PDA

View Full Version : சர்க்கரை கசக்குற சர்க்கரை...!!!



சிவா.ஜி
30-05-2009, 04:44 AM
"என்னங்க பேயறைஞ்ச மாதிரி மொகமெல்லாம் வெளுத்துபோய் வரீங்க? காலங்காத்தால காப்பிகூட குடிக்காம போனீங்க.....எங்க போனீங்க என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கீங்க? சொல்லுங்க...."

பதில் பேசாமல் மௌனமாய் இருந்த கணேசனை உலுப்பி மீண்டும் கேட்டாள் சரோஜா.

"அட என்னதான் ஆச்சு ஏன் இப்படி பேய்புடிச்ச மாதிரி இருக்கீங்க...சொல்லித் தொலைங்க.."

"பேய் இல்லடி சரோ....நோய் புடிச்சிடிச்சி..."

குரலில் சுரத்தேயில்லாமல் கணேசன் சொன்னதும்....

"அடப்பாவி மனுஷா....ஒனக்கு பொம்பளைங்க சகவாசம் வேற இருந்திச்சா....பகவானே...அப்பவே எங்கப்பா சொன்னாரு...மாப்பிள்ளை முழியைப் பாத்தாலே சரியில்லைன்னு....இப்ப வந்து நோய் வந்துடிச்சின்னு சொல்றியேய்யா....நான் என்ன செய்வேன்...யார்கிட்ட சொல்வேன்..இந்த வயசுல இது தேவையா? வயசுக்கு வந்த பொண்ணையும் பையனையும் வெச்சுக்கிட்டு ஒரு ஆம்பிளை செய்யற காரியமா இது...கடவுளே..எங்கப்பா வேற போய் சேந்துட்டாரே...நான் யார்கிட்டா போய் சொல்லுவேன்"

சரோஜா ஏன் இப்படி சாமியாடுகிறாள் என்று ஒன்றும் புரியாமல் அந்த முழியை வைத்து முயன்றவரைக்கும் உருட்டி, உருட்டி சிந்தித்தாலும் எதுவும் புலப்படாமல்,

'சரோ...நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி குதிக்கற. புருஷனுக்கு நோய் வந்துடிச்சின்னு கேட்டா பொண்டாட்டியா லட்சணமா, என்ன ஆச்சுங்க எப்படி இருக்கீங்கன்னு ஆறுதலா கேக்காம, பொம்பள அது இதுன்னுகிட்டு..."

"ஆமாய்யா...நீ நோய் வந்து கெடப்ப...நான் உனக்கு நளாயினி மாதிரி கூடையில சுமந்து கிட்டு போகனுமா?"

"அடிப்பாவி....உலகத்துல நோய்ன்னா அது ஒண்ணுதானா...ஏதோ சின்னச்சின்ன கவிதையெல்லாம் எழுதறமே...நீ பேய்ன்னு சொன்னதும் ரைமிங்கா நோய்ன்னு சொன்னா........டைமிங் தெரியாம ஏதேதோ பேசறியே....இது உனக்கே நியாயமா சரோ.."

பரிதாபமான அவன் முகத்தைப் பார்த்ததும், மனம் இளகிப்போய்,

"அடடா....நான்தான் அவசரப்பட்டுட்டேனா...என்னங்க ஆச்சு..என்ன நோய் அது இதுன்னு சொல்லி பயமுறுத்துறீங்களே...சீக்கிரம் சொல்லுங்க..."

"என்னத்த சொல்றது சரோ...ம்...நேத்து ஆபீஸ்லருந்து வரும்போது ஒரு நோட்டீஸ் குடுத்தாங்க. ஜெயம் மெடிகல் செண்ட்டர்ல ஃப்ரீ டயாபடிக் பரிசோதனை பண்றாங்கன்னு போட்டிருந்திச்சி. அதுல வேற 40 வயசுக்கு மேல ஆனவங்க கட்டாயம் பரிசோதனை பண்ணிக்கனுன்னு எழுதியிருந்ததப் பாத்ததும், போய் செக் பண்ணித்தான் பாப்பமேன்னு நெனைச்சேன். உன்கிட்ட சொன்னா....நிஜமாவே இருக்குமோன்னு நீ கவலைப் படுவியோன்னுதான் உன்கிட்ட சொல்லல."

"செக் பண்ணிக்கறது நல்லதுதானே...அது சரி என்ன சொல்றாங்க..இப்ப"

"அதான் சரோ சொன்னேனே....வெறும் வயித்துல செக் பண்ணூம்போது 90 தான் இருக்கனுமாம். இந்த வயசுக்கு 100 இல்லன்னா 110 இருந்தாலும் பரவால்ல...ஆனா எனக்கு 130 இருந்திச்சி. அத பாத்துட்டு டாக்டர், நீங்க சர்க்கரை வியாதியோட பார்டர்ல இருக்கீங்கன்னு, நான் ஏதோ பாகிஸ்தான் பார்டர்ல இருக்குற மாதிரி சொன்னாரு"

"அய்யய்யோ அப்புறம் என்ன சொன்னார்?"

"பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல. இப்ப இந்த வியாதி நிறைய பேருக்கு வருது. கிட்டத்தட்ட இது நம்ம தேசிய வியாதி மாதிரி ஆயிடிச்சின்னு ஜோக்கடிக்கறார். அப்புறம் மாத்திரையெல்லாம் இப்ப வேணாம், சாப்பாட்ல கண்ட்ரோலும், கொஞ்சம் உடற்பயிற்சியும் போதும், தினமும் காலையில மூணு கிலோமீட்டர் நடங்க, ஸ்வீட் சாப்பிடாதீங்க, எண்ணை அதிகம் சேத்துக்காதீங்க, உருளைக்கிழங்கு சாப்பிடாதீங்கன்னு....சொன்னார். வரிசையா அவர் சொன்னதை வெச்சுப் பாத்தா, நான் வெறும் பச்சைப்புல்லையும், பச்சைத்தண்ணியையும்தான் சாப்பிடவேண்டியிருக்கும்"

"அப்ப உங்களுக்கு சக்கரை வியாதியா....அப்படீன்னா இனிமே நம்ம வீட்டுக்கு ஒரு கிலோ சக்கரை வாங்கினா போதுமில்ல. எங்களுக்கு மட்டுன்னா அரைக்கிலோவுக்கு பதிலா கால் கிலோ உருளைக்கிழங்கு போதும்...."

"அடியே ராட்சசி....புருஷனுக்கு சர்க்கரை வியாதி வந்துடிச்சேன்னு கொஞ்சம்கூட கவலப் படாம...ஒருகிலோ சர்க்கரைக்கும், கால் கிலோ உருளக்கிழங்குக்கும் சந்தோஷப்படறியா..."

"சரி விடுங்க வந்தத போன்னு வெரட்டவா முடியும். அதான் எல்லாருக்கும் வர்றதுதான்னு டாக்டரே சொல்லிட்டாரே. இனிமே வாயைக் கட்டுங்க. எங்களுக்கு தெரியாம ஆபீஸ் விட்டு வரும்போது கால் கிலோ பால் அல்வா வாங்கி சாப்பிடற வேலையெல்லாம் இனிமே வெச்சுக்காதீங்க. சரி வாங்க சூடா இட்லி செஞ்சு தரேன்..."

சொல்லிவிட்டு அடுக்களைக்குள் போன தர்மபத்தினியையே பார்த்துக்கொண்டிருந்த கணேசன், டாக்டர் சொன்ன கூடாதுகள்ல இட்லி இருக்கான்னு யோசிச்சிப் பாத்துட்டு, இல்லைன்னு தெரிஞ்சதும் ஆறுதலோட சாப்பிடப்போனார்.

சட்னிகூட கொலஸ்ட்ரால் என்று சொல்லி தடைவிதித்துவிட்டு வெறும் சாம்பாரில் மூன்றே மூன்று இட்லிகளை மட்டுமே சாப்பிட அனுமதித்த சரோவை மனசுக்குள் மானாவாரியாய் திட்டிக்கொண்டே தன் அலுவலகம் வந்து சேர்ந்த கணேசன் இருக்கையில் அமர்ந்ததும், சீனு அவரருகே வந்தார். சீனு கணேசனின் நெடுநாள் அலுவலகத் தோழர். ஆத்மார்த்த நண்பன்.

"என்னடா கணேசா..ஒரு சுஸ்த்தில்லாம இருக்க. வீட்ல சண்டையா?"

கேட்ட சீனுவிடம் மீண்டும் ஒருமுறை தனக்கு வந்த சர்க்கரையைப் பற்றி ஒரு பாட்டம் சொல்லி பெருமூச்சு விட்டார்.

"இனிமேத்தாண்டா ஜாக்கிரதையா இருக்கனும்.42 வயசாச்சு. டாக்டர் சொன்ன மாதிரி மாத்திரையை அவாய்ட் பண்றதுதான் நல்லது. இல்லன்னா வாழ்க்கைபூரா மாத்திரை சாப்பிட வேண்டியதுதான். அரிசி சாதம் அதிகம் சாப்பிடாத, ஸ்வீட் சுத்தமா கூடாது. பாவக்காய் ஜூஸ் சாப்பிடு, ஐஸ் கிரீம், மாம்பழம் இதெல்லாம் கூடவே கூடாது...."

சீனு சொல்வதைக் காது கேட்டுக்கொண்டிருந்தாலும், கணேசனின் மனது தன் வசந்தகாலங்களுக்கு ஒருமுறை போய்விட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆனால் மட்டன் பிரியாணி,(சரோ தம் பிரியாணி செய்யறதுல எக்ஸ்பர்ட்) கூடவே ஒரு கப் நிறைய ஐஸ்கிரீம், தினமும், வேலை முடிந்து போகும்போது ஆரியபவனில் பால் அல்வா, கோதுமை அல்வா, ஹார்லிக்ஸ் பர்ஃபி என சாப்பிட்டது, சரோ சுட்டுப் போடப் போட...வரிசையாய் வெட்டிய தோசைகள்...அய்யோ இந்த ருசி கண்ட நாக்கை எப்படி அடக்கப்போறேனோ... பெருமாளே...உன் லட்டு கூட சாப்பிட முடியாம ஆயிடிச்சே...

நினைவுகளிலிருந்து வெளிவரும்போதே புலம்பலுடன்தான் வந்தார்.



அன்றைக்கு வீட்டுக்கு சரோவின் மாமா வந்திருந்தார். கணேசனும் அவரை மாமா என்றுதான் அழைப்பார்.

"மாமாவுக்கு காஃபி குடு சரோ அப்படியே எனக்கும் கொஞ்சம்..ஹி...ஹி...."

இந்த சாக்கிலாவது சர்க்கரை போட்ட காஃபி கிடைக்குமே என்ற நப்பாசையில் கணேசன் சொன்னாலும் சரோஜாவின் முறைப்பைப் பார்த்ததும் அந்த ஆசையை அப்படியே அடக்கிக்கொண்டார்.

திரும்ப வந்த சரோஜாவின் கையில் இரண்டு கோப்பைகளைப் பார்த்ததும், மீண்டும் அந்த ஆசை வந்துவிட்டது. தர்மபத்தினியை காதலோடு பார்த்துக்கொண்டே ஒரு கோப்பையை எடுக்க நீட்டியக் கையை சரோஜா தட்டிவிட்டு,

"இதான் உங்களுக்கு. இது மாமாவுக்கு..."

என்று சொன்னவளைப் பார்த்து மாமா,

"ஏம்மா சரோஜா...ரெண்டும் காப்பிதான...எத வேணுன்னா எடுத்துக்கட்டுமே...அதுக்கு ஏன் கையை தட்டி விடறே...."

"இல்ல மாமா...அவருக்கு ஷுகர் இருக்கு...அதான் அவருக்கு சக்கரையில்லாத காப்பி..."

என்னவோ எனக்கு 100 ஏக்கர்ல டீ எஸ்டேட் இருக்குன்னு சொல்ற மாதிரி எவ்ளோ சந்தோஷமா சொல்றா..என நினைத்துக்கொண்டே அந்த சர்க்கரையில்லாத காஃபியை கஷ்டத்தோடு எடுத்துக் குடிக்கத் தொடங்கினார் கணேசன்.

" என்னது....கணேசனுக்கு ஷுகரா...அடக்கடவுளே.."

சோபாவிலிருந்து துள்ளியெழுந்து கேட்ட மாமாவை பார்த்து,

"என்ன மாமா இதுக்குபோய் இப்படி பதட்டப் படறீங்க...இப்பதான் இது எல்லாருக்கும் வருதே...இன்ஃபேக்ட்...இத நம்ம தேசிய வியாதின்னுகூட..."

சரோஜாவின் முறைப்பைப் பார்த்ததும் பாதியில் விழுங்கிக்கொண்டார்.

"இல்ல கணேசா...இதை அவ்ளோ சாதாரணமா எடுத்துக்க முடியாது. இது சைலண்ட் கில்லர். இது வந்தா ப்ளட்ப்ரெஷரும் சேந்து வரும். ரெண்டும் அக்கா தங்கச்சிங்க மாதிரி."

ஆமா....வந்துட்டாரு...சொந்தங்கள சேத்து வெக்குறவரு....மனசுக்குள் திட்டிக்கொண்டே மாமாவின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்த கணேசனைப் பார்த்து,

"இங்க பாரு கணேசா...எதுக்கும் வருத்தப்படாத. கொஞ்சம் கண்ட்ரோலா இருந்தா போதும். நம்ம பார்வதி வீட்டுக்காரர்கூட அப்படித்தான். வாயைக் கட்டமுடியாம, ஷுகர் அதிகமாகி, ஒரு காலையே எடுக்க வேண்டியதாப் போச்சி..."

"அய்யய்யோ என்ன மாமா சொல்றீங்க....அப்ப இவர் காலையும் எடுத்துடுவாங்களா....அப்ப கடை கண்ணிக்கெல்லாம் நான் தான் போகனுமா.."

கணேசன் சரோஜாவை எரித்துவிடுவதைப்போலப் பார்த்தான்.

மாமாவும் சரோஜாவை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார்...

"அதனால ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. டெய்லி வாக் போகனும். அப்புறம் முக்கியமான விஷயம்...நம்ம சொந்தக்காரங்களுக்கு யாருக்கும் இந்த மேட்டர் தெரியக்கூடாது.."

"அது ஏன் மாமா...நான் என்னவோ கற்பழிப்பு கேஸ்ல ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவன் மாதிரி சொல்றீங்க"

"அட அதுக்கில்ல கணேசா....இப்ப நம்ம மக்களுக்கு நல்ல அவேர்னஸ் இருக்கு. இந்த வியாதி பரம்பரையா வர்றதுன்னும், அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இருந்தா பிள்ளைங்களுக்கும் வருங்கறதோ எல்லாருக்கும் தெரியும். ஸோ.....உனக்கு டயாபடீஸ் இருக்குன்னு தெரிஞ்சா உன் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காது, உன் பையனுக்கும் பொண்ணு கொடுக்கமாட்டாங்க....அதான் சொன்னேன்"

மாமா பயமுறுத்திவிட்டுப் போன அன்று இரவு கணேசனின் கனவில், காலில்லாத கணேசனைப் பார்த்தான்,கக்கத்தில் கட்டையை ஊன்றிக்கொண்டு அசோகனைப் போல ‘போனால் போகட்டும் போடா....' என்று பாட்டு பாடிக்கொண்டே மலைமேல் அலைவதைப்போல, மகள் தலைவிரிகோலமாய் குளோசப்பில் வந்து, என் வாழ்க்கையை கெடுத்திட்டீங்களேப்பா...நான் கன்னியாவே கண்ணை மூட வேண்டியதுதானா என்றும், மகன் கையில் அருவாளைத் தூக்கிக்கொண்டு அவரை விரட்டுவதைப் போலவும் காட்சிகள் மாறி மாறி தோன்ற கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு அலுவலகம் வந்தவர், நேரே சீனுவிடம் சென்று,

"சீனு...எனக்கு இந்த ஷுகரைவிட...அதனால ஏற்படற பயம்தாண்டா கொல்லுது. இதுல ஆளாளுக்கு அட்வைஸ்ங்கற பேர்ல, எதையெதையோ சொல்லி மேல மேல பயமுறுத்துறாங்க..."

"ச்சே ச்சே....இதுக்கெல்லாம்போய் ஏண்டா பயப்படற...இப்பதான் நீ ரொம்ப கண்ட்ரோல்ல இருக்கல்ல....ஒண்ணும் ஆகாது. கவலப்படாத."

"இல்லடா சீனு..எனக்கு என்ன ஆச்சுன்னே தெரில...நேத்து ரொம்பநாளைக்கப்புறம் சரோவுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்...ஹி..ஹி..."

'ம்...ம்...சொல்லு...சொல்லு..."

" அவளுக்கு ஒரே வெக்கம்...ஆனா பாரு... அசந்தர்ப்பமா அந்த சமயத்துல ஒரு கவிதை தோணுச்சி....

"என் முத்தம் இனிப்பது
உன்மேல் உள்ள அக்கறையால் மட்டுமல்ல
என் ரத்தத்தில் உள்ள சர்க்கரையாலும்தான்"

அப்படீன்னு அபத்தமா ஒரு கவிதை. இந்த ஷுகர் என்னை மனசளவுல இப்படி பாதிச்சிடேச்சேடா..."

நண்பனின் நிலையைப் பார்த்த சீனு, மெள்ள ஆதரவாக அவனது கைகளைப் பிடித்தபடி,

"சரி. இத்தனைநாள் நீ கண்ட்ரோலா இருந்திருக்க, தெனம் வாக்கிங் போயிருக்க...அப்ப நிச்சயமா ஷுகர் கொறைஞ்சிருக்கும் எதுக்கும் நாளைக்கு மறுபடியும் போய் இன்னொரு வாட்டி செக் பண்ணிப்பாரு. கண்டிப்பா கொறைஞ்சிருக்கும்."

"நிஜமாத்தான் சொல்றியாடா...நீ சொல்ற மாதிரியில்லாம, ஒருவேளை பார்டரை கிராஸ் பண்ணியிருந்தா...பாகிஸ்தான்காரன் சுடறமாதிரி இந்த ஷுகர் என்ன சுட்டுடாதே..."

"ஹா...ஹா...ஹா...நல்லா ஜோக்கடிக்கறே..."

"சீரியஸா சொல்றேண்டா..."

"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீ போய் செக் பண்ணிப் பாரு"



அடுத்தநாள் காலை எழுந்து குளித்துவிட்டு, வழியில் ஐந்துமுகப் பிள்ளையாரை தரிசனம் செய்து பிரசாதத்தை வாங்கி பையில் வைத்துக்கொண்டு டாக்டரைப் பார்க்கப்போனார்.

பரிசோதனை முடிந்து முடிவு தெரியும்வரை, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தவரை ஒரு நர்ஸம்மாவின் குரல் கலைத்தது.

"யாருங்க கணேசன்...டாக்டர் கூப்பிடறாரு"

வாழ்வா சாவா எனும் போராட்டத்தில் முடிவு தெரியப்போகும் நாளில் ஏற்படும் பதட்டத்தோடு அறைக்குள் சென்றவரை டாக்டரின் சிரித்தமுகம் வரவேற்றது.

"உக்காருங்க கணேசன். உங்க ஷுகர் ரொம்ப நார்மலா இருக்கு. இந்த வயசுல இவ்ளோ நார்மலா இருக்கறது நல்ல விஷயம். 85தான் இருக்கு."

கணேசனுக்கு குபீர் என்று ரத்தப்பாய்ச்சல் உடலெங்கும் சந்தோஷமாய் பரவியது.

"ரொம்ப நன்றிங்க டாக்டர். அப்ப நான் சர்க்கரை போட்ட காப்பி குடிக்கலாங்களா?"

'என்ன இப்படி கேக்கறீங்க அப்ப இவ்ளோநாள் நீங்க அப்படித்தான் குடிச்சீங்களா?"

"எப்பவும் இல்ல டாக்டர். பதினைஞ்சு நாளாத்தான் அப்படி. பதினைஞ்சு நாளைக்கு முன்னால டெஸ்ட் பண்ணிப் பாத்தப்ப 130 இருந்திச்சி...அதுலருந்துதான் டாக்டர்..."

"சான்ஸே இல்லையே...வெறும் வயித்தோடத்தானே போனீங்க?"

"ஆமாங்க டாக்டர்.பச்சைத்தண்ணிக்கூட குடிக்கல..."

"ஸ்ட்ரேஞ்ச்.....ரிசல்ட் தப்பா இருந்திருக்கும். எனிவே...நீங்க இப்ப பரிபூரண ஆரோக்கியமா இருக்கீங்க...பெஸ்ட் ஆஃப் லக்"

வெளியே வந்ததும் முதல் வேலையாய் பிரசாதத்தை எடுத்து சாப்பிட்டார்.

அப்போதுதான் அவருக்குத் தோன்றியது......அன்னைக்கும் இப்படித்தானே கோவில் பிரசாதம் வாங்கிக் கொண்டு போனேன்....இன்னைக்கு மாதிரி ரிசல்ட் தெரிஞ்சப்பறம் சாப்பிட்டிருந்தா...அன்னைக்கே நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்குமோ....அதுக்கு முன்னாடியே சாப்பிட்டுட்டேனே....அதான் பகவான் சோதிச்சிட்டார். என்று நினைத்துக்கொண்டே நடந்தவரின் வாயில் ஒரு பிடி கல்கண்டு பிரசாதம் கரைந்துகொண்டிருந்தது.

பாரதி
30-05-2009, 04:57 AM
வாங்க சிவா...
கல்கண்டாய் இனிக்கும் கதையுடன் அசத்தலாக வந்த உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறேன். சர்க்கரை வியாதி குறித்து - உணவினாலோ, மருந்தாலோ, உடற்பயிற்சியாலோ சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் கண்டிப்பாக கவலைப்பட வேண்டியதில்லை. இப்போதெல்லாம் சர்க்கரை வியாதிக்கு ஏகப்பட்ட காரணங்களை சொல்கிறார்கள்.. ஹும்...
நல்ல முடிவுடன் அமைந்த கதைக்கு என்னுடைய பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும். தொடர்ந்து அசத்துங்க சிவா.

சிவா.ஜி
30-05-2009, 05:05 AM
நன்றி பாரதி. நம் மன்றத்தைவிட்டு எங்கே போவது. கோபித்துக்கொண்டாலும் தாய்மடி தேடி வரும் குழந்தைகள்தானே நாமெல்லாம். தொடர்ந்து இணைந்திருப்பேன்.

Mano.G.
30-05-2009, 05:05 AM
அடடா போன வாரம் நான் கிளினிக்ல ரத்த பரிசோதனை செய்து
வீட்டுக்கு வந்து டாக்டர் சொன்னத
யார் கிட்டயும் சொல்லல, சொல்லி இருந்த
இந்த கதை மாதிரி தானோ.

வாழ்த்துக்கள் சிவா.ஜி

அருமை

மனோ.ஜி

சிவா.ஜி
30-05-2009, 05:06 AM
ஹா....ஹா...நல்லவேளை சொல்லலை...இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள் மனோ.ஜி.

மிக்க நன்றி.

Mano.G.
30-05-2009, 05:12 AM
ஆமாம் அந்த கதை கணேசன் மாதிரி
நானும் இப்ப சக்கர இல்லாத காப்பி,
அரிசி சோறு அரவே இல்லை, காப்பிக்கு பதிலா ஆறின சுடுநீர், கடந்த ஒரு வாரமா
இதான்.

ரங்கராஜன்
30-05-2009, 05:14 AM
அண்ணா இதே அனுபவம் தான் எனக்கும் ஏற்பட்டது அதையும் மன்றத்தில் பதிந்து இருக்கிறேன், சக்கரகட்டி என்று

நல்ல காமெடி கதை வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
30-05-2009, 05:17 AM
நல்ல காமெடி கதை அண்ணா வாழ்த்துக்கள்

மதி
30-05-2009, 05:22 AM
சக்கரை நோய் பற்றி சக்கரையாய் கதையுடன் வந்த சிவாண்ணாவுக்கு ஒரு ஓ.. ஆனாலும் சரோ மாமி இவ்ளோ அசால்ட்டா தன் கணவரின் சக்கரை நோயை எடுத்துட்டிருக்கப்படாது...

aren
30-05-2009, 05:42 AM
பாதிதான் படித்தேன். மீதியை பின்னால் படித்துவிட்டு பதிவு செய்கிறேன். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு.

த.ஜார்ஜ்
30-05-2009, 05:43 AM
சுவாரசியமான கதையோட்டம்.மெல்லிய நகைசுவை.பரிசோதனைகளின் எதார்த்தம்.அதிலும் முத்தம் கொடுக்கிற போது ஒரு சூப்பரான கவிதை.

இப்போ நல்லாதானே இருக்கிங்க.எதுக்கும் இன்னொரு டாக்டரை பாருங்க.புது வியாதியின் பெயரும்,ஒரு நல்ல கதையும் கிடைக்கக் கூடும்.

கா.ரமேஷ்
30-05-2009, 05:47 AM
சர்க்கரை இனிக்கிற சர்க்கரை...!
நகைச்சுவையான கதை..!

சிவா.ஜி
30-05-2009, 07:44 AM
அண்ணா இதே அனுபவம் தான் எனக்கும் ஏற்பட்டது அதையும் மன்றத்தில் பதிந்து இருக்கிறேன், சக்கரகட்டி என்று

நல்ல காமெடி கதை வாழ்த்துக்கள்

அதுதான் தக்ஸ் என்னை இந்தக் கதை எழுதத் தூண்டியது. நீ அல்வா சாப்ட்டுட்டு கைகழுவாம டெஸ்ட் பண்ணே....கணேசன் சாமி பிரசாதம்ன்னு நெனைச்சிக்கிட்டு கல்கண்டை சாப்டுட்டு டெஸ்ட் பண்ணிக்கிட்டாரு. அதான் வித்தியாசம்.

நன்றி தக்ஸ்.

சிவா.ஜி
30-05-2009, 07:46 AM
சக்கரை நோய் பற்றி சக்கரையாய் கதையுடன் வந்த சிவாண்ணாவுக்கு ஒரு ஓ.. ஆனாலும் சரோ மாமி இவ்ளோ அசால்ட்டா தன் கணவரின் சக்கரை நோயை எடுத்துட்டிருக்கப்படாது...

சரோ மாமி ஜோவியலான ஆளாயிருக்கனும்...இல்லன்னா...டேக் இட் ஈஸி மாமியா இருக்கனும்...இல்லையா மதி.

நன்றி மதி.

சிவா.ஜி
30-05-2009, 07:47 AM
மெதுவா வாங்க ஆரென். எதுக்கு பயம்? அதான் இது நம்ம தேசிய வியா............

சிவா.ஜி
30-05-2009, 07:48 AM
மிக்க நன்றி ஜார்ஜ். உங்களைப்போன்ற நல்ல எதார்த்த எழுத்தாளரின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
30-05-2009, 07:48 AM
மிக்க நன்றி கா.ரமேஷ்.

அமரன்
30-05-2009, 07:14 PM
சிரிப்புத் ததும்பும் கதை. துள்ளல் நடை. காலை நேரத்தில் கடற்கரையில் கைவீசி நடக்கும் சுகானுபவம் தந்தது. ஏனுங்க சிவா. நீங்க ஏற்கனவே நாப்பது கடந்திட்டீங்க. இன்னொருத்தர் இப்பத்தான் கடந்திருகார். எதுக்கும் ஒருவாட்டி சோதிச்சுடுங்க.

ஓவியா
30-05-2009, 08:24 PM
ஆமா இது தேசிய வியாதினா இந்தியா என் 'நேட்டிவ்' என்று சொல்லும் எனக்கும்....

கதையின் கரு மன்றத்தில் உலவும் மக்களுக்கு உடலை கவனிங்க என்று கூறும் ஒரு நற்செய்திதான், (ஆரேன்ஜி, மனோஜி, மனியாஜி, பரம்ஸ்ஜி, எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா).

நகைச்சுவை கலந்த இந்த கதையின் உறையாடல் நடைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இறுதியில் உங்களுக்கு 'இனிப்பு' இல்லையென்று டாக்டர் சொன்னதும், நாயகன் சந்தோசத்தில் மயங்கி விழுவார் கண்விழிக்கும் போது ஒன்னும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு (பிபி) ரத்தகொதிப்பு அதிகமாகிடுச்சுனு வெறும் 'உப்பு' மட்டும் கன்றோல் பண்ணுங்கனு டாக்டர் சொல்லுவார் என்று நினைத்தேன். :D:D:D

சிவாஜி அண்ணாவை பாராட்டி எழுதுவதில் மகிழ்கிறேன்.

அமரன்
30-05-2009, 08:26 PM
கதையின் கரு மன்றத்தில் உலவும் மக்களுக்கு உடலை கவனிங்க என்று கூறும் ஒரு நற்செய்திதான், (ஆரேன்ஜி, மனோஜி, மனியாஜி, பரம்ஸ்ஜி, எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா). .

ஆமாமா... கண்டிப்பா கவனமாக இருக்கனும்.:)

ஓவியா
30-05-2009, 08:30 PM
ஆமாமா... கண்டிப்பா கவனமாக இருக்கனும்.:)


அதே அதே சபாபதே.

அட நம்ப ராங்ராஜா மற்றும் பாரதி அண்ணாவ விட்டுட்டேன் என்று யாரும் நினைக்கவேண்டாம் அந்த எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம் வேற யாருமில்ல இவங்கதான் :aetsch013::aetsch013:

மதி
31-05-2009, 02:05 AM
எல்லோரும் பத்திரமா இருந்துக்குங்க

சிவா.ஜி
31-05-2009, 06:32 AM
சிரிப்புத் ததும்பும் கதை. துள்ளல் நடை. காலை நேரத்தில் கடற்கரையில் கைவீசி நடக்கும் சுகானுபவம் தந்தது. ஏனுங்க சிவா. நீங்க ஏற்கனவே நாப்பது கடந்திட்டீங்க. இன்னொருத்தர் இப்பத்தான் கடந்திருகார். எதுக்கும் ஒருவாட்டி சோதிச்சுடுங்க.

ஆச்சு அமரன். சோதிச்சாச்சு. நானும் இப்ப ஷுகர்மேன். எனக்கும் சர்க்கரையில்லாத காஃபிதான். மூணே இட்லிதான்....என்ன செய்ய....

வந்தாச்சு...போன்னு சொல்லவா முடியும். அதோட வாழ்ந்துதானே ஆகனும். அலுத்துக்கல....ஒத்துக்கிட்டேன். ஹி,,ஹி...வேறென்ன செய்யமுடியும்ன்னு சொல்றீங்களா?

நன்றி அமரன், அக்கறைக்கும், பின்னூட்ட பாராட்டுக்கும்.

சிவா.ஜி
31-05-2009, 06:35 AM
ஆமா இது தேசிய வியாதினா இந்தியா என் 'நேட்டிவ்' என்று சொல்லும் எனக்கும்....

கதையின் கரு மன்றத்தில் உலவும் மக்களுக்கு உடலை கவனிங்க என்று கூறும் ஒரு நற்செய்திதான், (ஆரேன்ஜி, மனோஜி, மனியாஜி, பரம்ஸ்ஜி, எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா).

நகைச்சுவை கலந்த இந்த கதையின் உறையாடல் நடைதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இறுதியில் உங்களுக்கு 'இனிப்பு' இல்லையென்று டாக்டர் சொன்னதும், நாயகன் சந்தோசத்தில் மயங்கி விழுவார் கண்விழிக்கும் போது ஒன்னும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு (பிபி) ரத்தகொதிப்பு அதிகமாகிடுச்சுனு வெறும் 'உப்பு' மட்டும் கன்றோல் பண்ணுங்கனு டாக்டர் சொல்லுவார் என்று நினைத்தேன். :D:D:D

சிவாஜி அண்ணாவை பாராட்டி எழுதுவதில் மகிழ்கிறேன்.

பரம்ஸை இந்த லிஸ்டில் சேர்த்ததை நான் மறுக்கிறேன் அவரு இன்னும் கிரிக்கெட் விளையாடும் சின்னப்பையன் தான்.

ஓவிம்மா....உங்க முடிவு சூப்பர். நான் இதை யோசிக்கவேயில்லை.

ரொம்ப நன்றிம்மா.

அமரன்
31-05-2009, 08:35 AM
அதே அதே சபாபதே.

அட நம்ப ராங்ராஜா மற்றும் பாரதி அண்ணாவ விட்டுட்டேன் என்று யாரும் நினைக்கவேண்டாம் அந்த எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம் வேற யாருமில்ல இவங்கதான் :aetsch013::aetsch013:

ஓ.. அந்த டபிள் எக்ஸ்ராப் பார்ட்டிங்க இவிங்கதானா.:):D

ஓவியா
31-05-2009, 05:56 PM
பரம்ஸை இந்த லிஸ்டில் சேர்த்ததை நான் மறுக்கிறேன் அவரு இன்னும் கிரிக்கெட் விளையாடும் சின்னப்பையன் தான்.

ஓவிம்மா....உங்க முடிவு சூப்பர். நான் இதை யோசிக்கவேயில்லை.

ரொம்ப நன்றிம்மா.


முதலில் 'கொலோஸ்ட்ரோள்' அதான் மயக்கம்னு போடலாம் என்று யோசித்தேன், அது அவ்வளவு எப்பெக்ட்டா இருக்காது என்று தோண்ற யோசித்தேன் யோசித்தேன் யோசித்தே... ஆஆஆ கிடைச்சாச்சு உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று மனதில் வர வச்சேன் பாருங்க ஆப்பு உப்பிலே :D:D


அந்தம்மா ஜினிக்கே இவ்வளோ கொடுமை பன்னினா உப்புக்கு எப்படியிருக்கும் வாழ்க்கை: lachen001:


பின் குறிப்பு:
சிவாஜி அண்ணா, நம்ப பரம்ஸ் அண்ணா உங்கள இந்தவருட கோடைக்கால கிரிகெட் அணியில் அவசியம் இணைத்துக்கொள்வார். இந்த ஒரு திரி போதும் 'ரெகமண்டேஷன்' கடிதம் கொடுக்க. :icon_b:

நூர்
31-05-2009, 06:32 PM
ஜீ,,,வாங்க!வாங்க மிக்க மகிழ்ச்சி...

samuthraselvam
01-06-2009, 06:01 AM
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கிய நேரம் எனக்கு கேட்ட நேரம் என்று நினைக்கிறேன்.

சரி பசிக்கிறதே என்று ஒரு பாட்டில் ஸ்லைஸ் வங்கி குடித்துவிட்டு காத்திருந்தேன்.

என் முறை வந்ததும் சென்றேன். ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். செய்தேன். 142.03 அளவு வந்தது. அதிலிருந்து இன்று வரை பத்தியம் தான்.

மறுபடி இன்னும் ரத்தப் பரிசோதனை செய்யவில்லை. அப்பத்தாவுக்கும் அப்பாவுக்கும் உள்ளது. அதனால் எனக்கும் இருக்குமோ என்று பயம்.

திரவமாக குடித்தால் உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடுமோ? எங்க நம்ம இளசு அண்ணா?

சிவா.ஜி
01-06-2009, 06:13 AM
அடடா...என்னம்மா இது? ஸ்லைஸ் குடிச்சா அதிகம்தான் இருக்கும். பத்தியமெல்லாம் வேண்டாம். இன்னொரு தடவை செக் பண்ணிப்பாத்தா சரியா இருக்கும். அதனால நாளைக்கே செக் பண்ணிப் பாத்துட்டு, அடுத்த நாள்லருந்து நோ பத்தியம். ஓக்கேவா?

சிவா.ஜி
01-06-2009, 06:14 AM
ஜீ,,,வாங்க!வாங்க மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி நூர். உங்களனைவரோடும் இணைவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

சிவா.ஜி
01-06-2009, 06:17 AM
முதலில் 'கொலோஸ்ட்ரோள்' அதான் மயக்கம்னு போடலாம் என்று யோசித்தேன், அது அவ்வளவு எப்பெக்ட்டா இருக்காது என்று தோண்ற யோசித்தேன் யோசித்தேன் யோசித்தே... ஆஆஆ கிடைச்சாச்சு உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று மனதில் வர வச்சேன் பாருங்க ஆப்பு உப்பிலே :D:D


அந்தம்மா ஜினிக்கே இவ்வளோ கொடுமை பன்னினா உப்புக்கு எப்படியிருக்கும் வாழ்க்கை: lachen001:


பின் குறிப்பு:
சிவாஜி அண்ணா, நம்ப பரம்ஸ் அண்ணா உங்கள இந்தவருட கோடைக்கால கிரிகெட் அணியில் அவசியம் இணைத்துக்கொள்வார். இந்த ஒரு திரி போதும் 'ரெகமண்டேஷன்' கடிதம் கொடுக்க. :icon_b:

அது கரெக்ட் தான். கொலஸ்ட்ரால் அதிகமானா மயக்கம் வராது. பிளெட் ப்ரெஷர்தான் சரி. சூப்பரா யோசிச்சிருக்கீங்க.

உப்பு காசு கம்மிதானேம்மா. அதனால பெருசா சந்தோஷப் பட்டிருக்க மாட்டாங்க. ஜீனின்னா ஒரு கிலோ மிச்சமாகுதேன்னு சந்தோஷப்பட்டாங்க...ஹி...ஹி...(எங்க வீட்ல உல்டா...நான் ஜீரோ கலோரி ஷுகர் டேப்லெட் சாப்பிடறதால செலவு அதிகம்தான் ஆகுது.)

பேசாம நீங்க சொன்ன மாதிரி பரம்ஸ்கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடினாலாவது கலோரி நிறைய குறையும். ஆரோக்கியமா இருக்கலாம்.

aren
01-06-2009, 06:21 AM
நான் இந்தக்கதையைப் படிக்கும்போதே நினைத்தேன் ஐயாவிற்கு டெஸ்ட் நடந்திருக்கிறது என்று. அது உண்மை என்றே இப்பொழுது தெரிகிறது.

நானும் டெஸ்ட் எடுத்தேன், அனைத்தும் நார்மல் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆனால் எனக்கும் நிச்சயம் வரும் என்று தெரியும் காரணம் என் அம்மாவிற்கு இருந்தது, என் அண்ணனுக்கு இருக்கிறது, எனது தம்பிக்கு பார்டரில் இருக்கிறது.

எனக்கும் வரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

சிவா.ஜி
01-06-2009, 06:39 AM
ஆரென்...நீங்க நினச்சது சரிதான். ஆனா உங்களுக்கும் வரும்ன்னு ஏன் நினைக்கறீங்க? உணவில் கட்டுப்பாடும், சின்னச்சின்ன உடற்பயிற்சியும் நிச்சயம் ஷுகரை வராமல் தடுக்கும். அதனால்...உங்களுக்கு எப்பவுமே நார்மலாய் இருக்கும் கவலைப் படாதீங்க.

ஆதவா
01-06-2009, 07:39 AM
படித்து முடித்தவுடன் குபீர் சிரிப்பு.. நான் என்னென்னவோ யோசித்து வந்தேன். ஆனால் இப்படியாகும்னு நினைக்க்கவேயில்லை.

ரொம்ப எதார்த்தமான, வெகுளியான, குபீர்படுத்துகிற, கணவன் மனைவி உறவு உரையாடல்.. மிகவும் பிரமாதமான எழுத்து. அதிலும் காலை எடுத்துடனுமா என்றதும் அந்தம்மா, இனிமே கடைக்கு நாந்தான் போகணுமா என்பாரே.... கலக்கலான இடம்.

எங்கப்பா, அம்மாவுக்கு ஷுகர் உண்டு. அப்ப, எனக்கும் வரும். இதுவரைக்கும் செக்கப் பண்ணியதில்லை. ஆனால் எனக்கு ஒரு யோசனை உண்டு, கல்யாணத்திற்கு முன் சோதித்து, (சுகர் இல்லையென்றாலும்) அவர்கள் சொல்லும் உணவுமுறைகளை பின்பற்றுவது என்று..

ஒரு இயல்பான கதை கொடுத்தமைக்கு வாழ்த்துகள் அண்ணா!!

பூமகள்
01-06-2009, 08:17 AM
ஆங்காங்கே நகைச்சுவையோடு கசப்பான வியாதி பற்றியும் தெளிவித்த எதார்த்தமான கதை சிவா அண்ணா..

சரோ மாமி பேசிய பேச்சுகள் எனக்கு பாசிட்டிவ் அப்ரோச் போலத் தான் தோன்றியது. காரணம், ஐயய்யோ அவருக்கு வந்துவிட்டதே என்று அழுது புரண்டிருந்தால், கணவருக்கு தெம்பளிக்க வேண்டிய மனைவியே உடைந்து போய்விட்டதாகத் தானே அர்த்தம். பின் யார் தான் அவருக்கு ஆறுதல் கூறுவார்கள். இப்படி கண்டுக்காமல் பேசுவது தான் அவருக்கு இது சிறு விசயம் என்ற எண்ணத்தை வளர்த்து வருத்தத்தைப் போக்கும். இந்தப் பாத்திரப்படைப்புக்கு ஸ்பெசல் பாராட்டுகள் சிவா அண்ணா.

பொதுவாகவே நல் மனைவிகள் தானே கணவர்களுக்கு தெம்பும் தைரியமும் அளிக்கக் கூடியவர்கள்??!! :)

சிறந்த கதை.. சிறப்பான நடை.. ஆனால், நண்பரோடு முத்தமிட்டதையெல்லாம் பகிர்வது கொஞ்சம் ஓவர்... ;)

சர்க்கரை வியாதியை சரியாக கணிக்க,

சாப்பிடும் முன்பும்,

சாப்பிட்ட பின்பும் சோதனை செய்து பார்க்க வேண்டும். அது தான் என்றுமே சரியான அளவைக் காட்டும். ஒரு தரம் பார்த்துவிட்டு சொல்வது அத்தனை துல்லியமாக இருக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மேலதிக விவரங்களுக்கு பெரியண்ணாவுக்காகக் காத்திருக்கிறேன்.

விழிப்புணர்வுக் கதையோடு மீண்டு வந்த சிவா அண்ணாவுக்கு வரவேற்புகளும் வாழ்த்துகளும். :)

praveen
01-06-2009, 09:47 AM
தலைப்பை பார்த்து ஏதோ சிரிப்பு என்று நினைத்தே படிப்பதை தாமதித்தால், ஒரு நகைச்சுவை கதை என்று கண்டதும் முழு மூச்சில் படித்தேன், ஏறக்குறைய என் கதை போலவே இருந்ததும் பிரமிப்பு :)

நான் ஒருவாரம் முன் நண்பர் வாங்கியிருந்த ஒரு சர்க்கரை அளவை வீட்டிலே சோதனை செய்யும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவியில் சோதனை செய்து பார்த்ததில் 89 இருந்தது கண்டு வீட்டில் பெருமையுடன் சொன்னேன். (நான் யோகா தினமும் செய்வதால் அடிக்கடி லோ சுகர் ஆகும் என்பதால் இந்த சர்க்கரை அளவு சோதனை பக்கமே செல்லவில்லை.) ஆனால் அதற்கு பின் வந்தது வம்பு, முறையாக ஒரு லேப்பில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் செக் செய்தால் இனி சராசரி சாப்பாடு என்று வீட்டில் நிபந்தனை விதித்து விட்டார்கள். இதுவரை தள்ளிப்போட்டு கொண்டு தான் இருக்கிறேன்.

உங்கள் கதையை படித்ததும், விரைவில் செய்து கொள்ள தீர்மானித்து விட்டேன்.

நல்ல கதையை (எனக்கு தகுந்த நேரத்தில்) பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
01-06-2009, 10:11 AM
அப்ப கண்டிப்பா செக் பண்ணி பாத்துக்குங்க ஆதவா. எல்லோருக்கும் சொல்றதுதான் உங்களுக்கும், சாப்பாட்டில் கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி. அது போதும் ஆரோக்கியமா இருக்க.

கதையைப் பற்றின உங்க விமர்சனத்துக்கு மிக்க நன்றி ஆதவா.

சிவா.ஜி
01-06-2009, 10:17 AM
கரெக்ட்டா பாய்ண்ட்டப் பிடிச்சிட்டேம்மா. மாமியோட பாசிடிவ் அப்ரோச்தான் நான் சொல்ல வந்தது. அப்படித்தான் அந்தப் பாத்திரத்தை வடிவமைச்சேன். தங்கைன்னா சும்மாவா? ரொம்ப சரியா சொல்லிட்ட. நோய் வந்தவரோட மனைவியும் சேர்ந்து அழுதா, அது அவருக்கும் மானசீகமா ஒரு பயத்தைக் கொடுத்துடும்.

அப்புறம் அந்த முத்தம் கொடுத்ததை சொல்லியது, அந்த நேரத்திலும் அவருக்கு தன்னோட ஷுகர்தான் நினைவுக்கு வருதுன்னு சொல்றதுக்காகத்தான். ஏன்னா இந்த மாதிரி மனநிலையில நோயைப் பற்றின எண்ணம் எப்படியெல்லாம் அவர்களை ஆக்ரமிச்சிருக்குன்னு சொல்ல வந்தேன்.

நல்லதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி பூம்மா.

சிவா.ஜி
01-06-2009, 10:21 AM
மிக்க நன்றி பிரவீண். எப்போதும் கதைகள் பக்கம் வராத நீங்களே வந்து படித்துவிட்டு பின்னூட்டம் இட்டதில் மிக்க மகிழ்ச்சி.

தினமும் யோகா செய்யும் உங்களை எந்த வியாதியும் அண்டாது. கவலையின்றி இருங்கள்.