...

praveen
15-06-2009, 05:04 AM
ஏன் நண்பர்களே, தமிழ்மன்றத்தில் இப்படி திரிகளை ஆரம்பித்து தள்ளுகிறீர்கள். இதனால் என்ன நண்பரே கிடைக்க போகிறது, முதலில் நீங்கள் ஆரம்பித்த இதன் பாகம் ஒன்றிற்கு ஒருவராவது பின்னூட்டம் இட்டார்களா என்ன?. அடுத்து இரண்டிற்கு தனியாக ஒரு திரி தேவையா. அந்த திரியிலே அடுத்த பதிவாக பதிந்தால் தான் என்ன நண்பரே.

ஏன் இப்படி பிறதள செய்தி கட்டூரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தளத்தின் டேட்டாபேஸை கூட்டுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் சொந்த கைதட்டச்சில் வெளியிடும் ஒவ்வொரு கட்டூரை+திரிக்கும் நான் 100 இபணம் தருகிறேன். உங்கள் பதிவின் இறுதியில் இதனை குறிப்பிடுங்கள்.

Honeytamil
15-06-2009, 06:13 AM
சரி இனி அதே திரியில் தொடர்ந்து பதிகிறேன்.

அமரன்
15-06-2009, 09:34 AM
பாகங்களை ஒரு தலைப்பின் கீழ்க்கொண்டு வந்திருக்கிறேன். ஆவணத்தை படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றியுள்ளேன்.

தகல்வல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தும் உங்களுக்கு நன்றி ஹொனித்தமிழ். சொந்தப் படைப்புகளையும் தந்தீர்களேயானால் மன்றத்துடனான உங்கள் உறவு இன்னும் வலுக்கும். மன்றத்தை மிகவும் ஆழமாக நேசியுங்கள். சொந்தப் படைப்புகளையும் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடும்.

ஓவியா
15-06-2009, 10:20 PM
ஏன் நண்பர்களே, தமிழ்மன்றத்தில் இப்படி திரிகளை ஆரம்பித்து தள்ளுகிறீர்கள். இதனால் என்ன நண்பரே கிடைக்க போகிறது, முதலில் நீங்கள் ஆரம்பித்த இதன் பாகம் ஒன்றிற்கு ஒருவராவது பின்னூட்டம் இட்டார்களா என்ன?. அடுத்து இரண்டிற்கு தனியாக ஒரு திரி தேவையா. அந்த திரியிலே அடுத்த பதிவாக பதிந்தால் தான் என்ன நண்பரே.

ஏன் இப்படி பிறதள செய்தி கட்டூரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தளத்தின் டேட்டாபேஸை கூட்டுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் சொந்த கைதட்டச்சில் வெளியிடும் ஒவ்வொரு கட்டூரை+திரிக்கும் நான் 100 இபணம் தருகிறேன். உங்கள் பதிவின் இறுதியில் இதனை குறிப்பிடுங்கள்.




சரி இனி அதே திரியில் தொடர்ந்து பதிகிறேன்.


வணக்கம் ஹனிதமிழ்.

பிரவீன் கூறுவதுபோல் என்னுடைய அன்பான வேண்டுகோளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களின் மேல் எனக்கு எந்த ஒரு வெறுப்போ அல்லது பகைமையோ இல்லை. கோபம் வேண்டாம்.

பிரவீன் கூறிய தனிதிரி வேண்டம் என்பதன்னை மட்டும், செய்யமாட்டேன் என்று கூறியுள்ளீர்களே தவிர ஏனய விசயங்களுக்கு ஒன்றும் கூறவில்லையே!!!

தயவு செய்து மற்ற தளங்களிலுள்ள செய்திகளை ஒரேடியாக இங்கு கொட்டிக் குவிக்காதீர்கள். அப்படியே அது ஒரு முக்கியமான விசயமாக நீங்கள் கருதினால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் தயவு செய்து நீங்கள் எழுதியது போல் பாவனை காட்டாமால் எழுதியவருக்கும் அந்த வலைபதிவுக்கும் சுட்டியை இணைத்து நன்றி கூருங்கள்.

இந்த பதிவிற்க்கு சொந்தக்காரர் எழுத்தாளர் பா.ராகவன், சரிதானே அப்படியென்றால் அவருடைய பெயரை மறவாமல் குறிப்பிடுங்கள். அவரின் புகழ் அவருக்கே போய் சேரட்டும். :)


நீங்கள் மற்றவர்களின் பதிவுகளை சுட்டிக்காட்டமல் கொடுத்து விடுவதால், உங்களுடைய சுய பதிவுகள்கூட எங்களுடைய பார்வைக்கு வராமல் போய்விடுகிறது...


உங்களுடைய வலைப்பூவையும் சுற்றிப்பார்த்தேன், நன்றாக இருக்கின்றது.
நன்றி.