PDA

View Full Version : பிரபாகரன் - நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?



புதியவன்
01-06-2009, 06:29 PM
http://2.bp.blogspot.com/_6auRt-S2-14/Sh5KGLGt64I/AAAAAAAAAZE/7smL7FHoNEE/s1600/palk%2Bstrait.jpg

(நீண்ட பதிவு. மன்னித்து விடுங்கள்)

கடந்த இரு வாரங்களாக மன உளைச்சல். புலிகளின் பின்னடைவு கடந்த ஒரு வருடமாக புரிந்தாலும், பிரபாகரன் பற்றிய செய்தி மனதை விசனமாக்கியது உண்மை. அவர் நல்லவரா இல்ல கெட்டவரா என்று விவாதம் செய்தால், முடிவில்லாமல் போகும் அளவுக்கு சாதக பாதக அம்சங்கள் உண்டு அவரிடத்தில். யார், எங்கிருந்து பேசுகிறோம் என்பதில் இருக்கிறது அவர் நல்லவரா இல்லையா என்று.

என்னை ஒரு வருடம் முன்பு கேட்டிருந்தால், சராசரி இந்தியன் போல 'என்ன சந்தேகம். புலிகள் சரியில்லை. பயங்கரவாதிகள். மேலும், என்ன ஒரு ஆணவத் துணிச்சல் - நம்ம முன்னாள் பிரதமரைக் கொலை செய்வதற்கு?' என்ற 'பொதுப் புத்தி' என்று சிந்தனையாளர்கள் சாடும் குணம் என்னிடம் இருந்தது.

இப்ப ஒரு வருடத்தில் என்ன நடந்து விட்டது? அவர்கள் - குறிப்பாக பிரபாகரன் - ஏன் இப்போது வேறு மாதிரி தெரியணும்? ஒரு இயக்கம் தேய்ந்து, அழிகிறது; ஒருவர் மரித்திருக்கக் கூடும் என்பதால் வரும் பச்சாதாபமா? என்றால், இல்லை என்றே சொல்வேன்.

நான் அறிந்த தமிழ் ஆர்வலர்கள், அரசியல், சமூக சிந்தனையாளர்கள் என்று பல்வேறு பிரமுகர்களின் வலைத் தளங்களைப் படிக்கும் வாய்ப்பும், முனைப்பும் கடந்த ஒரு வருடம் எனக்குக் கிடைத்தது. இதற்கு முன் என் தமிழார்வம் சராசரி தான். தமிழன் என்பதில் பெருமை. தொன்மையான மொழி மற்றும் கலாசாரம். ஆயினும், 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் கதாநாயகன் நேர்முகத் தேர்வில் சொல்லிக்கொள்ளும் 'தமிழ் பேசும் இந்தியன்' என்று சொல்லிக் கொள்ளவே விருப்பம் - இப்போதும், எப்போதும்;

நான் மதிக்கும் பலரும் இலங்கைத் தமிழர் விடயத்தில் புலிகளை ஒன்றுமே விமர்சனம் செய்யாத போது ஏன் இப்படி என்ற ஆர்வத்தில் படிக்கத் துவங்கியதில் ஈழ மக்களின் துயர நிலை, நியாயத்திற்கு அம்மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அமைதி வழிவிட்டு ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் என்று இயக்கத்தின் பின்புலம் பற்றி ஒரு சிறிய புரிதல் கிடைத்தது. என்னைப் பொறுத்தவரை 'அவர்கள்' ஆக இருந்தவர்களின் நியாயங்கள், தர்க்கங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கின.


எங்கே மூளைச் சலவை செய்யப் படுகிறோமோ என்ற பதட்டத்தில் சரிசமன் நிலையை நீடிக்கச் செய்ய, துக்ளக் முதல் டைம்ஸ் ஆப் இண்டியா, NDTV என்று வெகுஜன இந்திய ஊடகங்களின் கருத்துகளையும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இவைகளின் குரலின் பின் தென்படும் வெறுமை, மேம்போக்குத் தனம் மற்றும் சில சமயங்களில் போலித்தன்மை இவற்றை இலகுவில் உணர முடிகிறது. உதாரணம்: பிரபாகரன் பற்றி செய்தி சொல்கையில் (ஹெட்லைன்ஸ் டுடே என்று நினைக்கிறேன்) 'இங்கயிருந்து போயிருக்கும் தமிழர்கள், அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து தான் நடக்க வேண்டும். மாறாக, குடியுரிமை, தனி ஈழம் என்பதெல்லாம் சிறிலங்கா எப்படி ஒப்புக் கொள்ளும்?' என்ற ரீதியில் அபத்தக் களஞ்சியமாக இருந்தது. இதைத்தானே தமிழரல்லாத இந்தியர்கள் உண்மை என எண்ணுவார்கள்? இப்படித்தானே கருத்தியல் அமைக்கப் படுகிறது. CNN-IBN ஏதோ தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போல "முல்லைத் தீவில் துன்புறும் மக்களின் நிறைய உறவினர்கள் தமிழ் நாடெங்கும் மிக வருத்தத்தில் உள்ளனர்' என்று இலங்கைத் தமிழர்களுக்கு NRI சான்றிதழ் கொடுத்தது.

உலகெங்கும் ஆங்காங்கே விடுதலை வேண்டி பல இனங்கள் போராட்டத்தில் இருந்த வண்ணம் தான் இருக்கிறார்கள். பழைய சோவியத் யூனியன், திபெத், காஷ்மீர், குர்டிஷ், செசென்யா, பாலஸ்தீனம், கொலம்பியாவின் பழங்குடிகள், I.R.A., போஸ்னியா, செர்பியா என்று அண்மைக்கால இரத்த வரலாறுகள் எங்கும் பரவி இருக்கிறது. ஒரு பொது நிலப்பரப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள்/இனங்கள் இருந்தால், பேரினம், சிறிய இனத்தை அடக்கி ஆளுவதும், முடிந்தால் அழித்து விட முயல்வதும் நாம் பார்க்கிறோம். சிங்கள, தமிழ் உதாரணங்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

பேரினத்தைச் சார்ந்த அரசாங்கம், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, இனவாத அரசியலைக் கையிலெடுக்கும் போது துவங்குகிறது இத்தகைய சிற்றின ஒழிப்பு. பிரசார உத்திகளால், பேரினத்தின் மிருக உணர்வுகள் தூண்டப்பட்டு, அவற்றுக்குத் தீனி போடப் படுகிறது.

இந்த இடத்தில் மிக முக்கியமான அம்சம் பொது பிரக்ஞை/மனச்சாட்சி போன்றவை. Collective conscience of the majority. மற்ற போராட்டங்களை உன்னிப்பாக கவனிக்கா விட்டாலும், ஹம்மாஸ் மற்றும் ஈழ விடுதலைப் போராட்டங்களைப் பற்றி கருத்து கூறும் அளவில் நிகழ்வுகளை கவனித்தவன் என்ற முறையில் எனக்குத் தோன்றுவது, யூதர்களும் சரி, சிங்களவர்களும் சரி - இந்த விடயத்தில் மனிதாபிமானம், மனசாட்சி இவைகளை முற்றிலும் துறந்து, அரசாங்கத்தின் அராஜக இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மௌன பச்சைக்கொடி காட்டி உதவி இருக்கிறார்கள்.

எப்போது ஒரு அரசே (அதிகாரம் என்று கொள்ளலாம்) தன் குடிகளின் ஒரு சாராரை விரோத மனப்பான்மையில் பார்க்கிறதோ, பேச்சு வார்த்தைகள் இந்தக் கால கட்டத்தில் பயனளிக்கும் என்று எதிர்பார்ப்பது நிராசைதான். யாருக்குமே கத்தியின்றி, இரத்தமின்றி நியாயம் கிடைக்குமெனில், ஏன் அவைகளைக் கையில் எடுக்கப் போகிறார்கள். அதனால், ஈழப் போராட்டம் அமைதி மார்க்கத்திலிருந்து, ஆயுதப் போராட்டமாக வெடித்ததற்கு புலிகளை மட்டும் குறை சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத்தான். அந்தக் கால கட்டத்தில் TELO, PLOT, TULF (எனது புரிதல் மிகச் சிறியது. ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்) போன்ற இயக்கங்களும் ஆயுத போராட்டத்தில் தான் குதித்தன. இந்த இயக்கங்களுக்குள் நடைபெற்ற போராட்டங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. இவைகளுக்குள் பெரிய வித்தியாசம் இருந்திருக்க சாத்தியக்கூறுகளுமில்லை. புலிகள் கை தாழ்ந்து, ஒரு பேச்சுக்கு TELO கை ஓங்கி இருந்தால், இன்று புலிகளைச் சாடும் நாம், TELO வைத் திட்டிக் கொண்டிருப்போம்.

இப்படியெல்லாம் நான் சொல்வதால் புலிகள் பக்கம் தவறு இல்லை என்று சொல்ல வரவில்லை. நான் பார்த்த வரையில் அவர்கள் செய்த தவறுகள்:

1. மிதவாதிகள் (அமிர்தலிங்கம் போன்றோர்) அனைவரையும் கொன்றது.

2. மற்ற போராட்ட இயக்கங்களை இராஜ தந்திர முயற்சிகளால் ஒருங்கிணைக்காமல், தீர்த்துக் கட்டியது.

3. காரணங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ராஜீவைக் கொலை செய்தது. இவர்கள் செய்த இமாலயத் தவறு இதுதான். தார்மீக அடிப்படையிலும், strategic அடிப்படையிலும் இது மன்னிக்க முடியாத பிழைதான்.

4. பொதுவாகவே, அவ்வப்போது கிடைத்த அமைதி வாய்ப்புகளை பயன்படுத்தாமல், ஆயுதக் குவிப்புக்கு அந்தத் தருணங்களை உபயோகித்துக் கொண்டது. இதனால், அமைதிப் பேச்சுவார்த்தை என்ற கோணத்தில் புலிகளின் நம்பகத் தன்மை முற்றிலும் இல்லாமல் போனது.

5. அவ்வப்போது கிடைத்த ராணுவ வெற்றிகளால், தன் பலத்தை மிகையாக எண்ணத் துவங்கியது.

6.சிங்களப் பொதுமக்களை தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளால் அன்னியப் படுத்திக்கொண்டது. இந்தியாவிலும் சென்னை விமான நிலைய வெடிகுண்டு போடுவது வரை வந்தது.

இதெல்லாம் சரி. இவ்வளவு தவறு செய்த இயக்கத்திற்கு எதற்கு கண்ணீர் சிந்த வேண்டும் என்றால் - புலிகளைப் போல, இப்போது இந்தியா மற்றும் அதற்குள் தமிழ் நாடு செய்த தவறுகளை அலசினால்:

1. முதலில் இந்திரா காந்தி ஆட்சியில், அவர் இலங்கையில் இன்னொரு வங்காள தேசத்தை உருவாக்க முயன்றார். இலங்கை இரண்டாப் பிரிந்து, ஈழம் மலர்வது இந்தியாவுக்கு நல்லது. இந்தியா இன்னும் பெரிய நாடாகும் என்ற கோணத்தில். அதனால், தார்மிக, ஆயுதங்கள், பயிற்சி என்று உதவிகள் எல்லா விதங்களிலும் தரப்பட்டது. தமிழகமும் உற்சாகமாகப் பங்கேற்றது.

2. அப்போதே SAARC மாநாடுகளிலும், தொடர்ந்த பேச்சு வார்த்தைகளிலும் இந்தியாவின் மீது சிறிலங்கா அரசு இந்த விடயத்தில் குற்றம் சாட்டத் துவங்கி, காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் இவற்றுடன் சேர்ந்து இந்தியாவை விமர்சிக்கத் துவங்கியது.

3. ராஜீவ் காந்தி ஒரு நம்பிக்கை அடிப்படையில் (எனக்குத் தெரிந்த வரை அவருடைய நோக்கங்கள் நல்லவையாகவே இருந்தன) இரு சாராரையும் அமைதிப் பேச்சுக்குக் கொண்டு வரவைத்து, நிரந்தரத் தீர்வுக்கு முயன்றார். ஆனால், IPKF செய்த குளறுபடிகளாலும், அத்துமீறல்களாலும் அமைதி முற்றிலும் போய், ஈழ மக்கள் மனதில் ஆறாத வடுக்களையும், வஞ்சிக்கப்பட்ட உணர்வையும் தந்தது.

4. அவர் மறைவுக்குப் பின் இவ்வளவு நாட்கள் சும்மா இருந்த இந்திய அரசு இப்போது திடீரென்று புலிகளை முற்றிலும் ஒழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவதற்கு, எனக்குப் புரிந்த வரையில் இந்த காரணங்கள் இருக்கலாம்.

a) இந்தியப் பெருங்கடல் இராணுவ கோணத்தில் இப்போது மிக மிக முக்கிய இடமாகி விட்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் எல்லாமே இதில் அதிகாரக் கோலோச்ச முயல்கின்றன. இப்போது தமிழர்களைக் கைவிட்டு, சிங்கள அரசுக்கு உதவினால், அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் முற்றிலும் சாய்வதைத் தவிர்க்கலாம்.

b) இந்தியாவுக்கும், காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் பிரிவினைவாதங்களை ராணுவ பலத்துடன் எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம். அதற்கான தார்மிக பலம், பிரிவினை கோரும் ஈழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுதல்.

இதில் தமிழகம் செய்த தவறு இது தான்:

இந்திய அரசு உண்மையில் ஒன்றும் ஈழ மக்கள் பால் அக்கறை கொண்டிருக்க வில்லை. தமிழகம் எப்போதும் தந்த அழுத்தமான எதிர்ப்பால், இந்திய அரசு சிங்களப் பேரின வாதத்தைக் கண்டித்தும், ஈழத்தை ஆதரித்தும் வந்தது. இந்திய அமைதிப் படை வீரர்கள் சென்னை திரும்பிய போது அவர்களை கௌரவிக்க மறுத்த கலைஞரின் முடிவால் இலங்கையில் நடப்பது பற்றிய கண்ணோட்டங்களில் ஒரு பெரிய திருப்பமே ஏற்பட்டது. அந்த அளவு பொறுப்புணர்வுடனும், ராஜதந்திரத்துடனும் கலைஞர் தலைமையில் தமிழகம் ஈழப் பிரச்சனையைக் கையாண்டு வந்தது.

இப்போது என்ன காரணத்தினாலோ அந்த போர்க்குணத்தைக் காண இயலவில்லை. Mute spectator எனப்படும் ஊமைப் பார்வையாளராக மட்டுமே தமிழக அரசு செயல் படுகிறது. மாநில, மத்திய ஆட்சி, பதவி அளிக்கும் சுகங்கள், வசதிகள் என்றுதான் என்னுடைய 'பொதுப் புத்தி' சொல்கிறது.

தமிழக மக்களுக்கும் புலிகளின் பால் இருந்த உணர்வு பூர்வ உறவு, ராஜீவ் கொலையினால் பெருமளவு குறைந்தது. இது தற்போதைய தமிழ் தலைவர்களுக்கு மிக ஏதுவாகப் போய், வெறும் தேர்தல் சமய ஊறுகாய் விடயமாகிப் போனது ஒரு துன்பியல் நிகழ்வு.

ஆக, இன்றைய தமிழக ஆளுமைகள் தங்கள் சுகத்திற்காக கொள்கைகளைத் தளர்த்தியதாலும், இந்தத் தருணத்தை இந்திய மத்திய அரசு சரியாக தனது strategic காரணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாலும், ஈழ மக்களுக்கு ஒரு மாபெரும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. சிறிலங்க அரசு இந்தத் தருணங்களின் மதிப்பை மிகத் துல்லியமாக எடை போட்டுப் பயன் அடைத்திருப்பது கண்கூடு.


ஒரு இந்தியனாக மிகவும் தார்மீக உயர்வில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு, எனது புரிதலின் அடிப்படையில் இந்திய, தமிழக அரசுகளின் துரோகம் தரும் வலி அதிகம். மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு விசாரணையும் தேவை இல்லை என்று அவசரமாக அறிக்கை தந்து more loyal than the king என்று இந்தியா நிருபித்துக் கொள்ள முயல்வது பார்த்து வரும் வலி.எதிரிகளை மன்னிக்கலாம். மன்னிக்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ளலாம். துரோகிகளை....ம்ம், அவர்களையும் புரிந்து கொள்ளலாம் - காலம் கடந்தாவது.

என்னைப் பொறுத்த வரையில் பெருங்குற்றவாளிகள் பாக் ஜலசந்திக்கு மேற்கிலும், வடக்கிலும் தான் இருக்கிறார்கள். பதிவின் துவக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்தாலே, ஈழத்தை உண்ண வரும் தமிழகம் போலத் தான் தோன்றுகிறது. உங்களுக்கு?

பிரபாகரனைப் பொறுத்த வரையில், ஒரு வீரனாகப் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, பெரிய போராட்டம் செய்தவராகவே தென்படுகிறார். All is fair in Love & War எனும் அடிப்படையில், தவறு என்றாலும், புலிகளின் பயங்கரவாதத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று பி.பி.சி. தளத்தில், இலங்கையில் இருந்து வெளிவரும் Island செய்தித் தாள், பிரபாகரன் பெரிய வீரன் என்றால், ஏன் ஓட ஒளிய வேண்டும்? சயனைட் குப்பி என்ன ஆயிற்று? என்று எள்ளலாகக் கேட்டதைப் படிக்க நேர்ந்தது.

அந்த அறிவிலிகளுக்குச் சொல்லிக் கொள்வது - அவர் கோழை என்றால், எப்போதோ இலங்கையை விட்டு வெளியில் இருந்து போராட்டம் செய்திருப்பார். இத்தகைய செயல், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டிருக்கும். ஏனென்றால், ஒரு போராட்டம் தொடர, தலைமை மறைவிடத்திலிருந்து செயல் படுவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும், குடும்பத்துடன், வாழ்நாள் முழுதும் வனங்களில் செலவழித்து, குண்டடி பட்டு (அதுவும் தலையில் தான், புற முதுகில் அல்ல) இறந்தாக எண்ணப்படும் ஒரு வீரனை, இவ்வளவு கேவலப் படுத்துவதில் இருந்து அவர்களின் மன வக்கிரங்கள் புரிகிறது. ஈழ மக்களின் போராட்டத்துக்கான அடிப்படை சிங்கள பேரின வாதத்தின் முகமும் தெரிகிறது.

இதை நான் எழுதியது, என்னைப் போன்ற மிகக் குறைந்த அளவில் இந்த விடயம் பற்றி புரிதல் உள்ள இந்தியர்களுக்காக. இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்காமலே, புலிகளைப் புரிந்து கொள்ளவும், ஈழ மக்களுக்காக கவலைப்படவும் முடியும் என்று புரிய வைப்பதற்காக மட்டுமே.

இதில் தகவல், கருத்துப் பிழைகள் இருந்தால் - ஒரு குழந்தையின் முதல் தவறை மன்னிப்பது போல விட்டு விடுங்கள்.

முடிந்தால் இதன் மூலப் பதிப்பையும், அதன் பின்னூட்டங்களையும் பாருங்கள்

http://anujanya.blogspot.com/2009/05/blog-post_28.html


நன்றி அனுஜன்யா
ரகுநாதன் யாழ் இணையம்

அறிஞர்
01-06-2009, 07:56 PM
தெளிவான அலசல்.
இந்திய கண்ணோட்டத்தில் பிரபாகரன் குற்றவாளி (ராஜீவ் மரணத்திற்கு பின்)
இலங்கை தமிழர் கண்ணோட்டத்தில் விடுதலை போராளி.
---------
எல்லாருமே எல்லாரையும் எப்பொழுதும் திருப்தி படுத்த இயலாது.

lenram80
01-06-2009, 08:11 PM
கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், தன்னை வளர்த்து விட்ட இந்தியாவின் ஆதரவை பிரபாகரன் என்றைக்குமே இழக்க விரும்பி இருக்கமாட்டார்.
இந்தியாவின் (இதில் தமிழ் நாடும் அடக்கம்) ஆதரவு இல்லாமல் அவருக்கு போராட்டம் வெற்றி பெறாது என்பதை அவர் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும்.

அப்படியிருக்க ராஜிவைக் கொன்ற பிறகு எப்படி இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்று எண்ணினார்? கண்டிப்பக அவர் அப்போது அவருக்கு
ஆதரவாக இருந்த தமிழக அரசியல் புள்ளிகளுடன் இது பற்றி பேசாமலா இப்படி ஒரு படுகொலையை செய்திருப்பார்?

அவருக்கு யாரோ (அப்போதைய ஆதரவு தலைகள்) காங்கிரஸ் இனிமேல் இந்தியாவில் ஆட்சிக்கு வருவதே கஸ்டம். எனவே, இந்த படுகொலை
நடத்துங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்.

இல்லையென்றால் இந்த அளவுக்கு முட்டாள் தனமான ஒரு செயலை எப்படி 15 வருடம் (அப்போது) போராடிய ஒரு இயக்கம் செய்திருக்கும்?

அப்படியே எவரேனும் சொல்லியிருந்தாலும், இந்த இயக்கம் எப்படி இது பற்றி சிந்திக்காமல் போனது?

lenram80
01-06-2009, 08:31 PM
தலைமை என்பது வேறு. ஆளுமை என்பது வேறு. MBA படிப்புகளின் போது கிட்லரைத் தான் 'ஆளுமை'க்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள். ஒரு தவறான கொள்கைக்கு தன் கூட்டத்தை திசை திருப்ப எவ்வளவு ஆளுமை வேண்டும் என்று.

அதுபோல, நேரு அறிவியல் கொள்கைகளில் கவனத்தை திசை திருப்பிய போது (காந்தி கூட இயந்திரமயமாதலை எதிர்த்தவர்)
குறிப்பாக அணு, விண்வெளி போன்ற துறைகளில் புத்தம் புதிய சுதந்திர வறுமை இந்தியாவுக்கு "இந்த செலவு தேவையா?" என்ற எதிர்ப்பு பலமாக இருந்தாலும் "எதிர் காலத்தை" யோசித்து செயல் பட்டதால் 'தலைமை' என்பதற்கு உதாரணமாகிறார்.

வரலாற்றுப் படி, தளபதிகளையும், கல்விமான்களையும் தன்னை சுற்றி வைத்துக் கொண்ட புரட்சியாளன் தான் வெற்றி பெற்றுள்ளான். வெறும் தளபதிகளை மற்றும் நம்பிய அரசன்??

lenram80
01-06-2009, 08:52 PM
1.30 வருட ரத்தம் குடித்த புரட்சிகர ஏழ மண், ஒன்னுமே விளையாமல் நந்திக் கடலினுல் கொட்டப்பட்டது.
2.மக்களின் நம்பிக்கை குறைந்து இனிமேல் எந்த ஒரு புரட்சி இயக்கமும் வ(ள)ர விடாமல் செய்து விட்டது.
3.சும்மா இருந்தவர்களை உசுப்பி விட்டு "போர்வை"க்கு ஆசைப் பட்டு 'வேட்டி'யே இல்லாமல் அலைய விட்டது.

என்ன செய்வது? கடைசியில் தான் கிளைமாக்ஸ் தெரிகிறது.

ஓவியா
01-06-2009, 10:28 PM
இல்லையென்றால் இந்த அளவுக்கு முட்டாள் தனமான ஒரு செயலை எப்படி 15 வருடம் (அப்போது) போராடிய ஒரு இயக்கம் செய்திருக்கும்?



லெனின்80,
எனக்கு ஒன்று மட்டும் யோசிக்க வருகின்றது, ஞாயமான ஒரு காரணத்திற்க்காக 15 வருடத்திற்க்கும் மேலாக போராடிய.. போராடிக்கொண்டிருந்த ஒரு இயக்கம் இப்படியொரு காரியத்தை வேற்று நாட்டில் செய்ய துணிந்திருந்தால் அப்பொழுது அங்கு தமிழீழத்தில் வாழ்ந்த மக்கள் இந்த அன்னியர்களினால் எப்படி ஒரு மரண வேதனையை அனுபவித்திருந்திருப்பார்கள்!!!


கருத்து தவறாயிருந்தா மன்னிக்கவும் மக்களே. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பதிந்தேன். :)

(கவணிக்க, அவர்கள் தமிழ்நாட்டில் நடித்திய காரியத்தை நான் சரி என்று எங்கும் வாதாடவில்லை. ஆத்திரகாரனுக்கு புத்தி... என்பதை நானும் ஏற்க்கிறேன். ஆனால் சாது மிரண்டால்..... )


*****************************************************************************************************

நல்ல பகிர்வு, நல்ல அலசல்.

நன்றி: அனுஜன்யா, ரகுநாதன் யாழ் இணையம்
நன்றி: ராஜ்குலன்

இறைநேசன்
02-06-2009, 04:09 AM
லெனின்80,
எனக்கு ஒன்று மட்டும் யோசிக்க வருகின்றது, ஞாயமான ஒரு காரணத்திற்க்காக 15 வருடத்திற்க்கும் மேலாக போராடிய.. போராடிக்கொண்டிருந்த ஒரு இயக்கம் இப்படியொரு காரியத்தை வேற்று நாட்டில் செய்ய துணிந்திருந்தால் அப்பொழுது அங்கு தமிழீழத்தில் வாழ்ந்த மக்கள் இந்த அன்னியர்களினால் எப்படி ஒரு மரண வேதனையை அனுபவித்திருந்திருப்பார்கள்!!!

தங்களின் கருத்து மிக சரியானது என்றே நான் கருதுகிறேன்.

இந்திய அமைதிப்படை வீரர்களால் ஈழ தமிழ் மக்கள் அடைந்த துன்பங்கள் என்றுமே ஆற்ற முடியாத கொடூர ரணமாகி போனது. அதன் பிரதிபலிப்புதான் எதிர்வரும் துன்பங்களை ஆராயாமல் கொலை செய்ய தூண்டும் நிலைக்கு கொண்டு சென்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை

ஆனால் அதற்க்கு ராஜீவ் தான் பொறுப்பாளி என்று உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனின் அவர் படைகளை அனுப்பியது அமைதிக்க்காகதான் ஆனால் அமைதிப்படயோ அங்கு அட்டூளியபடை ஆகிப்போனது!

நேசம்
02-06-2009, 04:36 AM
நல்ல அலசல்.அமைதிப்படை சென்றபோது சிங்கள ராணுவம் விடுதலைபுலிகளுக்கு ரகசியமாக ஆதரவு கூடுத்து என்று சொல்லப்படுகிறது.உண்மையா...... அகிம்சை வழியில் போராடியவர்களையும் விடுதலைபுலிகள் ஆதரித்து வந்து இருந்தால் அவர்களுக்கு திவிரவாத முத்திரை விழுந்து இருக்காது என்று நினைக்கிறேன்

கா.ரமேஷ்
02-06-2009, 04:42 AM
நல்லதொரு அலசல்.... எந்தஒரு மனிதனும் வன்முறையை விரும்பி ஏற்க மாட்டான்.அந்த மக்களின் வேதனைகள் ரணமான துக்கங்கள்தான் அவர்களை அந்த பாதைக்கு அழைத்து செல்லபட்டிருக்கிறது....

விக்ரம்
02-06-2009, 11:10 AM
எந்தஒரு மனிதனும் வன்முறையை விரும்பி ஏற்க மாட்டான்.அந்த மக்களின் வேதனைகள் ரணமான துக்கங்கள்தான் அவர்களை அந்த பாதைக்கு அழைத்து செல்லபட்டிருக்கிறது....
வன்முறை இரண்டு புறமும் கூர் செய்யப்பட்ட கத்தி.

30 வருட காலமாக போராடினது எல்லாம் வேஸ்ட் என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கு.

மீண்டும் அதே வழியில் போராடப் போகிறோமா? அப்படி போராடி மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்கப் போகிறோமா? இப்படி எத்தனை முறை தான் ஆரம்பித்து, பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து நிற்பது..

30 வருஷத்துக்கு முன்னாடி நல்ல மீடியா இல்லை. உண்மையான மனிதாபமான குழுக்கள் இல்லை. இன்று அனைவரது பார்வையும் இலங்கையை நோக்கி திரும்பியிருக்கிறது.

anna
02-06-2009, 12:23 PM
அருமையான அலசல் விரிவான ஆதாரங்கள் அருமையாக உள்ளது. எப்படியோ நம் தமிழ்மக்கள் அமைதியான வாழ்வுஈழத்தில் இருந்தால் அதுவே போதும். அதற்கும் பங்கம் வந்தால் ?????????????????

praveen
02-06-2009, 12:44 PM
நண்பரே வன்முறை என்பதனையும் போர் என்பதனையும் சரியாக புரிந்து கொள்ள முடியாத உங்களுடன் வாதிட முடியவில்லை. தனிப்பட்ட நபர் இயக்கம் செய்தால் வன்முறை அதே நாடு ஒன்று செய்தால் போர்.

இலங்கை ராணுவம் செய்தது தான் வன்முறை, கண்மூடித்தனமாக சொந்த நாட்டு மக்களையும் கொன்று குவித்தது, ஆனால் விடுதலைப்புலிகள் விமானத்தை கொண்டு சென்று கொழும்பில் இடித்த போதும் மக்களுக்கு பாதிப்பில்லாபடி அரசாங்க கட்டிடத்தில் தான் கொண்டு சென்று இடித்தார்கள். அதனை வன்முறை இயக்கம் என்று உலக நாடுகளிடம் சொல்லி தான் இவ்வளவும் இலங்கை அரசாங்கம் செய்திருக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் வன்முறை தாக்குதல் அவ்வப்போது செய்ந்திருந்தால், இலங்கையில் சிங்களர் பலர் எப்போதோ இறந்திருப்பார்கள், ஏனென்றால் புலிகள் சம்பளம் வாங்கி வேலை செய்யும் சிப்பாய்கள் இல்லை, இயக்கத்திற்காக உயிரை துச்சமென மதித்து செய் அல்லது செத்துமடி என்னும் வாசகத்திற்கு சொந்தக்காரர்கள்.

கா.ரமேஷ்
02-06-2009, 12:48 PM
வன்முறை இரண்டு புறமும் கூர் செய்யப்பட்ட கத்தி.

30 வருட காலமாக போராடினது எல்லாம் வேஸ்ட் என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கு.

மீண்டும் அதே வழியில் போராடப் போகிறோமா? அப்படி போராடி மீண்டும் ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்கப் போகிறோமா? இப்படி எத்தனை முறை தான் ஆரம்பித்து, பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து நிற்பது..

30 வருஷத்துக்கு முன்னாடி நல்ல மீடியா இல்லை. உண்மையான மனிதாபமான குழுக்கள் இல்லை. இன்று அனைவரது பார்வையும் இலங்கையை நோக்கி திரும்பியிருக்கிறது.



நல்ல நகைச்சுவை,
நல்ல மீடியா இருக்கிறதா??? உண்மையான மனிதாபிமான குழுக்கள் இருக்கிறதா???

அதைவிட இவற்றையெல்லாம் பொய்த்து போக செய்ய இந்தியா,சைனா,இலங்கை,பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கிறது என விட்டுவிடீர்களே தோழரே.
யாரை பயன்படுத்த சொல்லுகிறீர்கள் கம்பிவலையத்திற்குள்ளே அடைத்து வைத்து இருக்கிற பொதுமக்களை போராட சொல்கிறீர்களா? ஏற்கனவே அரைபைத்திய நிலைக்கு ஆளாக்கிவிட்டவர்களை சொல்கிறீர்களா? அரவமற்ற அமைதி நிலையில் இருக்கும் புலிகளை சொல்கிறீர்களா?

உள்ளூர் பத்திரிக்கைகாரர்கள் கொடுமையை பற்றி எழுதினாலே வெள்ளை வேன் தாக்குதல் நடக்கிறது.இதில் இதுவரை வேடிக்கை பார்த்த உலக சமுதாய மீடியாக்கள் போராட போகிறதாம்...ஆதாரம் வைத்திருந்தும் ஐ.நா வே ஒன்றும் செய்யமுடியவில்லை... பயன்படுத்த போகிறார்களாம்...?.....
http://tamilwin.com/view.php?2aaOE9tPb0bcDDpYQ00eccC0jt30cc2ZZLuu24d326Wn544b32VVQ664d4euUG7fdd0eePh2ggde
http://thatstamil.oneindia.in/news/2009/06/02/lanka-sri-lankan-journalist-assaulted.html

அமரன்
02-06-2009, 03:05 PM
தாமரை அண்ணா சொல்வது போல இப்படிச் செய்யாதே என்று சொல்லப்படுகிறதே தவிர இப்படிச் செய் என்று எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. ஈழமக்களின் இப்போதய தேவைகள் பற்பல.

வார்த்தைப் பயன்பாடுகளில் அதிக கவனம் இருக்கட்டும் தோழர்களே!

lenram80
02-06-2009, 05:35 PM
லெனின்80,
எனக்கு ஒன்று மட்டும் யோசிக்க வருகின்றது, ஞாயமான ஒரு காரணத்திற்க்காக 15 வருடத்திற்க்கும் மேலாக போராடிய.. போராடிக்கொண்டிருந்த ஒரு இயக்கம் இப்படியொரு காரியத்தை வேற்று நாட்டில் செய்ய துணிந்திருந்தால் அப்பொழுது அங்கு தமிழீழத்தில் வாழ்ந்த மக்கள் இந்த அன்னியர்களினால் எப்படி ஒரு மரண வேதனையை அனுபவித்திருந்திருப்பார்கள்!!!


அது முழுக்க முழுக்க பழி வாங்கும் நடவடிக்கை. எந்த ஒரு எதிர் வினையும் ஆராயாமல்(!) ஆத்திரத்தில் திட்டமிட்டு செய்யப்பட்ட அட்டூழியம்.

உன்னை நம்பி ஒரு இனம் இருக்கும் போது (ஈழம்), உன்னை ஆதரித்து ஒரு இனம் இருக்கும் போது (தமிழகம்/இந்தியா), ஆதரிக்கும்
நாட்டின் தலைவனை கொல்வது முட்டாள் தனமாக தெரியவில்லையா?

பெரிய வைக்கோல் போர் ஒன்று தனக்கு தானே ஒரு சிறு நெருப்புப் பொறியை 1991 மே 21-ல் வைத்துக் கொண்டது. 2009 மே 18 - ல் அந்த நெருப்புப் பொறி அக்னியாய் மாறி அழித்தே விட்டது.

"அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு மரப் பொந்திடை வைத்தேன். பற்றி எரிந்தது காடு. தழல் 'தவறில்' குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?"

jk12
02-06-2009, 06:03 PM
ஓரு அருமையான அலசல்...
நன்றி திரு.அனுஜன்யா / மற்றும் திரு.ராஜ்குலன் (புதியவன்).
இந்த நூற்றாண்டின் ஓப்புயற்வற்ற வீரர் திரு.பிரபாகரன் அவர்கள்; இன்னும் மனதளவில் நான் அவர் எங்கோ நலமுடன் தங்கள் இனமனிதர்களின் சீரிய வாழ்க்கைக்கு சிந்தித்துகொண்டுள்ளார் எனத்தான் நம்புகிறேன்.

அனுஜன்யா அருமையாக கருத்துக்களை பதிந்துள்ளிர்கள்.
தமிழக மக்களாகிய நமக்கே நம் மொழி பேசுபவர்கள் அங்கு படும் கஷ்ட்டம் சரியாக புரியாதபொழுது இந்தி பேசும் இந்தியாவின் பெரும்பாலாணோர் எப்படி சரியாக் உணர முடியும்; அவர்கள் இவ்விஷயங்களை செய்தியாகதான் படிப்பார்கள் / கேட்பார்கள்.... உணரமாட்டார்கள்.
அதே போல் உங்கள் கருத்தில் இருந்து ஓரு சிறிய விஷயத்தில் மாறுபடுகிறேன்.... இலங்கையில் தொன்மையாக வாழும் தமிழர்களும் தேவையேன்றால் நம்மை தமிழர்கள் என நினைப்பதும் இல்லையேனில் நம்மை (இந்திய தமிழர்கள், தோட்ட தமிழர்கள்,...) அன்னியராக நினைப்பதும் எப்போழுதும் நடந்து வந்ததே...
இதற்கு ஏற்ப நம் நண்பர் திரு.ஓவியாவின் பதிவில் உள்ள வார்த்தைகளையும் சிறிது கவனியுங்கள்

அங்கு தமிழீழத்தில் வாழ்ந்த மக்கள் இந்த அன்னியர்களினால் எப்படி ஒரு மரண வேதனையை அனுபவித்திருந்திருப்பார்கள்!!!



நல்லதொரு அலசல்.... எந்தஒரு மனிதனும் வன்முறையை விரும்பி ஏற்க மாட்டான்.அந்த மக்களின் வேதனைகள் ரணமான துக்கங்கள்தான் அவர்களை அந்த பாதைக்கு அழைத்து செல்லபட்டிருக்கிறது....
உண்மைதான்... நம் தமிழகத்திலே குமரி மாவட்டத்துகாரர்கள், கமுதியை சுற்றியுள்ளவர்கள், போன்ற ஊரில் இருந்து வந்தவர்களுக்கு இயற்கையாகவே சிறிது வேகம் இருக்கும்... அவர்கள் எதாவதொரு காலகட்டத்தில் எதாவது ஓரு திவிர போராட்டம் / வன்முறையை சந்தித்து இருப்பார்கள். இதே போல சென்னையை சுற்றி உள்ள ஊர்களில் 20 வருட காலங்களுக்கு முன்பு மிகவும் சாத்விகமாக இருந்தவர்கள் அதற்கடுத்து நடந்த போராட்டங்களால் அவர்களின் இயல்பினிலேயே சிறிது கடினம் கூடியிருந்ததை அந்த பகுதியில் வேலை பார்க்கும் பொழுது உணர்ந்துள்ளேன்.

அமரன்
02-06-2009, 09:05 PM
சிங்களன் அடிச்சான். தமிழன் வெகுண்டான். இந்தியா எங்கள் பக்கம் என்றான். நம்பினோம்.. ஒரு கட்டத்தில் இந்தியாவும் எங்களிடம் வந்தது. விடிந்ததென பாடிப்பறந்தோம். சிங்களன் செய்த அத்தனையும் இந்தியாவும் செய்ய சிறகறுந்து வீழ்ந்தோம். நம் கையே நமக்குதவி என்றார்கள் புலிகள். வேறு வழியின்றி ஒத்துக்கொண்டோம். ஒத்துழைத்தோம். வீழ்ந்தவனை மென்மேலும் ஏறி மிதித்தது சிங்களம். உதவி செய்தது பாரதம். கண்ணீருடன் கேட்டால் இந்தியத் தலைவனைக் கொன்றீர்கள் என்றார்கள். காப்போம் என்ற புலிகளும் காணாமல் போய்விட்டனர்.

இப்போ கால் வயிறு கஞ்சிக்கும் வழியில்லை. ஆடையில் விழுந்த ஓட்டை அடைக்க துண்டுத் துணியுமில்லை. நீங்கள் என்னட்டான்னா வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு வாகாய் உட்காந்தபடி வெத்தலையை போட்டுக்கொண்டு வியாக்கியானம் கதைக்கிறீங்க. இப்படி பழிக்குப் பழியெனும் கொள்கைகளுக்க்குப் பலியாகிக் கொண்டிருக்கிறோம். பழிவாங்கும் படலம் முடிந்ததாகவும் தெரியல. முடியுங்கிற நம்பிக்கையும் துளிகூட இல்ல. எங்கள் கதிதான் என்ன?

-ஈழத்தின் புதல்வன்.

கா.ரமேஷ்
03-06-2009, 05:19 AM
ஒரு மாவீரன் தலைமையில் கட்டிகாத்த தேசத்தை அழித்ததை பற்றி பேசுவதற்க்கு இங்கு நிறைய பேர் தயாராய் இல்லை என்றே தோன்றுகிறது தோழரே...!1 லட்சம் மக்களை கொன்றவர்களை தட்டி கேட்க தைரியமில்லாத உலகமாய்தான் படுகிறது.
தன்னிச்சையாக செயல்படும் ஐ.நா வும்,சுதந்திரமாய் வாழும் ஜனநாயகமும்,பத்திரிக்கைகளும் இல்லாத உலகம் இன்னும் பல அழிவுகளை சந்திக்கும் , ஈழம் போல் சிறுபாண்மை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அழிவுக்கு உட்படுத்த படுவார்கள் இலங்கை போன்ற நாடுகள் சீனா,இந்தியா போன்ற நாடுகளின் துணையோடு அழிவுகளை தைரிமாய் செய்யும்,அப்படியே எதிர்ப்பு வலுத்தாலும் அதை தடுப்பதற்க்கு "நேடோ" எனும் அதிகாரம் படைத்த நாடுகள் அதனை பொய்த்து போக செய்யும். மொத்தத்தில் மனிதம் கொன்று புதைக்கபடும்.

கற்பழிப்புகளும்,வண்கொடுமைகளும் நிகழ்வதை தான் நல்ல அரசு என நினைக்கிறார்கள் போலும்.தாயை விட்டு பிள்ளைகளையும்,உறவுகளையும் பிரிக்கும் அரசுதான் நல்ல அரசு போலும்.மின்கம்பி வலையத்திற்க்குள் சுருக்கப்பட்டு,கால் வயிற்று கஞ்சிக்கு அலையவிடும் அரசு நல்ல அரசு போலும்.

வலிகள் அவரவருக்கு வரும்போதுதான் தெரியும்.வலிகளை அறிந்தவர் அவர்,அவரால் மட்டுமே அப்படிபட்ட தேசத்தை உருவாக்க முடியும்.

மதி
03-06-2009, 06:46 AM
அட போங்கப்பா... எத்தனை தடவை தான் சொல்வது.. செய்திசோலையில் தத்தம் கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனையோரின் கருத்துக்கு பதிலளித்து விவாதக்களமாக்காதீர்கள் என்று. தேவையெனில் விவாதப்பகுதியில் திரி ஆரம்பித்து அங்கு வாதிடுங்கள்.

திரிக்கு சம்பந்தமில்லாத பகுதிகளும் பதிவுகளும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மன்ற உறவுகளின் ஆதரவை என்றென்றும் எதிர்நோக்குகிறோம்.

இனி இத்திரியில் திரிக்கு சம்பந்தமாய் மட்டும் பதியுங்கள்.