PDA

View Full Version : ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம்- பாகம் 10



ரங்கராஜன்
04-05-2009, 08:22 PM
ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம்

என்னுடைய பால்ய நண்பன் ஒருவன் வந்து தனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தான், பத்திரிக்கையை பார்த்தவுடன் என்னுடைய கண்களில் பல்பு எரிந்தது, காரணம் திருமணம் நடக்கும் இடம். ஸ்ரீரங்கம் என்று போட்டு இருந்தது, இடத்தை வைத்து நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்னுடைய நண்பனின் ஜாதியை, ஆம் ஐயங்கார் தான். நான் அவனை பார்த்து கண்டிப்பாக வரேன்டா என்றேன். காரணம் இரண்டு. ஒன்று இதுவரை நான் அங்கு சென்றது இல்லை, இரண்டாவது ஸ்ரீரங்கத்து ரங்காக்களின் ஜாகைகளை பார்க்கலாமே. ஆமாம் சுஜாதாவின் இளமை பருவம் கழிந்த இடம் அது தான். அப்புறம் நம்ம ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் எனக்கு சாமிகளிலே சின்ன வயதில் இருந்து இவர் மீது ஒரு ஈர்ப்பு, என்னைப்போலவே எப்பொழுதும் சோம்பேறித்தனமாக படுத்துக் கொண்டு இருப்பதினாலா? அல்லது அவர் சிந்தனை செய்தவாரே உறங்கிக் கொண்டு இருக்கும் ஸ்டைலினாலா? அதுவும் கடலின் நடுவில் படுத்து இருப்பார், காற்றும் நன்றாக வரும் என்பதாலா? தெரியவில்லை. மற்ற சாமிகளை பார்த்தால் கையில் வேல் கம்பு, அல்லது சூலம், அல்லது சங்கு சக்கரம், அல்லது கிளி, தாமரை, உலகம்னு எதையாவது கையில் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பார்கள். அதில் பழனி முருகன் மட்டும் பரவாயில்லை சிங்கில் பீசில் கொஞ்சம் ஃப்ரியாக இருப்பார். அதனால் மற்ற சாமிகளை கம்பேர் செய்யும் பொழுது இந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் கொஞ்சம் நிறைவான போஸ் தான் கொடுத்து இருப்பார், இவரை பார்க்கும் பொழுது சாமி என்ற ஒரு பிரமை வருவதற்கு முன்பு, நாம் படுப்பது போல படுத்து இருக்காரே என்று சிந்தனை தான் மேலோங்கும் எனக்கு.

என் நண்பன் அடுத்த நாள் வந்து “டேய் எங்க குரூப்புல ஒருத்தர் வரவில்லை, நீ எங்ககூட ரயிலில் வரியா” என்றான். நானும் சரி என்று சொல்லி விட்டேன். காரணம் இதுவரை நான் ரயிலில் சென்ற தொலை தூரப்பயணமே செங்கல்பட்டில் இருந்து மாம்பலம் தான். நான் இதுவரை எந்த ஊருக்கு சென்றாலும் பஸ்ஸில் தான் போவேன். ரயிலில் செல்வது பிடிக்கும் என்றாலும், யாரு போய் டிக்கெட்டுக்கு நின்று அலைவது என்ற ஒரு சோம்பேறித்தனம், அதனால் நான் சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். நாங்கள் ஊருக்கு புறப்படவேண்டிய நாள் அன்று காலையில் இருந்து மாலை வரை அவன் என்னுடைய வீட்டில் தான் இருந்தான், அவனும், அவனுடைய ஒரு அண்ணன் பொண்ணும், ஒரு அக்கா பொண்ணும். இரண்டு சின்ன குட்டிகளும் செம வாலுங்க. அந்த வாலுங்களை பற்றி அப்புறம் சொல்றேன். இவனுடைய வீட்டு என்னுடைய வீட்டுக்கு இரண்டு பிளாட் தள்ளி இருக்கிறது, காலையில் இருந்து அவன் என்னுடன் தான் பேசிக் கொண்டு இருந்தான் அதுவும் ஜாலியாக சிரித்துக் கொண்டு. எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது என்னடா “உனக்கு தானே கல்யாணம் நீ இப்படி ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாய், எதுவும் வீட்டில் வேலை இல்லையா? ஒரு வித டென்சனே இல்லாமல் இருக்கிறாயே? என்று மனதில் பட்டதை கேட்டேன். அவன் எதுவுமே சொல்லாமல் என்ன இப்ப கல்யாணம் தானே நடக்க போவுது.
என்று அன்று மாலை 5 மணிக்கு தான் என்னுடைய வீட்டை விட்டு சென்றான். இரவு 10 மணிக்கு ரயில் அதுவும் எக்மோரில் இருந்து, நான் இரவு எட்டு மணிக்கு அவன் வீட்டுக்கு சென்றேன். தடியாக ஒரு ஐயர் உக்கார்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டு இருந்தார், இவன் புது வேஷ்டியை கட்ட தெரியாமல் நெஞ்சுவரை கட்டிக் கொண்டு மலையாளப்பட போஸ்டர் போல உக்கார்ந்துக் கொண்டு இருந்தான். எதோ மந்திரங்கள் எல்லாம் சொன்னான், பல விதமாக ஆசிர்வாதங்கள் வாங்கினான், அவன் வீட்டில் இருந்தது மொத்தமே 6 பேர் தான் 4 பெரியவர்கள், 2 குழந்தைகள் எனக்கு இதுவே பெரிய ஆச்சர்யம், இதுவரை நடந்த எங்க வீடு கல்யாணத்திலும் சரி, எனக்கு தெரிந்தவர்கள் வீட்டு கல்யாணத்திலும் சரி. குறைந்தது 200 பேராவது இரண்டு நாளுக்கு முன்பே வந்து விடுவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை மிக மிக யதார்தமாக நடந்த கல்யாணம் இது, எந்த டென்சனும் இல்லாமல் இருந்தார்கள். அப்புறம் எனக்கு அதிசயமாக இருந்தது அந்த ஆசீர்வாதங்கள் அதுவும் மாப்பிள்ளை யானை காது மாதிரி கையை வைத்துக் கொண்டு பல முறை கீழே தண்டால் எடுப்பதை போல விழுந்து எழுந்தான். என்னை பொறுத்தவரை சகமனிதனின் காலில் விழுவதே தவறு, அம்மா அப்பாவை தவிர (என்னுடைய பிற்காலத்தையும் கருதி, மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம்). என் நண்பன் பெயர் பாலாஜீ அவன் அந்த ஐயர் காலில் மட்டும் 20 தடவை விழுந்தான், நான் பார்த்தது வரை, அதுவும் இரவு கிளம்புவதற்கு முன், கால் டாக்ஸி வந்தது, இவர்கள் மூட்டை முடிச்சை பார்த்து
டிரைவர் அலறிவிட்டான். 50 பெரிய பெரிய பைகள். டிரைவர் 50 ரூபாய் அதிகம் கேட்க, பாலாஜீ அரை மணி நேரம் சண்டை போட்டான், அப்புறம் 35 ரூபாய் கொடுத்தான். வண்டி கிளம்பியது, என்னுடைய மடியில் பாலாஜீயின் அக்கா பெண் ஐஸ்வர்யா (9) உக்கார்ந்துக் கொண்டாள். அவளை பற்றி சொல்லியாக வேண்டும், டாக்ஸி எக்மோரை அடைவதற்குள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

பெங்களூரில் படிக்கும் அவளும் அவளுடைய அண்ணனும் (13) என் நண்பன் பாலாஜியின் வீட்டுக்கு கல்யாணத்தை முன்னிட்டு ஒரு வாரம் முன்பே வந்து இருந்தார்கள். நாங்கள் ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள் காலை எங்கள் வீட்டுக்கு பாலாஜி இந்த வாண்டுகளுடன் வந்து என்னிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான். இவர்களை என் பொறுப்பில் விட்டு விட்டு இவன் வெளியே கடைக்கு போனான். அந்த ஐஸ்ஸூ பெயருக்கு ஏற்றார் போல நல்ல அழகு (ஆமா இந்த ஐஸ்வர்யா, மதுமிதா பெயர் கொண்ட 95% பெண்கள் மட்டும் எப்படி எல்லாரும் அழகாக இருக்கிறார்கள்). என்னை பார்த்தாள்

“உன் பெயர் என்ன டா செல்லம்” நான்.

“ஐஸ்வர்யா அங்கிள்” என்றாள் கொஞ்சும் குரலில்.

ஆஆஆஆஆஆஆ அங்கிள் அங்கிள் அந்த வார்த்தை என்னமோ செய்தது, வயசு ஆயிடுச்சா எனக்கு! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட cartoon channel பார்த்தனே என்னை போய் இவ அங்கிள்னு கூப்பிடுறாளே, இவ தான் என்னை இரண்டாவது முறையாக கூப்பிட்டது, (முதல் முறை கூப்பிட்டது யார் தெரியுமா நம்ம சிவா அண்ணாவின் பொண்ணு, அங்கிள் என்றால் தயங்கியபடி, நல்ல வேளையாக சிவா அண்ணா காப்பாற்றி விட்டார், நீ அண்ணானே கூப்பிடுமா என்றார் புண்ணியவான்). இப்படி நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது

“உங்கிட்ட ஐ பாட் இருக்கா” என்றான் அந்த பையன் பெயர் அனிருத். நான் எடுத்து கொடுத்தேன். அவன் பெரிசாக சிரித்து

“இது ஒரிஜனல் செட் இல்லை டூபாகூர் செட்” என்றான்.

“தெரியும்” என்று நான் சொல்வதை கூட கேட்காமல் என்னுடைய அறையில் என்னுடைய பொருள்களை நோண்ட சென்று விட்டான் அனு.

“why did you buy these kind of duplicate products uncle" என்றாள் ஐஸ்ஸூ, அவள் இப்படி ஆங்கிலத்தில் ஆரம்பிப்பாள் என்று நான் நினைக்கவில்லை.

“actually this i pod என்னுடைய friend பரிசா கொடுத்தான்” ஆச்சர்யத்தில் தங்ழிஷில் உளறினேன். நான் 5 வது படிக்கும் பொழுது என்னுடைய ஆங்கில ஆசிரியரை பார்த்து ஒரு பயம் வரும், அது இப்ப வந்து.

“let it be uncle, we should not encourge these kind of products, and the peoples who are selling these things uncle" என்றாள் புருவத்தை தேய்த்தபடி.

“ok darling, i swear on you that i wont do this mistake again" என்றேன். பரவாயில்லை பயம் ஒர் அளவு விலகிவிட்டது.

அவள் அழகாக சிரித்துக் கொண்டு “i already started liking u uncle"

”உங்கிட்ட வீடியோ கேம்ஸ் சீடி இருக்கா” என்றான் கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு.

“இல்லடா நான் என்ன சின்ன பையனா அதெல்லாம் விளையாட”

“அப்ப இது என்ன” என்று தன்னுடைய கைகளை பின்னாடியில் இருந்து எடுத்தான். கை நிறைய சீடிகள், வீடியோ சீடிகள். கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன், ஐஸ்ஸூ வேற என்னை நாயை பார்ப்பது போல பார்த்தாள். எப்படி சமாளிப்பது

“வெரி குட் டா, எப்படி கண்டுபிடிச்ச எங்க இருந்தது, இதை தான் நான் ஒரு வருஷமா தேடினு இருந்தேன் டா, எங்க அம்மாவும் அப்பாவும் எடுத்து ஒளிச்சி வச்சிட்டாங்க, கழுகு கண்ணு டா உனக்கு” சமாளித்தேன். அனுவுக்கு ஒரே பெருமிதம் அவனை புகழ்ந்து விட்டேன் திரும்பவும் எதையோ நோண்ட சென்று விட்டான், என்னுடைய அறையில்.

“uncle can i get some water" என்றாள் ஐஸ்ஸூ.

“தரேன், ஆனா அங்கிள்னு கூப்பிடாதே, அண்ணானு கூப்பிடு” என்றேன். தண்ணீயை கொடுத்தேன், குடித்து வாயை துடைத்துக் கொண்டு.

“ஏன், கூப்பிட்டா என்ன” என்றாள்.

“ஒண்ணும் இல்ல, நீ கூப்பிடும் போது, நான் பென்ஷன் வாங்கினு கட்டிலில் படுத்துக் கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுது” என்றேன்.

“ஓஹோ, சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு பதில் சரியா சொன்னால் நான் உங்களை நீங்கள் சொல்ற மாதிரி கூப்பிடுகிறேன்” என்றாள்.

மனதுக்குள் கீழிந்தது போ என்று நினைத்துக் கொண்டேன் “சரி ரெடி என்றேன்”. அவள் யோசித்து விட்டு “சரி நீங்க எந்த topic ல் கிளவர்”

“புரியவில்லையே”

“சயின்ஸா, ஜீகே வா, கரண்டு ஈவண்ட்ஸா, பாலிட்டிக்ஸா என்று அவள் அடிக்கிக் கொண்டு போக” நான் அவசரமாக குறுக்கிட்டு

“சினிமா” என்றேன், அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள் பின்பு மூக்கை ஸ்டைலாக ஒரு முறை தடவிக் கொண்டு,

“ஓகே here is your question, அரவிந்த்சாமியின் opposite என்ன?” என்றாள். நான் சிரித்துக் கொண்டு

“அடுப்புல வெந்தசாமி” என்றேன். அவள்

“ம்ஹூம், நான் உங்களை இனிமேல் அங்கிள்னு தான் கூப்பிடுவேன், அதுக்கு answer அரவிந்த் didnt see me” என்றாள். எனக்கு என்ன பதில் சொல்வதுனு தெரியவில்லை,

“ஐஸ்ஸூ குட்டி இன்னொரு சான்ஸ் கொடுடா” என்றேன்.

“சரி what will a cow give after an earthquake" என்றாள்.

“பால்”

“இல்லை”

“தயிர்”

“இல்லை”

“கன்னுகுட்டி”

“ஆஆ அப்படினா”

“ஒண்ணும் இல்லை நீயே சொல்லு, எனக்கு தெரியலை”

“MILK SHAKE" என்று சிரித்தாள். “உங்களை இனிமேல் நான் அங்கிள்னு தான் கூப்பிடுவேன் ஆஹா ஆஹா”.

உள்ளே இருந்து வந்த அனு “அங்கிள் உங்ககிட்ட ஹோம் தியெட்டர் இருக்கா?” என்றான்.

“என்கிட்ட ஹோமே இல்லை”

“வாங்க வேண்டியது தானே அங்கிள்”

“என்னடா டீ சாப்பிடற மாதிரி சொல்ற, என்னை அங்கிள்னு கூப்பிடாதே”

“ சரி டா தக்ஸ்னா” என்றான் யோசிக்காமல், ஐஸ்ஸூ அதுக்கு சிரித்தாளே ஒரு சிரிப்பு, ஐய்யோ ஆண்டவன் படைத்ததிலே மிக அழகான படைப்பு பெண் குழந்தைகள் தான்.

டிராப்பிக் அதிகமாக இருந்ததால் டாக்ஸி பொறுமையாக egmore வந்து சேர்ந்தது, எல்லா பைகளையும் இறக்கி வைத்து விட்டு பாலாஜீ சொன்னான்

“மச்சி ஒரு குட் நியூஸ், ஒரு மாமா வரமாட்டேன்னு சொன்னாரு இல்ல”

“ஆமா”

“அவரு டிக்கெட்டை தானே உனக்கு தரதா சொன்னேன்”

“ஆமா”

“அவரு திடீர்னு வந்துட்டாரு”

“அடப்பாவி, அப்போ எனக்கு”

“புஸ்ஸுக்கு” என்று கையை கக்கத்தில் வைத்தபடி சிரித்துக் கொண்டே சொன்னான்.

“மவனே மாப்பிள்ளைனு கூட பார்க்க மாட்டேன், செருப்ப கைட்டி வாயிலே அடிச்சிடுவேன்”

“நீ ஷூ தானே போட்டுனு இருக்க”

“நீ செருப்பு போட்டுனு இருக்கீயே”

“நான் தர மாட்டனே”

“டேய் என்ன டா விளையாடினு இருக்க, இப்போ டிக்கெட் இருக்கா இல்லையா சொல்லித் தொலடா தயிர் சாதம், உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை செருப்பாலே அடிச்சிக்கனும்”

“இப்ப தருவேனே” என்று செருப்பை கழற்றினான்.

நான் எப்படி ஸ்ரீரங்கம் போனேன்?, ஐஸ்ஸூவிடம் ஜெயித்தேனா?, பயங்கர பசியில் இருக்கும் பொழுது டீ ஸ்பூனில் சாதம் பரிமாறியவனை பார்த்து முறைத்தேனா? எல்லாம் விரைவில்.

(தொடரும்..............)

மதி
05-05-2009, 03:04 AM
வழக்கமான நகைச்சுவை கலந்த உரையாடல்களுடன் தக்ஸின் ஸ்ரீரங்கத்துப் பயணம்... ஜமாய்ங்க.

samuthraselvam
05-05-2009, 05:53 AM
அனுபவத்தை நகைச்சுவையாக சொன்ன விதம் அருமை அண்ணா.. ஐஸ்வர்யா, ரொம்ப நல்ல பொண்ணு. உண்மைய எவ்வளவு அழகா அங்கிள்ன்னு சொல்லுறா. குட் கேர்ள்..

அமரன்
05-05-2009, 07:22 AM
எப்படிங்க மூர்த்தி உங்களால முடியுது.

அச்சரம் பிசகாம படம் பிடிச்சிருக்கீங்க.

பூமகள்
05-05-2009, 08:37 AM
தக்ஸ்.. உங்க பதிவு படிக்கும் போதெல்லாம் மனம் மகிழ்கிறது..

நடந்ததை நேரில் நின்று பார்த்தால் நிச்சயம் வயிறு குலுங்க சிரித்திருப்பேன்.. அது போலவே இப்பதிவு படித்ததும்.. அதுலயும்
என்னை பொறுத்தவரை சகமனிதனின் காலில் விழுவதே தவறு, அம்மா அப்பாவை தவிர (என்னுடைய பிற்காலத்தையும் கருதி, மனைவியையும் சேர்த்துக் கொள்ளலாம்). இவ்வரி படித்ததும் சிரிப்பு குபீரென்று வந்துவிட்டது..

உங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்லாவே இருக்குங்க தக்ஸ்.. அந்த எதிர்கால மனைவிக்கு இப்பவே இவ்வளவு பயமா??!! ;)

அப்புறம்.. ஶ்ரீரங்கம் எனது பள்ளி காலத்தில் சென்ற நினைவு.. தங்களின் மூலம் அவ்வூரை மேலும் அறிய விழைகிறேன்..

தொடருங்கள்.. ஐஸ் குட்டியும் அனிரூத்தும்(அனிரூத் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் இப்படித் தான் அறிவாளிகளாக இருப்பார்களோ??!! ;) கவனிக்க தாமரை அண்ணா.. :D:D) உங்களை என்ன பாடு படுத்தினார்கள் அங்கிள் தக்ஸ்...!! :D:D

ரங்கராஜன்
05-05-2009, 10:11 AM
பாகம் 2

நான் கடுப்பாகி என்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தேன், என் நண்பன் குறுக்கிட்டு

“சரியான மிளகாய் பொடிக்கு பிறந்தவன் டா நீ, எப்ப பார்த்தாலும் ஏன் கோபப்படுகிறாய்” என்றான் சிரித்துக் கொண்டு. நான் மெளனமாக அவனை முறைத்தேன், அவனே தொடர்ந்தான்.

“ஏண்டா அந்த மாமாவின் டிக்கெட் தான் இல்லைனு சொன்னேன், டிக்கெட்டே இல்லைனு சொன்னேனா?”

“விளையாடாத டா, டிக்கெட் இருக்கா இல்லையா சொல்லு, இல்லைனா நான் போய் பஸ்ஸை பிடிக்கிறேன்”

“இருக்கு டா, ஆனா........”

“என்னடா ஆனா, எஞ்சின் டிரைவர் கூட வரணுமா?”

“இல்லடா அது எங்க தாத்தா டிக்கெட்டு அவரு வரலை, அவர் டிக்கெட்டை கேன்சல் செய்யலை, நாம ஒண்ணு பண்ணலாம் லோக்கல் டிக்கெட் ஒண்ணு எடுத்துக்கலாம். நீ வந்து அந்த தாத்தா டிக்கெட்டில் படுத்துக்கோ, ஆனா.....”

“என்னடா ஆனா”

“ஒண்ணும் இல்லை அந்த தாத்தாவின் வயசு 87 டா, டிக்கெட் செக்கிங் வந்தா மாட்டிக்குவ டா” என்று சிரித்தான். எனக்கு தலையே சுத்தவது போல இருந்தது, நான் இதற்கு முன் ரயிலில் போகாததால் அதை பற்றிய முறைகள் தெரியவில்லை. பாலாஜீயை பார்த்தேன்.

அவன் “மச்சான் கவலை விடு மொத்தம் 56 டிக்கெட்டு, தனி தனியா செக் செய்ய மாட்டான் டா, சரி வா காபி சாப்பிடலாம்” என்றான். எனக்கு உள்ளுக்குள் பயமாக தான் இருந்தது.

அதுக்குள் அனு என்னிடம் வந்து “அங்கிள் உங்க செல்போன்ல GPRS இருக்கா”.

“ஆடம் பாம் தான் இருக்கு, என்னை அங்கிள்னு கூப்பிடக்கூடாதுனு சொல்லி இருக்கேன் இல்ல”

“சாரி டா மறந்துட்டேன், சரி உன் செல்போனை கொடு” என்றான், பக்கத்தில் இருந்த ஒரு மடிசார் மாமி என்னை பார்த்து சிரித்து விட்டது.

“மகனே இன்னைக்கு ராத்திரி உன்னை ரயில் இருந்து தள்ளி விடல, நான் அங்கிள் இல்லடா, ச்ச............... தக்ஷ்னா இல்ல டா”

“சரி டா” என்று கூறிவிட்டு அனு கிளம்பி விட்டான். ரயிலுக்கு வந்த சொந்தகாரர்களை மூன்று வகையாக பிரிக்கலாம், ஒன்று நம்மை மாதிரி சாதாரண ஆட்கள் அதாவது சகஜமாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு. இரண்டாவது உலக ஜோக் அடிச்சாலும் புருவத்தை தூக்கிக் ஒரு முறை முறைத்துவிட்டு செல்வது, அதாவது எல்லா விதத்திலும் ஹய் கிளாஸ், படிப்பு, பணம், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும். மூன்றாவது பேச ஆரம்பித்தால் நிறுத்துவது கிடையாது, உள்ளூர் அரசியலில் இருந்து ஓபாமா வரை, காய்கறியில் இருந்து ராக்கெட் வரை சம்பந்தம் இல்லாமல் பேசுவது, இதிலே இன்னொரு வகை சித்த ஸ்வாதீனம் இல்லாமல் இருப்பது, பாவம் இந்த ஜாதியில் (மன்னிக்கவும்) 50 க்கு ஐந்து பேர் அப்படி கண்டிப்பாக இருக்கிறார்கள், ஏன்? எதாவது ஜீன் கோளாரா?, இல்லை எதாவது சாபத்தின் மிச்சமா? ஸ்ரீரங்கத்தில் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள், நான் இருந்த இரண்டு நாளில் நிறைய பார்த்தேன். ரயில் வந்தது, என்னை முதலில் ரயிலில் ஏறி சீட்டுகளை பார்க்க சொன்னான், என்னிடம் ஒரு காகிதத்தை கொடுத்து சீட்டை பார்க்க சொன்னான், அந்த காதிதத்தை பார்த்தேன் சீட்டு நம்பர்கள் எழுதி இருந்தது.

“1, 7, 21, 12, 65, 31, 71, 59........................” இப்படி இருந்தது நம்பர்கள் அந்த சீட்டில். எனக்கு கடுப்பாகி விட்டது, பின்னாடி இருந்த பாலாஜீயிடம்

“எந்த கேனையன் டா டிக்கெட் புக் பண்ணது” என்றேன்.

“ஏம்பா நான் தான்” என்றார் பாலாஜீயின் அப்பா என்னுடைய பின்னாடியில் இருந்து. நான் திடுக்கிட்டவனாக திரும்பி பார்த்தேன், பாலாஜீ ரயிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு இருந்தான்.

“ஒண்ணும் இல்லை, சீட்டு எல்லாம் தள்ளி தள்ளி இருக்கேனு கேட்டேன்” என்று குழைந்தேன்.

“எல்லாருக்கும் ஜன்னல் சீட்டு புக் செய்து இருக்கேன், எப்படி?” என்று சிரித்துக் கொண்டார் பெருமையுடன். நான் பதிலுக்கு சூப்பர் என்று என்னுடைய மூன்று விரலை காட்டி விட்டு பாலாஜீயிடம் கேட்டு ஒரு சீட்டில் போய் அமர்ந்தேன், அது upper birth சீட்டு, என்னுடைய உடலை குறுக்கி, பாம்பு புற்றுக்குள் போவது போல போய் படுத்தேன், மின்விசிறி காலுக்கு நேராக இருந்தது, முகம் வேர்த்தது, மறுபடியும் அந்த சைடு திரும்பி படுத்தேன் கால் இடித்தது. என்னுடைய பையில் இருந்து சுஜாதாவின் கடவுள் புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினேன்.

“அங்கிள் அங்கிள்” என்று ஐஸ்ஸூவின் குரல் கேட்டது, படுக்கையில் இருந்து திரும்பி பார்த்தேன்.

“you didnt tell me good night” என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டு.

“சாரி டா கண்ணா மறந்துட்டேன், குட் நைட் டீ செல்லம்” என்று அவள் கன்னத்துகிட்ட கையை கொண்டு சென்றேன், எட்டவில்லை எனக்கு. அவள் உடனே சீட்டின் மீது ஏறி என்னுடைய விரல்களுக்கு நடுவில் அவள் கன்னத்தை வைத்தாள் நான் ஆசையாக அவளின் கன்னத்தை கிள்ளி என்னுடைய உதடுக்கு கொண்டு வருவதற்குள், படுக்கையில் என் கை தடுக்கி அந்த கன்னம் அப்படியே காற்றில் கலந்து போனது. வேறு வழியில்லாமல் வெறும் விரல்களை மட்டும் என்னுடைய உதட்டில் வைத்து முத்தம் கொடுத்தேன்.

“பாய் அங்கிள்”

“no uncle, say anna" என்றேன்.

“ok answer this question, if a shirt takes one hour to dry, then how much time will 10 shirts take? answer it in one second” என்று அவசரப்படுத்தினால். நான் உடனே

“ten hours” என்றேன், அவள் சிரித்துக் கொண்டு, “you are always uncle for me குட் நைட் அங்கிள்" என்று சொல்லிவிட்டு, அழகாக இலையில் இருந்து பனி உருண்டு போவது போல, குலுங்கிக் கொண்டு போகும் ரயிலில் இவள் சென்றாள்.

மனம் ஒருவிதமான சந்தோஷமாக இருந்தது, புத்தகம் படிக்கும் விருப்பம் போய்விட்டது, ஒரு நாவலை படித்த பிரமையை அந்த குட்டி தேவதை கொடுத்து விட்டு சென்று விட்டாள். அவளிடம் தோற்கும் பொழுது சந்தோஷமாக தான் இருக்கிறது. 14 வயதில் இருந்து துணியை தோய்ப்பவனுக்கு துணி காயும் நேரம் தெரியாமலா இருக்கும்?. தெரியும், என்னுடைய அறிவை அந்த குட்டி தேவதையிடம் காட்டி அவளின் சந்தோஷ இறகுகளை உடைக்க நான் தயாராக இல்லை, என்னுடைய முட்டாள் தனத்தில் இருந்து அவள் முகத்தில் ஆயிரம் ஆயிரம் பூக்கள் பூக்கிறது, அதை பார்க்க கண்கள் கோடி வேண்டும். இவர்கள் அப்பா அம்மாக்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள், அவர்கள் குழந்தைகளின் குறும்புகளை 24 மணி நேரமும் கூடவே இருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் தானே. எனக்கு எப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும், என்னுடைய காதல், என்னுடைய பாசம், என்னுடைய வருங்காலம் எல்லாம் தொலைந்து சில மாதங்கள் ஆகிறது, ஜனவரியில் கல்யாணம் ஆனது. 1, 2, 3, 4 மாதம் ஆகிறது. அவளுக்கு எதாவது நல்ல செய்தி நடந்து இருக்குமா?, பிறக்கப்போகும் குழந்தையை பார்க்க என்னை அழைப்பாளா? ச்ச எப்படி அழைப்பாள்? அழைக்கமாட்டாள்?. நான் பஸ்ஸில் போகும் பொழுது என்றாவது ஒரு நாள், காரில் இருந்து அவள் தன்னுடைய குழந்தையுடன் இறங்குவாள். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். மனது என்ன என்னமோ நினைக்க ஆரம்பித்தது.

என்னுடைய பாக்கெட்டில் i pod ஐ எடுத்து இயக்கினேன்,

நானாக நானில்லை தாயே ........ வேண்டாம் அடுத்து.

முதல் முதலில் பார்த்தேன்............ வேண்டாம் அடுத்து.

மேகம் கருக்குது மழை வர பாக்குது, வீசி அடிக்கிது காத்து.................., முகத்தில் வியர்த்து கொட்டுகிறது, இருக்கிற எரிச்சலில் இந்த பாட்டா, ஐய்யோ வேண்டவே வேண்டாம் அடுத்து.

மின்னலே நீ வந்ததேனடீ................. என்னை அறியாமல் கண்கள் சொருக ஆரம்பித்தது.

என் கண்ணிலே ஒரு காயம் என்ன டீ

என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்ன டீ, (கண்கள் முழுமையாக என்னை தூக்கத்திற்கு இழுத்து சென்றது)

சில நாழிகை நீ வந்து போனது, என் மாளிகை அது வெந்து போனது,

ஓ மின்னலே .............................

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே .............. (முழு தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்), ஆனால் மனதில் ஒரு ஓரத்தில் ச்ச நாம் தூங்கி எழும் பொழுது 4 வருஷம் பின்னாடி போய் இருந்தால் எப்படி இருக்கும், என்று நினைத்தேன்.

கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே, இன்று சிதறிப்போன சீல்லில் எல்லாம் உனது பிம்பமே

கண்ணீரில் தீ வளர்த்து காத்து இருக்கிறேன், உன் காலடி தடத்தில் நான் பூத்து இருக்கிறேன்.................(இது தான் நான் தூங்கும் முன்பு கடைசியாக அந்த பாடலில் கேட்ட வார்த்தை. அசதியில் அப்படியே உறங்கி போனேன், கொஞ்ச நேரத்தில் காதில் எதோ அலறல் பாட்டு சத்தம் கேட்டது,

“12 வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே
லவ்வில்ல அதன் பேர் லவ்வில்ல

கண்ணை பார்த்து பேசசொல்ல கழுத்துக்கு கீழ் பார்க்குமே
லவ்வில்ல அதன் பேர் லவ்வில்ல

இதுக்கு ஏன் உசுற புடுங்கனும், எதலையும் புரிஞ்சி நடக்கனும்
காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா, இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா ஆஆஆஆஆ

ஆள்வார்பேட்டை ஆண்டவா வெடியை போட்டு தாண்டவா.....”

ஐந்து நிமிடத்திற்கு முன் இருந்த மனநிலையை ஒரு நொடியில் இந்த பாடல் மாற்றிவிட்டது, என்னை அறியாமல் நான் தூக்கத்தில் சிரித்தேன். யாரோ என்னுடைய தோளை தொட்டு எழுப்புவது போல இருந்தது, கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து திரும்பி பார்த்தேன்.

“டிக்கெட் டிக்கெட்” என்று TTR என்னை பார்த்தபடி நின்றுக் கொண்டு இருந்தார், அப்பொழுது தான் நான் ரயிலில் இருக்கிறேன் என்ற நினைவு வந்தது, பாக்கெட்டை தடவினேன், கொஞ்ச கொஞ்சமாக சுயநினைவுக்கு வந்தேன், டிக்கெட் வாங்கினா தானே பாக்கெட்டில் இருக்கும். என் காதில் வேற

“ஐய்யய்யோ இதுக்கா அழுவுற
லைப்புல ஏண்டா நழுவுற.......”

ச்ச என்று என்னுடைய காதில் இருந்து head set எடுத்து கீழே வைத்தேன். அவர் என்னை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தார், அவர் பின்னாடி வேற இரண்டு குண்டு போலீஸ்காரர்கள் அந்த இடத்தையே அடைத்தது போல நின்றுக் கொண்டு இருந்தார்கள், ஓடவும் முடியாது.

(தொடரும்........)

அமரன்
05-05-2009, 10:23 AM
தேவதைகள் எப்போதும் அழகான நாட்களைப் பரிசளிப்பார்கள். குட்டித் தேவதைகள் அதில் மிக வல்லவர்கள்.

உங்கள் நினைவுகளுடன் உறவாட வைக்கும் அளவுக்கு நெருக்கம் காட்டுகிறது எழுத்து. தொடருங்கப்பு.

samuthraselvam
05-05-2009, 11:29 AM
சூப்பர் அண்ணா.... மறுபடியும் காதிலியின் நினைவா?
TTR வந்தார். அப்புறம்? மாட்டுனீங்களா மாட்டுனீங்களா மாட்டுனீங்களா?

மதி
05-05-2009, 11:52 AM
சூப்பரப்பு...
உணர்ச்சிப்பூர்வமா அழகாய் எழுதுறீங்க. அதுவும் ஐஸூடன் உங்க உரையாடல்கள் கலக்கல்..

திடீர்னு ஏன் எதையெதையே நினைச்சுக்கிட்டு.. :)

சீக்கிரம் தொடருங்க.

கா.ரமேஷ்
05-05-2009, 11:58 AM
தக்ஸ் உண்மையிலேயெ இது மாதிரி லயித்து எழுதுவதற்க்கு சில பேரால்தான் முடியும். அருமை... என்றுமே குட்டி தேவதைகளோடான நிமிடங்கள் ரசனைகுறியவை அதிலும் ஐசு,அனு போன்ற அறிவானவர்களிடம் மாட்டிக்கொண்டால் அதோ கதிதான்.... உங்கள் காதலின் வலியை உணர முடிகிறது....

தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

ரங்கராஜன்
05-05-2009, 06:39 PM
பாகம்- 3

நான் பேந்த பேந்த விழித்ததை பார்த்து, டி.டி.ஆருக்கு சந்தேகம் வந்து விட்டது, அவர் போலீஸ்காரர்களை திரும்பி பார்த்தார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழே படுக்கையில் இருந்த ஒரு மாமா (எங்க கல்யாண குரூப்) பார்த்துக் கொண்டு இருந்தார். நான் உடனே

“சார் அந்த கல்யாண குரூப்புடன் தான் வந்து இருக்கேன் சார்”

“சரி டிக்கெட் எடுங்க”

“அது மாப்பிள்ளைக் கிட்ட இருக்கு”

“மாப்பிள்ள எங்கு இருக்கார், டிக்கெட் எடுத்துனு வரச்சொல்லுங்க”. நான் அவசர அவசரமாக போன் செய்தேன், எடுத்தான்,

“டேய் கடங்காரா, சீக்கிரம் வா டா டி.டி.ஆர் வந்து இருக்கார் டா”

“ஒரு நிமிஷம் இருடா”

“நான் இருப்பேண்டா, டி.டி.ஆர் இருக்க மாட்டார் டா, (என் வாயில் கையை வைத்து மறைத்துக் கொண்டு) டேய் போலீஸ் வேற வந்து இருக்காங்க டா”

“சரி வரேன் வையீ போனை” என்று கூறிவிட்டு சற்று நேரத்தில் வந்தான்.

“சார் இவன் நம்ம செட்டு தான், வாங்க எல்லா டிக்கெட்டும் என்கிட்ட தான் இருக்கு” என்றான்.

“ஏன் மாமா நீங்களாவது சொல்லக்கூடாதா?” என்றான் பாலாஜீ கீழ் பர்த்தில் படுத்து இருந்த மாமா வை பார்த்து.

“எனக்கு இவாள தெரியாதே” என்றார், உடனே அவன்

“நம்ம கூடவே தானே வந்துட்டு இருக்கான், பார்த்தேலேன்னோ” கடுகடுத்தான்.

“நம்ம கூடவே பலப்பேர் வரா, எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடியுமா என்ன?” என்றார், அவருக்கு பதில் சொல்ல சென்ற பாலாஜீயை நான் தடுத்து

“விடுடா மாமா என்ன பார்த்து இருக்க மாட்டார்” என்று கூறிவிட்டு, அவரை பார்த்து மகனே இரு உன்னை வச்சிக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டேன், எல்லாரும் சென்று விட்டனர். நானும் பாலாஜீயுடன் அவன் இடத்துக்கு சென்றேன் ஐஸ்ஸூவை பார்ப்பதற்கு,
அந்த தேவதை இறக்கைகளை மடித்தபடி தன் அம்மாவை கட்டி பிடித்தபடி தூங்கிக் கொண்டு இருந்தாள், எனக்கு மட்டும் கவிதை எழுத தெரிந்து இருந்தது, அதே இடத்தில் 100 கவிதைகள் எழுதி இருப்பேன் அந்த அழகை பார்த்து. அவள் ஒரு கையை தன்னுடைய வாயிலும்
மற்றோரு கையால் தன்னுடைய அம்மாவின் கழுத்தையும் இறுக்க கட்டிக் கொண்டு, ஒரு காலை தன் அம்மா மீது போட்ட படி, அவள் நெற்றியில் கொஞ்சம் முடி படர்ந்து, புழுக்கத்தில் வாய்க்கும் மூக்கும் நடுவில் வியர்த்து இருந்தது. நம்முடைய மனதுக்கு அழகு என்று பட்டுவிட்டால்
எல்லாமே அழகாக தான் தெரிகிறது, அவள் கன்னத்தை கிள்ள வேண்டும் போல தான் இருந்தது, மாறிப்போய் இருட்டில் அவங்க அம்மா கன்னத்தை கிள்ளிவிட்டாள் பிரச்சனையாகி விடும் என்று கிள்ளாமல் விட்டு விட்டேன். அனிரூத் மேல் பர்த்தில் வவ்வாலு போல கை, கால்களை, அந்தரத்தில் தொங்க விட்ட நிலையில் உறங்கிக் கொண்டு இருந்தான். மறுபடியும் என்னுடைய இடத்துக்கு வந்தேன், எல்லா லைட்டையும் நிறுத்தி இருந்தார்கள் இருட்டாக இருந்தது, ஆனாலும் கொஞ்சம் கண் தெரிந்தது, மேலே ஏறி நான் படுக்க வேண்டும், கீழே படுத்துக்கு கொண்டு இருந்த அந்த டகால்டி மாமாவின் கால் லை பார்த்து சரியாக ஒரு மிதி
மிதித்தேன்.

“ஆஆஆஆஆ”

“சாரி மாமா, தெரியாம பட்டுடுத்து”

“ஏண்டா கண்ணு இருக்கா இல்லையா நோக்கு .......(கடைசியாக எதோ ஒரு வார்த்தையை அவர் பாஷையில் திட்டினார், புரியவில்லை)”

“லைட் இல்ல மாமா”

“காலை மெறிச்சிட்டீயே”

மனதுக்குள் “சாரி மாமா மூஞ்சுனு நினைத்து காலை மெறிச்சிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு என்னுடைய புற்றில் போய் படுத்தேன். எப்பொழுது தூங்கினேன் என்று நினைவு இல்லை இரவு நல்ல தூக்கம். காலையில் என்னுடைய காது ஓரமாக யாரோ வந்து

“பாம்பே வந்துடுத்து இறங்குங்கோ இறங்குங்கோ” என்ற ஒரு ஆணின் குரல் கேட்டது, ஒரு நிமிடம் யோசித்து, ஐய்யோ நான் திருச்சி தானே போகணும், என்று நினைத்துக் கொண்டு திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் டிரைனின் கூரையில் இடித்துக் கொண்டேன்,

கீழே இருந்த அனிரூத் பலமாக சிரித்துக் கொண்டு “ஏமாந்த ஃப்பூல் ஏப்ரல் ஃப்பூல்” என்று கைத்தட்டி சிரித்தான், எனக்கு தூங்கும் பொழுது எழுப்பினாலே பிடிக்காது, அதுவும் இதுவரை என்னை இப்படி அடிக் கொடுத்து யாரும் எழுப்பியது இல்லை, காலையிலே என்னை
கிளப்பி விட்டான்,

“டேய் சாத்தானே, கீழே இறங்கி வந்தேன், உன் மூஞ்சை அப்படியே தரையில் வைத்து தேய்த்து விடுவேன்” என்றேன். அவன் சிரித்துக் கொண்டே

“நீ வருவதற்குள் நான் திருச்சிக்கே போய்டுவேன் மச்சான்” என்றான்.

“என்ன மச்சானா, மகனே இரு வரேன்........” என்று எழ முற்பட்டேன், அவன் கூறியது சரி தான் என்னால் உடனடியாக எழுந்துக் கொள்ள முடியவில்லை, சுற்றளவு அதிகமாகிவிட்டதுனு அப்போ தான் உணர்ந்தேன், எதோ கஷ்டப்பட்டு இறங்கினேன், அவன் அதற்குள் சிட்டாக பறந்து விட்டான். திருச்சி வந்தது, போர்ட்டர்கள் மொய்க்க ஆரம்பித்தார்கள், பெட்டி படுக்கைகளை தூக்க ஆரம்பித்தார்கள், வெளியே கொண்டு வந்து வைத்தார்கள், இரண்டு வேன் வந்து இருந்தது, நான் முதலில் போய் உக்கார்ந்தேன், எல்லாரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தார்கள். இரண்டு பேருக்கு இடம் இல்லை, அது அனிரூத்தும், ஐஸ்ஸூவும். ஐஸ்ஸு காலையில் எழுப்பி விட்ட கடுப்பில் முகம் சிறுத்து இருந்தது, அதுவும் வேனில் இடம் வேற இல்லை, இன்னும் சுருங்கிவிட்டது.

“ஐஸ்ஸூம்மா வா என் மேல உக்கார்ந்துக் கொள்” என்றேன், அவள் ஆசையாக வந்தாள், அதுக்குள் அந்த சாத்தான் வந்து “நான் தான் அங்கிள் கூட உக்காருவேன், நீ அம்மா கூட உக்கார்ந்துக் கொள்” என்று அவளை தள்ளிவிட்டு என்மீது வந்து லாரி புளியமரத்தில் சாய்வது போல
சாய்ந்தான். எனக்கா கடுப்பு, பூனையை மடியில் கட்டினாலே தப்பு, ஆனால் நான் வானரப்படையையே மடியில் உக்கார வைத்து இருந்தேன், அவன் பார்ப்பதை எல்லாம் விவரித்துக் கொண்டு இருந்தான்

“லாஸ்டு டைம் நான் இங்க வந்த போது காவேரியில் குளித்தேன், நீ குளிச்சி இருக்கீயா”

“இல்ல டா”

“அம்மா இந்த அங்கிள் குளிச்சதே இல்லையாம் ஹா ஹா ஹா” என்று சத்தமாக சிரித்தான். அவனை அப்படியே ஓடுற வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்டனும் போல இருந்தது, அவன் விழும் பொழுது கண்டிப்பாக என்னையும் இழுத்துக் கொண்டு தான் விழுவான், அந்த பயத்தால் அவனை தள்ளாமல் விட்டு விட்டேன்

“சரி நீ ஆனந்த தாண்டவம் படம் பார்த்தீயா” என்றான்.

“ம்ம்”

“எப்படி இருந்தது”

“தியெட்டர்ல ஒரே பிணக்குவியலாக இருந்தது, படம் பார்ப்பவர்கள் எல்லாரும் அவங்க பெல்ட்டை அவுத்து ஆன் தி ஸ்பாட்டிலே தூக்கு மாட்டீக்கிறாங்க”

“பேய் படமா”

“கிட்ட தட்ட”

“ரொம்ப பயமாக இருக்குமா?”

“இல்லை, பாவமாக இருக்கும்”

“யாரை பார்த்து”

“ஆடியன்ஸை பார்த்து”

“அப்ப நல்லாயில்லையா படம், நான் இன்னும் பார்க்கவில்லை, அப்பா அழைச்சிண்டு போக மாட்றா”

“தமன்னாவுக்காக ஒரு முறை பார்க்கலாம்” என்றேன், அவன் திடீர்னு திரும்பி தன் அப்பாவை நோக்கி

“அப்பா ஆனந்த தாண்டவம் படம் தமன்னாவுக்காக ஒருமுறை பார்க்கலாம்மாப்பா அங்கிள் சொல்றாரு” என்று நான் வாயை பொத்துவதற்குள் கடகடவென சொல்லி விட்டான், எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். சொல்லி விட்டு என்னை நோக்கி

“சரி அயன் பார்த்திட்டீயா” என்றான். வம்பே வேண்டாம் என்று நான் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு “இல்லை” என்றேன்,

“அதுல தான் தமன்னா சூப்பர் ஆக்டிங் டா மச்சான்” என்றான் என்னுடைய காது கிட்ட வந்து.

“டேய் நான் உன்னைவிட 10 வயசுக்கு மேல பெரியவன் டா, கொஞ்சமாவது மரியாதை கொடுடா”

“எப்படி பார்த்தாலும் நீ நம்ப பையன் டா மச்சான்” என்று சிரித்தான். ஆண்டவா இந்த மாதிரி சில்லரை பசங்க கிட்ட எல்லாம் என்னை மாட்டி விடறய்யே என்று மனதுக்குள் புழுங்கினேன், சத்திரம் வந்துவிட்டது எல்லாரும் இறங்கினார்கள்.

மேலே இருக்கும் அறைக்கு சென்றேன், குளித்து விட்டு சுஜாதா ஐயாவின் வீட்டை பார்க்க வேண்டும் அதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது, சீக்கிரமாக என்னுடைய பையை ஒரு அறையில் வைத்து விட்டு குளிக்க சென்றேன், அறையில் குளியல் அறை இல்லை, வெளியே வந்தேன் எதிரில் பொது குளியல் அறை இருந்தது, நல்ல பெரிய அறையாக இருந்தது, கும்பல் கும்பலாக குளிப்பார்களோ?, எதுக்கு இவ்வளவு பெரிய குளியல் அறை என்று யோசித்தவாரே உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு தலையில் தண்ணீரை எடுத்து ஊற்றினேன், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது

“யாரு உள்ளே” என்று ஒரு வயதானவர் குரல்.

“நீங்க யாரு”

“நான் வாட்ச்மேன், நீங்க”

“நான் ஓனர்”

“யாரு”

“கல்யாண வீட்டு மனுஷா”

“அது சரி, பாத்திரம் கழுவுற இடத்தில சாத்திண்டு என்ன பண்றேள்”

“என்னது பாத்திரம் கழுவுற இடமா”

“ஆமாம் வேளையாள் வந்து இருக்கா சீக்கிரம் கதவை திறங்கோ”

நாசமா போச்சு என்று நினைத்துக் கொண்டு, போட்ட சோப்பை அப்படியே துண்டில் துடைத்துக் கொண்டு, வெளியே எட்டி பார்த்தேன்.

“என்ன குளிக்கிறேளா? இங்கையா” என்று கத்தினார்.

“மாமா கத்தாதீங்கோ, அந்த பொம்மணாட்டிகளை சத்த தூரம் போக சொல்லுங்கோ” என்றேன், அவர் எதோ சொன்னார், அவங்க தலையில் அடித்துக் கொண்டு போனார்கள். வெளியே வந்தேன். நான் யார் கண்ணில் படக்கூடாதுனு நினைத்து இருந்தேனோ, அந்த வேண்டுதளில் இடிவிழுந்தது போல கதவுக்கு வெளியே அனிரூத் நின்றுக் கொண்டு இருந்தான், அதுவும் கையில் என்னுடைய மொபைலுடன், கண் இமைக்கு நேரத்தில் இரண்டு படம் வேறு எடுத்து விட்டான். துரத்திக் கொண்டும் ஓட முடியாது, அதற்குள் அவன் கத்திக் கொண்டு கீழே ஓடினான்.

“அம்மா இந்த அங்கிள்...................”

“டேய் டேய் அம்மாகிட்ட காட்டிடாதடா, அப்பாகிட்ட வேண்டுமானாலும் காட்டிக்கோ” என்று நான் மனதுக்குள் சொன்னது அவன் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

(தொடரும்)

அமரன்
05-05-2009, 06:45 PM
ஹஹ்ஹா. வாண்டுக் கூட்டமும் வண்டுக் கூட்டமும் ஒன்று. நீங்க நடந்தா ஊர்வலம் படுத்தாப் பொதுக்கூட்டம் ரேஞ்சில இருந்திருக்கீங்க. அனிருத் என்கிற ஒற்றை வாண்டு வண்டுக்கூட்டமா இருந்திருக்கு. கலகலப்பை சற்றும் குறைக்காமல் அப்படியே தருகிறீர்கள் தக்ஸ். ஆமா நான் இருக்கும் நேரத்தில் பாகங்களைப் போடுகிறீர்களே. சொல்லி வைச்சா செய்கிறோம்.

மதி
05-05-2009, 07:13 PM
ஹாஹாஅஹ்ஹஹ்ஹஹஹஹஹாஆஆஆஅஹஹஹஹஹஹஹாஆஹாஹாஆஹஹஹாஆ

சிரிப்பை அடக்க முடியல.. உண்மையிலேயே... நீங்க டக்ளஸ் தான் போங்கோ...

samuthraselvam
06-05-2009, 03:59 AM
சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்திருச்சு...

யப்பா... உங்களுக்கு நல்ல காமெடி வருதுண்ணா.... அதுவும், பாத்திரம் கழுவுமிடத்தில் குளிக்கறது அதை நீங்க சொன்ன விதம்...

ஹா ஹா ஹா......

ரங்கராஜன்
06-05-2009, 10:03 AM
பாகம்- 4

அவனை துரத்தவும் மனம் இல்லாமல், முக்கியமாக இடுப்பில் துண்டை தவிர வேறு உடை இல்லாமல் விட்டு விட்டேன், அமைதியாக சென்று குளியல் அறையில் குளித்து விட்டு, என்னுடைய அறைக்கு சென்று உடையை உடுத்திக் கொண்டேன், அப்புறம் ஸ்ரீரங்கத்து கோயிலை சுற்றி இருக்கும் மண்டபங்களை பற்றி சொல்லியாக வேண்டும், நாங்கள் அங்கு தான் தங்கினோம். அவைகள் முதலில் வீடுகளாக இருந்து அப்புறம் காலப்போக்கில் மண்டபங்களாக உருமாறி இருக்க வேண்டும், நுழைந்ததும் ஒரு பெரிய ஹால் அதை ஒட்டி இரண்டு அறைகள் பின்னாடி அத்தியாவசிய அறைகள், மேலே சமையல் அறை, அதன் பக்கத்திலே விருந்தாளிகளின் அறை என்று ஒரு வித சீர் இல்லாமல் இருந்தது அந்த மண்டபங்கள். மொத்தமாக அந்த ஹாலில் 50 பேருக்கு மேல் உக்கார முடியாது, அந்த மண்டப வாசலில் ஒரு அறை அதன் பக்கத்தில் நெற்றி முழுவது நாமத்துடன் பழுந்த ஐயங்கார் தாத்தா ஒரு நாற்காலியை போட்டு உக்கார்ந்து இருந்தார், காலையில் நான் போகும் பொழுது உக்கார்ந்தவர் தான், இரவு வரை அந்த இடத்தை விட்டு எழாமல் உக்கார்ந்து இருந்தார் (இடுப்பு வலிக்காதோ). நான் உடை உடுத்தி கீழே வந்தேன், அனு என்னுடைய செல்லில் கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தான், என்னை பார்த்ததும்

“டேய் மச்சான் வாடா பசிக்குது, நான் உனக்காக தான் காத்துண்டு இருந்தேன்” என்று என் கையை பிடித்து நடக்க ஆரம்பித்தான். அதுவரை அவன் மீது இருந்த கோபகங்கள் எல்லாம் அவன் சொன்ன ஒரு வார்த்தையில் மறைந்து போயின.

“ஐஸ்ஸூ எங்க டா” என்றேன்

“அவ அப்பவே அப்பா கூட சாப்பிட போய்டா டா மச்சான்” என்றான். எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான், அமரன் சொல்வது போல நான் இன்னும் சின்ன குழந்தையாகவே இருக்கிறேன், இன்னும் வளரவே இல்லை என்று எனக்கு அது உணர்த்தியது. சாப்பாடு அடுத்த மண்டபத்தில் தான் போட்டார்கள், இரண்டு மண்டபம் புக் செய்திருந்தார்கள். நானும் அனுவும் போனோம், நான் கவலையாக தான் சென்றேன். காரணம் எனக்கு ஐயங்கார் வீட்டு சமையல் பிடிக்காது, உப்பும் இருக்காது சப்பும் இருக்காது. எனக்கு வெஜ் ஒட்டலில் சாப்பிட்டாலே வாமிட் வந்துவிடும், எப்பவும் நான்-வெஜ் ஓட்டல் தான் எனக்கு சரிப்பட்டு வரும், அப்படி வெஜ் சாப்பிட வேண்டும் என்றால் கூட நான்-வெஜ் ஓட்டலுக்கு சென்று வெஜ் மீல்ஸ் சாப்பிடுவேன். அந்த அளவுக்கு கோழிகள், ஆடுகளின் மேல் ஒரு பாசம். மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தேன், வாசனை நன்றாக தான் இருந்தது. காரணம் பசி, பயங்கர பசி, போய் நானும் அனுவும் சாப்பிட உக்கார்ந்தோம். அவன் என்னுடைய செல்லில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்பொழுது தான் எனக்கு பாத்ரூம் போட்டோ ஞாபகம் வந்தது.

“டேய் குடுடா செல்லை, அந்த போட்டோ எடுத்தீயே எங்க டா”

“டெலிட் பண்ணிட்டேன் மச்சான்”

“நிஜமாவா”

“சத்தியமா டா ஆனா....”

“என்னடா ஆனா........யார் டா அத பார்த்து தொலஞ்சா.....”. அதற்குள் ஒருத்தர் வந்து “இலையை கழுவுங்கோ” என்றார் என்னை பார்த்து, நான் டேபிளில் இருந்த இலையை கழுவினேன், இட்லி, வடை, சட்னி, சாம்பார் என்று வைத்தார்கள், என் கண் ஐஸ்ஸூவை தேடியது காணவில்லை, அரை மனதுடன் சாப்பிட ஆரம்பித்தேன். சுவையாக தான் இருந்தது, பாலாஜீ வந்தான் என்னை பார்த்து கை அசைத்தான், நான் அசைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தேன்.

“வாடா மச்சான் சாப்பிடுடா, உக்காரு வா” என்றான் என்னை பார்த்து. நான் அவனை முறைத்தபடி

“இப்ப நான் என்ன செய்துனு இருக்கேன்” என்றேன்.

“அடப்பொறுக்கி அப்படினு நீ என்னை கேட்கனும் டா, அதை கேட்காம பாத்தி கட்டி சாப்டுனு இருக்க, நல்லாயிருடா நல்லாயிருடா” என்ற படி சொல்லிக் கொண்டே என்னை முறைத்தான்.

“சாரி டா மச்சான், வாடா சாப்பிடுடா” என்றேன்.

“உனக்கு எல்லாம் மேனஸே தெரியலை டா, எந்த ஸ்கூல்ல படிச்ச........”

“டேய் அதெல்லாம் ஏண்டா இப்ப இழுக்குற, வா உக்கார்ந்து சாப்பிடு வா”

“எதோ நான் முதல் பந்தியிலே சாப்பிட்டு விட்டேன் என்பதால் உன்னை விடுகிறேன், பொழைத்து போ” என்றான்.

“அட நாயே சாப்டாச்சா, அப்புறம் என்ன பெரிய பகோடா மாதிரி பேசற” என்று நான் சாப்பிட ஆரம்பித்தேன். ஐஸ்ஸூ தன்னுடைய அம்மாவுடன் வந்தாள் என்னிடம் நேராக வந்து

“அங்கிள் you are having breakfast without me" என்றாள் கண்களில் சிறிதளவு கண்ணீருடன்.

“you only left me and had it first" என்றேன் நான் சிறிதளவு கோபத்துடன்.

“நான் இப்பதான் சாப்பிடவே டைனிங் ஹாலுக்குள் வந்து இருக்னேன், அதுக்குள் எப்படி நான் சாப்பிட்டு இருக்க முடியும், you are simply blameing me” என்று ஒரே கத்தாக கத்தினால், எல்லாரும் அவளை திரும்பி பார்த்தார்கள், அவங்க அம்மா “ஐஸ்ஸூ Dont shout” என்றார்களே தவிர, “அந்த அங்கிளை சாப்பிட விடு”னு சொல்லவில்லை
அந்த சின்ன தேவதைக்குள் இருந்து ஒரு பூலான் தேவி, பின்லேடி, வெளிவந்தாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, பக்கத்தில் பார்த்தேன் சாத்தானின் நேரடி படைப்பான அனிரூத் சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். நான் ஐஸ்ஸூவை பார்த்து

“சரி சாரிடா கண்ணா, வா வந்து என் பக்கத்தில் உக்கார்ந்து சாப்பிடு” என்றேன். அதற்குள் அனிரூத்

“இது ஜென்ஸ் இடம் லேடீஸ் எல்லாம் எதிரே உக்காரனும்” என்றான் அவளை பார்த்து.

“நான் ஒண்ணும் உங்க சைடு உக்கார போறதில்லை”

என்று கூறிவிட்டு எதிரில் போய் உக்கார்ந்துக் கொண்டாள். சாப்பிட்டு முடிக்கும் வரை என்னுடைய சைடு திரும்பவே இல்லை, எனக்கா மனசு ஒரு மாதிரி இருந்தது, குழப்பமாக இருந்தது. பொங்கல் வாங்கலாமா? இல்லை இட்லியே வாங்கிக் கொள்ளலாமா? என்று சரி பொங்கலையே வாங்கிக் கொண்டேன், நான் பயந்த மாதிரியே இரண்டு வாய் தான் வைத்தேன், sleeping dose வேலை செய்ய ஆரம்பித்தது. அதுவும் ஐயங்கார் வீட்டு பொங்கல் நெய்யிலே மிதந்தது, அப்படியே இலையிலே தலையை சாய்த்துக் கொண்டு விழுந்து விடுவேன் போல இருந்தது, அந்த அளவுக்கு மயக்கமாக இருந்தது, ஒருவேளை அவில் தூக்க மாத்திரை எதாவது பொங்கலில் கலந்து இருப்பாங்களோ என்ற சந்தேகம் கூட வந்தது. கை தாங்கலாக எழுந்து கை கழுவும் இடத்திற்கு சென்று water tapஐ திறந்தேன், தீயை அணைக்க தீயெணைப்பு வண்டி பைப்பில் இருந்து வேகமாக தண்ணீர் வருமே அந்த வேகத்தில் கைகழுவும் tapல் இருந்து தண்ணீர் வந்தது, என் பக்கத்தில் இருந்த ஒரு மாமா இரண்டு மாமியின் முகத்தில் அசுர வேகத்தில் அடித்தது. ஒரு நிமிடம் மூவருக்கும் கண்டிப்பாக மூச்சு முட்டி இருக்கும். என்னுடைய பேண்டிலும் அடித்தது, பெங்கல் சாப்பிட்ட அசதியில் என்னால் நகர கூட முடியவில்லை, பொறுமையாக தான் tapஐ சாத்தினேன், அவர் மூவரும் என்னை பார்த்தார்களே ஒரு பார்வை, நான் கண்களை சொறுக்கி கொண்டு அவர்களை திரும்பவும் பார்த்தேன், பொங்கல் மயக்கத்தில் இருந்த என்னை பார்த்து, கஞ்சா அடித்தவன் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை, எதுவும் சொல்லாமல் முறைத்துக் கொண்டே சென்று விட்டார்கள், பாவம் மாமியின் பட்டு புடவை தான் நனைந்து விட்டது, மாமாவுக்கு பரவாயில்லை, மேல் சட்டை இல்லை, கீழ் வேஷ்டி இருந்து அதில் இல்லாத அழுக்கு இல்லை.

கல்யாணம் அடுத்த நாள் என்பதால் அனைவரும் ஃப்ரீயாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். நான் பாலாஜீயிடம் வெளியே போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன், வாசலில் ஐஸ்ஸூவின் குடும்பம் உக்கார்ந்து இருந்தது. அனு நான் வெளியே போவதை பார்த்து

“அங்கிள் எங்க போறீங்க”

“கோயிலுக்கு போறேன், வரீயா ஐஸ்ஸூ”

“என்னை விட்டுட்டு சாப்பிட்டவங்க கூட நான் எங்கையும் வரமாட்டேன்” முகத்தை திருப்பிக் கொண்டாள், அப்பொழுது தான் ஒரு விஷயம் கவனித்தேன், அவள் கோபமாக இருக்கும் பொழுது அவள் தமிழில் அழகாக பேசுகிறாள்.

“நான் தான் சாரி சொல்லிட்டேன் இல்ல”. அவள் அவங்க அம்மாவின் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள். இந்த கோபம், இந்த சிடுமூஞ்சித்தனம், இந்த பாசம், இந்த அழகு, இந்த உரிமை நான் ஏற்கனவே பல வருடங்களாக அனுபவித்தது. அதனால் தான்
ஐஸ்ஸூக்குட்டியின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு, எனக்கு பொண்ணு பிறந்தா இப்படி ஒரு பொண்ணு தான் பிறக்கணும் ஆண்டவா என்று வேண்டிக் கொண்டேன். அதை கலைக்கும்படி ஒரு சாத்தானின் குரல்

“அங்கிள் நானும் உங்க கூட வருவேன்” என்றான் அனு. அவனை முறைத்தபடி

“நான் கோயிலுக்கு போலை” என்றேன்.

“இப்ப தானே சொன்னீங்க போறேன்னு”

“மனசு மாறிடுச்சி”

“சரி இப்ப எங்க போறீங்க”

“உனக்கு எங்க போகணும்”

“காவேரி ஆத்துக்கு போகணும்”

“நான் அதுக்கு நேர் எதிர் directionல் போகப்போறேன்” என்றேன், அதற்குள் அங்க அம்மா வந்து “வேண்டாம் அனு வெயிலு அதிகமாக இருக்கு, இந்த வெயில்ல போனா, HEAT STORKES வரும்” என்றாள் வெளியே கிளம்ப தயாராக இருந்த என்னை வைத்துக் கொண்டு.
அவங்களின் வாழ்த்துடன் வீட்டை விட்டு வெளியே கிளம்பினேன், வாசலில் இருந்த ஒரு குடுமி இளைஞனை பார்த்து

“இங்கு சுஜாதா வீடு எங்கு இருக்கு”

“அட்ரஸ் இருக்கா” என்றான். அது இருந்தா உன்னை ஏண்டா கேட்க போறேன் கேனையா என்று சொல்ல நினைத்தேன் ஆனால் சொல்லவில்லை.

“இல்லை”

“மொட்டையா சொன்னா எப்படி, அவங்க ஆத்துகாரர் பேர் எதாவது சொல்லூங்கோ”

“ஏங்க எழுத்தாளர் சுஜாதாங்க, ஆம்பிளங்க”

“தெரியாது........... சாரி”

“சித்திர வீதினு நினைக்கிறேன்”

“இந்த கோயிலை சுத்தி இருக்குற அத்தனை வீதியும் சித்திரை வீதி தான், கீழே, மேலே, கிழக்குனு நிறைய வீதிகள் இருக்கு இங்க” என்று சொல்லி விட்டு போய்விட்டான் அவன். இன்னொருவர் வந்தார் கொஞ்சம் நடுவயது அதே கேள்வி கேட்டேன், அவர் முகத்தை ஆப்ரேஸன் செய்வது போல வைத்துக் கொண்டு

“தெரியாது” என்றார். அப்பொழுது தான் எனக்கு நினைவு வந்தது

“அவரு பேரு கூட ரங்கராஜன்” என்றேன், இப்ப ஹார்டு ஆப்ரேஸன் செய்வது போல முகத்தை இன்னும் இறுக்கமாக வைத்துக் கொண்டு

“தெரியாது” என்றார்.

“சினிமாவுக்கு கூட வசனம் கூட எழுதி இருக்காரே அந்த சுஜாதாங்க” என்றேன்,

அவர் முகம் இன்னும் இறுகி மாவடு மாதிரி ஆனது, அவர் பார்த்த கடைசி படம் குலேபகாவலியாக இருக்குனு நினைத்துக் கொண்டு.
நான் அந்த இடத்தை விட்டு நடையை கட்டினேன். என்னடா இது எவ்வளவு பெரிய எழுத்தாளர் சொந்த ஊரிலே அடையாளம் தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டு கோயிலுக்குள்
நுழைந்தேன், அந்த நகரமே கோயில் சூழ்ந்து தான் இருக்கிறது, நான் எந்த வழியாக சென்றேன் என்று தெரியவில்லை, எல்லா திசையிலும் வாசல் இருக்கிறது. அந்த கோயிலுக்கு உள்ளே சென்றேன், விசாலமான இடம் தரை முழுவது மணலாக இருந்தது. ஓரத்தில் உருண்டை உருண்டையாக பெரிய அளவில் சாணி இருந்தது, அளவையும், கலரையும் பார்த்து யானையின் சாணியாக தான் இருக்கும் என்று யூகித்தேன். நான் இரண்டாவது படிக்கும் பொழுது எங்க ஆசிரியர் ஒருவர் சொன்னார், யானையின் சாணியை மிதித்தால் படிப்பு நல்லா வரும்னு, அதில் இருந்து யானையின் சாணியை எங்கு பார்த்தாலும் மிதித்து விட்டு தான் வருவேன், அப்படி யானை சாணியில்லை என்றால், அது போடும் வரை காத்து இருந்து மிதித்து விட்டு தான் வருவேன். அந்த ஆசிரியர் எங்களை ஏமாற்றி இருக்கார் நினைக்கிறேன், காரணம் இது வரை நான் மிதித்த யானை சாணிக்கே நான் அப்துல் கலாமாக ஆகி இருக்க வேண்டும், அதனால் இந்த முறை மிதிக்கவில்லை, யாரும் இல்லை அந்த இடத்தில் யாழிகளின் சிலைகள் அழகாக இருந்தது, பக்கத்தில் இருந்த போர்டில் இந்த கோயிலின் ஸ்தலப்புராணம் எழுதி இருந்தது. இப்படி இருந்தது

“இந்த கோயில் இன்னார் இன்னாரால் கட்டப்பட்டது, இன்னார் வந்து இந்த தேதியில் கடத்திக் கொண்டு போன சிலைகளை இன்னார் இன்னார் காப்பாற்றினார்கள். அந்த காப்பாற்றப்பட்ட இன்னார் இன்னார் சிலைகள்
தான் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறது ...................”
ஆஆஆஆ (கொட்டாவி விட்டேன்) தூக்கம் வருவது போல இருந்தது, ஒரு எழவும் புரியவில்லை, பல பேராக்களை விட்டு விட்டு படித்தேன்..................இன்னார் காலத்தில் இன்னார் தலைமையில் இந்த கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடந்தது........... (இதில் நான் கூறிவரும் இன்னார் இன்னார் என்ற வார்த்தைகளுக்கு சொந்தமான பெயர்கள் நினைவில்லை, ஒவ்வொரு பெயரும் ஒரு முழம் நிளத்திற்கு இருந்தது, சேஷகோபால ஸ்ரீனிவாச வெங்கட்ராம லக்*ஷ்மி நரசிம்ம ஐயங்கார் என்றும் பெயர் சொல்வதற்குள் paralysis attack வந்து விடும் அளவுக்கு பெரிய பெயர்கள், அதனால் இன்னார் இன்னார் என்றே படிக்கலாம், அதுதான் நல்லது. நான் மேடையில் ஏறி ஒரு காலை தொங்க விட்டபடி படித்துக் கொண்டு இருந்தேன், நான் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது என்னுடைய காலை எதோ ஒன்று கவ்வுவது போல இருந்தது, நாயாக தான் இருக்கும் என்று நினைத்து அலறிக் கொண்டும் உதறிக் கொண்டும் எழுந்து திரும்பி பார்த்தேன். என் காலை பிடித்து இருந்தது ஒரு 65 வயது பாட்டி, நான் அலறி உதைத்த வேகத்தில் இரண்டு அடி தூரம் போய் விழுந்தாள்..............

(தொடரும்.........)

samuthraselvam
06-05-2009, 10:17 AM
ஐயய்யோ.... பாட்டி கதை முடிந்ததா? அப்பா ஜெயிலிலிருந்து தப்பித்து வந்துதான், இந்த திரியை பதித்துக்கொண்டு இருக்கிறீங்களா?

பூமகள்
06-05-2009, 10:31 AM
தக்ஸ்...

உங்களை அமர் அண்ணா மிகச் சரியாகக் கணித்திருக்கிறார்.. . இங்கும் நிரூபித்திருக்கிறீர்கள்..

ஐஸூவின் கோபம், அனுவின் ஆர்ப்பாட்டம்.. அதை சுவைபட சொல்லும் விதம்.. எல்லாமே தூள்..

கிளாஸ் ரகப் பதிவு.. தொடருங்கள்.. உங்களோடு நாங்களும் நெய்ப் பொங்கல் சாப்பிட்ட உணர்வு..

இறுதியில் பாட்டி என்னானார்?? பாவம் பாட்டி... ஏன் தக்ஸ் இப்படி செஞ்சீங்க...

அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் நோக்கியபடி...

மதி
06-05-2009, 12:23 PM
அடடே...ஸ்ரீரங்கத்து தேவதைகள்.. இரண்டாம் பாகமோ..
அசராமல் நகைச்சுவை தூவிய பொங்கலாய் இனிக்கிறது....

உண்மையிலேயே அசத்தல் மன்னர் நீர்...

kathiparakumar
06-05-2009, 01:05 PM
சூப்பர் அப்பு !!

தாமரை
06-05-2009, 01:39 PM
தக்ஸ்,

உங்க இந்த நடை நல்லா இருக்கு.. பலருக்கும் பிடிக்கும் நடை,.

முதல் பாகம்:

அழகா ஆரம்பம்.. செய்து சீரா சொல்லிகிட்டு வந்திருக்கீங்க. குழந்தைகளின் குறும்புகள் என்று ஆரம்பித்தபோது உங்களையே மறந்துட்டீங்க...



திருத்தமா இருந்தா நீங்க எந்தப் பத்திரிக்கைக்கு அனுப்பினாலும் தேர்வாகும்.

அடுத்தடுத்த பாகங்களையும் மெதுவா பார்த்துச் சொல்றேன்

ரங்கராஜன்
06-05-2009, 04:46 PM
பாகம்- 5

என் கால் அடியில் தட்டுப்படுவது மனிதர்களாக இருக்கும் என்று நான் சத்தியமாக நினைக்கவே இல்லை, ஏன் யாரும் நினைக்க மாட்டார்கள். அந்த பாட்டி கொஞ்ச தூரம் போய் விழுந்தாள். நான் ஒரு நிமிடம் அலறிவிட்டேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த மேடையில் இருந்து குதித்து அந்த அம்மாவை நோக்கி போனேன், நல்லவேளையாக அவள் விழித்துக் கொண்டு தான் இருந்தாள், ரொம்ப சோர்ந்த முகம், காய்ந்த உதடுகள், கையில் ஒரு மஞ்சல் நிற பை. நான் அவளை தூக்கினேன். நல்லவேளையாக சுற்றி யாருமே இல்லை, இருந்தால் பிரச்சனையே வேறு மாதிரி ஆகி இருக்கும், ஏற்கனவே ஒரு பாட்டியுடன் நடந்த பிரச்சனையை நான் கோபம் என்ற தலைப்பில் ஏற்கனவே சிரிப்பு விடுகதைகள் பகுதியில் பகிர்ந்து இருக்கிறேன்.

அவளும் முடியாமல் என்னுடன் நடந்து வந்தாள்,

“என்னப்பா இப்படி எட்டி உதைச்சிட்டீயே” தழுதழுத்த குரலில் சொன்னாள்.

“ஐய்யோ இல்லம்மா, நான் நாயினு (சொல்ல நினைத்து சொல்லவில்லை)” தயங்கினேன். அங்கு நிழலில் மேடையின் மீது பாட்டியை உக்கார வைத்தேன்.

“நாயினு நினச்சியா”

“இல்லம்மா திடீர்னு காலை பிடிச்சதும் பயந்து உதறவிட்டேன், வேண்டுமென்று உதைக்கவில்லை சாரிம்மா” என்றேன்.

“பரவாயில்லை ராசா”

“சரி நீங்க ஏம்மா என்னுடைய காலை பிடிச்சீங்க”

“பிச்சை கேட்கத்தான்” என்றாள் பரிதாபமாக, எனக்கு கோபம் வந்து விட்டது.

“ஏம்மா இவ்வளவு பெரிசா இருக்கீங்களே வந்து என் காலில் விழறீங்களே அறிவு இருக்கா உங்களுக்கு” கடைசி வார்த்தையை சொல்லி இருக்க கூடாதோ.

“வேற வழி தெரியிலப்பா, பிச்சை தான் எடுத்து ஆகணும்” என்றாள் பரிதாபமாக.

“நீ பிச்சை எடுக்கிறதை சொல்லம்மா, காலில் விழுந்து பிச்சை எடுக்காதே”

“நான் கால்ல போய் விழுந்தாலே ஒரு பையன் காசு போட மாட்றாங்க ராசா, சும்மா கையை எடுத்து கும்பிட்டா எப்படி போடுவாங்க சொல்லு” என்னுடைய கண்ணை பார்த்து நேரடியாக கேட்டாள். என்னிடம் அதற்கு பதில் இல்லை.

“இருந்தாலும் காலில் விழுவது தப்பும்மா, பிச்சை போட நினைப்பவர்கள் கூட போடாமல் போயிடுவாங்க”

“இல்ல ராசா, கோயில் முன்னாடி தான் இரண்டு நாளா உக்கார்ந்துனு இருந்தேன், அங்க நிறைய பிச்சக்கார பசங்க இருக்குறாங்க, எனக்கு வர காசையும் திருடிக்கிறாங்க ராசா”.

இதுக்கூட பேசினு இருந்தா வேலைக்கு ஆவாதுனு நினைச்சிட்டு, பாக்கெட்டில் இருக்கும் 2 ரூபாயை எடுத்து “இந்தாம்மா” என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தேன். எதோ விசும்பல் சத்தம் கேட்டது.
திரும்பி பார்த்தேன், அந்த பாட்டி அழுதுக் கொண்டு இருந்தாள், திரும்பவும் அவளிடம் நெருங்கி

“ஏம்மா அழுவுற” என்றேன். அவள் தன்னுடைய முந்தானையில் முகத்தை மறைத்துக் கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள், எனக்கு பயம் வந்து விட்டது, சுற்றி பார்த்தேன் யாரும் இல்லை. எனக்கு கொஞ்சம் பயமாக தான் இருந்தது, காரணம் இந்த ஆம்பளைங்க இருக்காங்களே, பெண்களுக்கு என்றால்? என்ன? ஏதுனு? கேட்காமல் எடுத்தவுடனே நம்முடைய சட்டையை பிடிப்பார்கள். அந்த மாதிரி இந்த பாட்டி அழுவதை வைத்து நான் எதோ இவளிடம் இருந்து நகையை பறித்துவிட்டேன் என்று நினைத்துக் கொள்ள போகிறார்கள் என்ற பயம் வேறு. அவள் அழட்டும் என்று விட்டுவிட்டு ஓடவும் மனம் வரவில்லை, நான் ஓடும் பொழுது இவளே திருடன் திருடன் என்று கத்தி விட்டால், போச்சு அவ்வளவு தான், ஊர் பேர் தெரியாத இடத்தில் அடிப்பட்டு சாகவேண்டியது தான். அதுவும் இல்லாமல் அன்று புது சட்டை போட்டு இருந்தேன் அடி வாங்கும் பொழுது சட்டை வேற கசங்கிடும், கிழிந்துவிடும். அதனால் ஓடவும் இல்லை. அவளிடம் பொறுமையாக கேட்டேன்.

“எம்மா அழுவுற, சொல்லிட்டு அழுவும்மா, எதுக்கு அழுவுற”

“என் பையன் செத்து போய்ட்டான் ராசா” என்றாள் பரிதாபமாக. எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

“எப்போ? எங்க?” பதறினேன்.

“நான் பிச்சக்காரி இல்ல, வீட்டை விட்டு போன வாரம் ஓடிவந்துட்டேன். சொந்த ஊரு மதுரை. என் மகன் இரண்டு வாரத்துக்கு முன்னாடி செத்துட்டான். என் மருமகள் என்னை அடித்து துரத்திட்டா” என்று அழுதாள், கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது, அது கண்டிப்பாக பொய்யான கண்ணீர் இல்லை. அவள் சொன்னவுடன் என்னை அறியாமலே அவளின் பக்கத்தில் நான் உக்கார்ந்தேன், மெளனத்தை தவிர என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவளே தொடர்ந்தாள்

“எனக்கு சுகர் வேற இருக்கு ராசா மூணு நாளைக்கு முன்ன தெருவுல விழுந்துட்டேன், அப்புறம் யாரோ தூக்கினு போய் தண்ணி தெளிச்சி என்னை எழுப்பினாங்க, சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க. நான் ஊர்ல இருந்து வந்ததில் இருந்து சாப்பிடாம மூணு நாளாய் இருந்தேனா அதனால தான்
மயக்கம் போட்டு நடு ரோட்டில் விழுந்து விட்டேன்”

“ஏம்மா மூணு நாளா சாப்பிடாம இருக்க கூடாதும்மா, அதுவும் சுகரை வச்சினு........”

“இப்பக்கூட சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு ராசா, அப்ப சாப்பிட்டது தான்” என்றாள் என்னுடைய கண்னை பார்த்து. உடனே எழுந்து சுற்றி பார்த்தேன் ஒரு கேண்டீன் கூட இல்லை, அப்புறம் தான் நினைவு வந்தது கோயிலில் எப்படி கேண்டீன் இருக்கும். இங்கு இருந்து வெளியே போக ரொம்ப தூரம் போகவேண்டும். என்ன செய்வது என்று யோசித்தேன்.

“அட விடு ராசா, இங்க எந்த கடையும் இல்லை. நீ வெளியூரா”

“ஆமாம், சென்னை”

“அதான பார்த்தேன் உள்ளூர் காரர்கள் ஒரு வாய் தண்ணி கூட தரமாட்றாங்க ராசா”

“ஏம்மா இந்த மாதிரி நோயை எல்லாம் வச்சினு, ஏம்மா வீட்டை விட்டு வரீங்க”

“என் புள்ளையே போய்டான் ராசா, அதுக்கு அப்புறம் எதுக்கு நான் அங்க இருக்கனும்” அழத்தொடங்கினாள்.

“அழாதீங்கம்மா, சரி இந்தாங்க 20 ரூபாய் நல்லா போய் எங்கையாவது சாப்பிடுங்கம்மா, எனக்கும் இந்த ஊர் புதுசு வழியும் தெரியலை இல்லன்னா நானே வாங்கினு வந்து குடுப்பேன்”

“பரவாயில்லை ராசா, நீ நல்லா இருக்கனும், உங்க அம்மாவை நல்லபடியா பார்த்துக்கோ, என்னைக்கும் பெத்த தாயை மட்டும் கைவிடக்கூடாது”

“என்னைக்கோ அவங்க கைவிட்டு போயிட்டாங்கம்மா”

“என்ன ராசா”

“செத்துட்டாங்கம்மா”

“உன் பொண்டாட்டி புள்ளையுடன் நீ நல்லா இரு ராச.................”

“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை...........” என்று சிரித்தேன், அவள் மனதிற்குள் “இந்த சனியனை இனி வாழ்த்தவே கூடாது, எல்லாத்துக்கும் ஒரு பதில் வச்சினு இருக்கான் பாரு கொரங்கு” என்று நினைத்து இருப்பாள் என்று நினைக்கிறேன். எதோ சொல்ல யோசித்து திரும்பவும் வாழ்த்த வந்தவளை

“எம்மா நீ இருக்குற சக்தியை எல்லாம் என்னை வாழ்த்துறதுல செலவழிச்சிடாத, ஒழுங்க ஊருக்கு போய் சேரு” என்றேன். அவள் என்னை ஒரு பார்வை பார்த்தால், பார்வையின் அர்த்தம் புரிந்தது. என்னுடைய பர்ஸை திறந்து

“இந்த 50 ரூபாய், ஒழுங்கா ஊருக்கு போயிடனும், நான் கோயிலுக்கு போயிட்டு திரும்பி வரும் போது நீ எங்கையாவது பிச்சை எடுக்கிறதை பார்த்தேன், அவ்வளவு தான் குடுத்த காசை எல்லாம் திரும்பவும் வாங்கிக்கினு, வட்டியாக உன்னுடைய இந்த மஞ்ச பையையும் தூக்கினு போய்டுவேன்” என்று சிரித்தேன், அவளும் குழந்தை போல சிரித்தாள். கண்களை துடைத்துக் கொண்டாள்.

“ராசா எனக்கும் பிச்சை எடுக்குறது அசிங்கம்மா தான் இருக்கு, என்ன பண்றது என் புள்ள என்னை விட்டு போய்ட்டான் வேற வழியில்லை.......... அதான்” திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.

“ம்மா அழாதம்மா, இப்ப எதுக்கு அழுவுற...............ப்ச் அழாதம்மா, நீ அழுவுறதா இருந்தா...............நான் குடுத்த காசை எல்லாம் திருப்பிக் கொடு, முதல்ல அந்த மஞ்ச பையை கொடு.........” என்று அவளிடம் இருந்த பையை பிடுங்குவது போல நடித்தேன், அவள் சிரித்தாள்.

“தோபாரும்மா உன் வயசுக்கு நீ எவ்வளவோ கஷ்டங்களை பார்த்து இருப்ப, இந்த பிரச்சனை எல்லாம் உனக்கு தூசு மாதிரி, நீ ஒழுங்கா வீட்டுக்கு திரும்பி போ, இங்க எவன் எவன் காலை பிடிச்சி வறபட்டினி கிடப்பதற்கு உன் மருமகள் கிட்ட அனுசரனையா நடந்துக் கொண்டு வயிறாற சாப்பிடும்மா” என்று சொல்லி விட்டு, திரும்பி பார்க்காமல் கிளம்பினேன்.

“ராசா நீ பொண்டாட்டி புள்......” என்று சொல்ல வந்தவளை நான் திரும்பி பார்த்தவுடன் வாயை மூடிக் கொண்டாள், வெறும் கையை மட்டும் ஆசீர்வாதம் செய்வது போல காட்டிவிட்டு சிரித்தாள், நானும் அவளை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றேன், அவளும்
என்னை பார்த்துக் கொண்டே இருந்தாள் என் தலை மறையும் வரை.

என்னடா வாழ்க்கை இது, ஒருவேளை சாப்பாட்டிற்கு இவ்வளவு கஷ்டம் படுது இந்த வயசுல அந்த பாட்டி அதுவும் கோயிலுக்குள், எங்கே இருக்கிறார் கடவுள், உலகத்திற்கு உணவளிப்பவன் கண்ணில் இவள் தெரியவில்லையோ. பாவம் அந்த பாட்டிக்கு மட்டும் ஏன் மறந்துவிட்டான், அதுவும் மூன்று நாட்களாக. தீதும் நன்றும் பிறர் தர வாரா ........... அட இருக்கட்டுமே, அந்த பாட்டி இளம் வயதில் கெட்டவளாக கூட இருந்து இருக்கட்டுமே, வயது போனப்பின் ஏன் இந்த ஆண்டவன் அவளை பழிவாங்கனும். அட ஆண்டவன் பழிவாங்கினால்
கூட .....இந்த பாட்டி பாரேன், வயசு வித்தியாசம் பார்க்காமல் எல்லார் காலிலும் விழுந்து காசு வாங்குது, என்ன மனுஷங்கப்பா?????................ ஏன் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு புரியவும் புரியாது, நெய்யில் மிதக்கப்பட்ட பொங்கலை கழுத்து வரை தின்றுவிட்டு வந்த எனக்கு பசியின் கொடுமை புரியாது, தெரியாது. இந்த உலகம் முழுக்க விடை தெரியாத கேள்விகள் தான் நிறைந்து இருக்கிறது, மெளனமாக யோசித்தபடி ஆலயத்திற்குள் கன்னத்தில் போட்டபடியே நுழைந்தேன். நேராக ஒரு போர்டு இருந்தது, அது இன்னும் எனக்கு எரிச்சலை கிளப்பியது, எரியும் தீயில் white pertolலை ஊற்றியது போல இருந்தது. அந்த போர்டில் “இந்துக்களுக்கு மட்டும் அனுமதி” என்று இருந்தது. வேறு எந்த மதக்கோயிலிலும் இந்த மாதிரி ஒரு எச்சரிக்கை போர்டு இருக்குமானு எனக்கு தெரியவில்லை. எல்லாரும் வாயால் தான் சாப்பிடுகிறோம், இரண்டு காலில் தானே நடக்கிறோம், அப்புறம் எதுக்கு இந்த பாகுபாடு, இன்னும் கொஞ்ச ஆண்டுகளில்
“மனிதர்களுக்கு அனுமதி கிடையாது, ALIENS க்கு மட்டும் தான் அனுமதி” என்று வைத்தாலும் வைப்பார்கள். உள்ளே நுழைந்தேன் நான் கோயிலுக்கு சென்றால் அங்கு முதலில் பார்ப்பது அங்கு இருக்கும் சிற்பங்களை தான், வவ்வால்களின் புழுக்கை வாசனை மூக்கை துளைத்தது. ஒரு குரல் கேட்டது

“வாங்கோ வாங்கோ, இங்க வாங்கோ, உலகத்தையே ஆட்சி செய்கிற வரதராஜ பெருமாளை சேவிக்க வாங்கோ” ஒரு டூரிஸ்டு கைடை போல ஐயர் எல்லாரையும் அழைத்துக் கொண்டு இருந்தார், அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் கோயிலில் கூட்டமே இல்லை, எல்லாரும் டி.ராஜேந்தரின் அரட்டை அரங்கம் பார்த்துக் கொண்டு இருப்பாங்கனு நினைக்கிறேன், என்னை மாதிரி சில வெளியூர் சுற்றுலாவாசிகள் மட்டும் கோயிலுக்குள் அங்கும் இங்குமாக திரிந்துக் கொண்டு இருந்தோம். அப்படி திரிந்துக் கொண்டு இருந்தவர்களை தூண்டில் போட்டு பிடிப்பது போல ஐயர்கள் பிடித்தார்கள், என்னை பிடித்தது வரதராஜ பெருமாளின்
ஐயர்.

“வாங்கோ சார், வாங்கோ, இந்த பெருமாள் இருக்காரே............... என்று ஆரம்பித்து வரதராஜ பெருமாளின் முழு பயோடேட்டாவையும் சொன்னார். நான் பொறுமையாக கேட்டேன், அவர் ஆரத்தி காட்டட்டுமா? என்று என்னை பர்மிஷன் கேட்டுவிட்டு ஆரத்தி காட்டினார். எனக்கு தெரியும் ஏன் ஐயரு இந்த அளவுக்கு பவ்யமாக
நடந்துக் கொள்கிறார் என்று, நானும் கண்களை மூடிக் கொண்டு சாமியை வேண்டி கண்களை திறந்தேன். உலகத்தை ஆட்சி செய்ற வரதராஜ பெருமாளின் முகத்தில் பெரிய சைஸ் கருப்பாம்பூச்சி (cockroach) உக்கார்ந்து இருந்தது. ஐயர் தீபார்தனை தட்டுடன் என்னை நோக்கி வரும் பொழுது என்னுடைய சைகையை பார்த்தவாரே வந்தார். பர்ஸை எடுக்கிறேனா, பாக்கெட்டில் கையை விடுகிறேனா? என்று, காரணம் நான் போடும்
காசுக்கு தகுந்தார் போல தான் அவரின் opposite reaction இருக்கும் (மதிக்கு நியூட்டனின் 3 வது லா நன்றாக தெரியுமே).

1 ரூபாய் தட்டில் போட்டால் - விபூதி மட்டும்

5 ரூபாய் - விபூதியுடன் கொஞ்சம் பூ

10 ரூபாய் - விபூதி தனியாக பாக்கெட்டில், ஒரு முழம் பூ.

20 ரூபாய் - சாமி தலையில் இருந்து பூ, விபூதி பாக்கெட்

50 ரூபாய் - சாமி கழுத்தி இருந்து ஒரு மாலை, தேங்காய் பூ பழம் எல்லாம்.

100 ரூபாய் - கருவறைக்குள் சென்று சாமி கும்பிடலாம், + 50 ரூபாய் ஐடங்கள்.

500 ரூபாய் - சாமியின் தோள் மீது கை போட்டபடி போட்டோவே எடுத்துக்கலாம்.

1000 ரூபாய் - சாமியை எடுத்து வெளியே வைத்து விட்டு உங்களை அந்த இடத்தில் உக்கார வைத்து அர்ச்சனை செய்வார்கள்.

இவை வெளியே இருக்கும் சாமிகளுக்கு மட்டும் தான், இன்னும் கற்பகிரஹத்திற்குள் இருக்கும் மெயின் சாமிக்கு தனி ரேட்டு. ஆன்மீகத்தை வியாபாரமாக்க துடிக்கும் இந்த மாதிரி திருட்டு ஐயர்களினால் எனக்கு கோயில் போகவே பிடிப்பது இல்லை, விரும்புவதும் இல்லை.. ஐயர் என்னை நோக்கி வந்தார், நான் கையை அசைக்கவே இல்லை,
கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்த ஐயர் முனவிக் கொண்டே விபூதியை சாக்கடையில் பூச்சி மருந்து தெளிப்பது போல என் கையில் தூவி விட்டு போனார். திரும்பவும் வந்தவர்

“இன்னைக்கு பெருமாள் பெயரால் அன்னதானம் போடுறோம், நீங்க அதுக்கு காசு கொடுத்தேல்னா, திருப்பதி போய்டு வந்த புண்ணியம் கிடைக்கும்”

“போன வாரம் தான் நான் திருப்பதிக்கு போய்டு வந்தேன்” இந்த பதிலை எதிர்பார்க்காத ஐயர், ஒரு நிமிடம் திணறி

“பாவம் ஏழை குழந்தைகளுக்கு போடறோம்”

“எங்க”

“எங்க மடத்துல, அவ்வளவும் புண்ணியம்”

“முதல்ல சாமி முகத்துல இருக்குற கருப்பாம்பூச்சியை எடுத்து வெளி போடுங்க” என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடையை கட்டினேன்.

(தொடரும்........)

kathiparakumar
06-05-2009, 05:12 PM
மிகவும் பெரிய கதை போல !! ;)
நடை நன்றாக உள்ளது.

மதி
06-05-2009, 05:18 PM
:):):):):):):)

செல்வா
06-05-2009, 05:22 PM
கொஞ்சநாள் ஆச்சு மன்றம் வந்தாலும் ஆழமா எதையும் வாசிக்க முடியிறதில்ல...
தற்செயலா வாசிக்க ஆரம்பிச்சேன்...

முதல் அத்தியாயமே கட்டிப்போட்டுடுச்சு.....

ரொம்ப நல்லாருக்கு மூர்த்தி....

தொடருங்கள் நேரம் கிடைக்கும் போது வந்து தொடர்கிறேன்....

மதி
06-05-2009, 05:29 PM
இந்தப் பதிவால மண்டை காஞ்சு போய்... கரெக்டா ஆறு மணிக்குக் கிளம்பி என் டீம்லீட் வீட்டுக்குப் போய் அவரின் "ஒரு வயசு" பொண் கூட விளையாடிவிட்டு (என்னைப்பார்த்து பார்த்து அழுதா) அப்புறம் என் நண்பன் வீட்டுக்குப் போய் அவன் மகனுடன் ஒரு மணிநேரத்துக்கும் (பையன் செமக்யூட்.. எனக்கு பொண்ணு பொறந்தா அவன் தான் மருமகனாக்கும்) மேல் விளையாடிவிட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.. போதுமாய்யா....ஹ்ம்ம்

பூமகள்
07-05-2009, 03:44 AM
தக்ஸ்...

நான்காவது பாகம் வரை படித்திருக்கையில் நான் நினைத்தது ஒரு நகைச்சுவை மிகுந்த திருமண வைபவக் கதையாகத் தான் இருக்கும் என்று..

ஆனால் ஐந்தாம் பாகம் வந்தவுடன் தான் என் மனதில் ஒரு பெரும் தாக்கம் ஏற்பட்டது..

காலைப் பிடித்துக் காசு கேட்கும் அன்னை வயது மூதாட்டி.. படித்ததும் நெஞ்சு துடித்தது தக்ஸ்..

அவருடனான உங்களின் உரையாடல்.. அவரைச் சிரிக்க வைக்க நீங்கள் செய்த வார்த்தையாடல்கள் எல்லாம் மனம் தொட்டது..

இப்படி ஒருவரைக் கண்டால் நான் நின்று இத்தனை பக்குவமாகக் கேட்டிருப்பேனா என்பது சந்தேகம் தான்...

ஆனால், அந்த அன்னை தன் மகனை இழந்ததையும் தன் நிலையையும் விவரிக்கையில் தற்காலிக நிவாரணியாக கையில் திணிக்கப்படும் சில ரூபாய்கள் எப்படி அவருக்கு உறுதுணையாக இருக்கும்..??

திரும்பச் சென்று மருமகளிடம் அடிபட்டு, சொல் அம்பால் குத்து பட்டால் அவர் உயிர் விரைவிலேயே சென்றுவிடக் கூடும் அபாயமும் உள்ளது..

இன்னொரு காரியம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. அவரை அருகிலிருக்கும் ஏதேனும் முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கலாம்... குறைந்தபட்சம்.. அவர் வாழ வழி செய்தது போல் ஆகுமல்லவா?? ஆனாலும் இது கொஞ்சம் அதிகம் தான்.. எதார்த்தத்தில் நாமெல்லோருமே அப்போதைய நிவாரணத்தைத் தேடித் தருகிறோமே தவிர நிரந்தரத் தீர்வை அளிக்கத் தவறிவிடுகிறோம்..

மீன் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதை விடுத்து...

பெற்ற தாயைப் போல பேண வேண்டிய மாமியாரை விரட்டி அடிக்கும் மருமகள்களும்.. மகன் இருந்தும் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அன்பில்லாதவர்களும் திருந்தும் வரை இவ்வகை கொடுமைகளுக்கு தீர்வு இருக்காது..

உண்மையில் அங்கு நின்று ஆறுதல் அளித்து பேசிய உங்களை வாழ்த்தியே ஆக வேண்டும்..

தொடருங்கள் தக்ஸ்... மனதில் இன்னும் உயர உயரச் சென்று கொண்டே இருக்கிறீர்கள்.

தாமரை
07-05-2009, 03:56 AM
ஏன் மூர்த்தி உங்க கோயில் காண்டங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரிதானே இருக்கும்?

எனக்கு பழைய கோவில்கள் செல்வது ரொம்ப பிடிக்கும். அதிலும் எனக்கு மிகப் பிடிச்ச கோவில்னா திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் என்று சொல்வேன், ஏன்னா நான் சுதந்திரமா என்னிஷ்டத்துக்கு சுற்றிய கோவில் அது மட்டும்தான்.


கோவிலுக்கு போவது கடவுளை தரிசித்து வளமான எதிர்காலத்துக்கு கடவுளிடம் கமிஷனுக்கு டீல் பேசிவிட்டு வருவதுக்காக என்பதும், கடவுளுக்கு ஐஸ் வைத்து காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்பதும் பலருக்கு பழக்கமாயிடிச்சு..

கோவில்கள் சரித்திரத்தின் பகுதி. அந்தச் சர்த்திரத்தை தெரிஞ்சுண்டேள்.. கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.

ஆனாலும் ஒன்று, நாலுபாகம் வரை காமெடியனா வந்துகிட்டு இருந்த டக்ஸ் கோயிலுக்குள்ள நுழைஞ்சதும் ஹீரோவாகப் பாக்கிறார். ஏன்னா நாலு பாகம் வரைக்கும் குழந்தைகள் (அறிவில் பெரியவங்க) மத்தியில் காமெடியனாத்தான் இருக்க முடியுது. ஆனால் பெரியவர்கள்(தவறு செய்பவர்கள், பிடிவாதக்காரர்கள்) மத்தியில் உங்களுக்கு ஹீரோவா அவதாரம் எடுக்க வேண்டியதா இருக்கு,,, அதாவது மத்தவங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்வது. இதற்கு பேர் ஸ்மரணை என்பது. (பச்சோந்தித் தனம் அல்ல. அது சுயலாபத்துக்கு மாறுவது) அதை விளக்க தனியா ஒரு திரி போடணும். கடவுள் இப்படித்தான்.. யாராருக்கு என்ன பிடிக்குமோ அந்த ரூபத்தில் இருப்பார்னு சொல்வாங்க.

பாகம் ஐந்து தனியா படிக்க நல்லா இருக்கு, இந்தத் திரியில் மற்ற நாலுபாகத்தோட
ஒட்டாம கொஞ்சம் தனியா தெரியுது,

பின் இணைப்பு:

மதிக்கு ஒரு லா கூட கிடையாது, ஆமாம் பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லா, மதர்-இன்-லா, ஃபாதர்-இன்-லா இப்படி யாருமே கிடையாது,. அதனால தான் மத்தவங்க லா வை தேடி அலையறாரு,,

சிவா.ஜி
07-05-2009, 04:55 AM
நல்லாருக்கு தக்ஸ். ரொம்ப சுவாரசியமா சொல்ற. பாத்தது, கேட்டது, நினைத்தது, உணர்ந்தது......எல்லாத்தையும் அழகா.....அம்சமா சொல்ற. படிக்கறதுக்கு ரொம்ப இனிமையா இருக்கு.

குழந்தைகளோட குழந்தைகளா மாற சிலருக்கு மட்டும்தான் முடியும். அந்த குணம் உன்கிட்ட நிறையவே இருக்கு. (நான் பார்த்ததுதானே) தாமரை சொன்ன மாதிரி நாலு பாகத்தையும் நகைச்சுவை சர்க்கரைப் போட்டு சர்க்கரைப் பொங்கலா கொடுத்துட்டு, ஐந்தாவது பாகத்தை காரப்பொங்கலா கொடுத்து கண்கலங்க வெச்சிட்ட.

நீ பார்த்த மூதாட்டியைப் போல நிறையபேர் இருக்காங்க. ஆனா...நிஜம் எது போலி எதுன்னு தெரியாத இந்த உலகத்துல, நிஜமாவே பரிதாபப்படக்கூட தயங்க வேண்டித்தான் இருக்கு. பட்டுன்னு இரக்கப்பட்டு, சட்டுன்னு பர்ஸை திறந்து பணம் கொடுத்துட்டு...நாம அந்தப்பக்கம் போனப்பறம், மாட்னாண்டா சரியான இளிச்சவாயன்னு அவங்க சொல்றதைக் கேக்காதவரைக்கும் பரவால்ல. கேட்க நேர்ந்துட்டா....கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கிட்டிருக்கிற இரக்கம் கூட கழண்டு விழுந்துடுது.

இருந்தாலும், மனசு கேக்காம சில நேரம் செய்யவேண்டியதாகிடும். பரவால்ல ஏதோ அந்த அம்மாவுக்கு நல்ல சாப்பாடு ஒரு நேரமாவது கிடைக்க உதவி செஞ்சியே....நல்ல மனசு உனக்கு.

அடுத்த பாகத்தையும் இதே ஆவலோட எதிர்பார்க்கிறேன்.

ரங்கராஜன்
07-05-2009, 07:35 AM
பாகம்- 6

அந்த ஐயரிடம் அப்படி சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடையை கட்டினேன், திரும்பி பார்த்தால் அவர் சாபம் எதாவது விட்டு விட போகிறார் என்ற சலனமும் மனதில் இருந்தது. கோயிலுக்குள் சுற்றி சுற்றி சென்றேன், இந்த கோயில் உருவான விதம் பற்றி, கடலில் இருந்து வெளி வந்த கோபுரம் பற்றி அழகான விளக்க படங்கள் கலரில் வரைந்து வைத்து இருந்தார்கள்.பார்த்தேன், முதல் படம் சோழ மன்னனின் கனவில் வந்து கடவுள் தனக்கு கோயில் கட்ட சொல்வது போல இருக்கும் படம், அடுத்த படம் அவர் அதற்கான வேலை தொடங்குற மாதிரி இருக்கும்
படம், அதற்கு அடுத்து கடலில் இருந்து வெளி வந்த சிலை, அப்புறம் அதை தூக்கிக் கொண்டு போவது, சரி கண்டிப்பாக முடிவு சுபமாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த படங்களை பார்க்க தவிர்த்தேன், கடைசி படத்தை பார்த்தேன், அழகாக தன்னுடைய கையில் தலையை சாய்த்துக் கொண்டு, தலையில் தங்க கீரிடம் வைத்துக் கொண்டு, கண்ணில் தங்க கவசம் அணிந்துக் கொண்டு, ஸ்நேக் குஷனில் படுத்து இருந்தார் ஸ்ரீரங்கநாதர். அதை பார்த்தவுடனே மனதுக்குள் குதூகலம். அவரை பார்க்க கற்பகிரஹத்திற்குள் போகவேண்டும் திரும்பி லைனை தேடினேன். அங்கும் பாகுபாடுகள் மூன்று லைன்கள் இருந்தது இலவச தரிசனம், 20 ரூபாய் தரிசனம், 50 ரூபாய் தரிசனம். இலவச தரிசனத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது, 20 ல் கொஞ்சம், 50 சுத்தமாக ஆளே இல்லை. எப்பொழுதும் நான் கோயிலுக்கு போனாலும் இலவச தரிசனத்தில் தான் போவேன், காரணம் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவன் என்ற கொள்கைக்காக எல்லாம் இல்லை, ஆரம்பித்தில் நானும் காசு கொடுத்து தான் தரிசனத்திற்கு போய் கொண்டு இருந்தேன். எல்லா வழிகளும் அதாவது 5, 10, 50 ரூபாய் என்று எல்லா வழிகளும் கற்பகிரஹத்திற்குள் சேருவதற்கு கொஞ்ச தூரம் முன்பே ஒன்றாக சேர்ந்து விடும். அப்படி சேருவதற்கு, இலவச வழியில் நிற்பவர்களை சாதாரணமாக கடந்து செல்ல நேரிட்டது. ஒருவர் கால் மீது ஒருவர் நின்றுக் கொண்டு, ஒருவர் காதை இன்னொருவர் சப்போர்ட்டுக்காக பிடித்துக் கொண்டு திணறிக் கிடக்கும் அந்த வேளையில் நோகாமல் கடந்து செல்வதை, இலவச லைன்காரர்கள்
ஒரு பார்வை பார்ப்பார்களே, அது எனக்கு மிகுந்த குற்ற உணர்ச்சியை தந்தது. சிலர் வாய்க்குள் முனகவும் செய்வார்கள். ஒருமுறை ஒரு ஆள் திட்டியும் விட்டார்

“பாவிங்களா சாமி எல்லாருக்கு ஒண்ணு தாண்டா, உங்க பணத்திமிறை வேற எங்காவது காட்டுங்கடா கோயிலுக்குள் வேண்டா டா பாவிகளா” என்றார்,

அன்று காசு கொடுத்து படம் பார்க்க.........சாரி சாமி பார்க்க வந்த எங்கள் யாரிடமும் பதில் இல்லை. அன்றில் இருந்து நான் இலவச வழியில் செல்ல தொடங்கினேன். அப்படி போய் இந்த முறையில் இலவச லைனில் நின்றேன், லைன் நகரவே இல்லை அப்படியே இருந்தது, திடீர்னு ஒரு பாட்டி எங்களை முந்திக் கொண்டு சென்றது, திரும்பி யாரையோ பார்த்து “ரா வே இக்கட” என்றதும், நானும் திரும்பி பார்த்தேன். ஒரு இளவயது பெண் சங்கடத்துடன் எங்களை முந்திக் கொண்டு அந்த கிழவியை நோக்கி போனாள். கிழவி இதே மாதிரி தான் கடைசி லைனில் இருந்து முந்திக் கொண்டு இவளையும் கூட்டிக் கொண்டு வந்து இருக்கிறாள் என்பது அந்த பெண்ணின் முக சங்கடத்தில் இருந்தே தெரிந்தது.

“பாட்டி இன்னும் ரேஷன் கடை திறக்கல அதுக்குள் எங்க இவ்வளவு அவசரமா போற” யாரோ ஒருவன் சிரித்துக் கொண்டே சொல்ல. அந்த இளவயது பெண், பாட்டியை நோக்கி

“அவ்வா உண்டு அவ்வா, அந்துறு சகடைக்கு ஒஸ்தாரு”

“ஓரதி.........(எங்களை நோக்கி) ஏம்பா சாமியை பார்க்க தான் போறோம், போக்கூடாதா?” என்றாள் பாட்டி.

“நாங்க மட்டும் என்ன? எம்.எல்.ஏ வை பார்க்கவ நிக்கிறோம்?” இது நான்.

“நூ ராவே, வாலும் உண்டாரு...........” (கடைசி வார்த்தை புரியவில்லை), என்று கூறியபடி அவள் பேத்தியை இழுத்துக் கொண்டு லைனில் இருக்கும் சந்து பொந்துகளில் எலியை போல கடந்து முன்னேறிப் போனாள். இப்படி பலருடைய ஏச்சு பேச்சுகளை சம்பாதித்துக் கொண்டு சாமியை பார்க்க வேண்டுமா?. எப்பொழுதும் நான் கோயிலுக்கு சாமி கும்பிட லைனில் நிற்கும் போது எல்லாம் இப்படி எதாவது ஒரு சண்டையை பார்க்க நேரிடும். அதுவும் முக்கால்வாசி பெண்களுக்குள் தான் சண்டையே அதிகமாக நடக்கும்.

“ஏம்மா இடிக்காம வாயேன்”

“இடிப்படாம சாமியை பார்க்கணும்னா சுரங்கபாதை நோண்டிக்குனு போய் கும்மிட்டுக்கோ”

“ஏம்மா பொம்பளைங்க இருக்கோம் இல்ல தள்ளாம வாயேன்”

“அப்ப நாங்க மட்டும் என்ன?”

“நீ இடிக்கிறத பார்த்தா பொம்பள மாதிரி இல்லையே”

“அப்ப நீ நிறைய ஆம்பளைகிட்ட இடி பட்டு இருக்க”

“ஏன்ன டீ சொன்ன”...... அதற்கு அப்புறம்..... டண்டனக்கடி டணக்குனக்கடி டண்டனக்கடி டணக்குனக்கடி டண்டனக்கடி டணக்குனக்கடி தான்.

இது வளர்ந்து புருஷங்காரர்கள் வரை போய், அவர் வாய் வார்த்தையில் அவர்கள் குடும்பத்தாரை இழுத்து, ஆச்சாரமான கோயில்களை
அயோத்தியா குப்பம் மீன் மார்கெட்டாக ஆக்கி விடுவார்கள். நம்ம ஆண்களும் இதுபோல தான், அதிலும் இன்னொரு வகை ஆண்களும் உண்டு, அவர்கள் மேலே மற்றவர் கை பட்டாலே திரும்பி முறைப்பது, பலமாக மூச்சு காற்றுபட்டாளே முறைப்பது, செருப்பை எடுத்து அடித்தாலும் முறைப்பது, காரி துப்பினாலும் முறைப்பது. கடைசி வரை முறைத்துக் கொண்டும் நம் காதில் விழுவது போல முனவிக் கொண்டு தான் இருப்பார்களே ஒழிய ஒரு வார்த்தை இடித்தவனுடன் பேசவும் மாட்டார்கள், தள்ளிப் போகவும் மாட்டார்கள். இந்த வகை முன்பு சொன்ன வகையை விட எரிச்சலாக இருக்கும், மனோதத்துவ ரீதியாக
பயங்கர எரிச்சலைக் கொடுப்பவர்கள் இவர்கள், காதோரமாக வந்து முனவுவது என்று எரிச்சலை அதிகப்படுத்துவார்கள். இப்படி பல விதமான சண்டைகளை கடந்து கண்ணாடி பெருமாளின் அறைக்கு சென்றேன், ஒரு அறை முழுவதும் சுவரில் கண்ணாடி பதித்து அதில் நடுவில் பெருமாளை வைத்து இருக்கிறார்கள். அவரைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை, ஆனால் மக்கள் அவரை பார்க்கும் பொழுது எந்த தள்ளு முள்ளு இல்லாமல் அமைதியாக பார்த்தார்கள், காரணம் அந்த கண்ணாடி அறையில் எந்த பக்கம் திரும்பினாலும் பெருமாள் தெரிந்தார். பார்க்க அழகாகவும், ஃப்பூல் மேக்கப்பில் இருந்தார், பக்கத்தில் தாயாரும் இருந்தார், ஒருவேளை அதனால் இந்த மேக்கப்பாக இருக்குமோ?.
ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்ரீரங்கநாதரை நோக்கி லைன் போய்க் கொண்டு இருந்தது, என் பின்னாடி திடீர் என சத்தமான குரலில்

“சாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம்

சுரேஷம் விஷ்வாதாரம் ககன சதர்ஷம்

மேகவர்ணம் சுபாங்கம் லக்ஷ்மீகாந்தம் கமல நயனம்

யோகிபிர் த்யான கம்யம் .......” என்னுடைய காது பக்கத்தில் கேட்டது. திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன், என் வயதை ஒத்த ஒரு இளைஞன், நின்றுக் கொண்டு இருந்தான், நெற்றியில் நாமம், அழகான தாடி, காந்தக் கண்கள், ரோஜாப்பூ போல உதடுகள், இழுத்து முடியப்பட்ட குடுமி ஹேராமில் வரும் ஐயங்கார் கமலஹாசனை மாதிரி இருந்தான், பார்த்த நொடியிலே அவனை பிடித்து விட்டது எனக்கு. நான் அவனையே கண் வைக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து, மந்தரத்தை நிறுத்தி விட்டு என்னை பார்த்து

“காலை எதாவது மெறிச்சுட்டேனா, சாரி” ஸ்நேகமான ஒரு புன்னகை.

“ச்சீசீ இல்லங்க” என்று சிரித்தேன், அவனும் அழகாக சிரித்து விட்டு மறுபடியும் மந்திரத்தை முனவ ஆரம்பித்தான், அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது. என்ன ஆரம்பிப்பது என்று தெரியவில்லை,

“ஆஅ ஆஅ அது என்ன சாமிங்க” என்று கண்ணாடி பெருமாளை சுட்டிக் காட்டி கேட்டேன்.

“அவா தான் கண்ணாடி பெருமாள், எங்கு இருந்து பார்த்தாலும் நான் தெரிவேன் என்ற நியதியை உணர்த்த தான் இந்த பெருமாள் அவதாரம், அந்த அறை தான் உலகம், அதில் எங்கு இருந்து பார்த்தாலும் அந்த பெருமாள் தெரிவார், பார்த்தேளா?” பாலமுரளிகிருஷ்ணாவின் கச்சேரி கேட்டது போல இருந்தது அவனின் குரல். நான் தலையை ஆட்டினேன், மறுபடியும் மந்திரத்திற்குள் முழுக ஆயத்தம் ஆனவனை தடுப்பதுபோல

“இதுவரை இந்த சாமியை நான் எங்குமே பார்த்தது இல்லை”

“இவர் இங்கு மட்டும் தான் இருப்பார், அதுவும் வருடத்தில் இந்த ஒருநாளில் மட்டும் தான் இவரை பொதுமக்கள் தரிசிக்க முடியும்”

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சார்” என்றேன், அவன் அதை எதிர்பார்க்கவில்லை, பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை.

“நீங்க வெளியூரா”

“ஆமாம் நீங்க”

“நான் இங்க தான் அக்கரஹாரத் தெரு” என்றார், எனக்கு மண்டையில் பல்பு எரிந்தது, அந்த கேள்வியை கேட்க சரியான ஆள் இவர் தான் என்று கேட்டு விட்டேன்.

“உங்களுக்கு சுஜாதா வீடு எங்க இருக்குனு தெரியுமா” என்றேன், அவனும் நான் எதிர்பார்த்தபடி

“எந்த சுஜாதா” என்றான்.

“எழுத்தாளர், சினிமா கதை வசனம் கூட எழுதுவாரே”

“தெரியலையே” சிரித்தான்.

“அவருடைய உண்மையான பெயர் கூட ரங்கராஜன்”

“இந்த ஊரில் ஒரு தெருவுக்கு 30 ரங்காக்கள் இருப்பாங்க சார், என்னுடைய பெயர் கூட ரங்கராஜன் தான்” என்று மிக அழகாக சிரித்தான்.

அதற்குள் லைன் சாமியிடம் வந்து அடைந்தது, அதுவரை பொறுமையாக வந்த மக்களுக்கு இன்னும் ஒரு நிமிஷம் காத்து இருக்க பொறுமை இல்லை, தள்ளிக் கொண்டு, மற்றவர் வேட்டியை அவிழ்த்துக் கொண்டு, பெண்களின் முடிகள் கலைத்துக் கொண்டும் ஈவில் டேட்டில் வரும் பேய்களை போல சாமியை கும்பிட துடித்தார்கள். கருவறைக்குள் மின்சார விளக்கு இல்லை, ஆலய சாஸ்திரப்படி இருக்கவும் கூடாது, ஓரத்தில் இரண்டு பெரிய விளக்கை ஏற்றி இருந்தார்கள். கண்களால் உற்றுப் பார்த்தேன் ஐம்பொன்னினால் ஆன பெருமாளுடன் தாயாரின் விக்கிரஹம் தான் இருந்தது, நம்ம தலைவரு படுத்துனு தானே இருப்பார், கோவில் மாறி வந்துட்டோமா, என்று சந்தேகத்தோடு கன்னத்தில் போட்டபடி கும்பிடும் பொழுது ஐயர் கற்பூரத்தை ஏற்றி காட்டினார், பனி விலகி பெரிய மலை தெரிவது போல, அந்த மிதமான மஞ்சள் நிற தெய்வீக வெளிச்சத்தில் ஸ்ரீரங்கநாதர் பின்னாடி தெரிந்தது, ஒருவிதமான அற்புத உணர்வு அது, வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை, தங்க கிரீடம் வைத்துக் கொண்டு, தங்க கண்களை மூடிய படியே படுத்து இருந்தார், என்னுடைய கண்களால் அந்த காட்சியை படக் படக் என்று
கிளிக் செய்துக் கொண்டேன், கற்பூர வெளிச்சம் திசை மாறியது, அவரின் திரு உருவம் மறைந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவரை காட்டி இருக்கலாம், முழுவதுமாக ஒருவரை பற்றி தெரிந்து விட்டால் ஒருவித அலுப்பு தட்டிவிடும் என்பது உலகதத்துவம், உலகையே படைத்த இறைவனுக்கு தெரியாதா அது, அதனால் தான் மறைந்துவிட்டார். ரொம்ப நேரம் அங்கையே நின்றுக் கொண்டு இருப்பவர்களை தள்ளவதற்கு என்று முரட்டு ஐயர் ஒருவர் கருவறை வாசலில் நியமிக்கப்பட்டு இருந்தார், ஆள் வாட்ட சாட்டமாக நடிகர் கபாலி மாதிரி இருந்தார். எல்லாரையும் ஒரே விரலால் இழுத்து தள்ளினார், ஸ்ரீரங்கத்து ஸ்டண்டு யூனியன் ஆளாக இருப்பாரோ!. கொஞ்ச தூரத்தில் தூணோடு தூணாக நின்று இருந்த ஒரு ஐயர் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கும் தரப்பட்டது நான் அதை கையில் வாங்கி, கண்ணில் ஒற்றி, வாய்க்கு கொண்டு செல்வதற்குள் பின்னாடி வந்த ஒரு எருமைமாடு அதை தட்டி விட்டது, கையில் மிச்சம் இருந்த ஒரு துளி தீர்த்தம் தான் என் வாய்க்குள் போனது. அவனை திரும்பி பார்த்தேன், அவன் கையில் இரண்டு லிட்டர் பெப்ஸீ காலி பாட்டிலை வைத்துக் கொண்டு அதில் தீர்த்தம் தரச் சொல்லி அந்த அப்பிராணி ஐயரிடம் பிரச்சனை செய்துக் கொண்டு இருந்தான். ஏன் இன்னும் வீட்டில் இருக்கு அண்டாவை எடுத்துனு வந்து தீர்த்தம் கேட்கவேண்டியது தானே எருமை மாடு.

கோயில்கள் அனைத்தையும் சுற்றி பார்த்து விட்டு பிரசாதம் வாங்கலாம் என்று போனேன், ஒரு ஐயர் கவுண்ட்டரில் நின்றுக் பிரசாதங்களை விற்றுக் கொண்டு இருந்தார். நான் சென்று பார்த்தேன், என்ன என்பது போல அவர் தலையை ஆட்டினார்,

“பிரசாதம் எவ்வளவு” என்றேன்.

“தயிர் சாதம், புளி சாதம், சக்கர பொங்கல், லட்டு, அதரசம், முறுக்கு, மைசூர்பாக்கு, பொடி தோசை, எது வேண்டும்?”

“மூணு கல் தோசை, வெங்காயம் அதிகமா போட்டு ஒரு ஆம்லேட் என்று சொல்ல வாயெடுத்து சொல்லவில்லை, பிரசாதம் ஊருக்கு எடுத்துனு போறதுக்குங்க”

“அப்ப இந்த பையை வாங்கிக்கோங்க, ஒன்லி 100 ரூபீஸ், இதுல லட்டு, முறு..........”

“சரி குடுங்க, அப்படியே ஒரு புளி சாத பொட்டலம் குடுங்க”

எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு நான் கோயிலுக்குள் காலையில் வந்த வழியிலே சென்றேன், அந்த மண்டப மேடையில் அந்த பாட்டியை காணவில்லை, ஊருக்கு கிளம்பி இருப்பாளா? கிளம்பி இருக்கனும்........... கிளம்பி இருக்கனும் என்று சாமியை வேண்டிக் கொண்டு, அந்த புளிசாத பொட்டலத்தை அவள் உக்கார்ந்த இடத்திலே வைத்துவிட்டு, மண்டபத்திற்கு நடையை கட்டினேன். மணி 2, மதியம் வெயில் மண்டையை பொளந்தது, உண்மையில் சென்னையை விட வெயில் அங்கு அதிகம், ஐஸ்ஸூவின் அம்மா சொல்வது போல HEAT STROKES வந்துவிடும் போல தான் இருந்தது. பயங்கர பசி, நெய் பொங்கல் செறித்து பல மணி நேரம் ஆகி இருந்தது, நேராக மண்டப டைனிங் ஹாலுக்கு போனேன் பிசியாக பந்தி நடந்துக் கொண்டு இருந்தது, ஐஸ்ஸுவின் அப்பா கண்ணில் பட்டார்.

“ஐஸ்ஸூ, பாலாஜீ எல்லாம் எங்க சார்”

“எல்லாரும் சாப்பிட்டு தூங்கி விட்டார்கள்” என்றார், இவரை நம்பலாமா? அனுவின் அப்பா ஆயிற்றே......................., அப்புறம் இந்த முறையும் சாப்பிடும் பொழுது ஐஸ்ஸூ வந்து என்னுடைய சட்டையைபிடிக்க போறாள் என்று தயங்கினேன் இருந்தாலும், என்னுடைய வயிற்று தோல்களை அமிலங்கள் சாப்பிட தொடங்கி
ரொம்ப நேரம் ஆகிறது, எது வந்தாலும் சமாளிப்போம் என்று சாப்பிட உக்கார்ந்தேன். இந்த சைடு பத்து பேர், அந்த சைடு பத்து பேர் நடுவில் ஒரு இலை மட்டும் காலியாக இருந்தது, ஓடி சென்று அதில் உக்கார்ந்தேன். இலையில் கூட்டு, பொறியல், உப்பு, ஊர்காயை தவிர எதுவும் இல்லை, ரொம்ப நேரம் உக்கார்ந்து இருந்தேன் யாரும் என்னிடம் வரவில்லை, எனக்கே சந்தேகம் வந்து விட்டது ஒருவேளை யாராவது சாப்பிட்டு முடிச்ச இலையில் அமர்ந்து விட்டோமா?, இலையை ஒரு முறை பார்த்தேன் சுத்தமாக தான் இருந்தது. நேரம் ஆனது, என்னுடைய இலையில் இப்பொழுது உப்பை தவிர வேறு எதுவும் இல்லை, இலை மட்டும் கொஞ்சம் இளசாக இருந்து இருந்தால் உப்பை தொட்டுக் கொண்டு இலையை சாப்பிட்டு இருப்பேன் அவ்வளவு பசி. சர்வ் செய்யும் மாமாக்கள் வேக வேகமாக வருவார்கள் அதே வேக வேகமாக என்னை கடந்து போவார்கள், ஆனால் ஒரு குருட்டு கபோதிக்கும் நான் வெறும் இலையுடன் உக்கார்ந்து இருப்பது தெரியாது. அப்படி பார்த்தாலும்

“யாரு ஓய் சாதம், இங்க சாருக்கு சாதம் போடு, அப்படியே ரசமும் எடுத்துண்டு வா” என்பார்.

நான் மனதுக்குள் “யோவ் நான் இன்னும் சாம்பாரே சாப்பிடலைய்யா அதுக்குள் ரசம் மோரு சொல்றீயே”. ஒருத்தனும் என் பக்கதில் வரவில்லை. எனக்கு எதிர் பந்தியில் ஒரு மாமா எல்லார் இலைக்கும் சாம்பார் ஊற்றிக் கொண்டு வந்தார், அவரை நோக்கி நான்

“மாமா எனக்கு கொஞ்சம் சாம்பார் ஊத்துங்கோ” என்றேன். அவரும் என்னை நோக்கி வந்து என்னுடைய காலி இலையை பார்த்தவர்

“என்ன சாதமே இல்லை, எதுல ஊத்தறது” என்றார்.

“அதைத்தான் நான் முதலில் இருந்து சொல்லிண்டு இருக்கேன், போய் சாதம் எடுத்துண்டு வாங்கோ” என்று சொன்னேன் கோபமாக.

(தொடரும்.......)

samuthraselvam
07-05-2009, 09:04 AM
ஹா ஹா ஹா..... பசியில் ஆடு மாடுகளை போல இலையை தின்னும் தக்ஸை பார்க்க நான் அந்த இடத்தில இல்லாமல் போய் விட்டேனே....

ஐந்தாம் பாகம் மனதை கொஞ்சம் கஷ்டப்பட வைத்தது... ஆனாலும் ஆறாம் பாகத்தில் உங்களின் நகைசுவையான எழுத்தால் அதை மறக்க வைத்துவிட்டீர்கள்..

ரங்கராஜன்
07-05-2009, 04:22 PM
இந்த திரியின் நாயகனையும், நாயகியையும் பார்க்க ஆவலாக இருக்கும் உறவுகளுக்கு அவர்களுடைய புகைப்படத்தை பதிக்கிறேன், உங்கள் மனதில் அவர்களை பற்றிய ஒரு பிம்பம் இருக்கும், அது சரியாக இருக்கிறதா? என்று சரி செய்துக் கொள்ளுங்கள்.........

ஆதவா
07-05-2009, 04:42 PM
இந்தப் பதிவால மண்டை காஞ்சு போய்... கரெக்டா ஆறு மணிக்குக் கிளம்பி என் டீம்லீட் வீட்டுக்குப் போய் அவரின் "ஒரு வயசு" பொண் கூட விளையாடிவிட்டு (என்னைப்பார்த்து பார்த்து அழுதா) அப்புறம் என் நண்பன் வீட்டுக்குப் போய் அவன் மகனுடன் ஒரு மணிநேரத்துக்கும் (பையன் செமக்யூட்.. எனக்கு பொண்ணு பொறந்தா அவன் தான் மருமகனாக்கும்) மேல் விளையாடிவிட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.. போதுமாய்யா....ஹ்ம்ம்

நல்லவேளை... நீங்க கல்யாணக் கதை படிக்கல.... படிச்சிருந்தா????........:lachen001:

மதி
07-05-2009, 04:45 PM
நல்லவேளை... நீங்க கல்யாணக் கதை படிக்கல.... படிச்சிருந்தா????........:lachen001:

எனக்கும் அதான் பயம்மா இருக்கு... எத்தினி கல்யாணம் தான் பண்றது.. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

தக்ஸ்...

போட்டோ சூப்பர். அப்படியே மனசில இருந்த பிம்பங்கள பாத்த மாதிரி ஐசும் அனியும்....
அந்தளவுக்கு அழகா வர்ணிச்சிருக்கீங்க...

ஆதவா
07-05-2009, 05:05 PM
எனக்கும் அதான் பயம்மா இருக்கு... எத்தினி கல்யாணம் தான் பண்றது.. :icon_ush::icon_ush::icon_ush::icon_ush:


:eek::eek:

அடுத்த கேள்வி கேட்டா திரி பண்பட்டவராயிடும்.. இல்லாட்டி என் பதிவு புண்பட்டு போயிடும்.... :D

நடத்துங்க நடத்துங்க..

அறிஞர்
07-05-2009, 09:19 PM
அருமையான அனுபவம்..
அழகான வரிகளில்...
கலக்கிட்டிங்க.. தக்ஸ்......
ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து படித்தேன்...

தாமரை
08-05-2009, 04:23 AM
முதல்ல 2 ரூபாய்..
அப்புறம் 20 ரூபாய்..
அப்புறம் 50 ரூபாய்..
அதுவும் போதாதுன்னு புளியோதரையை வச்சிட்டு வந்தீங்க...

ஆஹா ஆஹா இவ்வளவு பாசக்கார புள்ளையா நம்ம டக்ஸூ அப்படின்னு மனசு கூத்தாடற அடுத்த நிமிஷம் இன்னொரு காட்சி...

கல்யாண வீட்டுக்கு சாப்பாட்டுக்கு 2 மணிக்கு போறது..

இது ஒரு தப்பா அப்படின்னு யோசிக்க தோணும். அதோட பிண்ணனியை புரிஞ்சிண்டா ஷேமமா இருக்கும்.

கல்யாண பந்தி 12:30 ல இருந்து 1 மணிக்குள்ள ஆரம்பிக்கும். ஒரு பந்திக்கு அதிகபட்சம் 20 நிமிஷம்.

2:00 மணிக்கு ஏறத்தாழ பரிமாறுபவர் சோர்ந்து போய் உங்களை விட அதிகப் பசியோட இருப்பார், ஐட்டங்கள் குறைஞ்சு போய், அதையும் கவனிச்சுண்டு, தனித்தனியா ஒவ்வொருத்தரையும் கவனிக்க முடியுமா என்ன?

கண்ணு முன்னால சாப்பாடை வச்சுகிட்டு பசியோட அலையறது எவ்வளவு கொடுமை தெரியுமா?

கல்யாண வீட்டுக்கு சாப்பாட்டுக்கு போகணமுன்னா சரியான நேரத்துக்கு போகணும், நமக்கு பசிச்சாதானே சாப்பிட முடியும்னு ஒதுங்கி நிக்கக் கூடாது, ஏன்னா நாம சாப்பிட்ட பின்னால மிச்சம் மீதி இருக்கறதை சாப்பிடறவா இவா.. அவா நேரத்துக்குச் சாப்பிட வேணாமோ..

பசி வரும் பொழுது கூடவே வருவது கோபம், நாம நம்ம கோபத்தை வெளிகாட்டி விட முடியுது, ஆனல் அவா?

இதனால்தான், நான் சாப்பிடப் போகணும்னா கரெக்டா டயத்துக்கு போயிடுவேன். டயம் தாண்டும்னா, சாப்பிட்டு விட்டு போயிடுவேன். கல்யாணத்துக்கு போயிட்டு வெளிய போனா கோபிக்க மாட்டாளா அப்படின்னு நினைச்சுக்கக் கூடாது..

நீங்க நிஜமா கோவிச்சுண்டிருப்பேள், முகத்தைச் சுளிச்சிருபேள்னு நம்பலை. ஆனா "ஸ்மரணை" சொன்னேன் இல்லையா, அதாவது இப்போது என்ன நடக்கணும், என்ன நடந்துகிட்டிருக்கு, என்ன சிட்சுவேஷன் என்ன செய்யணும் என்ற உணர்வு மனதில இருக்கறது.. மிக முக்கியம்..

ஆ!பத்து பகுதியில் டைம் மேனேஜ்மெண்ட் பத்தி ஒரு பதில் இருக்கு..

படிங்க..

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=333888#post333888

ஒவ்வொரு நாள் விழித்த உடனும் அன்று முக்கியமாய் என்ன செய்தல் வேண்டும் என நினைவு படுத்த்க் கொண்டாலே போதும்.. அது நடை பெறுதலின் பொருட்டு மற்ற வேலைகளைச் சுருக்கியோ இல்லை மாற்றியோ செய்வதால் செய்ய வேண்டியதை நிம்மதியாய் செய்யலாம்..

இனிமே விருந்துகளுக்கு லேட்டா போய் சாப்பிடாதீங்க.. சரியா!!!

மதி
08-05-2009, 04:37 AM
ஒவ்வொரு நாள் விழித்த உடனும் அன்று முக்கியமாய் என்ன செய்தல் வேண்டும் என நினைவு படுத்த்க் கொண்டாலே போதும்.. அது நடை பெறுதலின் பொருட்டு மற்ற வேலைகளைச் சுருக்கியோ இல்லை மாற்றியோ செய்வதால் செய்ய வேண்டியதை நிம்மதியாய் செய்யலாம்..

உருப்படியா எந்த வேலையும் இல்லேன்னா....:D:D:D:D

தாமரை
08-05-2009, 04:59 AM
உருப்படியா எந்த வேலையும் இல்லேன்னா....:D:D:D:D

நிம்மதியா இன்னொரு குட்டித் தூக்கம் போடலாமே!!!

மதி
08-05-2009, 05:01 AM
நிம்மதியா இன்னொரு குட்டித் தூக்கம் போடலாமே!!!
ஐ-டி-யா......

ரங்கராஜன்
08-05-2009, 12:08 PM
பாகம்- 7

அவர் என்னை பார்த்துக் கொண்டே சென்றார், அது முறைக்கிற மாதிரியும் இருந்தது, பாவப்படற மாதிரியும் இருந்தது. போனவர் கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்து எனக்கு போட்டார்.
வெறும் பருப்பை மேலே போட்டு அதில் கொஞ்சம் நெய்யை விட்டார், அதை பிசைந்து சாப்பிட்டேன், அப்புறம் டிஸ்பூனில் சாம்பார், கூட்டு, பொறியல் வைத்தார். வேறு வழியில்லாமல் அளவாக தொட்டுக் கொண்டு
சாப்பிட்டேன், சாதம் மட்டும் நிறைய போட்டார்கள், அதை போட்டுக் கொண்டு அவரை நோக்கி

“மாமா கொஞ்சம் ரசம் குடுங்கோ”

“ச்சாத்தமூதா வேணும்”

“ஐய்யய்யோ அது எல்லாம் வேண்டாம் ரசம் மட்டும் கொஞ்சம் ஊத்துங்கோ”. அவர் என்னை ஒருமாதிரியாக பார்த்து விட்டு

“அதான் அதான்” என்று ரசத்தை ஊற்றினார். நான் தேன்அமுது கேள்விபட்டு இருக்கேன், அது என்ன சாத்தமூது?. ரசம் தான் வேறு என்ன?.

கழுத்து வரை கொட்டிக் கொண்டேன், வாயை திறந்தால் காக்காய் கொத்தும், அந்த அளவுக்கு ஃப்புல் கட்டு. அப்புறம் தான் ஞாபகம் வந்தது, நான் ஒரு நண்பனின் கல்யாணத்திற்கு வந்து இருக்கிறேன், அவனுக்கு எதாவது ஒத்தாசை செய்யவேண்டும் என்று தோணித்து, அதனால் நேராக என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கி விட்டேன், எவ்வளவு பெரிய ஒத்தாசை!!!!!!!. ரூமை பற்றி சொல்லவில்லையே
ஒரு கட்டில் கிடையாது, தலையணை கிடையாது, குடிக்க தண்ணி கிடையாது, பெயருக்கு ஏற்றார் போல அது வெறும் ரூம் மட்டுமே. ஃப்பேன் மட்டும் போனாபோகிற என்று போட்டு வைத்து இருந்தார்கள். காலையில் வந்த வேகத்தில் இதை எல்லாம் நான் கவனிக்கவில்லை, வெயில் வேறு அடித்து கொன்றது. பயங்கர வெயில், கொஞ்சம் அரிசியை தண்ணியில் போட்டு அந்த ரூமின் மூலையில் வைத்து விட்டால், with in 2 min சாதம் ரெடியாகி விடும், அந்த அளவுக்கு அந்த ரூம் கொதித்தது. இரண்டு நிமிஷம் சேர்ந்தார் போல உக்கார முடியவில்லை, எரிச்சலாக இருந்தது, நேராக பாலாஜீயிடம் சென்று “எப்பா ரொம்ப குளிருது ஒரு கம்பிளி இருந்தால் கொடு என்று கேட்டு விடலாம் என்ற முடிவுடன், அவனை தேடி கீழே இறங்கினேன். அவன் என்னடான்னா கீழே நடு
ஹாலில் ஓரத்தில் போர்ட்டரை போல முகத்தில் துண்டை போட்டு தூங்கிக் கொண்டு இருந்தான். அதை பார்த்தும் எனக்கே கஷ்டமாக இருந்தது, சாமியே தெருவில் படுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, பூசாரி ஏசி டபுள் பெட் ரூம் வித் அட்டாச்சுடு பாத்ரூம் கேட்பது தப்பு என்று பட்டது. அமைதியாக வந்து தரையில் படுத்து விட்டேன், தோசைகளில் படுத்த மாதிரி சூடாக இருந்தது, வெளியே எங்கையாவது போகலாம் என்றால், அடிக்கிற வெயிலில் அனாதையாக வாயில் நொறை தள்ளி சாவ நான் தயாராக இல்லை. வயிற்றில் வேறு மலைத் தீனி, அந்த பெரிய அறையில் மலைப்பாம்பை போல உருண்டிக் கொண்டு இருந்தேன், எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம். அதாவது ஒரு பொருள் இல்லை என்றால் அதை இருப்பதாக நினைத்துக் கொண்டால் அதனுடைய பலனை அனுபவித்த திருப்தி கிடைக்கும். அதாவது இப்போ சாம்பாருக்கு சைட் டிஷ்ஷாக எதுவும் இல்லை என்றால், நான் மனதில் பக்கத்தில் சிக்கன் ஃப்ரை இருப்பது போல நினைத்துக் சாம்பார் சாதத்தை சாப்பிட்டுவிடுவேன். சும்மா ஒரு பிரமை தான், ஆனால் சாப்பாடு இறங்கிவிடும். அதைப்போல இந்த வெயிலை விரட்ட, நான் இப்பொழுது கொடைக்கானலில், அல்லது ஊட்டியில் இருப்பதை போல நினைத்துக் கொண்டேன். என்னுடைய மனக்கண்களில் அந்த ஊட்டி பனி தெரிய ஆரம்பித்தது, மனம் சந்தோஷத்தில் லயித்தது. லயித்த அடுத்த நிமிடமே கரண்டு கட்டாகி ஃப்பேன் நின்று விட்டது, அடக்கொடுமையே என்று நினைத்துக் கொண்டு எழுந்தேன், ஊட்டியை பற்றி நினைக்காமல் இருந்து இருக்கலாமோ????. வேறு வழியே இல்லை என்னால் கோபத்தை அடக்கமுடியவில்லை, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியை திட்டிக் கொண்டே அப்படியே கண்களை மூடினேன், எப்பொழுது தூங்கினேன் என்று நினைவில்லை. கொஞ்ச நேரம் கழித்து என்னுடைய அறை கதவு சத்தமாக தட்டப்பட்டது, அலறி அடித்து எழுந்தேன், எழுந்து ஒரு நிமிடம் எங்கே இருக்கிறேன் என்று புரியாமல், கதவை போய் திறந்தேன், வெளியில் பாலாஜீ, ஐஸ்ஸூ, சாத்தான் அனு அப்புறம் இன்னும் இரண்டு குட்டி பசங்க இருந்தார்கள் என்னை வித்தியாசமாக பார்த்தார்கள், பாலாஜீ என்னை பார்த்து

“என்னடா ரோடு போடறவன் மாதிரி இப்படி வியர்த்து இருக்க” என்றான், அப்போ தான் என்னை நான் பார்த்தேன், உடல் முழுவதும் வியர்த்து இருந்தது, நான் படுத்து இருந்த இடம் கூட ஆக்ஸிடண்ட் ஆன பாடியை சுற்றி போலீஸார் சாக் பீஸில் மார்க் செய்தது போல நான் படுத்து இருந்த இடத்தில் வியர்வையில் என்னுடைய உருவம் தெரிந்தது. அனு அதை பார்த்து என்னை ஒருமாதிரியாக பார்த்தான், நான் அவனை பார்த்து

“டேய் அது சத்தியமா வியர்வை தான் டா”, அவன் நம்புவது போல நடித்தான், ஐஸ்ஸூ என்னிடம் வந்து

“அங்கிள் வாங்க அங்கிள் எதாவது கேம்ஸ் விளையாடலாம்”

“என்ன கேம்டா கண்ணா”

“அந்தாக்*ஷரி” என்றான் அனு என்னை பார்த்து. நான் அவனை முறைத்தபடி

“நிலாவாடா காய்யுது, அடிக்கிற வெயிலில் அந்தாக்*ஷரியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம், நீ சொல்லு ஐஸ்ஸூ”

“நிலா காய்ந்தால் தான் நீ விளையாட வருவீயோ” அனு

“பூமியே காய்ந்தாலும் நான் உன்னுடன் விளையாட வரமாட்டேன், போடா”

“சரி போடா, நான் இல்லாமல் நீங்க எப்படி விளையாடறீங்கனு பார்க்கிறேன்”

“பாரு பாரு அந்த மூலையில் உக்கார்ந்து பாரு, நீ சொல்லு ஐஸ்ஸும்மா”

“country name விளையாடலாமா அங்கிள், அதாவது நான் சொல்லும் நாட்டின் பெயரில் இருந்து நீங்க ஒரு நாடு சொல்லனும், ஓகேவா”

“சரி நீ ஆரம்பி”

“INDIA"

"ANNA NAGAR"

"ஐய்யோ அங்கிள், ஒன்லி countries names"

“ஓ சாரி சாரி, ம்ம்ம்ம் (கொஞ்ச நேரம் யோசித்து) அமெரிக்கா” அவள் யோசிக்காமல் உடனே

“அல்ஜீரியா”

“மறுபடியும் a வா” என்று நான் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது அனு மூலையில் இருந்து

“அருந்ததீ” என்று சிரித்தான்.

“வாயை உடைச்சிடுவேன் உன்னை நான் கேட்டனா?”

“நானும் உன்கிட்ட சொன்னனா?”

“அங்கிள் அவனை விடுங்கள் அங்கிள், he use to do like this only, leave him, நீங்க சொல்லுங்க”

“aல ஆரம்பிக்கனுமா?” என்று நான் மறுபடியும் யோசிக்க. அவன்

“அஸாரருதீன்” என்றான்,

“ஐஸ்ஸூ இவன் என்னை யோசிக்கவே விடமாட்றான்”

“அவனை விடுங்க அங்கிள், நீங்க காதை மூடிக் கொண்டு யோசிங்க country name வரும்” என்றாள், எனக்கா அரை தூக்கம், நான் அப்பொழுது தான் பாலாஜீயை பார்த்தேன், அவன் ஹாயா ஒரு முலையில் தூங்கிக் கொண்டு இருந்தான். நான் அவனை பார்த்து

“டேய் பாலாஜீ இந்த அனு சனியனை இங்கு கொண்டு வந்து விட்டுட்டு, நீ ஜாலியா தூங்குறீயா”

“டேய் கீழே என்னுடைய உயிரை எடுத்துனு இருந்தார்கள், அதான் இங்க.....”

“என் உயிரை எடுக்கட்டும்னு கூட்டினு வந்தீயா”

“கற்பூரம்டா நீ, கப்புனு பிடித்துக் கொண்டாய்”

“கம்முநாட்டி”

“அங்கிள் யூவர் டைம் இஸ் கோயிங் டூ ஓவர்” என்றாள்.

“ஐஸ்ஸூ வேற லேட்டர் கொடுடா கண்ணா aல எனக்கு தெரியலை”

“சரி m” என்றாள். நான் அவள் சொன்னது போல கண்களையும் காதையும் மூடிக் கொண்டு யோசித்தேன், எதுவும் சற்றென்று ஞாபகம் வரவில்லை, கண்களை திறந்து பார்த்த பொழுது அனு என்னுடைய முகத்திற்கு பக்கத்தில் வந்து

“m.kumaran son of mahalakshmi” என்றான் சிரித்துக் கொண்டு. நான் அவனை எழுந்து துரத்த அவன் காற்றை போல மாடிப்படிகளில் ஏறினான், ஐஸ்ஸூவும் சிரித்துக் கொண்டு என் பின்னாடியே

“அங்கிள் அவனை அப்படியே மாடியில் இருந்து தள்ளுங்க அங்கிள்” என்று சிரித்துக் கொண்டு ஓடிவந்தாள்.


இந்த திரியை இதுவரை தொடர்ந்து படித்த வந்த அனைத்து உறவுகளுக்கும் முதலில் என்னுடைய நன்றிகள். அந்த இரண்டு தேவதைகளால் (அனுவும் & ஐஸ்ஸூவும்) அந்த இரண்டு நாட்களும் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தேன், என் வாழ்க்கையின்
பசுமையான ஏட்டில் அந்த இரண்டு நாட்கள் எப்பொழுதும் இருக்கும். உண்மையில் குழந்தைகளை போல துன்ப போக்கிகள் வேறு எதுவும் இல்லை, அவர்களுடன் விளையாடும் பொழுது நானும் அவர்கள் வயதுக்கு போகிறேன், மனம் லேசாகிறது, என்னுடைய துன்பங்களை நான் மறக்கிறேன், வருங்கால வாழ்க்கையை பற்றிய பயங்களை என்னிடம் அப்பொழுது இருப்பது இல்லை. நேரம் போவதும் தெரிவதில்லை, என்னுடைய கோபம் போவதும் தெரிவதில்லை. அந்த சந்தோஷ உணர்வை நான் எழுத்தில் கொண்டு வந்து உங்களை சந்தோஷப்படுத்த மட்டும் தான் நினைத்தேன். ஒரு அளவுக்கு மீறி தரப்படும் அமுதம் கூட நஞ்சாக மாறும் என்று எனக்கு தெரியும். இதுவரை நான் எந்த தொடரும் எழுதியது இல்லை, இவ்வளவு பெரிதாக, உங்கள் ஊக்கங்கள் தான் என்னை இந்த அளவு எழுத வைத்தது, என்னுடைய சொந்த வேலைகள் காரணமாக என்னால் இதற்கு மேல் இந்த திரியை தொடர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். நானும் அந்த இரண்டு தேவதைகளும் இன்னும் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். அதையெல்லாம் சொல்லி இன்னும் உங்களை இம்சிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், நிஜ சம்பவங்கள் பிரிவில் நான் எந்த கற்பனையையும் கலப்பது இல்லை என்று, அது எல்லாம் என்னுடைய சிறுகதைகளுடன் நிறுத்திக் கொள்வேன். நான் அனுபவித்ததை நம் மன்ற உறவுகளும்
சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திரியை ஆரம்பித்தேன், கண்டிப்பாக சுயதம்பட்டம் அல்ல, என்ன நடந்தது என்பதை தவிர வேறு எதையும் நான் சேர்க்கவும் இல்லை, திரிக்கவும் இல்லை. மற்றபடி இதில் இருக்கும் எந்த நிகழ்ச்சிகளும் பொய்யும் அல்ல என்னுடைய பண்பை பறைசாற்றும் தற்புகழ்ச்சி கதைகளும் அல்ல. என்னுடைய எழுத்தை படித்து விட்டு உங்கள் குழந்தைகளையோ, அல்லது வெளி குழந்தைகளையோ இந்த திரியின் ஞாபகமாக ஒரு முத்தம் கொடுத்தீர்கள் என்றால் அதுதான் இந்த திரியின் வெற்றி, (மதி செய்ததை போல, ரொம்ப நன்றி மதி, நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை பார்த்து மன நிறைந்து விட்டது). எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில quotation ஒன்றை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

“People only see what they want to see”

ஊக்கப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள், சொந்த வேலை முடிந்ததும் பின் மன்றத்திற்கு திரும்பி வருகிறேன். :icon_b::icon_b::icon_b::icon_b:

மதி
08-05-2009, 12:22 PM
அழகு.. அழகு....

உண்மை தான் தக்ஸ்... குழந்தைங்க கூட விளையாண்டால் நேரம் போவதே தெரியாது. நாமும் குழந்தையாகிவிடுவோம்.

நல்லதொரு சம்பவக்கோர்வையாக இந்தத் திரி வந்தமைக்கு நடந்ததை அப்படியே எங்கள் மனக்கண்ணிலும் காணும் படி இருந்த உங்க விவரணைகள். நன்றாக எழுத வருகிறது நகைச்சுவையாய். மேலும் மேலும் எழுதுங்க. வாழ்த்துகள்.

சொந்த வேலையை சீக்கிரமே முடித்துவிட்டு மன்றம் வாருங்கள். காத்திருக்கிறோம்.

கா.ரமேஷ்
08-05-2009, 12:33 PM
எங்களையும் திருமணத்திற்க்கு அழைத்து சென்று குழந்தைகளுடன் குதூகலமிட்டு கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி தக்ஸ்.முடிந்துவிட்டது என்பதில் கொஞ்சம் வருத்தம்தான் இருந்தாலும் அடுத்த ஒரு திரியில் உங்களின் இயல்பான வாழ்க்கைக்கு அழைத்து செல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.நன்றி தோழரே தொடரட்டும் உங்கள் பணி.

பாரதி
08-05-2009, 12:46 PM
ரொம்ப நல்லா இருந்தது மூர்த்தி.

உண்மையிலேயே மிகவும் இரசித்துப்படித்தேன்.

சில இடங்களில் சுஜாதாவின் பாதிப்பு இருப்பதும் தெரிகிறது.

நடந்தவை எல்லாம் மனக்கண்ணில் பார்ப்பது போல எழுத முடிந்திருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி.

உங்கள் நாட்களை இனிமையாக்கிய அந்தக்குழந்தைகளை மனதார வாழ்த்துகிறேன்.இனி வரும் நாட்களும் அவ்வாறே அமையட்டும்.

நீங்கள் அடைந்த மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உங்களுடன் இருந்தாற்போல உணர்வைக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

ரங்கராஜன்
09-05-2009, 07:57 AM
இந்த திரியை திரும்பவும் தொடர வேண்டும் என்று மனம் விரும்புகிறேன். கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைத்தது, என் மனதும் ஒருவித மாற்றத்தை எதிர்பார்த்தது. இந்த பாகத்தை உக்கார்ந்து எழுத ஆரம்பித்து விட்டேன்.

ரங்கராஜன்
16-06-2009, 04:42 PM
பாகம்- 8

நான் அனுவை துரத்த என் பின்னாடியே ஐஸ்ஸுவும் ஓடிவர, நாங்கள் மூவரும் மொட்டை மாடிக்கு ஓடினோம். மதியம் 3.30 மணி இருக்கும். அது பெரிய மொட்டை மாடி என்னிடம் இருந்து தப்பிக்கும் வேகத்தில் அனுவும் வேகமாக மொட்டை மாடியின் மறுமுனைக்கு ஓடிவிட்டான், நானும் ஐஸ்ஸுவும் அவனை பிடிக்கும் நோக்கத்தில் அவன் பின்னாடியே சென்றோம். சில வினாடிகளில் அப்புறம் தான் நாங்கள் எங்கள் நிலைமையை உணர்ந்தோம். அனுவும் அப்படியே நின்றுவிட்டான். 3.30 மணி வெயில் அதுவும் கருங்கல் போட்ட மொட்டை மாடி தோசைக்கல்லை போல கொதித்துக் கொண்டு இருந்தது. மூவரின் பாதங்களும் வெயிலில் கருக ஆரம்பித்தது, நானும் ஐஸ்ஸும் ஓடிச் சென்று ஒரு சின்ன ஸ்லாப் நிழலில் ஒளிந்துக் கொண்டோம், எதிர் நிழலில் அனு அடைக்கலம் புகுந்தான். ஐஸ்ஸு என்னிடம்

“அங்கிள் அங்கிள் என்னை கொஞ்சம் தூக்கிக்கிறீங்களா?” என்று கேட்டாள். குழந்தை பாவமாக இதை கேட்டவுடன் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை, அதனால் அவளை தூக்க முயற்சித்தேன்,
ஆனால் என்னால் அவளை தூக்கவும் முடியவில்லை. உடனே அனு

“ஏண்டா ஒரு சட்டி சாப்பாடு சாப்பிடற இல்ல, இவளை தூக்க முடியாதா? உன்னால” என்று சிரித்தான்.

“டேய் வாயை மூடுடா உன்னால தான் இப்படி எல்லாரும் மாட்டிக்கிட்டோம், மங்கீ” ஐஸ் கத்தினாள்.

“ஆஆஆஆ அங்கிள் சீக்கிரம் தூக்குங்க, i cant bear it” என்று கத்த ஆரம்பித்தாள், நிழலும் சூடாக தான் இருந்தது. என்னால் அவளை சத்தியமாக தூக்க முடியவில்லை, வெயில் தாங்க முடியாத அவள் என்னுடைய பாதத்தின் மேலே ஏறி நின்றுக் கொண்டாள். ஏற்கனவே வெயில் தாங்க முடியாமல் இருந்த என்னுடைய கால்களின் மேல் இவள் ஏறி நின்றுக் கொண்டாள். என்னுடைய பாதங்களின் கிழும் சூடு, மேலும் சூடு அவளின் கால்களும் தொதித்தது.

“அங்கிள் நான் வெயிட்டா இருக்கேனா?” எரியிற நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல கேட்டாள்.

“பன்னிக்குட்டி மாதிரி இருக்க” என்றேன் மெல்லமாக

“என்னது”

“இல்ல இல்ல இலையில் இருந்து உருண்டு வரும் பனியை போல இருக்கிறாய்” என்று சமாளிக்க

“என்னது? என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியவில்லை”

“ஒண்ணும் இல்ல நீ வெயிட் இல்லன்னு சொன்னேன்”

“டேய் மச்சான் நானும் ஏறிகட்டுமா” என்றான் அனு தூரத்தில் இருந்தபடி.

“மகனே இன்னைக்கு உன்னுடைய மூக்கில் இருந்து தக்காளி சட்டினி வரவைக்கல என் பேரு ..............? அந்த வெயிலில் எனக்கு என் பெயர் கூட எனக்கு நினைவு இல்லை”. அப்புறம் அனுவே ஒரு ஐடியா சொன்னான்

“டேய் மச்சான், படிக்கட்டுக்கு போக ரொம்ப தூரம் இருக்கு. ஒரு ஐடியா சொல்றேன். நான் 1..2...3 என்று சொல்றேன், மூணு பேரும் ஒரே ஓட்டமா ஓடிடலாம் படிக்கட்டுக்கு ஓகே வா?” என்றான். நான் ஐஸ்ஸுவை பார்த்தேன். அவளும் ஓக்கே என்பது போல தலையை ஆட்டினாள் சிரித்துக் கொண்டு, அதுவும் அனுவை பார்த்து சிரித்துக் கொண்டு. அனு ஆரம்பித்தான்.

“1.........2............3” என்றான், நான் கடகட வென ஓட ஆரம்பித்தேன், ஐந்து அடிப்போய் திரும்பி பார்த்தால் ஐஸ்ஸுவும், அனுவும் சிரித்துக் கொண்டு அந்த நிழலிலே நின்றுக் கொண்டு இருந்தார்கள். அப்போ தான் அவர்கள் இருவரும் 1....2....3 சொல்வதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் சிரித்து கொண்டதின் அர்த்தம் புரிந்தது. நானும் நடுவரை வந்து விட்டேன், சும்மா சொல்ல கூடாது கருங்கல் தரை காலை தீச்சதது. பாவம் ஐஸ்ஸுவையும் விட்டு விட்டு போக மனம் இல்லை. திரும்பவும் அவள் இடத்தில் ஓடிச் சென்றேன், இருவரும் அடக்க முடியாமல் சிரித்தார்கள். நான் ஐஸ்ஸுவை பார்த்து முறைத்தேன்,

“இனிமே என்கிட்ட நீ பேசாதே”

“why uncle, what did i do”

“பேசாதன்னா, பேசாதே அவ்வளவு தான்”

“மச்சான் நான் பேசலாம் இல்லையா?”

“நீ எழு ஜென்மத்துக்கு பேசாத டா சாத்தானே”

“uncle நான் என்ன பண்ணேன், நானா உங்களை ஓட சொன்னேன், அனு தானே சொன்னான். நீங்க ஓடுனீங்க. இதுல என் தப்பு என்ன இருக்கு”

“எனக்கு நீ சொல்லி இருக்கலாம் இல்ல”

“நீங்க என்னை கேட்டு நான் சொல்லலையா?” என்றாள்,

என்ன டா இது எப்படி கேள்வி கேட்டாலும் நம்மை மடக்கி விடுற இவ, பெருசானா பெரிய வக்கீலா வருவா போல என்று நினைத்துக் கொண்டு அமைதியானேன். மூவரும் அந்த கொஞ்ச நிழலில் முகங்களை வேறு வேறு திசைகளை பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தோம் கொஞ்ச வினாடிகள் கழிந்தது. அனு பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்தான்

“சரி சரி இரண்டு பேரும் சண்டை போடாதீர்கள். ஐஸ்ஸு நீ மச்சான் கிட்ட சாரி கேளு, மச்சான் நீ அவளை சனியன்னு சொன்னதுக்கு சாரி கேளு” என்றான் அனு. ஐஸ்ஸு என்னை முறைத்தபடி திரும்பி பார்க்க

“டேய் நான் எப்ப டா அவளை சனியன்னு சொன்னேன்”

“சொன்ன மச்சான் சொன்ன, அவள் அந்த சைடு திரும்பி இருக்கும் போது நீ இந்த சைடு திரும்பியபடி என்னை பார்த்து அவளை கை காமிச்சி சொன்ன மச்சான்” என்று நடக்காத ஒரு விஷயத்தை நடந்த மாதிரியே சொன்னான். ஐஸ்ஸு என்னை முறைத்துக் கொண்டு இருப்பது
என்னால் அவள் பக்கம் திரும்பாமலே பார்க்க முடிகிறது. நான் ஐஸ்ஸுவிடம் திரும்பி

“கண்ணா சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்லடா” என்றேன். ஐஸ்ஸு தன்னுடைய கருநீல கண்களால் என்னை எரிப்பதை போல பார்த்தாள்.

“எங்க அம்மா அப்பா கூட அவளை அப்படி சொன்னது கிடையாது” எரியும் நெருப்பில் சுத்தமான நெய்யை ஊற்றினான் அனு.

“டேய் நீ வாயை மூடுடா எமனே, உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும்” அவனை பார்த்து சொன்னேன், அவனும் அதற்கு பதிலாக எப்பொழுதும் போல திருட்டு சிரிப்பை உதித்தான்.

அவனிடம் நான் பேசிவிட்டு திரும்பி பார்க்கிறேன், ஐஸ்ஸு கோபத்தில் அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்த படியே சென்றாள்,

“ஏய் ஐஸ்ஸு வா இங்க, எங்க போற, காலு சுடு டீ, வா இங்க” என்று அவளை அழைத்தேன். அவள் திரும்பி கூட பார்க்கமால் சென்றுக் கொண்டே இருந்தாள். சின்ன பசங்க அதுவும் பெண் பிள்ளைகளின் திமிறில் கூட ஒரு வித அழகு இருக்கிறது, அவளுக்கு எவ்வளவு கோபம், அழுத்தம் இருந்து இருந்தால், ஓட கூட முடியாத நிலையில் இருக்கும் தரையில் அவள் நடந்து சென்று இருப்பாள். ஐஸ்ஸு எனக்குள் இன்னும் இன்னும் நெருக்கம் ஆனாள். எதிரில் நமுட்டு சிரிப்புடன் அனு நின்றுக் கொண்டு இருந்தான்.

“சரி விடு மச்சான், அவ போகட்டும், சரி நான் 1.......2.......3 சொல்றேன். நம்ம இரண்டு பேரும் படிக்கட்டுக்கு ஓடி விடலாம் என்ன?”

“உன் வாயை அப்படியே கிழித்து விடுவேன், நீ போய்க்கோ, எனக்கு போக தெரியும்”

“போன வாட்டி சும்மா விளையாட்டுக்கு செய்தேன் மச்சான்”

“மச்சான்னு கூப்பிடறத முதல்ல நிறுத்து சனியனே”

“சரி சித்தப்பா நான் 1...2..3 சொல்லட்டுமா சித்தப்பா?” என்றான். இவனை எந்த நேரத்தில் அவங்க அம்மா பெத்து போட்டு இருப்பாங்கன்னு தெரியலை, தவளை மாதிரி வாயை திறந்தால் மூடவே மாட்றான்.

“சரி சொல்லி தொலை”

“ ........1.....” என்று ஒரு நம்பரை மட்டும் சொல்லி, 2......3... எதுவும் சொல்லாமலே ஓடிவிட்டான் அந்த எருமை மாடு. அதுவும் சிரித்துக் கொண்டே

“ஹா ஹா தொப்பி தொப்பி” என்று சொல்லிக் கொண்டே ஓடினான். என்னுடைய எரிச்சல் எல்லையை கடந்தது, எவ்வளவு செலவானாலும் இவனை அடியாட்களை வைத்தாவது கடத்தி கொண்டு போய் எதாவது
காட்டில் விட்டுவிட வேண்டும் என்று தோன்றியது.

(தொடரும்.....)

அறிஞர்
16-06-2009, 05:03 PM
சின்னப் புள்ளைகளோடு... கலாய்ச்சு... சிறுபிள்ளையாக விளையாடியிருக்கிங்க...
அருமை மூர்த்தி..

அமரன்
16-06-2009, 06:53 PM
சுகமா தக்ஸ்!

தேர்வுக்காலம் இனிமையாகக் கழிந்ததா? இணைய இணைப்புச் சரியாகி விட்டதா?

இந்தத் தொடரை மீண்டும் நீங்கள் தொடரும் வரை விடுபட்ட பாகங்களையும் படிப்பதில்லை என்ற உறுதியுடன் இருந்தேன். விட்ட இடத்திலிருந்து தொடர ஆரம்பித்து வாசிக்கும் வாய்ப்பை வழங்கி விட்டீர்கள். நன்றி.

படித்து விட்டு மீதி.

ரங்கராஜன்
17-06-2009, 09:48 AM
பாகம் - 9

அவன் கத்திக் கொண்டே ஓட அவன் பின்னாடியே நானும் ஓட, படிக்கட்டில் வந்து அவன் நின்றான், சூட்டில் ஓடி வந்த பாதங்களுக்கு அவன் ஓய்வு கொடுக்க. நானும் அவனை வந்து அடைந்தேன், என் பாதங்களும்
ஓய்வை எதிர்ப்பார்த்தது. மூச்சு இரைத்தது இருவருக்கும், கண்களால் நான் அவனை எரிக்க, அவன் தன்னுடைய சிரிப்பால் அதில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தான். இவன் சிரிப்பை பார்த்தவுடன்
எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

“டேய் மூச்சு வாங்குது டா, கீழே போய் கொஞ்சம் தண்ணி எடுத்துனு வரீயா” என்றேன் தாகத்தோடு.

“ரொம்ப தண்ணி தாகம் எடுக்குதா?”

“ஆமா டா”

“சரி எடுத்துனு வரேன்” என்றான் உடனடியாக, பின் அவனே தொடர்ந்தான்.

“ஆனா ஒரு கண்டிஷன்”

அவனை முறைத்துக் கொண்டு “என்ன???”

“நான் கீழே இருந்து தண்ணீ எடுத்துண்டு வரேன், ஆனால் அதுக்கு நீ என்னை கீழே தூக்கினு போய் விடணும்”

“...........”

“என்ன முறைக்கிற, நான் உனக்கு ஒரு ஹெல்ப் செஞ்சா நீ எனக்கு ஒரு ஹெல்ப் செய்யனும் அதான் மேனஸ் தெரியுமா?”

“டேய் தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கணும் டா, இல்லன்னா அது பாவம் டா”

“உதவி செஞ்சவுங்களுக்கு நீயும் திரும்பி உதவி செய்யாட்டா அதை விட பாவம் டா”

“நீ என்ன உதவி செஞ்ச எனக்கு, அதை நான் உனக்கு திரும்பி செய்ய”

“தண்ணி எடுத்துனு வந்து கொடுப்பேன் இல்ல”

“இன்னும் கொடுக்கலையே”

“அத கொடுக்க தான் உன்னுடைய ஹெல்ப் கேட்குறேன்”

“ஊஊ மூஞ்சி, நான் உன்னை கீழே தூக்கிக் கொண்டு போய் விட்டா, நான் கீழையே தண்ணி குடிச்சிக்க போறேன், அப்புறம் எதுக்கு உன்னுடைய ஹெல்ப் எனக்கு”

“அப்புறம் எதுக்கு நீ என்னை அப்ப மேல தண்ணி எடுத்துனு வர சொன்ன”

“ஐய்யோஓஓ....... சாமி....... ஆளை விடுடா எனக்கு தண்ணீயே வேண்டாம், வாயில நொறை தள்ளிக்கொண்டு சாவற நிலமையில இருந்தா கூட உன் கிட்ட நான் தண்ணீ வாங்கி குடிக்க மாட்டேன்”

“ஏண்டா இப்படி மாத்தி மாத்தி பேசற, நல்லவேளை நான் கீழே இருந்து தண்ணி எடுத்துனு வரவில்லை. இல்லன்னா நீ வேண்டான்னு சொல்லி இருப்ப, இவ்வளவு தூரம் நான் வந்தது வேஸ்டாயி இருக்கும். அதனால் தான் நான் எடுத்துனு வரவில்லை”

“ஐய்யோஓஓஓஓஓ........... எப்பாஆஆஆஆஅ......... நீ கீழே போ, எனக்கு காது வலிக்குது உன்கிட்ட பேசி”

“நீ காதுல தான் பேசுவீயா?” சிரித்துக் கொண்டு.

“வாயை பாரு வங்காளவிரிகுடா மாதிரி விரியுது...............கீழே போய் தொலையே மூதேவி” அவனை நோக்கி கத்திக் கொண்டு எழுந்தேன்.

“இரு போறேன் ஸ்ரீதேவி” என்று சொல்லிக் கொண்டு கீழே இறங்கினான்.

நானும் அவனை தொடர்ந்து கீழே இறங்கினேன். அவன் அசுர வேகத்தில் கீழே அடுத்த மாடிக்கு இறங்கினான். அந்த தளத்தில் பல மூன்று ரூம்கள் இருந்தது, நான் வருவதற்குள் அங்கு இருந்த எதோ ஒரு
ரூம் கதவை சத்தமாக “டமடமடம” என்று கால்களால் உதைத்து விட்டு என்னை நோக்கி “மச்சான் மாட்டிக்கின போ” என்று சிரித்துக் கொண்டு அதே வேகத்தில் ஓடிவிட்டான். மாடி படிக்கட்டின் பாதி வழியில் இருந்த எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை
காரணம் அந்த தளத்தின் வெளி என்னை தவிற வேறு யாரும் இல்லை, அதுவும் நான் அந்த கதைவை நோக்கி சரியாக படிக்கட்டில் நின்றுக் கொண்டு இருந்தேன். இன்னும் சில வினாடிகளில் கோபத்துடன் திறக்கப்படும் கதவின் முதல் பார்வை என் மீது தான் படும், ஓடவும் முடியாது. ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புலப்படவில்லை
திரும்பவும் மாடிக்கு ஓடிவிடலாமா? இல்லை கீழே ஓடிவிடலாமா? இல்லை தலையை கலைத்துக் கொண்டு, சட்டையை கிழித்துக் கொண்டு பைத்தியம் போல “எனக்கு கல்யாணம்....... எனக்கு கல்யாணம்” என்று நடிக்கலாமா?.
ஒரு நிமிடத்தில் பல எண்ணங்கள். அந்த குட்டி சாத்தான் மெதுவாக கதவை தட்டி இருந்தாலாவது எதாவது சொல்லி சமாளித்து இருக்கலாம், ஆனால் அந்த குட்டி சாத்தான், எதோ தீவிரவாதிகளை வீடுகளில் தேடும் அதிரடிப்படைகள்
கதவை உடைப்பது போல எட்டி உதைத்து விட்டு ஓடி விட்டான். அப்படியே அவன் ஓடும் போது லாரி எதாவது எதிரில் வரக்கூடாதா? என்று நினைத்தேன்......................அப்படி நினைத்து இருக்ககூடாது தான் ....... ஆனால் மண்டபத்தின் படிக்கட்டில்
எப்படி லாரி வரும் என்ற நம்பிக்கையில் தான் அப்படி நினைத்தேன். திரும்பவும் மாடிக்கு போக மனம் இல்லாமல், கீழே ஓடவும் திடம் இல்லாமல். அந்த கதவு திறக்கும் வினாடி வரை என்னுல் பல எண்ணங்கள் ஓடியது. கதவு திறந்ததும் என்னை நோக்கி

“ஏண்டா நீ சோறு தான் சாப்பிடுற? எதுக்கு டா அப்படி கதவை தட்டுற”

“இல்லங்க நான் இல்ல அந்த சின்ன பையன் விளையாடும் போது தட்டி.....”

“ஏண்டா எருமைமாடு மாதிரி இருக்கீயே சின்ன பசங்க கூட என்னடா உனக்கு விளையாட்டு”

“ஹலோ கொஞ்சம் மரியாதையா பேசுங்க”

“சரி டெல்லி எருமை மாடு மாதிரி இருக்கீயே சின்ன பசங்க கூட ...........”

இன்னும் என்ன என்ன கேட்டு காரிதுப்ப போறாங்களோ கதவை திறந்ததும் என்று என்னுடைய மனதில் என்ன என்னமோ எண்ணங்கள் ஒடியது. சில வினாடிகள் கழித்து கதவு எதிர்பார்தது போலவே திறக்கப்பட்டது. நான் கதவை பார்க்காமல் எதிர்பக்கமாக
அந்த கதவுக்கு முதுகை காட்டிக் கொண்டு ரஜினிகாந்தின் எண்ட்ரீ சீன் போல திரும்பிக் கொண்டு நின்றேன். கதவு திறந்தது. எந்த பேச்சு குரலும் கேட்கவில்லை, யாரும் என்னை அழைக்கவில்லை, ஆனால் கதவை திறந்துக் கொண்டு
என்னை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் என்னுடைய தலைக்கு பின்னாடி இருக்கும் அறிவுக்கண் உணர்த்தியது. அந்த உருவம் என்னை அழைக்கவில்லை, எவ்வளவு நேரம் தான் நான் திரும்பியப்படி
நிற்பது. என்னுடைய வேஷ்டி வேறு போஸின் காரணமாக அவிழ்ந்து விடும் அபாயத்தில் இருந்தது, ரஜினிகாந்தின் எண்டரீ போஸில் இருந்து, அது நமிதாவின் எண்ட்ரீ போஸாக மாறுவதற்குள் திரும்பி விடலாம் என்று திரும்பினேன், வேஷ்டியை கையில் பற்றிக் கொண்டு. திரும்பினால் 20 வயதாகும் அழகான ஐயங்கார் வீட்டு பெண் நின்றுக் கொண்டு இருந்தாள்.
ஒரு நிமிடம் எனக்குள் பறை மோளங்களின் இசைகள் கேட்டது “டண்டணக்கடி டணக்குணகடி டண்டணக்கடி டணக்குணகடி டண்டணக்கடி டணக்குணகடி” என்று (ஏன் எப்போ பார்த்தாலும் வயலினும், வீணையும் மட்டும் தான்
கேட்கவேண்டுமா?). என்னை அறியாமல் நான் முகத்தை துடைத்துக் கொண்டேன், தலையை கை விரல்களை சீப்பாக மாற்றி சீவிக் கொண்டேன். அந்த பெண்ணின் முகத்தை நன்றாக கவனித்தேன்.
அழகாக எண் தடவி சீவிய கருமையான முடி, அதுவும் ஒரு சில முடிகள் அவளின் நெற்றியில் விழுந்து இருந்த அழகு இருக்கே, ..........ம்ம் என்னத்தை சொல்ல. அப்புறம் அவளின் கண்கள் நன்றாக தூங்கி எழுந்து ஒரு சுற்று பெருத்து இருந்தது அவளின் இமைகள், அந்த தூக்கம் அவளின்
அந்த கண்களின் இன்னும் மிச்சம் இருந்தது, சொறுகிக் கொண்டு இருந்தது. அதை பார்த்தால் நமக்கு போதை ஏறி விடும், அப்புறம் அந்த மூக்கு, ஏழாம் நம்பரை கவுத்து போட்டது போல ஷார்ப்பான மூக்கு, அதில் சரியான இடத்தில் குத்தப்பட்டு இருந்த மூக்குத்தி, அப்புறம் ஸ்ராபெரியை போல சிவந்த உதடுகள், அந்த
கன்னம் இருக்கிறதே கன்னம், பலமாக காத்து அடித்தால் கூட தளும்பும், அந்த அளவிற்கு சாஃப்ட்டாக இருந்தது, முகத்தின் கீழ் பகுதி நல்ல கூறாக பாய்மர கப்பல் போல இருந்தது. மிக மிக கலைஞனத்துடன் செய்யப்பட்ட முகம்
அது. அப்படி கீழே வந்தேன் அந்த முகத்தை தாங்கும் கழுத்து எந்த வித எக்ஸ்ட்ரா சதையும் இல்லாமல் மிக அழகான மஞ்சல் நிறத்தில் இருந்து, இன்னும் கொஞ்சம் கீழே வந்த என் கண்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.
அது தான் அந்த பெண்ணின் தாலி........................ எனக்குள் கேட்ட பறை மோளங்களின் சத்தங்கள், கரண்டு போனது டேப்பை போல அடுத்த நிமிடம் நின்றது”. தாலியை பார்த்தவுடன் கண்கள் அதற்கு கீழே போகவில்லை, பேக் டூ அவங்களின் முகம் வந்தது. அவங்க

“எஸ்” என்ன வேணும் என்பதை போல கேட்டாங்க.

“நோ நோ, அக்சுவலி....... தட்.... தட்........லிட்டில் பாய்.............(பதட்டத்துல இந்த இங்கிலிஷ் சனியன் வேற வந்து தொலைய மாட்டுது)”

“பரவாயில்லை தமிழ்லையே சொல்லுங்க” அப்படினு என்னை நோக்கி சொன்னாங்க அந்த பெண்மணி. இதுக்கு செருப்பால் இரண்டு அடி அடிச்சி இருக்கலாம் என்னை. நான் சுதாரித்துக் கொண்டு

“ஒண்ணும் இல்லங்க உங்க கதவை நான் தட்டல”

“சரி”

“அதை அந்த சின்ன பையன் தட்டிவிட்டான்”

“எந்த சின்ன பையன்”

“அனு”

“எந்த அனு”

“பாலாஜீயின் அக்கா பையன்”

“எந்த பாலாஜீ”

கலர் கலர் வாட் கலர் டூயு வாண்ட்?

பச்ச கலர்,

எந்த பச்ச?

மரப்பச்ச

எந்த மரம்?

மாமரம்

எந்த மா?

இப்படி ஒரு விளையாட்டு இருக்கு, அதை போல அந்த பெண்மணி எந்த பையன்?, எந்த அனு?, எந்த பாலாஜீ? என்று என்னையே திரும்பி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாங்க.

நான் கொஞ்சம் குரலை உயர்த்தியபடி

“இல்லங்க உங்க கதவை தட்டினது நான் இல்லை, ஒரு சின்ன பையன்” என்றேன்.

அதற்குள் உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு குடுமி ஆண் தன் தோளில் பையை மாட்டிக் கொண்டு கையில் ஒரு குட்டி குழந்தையை பொம்மை போல பிடித்துக் கொண்டு வெளியே பூட்டு சாவியுடன் வந்தார். அந்த பெண்மணி என்னிடம் பேச தொடங்கினாள்.

“எங்க கதவை யாரும் தட்டலையே, நாங்க வெளியே போறோம் கோயிலுக்கு” என்றாள் விழித்தபடி.

“யாருங்க இந்த ரூம் கதவை தட்டியது”

என்றது ஒரு குரல் நான் நின்றுக் கொண்டு இருந்த ரூமுக்கு நேர் எதிராக இருந்த ரூமில் இருந்து, ஆஹா................. ரூம் மாறி நின்று விட்டோம் போல என்று நினைத்துக் கொண்டு திரும்பி
அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று பார்த்தால் அது நம்ம ரயிலில் எனக்கு கீழே படுத்து இருந்த டகால்ட்டி மாமா. (ஞாபகம் இல்லையா உங்களுக்கு?, என்னை டி.டி.ஆர் கேட்கும் பொழுது கம்முனு இருந்தாரே,
நான் கூட அவரின் காலை வேண்டும் என்று மெதித்து என்னுடைய படுக்கைக்கு மேலே போய் படுத்தேனே, அவரே தான்). முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க என்னை முறைத்தபடி நின்றுக் கொண்டு இருந்தார்.
இந்த ஆளு நல்ல நேரத்திலே நான் சொல்வதை நம்ப மாட்டான், இந்த பிரச்சனையை எப்படி சொல்லி இந்த ஆளுக்கு புரிய வைப்பது என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே, அவர் என்னை நோக்கி கத்த
ஆரம்பித்தார்

“நீங்க எல்லாம் படிச்சவாள் தானே”

“இல்ல மாமா இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிக்கலை, உங்க கிட்ட இருக்கா?” என்று எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்த அவரின் முகத்தில் கொஞ்சம் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டேன்.

(தொடரும்........)

samuthraselvam
17-06-2009, 10:29 AM
ஹா ஹா சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியே வந்திருச்சு..... எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது..... கிரேட்..

மதி
18-06-2009, 08:44 AM
முடி....ல

samuthraselvam
18-06-2009, 10:42 AM
முடி....ல

என்னது... இந்த வயசிலையே முடி இல்லையா? இது ரொம்ப ஆபத்தாச்சே...நல்ல மருத்துவரிடம் காட்டுங்க... நான் கூட சிரிச்ச வயிறு வலிக்குதுன்னு மருத்துவரிடம் சென்றேன்...

விகடன்
21-06-2009, 06:10 AM
இரண்டு வாண்டுகளின் குறும்போடு காலம் கழிக்கிறீர்கள். அதில் அனுவின் குறும்பினை எதிர்கொள்கையில் கடுப்பேத்தினாலும், பின்னர் அதுதான் சுகமான அனுபவங்களாக இருக்கும். பாகம் ஏழினைப்படித்து முடித்தவுடன் ”முற்றும்” எனும் சொலினை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். ஏதோ அனுவையும் ஐஸ்ஸையும் திடீரென்று பிரிந்து வந்தது போல... .

இந்தத்திரி முடிவின்றி தொடர வாழ்த்துக்கள்.

பாகம் ஏழினை முற்றும் என்று முடித்துவைத்திருக்கிறீர்கள். அதற்கும் தொடரும் என்று போட்டுவிடவும்.

ரங்கராஜன்
29-06-2009, 02:18 PM
பாகம்- 10

“நீங்க எல்லாம் படிச்சவாள் தானே”

“இல்ல மாமா இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிக்கலை, உங்க கிட்ட இருக்கா?” என்று எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்த அவரின் முகத்தில் கொஞ்சம் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டேன்.

நான் சொன்னதில் கொஞ்சம் கோபமான அவர், உதடு துடிக்க

“பெரியவா சின்னவா ந்னு மரியாதையே இல்லாம போச்சு, இந்த காலத்து பசங்களுக்கு” என்றார்.

என் மனதிற்குள் அவர் சொன்ன கருத்தை நான் ஆமோதித்தேன், உண்மை தான் மாமா இந்த அனு பிலக்கா பையன் என்னை மச்சான், வாடா போடான்னு கூப்பிடுறான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் என்னை குறிப்பிட்டு சொன்னார் அவர் வருத்தப்பட்டதை என் கண் எதிரில் பார்த்தேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, என்ன இருந்தாலும் அவர் பெரியவர் வயதிலும் சரி, அனுபவத்திலும் சரி.

“சாரி மாமா விளையாட்டுக்கு சொன்னேன்”

“என்னிடம் உனக்கு என்ன விளையாட்டு”

“..............”

“ஆள் வளர்ந்தா மட்டும் போதாது கொஞ்சம் புத்தியும் வளரனும்”

“............”

“நான் உன்னை ஆரம்பத்தில் இருந்து கவனித்துக் கொண்டு தான் வருகிறேன், எப்ப பார்த்தாலும் என்ன ஒரே ஆட்டம்”

“............”

“என்ன காலேஜ் டூருக்கா வந்து இருக்கேள், கல்யாணத்துக்கு தானே வந்து இருக்கேள். மத்தவாளுக்கு உபத்திரம் கொடுக்காம இருக்கணும் ஒரு சென்ஸ் வேண்டாம்”

“............”

என்று என்னை முறைத்தபடியே கதவை டமார் என்று சாத்திக் கொண்டார். எதிர் ரூமில் இருந்த அந்த பெண்மணியும் அவளின் கணவரும் என்னை பார்த்துக் கொண்டே சென்றனர். எதோ அவரின் பர்ஸை நான் திருட முயற்சிக்கும் பொழுது அவர் என்னை கையும் களவுமாக பிடித்துவிட்டதை போல திட்டிவிட்டார். இறங்கிச் சென்ற அந்த தம்பதிகளும் அதை தான் நினைத்து இருப்பார்கள். இனிமே இந்த மாதிரி சின்ன பசங்க கூட விளையாட கூடாது, வரவன் போறவன் எல்லாம் கோயில் மணியை போல, என்னை அடித்து விட்டு போகிறார்கள் என்று நொந்து போனேன். நேராக என்னுடைய ரூமுக்கு சென்றேன். கதவு திறந்து இருந்தது, என் முகம் மாறியது, ஆஹா பை எல்லம் வைத்து இருந்தோம், அதில் பர்ஸு இருந்ததே, முக்கியமா சிகரேட் பாக்கெட் அதில் தானே இருக்கு, என்று நினைத்தபடியே கதவை பொறுமையாக திறந்து பார்த்தேன். யாரும் இல்லை ஆனால்

“குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று சத்தம் மட்டும் வந்தது, கதவை முழுமையாக திறந்து பார்த்தேன். ஒரு ஐயங்கார் மாமா முகம் பூரா முடியாக தூங்கிக் கொண்டு இருந்தார். உடம்பில் சட்டை இல்லை,
நெற்றியில் நாமம் இருந்தது, அந்த முகத்தில் நெற்றி மட்டும் தான் தெரிந்தது, ஆளு அந்த பாதி அறையை கவர்ந்துக் கொண்டு படுத்து இருந்தார். யாரு இவரு, எதுக்கு நம்ம ரூமில் வந்து படுத்து இருக்கார்? இங்க படுத்து இருந்த பாலாஜி கடன்காரன் எங்கே?. அவர் முகத்தை ஒரு முறை பார்க்க முயற்சி செய்தேன், ஆனால் ஒண்ணுமே தெரியவில்லை வெறும் முடி மட்டும் தான் தெரிந்தது. அவர் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தார், இல்லை இல்லை எல்லார் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு இருந்தார், அந்த அளவுக்கு கொறட்டை சத்தம். அவர் விடும் கொறட்டை சத்தத்தில் என்னுடைய வேஷ்டியே அவிழ்ந்து விடும் போல இருந்தது, அந்த அளவுக்கு பவர்புல்லான கொறட்டை, நானும் அப்படியே கொஞ்சம் மல்லாந்தேன் தரையில், கண்களை மூடினேன்

“குர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”

என்ன இந்த ஆளு ஆட்டோ மெக்கானிக் ஷேட்டில் வேலை செய்றவனா?. கொஞ்சம் கண்களை மூடிக் கொண்டு அந்த சத்தத்தை கேட்டால் எதோ புலி அல்லது சிங்க கூண்டில் மாட்டிக் கொண்டு இருக்கும் ஆட்டுக்குட்டியை போல உணர்ந்தேன். அவரை பார்த்தேன் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது, அவர் தூங்கிக் கொண்டு இருந்தார், அதனால் அவர்கிட்ட போய் அவர் முகத்தை பார்க்க முயன்றேன். என் பின்னாடி இருந்து ஒரு குரல்

“டேய் என்னடா பண்ற” என்றது சத்தமாக.

நான் திடுக்கிட்டு திரும்பி பார்க்கவும், அதற்குள் அங்கு படுத்துனு இருந்த மாமா தன்னுடைய சிவந்த கண்களை திறந்து பார்த்தார் (நான் கடவுள் படத்தில் ஆர்யாவின் ஆரம்ப காட்சியில் தலைகீழாக
நின்றுக் கொண்டு கண்களை திறப்பாரே அப்படி). ஒரு நிமிடம் நாங்கள் இருவரும் கண்ணோடு கண் பார்த்துக் கொண்டோம், அவர் அலறி பிடித்து எழ, நான் கொஞ்சம் தூரம் தள்ளி உக்கார, பின்னாடி அந்த குரலுக்கு சொந்தகாரன் பாலாஜீ

“டேய் அவரு முகத்து கிட்ட என்னடா பண்ணிணு இருந்த?”

“சனியனே அத மெல்லமா கேட்க வேண்டியது தானே?, ஏண்டா அதுக்கு கத்துற, பாவம் மாமா முழுச்சுண்டார் பார்” என்றேன் சமாளிக்க, அவர் இவனை பார்த்து சிரித்தார். அவன் அவரிடம்

“சாரி மாமா சாப்பிட்டேலா?

“ஆஞாஞா, ஞாஞா” என்று சைகையில் தலையை சாப்பிட்டு விட்டேன் என்பது போல ஆட்டினார். பாலாஜி உடனே கிளிக் என்று சிரித்து விட்டான். எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. அந்த மாமா
ஊமைப்போல, அவர் பதில் சொன்ன விதத்தில் இந்த பாலாஜி பையன் அவரை பார்த்து சிரித்து விட்டான். எனக்கு ரொம்ப கஷ்டமாக ஆகிவிட்டது. நான் பாலாஜி தோளை தொட்டு

“டேய் என்ன டா இது, பாவம் அவர் முன்னாடியே சிரிக்காத டா, கஷ்டப்பட போறார்” என்றேன்.

“அவர் ஊமை டா, (அவரை பார்த்தான், அவர் பாலாஜியை பார்த்தபடி தன்னுடைய காதை சொறிந்தார், பாலாஜி என்னை திரும்பவும் பார்த்து) டேய் அவருக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது டா. அதான் சிரிப்பு வந்து விட்டது”

“அதுக்கு எதுக்கு டா சிரிப்பு வரணும்”

“உனக்கும் வரும் டா”

“உயிரே போனாலும் எனக்கு வராது டா”

“வரும், கண்டிப்பா வரும், கடைசியில உனக்கும் வரும்”

“சரி விடு, எப்படி இவருக்கு பேச முடியாம போச்சு”

“அது வந்து....”

“இரு இரு வெளியில் போய் பேசலாம்”

“ஏன் இங்கையே பேசினால் என்ன அவர் காதில் விழவா போகிறது” என்றான்.

“ஏண்டா இப்படி மனசாட்சியில்லாமல் கிண்டல் பண்ற”

“நீ ஏண்டா விக்ரமன் படத்துல வர ஹீரோ மாதிரி சீனை போடற”

“டேய் உன் குடும்பமே லூசு குடும்பம் டா, அந்த எமன் அனு ஒரு பக்கம் என்றால் நீ ஒரு பக்கம்........... உங்களால அந்த டகால்டி மாமாகிட்ட திட்டுவாங்கினேன் தெரியுமா? அந்த ஆளை நான் எதோ கல்லால அடிச்சது போல என்னை பார்த்தாலே லொல் லொல்லுனு குலைக்கிறான், இப்ப இவரை வேற நீ கிண்டல் செய்ற. பாவம் டா வாயில்லாத மனுஷனை............”

“உண்மையிலே அவரு பாவம் டா, பொண்டாட்டி விட்டுட்டு ஓடிப்போச்சுடா. தன்னுடைய பையனை தனியா ஒரு ஆளா நின்னு வளர்த்து இருக்கார்டா. நல்ல மனுஷன் டா” என்றான்

நான் படுத்துக் கொண்டு இருந்த அந்த ஊமை மாமாவை பார்த்தேன், ஆள் அழுக்காக இருந்தாலும் உள்ளுக்குள் அழுக்கு இல்லை. அமைதியாக படுத்து இருந்தார், இந்த கடவுள் ஏன் இப்படி
எதாவது எல்லாருக்கும் ஒரு சோகத்தை கொடுத்துவிடுகிறான். அப்படி கொடுத்து விட்டாலும் ஏன் என் கண்ணில் படவைக்கிறான் என்று புரியவில்லை.

“ப்ப்ச்ச் பாவம் டா அவரு, அவர் பையன் என்னடா பண்றான்”

“பாயை பிராண்டுவான், சாதத்தை சுவற்றில் அடிப்பான், கிட்டே போனா கடிப்பான்” என்று சிரித்தான்.

“டேய் ஒழுங்கா சொல்லுடா, சிரிக்காம சொல்லு நீ சிரிப்பதை பார்த்தால் எனக்கு பத்திக் கொண்டு வருது”

“டேய் உண்மையை தாண்டா சொல்றேன், அவரு பையன் லூசு டா”

“எண்டா சொல்ற”

“பைத்தியம் டா”

“உண்மையாவா டா”

“சத்தியமா லூசுன்னா பைத்தியம்னு தாண்டா அர்த்தம்” என்று சிரித்தான்.

“அறிவு.கெட்........(என்று தொடங்கும் ஒரு கெட்ட வார்த்தையின் ஆரம்பத்தோடு பேசினேன்) எதுக்கு டா சிரிக்குற”

“வருது சிரிக்கிறேன்” என்று மேலும் சிரித்தான்.

“டேய் அவரு காதில் விழப்போறது டா சிரிக்காதடா, சிரிக்காத டா லூசுப்பயலே........... உனக்கு போய் எவனோ பொண்ணு தரான் பாரு, அவனை செருப்பால அடிக்கனும்” என்றேன் கோபமாக. அதற்கு இன்னும் பலமாக சிரித்தான் அவன். கீழே படுத்து இருந்த மாமா என்னை பார்த்து வந்து என் தோளில் கையை போட்ட படி

“ஏண்டா பாலாஜி அம்பி தான் அத்தனை முறை சொல்றானே, எதுக்கு சிரிக்கிற. அதுவும் ஊமையான என்னை பார்த்து எதுக்கு சிரிக்கிறடா, அதுவும் காது வேற எனக்கு கேட்காது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார், பாலாஜி பலமாக சிரித்தான். எனக்கு பயங்கர கோபம் வந்து விட்டது, அந்த ஆளுடைய குடுமியை பிடித்து அப்படியே முகத்தை சுவரில் வைத்து தேய்க்கலாம் என்று தோன்றியது. அந்த ஆளு நல்ல 12 லிட்டர் செளபாக்கியா வெட்கிரைண்டர் மாதிரி இருந்தார் இழுத்து எல்லாம் தள்ள முடியாது, புல்டோஸர் தான் வேண்டும். அதனால் அந்த ஐடியாவை விட்டு விட்டு பாலாஜியை பார்த்தேன், அவன் அவரின் தோள் மீது கையை போட்ட படி

“மாமா நான் சொல்லல்ல அந்த ஹீரோ இவன் தான், எப்படி ஃப்பீல் பண்ணான் பார்த்தீயா, பிற்காலத்துல சமூகசேவையில பெரிய மேடம் மேரி கியூரியா வருவான்” என்று சிரித்தான். எனக்கு எரிச்சல் தாங்க முடியவில்லை,

என்னை கிண்டல் செய்கிறான் அதுவும் சம்பந்தம் இல்லாத அந்த செளபாக்கியா வெட்கிரைண்டர் எதிரில், அதுவும் சமூக சேவைக்கு சம்பந்தம் இல்லாத மேடம் மேரி கியூரியின் பெயரை வைத்து, அன்னை தெரேசா என்று சொல்லி இருந்தாலும் பரவாயில்லை........... அப்ப கூட என்னை பெண்களுடன் ஒப்பிட்டு சொல்றான். அமைதியாக இருந்தேன் அவனை பார்த்தேன். அந்த கிரைண்டர் மாமா என்னிடம் வந்து என் தோளில் கை போட்டபடியே

“டேய் சும்மா ஒரு தமாசுடா, ஜாலிக்காக தானே பண்ணோம்” என்று என்னுடைய கன்னத்தை கிள்ளினார்..........ஜாலிக்காகவாம், ஜாலிக்கு அப்படியே மொட்டை மாடியில் இருந்து குதிக்க வேண்டியது தானே டா எருமைமாட்டு மாம என்று, வாய் வரை இருந்த வார்த்தைகள் வெளியே வரவில்லை காரணம் அந்த கிரைண்டரின் உரல் என் தோள் மீது இருந்தது, எதாவது சொல்லப்போய் என்னை அப்படியே அரைத்துவிட்டால் என்ன செய்வது என்று அமைதியானேன். அவரே பின்பு தொடர்ந்தார்

“சரி டா பாலாஜி ஆத்துக்காரி வந்து இருப்பா, நான் போய்ட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைச்சுண்டு வந்துடுறேன்” என்று வெளியே புறப்பட்டார். பாலாஜீயை முறைத்தேன்

“ஏண்டா அப்ப அந்த ஓடிப்போன பொண்டாட்டி, மூளை வளர்ச்சியில்லாத பையன் கதையும் பொய் தானா”

“அது சத்தியம் டா”

“அப்புறம் யாரோ ஆத்துக்காரின்னு போதே அந்த கிரைண்டர்”

“டேய் நான் சொன்னது இந்த மாமாவின் கதை இல்லடா அது அந்த டகால்டி மாமாவின் கதை டா” என்றான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

(தொடரும்.......)

விகடன்
30-06-2009, 04:19 AM
இரண்டு வாண்டுகளையும் மீண்டும் காணலாம் என இந்தப் பகுதிமுழுவதும் தேடினேன். ஏமாற்றந்தான் மிஞ்சியது...

அறைக்கு வந்தபோது கதவு திறந்திருந்ததாக சொல்லியிருந்தீர்களே. உங்களுடைய பொக்கிசங்கள் எல்லாம் தவறாது கிடந்தனவா?

ரங்கராஜன்
30-06-2009, 05:29 AM
இரண்டு வாண்டுகளையும் மீண்டும் காணலாம் என இந்தப் பகுதிமுழுவதும் தேடினேன். ஏமாற்றந்தான் மிஞ்சியது...

அறைக்கு வந்தபோது கதவு திறந்திருந்ததாக சொல்லியிருந்தீர்களே. உங்களுடைய பொக்கிசங்கள் எல்லாம் தவறாது கிடந்தனவா?


நன்றி விராடன்

எனக்கு இந்த பகுதி அந்த வாண்டுகள் இல்லாமல் பிடிக்கவில்லை, தொடர்ந்து படித்து ஊக்கம் அளித்துவரும் உங்களுக்கு நன்றி

என்னுடைய பொக்கிஷங்கள் பத்திரமாக இருந்ததா என்று பின் பகுதியில் சொல்கிறேன்

samuthraselvam
30-06-2009, 06:10 AM
ஓஓஒ.... எனக்கு தெரிந்து பர்சில் பணம் மட்டும் தான் வைப்பார்கள்...

நல்ல நகைச்சுவையா எழுத உங்களை அடிச்சுக்க ஆளில்லை அண்ணா....

அருமை தொடருங்கள்... அனுவும் ஐஸும் எங்கே?

ரங்கராஜன்
30-04-2010, 08:35 AM
அனைவருக்கும் வணக்கம், இந்த உண்மை நிகழ்ச்சியை படித்தவர்கள் மனதில் கண்டிப்பாக இந்த கதையில் இருக்கும் எதாவது ஒரு கதாபாத்திரமாவது கண்டிப்பாக மனதில் இருந்து நீங்காமல் இருக்கும்.

ஐஸ்வர்யா
அனிரூத்
பாலாஜி
ஐயர் மாமா
வீட்டை விட்டு வந்த பாட்டி

இப்படி யாராவது ஒருத்தர் கண்டிப்பாக நினைவில் இருப்பார்கள்............ ஆனால் இந்த கல்யாணத்தில் நான் அதிகம் விவரிக்காத ஒருவர் நண்பர் பாலாஜியின் மனைவி. நல்ல பெண், சாந்தமான பெண் இருவரும் நல்ல ஜோடி............இருவரும் நன்றாக வாழ்கிறார்கள்........ இதுவரை நேரில் இதன் பின் நினைவில்..........

இவ்வளவு நாள் கழித்து நான் ஏன் இப்போது அவரை பற்றி வர்ணிக்கிறேன்?????????????????????

இப்போது பாலாஜியின் மனைவி உயிருடன் இல்லை, நான் இந்த வரிகளை அடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அவர் இறந்து விட்டார். இதய கோளாறாம்................. என்ன ?????????? கோளாறாக இருந்தால் என்ன, கல்யாணம் ஆகி கொஞ்ச நாளுக்கு இப்படி ஏன் ஆண்டவன் அவர்களை பிரிக்க வேண்டும்......... இதற்கு இருவரையும் சேராமலே வைத்து இருக்கலாமே.

வயிற்றில் பிள்ளையை தாங்கி சென்ற என் சகோதிரியின் பிரிவை என் நண்பன் எப்படி தாங்கிக் கொள்ள போறானோ, நினைத்தாலே மனது கணக்கிறது.....

வாழ்க்கை அனைவருக்கும் ஒரு புதிரை வைத்து இருக்கிறது.

Akila.R.D
30-04-2010, 08:41 AM
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...

பாரதி
30-04-2010, 08:49 AM
ஆ......!
என்ன கொடுமை இது? மிகவும் வருந்துகிறேன்.
படிக்கும் போதே மனம் கனக்கிறதே... என்ன வாழ்க்கை..?

ஹும். உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள். நண்பர் பாலாஜிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதல்களை அளியுங்கள். மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைப்பாருங்கள்.

மதி
30-04-2010, 09:23 AM
மனதிற்கு மிக கஷ்டமான செய்தி. பாலாஜி எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாரோ..? முதலில் அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள். பக்கபலமாய் இருங்கள். அவர் மனைவியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

சிவா.ஜி
30-04-2010, 09:34 AM
காலம் சில சமயங்களில் காலனாக மாறி வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. ஆனால் அதே காலம்தான் நல்ல மருந்தாகவும் இருக்கிறது.

நண்பர் பாலாஜியின் துயரம் கொடுமையானது. அவரது துயரத்தைக் காலமும், நல்ல உறவுகளும் போக்கட்டும்.

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரங்கராஜன்
30-04-2010, 02:43 PM
உடனடியாக தங்கள் அனுதாபங்களை தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டு அறிந்த தாமரை அண்ணனுக்கு கூடுதல் நன்றிகள்.


இப்போழுது தான் அனைத்து இறுதி சடங்குகளும் முடிந்தது. ஒரு வருடம் பாலாஜியுடன் வாழ்ந்தவள், இப்பொழுது அவன் கையில் ஒரு சின்ன பானையில் சாம்பலாய் இருக்கிறாள்......... பாலாஜி அதை முறைத்து பார்த்த படியே இருந்தான். அவன் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தவில்லை, மனதில் அவ்வளவு பாரம்....... ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் அவன் மனதில் அலை பாய்ந்துக் கொண்டு இருக்கிறது.


போன வாரம் தான் தங்களுடைய முதல் ஆண்டு கல்யாண நாளை கொண்டாடி இருக்கிறார்கள், அதுவும் மருத்துவமனை ICU வில்..........

பத்து நாட்களாக உடல்நலக்குறைவாக பாலாஜியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து இருக்கிறாள். தினமும் ஒரு கோளாறு என்று அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்,,, ,உண்மையில் என்ன அவளுக்கு என் என்றே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.......... லங்ஸில் பிராபளம், பிரைன் பிவர், குடல் புண் இப்படி ஏராளமான காரணம் சொல்லி, நூற்றுக்கணக்கான மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார்கள். நேற்று இரவு வந்து எந்த பிரச்சனையும் இல்லை, இன்னும் இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகிடுவாங்க என்று சொல்லி இருக்கிறார்கள்.......... இன்று காலையில் அவள் ரத்த வாந்தி எடுத்து இறந்து விட்டாள்.

நேற்று இரவு பணி பார்த்து விட்டு இன்று உறங்கிக் கொண்டு இருந்தேன், மதியம் சாப்பிடுவதற்காக எழுந்தேன். செல்லை சைலண்ட் மோடில் வைத்து இருந்ததால், எதாவது கால் வந்து இருக்கா என்று பார்க்க செல்லை எடுத்தேன். ஒரு மெசெஜ் மட்டும் வந்து இருந்தது.

அதில் " என்னுடைய மனைவி இறந்து விட்டாள், மாரடைப்பு காரணமாக" என்று அவனுடைய நம்பரில் இருந்தது வந்து இருந்து. ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. அவனுக்கு போன் செய்தேன், கடவுளே அப்படி எதுவும் இருக்க கூடாது என்று, போனை எடுத்தவன் அதை ஊர்ஜிதம் செய்தான். இடியாக இறங்கியது அந்த செய்தி.

மனம் மிகவும் கனத்து போனது, அவனுடைய கல்யாணத்திற்கு சென்றது இன்னும் என்னுடைய மனதில் பசுமையான நினைவாக இருக்கிறது. இந்த பயணம் எனக்கு பல மனோதிடத்தையும், வாழ்க்கையின் பல புதிர்களையும் புரியவைத்த பயணம் அது......... அதனால் தான் அந்த பயணத்தை மன்ற உறவுகள் அனைவரும் ரசிக்க வேண்டும் என்று இந்த திரியை தொடங்கினேன். ஆனால் ஆண்டவன் சத்தியமாக இந்த திரியில் இப்படி ஒரு செய்தியை பதிப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

ஸ்ரிரங்கத்தில் இருந்து பெண்ணின் பெற்றோர்கள் வந்து இருந்தார்கள், வயதானவர்கள். ஒரு பெண் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்து, ஆளானப்பின் சடங்கு செய்து, அவளை நெறி தவறாமல் அடைகாத்து, பூ வாங்கி பொட்டு வாங்கி, பட்டுத்துணி உடுத்தி, ஊரெல்லாம் அலைந்து மாப்பிள்ளை பார்த்து, லட்ச கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து வைத்த பெண் இப்போது பிணமாக அவர்கள் முன்னிலையில் .............. அவர்களின் உணர்வை எப்படி வார்த்தைகளில் வடிக்க இயலும். "அடியே செல்லமே.........." என்று அந்த தாய் கதறிக் கொண்டு அவள் கட்டி அணைத்தாள், அவளை கட்டி அணைக்க முடியாதபடி ஐஸ்பெட்டி இருவரையும் தடுத்தது. மகள் உள்ளே குளிரில் படுத்து கிட்ட, தாய் வெளியே முழு மன உஷ்ணத்தில் அவளை பார்த்துக் கொண்டு இருந்தாள். தந்தையால் அழுவதற்கு கூட த்ரானி இல்லை. வயதானவர்களுக்கு இந்த கஷ்டம் வரவேக்கூடாது.

பாலாஜிக்கு கல்யாணம் செய்த ஐயர் தான், அவன் மனைவியின் இறுதி சடங்கையும் செய்தார். சுமங்கலி என்பதால் அவளுக்கு பொட்டு வைத்து பூ வைத்து, பட்டுதுணி உடுத்தி மந்நிரங்கள் ஓத அவளை எடுத்து பாடையில் வைத்தனர்.

அனைத்து சடங்குகளும் முடிந்த பின், அவளை மின்தகன மேடையில் வைத்து வெட்டியான் உள்ள தள்ளினான். கருவறைக்குள் இருந்து வந்த தன் குழுந்தையை பார்த்து வலியுடன் சந்தோஷப்பட்ட அந்த தாயும் தகப்பனும் தன் குழந்தை தீயுடன் கரைவதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.................. தன் குழுந்தை கடவுளி்ன் காலடியில் சென்று விட்டதாக ஒப்பாரி வைத்து அழுதனர்.

கடவுள் ஏன் இந்த சின்ன பெண்ணை, அதுவும் கல்யாணத்தின் சுகத்தைகூட முழுமையாக அறிந்துக் கொள்ள வாய்ப்பு தராமல் இப்படி நட்டாத்தில் அழைத்துக் கொண்டு சென்று விட்டார். மரணம் இயற்கையானது தான், ஆனால் இந்த சின்ன வயதில் இறப்பது என்பது முற்றிலும் இயற்கைக்கு புரம்பானது.


ஒரு மணி நேரத்தில் அந்த பெண் ஒரு பானையில் சாம்பலாக வந்தாள். பாலாஜியிடம் அதை தந்தார்கள், அவன் வைத்த கண் வாங்காமல் அந்த பானையில் உள்ள சாம்பலையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் மனைவி இறக்கும் போது அவள் 3 மாதம் கற்பமாக இருந்தாள்.................... பாலாஜி அவன் மனைவியின் சாம்பலில், அவன் குழந்தையை தேடிக் கொண்டு இருக்கிறான்.............

கடவுள் மிக கொடூரமானவன்.............

மதி
30-04-2010, 02:54 PM
உண்மையிலேயே மிக கொடுமையானவன்... பாலாஜியின் நிலையை நினைக்கவே பயமாய் உள்ளது... தக்ஸ்... நன்றாக கவனித்துக் கொள்... முக்கியமாக அழ சொல்..