PDA

View Full Version : மனைவி.........? காதலி........?



Nanban
24-09-2003, 10:37 AM
எனக்குப் பிடிக்கும் என்று
கசங்காத
காட்டன் புடவைகளையே
எப்பொழுதும் கட்டி வருவாய் -
காதலித்த காலத்தில்.

இன்றும் எனக்கு
காட்டன் புடவைகளையே பிடிக்கிறது -
உனக்குத் தான்
வியர்வை படிந்த நைட்டியே
உலகமாகி விட்டது எப்பொழுதும்...

மனைவியாகக் கடமை செய்கிறாய் -
டீயும், பேப்பரும் தலமாட்டில்,
இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.
காதலியாக செய்யும் கடமைகள் மட்டும்
குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே...

நீ காலையில் உடுத்திப் போகும் ஆடை
மாலையில் வந்து பார்க்கும் முன்னே
அழகாக மடித்து அலமாரி உள்ளே போய்விடும்
நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்
நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...

காதலியாக இருந்த பொழுது -
ஒருநாள் மறந்தாலும் சினந்து
காதைத் திருகுவாய்
'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'
சொல்லவில்லையென்று...

இன்று வருடத்திற்கு
ஒருமுறை சொல்ல முயலும் முன்னே
நெற்றிக்கண் திறக்காத குறையாய்
கடிந்து பேசுகிறாய்
'பொறுப்பில்லாத மனுஷன்' என்று.

மனைவியாக நீ இருந்தது போதும் -
காட்டன் புடவை கட்டிய
காதலியாக இன்று மட்டும் வா.
உன் காதோரத்தில்
'நான் உன்னை நேசிக்கிறேன்'
என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
உன் பிறந்த நாளான இன்று மட்டுமாவாது.....

இக்பால்
24-09-2003, 10:59 AM
நீங்கள் முன்னர் மாதிரி இல்லை....

நீதான் முன்னர் மாதிரி இல்லை....

இப்படியே எந்த மாதிரியும் இல்லாமல் காலம் போய் விடும்.

தங்கைக்கு மன்றத்தின் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

-அன்புடன் அண்ணா.

Nanban
24-09-2003, 11:40 AM
நீங்கள் முன்னர் மாதிரி இல்லை....

நீதான் முன்னர் மாதிரி இல்லை....



காதல் வெற்றியில், அதாவது, திருமணத்தில் முடியும் பொழுது, இந்த புலம்பல்கள் தான் அதிகம் மிஞ்சுகிறது........

poo
24-09-2003, 12:37 PM
அனுபவக்கவிதையா?!!

நன்றாக அனுபவிக்கமுடிகிறது படிக்கும்போதே!!

நண்பருக்கு நன்றிகள்!

karavai paranee
24-09-2003, 02:46 PM
நண்பனின் கவிதை அருமை
எனக்குத்தான் உறுத்துகின்றது
காதலித்தவளை காதலியாகவே வைத்திருக்கவா கல்யாணம் செய்யவா என.......
அவள் திருமணத்தின் பின்பும் காதலியாகவே வேண்டும். இன்றைய குறும்புகள் இன்றைய சினுங்கல்கள் இவையெல்லாம் நீடிக்குமா ???

puppy
24-09-2003, 02:55 PM
இதற்கு ஒரு பதில் கவிதை எழுத வேண்டும் என்று துடிக்கிறது........

இளசு
24-09-2003, 06:49 PM
இதற்கு ஒரு பதில் கவிதை எழுத வேண்டும் என்று துடிக்கிறது........

துடிப்பை வடியுங்கள் ப்ளீஸ்...!

இளசு
24-09-2003, 06:57 PM
அன்று மகன் - இன்று அப்பா
அன்று பள்ளியில் - இன்று பணியில்
அன்று கால்சட்டை - இன்று பிரிமீயர் வேட்டி..

உள்ளூறும் உள்ளம் அதே...
வெளிக்காட்டும் வடிவம் மாறும்...

போடா போக்கிரி அன்றைய காதல்..
பொறுப்பில்லா மனுசன் இன்றைய காதல்..

காலம் போட்ட புதுச்சட்டையை
சாளேஸ்வரக் கண்ணால் உற்றுப்பார்க்கிறேன்..
ஆ!
படலத்துக்குபின்
தெரியுதே...
நான் காதலித்த அதே மனது!

என் பாராட்டுகள் நண்பனுக்கு...

nalayiny
24-09-2003, 07:00 PM
மனைவியாக நீ இருந்தது போதும் -
காட்டன் புடவை கட்டிய
காதலியாக இன்று மட்டும் வா.
உன் காதோரத்தில்
'நான் உன்னை நேசிக்கிறேன்'
என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
உன் பிறந்த நாளான இன்று மட்டுமாவாது.....

பல நிமிடங்கள் எனக்குள் பெரு அமைதி. பின்னர்அமைதியை நானாகவே குலைத்து விட்டேன். இன்னும் அமைதியாக இருந்து விட்டால் எனது கண்ணில் நீர்த்திவாலைகள் தோன்றி தங்களின் கவிதையை மறைத்துவிடும் என்பதற்காய். அற்புத கவிதை.
_________________

Chiru_Thuli
25-09-2003, 04:16 PM
அன்பே - அடியே!
வா செல்லமே - வாடீ!
நடை அழகு - நடையைப் பாரு!
பேசப் பேசக் கேட்கனும் - போதும் நிறுத்து!
தினம் ஒரு பூ - தினமும் ஒரே பூ!
செல்லப் பெயர் - சொல்லவொன்னாப் பெயர்!
சிரிச்சுப் பார்க்கனும் - இளிக்காத!
காலமெல்லாம் காத்திருப்பேன் - எவ்வளவு நேரன்டி புறப்பட?

இவ்வளவு மாறியிருக்கும் போது
காட்டன் புடவை நைட்டி ஆனது என்ன ஆச்சரியம் கணவா?

முத்து
25-09-2003, 05:19 PM
அருமையான கவிதை.. நண்பன் அவர்களுக்கு நன்றி...

nalayiny
25-09-2003, 06:52 PM
அன்பே - அடியே!
வா செல்லமே - வாடீ!
நடை அழகு - நடையைப் பாரு!
பேசப் பேசக் கேட்கனும் - போதும் நிறுத்து!
தினம் ஒரு பூ - தினமும் ஒரே பூ!
செல்லப் பெயர் - சொல்லவொன்னாப் பெயர்!
சிரிச்சுப் பார்க்கனும் - இளிக்காத!
காலமெல்லாம் காத்திருப்பேன் - எவ்வளவு நேரன்டி புறப்பட?

இவ்வளவு மாறியிருக்கும் போது
காட்டன் புடவை நைட்டி ஆனது என்ன ஆச்சரியம் கணவா?

உண்மை தான். வாழ்க்கை ஒருமுறை.அதை அழகாக வாழ்ந்து பாற்பது தானே சிறப்பு. ஒரு போதுமே கணவன் மனைவி தூரவிலகிவிடக்கூடாது. கோபம் வரும் போது யாரோ ஒருவர் மெளனியாகி விடுவது எத்தனை சிறப்பு.அப்படி என்றால் அத்தனை காதல் ரசனையோடும் காலம் முழுக்க வாழலாம்.

இருவருமே தங்களின் ரசனைகளை விருப்பு வெறுப்புக்களை அடிக்கடி பகிரவேண்டியவர்களாகவும் அதற்கு ஏற்ப சமாளிக்க பழகவேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.

இ.இசாக்
25-09-2003, 08:42 PM
எல்லோரும் வாழ்க்கையென்பதை
மற்றவருக்கானதாக வடிவமைத்துக்கொண்டோம்
அதன் தொடர்ச்சி
எதிலும் நமக்கான சிந்தனை முன்னிற்பதில்லை.
அதாவது இயல்பாக அல்லாமல் போலியாக சிந்தித்து திட்டமிட்டு
செயல்பட தொடங்குகிறோம்
இதுவே வாழ்க்கை விசயத்திலும் நிகழ்வதால்.
நாளை என்பது நிம்மதியற்றதாகிறது.

gankrish
26-09-2003, 06:49 AM
நண்பா அனுபவிச்சு எழுதின கவிதை போலும் . சூப்பர். அதற்க்கு நம் சிறுதுளி தந்துள்ள விளக்கமும் அருமை.

Pant லுங்கியாகலாம்.. புடவை நைட்டி ஆக கூடாதா.. ??? (இது எப்படி இருக்கு) :p:p

Nanban
26-09-2003, 12:43 PM
சிறுதுளியின் பதில் அருமை. காதல் உறவில் இருக்கும் மயக்கம் திருமணத்தில் தெளிந்து விடுகிறது. தெளிந்த பின்னும், இருவரும், பக்குவப் பட்டிருந்தால், காதல் தொடர்கிறது. சில சில இன்பமான இம்சைகளுடன். சிறிய சிறிய இடைவெளிகள் காதலைப் புதுப்பித்து விடுகின்றன.

karikaalan
26-09-2003, 01:13 PM
நண்பன்ஜி, கவிதை நன்றே.

இப்போக்கைப் பற்றி பெரிய விவாதமே நடந்திருக்கிறது -- இன்னோர் களத்தில். காதல், திருமணமான பின்னர், காதலாகவே தொடர இருவருமே பல தியாகங்களைச் செய்யவேண்டும். அதற்கு மனோபாவம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். பிரகு எப்போதும் வசந்தம்தான்.

===கரிகாலன்

Nanban
26-09-2003, 01:29 PM
காலம் போட்ட புதுச்சட்டையை
சாளேஸ்வரக் கண்ணால் உற்றுப்பார்க்கிறேன்..
ஆ!
படலத்துக்குபின்
தெரியுதே...
நான் காதலித்த அதே மனது!



இந்தப் பார்வை எல்லோருக்குமே வரப் பெற்றால், காதலை ஊன்றுகோல் கொண்டு நடக்கும் வயதிலும் அறிந்து கொள்ளலாம். காதலித்தோ, பெற்றோர் துணை கொண்டு அறிந்து திருமணம் புரிந்தாலும், நாளாக, நாளாக காதல் கொண்ட மனதை அறிந்து கொள்வதில் தடுமாற்றம் அடைந்தால் கசப்பு தட்டி விடுகிறது வாழ்க்கை. ஈகோ என்ற பெரு நெருப்பில் விழுந்து மாய்ந்து கொள்ளும் மானிடர், தம் வேதனைகளை மறந்து, அடுத்தவன் எரியும் நெருப்பின் வேதனையில் துடிப்பதைப் பார்த்து, அந்த வேதனையே தன் வெற்றி எனக் கொண்டாடும் மனிதன், அதே நெருப்பில் தன்னுடைய அழிவும், தோல்வியும், அடங்கியிருப்பதைப் பொருட்பட்டுத்தவில்லை. ஆனால், இத்தகைய குருரத்தை துணையிடம் காட்டுவதென்பது எப்படி பலரால் முடிகிறது என்பது இன்னமும் புரியாத ஒரு புதிர்..........

karikaalan
26-09-2003, 01:35 PM
இத்தகைய குருரத்தை துணையிடம் காட்டுவதென்பது எப்படி பலரால் முடிகிறது என்பது இன்னமும் புரியாத ஒரு புதிர்..........

வாஸ்தவம்தான். லிப்டில் சந்திக்கும் முன்பின் தெரியாதவர்களிடம் ஹலோ சொல்கிறோம். ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்றால், அங்குள்ள கடைநிலை ஊழியரிடம் பல்லிளிக்கிறோம். ஆனால் மனைவி/கணவன் என்ற உறவில் சில சமயம் குரூரங்கள் குதித்துவிடுகின்றன என்பதே கசப்பான உண்மை.

===கரிகாலன்

gans5001
28-09-2003, 01:10 PM
எனக்குப் பிடிக்கும் என்று
கசங்காத
காட்டன் புடவைகளையே
எப்பொழுதும் கட்டி வருவாய் -
காதலித்த காலத்தில்.

இன்றும் எனக்கு
காட்டன் புடவைகளையே பிடிக்கிறது -
உனக்குத் தான்
வியர்வை படிந்த நைட்டியே
உலகமாகி விட்டது எப்பொழுதும்...

எளிய வரிகளில் இதயத்தைத் தொட்டு விட்டீர்கள் நண்பரே..
என்னுள்ளும் பலமுறை இத்தகைய ஏக்கம் இருந்திருக்கின்றது.. காதலியையே மனைவியாய் பெற்றவன் என்ற முறையில்..
ஆனாலும் வியர்வை படிந்த நைட்டியில் என் கண்மணியைக் காணும்போதும் என்னுள் காதல் சுரந்தால்தான் நான் உண்மையான காதலன்.... கணவன்

இளசு
29-09-2003, 12:35 AM
மிக அற்புத விமர்சனங்களை எழுப்பிய கவிதை..
நண்பன் கண்ஸின் கருத்தும், அண்ணலின் ஆதங்கமும்
சிறுதுளியின் பார்வையும் நண்பனின் கவிதையின்
தரத்துக்கு உரைகற்கள்.
நண்பனுக்கு மீண்டும் என் பாராட்டு!
(இன்னும் பப்பி அவர்கள் மிஸ்ஸிங்!)

சேரன்கயல்
29-09-2003, 04:37 AM
நண்பனின் அழகான கவி வரிகளை...எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறேன்...
காதலியே மனைவியாகியிருப்பதால்...மனைவியில் என் காதலியை இழக்காமல் பார்த்துக்கொள்ள ஒரு எச்சரிக்கை நண்பனின் கவிதை...
பாராட்டுக்களும் நன்றிகளும்...