PDA

View Full Version : அந்த ஒரு நிமிடம்



அமரன்
22-05-2009, 08:34 PM
மனிதம் மரணித்தது...

இப்படித்தான்
சேதி சொல்லி இருக்கும்
எங்களூர் தடவிவந்த
ஈரக் காற்று..

வானில்
கருமேகக் காடுகள்
முளைத்திருந்தன..

பூமியில்
மழைப் பூக்களை
தூவின..

ஈகைச்சுடர் வானோக்கியது.. என்
கண்களை இமை மூடியது..

ஒரு சொட்டுக் குருதியுடன்
கண்ணுக்குள் வந்தது
ஒரு குருத்து..

சொட்டில்
தூளி கட்டி ஆடியது
தன்னை நோக்கி ஒரு கை
நீளும் எனும் நம்பிக்கை.

குருத்துப் பின்னால்..

பாதி எரிந்த இளந்தளிர்.
பாதி கிழிந்த பச்சிலை.
முறிந்த கிளை.. அறுந்த வேர்....

என்
காதோரக் கிசு கிசுப்பிலும்
இரத்தப் பிசு பிசுப்பு..

நேற்று
உச்சத்தில் பறந்த தேசியக்கொடி
இப்போ
கிட்டத்தில் வந்து கதைத்தது..

சட்டென்று
முகத்தில் துமித்தது
சூட்டுத் தேன்.

தாயக விடுதலைப் படையின்
ஐந்தாம் படை
கருப்பாடை பூண்டு
அணிவகுத்து நிற்பது கண்டு
அழிந்து போனது
கருமேகக் காடு.

கத்தியில்லை..
சத்தமில்லை.. ஆனால்
யுத்தம் துவங்கியது..

சூரியத் தேன் குடித்து
சிவந்த என் கண்களோ
கசியத் தொடங்கின.

கசிவுகள் குவிந்து
துளியாகி விழும் பொழுதில்
பத்திரப்படுத்துகிறேன்
என் பேனாதனை நிரப்ப..


வன்னிக் களத்தின் கொல்லப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நஆள் இன்று.. 22/05/2009

ஆதவா
23-05-2009, 10:42 AM
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அமரன்.. இக்கவிதைக்கு விமர்சனமிட...
அனைவருக்கும் எனது அஞ்சலி!!!

ஓவியா
24-05-2009, 12:42 AM
வரிகள் நெஞ்சில் கல்லைதான் வைக்கின்றன, அர்த்தம் புரியும் பொழுது குருதி உறைந்து போகின்றன.

வலிகள் பொதிந்த கவிதைக்கு நன்றிகள். இந்த் கவிதையை வாசித்த எனக்கே கண்ணீர் ததும்புகின்றன என்றால் எழுதிய உன் உணர்வுகள்..........

வீரமரணமடைந்த அனைத்து சிரியோர், பெரியோர், தாய்மார்கள், சகோதரிகள், சகோதரர்கள், மாவீரர்கள் என் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

பாரதி
24-05-2009, 03:57 PM
முன்பே படித்தும் எதுவும் எழுதத் தோன்றாமல் சென்று விட்டேன்.

இத்தனை கொடுமைகளை எவ்வளவு நாட்களாக தாங்கி, தாங்கி.............ஒரு வாக்கியத்தில் கண்ணீர் அஞ்சலி என்று சொல்லுவதுடன் நமது கடமை முடிந்து போகிறது........ ஹூம்..

இன்னுயிர் நீத்தவர் தவிர்த்து இன்னல்களில் இடம்தேடி அலைவோருக்கு நிம்மதியாய் தங்க, உறங்க இனியேனும் ஒரு இடம் கிடைக்குமா..?