PDA

View Full Version : சிறிது வெளிச்சம்



ஆதவா
27-05-2009, 05:11 PM
சிறிய வெளிச்சத்திற்கும் எனக்குமான தொடர்பு மதுக்கோப்பையில் விழுந்து கிடக்கும் பனிக்கட்டியைப் போன்றது. சிறிது நேரமே நீடித்திருக்கும். கண்களின் கோளவிழிகள் நன்கு விரிந்து கூர்ந்து கவனிக்கும். எனது அசைவுகளை நுட்பமாக்கி மூளைக்குத் தெரிவிக்கும். சொல்லப்போனால், அடர்ந்த இருளிலோ, காய்ந்த வெயிலிலோ காணாத முகம் அந்த சிறிய வெளிச்சத்தில் எனக்குத் தோன்றியிருக்கிறது. சிறிய வெளிச்சம் என்பது வாழ்வின் மூலையெங்கும் பரந்து கிடக்கிறது. கவ்விய இரவை சற்றே விலக்கிட சிறியவெளிச்சம் முயலுவதைப் போன்று கவலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிவிடலாம் என்றொரு கவிதை எழுதிய ஞாபகம் இருக்கிறது.

நேற்றிரவு மின்சாரம் தொடர்பற்று போனதில் சட்டென்று ஒரு பூனையைப் போன்று நழுவிப் போனது வெளிச்சம். சுற்றிலும் மூடிக்கிடந்த இருளில் நானிருக்குமிடத்தை எனது அலைபேசியினால் சிறிய வெளிச்சமாக்கினேன். அச்சூழ்நிலையில்தான் ஆ.வியில் எஸ்ராவின் "சிறிது வெளிச்சம்" படிக்க நேர்ந்தது. இருள் என்றது எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது நிசப்தமும், சூன்யமும்தான். ஒருக்கணத்தில் இவையிரண்டும் ஒருங்கே நெருங்கி என்னை அணைத்தது. அது இத்தொடர் படிக்க மிகவும் வசதியாக இருந்தது. இத்தொடர் மட்டுமல்ல, எனது எல்லா வாசிப்புகளும் இரவின் சிறிய வெளிச்சத்தில்தான் நடக்கின்றன. இதோ, இக்கட்டுரையைக் கூட மங்கிய இரவில், சிறிய வெளிச்சத்தில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் சிறுவெளிச்சம் என்மீது பாய்ந்திருந்ததோ அப்பொழுதெல்லாம் எழுதத் துவங்கினேன். இருள் மீதான பயத்தைப் போக்க சிறிய வெளிச்சமே போதும். ஆனால் எனக்கு இருளின்மீதான காதலில் வெளிச்சமே பயமாகிப் போனது. எனது வாசிப்பு, படைப்பு, அரட்டை, இணையம், ஆகிய மொத்த தொடர்பும் இரவுகளில்தான் அதிகம் என்பது நண்பர்களுக்குத் தெரிந்த விஷயம். எஸ்ரா கூறியதைப் போன்றே, ஒருமுறை என்னிடம் நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்று. ஷாஜகான் என்று பதில் சொன்னேன். அவர்களோ, கொத்தனார்டா மடையா என்று கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் எனக்கோ, ஷாஜகானைக் காட்டிலும் மிகுந்த அக்கறையோடு கட்டியிருக்கும் தாஜ்மகாலின் கட்டிட இன்ஜினியர் யாராக இருப்பார், ஏன் அவரை வரலாறு மறைத்துவிட்டது, அல்லது மறைக்கப்பட்டு விட்டார் என்று கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது. அவர் தாஜ்மகாலைக் கட்டும்பொழுது தான் உலகின் ஒரு அற்புதத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தோணியிருக்குமா? அவரது மனைவி இக்காதலின் சின்னத்தைப் பற்றி என்னென்ன சிந்தித்திருக்கக் கூடும்?

வாழ்வின் இருள் நிறைந்த இடுக்குகளெங்கும் இக்கேள்விகளின் சிறிய வெளிச்சம் பாய்ந்து கொண்டேயிருக்கிறது. யாரும் அறியாத ரகசியங்கள் விண்வெளியில் கசிந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. இருள் நிறைந்த அப்பாதையில் சிறிய வெளிச்சத்தைப் பாய்ச்சி தெரிந்து கொள்ள எனக்கு எத்தனையோ முறை ஆவல் பிறந்ததுண்டு. நாம் வாழும் வாழ்வை சூழ்நிலைகள் தீர்மானிப்பதைப் போன்று வேறேதும் தீர்மானிப்பதில்லை. சிறிய வெளிச்சமேனும் சூழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையின் திரையைக் கிழிக்காதா என்று தோணுகிறது. அவர் கூறியவற்றுள், எனக்கு நேர்மாறாக இருப்பது இரவைக் குறித்த அவரது எண்ணங்கள். எனக்கு பகல் எப்பொழுதும் மூடியே கிடக்கிறது. அலுவலகமும் பணி சார்ந்த நெருக்கடியும் பகல் பொழுதுள் முடங்கிவிடாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. எதைப் பற்றியும் சிந்திக்கவோ, எழுதவோ, படிக்கவோ, மனதைப் புரட்டிடவோ முடிவதில்லை. இதற்கு நேர்மாறாக இரவு சட்டென்று விழித்துக் கொண்டதைப் போன்று இருக்கிறது. இரவுகளில் சிந்தனைகள் தோன்றுகின்றன. இணையம் எனும் மாய உலகம் வரவேற்கிறது. அதனுள் விழுந்து பலவாகத் தெறித்து ஒன்றி, ஒன்றாவதற்குள் எனக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இரவு முடிந்துவிடுகிறது. ஆனால் இப்பொழுது இந்நிலை சற்று மாறிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறதெனினும் இந்நிலையே நீடிக்க வேண்டுமென்கிறது மனம்.

எஸ்ரா, மனதில் புகுந்து அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திக் கொண்டிருப்பவர் என்று அறிவேன். சிறிது வெளிச்சத்தில் வாசனை குறித்து படிக்கையில் அப்படித்தான் தோன்றியது. முதன் முதலாக வாசனையை எப்பொழுது அறிந்தேன் எனும் கேள்வி புத்தகத்தின் எழுத்தினூடாக ஊர்ந்து கொண்டிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து முதல் வாசனையாக, இருந்தது ஊதுபத்தி வாசனைதான். தினமும் காலையில் எழும் முன்னர் அலமாரியின் கதவிடுக்கில் புகைவிட்டுக் கொண்டிருக்கும். மூக்கின் வழி துளைத்து உடலெங்கும் தூங்கிக் கிடக்கும் ஆன்மீகத்தைச் சுண்டியெழுப்பும். அதன் ஒடிசலான உடலிலிருந்து நாற்றம் வெளியேறுவதைப் போன்றே புகை கிளம்பிக் கொண்டிருக்கும்.. தினமும் அதன் நுகர்ச்சியிலேயே எழவேண்டியிருந்தது. அதன் புகை ஒரு கயிறைப் போன்று நீட்டி கழுத்தை இறுக்குவதைப் போன்றே இருந்தது. நாளடைவில் அது எனக்கு சலிப்பையே ஏற்படுத்தியது. ஆன்மீகத்தின் மணமாக அறையெங்கும் வாசனை நிறைந்திருந்தது குறித்து பலசமயம் வீட்டில் சண்டையிட்டிருக்கிறேன். ஒருவகையில் நாத்திகம் நாடுவதற்காகவும் கூட ஊதுபத்தி பயன்பட்டிருக்கலாம்.

நுகர்தல் என்பதும் ஒருவகையில் பசியைப் போக்கக் கூடியது அல்லது ஒரு பொருளைத் தின்பது என்று புரிந்து கொண்டது சமையற்கட்டில் நுழையும் பொழுது தெரிந்து கொண்டேன். கைக்கு எட்டமுடியாத உயரத்தில் வாழைப்பழம் தொங்கிக் கொண்டிருக்கும். அதன் வாசனை அச்சிறிய அறையில் ஊதிபத்தியைப் போன்றே நிறைந்து கொண்டிருக்கும். தின்னமுடியாத அவ் வாழைப்பழத்தின் வாசனையை நுகரும்பொழுதெல்லாம் பசியின் தாகம் தீர்ந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்வேன். பிறகு ஒவ்வொரு முறையும் அவ்வறைக்குள் நுழையும் பொழுது ஏற்படும் வாழைப்பழத்தின் வாசனை வேண்டுமென்றே உணவைத் திணிப்பதாகவே தோன்றும். நுகர்ச்சி எனும் உணர்வு மிக நுட்பமானது. அது நுகர்தலின் வழியே சில நுட்பமான செயல்களையும் செய்கிறது. ஊதுபத்தி வாசனையும், வாழைப்பழ வாசனையும் எனக்கு இன்று பிடிக்காமலேயே போய்விட்டது.

நுகர்தல் என்றபொழுது இன்னுமொன்று நினைவுக்கு வருகிறது. தற்சமயம் சேவல்காரி என்றொரு தொடர் எழுதி வருகிறேன். (இன்னும் வலையில் வெளியிடவில்லை) அதில் ஓரிடத்தில் கோழியின் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருப்பேன். உணவுப் பொருட்களின் மீதான வாசனை இன்னும் தீராமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது வாழைப்பழம் தவிர்த்து. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாசனை பிடித்திருக்கிறது. எஸ்ரா குறிப்பிட்டபடி, அவ்வாசனை யாருக்கும் தங்குவதில்லை. உடல் மொழியெழுதும் கவிதையில் கசிந்து பிழையாகி வரும் வார்த்தைகளே உடல் வாசனை, எனக்குப் பிழைகள் பிடிப்பதில்லை. ஆனால் நினைத்துப் பார்த்தால் இறுதி வரையிலும் உடன் வரும் வாசனை அதுமட்டுமே தான். Pink ன் Get the Party Started பாடலின் ஒரு காட்சியில் அவள் குளித்துவிட்டு வரும் பொழுது தனது அல்குலை முகர்ந்து பார்ப்பாள். வீட்டில் உள்ளவர்கள் அதைக் கண்டதும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இப்பொழுது தோன்றுகிறது. நம்முள் எழும் வாசனை நமக்கு ஏன் பிடிக்காமலிருக்கிறது? வலையில் 31 கேள்விகள் எனக்குக் கேட்கப்பட்டிருந்த பொழுது மல்லிகையே எனக்குப் பிடித்த மணம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது சூழ்நிலையின் காரணமாகக் குறிப்பிட்டிருந்தேனா, நிர்பந்தமா, அல்லது முன்யோசனையற்ற பதிலா என்று தெரியவில்லை. உண்மையில் எனக்கு எந்த வாசனை பிடித்திருக்கிறது என்று அனுமானிக்க முடியவில்லை.

இக்கட்டுரையை எழுதும் பொழுது என் அம்மாவிடம் நீ முதன் முதலாக கண்டறிந்த வாசனை எது என்று கேட்டதும் பட்டென்று பால்வாசனை என்றார். யோசித்துப் பார்த்தால் உலகின் எல்லோருடைய முதல் வாசனை பாலாகத்தான் இருக்கவேண்டும். பிடித்த வாசனை எது என்று கேட்டேன். பட்டு ரோஸ் என்றார். அது இப்பொழுதும் உனக்கு வாசனையை உணர்த்துகிறதா என்றேன். ஆம் என்றார்... பெண்களின் கூந்தலில் எப்பொழுதும் ஏதாவதொரு வாசனை தங்கியிருக்கிறது. அது அவர்கள் நினைத்தவுடன் மூக்கின் நுனியில் அமர்ந்து கொள்கிறது. வாசனை குறித்து பேசுகையில் இன்னுமொன்று குறிப்பிட்டாகவேண்டும், எனக்கு நுகர்தலின் வாயிலில் தொந்தரவு இருக்கிறது. நான் இதுவரையிலும் எந்த மருத்துவரையும் அணுகியதில்லை. இத்தொந்தரவு என்னை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதாக உணர்கிறேன்.

எஸ்ரா தேர்ந்தெடுக்கும் தலைப்புகளில் இருக்கும் வசீகரம் இத்தொடரில் இல்லை. மிகச்சாதாரணமாகவே இருக்கிறது. அதனாலோ என்னவோ, சாதாரண விஷயங்களின் நுட்பங்களை எடுத்துச் சொல்லுகிறது. இனி வரும் வாரங்களின் எஸ்ரா இன்னும் மனதை அரித்து சுத்தமாக்குவார் என்று நினைக்கிறேன்.. அவருக்கு என் முன் வாழ்த்துகள்!!

பிகு:

திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் சிறிது வெளிச்சம், ஆனந்தவிகடனில் ஆரம்பமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆனந்தவிகடன் வாங்குவது நின்றுபோன சூழ்நிலையில் அவர்களது இந்த தொடர், தொடர்பற்று போன எனக்கும் ஆ.விக்குமான உறவை சற்று வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது சிறிது வெளிச்சம் ஒரு பாகமே வந்திருக்கும் இச்சூழ்நிலையில் இதைப்பற்றி எழுதவேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ, படிக்கும் வரையிலும் இல்லை ; ஆனால் படிக்கத் துவங்கியதும் நிச்ச யம் எழுதியே ஆகவேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். இது விமர்சனமல்ல, படித்தவுடன் தோன்றிய எண்ணங்கள்.

அமரன்
30-05-2009, 08:32 PM
எஸ்.இராமகிருஷ்ணன்.. மன்றத்தின் எழுத்தாளர்களுடன் பயணிக்கையில் அடிக்கடி அளாவும் பேர். பரிச்சயம் இருள் சூழ்ந்து இருந்த எஸ்.ரா உடனான கை குலுக்கள் மீது ஆதவாவின் இந்த விமர்சனம் சிறிது வெளிச்சம் அடித்திருக்கிறது. விரைவில் மீண்டும் வருகிறேன்.