PDA

View Full Version : விருட்ச துரோகம்



M.Rishan Shareef
02-06-2009, 07:34 AM
விருட்ச துரோகம்

தென்றல் சாட்சியாக
பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக
அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக
விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக
ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு
இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்
அடர்துயிலில் நிலத்தில்
ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத்
தன் மேல் போட்டுக்கொண்டது
வனத்தின் பெருவிருட்சமொன்று

புது இடத்தில் துவண்ட கொடியின்
மனவலியகற்றி
நேசம் சொல்லிச் சொல்லி
ஆறுதல்படுத்திற்று மரம்

கொடியின் பேரெழில் பூக்கள்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும்
தேன்சிட்டுகளுக்கும் எட்டாமல்
மரத்தின் இலைகள்
முக்காடாகிப்போயின
கொடி சூழலுக்கிறைக்கும்
சுத்தக்காற்றும் மேல்நோக்கிப் பறந்து
வீணாகியே போயிட
எதற்கும் பயனற்றுப்போன
கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின

வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது

ஓர் துர்நாளில்
தன்னை நம்பிப் படர்ந்திருந்த
பழங் கொடியுதிர்த்தகன்றது துரோகித்த மரம்
அந்தோ
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி - வடக்குவாசல் - ஏப்ரல், 2009
திண்ணை

பாரதி
02-06-2009, 08:34 AM
குறீயீட்டு கவிதையா ரிஷான்..? மன்ற உறவுகளின் கருத்துகளுக்கு பின்னர் இயலுமென்றால் சற்று விளக்குங்கள் நண்பரே.

M.Rishan Shareef
15-06-2009, 06:51 AM
அன்பின் பாரதி,
இக் கவிதை ஒரு நம்பிக்கைத் துரோகம் பற்றி எழுதப்பட்டது. தன் பாட்டில் இருந்த ஒன்றை உயரத்துக்குத் தூக்கிவைத்துப் பின்னர் கீழே தள்ளிவிட்டுப் பார்த்து ரசிக்கும் வன்மம் பற்றி எழுதப்பட்ட ஒன்று.

கருத்துக்கு நன்றி நண்பரே !

வசீகரன்
15-06-2009, 09:40 AM
விருட்ச துரோகம்

[QUOTE]வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது

அற்புதமான தெள்ளிய தமிழ் வரிகள் நண்பரே..... உங்கள் கவிதையின் நோக்கம் எதுவாகினும்
கவிதை மிக வளமை......சில வரிகள் புதுமையாகவும் வியக்க வைத்தன.....

பாராட்டுக்கள் கவிஞரே தொடர்ந்து எழுதுங்கள்.........

M.Rishan Shareef
16-06-2009, 01:37 PM
அன்பின் வசீகரன்,
மிக அழகான பெயர் உங்களுக்கு !

//வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது
அற்புதமான தெள்ளிய தமிழ் வரிகள் நண்பரே..... உங்கள் கவிதையின் நோக்கம் எதுவாகினும்
கவிதை மிக வளமை......சில வரிகள் புதுமையாகவும் வியக்க வைத்தன.....//

உங்கள் கருத்தினில் மகிழ்கிறேன் !

//பாராட்டுக்கள் கவிஞரே தொடர்ந்து எழுதுங்கள்.........//

நிச்சயம் எழுதுகிறேன்.
கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !

இளசு
23-06-2009, 07:39 PM
அன்பு ரிஷான் ஷெரிஃப்,

http://en.wikipedia.org/wiki/Symbiosis

சேர்ந்து வாழ்தலில் மூன்று வகை -

ஒன்று கொடுக்க, மற்றொன்று எடுக்க - ஒட்டுண்ணி வகை.. ( Parasitism)
நீ உன் வழி, நான் என் வழி - பாறை மேல் நீர் வகை..(Commensal)
உன்னால் நானும் , என்னால் நீயும் பயனடைந்து - இருவகைச் சார்பு வகை..(Mutual = True Symbiosis).


கட்டிக்கொடுக்கும் கொடிமகள் நாளைக்கு புருஷமரம் இல்லாமல்போனாலும்
நிலைக்க எண்ணிப் பெற்றோர் கொடுக்கும் கொழுகொம்பு - கல்வி, பணி ஆயத்தம்..

இங்கே கவிதையில் நிகழ்ந்த கொடி(ய) நிலை
இனி நிகழாமல் இருக்க
எல்லா உறவுகளிலும் கவனம் இருக்கட்டும் -
இந்த மூன்றில் இந்த உறவு எவ்வகை?


பாராட்டுகள்..

M.Rishan Shareef
25-06-2009, 06:08 AM
அன்பின் இளசு,

//அன்பு ரிஷான் ஷெரிஃப்,

http://en.wikipedia.org/wiki/Symbiosis

சேர்ந்து வாழ்தலில் மூன்று வகை -

ஒன்று கொடுக்க, மற்றொன்று எடுக்க - ஒட்டுண்ணி வகை.. ( Parasitism)
நீ உன் வழி, நான் என் வழி - பாறை மேல் நீர் வகை..(Commensal)
உன்னால் நானும் , என்னால் நீயும் பயனடைந்து - இருவகைச் சார்பு வகை..(Mutual = True Symbiosis).


கட்டிக்கொடுக்கும் கொடிமகள் நாளைக்கு புருஷமரம் இல்லாமல்போனாலும்
நிலைக்க எண்ணிப் பெற்றோர் கொடுக்கும் கொழுகொம்பு - கல்வி, பணி ஆயத்தம்..//

நிறையத் தேடலுள்ளவர் நீங்களெனத் தெரிகிறது. அழகான கருத்து நண்பரே !

//இங்கே கவிதையில் நிகழ்ந்த கொடி(ய) நிலை
இனி நிகழாமல் இருக்க
எல்லா உறவுகளிலும் கவனம் இருக்கட்டும் -
இந்த மூன்றில் இந்த உறவு எவ்வகை? //

நிச்சயமாக !
தன் பாட்டில் சிறப்பாகச் செழித்துவளர்ந்த கொடியொன்றினை எடுத்து, தன் மேல் போட்டுக் கொண்டு , அதன் பயனையெல்லாம் தான் மட்டுமே அனுபவித்து, காலம் கடந்த பின் கீழே தள்ளிவிடுகிறது மரம். இது ஒரு வகைச் சார்பு வகையெனக் கொள்ளலாமோ? :)

சமீபத்திய உதாரணமாக, தமிழக அரசை இறுதிவரை நம்பிக் கையேந்தி நின்ற ஈழ மக்களைக் குறிப்பிடலாம். தேர்தல் வரையும் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு, இறுதியில் அம்போவெனக் கைவிட்டுவிட்ட துயரத்தையும் ஒருவகைச் சார்பு வகையில் எடுக்கலாம் தானே?


//பாராட்டுகள்.. //

கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !