PDA

View Full Version : ஈழத்தமிழருக்கு குர்து இனப்போராளியின் மடல்பாரதி
29-05-2009, 01:21 PM
அன்பு நண்பர்களே,
இன்று மின்னஞ்சலில் எனக்கு வரப்பெற்ற கடிதத்தை மன்ற உறவுகளின் பார்வைக்கு வைக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------
ரமேஷ் என்ற இயற்பெயர்கொண்ட நாகார்ஜுனன், சென்னை ஐ.ஐ.டி யில் பொறியியல் பட்டம் பெற்று இந்திய அணுசக்தி துறையில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் BBC உட்பட பல ஊடகங்களில் பனியாற்றி தற்போது முழுநேர பத்திரிகையாளராக உள்ளவர்.தமிழ் இலக்கியம் சமூகவியல் ஆய்வுகள், மற்றும் இயக்கங்களில் தனித்துவமான பாத்திரம் வகிப்பவர்.ஈழம் உட்பட அவரது இலக்கிய சமூகவியல் கருத்துகளை அவரது வலைப்பூ " திணை, இசை, சமிக்ஞை" http://nagarjunan. blogspot. com/ (http://nagarjunan.blogspot.com/) என்பதில் வாசிக்கலாம்.

ஈழத் தமிழ் மக்கள் போலவே வாழ்வுரிமை மறுக்கப்பட்டு சொல்லோன்னாத துயரங்களுக்கு ஆட்பட்டு பலகாலம் போராடிவரும் குர்து மக்கள் போராளி ஒருவரின் கடிதத்தின் தமிழாக்கம் நாகார்ஜுனின் வலைப்பூவில் உள்ளது. தயவு செய்து இதனையும் ஏனைய கட்டுரைகளையும் படிக்கவும்.

ஆழமான வரலாற்று பூர்வமான தமிழின விரோதமும் குரோதமும் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் இந்த ரத்தபந்தமற்ற குர்து போராளி (ஷெக்ஸ்முஸ் ஆமெட்) போன்ற அனுதாபமும் அக்கரையும் கொண்டவர்களாக இருப்பதுதான் எதார்த்தம். குறுகிய அரசியல் மாச்சரியங்கள் சிலரின் கண்களை சிலகாலம் மறைக்கலாம். அவை கடந்து செல்லும் மேகம் போன்ற தற்காலிகமே. தமிழினம் தனக்கெதிரான விரோதம் குரோதங்களை வெண்று மேலெழுந்தே இன்றைய நிலையில் உள்ளது.தனது குறைகளை போதாமையை உணர்ந்து திருத்திக் கொள்ளும் பக்குவமில்லாது இந்த இனம் குறைந்த பட்சம் 3000 ஆண்டுகளாக தன் அடையாளம் இழக்காது இருப்பது சாத்தியமல்ல. காலங்களையும் பல ஊழிக் கூத்துகளையும் தாண்டித் தொடரும் இந்தப் பயணம் இன்றைய கையறு நிலையையும் தாண்டித் தொடரும் என்பது வெற்று நம்பிக்கை அல்ல. அதுதான் வரலாறு காட்டும் சித்திரம்.திணை இசை சமிக்ஞை


நிலம் எழுத்து நீர் கலை தீ வரலாறு வளி செயல் விசும்பு சிந்தனை சூன்யம் மோனம் --- நாகார்ஜுனன் வலைத்தளம்
27.5.09

ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம் (http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_27.html)


http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Sh1tTJl3ggI/AAAAAAAACaU/Qq_oNpsgu10/s400/Tigers.gif (http://3.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Sh1tTJl3ggI/AAAAAAAACaU/Qq_oNpsgu10/s1600-h/Tigers.gif)கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.

குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்!

விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியைச் சந்தித்தபோதும் தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய ஒன்றாகததான் அதைக் காண்கிறேன். எத்தகைய மறப்போரின் பின்பு வந்திருக்கும் தோல்வி இது! எம் மக்களும் பல முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் - 1925, 1938, 1946, 1975, 1988, 1991 மற்றும் 1999 என்று பல முறை தோல்வியை நாங்கள் தழுவியிருக்கிறோம். ஆனால் விடுதலைப்புலிகள் தத்தம் உயிரையே தியாகம் செய்து அழியாப்புகழ் எய்திய இத்தகைய வீரம் செறிந்த போரை நாங்கள் இதுவரை கண்டதில்லை. உள்ளபடியே மிகப்பெரும் சக்திகள் எதிரணியில் இருந்த இந்தப்போர் உங்கள் தலைவர்களின் உயிர்த்தியாகத்தில் சென்று முடிந்தாலும் அந்தப் போராட்ட நினைவுகளும் உங்கள் தமிழ்மொழியின் பாடல்களிலும் கதைகளிலும் என்றென்றும் நீடித்திருக்கும்.

விடுதலைப்புலிகள், தம்மை விட படைப்பலம் மிகுந்த ராணுவம் நடத்திய இந்தத்தாக்குதலின் இறுதிநாள் வரை - ஏன் இறுதிச்சமர் வரை - தங்கள் தலைவரின் உயிரையும் மூத்த பொறுப்பாளர்களின் உயிர்களையும் பாதுகாத்திருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. இது ஒன்றே விடுதலைப்புலிகளின் அறிவுத்திறன், வலிமை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான சிறந்த சான்றாகும். பிரபாகரனும் விடுதலைப்புலிகளின் தலைமையும் பிற போராளிகள் அனைவரையும் ஆயுதங்களைக் களையச்செய்து, தாம் மட்டும் மூன்றாவதான ஒரு நாட்டுக்குத் தப்பிச்சென்றிருக்கலாம். ஆனால் தலைமையும் சரி, அவர்தம் குடும்பத்தாரும் சரி, போர்க்களத்திலிருந்து தப்பிச்செல்லவில்லை, தமக்கு முன்பு வீரச்சாவடைந்த பல்லாயிரம் போராளிகளைப் போலவே தாமும் சரணடையாமல் இறுதிவ்ரை போர்புரிந்து வீரச்சாவை எய்தியிருக்கிறார்கள்.

இந்தத்தியாகம், உலகெங்கும் தாம் வரித்துக்கொண்ட ஒரு லட்சியத்துக்காக பிறரை உயிர்த்தியாகம் செய்யச்சொல்லும் தலைவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். என்னைப் பொறுத்தவரை, கிளர்ச்சியில் ஈடுபட விரும்பும் குர்து தலைவர்கள் உள்ளிட்ட பிற தலைவர்கள் இத்தகைய உயிர்த்தியாகத்தைச் செய்ய முன்வருவார்களா என்பது சந்தேகம்தான்.

ஆயுதம் தாங்கிப் போராடும் குர்து அமைப்புகளுடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் அமைப்புக்கென பலங்களும் பலவீனங்களும் உண்டு. பலங்கள் எண்ணில் அடங்காதவை. பலவீனங்களும் தவறுகளும் சில என்றாலும் அவை நீண்டகால நோக்கில் விடுதலைப்புலிகளை அழிப்பதாக அமைந்துவிட்டன என்றே கருதுகிறேன். என் பார்வையில், விடுதலைப்புலிகள் அமைப்புரீதியாக இரு பொதுவான பலவீனங்களைக் கொண்டிருந்தார்கள், குறிப்பிட்ட சில தவறுகளையும் செய்தார்கள்.

முதல் பலவீனம் - விடுதலைப்புலிகளின் அரசியல்-எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்பேன். தங்கள் தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்ப்ந்தத்தை ஏற்பதே எதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும்பட்சத்தில் இந்தப்போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக்கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி-அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் போல 'பயங்கரவாத அமைப்பு' என்ற முத்திரையுடன் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.

தமிழீழத் தாயகம் என்ற லட்சியத்திலிருந்து தாம் விலகும் பட்சத்தில் விடுதலைப்புலிகளில் தம்முடைய பாதுகாவலர்களே தம்மைச் சுட்டுக்கொல்லலாம் என்று பிரபாகரன் அறிவித்திருந்தார் என்பதும் விடுதலைப்புலிகள் எத்தனை இறுக்கமாக அமைப்பாக இயங்கினர் என்பதைக் காட்டுகிறது..

விடுதலைப்புலிகளின் இரண்டாவது பலவீனம் - பழிதீர்த்தல், திரும்பத்தாக்குதல் ஆகியவற்றுக்கு தேவையே இன்றி முக்கியத்துவம் வழங்கியதாகும். இங்கே "அரசியல் என்பதன் வேறுவித நீட்சிதான் போர்" என்று க்ளாஸ்விட்ஸ் என்ற அறிஞர் கூறியிருக்கும் பெயர்பெற்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலிலும் சரி, போரிலும் சரி, பழிவாங்குதலும் திரும்பத்தாக்குதலும் அடிப்படை லட்சியத்துக்குக் கீழடங்கியவையே. ஆக, எந்த ஒரு செயலையும் அதன் விளைவை வைத்தே மதிப்பிட வேண்டும் - அது அடிப்படை லட்சியத்தை அடையும் வழியில் நாம் முன்னேற வழிவகுக்குமா, இல்லையா என்று ஆராய வேண்டுமே ஒழிய, முன்பு எப்போதோ நடந்த ஏதோ ஓர் அநீதிக்காகப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு இனக்குழுவினர் பாணியில் செயல்படுவதில் பொருளில்லை. ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் சிங்களத்தலைவர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை இத்தகைய பழிவாங்கும் செயல்களே. மாறாக, இந்தத்தலைவர்களில் சிலர் ஒருகட்டத்தில் தமிழ்மக்களின் போராட்டத்துக்குப் பயன்பட்டிருக்கவும் கூடும் என்று நினைக்கிறேன்.

விடுதலைப்புலிகளின் தவறுகளைப் பொறுத்தவரை - 1999-2000-ஆம் ஆண்டுகளில் ஆனையிறவுப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு எப்படியாவது யாழ்நகரையும் கைப்பற்றி விடுவித்திருக்க வேண்டும். வேறு பகுதிகளைக் கைவிட நேர்ந்தாலும் பரவாயில்லை என இதைச் சாதித்திருக்க வேண்டும். அந்தக்கட்டத்தில் யாழ் குடாநாட்டில் இலங்கை ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள், எனவே பாரிய உயிர்த்தியாகத்துக்குப் பிறகே இது சாத்தியமாகியிருக்கும். என்றாலும் அப்போது இலங்கையின் அரசியல் மற்றும் ராணுவ சக்திகள் நிலைகுலைந்து போயிருந்தனர் என்பது முக்கியம். அந்த வாய்ப்பு நழுவிப்போன பிறகு இறுதியில் விடுதலைப்புலிகள் பல முனைகளில் சமரிட வேண்டி வந்தது எனபதையும் கவனிக்க வேண்டும்.http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Sh24f-SVr3I/AAAAAAAACac/p9VdzmvDKIo/s400/Kurdistan+map.jpg (http://4.bp.blogspot.com/_F6h6uGDEXy4/Sh24f-SVr3I/AAAAAAAACac/p9VdzmvDKIo/s1600-h/Kurdistan+map.jpg)

2001 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களை அடுத்து இலங்கையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டே தீரும் என்பதற்கொப்ப 2002-ஆம் ஆண்டில் அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதே வேளை, 2004-ஆம் ஆண்டின் இறுதியில் இந்துமாக்கடலில் நிகழ்ந்த சுனாமித்தாக்குதலும் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அது ஏற்படுத்திய பாரிய அழிவும் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடங்கச்செய்திருக்க வேண்டும். இலங்கை அரசுடன் அரைகுறை சமாதானத்தை, சமரசத்தைச் செய்யத் தூண்டியிருக்க வேண்டும். சுனாமி அழிவை அடுத்து, இந்தோனேஷியாவின் அச்சே பகுதி விடுதலை அமைப்பு இத்தகைய சமரசத்துக்குச் சென்றது. ஆக, விடுதலைப்புலிகளும் சுனாமியை உட்கொண்டு தம்முடைய அரசியல் கணக்குகளைப் போ்ட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் அடுத்த பாரிய தவறு, 2005-ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தல்களைப் புறக்கணித்ததாகும். இந்தத் தேர்தலில் சிங்களக் கடும்போக்குவாதிகள் வெற்றி கண்டனர். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என மக்களைக் கேட்கக்கூடாது என்பதை எப்போதும் ஒரு பொதுவிதியாகவே கடைப்பிடிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதன் வழி நம் அதிருப்தியை வெளிக்காட்டலாம், நமக்குள் ஒற்றுமையைப் பேணுவதாக எண்ணிக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் சாதாரண விடயங்களே. இத்தகைய தேர்தல் புறக்கணிப்பு என்பது நம் எதிரிகளில் மிக மோசமான பகுதியினரிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிடும் நிஜ அபாயத்தில், நீண்ட கால அபாயத்தில் போய் முடியலாம். இவையெல்லாம் மீள முடியாத சிக்கலில் நம்மை ஆழ்த்தலாம்.

விடுதலைப்புலிகளின் அடுத்த தவறு - கருணா செய்த கிளர்ச்சியைக் கையாண்ட விதம். இதை முன்கூட்டியே உணர்ந்து உடனடியாக, நேர்மையாகக் கையாண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளாக நடந்த வன்முறை, என்னைப்போல தூரத்திலிருந்து அவதானிக்கும் ஒருவருக்கே மிகுந்த வருத்தத்தை அளித்தது எனும்போது அதைக்கண்ட, அனுபவித்த தமிழ்மக்கள் அனைவரும் எவ்வாறு வருத்தப்பட்டு உற்சாகமிழந்து போயிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. குர்து இனத்தவன் என்ற முறையில் நானும் எங்கள் அரசியல் அமைப்புகளுக்கிடையில் நடந்த வன்முறையை அறிந்தவன்தான். ஆனால, குர்து இனத்தவரின் எந்த ஒரு ராணுவ அமைப்பும் தன் மீதே துப்பாக்கியைத் திருப்பியதில்லை.

ஒருவேளை பிரபாகரனின் இறுக்கமும் சுனாமிப்பேரழிவும் கருணா மீதும் தாக்கம் செலுத்தியிருக்க முடியும். அதே வேளை வடக்கை முன்வைக்கும் குறுந்தேசியவாதத்தைக் கைக்கொண்ட தவறை பிரபாகரன் செய்தார் என்று வைத்துக்கொண்டால் இந்தப்பிரச்னையை முன்வைத்துக் கிளர்ச்சி செய்த கருணா அதை இன்னமும் குழப்பிவிட்டார் என்றே கூற முடியும். இத்தகைய குறுந்தேசியவாதம் மேலோங்குவதைக் குர்து அமைப்புகள் பெரும் தவறாகக் கணிக்கின்றன என்பதை மனத்தில் இருத்தி இதைச் சொல்கிறேன்.

ஆக, கிழக்குவாழ் தமிழ்மக்களின் தலைவர் என்ற அங்கீகாரம் கருணாவின் தலைக்கேறிவிட்டது என்று நினைக்க இடமுண்டு. பிரபாகரனைவிட தாமே பெரும் தலைவர் என்று கருணா கருதியிருக்கவும் இடமுண்டு. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு துரோகம் செய்து அமைப்பின் தலைவருக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்பிய கருணாவை வரலாறு மன்னிக்காது என்றே கூறுவேன். என்ன காரணங்கள் இருந்தாலும் சரி, அவற்றைத் தனிப்பட்ட முறையில் முன்வைத்துவிட்டு அவர் அமைப்பிலிருந்து விலகியிருக்கலாம், அப்படி விலகியதற்காகச் சாவையும் எதிர்கொண்டிருக்கலாம். இவ்விரண்டையும் செய்யாமல் துரோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன்வழி தமிழ்மக்கள், சிங்களப்பகுதியினர் இருதரப்பும் நம்பாத, மரியாதை செலுத்தாத, நேசிக்காத தலைவராக மாறியிருக்கிறார். இந்தவழியில் அவருக்கு மோசமான முடிவே காத்திருக்கிறது, அப்படியொரு முடிவு ஏற்படும்பட்சத்தில் அந்த முடிவுக்கு இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வார்கள், ஆனால் அதற்காக வருந்த மாட்டார்கள்.

அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!


- ஷெக்ஸ்முஸ் ஆமெட்

jk12
29-05-2009, 09:02 PM
அருமையான அர்த்தம் செறிந்த கடிதம்....

இங்கு இதை பதிப்பித்தமைக்கு மிகவும் நன்றி பாரதி

Narathar
31-05-2009, 03:38 PM
இரு பக்கமும் சாராது, ஒரு மூன்றாவது கண்ணாக இப்பிரச்சனையை அந்த குர்து அன்பர் பார்த்திருப்பதால்தான் இவ்வாறு யதார்த்தபூர்வமாக எழுத முடிந்திருக்கின்றது!!!

உண்மையில் என் மனதில் இருந்ததில் பாதியை இந்த கட்டுரையில் காண்கின்றேன்........................