PDA

View Full Version : மன்னிச்சிடுங்க



ஐரேனிபுரம் பால்ராசய்யா
08-06-2009, 12:38 PM
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் எனது மகள் மதிவதனியோடு சாமி கும்பிட்டு வரலாமென்று தீர்மானித்து இருவரும் ஹோண்டா சிட்டியில் புறப்பட்டோம். நான்கு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது வழக்கமாக நாங்கள் சாமி கும்பிடும் அந்த குலதெய்வக்கோவில்.

சின்னவேடம்பட்டியை தாண்டி செல்கையில் அங்கிருந்த முருகன் கோவிலில் பறையொலி சத்தம் காதைப் பிளக்க, சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது. பெண்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

“ அம்மா எதுக்கு அவ்வளவு தூரத்துல இருக்குற கோவிலுக்க்கு சாமி கும்பிடப்போகணும், வழியில இருக்கிற இந்த கோவில்லயே சாமி கும்பிட்டுட்டு போலாமே!” மதிவதனி கேட்டபோது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் மகள் விடவில்லை ,மீண்டும் கேட்கவே நான் மென்று விழுங்கியபடி அந்த உண்மையைச் சொன்னேன்.

“ அது தாழ்ந்த சாதிக்காரங்க கும்புடுற கோவில், நாம அங்கயெல்லாம் போகக்கூடாது!” என்றேன்.

” அப்போ அந்த கோவில்ல இருக்குற முருகன் சாமியும் தாழ்ந்த சாதி கடவுளா?” மதிவதனி வெகுளியாய் கேட்டபோது எனக்கு சுருக்கென்றிருந்தது.

மனுஷங்கதான் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பிரிஞ்சு கிடக்கிறாங்க, அவங்க தனித்தனியே சாமி கும்பிடுறதால தெய்வங்கள் மேல தவறான எண்ணம் அந்த பிஞ்சு மனதில் பதிந்துவிடக்கூடாதென்று வண்டியை திருப்பி வழியிலிருந்த அந்த முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம் எங்கள் குலதெய்வத்தை மறந்தபடி..

அமரன்
08-06-2009, 05:46 PM
சாதிக்கு அடிக்கும் இன்னொரு சாவுமணி. மணியோசைகள் தேய்ந்து போகின்றனவே தவிர ஆரோக்கியமான மாற்றங்களைக் காணவில்லை. வளரும் பயிர்களின் இத்தைகைய சாட்டை ஒலிகளாவது சாக்கடைச் சாதீயத்தின் கதவுகளை நிரந்தமாக அடைக்கட்டும்.

சமூகத்தை சீர்படுத்தும் கதைக்குப் பாராட்டுகள் ஐபாரா.

சிவா.ஜி
09-06-2009, 12:48 AM
ஆமாம்...சாமிக்குக்கூட சாதி பிரிச்சி சந்தோஷப்படறதுல இந்த மனுஷங்களுக்கு இணை யாருமில்லை.

ஐ.பா.ரா நல்லாத்தான் சுழட்டியிருக்கார் சவுக்கை. பால்யத்திலிருந்தே சாதியில் பேதம் பார்ப்பதை நம் குழந்தைகள் மறக்கட்டும். வாழ்த்துகள் ஐ.பா.ரா.

விகடன்
09-06-2009, 11:05 AM
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்று சொல்வர்கள். குழந்தையின் உருவத்தில் உங்களிற்கு உபதேசம்.

குலத்தெய்வத்தை கும்பிடாவிட்டாலும் தெய்வத்தை கும்பிட்டிருக்கிறீர்கள்.

த.ஜார்ஜ்
09-06-2009, 01:31 PM
குழந்தைகளிடத்தாவது ஏற்றத் தாழ்வற்ற நிலையை பதிய வைப்பது எதிர்காலத்துக்கு நல்லதுதான் ராசய்யா

kavitha
19-06-2009, 05:13 AM
உயர்ந்தது தாழ்ந்தது எதை வைத்து வந்தது? இருப்பதையும் இல்லாததையும் வைத்துத் தானே! இப்போது காலம் மாறிவிட்டது.
இருப்பவர்கள் இல்லாது போனதும், இல்லாதவர்கள் இருப்பதையும் கண்கூடாகக்காண முடிகிறது. மாடமாளிகை குடிசையானதையும், குடிசை மாடியானதையும்
இன்று பார்க்க முடிகிறது... இந்த மாறுதலின் வளர்ச்சி இருவரும் கலக்கும் போது நிகழும். அதற்கு மானுடம் என்ற ஒன்று மட்டும் போதாது.. கல்வியும் செல்வமும் வேண்டும்.
குறுகிய கதையில் சீரிய நெறியைச் சொல்லி இருக்கிறீர்கள் பால்ரா. நமது குழந்தைகளின் மனமாவது அழுக்கண்டாமல் இருக்கட்டும்.