PDA

View Full Version : என்று விடியும் எங்கள் ஈழம்?



lenram80
02-06-2009, 08:30 PM
என்று விடியும் எங்கள் ஈழம்?
என்று முடியும் எங்கள் சோகம்?

நடக்கும் முன் கால்!
பிடிக்கும் முன் கை!
விழிக்கும் முன் விழி!
இழக்கிறதே ஒரு சிசு!
இலவசமாய் இரத்தம் குடித்து
வளமையாய் ஈழக் கொசு!

திருமண வீட்டில் கூட
வேகவிமானங்களின் வெடிகுண்டுகள்
மேள தாளங்களாய் கொட்டுகிறதே!

இருபது வருடங்களாய் தினமும்
இலங்கை ராணுவம் தீபாவளியை
இங்கே ஏன் கொண்டாடுகிறது?

இரவில் கூட ஈழம் இருள்வதில்லை!
வீடுகள் வீதிகள் அனைத்தும் விளக்காய் எரிவதால்!

கரிசல் மண், வண்டல் மண், ஆற்று மண், ஊற்று மண்
எல்லா மண்ணும் செம்மண்ணாய் போனதால்
ஒவ்வொரு வேரும் நீருக்குப் பதிலாய்
குருதி குடிக்கும் கொடூரம் ஆனதே!

இங்கு மட்டும் தான்
மரத்தின் மேலுள்ள பறவைக் கூடுகளை விட
மண்ணின் கூழுள்ள எலும்புக் கூடுகள் அதிகம்!

இறங்கல் பா இல்லாமல் ஒரு கவிதை
இங்கே எப்போது எழுதப்படும்?

பதுங்குக் குழி குழந்தைகளின்
கன்னக் குழி பார்ப்பது எப்போது?

ஆயுதச் சத்தம் இல்லாத ஒரு பொழுது
ஆண்டுக்கொரு முறையேனும் வருமா?

அலையாடு கடலும், கடற்கரை மணலும்
அகதி காணாத அந்த நாள் வருமா?

எப்போது ஈழம் பெறும்
அமைதி என்ற பரிசை?

ஈழத்திற்கு விசா எடுக்க
எப்போது நிற்கும் வரிசை?

நேசம்
03-06-2009, 09:17 AM
விடியும் என்ற நம்பிக்கையில் தான் தமிழர்கள் வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்கொண்டு வாழும் ஈழதமிழர்கள் வாழ்க்கையின் விடிவு காலம் எப்போது.... தமிழர்களின் ஆதங்கத்தை சொல்லும் நல்ல கவிதை..

அமரன்
03-06-2009, 09:27 AM
மதம்... இனம்.. நாடு... கடல்... கண்டம்
இப்படிக்
கோடுகளைத் தாண்டி
இதயங்கள் நேசிக்கப்படும் போது
ஈழமென்ன ஈழம்..
உலகமே விடியும்!!!

தெரிந்தோ தெரியாமலோ தேவை இல்லையோ
இந்தக் கோடுகளுக்குள் அடைபட்டுக் கொண்டோம்.
அடைந்திருக்கும் இடங்களிலிருந்தே ஆரம்பிப்போம்..
இருதய நேசத்தை உலகாட்சியில் அமர்த்துவோம்.

-----
நான் என்பதும் ஒரு கோடுதான்.

anna
03-06-2009, 09:35 AM
விடிந்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். கண்டிப்பாக நீங்கள் கேட்ட ஈழம் உங்களுக்கே கிடைக்கும்.

lenram80
03-06-2009, 08:41 PM
நன்றி நேசம், அமரன், அண்ணா அவர்களே..
புதிய பூமி பிறக்கும் ஒருநாள்!
சந்தோஷம் கதவை திறக்கும் மறுநாள்!

கா.ரமேஷ்
04-06-2009, 06:50 AM
விடியும்.... நம்பிக்கைதான் வாழ்க்கை...

////எப்போது ஈழம் பெறும்
அமைதி என்ற பரிசை?

ஈழத்திற்கு விசா எடுக்க
எப்போது நிற்கும் வரிசை?////

கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும்....