PDA

View Full Version : ‘போர் முடிந்தது, போர் வாழ்க!'--இந்திரா பார்த்தசாரதிபாரதி
05-06-2009, 03:49 PM
ஈழ விடுதலைப் போரின் அடையாளங்களாக எஞ்சி நிற்பன போராளிகளின் அஸ்தி, அப்பாவிமக்களின் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும் குதறிப் போன பட்டினி உடல்கள்.

இவ்'வெற்றியை' க் கொழும்புவில் பிரும்மாண்டமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் சிங்கள வீரச் சிங்கங்கள். இலங்கையில் விபீஷணனின் வம்ஸம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளவர்களும் பிரபாகரனின் வீழ்ச்சியைக் கொண்டாடியிருக்கக் கூடும்.

இனி, பிராபகரன் செய்தது சரியா, தப்பா என்று ஆய்வதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான், மனிதாபிமானத்திலும், மக்களின் அடிப்படை உரிமைகளிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட உலகளாவிய மக்களை எதிர் நோக்கியுள்ள பிரச்சினை.

கொழும்புவில் பௌத்த பிக்குகளின் ஆசிகளுடன் சிங்களர்கள் இந்த ‘மகத்தான வெற்றியை'க் கொண்டாடிய விதத்தை தொலைக் காட்சியில் பார்த்தபோது, நாம் இருண்ட மத்தியக் காலகட்டத்துக்குப் ( Dark medieval ages) போய்விட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஆனால் இக்காட்சி ஒன்றை மட்டும் உறுதியாக உணர்த்தியது: சிங்களர்களும் தமிழர்களும் இலங்கையில் இனி எக்காலத்திலும் சம உரிமைகளுடன், ஒட்டு உறவு வைத்துக் கொள்ள முடியாது என்பதுதான். இதற்கு யார் காரணம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. நிதர்சன உண்மையைக் கண்முன் நிறுத்தி ,இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமும், பிரச்சினைக்குத் தீர்வும் காண முயல்வதுதான் உலகத் தமிழர்களுடைய கடமை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அநீதி இழைக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் உலகம் முழுவதும் பரவி, தங்கள் விடுதலைப் போராட்டத்தை அராபத் தலைமையில் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்றைய அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் அரசியல், வியாபார ரீதியாக என்ன உறவு கொண்டிருந்தாலும், பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், ‘புலம் பெயர்ந்த பாலஸ்தீனிய சுதந்திர அரசாங்கத்துக்கு' அங்கீகாரம் அளித்தன. இந்தியாவும் இவ்வரசுக்கு அங்கீகாரம் அளித்ததினால், சுதந்திர பாலஸ்தீனிய தூதுவரகம் தில்லியில் இருந்தது.

ஆனால், அதே இந்தியா, இப்பொழுது, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக, சிங்களர்களுடைய, சிங்களர்களுக்காக, சிங்களர்களால் நடத்தப்படும் அரசாங்கம் கண்மூடித்தனமான கொலை வெறியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவ்வளவு நடந்த பிறகு, ஒரு சமாதான நடவடிக்கை போல், இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் பேச தன் தூதுவர்களை அனுப்பி வைக்கிறது! ராஜபக்சவும் இனி இலங்கைத் தமிழர்களுக்குப் பொற்காலம் போல், வடக்கு, கிழக்கு ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடத்தப் போவதாக ‘பாவ்லா'காட்டுகிறார். இச்' சுமுகச்' செய்தியை, ஏற்கனவே அரசியல் பேரத்தில் மனம்

நொந்திருக்கும் தமிழக முதல்வரிடம் சொல்ல வருகிறார் இந்திய அரசாங்கத் தூதுவர்! யார் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை.

வன்னியில் போர் முடிந்துவிட்டது. ஆனால் இனிமேல்தான் ஈழப்போர் உலக அரங்கில் தொடங்குகிறது. மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறை இப்பொழுது போர்க்கோலம் பூண்டிருப்பது நம்பிக்கை தரும் செய்தி. இனி இது இலங்கைத் தமிழர்களை மட்டும் சார்ந்த விவகாரம் இல்லை. உலகத் தமிழினத்தைச் சார்ந்த விவகாரம்.

ஆனால், இது வன்முறையைத் தூண்டும் கொரில்லாப் போராக மட்டும் இருந்தால், சர்வ தேச அரங்கில், நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் நேர்மையான மற்றைய இன மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது சிரமமான காரியம். இலங்கையில் இனித் தமிழின மக்கள் சிங்களர்களுடன் சரிநிகர் சமானமாக வாழ இயலாது என்பதைப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழின அறிவுஜீவிகளும், அவர்களுடன் தோள் நின்று மற்றைய நாட்டுத் தமிழர்களும் உலக நீதி மன்றங்களில் சித்தாந்தப் போர் நிகழ்த்தியாக வேண்டும். அயல் நாட்டுப் பத்திரிகைகளில், உலகச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற அறிஞர்களால் இப்பிரச்சினை பற்றி எழுதப்படும் நடுநிலை பிறழாத அறிவுசார் கட்டுரைகள் வருவதற்கான ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும். பிரபாகரன் மீது சுமத்தப் படும் வன்முறைக் குற்றங்களுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான அளவுக்கு, ஹிட்லர் யூதப் பிரச்சினைக்குக் கண்டது போல், தமிழ்ப்பிரச்சினைக்கு ‘இறுதித் தீர்வு' காண, இனப் படுகொலை செய்திருக்கிறார் ராஜபக்ச. இந்தப் படுகொலைக்குத் துணை போயிருக்கிறது, மகாத்மா காந்தி பிறந்த பாரதத்திருநாடு! இச்செய்திகள் உலக அரங்கில் சரியான முறையில் அம்பலமாக வேண்டும்.

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறை, இந்திய அரசியல் கட்சிகள் இப்பிரச்சினையை அவைகளுடைய சுய நலத்துக்காகத்தாம் இது வரைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனவே தவிர, அவைகளுக்கு ஈழத்தமிழர் பற்றிய உண்மையான அக்கறை எதுவும் கிடையாது என்பதை உணர வேண்டும். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தப் போலி நாடகம் வெவ்வேறு வடிவமைப்பில் அரங்கேறி வருகின்றது.

ஈழத் தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினருக்கு வெவ்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் ஏற்பட்டிருக்கும் தொடர்புகளின் காரணமாக, அளப்பரும் ஆற்றல்கள்

கைக்கூடியிருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இதுதான்.

நூற்றாண்டு நூற்றாண்டுக் காலமாகப் புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் தங்களுக்கென்று ஒரு தாய்த் திரு நாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப் படுத்தியிருக்கிறது என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி: தமிழ்ஸ்கைநியூஸ்

செல்வா
17-06-2010, 07:20 AM
இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்கள் எப்போதுமே ஆழ்ந்த அவதானிப்புக் கொண்டவை. என்னைக் கவர்ந்தவை. மூத்த எழுத்தாளரின் வழிகாட்டுதல் சரியாகவே இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி அண்ணா.