PDA

View Full Version : போ...வராதே..



த.ஜார்ஜ்
05-06-2009, 06:24 PM
ஃபாத்திமா அழகானவள்.அலுக்காத குரலில் அமெரிக்கன் இங்கிலீஷ் பேசுவாள்.உச்சரிக்கிறபோது அவளது உதட்டு சுழிப்பும்,இமை மூடலும் இன்றேறக்குறைய எல்லா ஆண்களையும் விபத்துக்குள்ளாக்கும்.அவள் சிரிப்பு ஒரு சுருக்கு கயிறு.அதில் மாட்டிக் கொண்ட சந்திரமோகன் "உங்க குரல் இனிமையா இருக்கு" என்றான் முதல் நாள்.

அடுத்த நாள் " நீ இனிமையா பேசற." என்றான்.மூன்றாம் நாள், "ஐ லவ் யூம் பாத்திமா..." என்று கிசுகிசுத்தான்.

முப்பத்து மூன்று நாட்களுக்கு பிறகுதான் மைதிலிக்கு தவிப்பு அதிகமாகிப் போனது.சந்திரமோகனை காணவில்லை.

இப்போதெல்லாம் இப்படி சொல்லிக்கொள்ளாமல் போய்விடுதல் சகஜம்தான் என்றாலும் இத்தனை நாட்களாய் போனதில்லை.ஏதோ விபரீதமாய் நிகழப்போகிறதோ?

அந்த ஆரம்ப விரிசல் இப்போது நிதந்தரமாகி விடுமோ?

மோகனுக்கு லிப்-ஸ்டிக் போட்ட மனைவி வேண்டும்.ஸ்லீவ்லெஸ் அணிந்து'பார்ட்டி'க்கு வரவேண்டும். எல்லோரோடும் கைகுலுக்கி ஆங்கிலத்தை நாசி வழியாகப் பேசவேண்டும்.பளீரென்ற பல்வரிசையில்
கிறங்கடிக்கிற மாதிரி சிரிக்க வேண்டும்.இப்படியாக கனவுகள்.

மைதிலியையும் அவள் கண்களையும் பார்த்தபோது சம்மதித்து விட்டான்.
தாலி கட்டிய இரவில் கட்டிலில் இருந்த அவன் ஆங்கிலம் பேச,இவள் நாணத்திலும் பயத்திலும் உறைந்து போய் நின்றாள்.அவன் கனவுகளையும் ஆசைகளையும் சொல்லக் கேட்ட போது, ' என்னடா இது வம்பு ' என்றாகிவிட்டது இவளுக்கு.

எப்படி மறுப்பது என்று குழம்பி கடைசியாய் திக்கி திணறி இவள் சொல்லிமுடித்த போது அவன் பார்த்த பார்வை 'அட பட்டிக்காடே' என்றது.

ஆக ஒரு வெறுப்பின் விதை முதல் நாளே விதைக்கப் பட்டு விட்டது.

அப்புறம் அதுவே வாடிக்கையாக....

"இன்னிக்கு உங்க பிரெண்ட்...பேருகூட..என்னமோ..ஆங்.ஜார்ஜாமே.. கண்ணாடி போட்டுகிட்டு..உங்களை கேட்டு வந்தாரு. நான்தான் உட்காரவச்சி காபியெல்லாம் குடுத்து அனுப்பினேன்." சந்தோசப்படுவான் என்று நினைத்து இவள் சொல்ல சந்திரமோகனுக்கு முகம் கறுக்க கோபம்.

"ஆமா பெரிய கொடை வள்ளல்.கதவு தொறந்திருந்தா கண்ட நாய்களும் நுழையும்...காபி கொடுத்தாளாம்..காபி.."

"என்னங்க அவர் உங்க ஃபிரெண்டுனு..."

"மண்ணாங்கட்டி.பொறுக்கிபய.."

"பார்த்தா அப்படி ஒண்ணும் தெரி-"

--யலீங்க' என்று சொல்லி முடிப்பதற்குள் 'சப்'பென்று கன்னத்தில் அறைந்தான்.ஒரு ஆண் மகனின் கையின் வலுவை அன்றுதான் முதன்முதலில் உணர்ந்த அதிர்ச்சி.பேச்சு எழாமல் பிரமை பிடித்த மாதிரி நெடுநேரம் உட்கார்ந்து.....

இப்படிதான் முப்பத்துமூன்று நாட்களுக்கு முந்தின இதெ மாதிரி ஒரு தினம்.

காலையில் குழாயடிக்கு தண்ணீர் எடுக்க மைதிலி போனபோது, படுக்கையிலிருந்து எழுந்த சந்திரமோகன் கத்தினான்."மைதிலி..மைதிலி.."

பதில் வராமல் போகவே எழுந்து வந்தவனுக்கு,குழாயடியில் இவன் யாருடனோ பெசிக்கொண்டிருப்பது பார்வையில் பட-

ஆவேசமான ஆவேசம்.இறங்கி போய் தலைமுடியை பற்றியிழுத்து, பாதசாரிகளும்,கூட்டமாய் பெண்களும் பார்த்துக் கொண்டிருக்க ,முதுகில் ஓங்கி அடித்தான்."மூதேவிக்கு காலையிலே பெரிய வேலை.குடத்தையும்
எடுத்திட்டு வந்திட்டா.பல் தேய்க்க பிரஸ்ஸை எடுன்னா..ஆளை காணலை.."

மைதிலிக்கு அவமானமாயிருந்தது.சே!என்ன கீழ்தரமான மனிதர்.

"அப்பவே கட்டில் பக்கம் எடுத்து வச்சிட்டேன்" என்று பொங்கி வரும் அழுகையை அடக்கமுடியாமல் இவள் சொல்ல....

"சே.வீடா இது. நரகம்.காலையிலே அழுது வடிஞ்சிகிட்டு..உயிரை எடுத்திரும்பா..சனியன்."

இப்படியாக ஒரு கலவரத்தை ஏர்படுத்தி விட்டு போனவன் சாயுங்காலம் வரும்போது முற்றிலும் மாறியிருந்தான்.மகனை இழுத்து வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தான்.இவளுக்கு கூடமாட ஒத்துழைத்தான். உறங்குகிறபோது கிசுகிசுப்பாய் கூப்பிட்டான்."மைதிலி.."

"பக்கத்திலதானே இருக்கேன் சொல்லுங்க."

"ஸாரிடா.முரட்டுதனமா நடந்துட்டேன் இல்ல..."

மைதிலிக்கு துக்கம் வந்தது.

"பைப் கனெக்சன் கேட்டிருக்கேன்.வந்ததுன்னா பிரச்சனை இல்ல.அப்படியே ஒரு கார் வாங்கிட்டம்னா நானும் லேட்டா கிளம்பி ஆபிஸ் போனா போதும்ல..வாங்கிடவா.."

"தேவைன்னா வாங்குங்க..எதுக்கு என்னை கேட்டுகிட்டு..."

"வாங்கிடலாம் ஆனா கொஞ்சம் பணம்...உங்க அண்ணன்கிட்ட கேட்டு..."

மைதிலி முறைத்தாள்.

"...அதுகூட வேண்டாம்.உன் நகையில கொஞ்சம் எடுத்தாலே போதுமே. என்ன சொல்ற.."

இவளுக்கு புரிந்தது.இதற்குதான் இந்த வேட்டை நாய் நாக்கை தொங்க போட்டுக்கொண்டிருந்ததோ.

"அப்படி ஒரு கார் நமக்கு தேவையில்ல."பயந்து பயந்துதான் சொன்னாள்.

"பாத்தியா பாத்தியா பேச்சு மாறுது.சும்மா பீரோலதானே வச்சிருக்க. அவசரத்துக்கு உதவலேன்னா அது எதுக்கு.."

"அவ்வளவு பெரிய அவசரமா இப்போ வந்திருக்கு."

சந்திரமோகன் அதற்குமேல் பேசவில்லை.'உங்கிட்ட பேசி பிரயோஜனமில்லை' என்றபடி படுத்தான்.இவளுக்கு பரிதாபமாககூட இருந்தது.'வீணாக அடம் பிடிக்கிறேனோ'

உறங்குமுன் " நாலு மணிக்கு எழுப்பி விடு.மெட்ராஸ் போனும் " என்று சொல்லியதை நம்பி, எழும்பி இவள் பார்த்தபோது அவனையும் காணவில்லை.பீரோவிலிருந்த நகைகளையும் காணவில்லை.

சந்திரமோகன் அலுவலகம் மதிய உணவு நேரத்தில் கலகலப்பாக இருந்தது.டெஸ்பாட்ச் ரங்கசாமியிடம் ஆல்பர்ட் கேட்டான்..." அப்புறம்" கதை கேட்கும் ஆர்வத்தோடு குரல் வந்தது.

" அப்புறம் என்ன.இவனை அவ மயக்கி கல்யாணமும் பண்ணிகிட்டா. நம்ம பாத்திமாவை தெரியாதா..அவ எப்பவும் போல அப்படி இப்படிதான் நடப்பா.இவனுக்கு பொறுக்க முடியலை.சொல்லிப் பார்த்தான். கேட்கலை. கண்டிச்சான்.அவ போடான்னு சொல்லிட்டு போயிட்டா."

"அய்யய்யோ.."

"அதுக்கு ஏன் வருத்தபடற.அந்த பொண்ணு மைதிலிய நினைச்சாதான் பாவமா இருக்கு.இந்த பாவிபய அவ நகைகளைகூட எடுத்திட்டுபோய் அவளுக்கு குடுத்திருக்கான் போல.. நெத்துதான் பார்த்தேன்.எல்லா விசயத்தையும் சொல்லி கேஸ் போடும்மான்னு சொல்லியிருக்கேன்."

அன்று காலை

சன்னலில் கண்ணாடி வைத்து தலை வாரிக்கொண்டிருந்த மைதிலிக்கு தெருவில் தயங்கி தயங்கி நடந்து வரும் சந்திர மோகன் தெரிந்தான்.

நெஞ்சு படபடத்தது. நாலு பெரை கூப்பிட்டு அடிக்க சொல்லலாம் போல தோன்றியது.

சர்வசாதாரணமாய் வாசல் கடந்து நுழைந்தவனை " நில்லுங்க அங்க" என்று அதிர கத்தினாள்.அவன் வியப்போடு "மைதிலி" என்றான்.

"என்ன வேணும் உங்களுக்கு.எதுக்கு வந்தீங்க இப்ப.உயிரோட இருக்கமான்னு பார்க்கவா."

"என்னை மன்னிச்சிடு மைதிலி."

"அதனால என்ன லாபம். நானும் இன்னொருத்தன் கூட போயிட்டு ஆசையெல்லாம் தீர்ந்து அலுத்து போய் வந்து மன்னிச்சிடுங்கன்னு சொன்னா ஏத்துகிடுவீங்களா.கேட்கிறேன் வேசிதனத்தை ஆம்பிளைங்க செய்தா மட்டும் சரியாயிடுமா என்ன."

"என்னடி நீ ரொம்பதான் பேசிட்டு போற..விட்டேன்னா மூஞ்சி பேந்திரும்.."

"ஐயா உங்களோடு பேசணும்னு யாரும் உங்களை வருந்தி அழைக்கலை. அப்படியே பேசாமா வந்த வழியே போயிருங்க."

"என்ன சும்மா துரத்துற. நான் உன் புருசண்டீ.."

"வெட்கமாயில்ல உங்க வாயால அத சொல்றதுக்கு.எந்த முகத்தோட உன் கூட இனி வாழ முடியும். அடுத்தவன் புருசன்கூட இருக்கிற மாதிரியில்ல எனக்கு தோணும்.என்னால அது முடியாதுப்பா.போயிட்டு வாங்க.வேண்டாம் போயிட்டு.. வரவேண்டாம்"

கதவை இழுத்து சாத்திக் கொண்டாள்.

கா.ரமேஷ்
06-06-2009, 06:51 AM
அருமை தோழரே...!

கதையின் போக்கு முடிவு அருமை... வாழ்த்துக்கள்....!

அமரன்
06-06-2009, 09:05 AM
ஃபாத்திமா அமெரிக்கன் ஆங்கிலத்தை அலுக்காமல் கதைப்பது போல் நானும் உங்களை அலுக்காமல் பாராட்டலாம் ஜார்ஜ். உங்கள் எழுத்துவன்மையின் வல்லமை அந்தளவு அற்புதம்.

இப்படியான புரட்சிப் பெண்கள் புதுமைப்பெண்களாகத் திகழ சில விலைகளைக் கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுத்தால் இப்படியான மனிதர்கள் திருந்தக் கூடும். ஆனால் மைதிலிகள் சிலர்தான் உலகில் உதிக்கிறார்கள்.

கதையின் நிறைவாக* மைதிலி அறைந்து சாத்திய கதவு அந்தமாதிரியான ஆண்களின் முகத்தில் நிச்சயம் அறையும். பெண்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்குமா?

பா.ராஜேஷ்
06-06-2009, 09:25 AM
வசீகரமான புரட்சியான கதை. பெண்கள் உண்மையில் இவ்வாறு துணிவுடன் இருந்தால் மிக நல்லதே! இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெண்களின் வல்லமையும் மிக அவசியம்!

பூமகள்
09-06-2009, 11:56 AM
என்னவென்று பாராட்டுவது உங்களை.. நிதர்சன நிகழ்வை வெகு அருமையாக சொல்லியிருக்கிறது கதை. மைதிலி மாதிரியான பெண்கள் இருந்தால் உலகம் உய்யும்.

இக்கதை படித்ததும் என் உறவினர் ஒருவரின் வாழ்வில் நடக்கும் கொடுமைகள் நினைவுக்கு வந்துவிட்டன. கடந்த நான்கைந்து வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது. அப்பாவிப் பெண்ணான அவர் தன் மகளுடன் இப்போது தந்தை வீட்டில்.. நன்கு படித்து பெரிய வேலையில் இருந்தும் உலக நடப்பு தெரியாமல் இருக்கும் அபலைப் பெண்..

விவாகரத்து கொடுக்கவும் மனமின்றி.. சேர்ந்து வாழவும் மனமின்றி.. குழப்பத்தில் தவிக்கும் பெண்.. குழந்தை அப்பா வேண்டும் என்கிறாள்.. விவாகரத்து கொடுத்தால் அடுத்த திருமணம் செய்து சந்தோசமாக இருப்பார் என்று ஒரு தவிப்பு..

இத்தனையும் மனதை அழுத்த பல வருடங்களாக எந்த நெருங்கிய உறவினர் வீட்டுக்கு கூட வராமல் இருக்கிறார்.

மைதிலி மன நிலை வந்துவிட்டால் இத்தனை பிரச்சனை இருக்காதல்லவா?? அத்தகைய
துணிவை பல நேரங்களில் கல்வியும்,வேலையும் கூட தர மறுத்துவிடுவது வேதனை...

நான் பலமுறை யோசித்தது.. இங்கு கதை வடிவில் வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. பாராட்டுகள் ஜார்ஜ். :)

த.ஜார்ஜ்
09-06-2009, 01:49 PM
அன்புடன் கருத்து பகிர்ந்த நட்பு உள்ளங்களுக்கு நன்றி.

இது வெறும் கற்பனை கதையல்ல.என் இல்லத்தருகே நான் சந்தித்த ஒரு நிகழ்வு.கதை களனை மட்டுமே மாற்றியிருக்கிறேன். நிஜ மைதிலி ஆரம்ப கல்வியோடு படிப்பை விட்டவள்.கூலி வேலை.மணமுடித்தவன் பல நாள் கழித்து பண்ட பாத்திரங்கள் வாங்கிக் கொண்டு ஒருனாள் வந்தபோது அவன் கொண்டு வந்த பொருட்களை வீசியெறிந்து அவனை விரட்டிய அந்த மூர்க்கம் என் எழுத்தில் வரவில்லை.பூமகள் குறிப்பிட்ட மாதிரி படித்தவர்களுக்கே வராத துணிவு அவளிடம் கண்டதன் விளைவுதான் இக்கதை

கதை புரட்சியானது என்று நீங்கள் உணர்ந்தால் அது அந்த பெண்ணால் ஏற்பட்டதுதான்.

நேசம்
09-06-2009, 01:53 PM
மைதிலையை புதுமைப்பெண்ணாக பார்க்கும் போது சந்தோசம்.ஆனால் தனக்கான வாழ்க்கைய் தேடிக்கொள்ளும் போது புதுமைபெண் முழுமையடைகிறது.எனக்கு தெரிந்த ஒரு பெண்மனி தனது கணவரின் தவறுக்காக அவளுடன் சேராமக் வாழ்கிறாள்.மறுவாழ்க்கையை தேடிக்கொள்ளாத அவளை அவளின் சுற்றதார் மன நோகும்படி பேசிகிறார்..ஒன்று தனது கணவரை மன்னித்து ஏற்று கொண்டு இருக்க வேன்டும் அல்லது மறுவாழ்க்கை அமைத்து இருக்க வேன்டும்.

சிவா.ஜி
09-06-2009, 02:56 PM
நல்ல நடையுடன், சிறந்த செய்தியையும் தாங்கி வந்திருக்கும் கதை. மைதிலிகள் அதிகமாகும்போது சந்திரமோகன்கள் குறைந்துவிடுவார்கள்.

வாழ்த்துகள் ஜார்ஜ்.

ஓவியன்
09-06-2009, 03:56 PM
நல்ல கருத்துடன் இயைந்த கதையை அழகான நடையில் தந்த ஜார்ஜூக்கு என் மனதார்ந்த பாராட்டுக்களும்...

மனங்கவர் பதிவாளர் பதவி தகுந்த இடத்தினைத்தான் சென்று சேர்ந்துள்ளது..!! :icon_b:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
10-06-2009, 01:07 PM
பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் துணிச்சல் மிகுந்த கதாபாத்திரம் படிப்பவரை வெகுவாக கவர்கிறது. பாராட்டுக்கள்

த.ஜார்ஜ்
12-06-2009, 01:35 PM
பின்னுட்டமிட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி

அறிஞர்
12-06-2009, 07:35 PM
அருமை நண்பரே...
தவறு என்பதை பொதுவான நோக்கில் பார்க்கப்படவேண்டும்.
பாரதி கண்ட புதுமைபெண்கள் பலர் எழும்பவேண்டும்.

த.ஜார்ஜ்
13-06-2009, 02:06 PM
அறிஞர்.கதை படித்ததற்கு நன்றி

kavitha
19-06-2009, 04:42 AM
கதைக்காக மட்டுமின்றி நிஜ மைதிலிக்காகவும் ஒரு சபாஷ்!
லாவகமாக எழுதுகிறீர்கள் ஜார்ஜ். அதற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தொடர்ந்து எழுதுங்கள்.


எனக்கு தெரிந்த ஒரு பெண்மனி தனது கணவரின் தவறுக்காக அவளுடன் சேராமக் வாழ்கிறாள்.மறுவாழ்க்கையை தேடிக்கொள்ளாத அவளை அவளின் சுற்றதார் மன நோகும்படி பேசிகிறார்..ஒன்று தனது கணவரை மன்னித்து ஏற்று கொண்டு இருக்க வேன்டும் அல்லது மறுவாழ்க்கை அமைத்து இருக்க வேன்டும்.

இல்லை நேசம். அவர் எடுத்திருக்கும் முடிவுதான் சரி. ''ஒருவனுக்கு ஒருத்தி'' கலாச்சாரம் சரி என்றால் அவருக்கு இவர் விதித்திருக்கும் மாயத்தண்டனை சரியானதுதான்.

த.ஜார்ஜ்
19-06-2009, 04:39 PM
அன்புள்ள கவிதாவுக்கு

அக்கறை கொண்ட உங்கள் பகிர்வுக்கு நன்றி

நேசம்
20-06-2009, 07:14 AM
இல்லை நேசம். அவர் எடுத்திருக்கும் முடிவுதான் சரி. ''ஒருவனுக்கு ஒருத்தி'' கலாச்சாரம் சரி என்றால் அவருக்கு இவர் விதித்திருக்கும் மாயத்தண்டனை சரியானதுதான்.

இல்லை சகோதரி.தனது கணவரை சேர்த்து கொள்வதில் உள்ள முடிவை தானே எடுக்கும் பெண்ணை பாராட்டலாம்.ஆனால் மறுவாழ்க்கை அமைத்து கொள்ளும்போது தான் அவள் புதுமை பென்னகிறாள்.இந்த விசயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி இலக்கணம் மிரப்படுவதில்லை.