PDA

View Full Version : துபாய்............



Nanban
23-09-2003, 06:49 AM
துபாய்............ :p:p:p


இன்று காலியாகக் கிடப்பது
என் மனம் மட்டுமல்ல
என் வீடும் கூடத் தான்.
களைந்து எறியப்பட்ட
ஆடைகள்
கோபத்துடன் இருந்தன -
நாளை நீ வெளியே செல்ல
நாங்கள் வேண்டும்
என்ற கர்வத்துடன்.

நாளை வெளியே செல்வேனா
என்ற முடிவிற்கு இன்னமும்
வரவில்லை என்பதால்
ஆடைகளின் கோபம்
அர்த்தமற்றதாகிறது எனக்கு.

எல்லோருக்கும் உண்டான நாளை
எனக்கும் தான் இருக்கிறது.
எல்லோருக்கும் ஒடுவதற்கு
ஓர் இலக்கு வைத்திருக்கிறான்.
நான் மட்டும் இலக்கில்லாத
நிர்வாண மனத்துடன்
மல்லுக்கு நிற்கிறேன்.

கொடுப்பவற்றை எல்லாம்,
அதிகம் பால்குடித்த குழந்தையாய்
எதுக்களித்து
வெளியே தள்ளுகிறது -
பால் கொடுத்த தாயின்
வேதனை தான்
என்னைத் தீண்டுகிறது.

விடியும் முன்னே
விடிந்தது என் உலகம் மாத்திரம்
எழுந்திரு - நேரமாகி விட்டது.
வயதாகி நடுங்கும் குரல்
விரட்டி விரட்டி
பழக்கப்பட்ட ஆணவக்குரல்
தொண்டை உடையாத
கரகர குரல்.
எல்லா குரல்களும்
ஒரே தொனியில் பாடியது -
நேரமாகி விட்டது, எழுந்திரு.
எல்லோருக்கும்
ஒரு இலக்கு இருக்கிறது.....
ஒவ்வொரு ஆசை இருக்கிறது...
ஒரு நாளைய கனவு இருக்கிறது....
இதெல்லாம் புரியாத
இளையது மட்டும் வந்து
கழுத்தைக் கட்டிக் கொண்டு
மீண்டும் மெல்லமாய்
ஒரு தூக்கத்தில் ஆழ்ந்த பொழுது
என் மனம் விழித்தது -
என்னுடைய இலக்கு,
எதுவுமே கேட்கத் தெரியாத
இந்தப் பிஞ்சுதான்.

ஆடைகளை நாணத்துடன் எடுத்து
அணிந்து கொண்டேன் -
அதிகாலை விமானத்தைப் பிடிக்க.
காலியான மனமெல்லாம்
நிறைந்து, நிறைந்து வழிந்தது -
'திர்ஹம், திர்ஹம், திர்ஹம்.....'

சேரன்கயல்
23-09-2003, 08:20 AM
நண்பன்...
உள்ளத்து உணர்வுகளை அற்புதமாக படம்பிடித்த கவிதை...
மனதை மறுதலித்து நாம் செய்கின்ற காரியங்களின் வேதனையை சுவையாக சேர்த்திருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்...

இக்பால்
23-09-2003, 12:52 PM
நண்பர் நண்பனுக்கு என் புன்முறுவலே பாராட்டுக்களாய் தருகிறேன்.

-அன்புடன் அண்ணா.

suma
23-09-2003, 01:07 PM
பாராட்டுக்கள்.

poo
23-09-2003, 04:36 PM
நண்பன்.. மீண்டும் மீண்டும் நிருபணம்..

பாராட்டுக்கள் நண்பா..

இன்றுகூட வெளியேற்றும் சட்டமொன்று.. (அதைக்கண்டுதான் இக்கவிதையோ?!!)

puppy
23-09-2003, 04:53 PM
கவிதை நன்று நண்பன் அவர்களே..

Nanban
24-09-2003, 10:22 AM
மிக்க நன்றி. அபூர்வமாக வருகை தரும் இணை நிர்வாகி பப்பியின் பாராட்டுகள் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்........

karavai paranee
24-09-2003, 02:49 PM
அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

தொடரட்டும்

இளசு
24-09-2003, 06:46 PM
திர்ஹம் திர்ஹம் எனும் ஓங்கார மந்திரம்...
அது செலுத்தும் பாதையிலே மனித எந்திரம்...


அருமை நண்பன் அவர்களுக்கு என் பாராட்டு.

இளசு
24-09-2003, 06:47 PM
அபூர்வமாக

அன்றாடம் என மாற்றுங்கள் நண்பா...! :D

gankrish
26-09-2003, 06:53 AM
துபாய்............ :p:p:p
'திர்ஹம், திர்ஹம், திர்ஹம்.....'

நண்பா இன்று இது தான் பல வீட்டின் தாரக மந்திரம்.

Nanban
26-09-2003, 10:22 AM
இக்கவிதையில் பங்கேற்று கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

rambal
07-04-2004, 04:54 PM
துபாய் வாழ்க்கையில் புகுந்துவிட்ட நண்பனுக்கு,
அங்கிருந்து வெளியேறியவனின் பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்..

Nanban
07-04-2004, 06:32 PM
நல்வரவு ராம்பால் அவர்களே.....

மீண்டும் உற்சாகட்துடன் உங்கள் பங்கேற்பைப் பார்க்கும் பொழுது மனதிற்கு உற்சாகமாக இருக்கிறது.......

kavitha
08-04-2004, 04:54 AM
உங்கள் துபாய் கவிதையை படித்த உடன்
திருமணம் முடித்து புக்ககம் செல்லும் பெண்களின் நினைவு வந்தது நண்பரே!

அமரன்
23-11-2007, 06:25 PM
நல்ல திரைப்படங்களை நான் மூன்றாக வகைப்படுத்துவேன். ஒன்று.. பார்த்து முடித்ததும் மனம் லேசானது மாதிரி இருக்கவேண்டும். இது களியாட்டம்.. இன்னொருவகை படத்தின் காட்சிகள் "அட இப்படி ஒருசம்பவத்தை கடந்துதானே நான் வந்திருக்கின்றேன்" என்று எண்ணவைக்கவேண்டும். பழைய, நடைமுறை நினைப்பில் மிதக்கவிடவேண்டும்.. மூன்றாவது..புதிதாக எதையாவது சிந்திக்க வைக்கவேண்டும். மூளைச்செல்களை சுறுசுறுப்பாக்கவேண்டும்..

இக்கவிதை இரண்டாம் வகை திரைச்சித்திரத்துக்கு நிகரானது. எனது கடந்தகால, நிகழ்கால அன்றாடத்துக்கு அச்சுப்பிரதியாக... திர்ஹத்துக்கும் பதிலாக யூரோ. பூக்கள்கூட என்னரவம் கேட்டுத்தான் கண்திறக்கும். பனிபுகார்கள் பிரிந்து வழிவிடும் முதல் வழிப்போக்கனும் நானே.

ஓவியன்
25-11-2007, 07:04 AM
துபாய்....!!

நானும் மனமெல்லாம்
திர்ஹாம் நிறைவதாய் நினைத்து
துபாய் சென்று இறங்கியவனே....

மனம் மட்டுமில்லை
பாக்கெட்டெல்லாம்
திர்ஹாம் நிறைந்ததுதான்
ஆனால் மகிழ்சி....!!!

ஓ அந்த திர்ஹாமுக்கு
நாம் கொடுத்த விலையோ...
நல்லது, இனிமேல்
மகிழ்சி தொலையா திர்ஹாம்
தந்தாலே துபாய்க்கு
மீள வருவேன்...!! :)

சுகந்தப்ரீதன்
25-11-2007, 07:28 AM
புலிவாலை பிடித்த கதைதான்..!புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் நிலை..!இதைதான் நானும் கவிதை வடிவில் இப்படி எழுதினேன்...

ஜீவனுள்ள வாழ்வைத்தேடி
ஜீவனை தொலைத்துவிட்டு
ஜீவிதமாய் திரியும்
ஜீவன்கள் நாம்!

ஆனாலும் நம் நண்பர் காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்..வாழ்த்துக்கள் நண்பரே..!