PDA

View Full Version : சின்னவயசுக் காலம்....!!!

சிவா.ஜி
03-06-2009, 11:39 PM
டவுசர போட்டுக்கிட்டு, சைக்கிள் வீல குச்சியால தட்டிக்கிட்டு சிட்டா பறந்துகிட்டிருந்த காலம். குறும்பு பண்ணி அம்மாகிட்ட அடிவாங்கும்போது அழறதத்தவிர சதா சந்தோஷமா இருந்த காலம். அப்ப நான் நாலாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தேன். அஞ்சுபைசாவுக்கு கைநிறைய சீரக மிட்டாய், பத்து பைசாவுக்கு ஃபிரெண்ட்ஸ்க்கு தொக்கு, மாங்கா பத்தை, எலந்தவடையோட பார்ட்டி வெக்கற அளவுக்கு நாங்க சல்லிசா வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருந்தோம். என் செட்ல ஆனந்தன், நாகராஜன், மதன், சுரேசு இப்படி கடைஞ்செடுத்த அராத்துங்க இருந்தாங்க.

நாங்க இருந்தது கிருஷ்ணன் கோயில் தெரு. இப்ப இருக்கறமாதிரி ஜனங்க கசகசன்னு இல்லாம...வீதியே மைதானமா இருக்கும். ரெண்டு பணங்காயை குச்சியில கோர்த்து, முனையில U மாதிரி இருக்கிற இன்னொரு குச்சியால அதை வேகமா உருட்டிக்கிட்டுப் போற ரேஸும், சைக்கிள் வீல் ரேஸும், டயர் ரேஸும் எல்லாமே அந்தத் தெருவுலதான். காலங்காத்தால கடைங்கள்லாம் திறக்கறதுக்கு முன்னால ஒவ்வொரு பெட்டிக்கடையா படையெடுத்து சிகெரெட் பாக்கெட் கலெக்ட் பண்றதுதான் எங்க முக்கியமான வேலை.

பாஷன் ஷோ, சிஸர்ஸ், பனாமா...இந்தமாதிரி லோக்கல் அய்ட்டங்களோட எப்பவாவது ஒரு ஃபாரின் சிகெரெட் பாக்கெட் கிடைக்கும். அது யாருக்கு கிடைக்குதோ அவன் தான் அந்தத் தெருவுலயே பெரிய பணக்காரன். ஒரு பாக்கெட்டுக்கு ரெண்டு சீட்டு. எல்லாத்தையும் ஒத்தையா கிழிச்சிக்கிட்டு விளையாடுவோம். அட்டையில இருக்கிறதை திருப்பி வெச்சுக்கிட்டு அவன் ஒண்ணு போட நான் ஒண்ணு போட, அவன் போட்டப்பறம் போடற என்னோட சீட்டு ஒரே மாதிரி இருந்தா அவன் பக்கம் இருக்கிற எல்லா சீட்டும் எனக்குதான். அப்படி விளையாடி நான் சேத்த சொத்து கட்டுக் கட்டா வீட்ல இருக்கும். யார் கண்ணுக்கும் படாம அத மறைச்சு வெக்கறதுக்குள்ள போதும் போதுன்னு ஆகிடும்.

அப்படி சேத்த சொத்தை ஒருநாள் எங்கம்மா மொத்தமா தூக்கி வீட்டுக்கு முன்னால வெச்சு எரிக்கறதை, ஸ்கூல் விட்டு வரும்போது தூரத்துலருந்தே பாத்துட்டு, காக்கி புத்தகப் பையை தூக்கி கடாசிட்டு ஓடி வந்தேன்.....நான் வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிப் போச்சி. நான் கஷ்டப்பட்டு சேத்த எல்லா சொத்தும் கண்ணுக்கு முன்னால கரியாகறதப் பாத்துட்டு நான் கத்துனக் கத்துக்கு, எங்கம்மா மொத்துன மொத்து இப்பவும் வலிக்குது.

அப்பத்தான் ஒரு நாள் பாகிஸ்தான் கூடவோ, இல்ல சைனா கூடவோ..சரியா நினைவில்ல. சண்டை நடந்தது. சாயங்காலம், ஆறு மணியாச்சின்னா சங்கு ஊதுவாங்க. விளக்கெல்லாம் அணைச்சிடுவாங்க. வெளியில விளையாடிக்கிட்டிருக்கிற பசங்களையெல்லாம், ஆட்டை கிடைக்கு தப்பி விடறமாதிரி வீட்டுக்குள்ள கொண்டுபோய் அடைச்சிடுவாங்க. ரெண்டுநாள்தான் பொறுத்தோம். எங்க சுதந்திரம் பறிபோறதை சகிச்சிக்க முடியாத நாங்க, கட்டுப்பாட்டை மீறி வீதிக்கு வந்துட்டோம். ஒரு ஈ காக்கா ரோட்டுல இல்ல.

மணி ஏழு இருக்கும். இருட்டிடிச்சி. நாங்க அஞ்சுபேர். எங்க வீட்டுக்குப் பக்கத்துல முள்ளு மரங்க புதர் மாதிரி வளர்ந்து அடர்த்தியா இருக்கும். அதை தாண்டினா,ஒரு முஸ்லீம் பாய் வீடு. அந்த வீடு ஒண்ணுதான் நாலு அடி உயருத்துல காம்பௌண்ட்டோட இருக்கும். திருடன் போலீஸ் விளையாட்டு ஆரம்பிச்சோம். நல்லாத்தான் போய்ட்டிருந்தது. அப்ப பாத்து பாய் வீட்டுக்கு பக்கத்துல ஒளிஞ்சிக்கிட்டிருந்த ஆனந்தன் லபோ திபோன்னு கத்திக்கிட்டு ஓடி வந்தான்.

என்னடா ஆச்சுன்னு கேட்டா...பே....பே...ன்னு உளர்றான். என்னடான்னா...பேய்டா...பாய் வீட்டுக் காம்பௌண்ட்டுக்கு பக்கத்துல நிக்குதுன்னான். நான் அப்பவே கொஞ்சம் விவ(கா)ரமானவன் தான். அது என்னதுன்னு பாத்துடலான்னு சுரேசக் கூப்பிட்டா...அடுத்த செகெண்ட் அவன் அங்க இல்ல. எல்லாரும் ஓடிட்டானுங்க. எனக்கும் லேசா பயம். பக்கத்துலதான் எங்க வீடு. அதனால கொஞ்சூண்டு தைரியத்த வரவழைச்சுக்கிட்டு மெதுவா சத்தம் போடாம முள்ளு மரங்களுக்குள்ள நுழைஞ்சு போனேன். கொஞ்ச தூரத்துலையே அந்த உருவம் தெரிஞ்சிது. அந்தப்பக்கம் இருட்டா இருந்ததால சில் அவுட்ல உருவம் மட்டும் தெரிஞ்சுது. முகத்தைப் பாக்க முடியல. ஆனா அது ஒரு பொண்ணுங்கறது தெரிஞ்சுது. இன்னும் கொஞ்சம் கிட்ட போனா...கூடவே இன்னொரு உருவமும் தெரிஞ்சது. அது என்னோட திசையைப் பாத்து நின்னுக்கிட்டிருந்தது. அது ஒரு ஆம்பிளை...

பயமா இருந்தாலும்...என்னவோ ஒரு குருட்டு தைரியம்...இன்னும் கொஞ்சம் முன்னால போனேன்.சத்தம் கேட்டுச்சோ என்னவோ, சட்டுன்னு அந்த ஆண் உருவம் ஒரு டார்ச்லைட்டை என் முகத்துக்கு நேரா அடிச்சுது. அங்கருந்து ஒரே ஓட்டம் ரிவர்ஸுல..ஓடி வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சி போர்வையை எடுத்து கால்லருந்து தலை வரைக்கும் போத்திக்கிட்டு ரெண்டு காலையும் நெஞ்சோட சேத்து மடக்கிக்கிட்டு கண்ணை இறுக மூடிக்கிட்டு படுத்துட்டேன். அப்படியே தூங்கிட்டேன்.

அடுத்தநாள் காலையில ஸ்கூலுக்கு போகும்போது, பக்கத்துவீட்டு அக்கா, அவங்க வீட்டு காம்பௌண்ட் சுவத்துக்கு(அதை காம்பௌண்ட்ன்னு சொல்லமுடியுமா தெரியல். ரெண்டு அடி உயரம்தான் இருக்கும். மண்சுவர். ஒன்றரை அடி அகலம் இருக்கும்.)பின்னால நின்னுக்கிட்டு என்னை கூப்பிட்டாங்க,

“நேத்து ராத்திரி பாத்தத யார்கிட்டயும் சொல்லிடாதடா..இந்தா பத்துபைசா...மிட்டாய் வாங்கிக்க”ன்னு சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனா அதுக்கப்புறம் தினம் பத்து பைசா கிடைச்சிச்சி அந்த அக்கா பாய் வீட்டு பையனோட ஓடிப்போறவரைக்கும்......

சின்ன வயசுக்காலம்...இன்னும் தொடரும்

மதி
04-06-2009, 12:50 AM
அநியாயம்.. அந்த காலத்திலேயே உண்மைய சொல்லாம இருக்க.. கையூட்டு வாங்கியிருக்கீங்க... இதை ஒத்துக்க முடியாது :)
அது சரி... அப்போ அவங்களுக்கு இருந்த தைரியம் கூட... ஹூம்...
அந்த வேலை நமக்கு சரிப்பட்டு வராது.. ஹிஹி

பரஞ்சோதி
04-06-2009, 06:31 AM
ஆஹா! ஆஹா!

சூப்பர், அண்ணா உங்க சின்ன வயசு அனுபவங்கள் எனக்கு அப்படியே இருப்பது மகிழ்ச்சியை கொடுக்குது.

பனங்காய் வண்டி ஓட்டிய கதை சூப்பர்.

சிகரெட் அட்டையில் ப்ளூ பேர்ட், 555, கிங்ஸ் இப்படி கிடைத்தால் நாம தான் கிங்.

இன்னும் இன்னும் சொல்லுங்க. ரசனையாக இருக்குது.

அன்புரசிகன்
04-06-2009, 06:55 AM
அந்தக்காலத்தி’லேயே காதலை வாழவைத்திருக்கிறீர்கள்.... சூப்பர்... :D :D :D

தொடருங்கள்...

பூமகள்
04-06-2009, 06:57 AM
வித்தியாசமான முயற்சியில் சிவா அண்ணாவின் எழுத்து வன்மை மேலும் ஜொலிக்கிறது.

சூப்பரான தொடர் கிடைக்க இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி... கலக்குங்க..

நாங்களும் காலி சிகரெட் அட்டைகளைச் சேகரிச்சிருக்கோம். ஆனால், விளையாண்டது வேற ஒன்னு..

அப்போ எல்லாம் கின்னஸ் ரெக்கார்ட்னு டூர்தர்சன்ல ஒரு நிகழ்ச்சி வாராவாரம் போடுவாங்க.. அதுல எதையோ செவ்வகமா வரிசையா வளைஞ்சி வளைஞ்சி அடுக்கி வைச்சி ஆரம்ப புள்ளியில ஒரு தள்ளு தள்ளி விட அத்தனை நேர உழைப்பும் ஒரு நிமிடத்தில் தொப தொப என அழகாய் ஒன்றன் பின் ஒன்றாக விழும்.. அது ரொம்ப பிடிச்ச விளையாட்டு..

அதே போல செய்ய நினைச்சி, நிறைய காலி சிகரெட் பெட்டிகளை மளிகைக் கடைகளில் வாங்கிக் கொண்டு, வீட்டுக்குத் தெரியாமல் பொறுக்கியும் கொண்டு வந்து ஒளித்து வைத்து பின் வாசலில் விளையாடுவோம்.. என்னமோ நாமே அந்த கின்னஸ் சாதனை புரிந்த மாதிரி ஒரு பரவசம் வரும்..

ஹ்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.. தொடருங்கள் அண்ணா... நாங்களும் எங்க மழலை பருவத்துக்கு போய் வருகிறோம்... :)

பூமகள்
04-06-2009, 06:58 AM
அந்தக்காலத்தி’லேயே காதலை வாழவைத்திருக்கிறீர்கள்.... சூப்பர்... :D :D :D

ஆமாம் ஆமாம்..:rolleyes::cool:
மிட்டாயை விட காதல் அப்போ பெரிசா தெரிஞ்சிருக்காதே...!! :lachen001::lachen001:

அமரன்
04-06-2009, 08:19 AM
எடுத்துக் கொண்ட விசயமும் எடுத்துச் சொன்ன முறையும் நெஞ்சோடு நெருங்குபவை.

டயர்வண்டி, பனங்காய் வண்டி, சில்லுவண்டி சகிதம் சில்வண்டாக தெருக்களை நிறைத்த சிட்டுக்காலங்கள் எனக்குமுண்டு. சீட்டுக்காலம் இருந்ததில்லை. மழைமப்பில் புளுகித்துப் பறக்கும் நாரைக் கூட்டங்களாய் இருட்டு நேரத்தில் நான் விளையாட படலையில் நிற்கும் அம்மா பக்குவம் சொன்ன கல்கண்டுக் காலமும் உண்டு. பூசிப் புணஸ்கரித்து குட்டிக் குமரனாக வடிவமைத்து சைக்கிளில் வைத்தோ, இடுப்பில் வைத்தோ, சின்னிவிரல் பிடித்தோ ஊர்கோலம் கூட்டிப்போன ஊர்ப்பெண்களும் உண்டு.

இவை எல்லாம் உண்டு களித்ததில் வாழ்வைக் கழிக்கும் நிலை வயோதிபனுக்கு வரும். வயோதியனின் மனதை இளமையாக வைத்திருப்பவையும் இவைதான். உங்கள் எழுத்தியில் மின்னும் முதிர்ச்சியும் பால்யமும் குடித்து உள்ளம் கேக்குது மோர். நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் சிவாண்ணா.

பாரதி
04-06-2009, 08:26 AM
இந்தத்திரி பருவகாலமாக இல்லாமல் துருவ நட்சத்திரமாக ஜொலிக்கட்டும். என்றைக்கும் வாடாமல்லியாக நெஞ்சில் பூத்திருக்கும் நினைவுகளை மாலையாக கோர்க்கும் முயற்சி வெற்றி பெறட்டும்.

ரொம்ப நல்லா இருக்கு சிவா.

நேசம்
04-06-2009, 09:32 AM
நிங்க லஞ்சம் வாங்கினது யாருக்கு தெரியமால் போய்விட்டதா......அது சரி எல்லா ஊரிலும் ஒரே விளையாட்டுதானா அப்போ.(இப்போ எல்லாம் வேற).நினைவலைகளை தூண்டுகிறாது.தொடர்ந்து எழுதுங்கள்

சிவா.ஜி
04-06-2009, 02:49 PM
அநியாயம்.. அந்த காலத்திலேயே உண்மைய சொல்லாம இருக்க.. கையூட்டு வாங்கியிருக்கீங்க... இதை ஒத்துக்க முடியாது :)
அது சரி... அப்போ அவங்களுக்கு இருந்த தைரியம் கூட... ஹூம்...
அந்த வேலை நமக்கு சரிப்பட்டு வராது.. ஹிஹி

தெரிஞ்சி வாங்கினாத்தான் கையூட்டு, அந்த அக்கா எதுக்கு காசு குடுக்கறாங்கன்னே தெரியல. என் முகத்தைத்தான் அவங்க வெளிச்சத்துல பார்த்திருக்காங்க. ஆனா நான் பாக்கல.

ஹி...ஹி...இருந்தாலும் அப்ப தினம் பத்துகாசுங்கறது ஜாக்பாட்தான்.

தைரியம்...?...என்னா மதி இது? இந்த நிலைமைக்கு வந்துட்டீங்களே? என்ன கொடுமை சரவணன் இது? அப்பாக்கிட்ட பேசனும்.

சிவா.ஜி
04-06-2009, 02:52 PM
ஆஹா! ஆஹா!

சூப்பர், அண்ணா உங்க சின்ன வயசு அனுபவங்கள் எனக்கு அப்படியே இருப்பது மகிழ்ச்சியை கொடுக்குது.

பனங்காய் வண்டி ஓட்டிய கதை சூப்பர்.

சிகரெட் அட்டையில் ப்ளூ பேர்ட், 555, கிங்ஸ் இப்படி கிடைத்தால் நாம தான் கிங்.

இன்னும் இன்னும் சொல்லுங்க. ரசனையாக இருக்குது.

ஆமா பரம்ஸ். 555 இல்லன்னா ப்ளூபேர்ட் கிடச்சா செம ஜாலிதான். பசங்க பின்னாலேயே சுத்துவானுங்க. அதுக்காக ரோடு ரோடா சுத்தி கலெக்டர் ஆனதுதான் கொடுமை.

பாரதி
04-06-2009, 03:10 PM
அன்பு சிவா,

அந்த நேரத்துல யானை (எலிபெண்ட்), ட்யூக்(ரொம்பவும் விலை மலிவு), வில்ஸ் போன்ற வெண்குழல்களும் விற்பனையில் இருந்ததாக நினைவு.

அதில் அட்டைப்படத்திற்கு ஒரு விதமான எண்ணிக்கையும், பக்கவாட்டில் இருப்பதற்கு வேறொரு எண்ணிக்கையும், மேல், கீழ் பகுதிகளுக்கு வேறொரு எண்ணிக்கையும் வைத்து “வங்கி” விளையாட்டு விளையாடியதும் நினைவுக்கு வருகிறது.

உட்புறமிருக்கும் அலுமினிய காகிதத்தை தீப்பெட்டிகளைக்கொண்டு உருவாக்கப்படும் புகைவண்டியைச் செய்யும் போது பளபளப்பு ஊட்ட ஒட்டுவோம்......

நினைத்துப்பார்க்கையில் எல்லாம் புகையாய் தோன்றுகிறது...!

சுகமாக தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
04-06-2009, 03:11 PM
அந்தக்காலத்தி’லேயே காதலை வாழவைத்திருக்கிறீர்கள்.... சூப்பர்... :D :D :D

தொடருங்கள்...

தெரிஞ்சோ தெரியாமலோ அப்படியாகிடிச்சி அன்பு. இருந்தாலும் காசு வாங்கிட்டு செஞ்சதால அது சரியில்ல. இல்லையா?

சிவா.ஜி
04-06-2009, 03:14 PM
நாங்களும் காலி சிகரெட் அட்டைகளைச் சேகரிச்சிருக்கோம். ஆனால், விளையாண்டது வேற ஒன்னு..

அப்போ எல்லாம் கின்னஸ் ரெக்கார்ட்னு டூர்தர்சன்ல ஒரு நிகழ்ச்சி வாராவாரம் போடுவாங்க.. அதுல எதையோ செவ்வகமா வரிசையா வளைஞ்சி வளைஞ்சி அடுக்கி வைச்சி ஆரம்ப புள்ளியில ஒரு தள்ளு தள்ளி விட அத்தனை நேர உழைப்பும் ஒரு நிமிடத்தில் தொப தொப என அழகாய் ஒன்றன் பின் ஒன்றாக விழும்.. அது ரொம்ப பிடிச்ச விளையாட்டு..

அதே போல செய்ய நினைச்சி, நிறைய காலி சிகரெட் பெட்டிகளை மளிகைக் கடைகளில் வாங்கிக் கொண்டு, வீட்டுக்குத் தெரியாமல் பொறுக்கியும் கொண்டு வந்து ஒளித்து வைத்து பின் வாசலில் விளையாடுவோம்.. என்னமோ நாமே அந்த கின்னஸ் சாதனை புரிந்த மாதிரி ஒரு பரவசம் வரும்..

ஹ்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்.. தொடருங்கள் அண்ணா... நாங்களும் எங்க மழலை பருவத்துக்கு போய் வருகிறோம்... :)

ஆஹா...நாங்களும் அதுமாதிரி செஞ்சிருக்கோம்மா. வரிசையா அடுக்கிவெச்சு தள்ளிவிட்டா, பட படன்னு சரிஞ்சி விழறத பாக்கறது எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?

இப்ப இருக்கிற தலமுறைக்கு அந்த சந்தோஷமெல்லாம் இல்லைன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு.

சிவா.ஜி
04-06-2009, 03:18 PM
டயர்வண்டி, பனங்காய் வண்டி, சில்லுவண்டி சகிதம் சில்வண்டாக தெருக்களை நிறைத்த சிட்டுக்காலங்கள் எனக்குமுண்டு. சீட்டுக்காலம் இருந்ததில்லை. மழைமப்பில் புளுகித்துப் பறக்கும் நாரைக் கூட்டங்களாய் இருட்டு நேரத்தில் நான் விளையாட படலையில் நிற்கும் அம்மா பக்குவம் சொன்ன கல்கண்டுக் காலமும் உண்டு. பூசிப் புணஸ்கரித்து குட்டிக் குமரனாக வடிவமைத்து சைக்கிளில் வைத்தோ, இடுப்பில் வைத்தோ, சின்னிவிரல் பிடித்தோ ஊர்கோலம் கூட்டிப்போன ஊர்ப்பெண்களும் உண்டு.

அப்ப ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டுக்கிட்டு குமரனா வலம் வந்திருக்கீங்க. சூப்பர். நானும் கோவணாண்டியாய் நின்னது நினைவுக்கு வருது. கையில் ஒரு குச்சி வெச்சுக்கிட்டு போஸ் கொடுத்தது படமாயும் பதிவாகியிருக்கு. வீடில் இன்னமும் அந்த படம் உள்ளது.

இன்பமூட்டும் இளமைக்காலங்கள் அமரன். கோடிகளைக் கொட்டிக்கொடுத்தாலும் மீடெடுக்க முடியாத அற்புத தருணங்கள். ஹ்ம்...

சிவா.ஜி
04-06-2009, 03:19 PM
நிங்க லஞ்சம் வாங்கினது யாருக்கு தெரியமால் போய்விட்டதா......அது சரி எல்லா ஊரிலும் ஒரே விளையாட்டுதானா அப்போ.(இப்போ எல்லாம் வேற).நினைவலைகளை தூண்டுகிறாது.தொடர்ந்து எழுதுங்கள்

ஆமா நேசம். அந்த சமயத்துல எல்லா ஊரிலும் ஒரே மாதிரி விளையாட்டுதான். அதிலும் சீசன் மாற மாற விளையாட்டுகளும் மாறியதுதான் ஆச்சர்யமான ஒன்று.

சிவா.ஜி
04-06-2009, 03:21 PM
அன்பு சிவா,

அந்த நேரத்துல யானை (எலிபெண்ட்), ட்யூக்(ரொம்பவும் விலை மலிவு), வில்ஸ் போன்ற வெண்குழல்களும் விற்பனையில் இருந்ததாக நினைவு.

அதில் அட்டைப்படத்திற்கு ஒரு விதமான எண்ணிக்கையும், பக்கவாட்டில் இருப்பதற்கு வேறொரு எண்ணிக்கையும், மேல், கீழ் பகுதிகளுக்கு வேறொரு எண்ணிக்கையும் வைத்து “வங்கி” விளையாட்டு விளையாடியதும் நினைவுக்கு வருகிறது.

உட்புறமிருக்கும் அலுமினிய காகிதத்தை தீப்பெட்டிகளைக்கொண்டு உருவாக்கப்படும் புகைவண்டியைச் செய்யும் போது பளபளப்பு ஊட்ட ஒட்டுவோம்......

நினைத்துப்பார்க்கையில் எல்லாம் புகையாய் தோன்றுகிறது...!

சுகமாக தொடருங்கள் சிவா.

ஆமாம் பாரதி. சிகெரெட் பெட்டியை பலவிதமாக உபயோகித்தவர்கள் நாமாகத்தானிருக்கும். அட்டைப்பெட்டியில் இருக்கும் அந்த மடிக்கப்பட்ட வெள்ளை அட்டையை கேமராவாக உபயோகித்தது இன்னும் நினைவிலாடுகிறது.

ஓவியா
04-06-2009, 06:28 PM
நீங்க உண்மையிலே ரொம்ப நல்லவரா இருந்திருக்கீங்களே!!!

சம்பவம் சூப்பரா இருக்கு!! காதலுக்கு ஜே :icon_b:

10 பைசா இதான் தெய்வம் தேடி வந்து கொடுப்பது என்பது :D

ரசனையாக ஒரு பதிவை எழுதுவதில்தான் அதன் வெற்றியே இருக்கு, அதன் கருவில் அல்ல. அதற்க்கு சான்று இந்த பதிவு.

சிவா.ஜி
04-06-2009, 06:40 PM
ஹா...ஹா...சரிதான் ஓவிம்மா. 10 பைசா தினமும் கிடப்பது அந்தக் காலத்தில் ரொம்ப பெரிசுதான்.

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிம்மா. இப்பவும் ஒரு பதிவுல உங்க சின்ன வயசு சம்பவத்தை எழுதியிருந்தீங்களே(குட்டைப்பாவாடை...) அதை நினைச்சா சிரிப்பு வருது. அவ்வளவு ரசனையா எழுதியிருந்தீங்க.

ஓவியா
04-06-2009, 06:49 PM

:D:D:D

ஆமாம் அந்த லாரிகாரர திட்ட கூட எனக்கு அப்ப மனசு வரலே, இப்ப கண்டேன்.... தொலைஞ்சார் மனுசன்.

அதுவும் அப்பாகிட்ட அடம்பிடிச்சு வங்கின பாவாடை... அத போட்டுகிட்டு அப்படியே காத்துலே நடந்த மாதிரி ஒரு அசைவு!!! என்ன ஸ்டைலு என்ன ஸ்டைலு.... :lachen001::lachen001:

samuthraselvam
05-06-2009, 11:27 AM
உங்க சின்ன வயசு அனுபவத்தை அழகா ரசனையோட சொல்லி எங்க சின்ன வயசு காலங்களை நினைக்க வச்சிட்டீங்க....

ரொம்ப நன்றி அண்ணா...

நீங்கள் சிகரெட் அட்டைகளை எடுத்து விளையாடி இருக்கீங்க...

ஆனா எங்க காலத்தில தீப்பெட்டி அட்டைகளைதான் பொறுக்குவோம். நாங்க மளிகை கடை வச்சிருக்கிறதால காலையில் விடுஞ்சதுமே எல்லா சின்ன பசங்களும் எங்க கடை முன்னாலதான் இருப்பாங்க...

அதை வரிசையா நிக்க வச்சி ஒரு பட்டையான கல்லால அடிப்போம். எத்தனை அட்டைகள் கீழே விழுதோ அத்தனையும் எடுத்துக்கலாம்.

அப்புறம் கோலிகுண்டு வேட்டை நடக்கும். யாருக்கும் தெரியாமல் சுரைக்காய் புருடையை எடுத்திட்டு போய் நானும் என் தம்பியும் (சித்தப்பா மகன்) கிணற்றுக்குள் ஒரு நாள் முழுக்க விளையாடினோம். வீட்டில் எல்லோரும் பக்கத்து ஊர் வரை காணவில்லை என்று தேடி, போலீசில் புகார் கொடுக்காத குறைதான்.

பின் கிணற்றை விட்டு வெளியில் வந்தபின், நான் அடிக்கு தப்பியது, என் தம்பி வாங்கிய அடியாள் தற்கொலை முயற்சிக்கு சென்றது எல்லாமே சுவையான சம்பவங்கள் தான்.

என்னடா தம்பி தற்கொலைக்கு முயற்சி செய்ததை சுவையான நிகழ்ச்சி என்று சொல்கிறாளே என்று நினைப்பீர்கள்....

சொன்னால் நீங்களும் சிரிப்பீர்கள்...

அடித்ததற்கு கோபித்துக் கொண்டு வீட்டுக்கு மேல ஏறி கோல்கேட் பல்பொடியையும் தேங்காய் எண்ணெயையும் குழைச்சி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு "என்னை அடிச்சா நான் இதை தின்னுட்டு செத்துப்போவேன்" என்று சொன்னானே பார்க்கலாம். எல்லோரும் பயங்கரமா சிரிச்சாங்க..

நானும் விழுந்து விழுந்து சிரிச்ச அசந்த, அந்த நேரம் பார்த்து, எங்க அம்மா வந்து என்னை புடிச்சு அடிச்ச அடியில இன்னிக்கும் கிணத்துல நீச்சல் அடிக்கும் போது நினைவுக்கு வரும்.

ம்ம்ம்ம்ம்............ அது ஒரு அழகிய நிலாக்காலம்.

இரவில் வானத்தை பார்த்திட்டு நானும் தம்பியும் ஆயாவிடம் கதை கேட்டது.... அப்போது தான் ஆயாவிடம் ராமாயணமும் மகாபாரதமும் அறிந்தது......

பனைமரமோ அல்லது தென்னை மரமோ சிரை எடுக்கும் போது கீழே விழும் அணில் குஞ்சுகளை பாலில் நனைத்த பஞ்சால் பசி ஆற்றி அதை வளர்த்து அதற்கு ராமு என பெயரிட்டு வளர்த்தது....

அதனுடன் தினமும் நடைபயின்றது.... அப்படி ஒருநாள் நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு காக்கா வந்து வாலை பிடித்து இழுத்தது...

வால் அப்படியே அதன் ரோமங்கள் தோலுடன் கழண்டு வந்துவிட்டது... அப்போ அதை பார்த்துதான். என் தம்பி தான் அடிக்கடி என்னை அழைத்து "அக்கா...! நம்ம ராமு போறான் பாரு, அதுக்கு தான் வாலில்லை..." என கத்துவான்... இதுபோல ஏழு ராமுகளை வளர்த்தோம். கிளிகள் நான்கு வளர்த்தேன்.

என் திருமணம் நிச்சயமான பின் என் கணவரின் வேண்டுகோளுக்கிணங்கி அவைகளுக்கு விடுதலை அளித்தேன்..

இன்னும் இது போல் எத்தனையோ இனிமையான சுகமான நினைவுகள் மனதில் வந்து மனதை இனிதாக்குகிறது......

அமரன்
06-06-2009, 08:41 AM
நெஞ்சை கொள்ளை கொள்ளும் உங்கள் சின்ன வயசுக்காலத்துக்கு எங்களை அழைத்துச் சென்று விட்டீர்கள் லீலுமா. ஈரத்துடன் முடித்திருப்பது முத்தாய்ப்பு.

பரஞ்சோதி
06-06-2009, 11:51 AM
ஆஹா!

சகோதரி நீங்க பெரிய பதிவே எழுதலாம் போலிருக்குதே.

உங்கள் ஊர் எந்த ஊர்?

கிணற்றில் இறங்கி விளையாடியிருக்கீங்க.?

உங்க தம்பியின் கதை சிரிப்பை வரவழைத்தது.

நான் ஒருமுறை தாயம் விளையாட்டில் தோற்கடிக்கப்பட்டேன் என்பதற்காக வீட்டை விட்டு ஓடி போயிட்டேன், அப்புறம் 3 கிலோமீட்டர் அதற்கு மேலே போக வழி தெரியாவில் விழிக்க, ஒருத்தர் அழைச்சிட்டு வந்தார். :)

நானும் கதை சொல்ல ஆவல் கூடுது.

சிவா.ஜி
06-06-2009, 02:36 PM
ஆஹா...எல்லார்கிட்டயும் நிறைய கதைகள் இருக்கும் போலருக்கே.... லீலும்மா நீங்களும் களத்துல இறங்குங்க.

பரம்ஸ் உங்ககிட்டயும் ரொம்ப சுவாரசியமான கதைங்க இருக்கு....எங்கே ஒவ்வொண்ணா எடுத்துவிடுங்க.

விகடன்
21-06-2009, 07:00 AM
பணம் கொடுக்கிற பேயைத்தான் பார்த்திருக்கிறீர்கள் :D

பரஞ்சோதி
21-06-2009, 08:07 AM
அண்ணா தொடருங்கள், நாங்களுடன் உங்க கூட ஓடி வருவோமுல்ல.