PDA

View Full Version : "பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரிselvamurali
05-06-2009, 07:10 AM
http://i287.photobucket.com/albums/ll129/selvamurali/badri.png

"கிழக்கு பதிப்பகம்" தமிழ் புத்தக உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி பட்டிதொட்டியெங்கும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை கிராமத்தின் கடைக்கோடிகளில் உள்ள டீ கடைகளிலும் காணலாம். அதோடு பேசும் புத்தகம் , NHM மொழி சார்ந்த தட்டச்சு மென்பொருள் என்று பல்வேறு சேவைகளை அளித்து வருகின்றனர் கிழக்கு பதிப்பகம் நிறுவனத்தினர் . இதோ இது குறித்து பகிர்ந்துகொள்கிறார் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி .

தங்களைப் பற்றிய சிறு குறிப்பு; பதிப்புலகில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?

வளர்ந்தது நாகப்பட்டினத்தில். படித்தது ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் கார்னல் பல்கலைக்கழகம், அமெரிக்கா. பின்னர், Cricinfo என்ற இணையத்தள நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தேன். கிரிக்இன்ஃபோவில் பல ஆண்டு காலம் பணியாற்றியபின், 2004-ல் நியூ ஹொரைசன் மீடியாவை நானும், சத்யாவும், ஆனந்தும் சேர்ந்து உருவாக்கினோம்.

வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் பதிப்புத்துறை மிகவும் வலுவாக இருக்கும். புத்தகங்கள் மூலமாகத்தான் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை. பதிப்புத் தொழில் மிகவும் பின்தங்கியே உள்ளது. இந்தியா அறிவுசார் சமூகமாக மாறவேண்டும் என்றால் அதற்கு பதிப்புலகம் விரிவாகவேண்டும் என்பது மிக மிக அவசியம். அந்தக் காரணத்தாலேயே இந்தத் துறையில் பெரும் வாய்ப்பு உள்ளது என்று இதனைத் தேர்ந்தெடுத்தோம்.

இணையத்தின் வளர்ச்சி பிரம்மாண்டமாய் இருக்கிறது. காட்சி ஊடகங்களின் வளர்ச்சி அதற்குப் போட்டியாக இருக்கிறது. இப்படியான சூழலில் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டு வருவதே கடினமான காரியம். ஆனால் தொடங்கிய குறுகிய காலத்திலேயே கிழக்கு அதிகப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. இதற்கென தனி ஆய்வு ஏதும் நடத்தினீர்களா?

இணையம், காட்சி ஊடகங்கள் ஆகியவை எந்தக் காலத்திலும் புத்தகங்களுக்கு மாற்று அல்ல. இன்றும், நாளையும் புத்தகங்கள் இருக்கும். வாசிப்புப் பழக்கம் குறைகிறது என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. நிச்சயமாக ஒரு மனிதரின் தினசரி நடவடிக்கையில் ஒரு பகுதியை தொலைக்காட்சியும், இணையமும் பிடுங்கிக்கொள்கின்றன என்பது உண்மையே. ஆனால் மிச்ச நேரத்தில் படிப்புக்கு இடம் ஒதுக்குமாறு புத்தகங்கள் கவர்ச்சியுடையவையாக இருக்கவேண்டும்.

தொடங்கிய குறுகிய காலத்தில் கிழக்கு அதிகப் புத்தகங்களை வெளியிடவில்லை! முதல் இரண்டு வருடங்களில் வருடத்துக்குத் தலா 50 புத்தகங்களைத்தான் வெளியிட்டோம். அதற்கு அடுத்த மூன்று வருடங்களில் 1000 புத்தகங்கள். ஆக, சந்தையை நன்கு புரிந்துகொண்டு, மக்கள் தேவை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, மக்கள் நிறைய துறைகளில் எண்ணற்ற புத்தகங்களை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டு புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தோம்.

நிறைய புத்தகங்கள் வெளிவருவதற்கு உதவும் வகையில் நிறைய ஆசிரியர்களை வேலைக்குச் சேர்த்துக்கொண்டோம்.

கதை, கவிதை தவிர நிகழ்வுகளையும், வாழ்க்கைக் குறிப்புகளையும் வெளியிட வேண்டும் என்ற திட்டம் உருவானது எப்படி?

நாங்கள் ஆரம்பித்ததே வாழ்க்கை வரலாறு, அரசியல், பொது அறிவு, வரலாறு ஆகியவற்றை அதிகமாக வெளியிடும் நோக்கத்தில்தான். கவிதைகள் வெளியிடுவது கிடையாது. கதைகள் கொஞ்சமாக.

இந்தத் திட்டம் ஆரம்பத்திலேயே தெளிவாக இருந்தது. மக்களுக்கு வேண்டிய கதைகள் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் கிடைக்கின்றன. அவர்களுக்கு செய்தித்தாள்களிலோ, தொலைக்காட்சியிலோ கிடைக்காதது அறிவு சார்ந்த விஷயங்கள்தான். எனவே அதைத்தான் தரவேண்டும் என்று முடிவுசெய்தோம்.

தங்களின் சிலவெளியீடுகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன. அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

இதுவரை எங்கள்மீது நான்கு குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இரண்டு புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் இணையத்தில் இருந்த ஒரு புகைப்படம், ஒருவரது ஓவியம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டவை என்பது முதல் இரண்டு குற்றச்சாட்டுகள். இரண்டும் உண்மையே. அந்தத் தவறுகள் தெரியவந்ததும் புகைப்படம் எடுத்தவர், ஓவியம் வரைந்தவரைத் தொடர்புகொண்டு, தவறை ஏற்றுக்கொண்டு, மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம்.

மூன்றாவது, ஒரு குறிப்பிட்ட இணையக் கட்டுரைத்தொடரிலுருந்து நிறைய பகுதிகள் எடுத்தாளப்பட்டு ஒரு புத்தகம் எழுதப்பட்டது. இந்த விஷயம் தெரிய வந்தது. அந்தப் புத்தகத்தை நிறுத்திவிட்டு, அச்சாகிக் கடைகளுக்குச் சென்ற அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற்றுவிட்டோம்.

நான்காவது, எங்களது ஒரு புத்தகத்தின் பின் இணைப்பாக, தமிழாக்கம் செய்யப்பட்ட முல்லை பெரியாறு தொடர்பான இரு ஆவணங்கள் அனுமதி பெறாமல் அப்படியே எடுத்தாளப்பட்டது என்பது. இதுவும் தகவல் அளவில் உண்மைதான். இது தெரிய வந்ததும், இதையும் அடுத்த எடிஷனில் மாற்றிவிட்டோம். தமிழாக்கம் செய்தவர் எங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சட்டப்படி, நீதிமன்ற தீர்ப்புகள், கெஜட்டில் பதிவான ஆவணங்கள் ஆகியவற்றின் மொழியாக்கங்களுக்கும் காப்புரிமை என்பது கிடையாது. சட்டரீதியாக எங்கள் மீது எந்தத் தவறும் கிடையாது என்பதை குறிப்பிட்ட சட்டங்களைச் சுட்டிக்காட்டி பதில் அனுப்பினோம். ஆனால் தார்மீக ரீதியாக அடுத்த எடிஷனில் குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்டு ஒரிஜினல் ஆங்கில வடிவத்தை அப்படியே கொடுத்தோம்.

ஒரு பெரிய நிறுவனமாக இருக்கும்போது, வேலை செய்பவர்களுக்கு பல விஷயங்கள் தெரியாமல் போய்விடுகின்றன. எழுத்தாளர்களும் சிலமுறை தவறுகள் செய்துவிடுகின்றனர். ஆனால் குற்றம் சொல்பவர்கள் ‘கிழக்கு பதிப்பகம்' மீது மட்டும்தான் குற்றம் சொல்கின்றனர். இதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அடித்து உதைக்க, ஒரு ஐகான் வேண்டும். கிழக்கின் வளர்ச்சி தரும் பொறாமையும், கோபமும்தான், இவர்கள் எங்கு தவறு செய்வார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கிறது. பொதுவாகவே இது இந்தியர்களின் தனிப்பட்ட குணாதிசயம்.

1300 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் ஒரு நிறுவனத்தில், நடந்த சில தவறுகளை வெளிப்படையாக எங்களால் பேசமுடியும். மேற்கொண்டு தவறுகள் நேராமல் இருக்க என்ன செய்துள்ளோம் என்பதையும் சொல்லமுடியும். இன்று, காசு கொடுத்து படங்கள் வாங்கி அவற்றைத்தான் அட்டையிலும் உள்ளும் போடுகிறோம். ராய்ட்டர்ஸ், ஷட்டர்ஸ்டாக், தி ஹிந்து என காப்புரிமை உள்ள படங்களை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். படங்களுக்கு என்றே ஆண்டுக்கு சில லட்ச ரூபாய்கள் செலவாகின்றன. தமிழ்நாட்டில் வேறு யார் இப்படிச் செய்கிறார்கள் என்று எந்தப் பதிப்பகத்திலும் போய் விசாரித்துப் பாருங்கள்.

மற்றபடி, திருடிச் சம்பாதிக்கும் கிழக்கு என்ற தலைப்பில் இணையத்தில் எக்கச்சக்கமான அவதூறு தளங்களை நீங்கள் பார்க்கலாம். அவற்றைக் கண்டும், காணாமலும் விட்டுவிடுகிறோம்.

இதைத்தவிர, எங்களுக்குக் கிடைத்துள்ள சில பாராட்டுகள்: "டவுன்லோட் எழுத்து", "விக்கிபீடியாவை காப்பியடித்து தமிழாக்கம் செய்து புத்தகம் ஆக்குகிறார்கள்" ஆகியவை. அப்படியெல்லாம் செய்து புத்தகம் வெளியிடமுடியும் என்பது ஆச்சரியம்தான்.

கடைக்கோடித் தமிழகத்தின் கடைகளிலும் கிழக்குப் புத்தகங்கள் விற்பனைக்குக் காணக் கிடைக்கின்றன. இந்த யோசனை வந்தது எப்படி?

முதலில் புத்தகக் கடைகள் எல்லாவற்றிலும் புத்தகங்கள் கிடைக்குமாறு செய்தோம். அத்துடன் நிற்கவில்லை. அடுத்து உணவகங்கள், துணிக்கடைகள், பெட்டிக்கடைகள் என்று எங்கும் புத்தகங்கள் கிடைக்குமாறு செய்தோம். புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் புத்தகங்கள் அனைத்து ஊர்களிலும் இருக்கவேண்டும் அல்லவா? அதற்கான முயற்சிகளில் அடுத்து இறங்கினோம். ஆனால் இன்னும் செய்யவேண்டியது நிறைய உள்ளது.

அதனால்தான், இப்போது சென்னையில் பகுதி பகுதியாகச் சென்று புத்தகக் கண்காட்சி மூலம் விற்பனை செய்கிறோம். அப்போதுதான் இன்னும் எவ்வளவு பேருக்கு நியூ ஹொரைசன் மீடியாவின் பல்வேறு பதிப்புகள் பற்றி தெரியவே இல்லை என்னும் விஷயம் தெரிய வருகிறது. புத்தகங்களைப் பார்த்தவுடன் அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இதுபோன்ற கண்காட்சியை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்வோம்.

என்ன மாதிரியான பொருளடக்கத்துடன் புதிய எழுத்தாளர்கள் தங்களை அணுக முடியும்? அவர்களுக்கு நீங்கள் சொலலும் ஆலோசனைகள் என்ன?

எங்களது ஆர்வம் புனைவல்லாத அறிவுசார் துறைகளில்தான் உள்ளது. எழுதுபவருக்கு என்ன தேவை?

1. நல்ல எழுத்து வளம், நடை. வாசகர்கள் படிக்க விரும்பும் வசீகரமான, எளிமையான நடை மிக மிக அவசியம்.

2. ஏதாவது துறையில் நல்ல அறிவு. மருத்துவர்கள் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் எழுதலாம். மற்றவர்கள் அவரவர் துறைகளில். வாழ்க்கையில் நிறைய சாதித்தவர்கள் தங்கள் சாதனையைப் பற்றி எழுதலாம். சுய அனுபவம் என்பதே மிக முக்கியமான ஒன்று. அதன்மூலம் அவரவர் வாழ்ந்த காலத்தின் வரலாறும் வெளிப்படும்.

3. ஒரு பத்திரிகை நிருபருக்கு உரிய ஆர்வம். பல நேரங்களில் எழுதப்படும் புத்தகத்துக்குத் தேவையான தகவல்களைப் பெற, நிறைய ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டும். அதற்கான திறன் இருக்கவேண்டும்.

பதிப்புத் துறையில் கால் பதிக்க நினைப்பவர்களுக்கு தாங்கள் சொல்லும் ஆலோசனை?

பதிப்புத் தொழில் என்பதை குடிசைத் தொழிலாக, நானும் என் மனைவியும் சேர்ந்து செய்கிறோம் என்று ஆரம்பிப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியாது. அதற்கான கட்டுமானம் தமிழகத்தில் இல்லை. எனவே தொழிலாக ஆரம்பிக்க விரும்பினால், நல்ல நோக்கத்துடன், நிறையப் பணமும் தேவை. திட்டமிட்டு, வளர்ச்சிப் பாதையில் செல்ல, ஆசிரியர்கள், காப்பி எடிட்டர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகிய முக்கியமான புரொஃபஷனல் அலுவலர்கள் தேவை.

பதிப்புத் துறையில், வரும் காலங்களில், வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுவார்கள். புத்தகத்தை எடிட் செய்வது என்பது மிகப்பெரிய துறையாக மாறும். அச்சாகும் புத்தகங்களில் எண்ணிக்கை மிக அதிகமாகும். நல்ல தமிழ் அறிவு உடையவர்கள், தமிழில் நன்றாக எழுதத் தெரிந்தவர்கள், தமிழ் எழுத்தைச் சீர் செய்யக்கூடிய, இலக்கணம் நன்கு அறிந்தவர்கள் எனப் பலருக்கும் நிறைய வேலைகள் கிடைக்கும்.

--பத்ரி

இக்கட்டுரை குறித்து உங்களது கருத்துக்களை மறவாமல் எங்களுக்கு எழுதுங்கள்.

http://www.tamilvanigam.in/2008-09-27-16-11-18/722-q-q-

பாரதி
05-06-2009, 09:23 AM
பகிர்ந்தமைக்கு நன்றி செல்வமுரளி. என்.ஹெச்.எம் ரைட்டர் மற்றும் கன்வெர்ட்டர் ஆகியவற்றை வழங்கியதற்கே நாம் நன்றி சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர்களின் தொலைநோக்குப்பார்வை பாராட்டத்தக்கது. இன்னும் ஒரு விடயம் : அவர்களிடம் இருந்து சில புத்தகங்களை இலவசமாகவும் நாம் பெற முடியும் - நமது வலைப்பூக்களில் அந்தப்புத்தகத்தைக் குறித்து விமர்சனம் எழுத வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்!

படைப்பாளிகளும், படைப்புகளும் பெருகி வரும் காலத்தில் பதிப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் பத்ரி நிச்சயம் பாராட்டுக்குரியவர்தான்.

selvamurali
07-06-2009, 05:39 PM
நன்றி!! பாரதி!!!

எஸ். கே
10-02-2011, 05:42 PM
NHM writer-ம் Converter மிகச்சிறந்த மென்பொருள் அவற்றை அளிப்பதற்காகவே நன்றி சொல்ல வேண்டும்!