PDA

View Full Version : டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?



நூர்
27-05-2009, 06:09 PM
டாஸ்க் பேன் ஏன்? எதற்கு? எப்படி?
மே 25,2009,

நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக இருந்தால் டாஸ்க் பேன் (Task Pane) பார்த்திருப்பீர்கள்.

ஆபீஸ் புரோகிராம்கள் இயக்கப்படுகையில் மானிட்டர் திரையில் வலது பக்கமாக எழுந்து வரும் கட்டமே டாஸ்க் பேன். புதிய டாகுமெண்ட் ஒன்றை நீங்கள் உருவாக்கத் தொடங்கியவுடனேயே அது மறைந்துவிடுவதனையும் பார்க்கலாம். இதனால் நாமும் டாஸ்க் பேனை மறந்துவிட்டு டாகுமெண்ட் பக்கமே நம் கவனம் முழுவதையும் திருப்புகிறோம்.

இதனால் டாஸ்க் பேன் நமக்கு தரும் அனைத்து பயன்களையும் இழக்கிறோம். (ஒரு சிலர் எழுந்து வரும் டாஸ்க் பேன் எதற்கும் பயனில்லை என்று கருதி புரோகிராம்களை இயக்குகையில் அது வரக்கூடாதவகையில் ஆப்ஷன்ஸ் விண்டோவில் இது வராதவாறு அமைத்துவிடுகின்றனர்) குறிப்பாக டாஸ்க் பேன் நமக்கு டாகுமெண்ட் பார்மட்டில் அதிகம் பயன்களைத் தரும்.

மேலும் ஆன்லைன் ரிசர்ச் மேற்கொள்ள வழி வகுக்கும். ஆபீஸ் 2007 வந்த போது ரிப்பன் வழி இயக்கத்திற்காக இந்த டாஸ்க் பேன் நிறுத்தப்பட்டது. ஆனால் இன்னும் பலர் ஆபீஸ் எக்ஸ்பி அல்லது 2003 பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர். நீங்கள் அவர்களில் ஒருவர் எனில் மேலும் படியுங்கள்.


பலர் டாஸ்க் பேன் இருப்பதை அல்லது எழுந்து வருவதனை அறியாமல் இருப்பதற்குக் காரணம் இதன் பெயர் டாஸ்க் பேன் என இல்லாததும் ஆகும். இதற்குப் பெயர் Getting Started என்பதே. ஆனால் Getting Started என்பது பல டாஸ்க் பேன்களில் ஒன்றாகும்.

இந்த லேபிளின் அருகே உள்ள கீழ் நோக்கியுள்ள அம்புக்குறியில் கிளிக் செய்தால் மேலும் உள்ள டாஸ்க் பேன்கள் காட்டப்படும். ஒருவேளை உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களை இயக் கத் தொடங்குகையில் டாஸ்க் பேன் கிடைக்கவில்லை என்றால் அதனைப் பல வழிகளில் பெறலாம்.

வியூ மெனு சென்றால் அதில் Task Pane என்பதைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். அல்லது கண்ட்ரோல் + எப்1 கிளிக் செய்தால் டாஸ்க் பேன் கிடைக்கும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால் அது மறையும். நிரந்தரமாக இதனை இயங்க வைக்க Tools இயக்கி அதில் Options தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய பாக்ஸில் வியூ டேப்பினை அழுத்தினால் கிடைக்கும் கட்டத்தில் Show என்பதன் கீழ் முதலாவதாக இந்த டாஸ்க் பேன் குறித்த தகவல் இருக்கும். அதன் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் செய்தால் அடுத்து ஆபீஸ் புரோகிராம் எதனை (Word, Access, Excel, Power point, Publihser மற்றும் Frontpage) இயக்கினாலும் அதில் டாஸ்க் பேன் எழுந்து வரும்.

எந்த ஆபீஸ் புரோகிராம் இயக்கப்படுகிறதோ அதற்கேற்ற வகையில் டாஸ்க் பேன் அம்சங்கள் கிடைக்கும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் Styles and Formatting என்ற டாஸ்க் பேன் கிடைக்கும்.

இது எக்ஸெல் தொகுப்பில் கிடைக்காது. எக்ஸெல் தொகுப்பில் உள்ள டாஸ்க் பேனில் XML Source ஆப்ஷன் தரப்படுகிறது.

நாம் அடிக்கடி சந்திப்பது Getting Started என்ற டாஸ்க் பேன் தான். ஆபீஸ் அப்ளிகேஷன் தொகுப்பில் எந்த புரோகிராம் இயக்கினாலும் இதுவே கிடைக்கும்.

அண்மையில் பயன்படுத்திய டாகுமெண்ட்களின் பட்டியல் இதில் தரப்படும். அதில் தேவையானதைக் கிளிக் செய்து அந்த டாகுமெண்ட்டைத் திறக்கலாம். இதிலிருந்தவாறே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் ஆன்லைன் தளத்தைப் பெறலாம். இதில் ஒரு சர்ச் பாக்ஸும் தரப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் பெறலாம்.

அடுத்ததாக இதில் இடம் பெற்றிருப்பது நியூ டாகுமெண்ட் பேனல். இதில் கிளிக் செய்து நீங்கள் புதிய டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கலாம். பைல் உருவாக்குவதற்கும் பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

வேர்டில் காலியான டாகுமெண்ட் ஒன்றைத் தொடங்கவா என்று கேட்கப்படும். எக்ஸெல் எனில் ரெடியாக ஆன்லைனில் கிடைக்கும் டெம்ப்ளேட் ஒன்றைப் பெறவா என்று கேட்கப்படும்.


ஹெல்ப் டாஸ்க் பேனிலும் இதே போல உதவிகள் கிடைக்கும். எப் 1 அழுத்தினால் இந்த டாஸ்க்பேன் நமக்குக் கிடைக்கும். ஆபீஸ் தொகுப்பு இயக்கத்தில் ஏதேனும் ஒரு பொருள் குறித்து இதில் தரப்பட்டுள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தாலோ அல்லது பச்சையாக வலது பக்கம் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தாலோ உடனே அந்த பொருள் குறித்த விளக்கங்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும். இதிலிருந்து நமக்கு வேண்டிய விளக்கங்களைக் கிளிக் செய்து பெறலாம்.


இந்த டாஸ்க் பேனை எந்த இடத்திலும் நிறுத்தி வைக்கலாம். அல்லது மிதக்கும் காலமாகவும் அமைத்திடலாம். டாஸ்க் பேனின் தலைப்பின் முன் பார்த்தால் நான்கு புள்ளிகள் தெரியும். இதன் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றவுடன் அது ஸ்வஸ்திக் சின்னம் போல மாறும்.

அப்படியே மவுஸ் கிளிக்கால் அதனைப் பிடித்தவாறே இழுக்கவும். இழுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் விடவும். இதனை மற்ற டாகுமெண்ட்களை குளோஸ் செய்வது போல மேல் வலது மூலையில் உள்ள கிராஸ் அடையாளத்தில் கிளிக் செய்து மூடலாம்.


மேலே கொடுத்த டாஸ்க்பேன் பயன்பாடுகள் ஒரு சில மட்டுமே. இன்னும் அதிகமாக நமக்கு உதவிடும் ஒரு டாஸ்க் பேன் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் அனைத்திலும் கிடைக்கும் ஆபீஸ் கிளிப் போர்டு (Office Clipboard) ஆகும். இதில் தான் நாம் காப்பி செய்திடும் அனைத்தும் நாம் பயன்படுத்துவதற்காகத் தங்கவைக்கப்படுகின்றன. இது விண்டோஸ் கிளிப் போர்டின் ஒரு எக்ஸ்டன்ஷன் ஆகும்.

இதில் காப்பி செய்யப்படும் 24 ஆப்ஜெக்ட்கள் (டெக்ஸ்ட், கிராபிக்ஸ், டேபிள், படம் முதலியன) பதியப்படுகின்றன. இறுதியாகக் காப்பி செய்யப்பட்ட ஆப்ஜெக்ட் மேலாகக் காட்டப்படும். 25 ஆவது ஐட்டம் காப்பி செய்யப்படுகையில் முதலாவதாகக் காப்பி செய்யப்பட்ட ஐட்டம் நீக்கப்படும்.


இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் காட்டப்படுகையில் என்ன என்ன ஐட்டங்கள் காப்பி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு உள்ளன என்று தெரிய வரும். இந்த கிளிப் போர்டு டாஸ்க் பேன் திரையில் தோன்ற கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு சி கீயை இருமுறை தட்டினால் போதும். அதில் காப்பி செய்யப்பட்டுள்ள ஐட்டங்களிலிருந்து நீங்கள் தேவையானதைத் தேர்ந்தெடுத்து விரும்பும் பைலில் தேவைப்படும் இடத்தில் பேஸ்ட் செய்திடலாம்.


அடுத்ததாக பயன்தரும் டாஸ்க் பேன்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அவை: Styles and Formatting மற்றும் Reveal Formatting. இவற்றை டாஸ்க்பேன் மெனுவிலிருந்து பெறலாம். முதலில் உள்ள டாஸ்க் பேன் மூலம் ஒரு டாகுமெண்ட்டின் தோற்றத்தை டெக்ஸ்ட் முழுவதும் மாற்றி அமைக்கலாம்.

இந்த டாஸ்க் பேனைத் திறந்தால் ஒரு டெக்ஸ்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஸ்டைல் மற்றும் பார்மட்டிங் பட்டியலிடப்பட்டிருக்கும்.


ஏதாவது ஒரு என்ட்ரியில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று அங்கு கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் மெனு மேலெழுந்து வரும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைல் தேர்ந்தெடுத்து பின் டெலீட் பட்டனை அழுத்தினால் அந்த குறிப்பிட்ட ஸ்டைல் டாகுமெண்ட்டில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நீக்கப்படும். Modify அழுத்தி அந்த ஸ்டைலை டாகுமெண்ட் முழுவதும் மாற்றலாம்.


Reveal Formatting டாஸ்க் பேன் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் குறித்து இன்னும் கூடுதல் விளக்கங்களை அளிக்கும். மேலும் சில பயனுள்ள பார்மட்டிங் வசதிகளைப் பயன்படுத்த லிங்க்குகளையும் காட்டும். அலைன்மென்ட், பாண்ட் மாற்றம், பாரா இடைவெளி போன்ற விஷயங்களை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.


மேலே விளக்கப்பட்டுள்ள டாஸ்க் பேன்களைப் போலவே கிளிப் ஆர்ட் போன்ற இன்னும் பயனுள்ளவை நிறைய உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வழி தெரிந்து பயன்படுத்தினால் நாம் அமைக்கும் டாகுமெண்ட்கள் சிறப்பாக இருப்பதுடன் நேரமும் மிச்சமாகும்.

நன்றி:தினமலர்