PDA

View Full Version : சமீபத்தில்



umakarthick
05-06-2009, 12:42 PM
சமீபத்தில் எழுதிய ஒரு கவிதை:

நீ நான்:
--------

சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும்
இவன் என் மனதிற்குள்
புகுந்து விடுவான் என மிக
ஜாக்கிரதையாக நீ

நீ எப்போது அஜாக்கிரதையாக
இருப்பாயென காத்திருக்கும் நான்



சமீபத்தில் படித்த ஒரு கதை :)

வார்த்தைகளின் வலிமை
-----------------------

முனிவர் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண் உடல்நலமில்லாத குழந்தை ஒன்று அருகில் இருப்பதாகவும், அதை குணமாக்க உதவுமாறும் வேண்டினாள்.

முனிவரும் அதற்கிணங்கினார். அவரைப்போன்றவரை காண்பது அரிதென்பதால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது.

அந்தப்பெண் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.

"எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா..?" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.

"உனக்கு அது குறித்து என்ன தெரியும்..? நீ ஒரு அறிவில்லாத முட்டாள்" என முனிவர் அம்மனிதனுக்கு பதிலுரைத்தார்.

அந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் அவமானப்பட்டதாக நினைத்தான். அவனுடைய உடல் சூடாகி முகமெல்லாம் சிவந்தது. அந்த முனிவரை திட்ட அல்லது அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.

புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், " நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டார்.

வார்த்தைகளின் வலிமை அந்த மனிதனுக்கு புரிந்தது.

சமீபத்தில் படித்த ஒரு கவிதை:

மழையைப் பற்றியும்,
வெயிலைப் பற்றியும்
ஆய்வு மேற்கொள்பவன்
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .
மழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை
ஒரு மழை நாளில் நனைந்தபடியே
மேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .
அதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .
மேலதிகாரி
சில நாட்களுக்குப் பின்னர் அக்கோப்பை
எடுத்துப் பார்க்கையில்
மழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்
உலர்ந்து வெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .
வெயில் பற்றிய அவனது
ஆய்வுக் குறிப்புகளோடு அலுவலகத்திற்குள்
அவன் நுழையத் துவங்கியதும்
வெயில் காணாமல் போய்
குறிப்புகளின் மேல் நிழல் படியத் துவங்கி விடுகிறது .
பைத்தியத்தைப் போல கத்துகிறான் .
வெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று
ஒரு காகிதத்தை எடுத்து
மழை பற்றிய ஆய்வுக் குறிப்புகளைச்
சேகரிக்க நீர்த்தொட்டியொன்றையும் ,
வெயில் பற்றிய ஆய்வுக் குறிப்புகளைச்
சேகரிக்க மேல் கூரையற்ற சிறிய அறையொன்றையும்
கட்டித்தருமாறும்
அரசாங்கத்திடம் விண்ணப்பித்தான் .