PDA

View Full Version : பித்துப் பிடித்த மனசு.



அமரன்
04-05-2009, 09:31 AM
சதுரவடிவான திடல். திடலின் ஒரு மூலையில் இருபதடியில் ஒரு தகரக் கொட்டகை. நாற்புறமும் மூடப்பட்டு மேற்கூரையிடப்பட்ட அந்தக் கொட்டகை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதி அலுவலகம் ஆக்கப்பட்டிருந்தது. மறுபகுதியில் மக்கள் பார்க்கக் கூடியவாறு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அதில் நான்கு இளைஞர்கள் படுத்திருந்தார்கள். கொட்டகைக்கு முன்னால் "சாகும் வரை உண்ணா விரதம்" என்ற அறிவிப்புப் பலகை. அந்த இளைஞர்களைப் பார்த்துக்கொண்டும் தமக்குள் கதைத்துக்கொண்டும் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முகங்களுடன் மக்கள் குழுமி நின்றனர்.

திடலின் நடுநாயகமாக ஒரு தடாகம். தடாகத்தின் நடுவில் சொல்லும்படியான உயரமுடைய சிலை ஒன்று. அதிலிருந்து வீழ்ந்த நீரை தடாகம் ஏந்திக்கொண்டிருந்தது. அருவியின் அருகாமை தரும் குளுமை தந்துகொண்டிருந்தது அந்தத் தடாகத்தில் வீழ்ந்த நீரும். அந்தக் குளுமையை அனுபவித்தபடி சற்றே அதிகமாக கூடி நின்றனர் மக்கள்.
கொட்டகை அமைக்கப்பட்டிருந்த மூலைக்கு எதிர்மூலையில் ஒரு பந்தல். எங்களூரில் கோயில் திருவிழாக்களில் போடப்படும் சர்க்கரைப் பந்தலின் அளவில் இருந்தது. அதன் இரு மருங்கும் இரு சிறு குடில்கள். பந்தல் - தாகசாந்தி, பசிசாந்தி செய்யுமிடம். குடில்கள் - களஞ்சியம், அமைப்பாளர்கள் ஓய்விடம்.

திடலின் மூன்றாவது மூலையில் அதாவது உணவுப் பந்தலின் மூலையில் ஒரு மேடை.. மைக் செட்.. இளையவர்கள் குழாம்.. பேச்சாளர்கள்.. மேடைக்கு முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள். அவர்களின் முகங்களில் சோகங்களும், உணர்வு மேகங்களும். ஆங்காங்கே பதாகைகள், தமிழர் தேசியக் கொடிகள், வாழிடத் தேசக் கொடிகள், பேனர்கள், கோசங்களின் அதிர்வுகள் என அந்த இடமே புதுக்கோலம் பூண்டிருந்தது.

இடத்தைப் பார்த்திட்டீங்களா நண்பர்களே! அப்படியே உங்கள் கடிகாரத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள். (நேரம் : மாலை மணி ஆறு) நேரமாயிட்டுதுல்ல. நீங்க வீட்டுக்குப் போயிட்டு நாளைக்குக் காலைல ஆறுமணிக்கு வாங்க.

அன்புரசிகன்
04-05-2009, 09:42 AM
புரிந்தும் புரியாமலும் பேந்தவேண்டியுள்ளது...............


இடத்தைப் பார்த்திட்டீங்களா நண்பர்களே! அப்படியே உங்கள் கடிகாரத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள். (நேரம் : மாலை மணி ஆறு) நேரமாயிட்டுதுல்ல. நீங்க வீட்டுக்குப் போயிட்டு நாளைக்குக் காலைல ஆறுமணிக்கு வாங்க.
இப்போ நேரம் 1.30 தான் ஆகுது.

அமரன்
04-05-2009, 10:00 AM
நிகழ்வு – 1

மறுநாள் காலை ஆறு மணி. ஆயிரக்கணக்கில் மக்களிருந்த இடத்தில் நூறுபேர் மட்டும் இருந்தார்கள். அதில் சிலர் அங்கே போடப்பட்டிருந்த கஞ்சல்களை அகற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் வெளிநாட்டுப் பெண்மணி ஒருத்தியும் கலந்திருந்தாள். தன் பாட்டில் என்னமோ முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவரிடம் கேட்டேன் - "யாரது?" 'பிச்சைக்காரி; விசரி' என்று இரு பதில்கள் கிடைத்தன. அவளருகில் சென்றேன். என்ன சொல்கிறாள் என்று கூர்ந்தேன். ஏற்கனவே மொழிப் பிரச்சினை; அத்துடன் "விசரி" என்ற அவள் பெயர் - இந்த இரண்டும் சேர்ந்து அவளுடைய பேச்சை விளங்க முடியாமல் செய்தன. யாரோ அவசரமாக அழைக்க அப்பால் சென்றேன்.
நிகழ்வு - 2

இரு நாட்களாக உறக்கம் இல்லை. சரியான சாப்பாடில்லை. அதனால் அன்று பகல் முழுக்க வீட்டில் இருந்து விட்டு இரவு போல போனேன். ஐநூறு பேர் இருந்த திடலில் பிரவேசிக்கும் போதே அந்த வெள்ளை இனப்பெண் கொட்டகையின் முன்னாலிருந்த உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்புப் பலகையைப் பார்த்தபடி நின்றிருந்ததைப் பார்த்தேன். இப்போதும் அவள் உதடுகள் எதையோ உச்சரித்தன. கோயில் அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களாகத்தான் அவை என் காதில் விழுந்தன.

நிகழ்வு – 3
பேரிகை முழக்கமும், மக்களின் உணர்வு ததும்பும் கோசங்களும், இளையோரின் உற்சாகமும் திடலை நிறைக்க வீதியால் சென்ற ஒருவர் இந்த இரைச்சல் தனக்கு உளைச்சல் தருவதாகத் தகராறு செய்தார். தம்பக்க நியாங்களை, வேதனைகளை அவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருந்தனர் இளையோர் சிலர். அவரோ அதை எல்லாம் பொருட்படுத்தாது அதிகமாக எகிறினார். அவருடன் கூட்டுச் சேர்ந்துகொண்டார் பிச்சைக்கார வெள்ளைப் பெண்மணி. ஆனாலும் அவரின் பேச்சுகளை தகராறு செய்தவர் கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை. காவல்துறை வந்து அனுமதியுடன்தான் இது நடைபெறுகிறது என்று சொன்ன பிறகே பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மூன்றாவது நிகழ்வின் பின்னர் இளையவர் ஒருவருடன் உரையாடினேன். அந்தப் பெண்மணி என்ன சொன்னார் என்று கேட்டேன். "இனத்துவேசம்" என்று சட்டென்று பதில் வந்தது. "இனத்துவேசம்" என்ற ஒற்றை வார்த்தை என்னை கொதிக்க வைத்தது. (பழைய தழும்புகள் காரணமாக இருக்கலாமோ?) அந்தப் பெண்மணியின் விரும்பத்தகாத விம்பம் ஒன்று மனதில் பதிந்தது. குப்பை பொறுக்கியதையும், அவர் உச்சாடனங்களுக்கும் நானே அர்த்தம் கற்பித்துக்கொண்டேன். அதன் பிறகு அந்தப் பெண்மணி என் கண்களில் தென்படவில்லை. தென்பட்ட போது...

சிவா.ஜி
04-05-2009, 10:08 AM
சமீபத்திய நிகழ்வுகளின் தொகுப்பா அமரன். தினமும் ஒருமுறை நீங்கள் செல்லவேண்டிய கட்டாயத்திலும், நிகழ்வுகளை கவனித்த விதம் அருமை.

செய்திகளில் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த நாங்கள், இப்போது உங்கள் பார்வையின் மூலம் பார்க்கப்போகிறோம். தொடருங்கள்.

அமரன்
04-05-2009, 10:16 AM
ஏப்ரல் - 30..

சோர்வு மேலிட வீட்டில் அயர்ந்திருந்தேன். அலைபேசி கதறியது - "உண்ணாவிரதி ஒருவருக்கு உடல் நிலை மோசமடைந்து விட்டது".

உடனடியாக நிகழ்விடம் ஓடினேன். கொட்டகை முன்றலில் ஒரே கூட்டம். கொட்டகைக்குப் பக்கத்தில் விரைவு மருத்துவ வாகனம் தரித்து நிற்க உடல்நிலை மோசமான உண்ணாவிரதியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் மருத்துவ உதவியாளர்கள் (அரசாங்க சேவையாளர்கள்) இருந்தார்கள். உண்ணாவிரதியின் விருப்பு இன்றி அவரைத் தூக்கிக் கொண்டு செல்லக்கூடாது என்று கூட்டம் கூப்பாடு போட்டது.

"நாங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம்" என்று சொன்ன மக்கள் கூட்டத்துடன் கடமைக்காக மல்லுக் கட்டிக்கொண்டிருந்தனர் மருத்துவ உதவியாளர்கள். இந்தக் களேபரங்களுக்கு நடுவில் உண்ணாவிரதியைப் பார்த்தேன். முகம் கடுமையாகக் கறுத்திருந்தது. சட்டென்று சூழலில் அமைதி நிலவ அவதானித்தேன். மருத்துவ உதவியாளர்கள் உண்ணாவிரதியுடன் கதைப்பது என்று முடிவானதால் கொட்டகை மூடப்பட்டு கவுன்சிலிங் நடந்தது. கொட்டகைக்கு வெளியே..

"எங்கட போராட்டத்தை நசுக்க நினைக்கிறாங்க"

"இதெல்லாம் ஸ்ரீலங்காவின்ட சதி"

"இதைச் சும்மா விடக்கூடாது"

"எங்களுக்கு ஒரு முடிவைச் சொல்லாமல் இங்க இருந்து ஆரையும் தூக்கிக் கொண்டு போக விடக்கூடாது"

"இப்ப தூக்க விட்டால் இதுவரை போராடியதுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்"

இப்படிப் பல குரல்கள். சொல்ல முடியாதளவுக்கு, சொன்னவர்களை வெட்டிச் சாய்க்கும் அளவுக்கு வெறியூட்டும் குரல்களும் அடக்கம்.

இப்படி உண்டு கொழுத்த திடமான குரல்களுக்கு நடுவில் ஈனமாக ஒரு மாற்றாந்தாய்க் குரல்..

"இவை இறந்த பிறகும் வேதனை உங்களுக்குத்தான். அவையைப் போக விடுங்கோ. வேறை ஆக்கள் போராடுங்கோ"

அந்தக் குரலின் சொந்தக்காரி விசரி என்று சொல்லப்பட்ட வெள்ளை(மனசு)க்காரி.

உடல்நிலை பாதிக்கப்பட்ட உண்ணாவிரதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு மீதமிருக்கும் உண்ணாவிரதிக்கு உணவுப்பொட்டலம் கொடுக்க அந்தப் பித்து மனசு தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே உள்ளது

samuthraselvam
04-05-2009, 10:23 AM
உண்ணா விரதா இது.... உண்ணும் விரதமா?

கொஞ்சம் புரிந்த மாதிரியும் கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு...

அமரன்
04-05-2009, 10:23 AM
புரிந்தும் புரியாமலும் பேந்தவேண்டியுள்ளது...............

இப்போ நேரம் 1.30 தான் ஆகுது.

நீங்க நன்றாக ஒன்றி விட்டீங்க அன்பு.:)

அமரன்
04-05-2009, 10:26 AM
சமீபத்திய நிகழ்வுகளின் தொகுப்பா அமரன். தினமும் ஒருமுறை நீங்கள் செல்லவேண்டிய கட்டாயத்திலும், நிகழ்வுகளை கவனித்த விதம் அருமை.

செய்திகளில் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த நாங்கள், இப்போது உங்கள் பார்வையின் மூலம் பார்க்கப்போகிறோம். தொடருங்கள்.

தொகுப்பில்லை சிவாண்ணா. நிகழ்வின் வலிக்குமிறல்.

அமரன்
04-05-2009, 10:30 AM
உண்ணா விரதா இது.... உண்ணும் விரதமா? நாடகமா?.....

கொஞ்சம் புரிந்த மாதிரியும் கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு...

உன்னதமான நோக்கத்துக்கா உண்ணாதிருந்ததில் நாடகம் இல்லை லீலுமா.

சிவா.ஜி
04-05-2009, 10:30 AM
தொகுப்பில்லை சிவாண்ணா. நிகழ்வின் வலிக்குமிறல்.

புரிகிறது அமரன். உள்ளக்குமுறலை சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ள உறவுகள் உள்ளோம்.

அமரன்
04-05-2009, 10:40 AM
புரிகிறது அமரன். உள்ளக்குமுறலை சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ள உறவுகள் உள்ளோம்.

என்னத்தைச் சொல்ல.. ஒருத்தன் சாகக் கிடக்கிறான். பைத்தியம் என்று சொல்லப்பட்டவள் அவனைக் காப்பாத்தக் கெஞ்சுகிறாள். அவளைப் பைத்தியம் என்று சொன்னவர்கள் காப்பாத்த விடாமல் தடுக்கிறார்கள்.

ஏதோ பிக்னிக் வந்தது போல வந்து அழகை ரசித்து, விதம் விதமாக உணவை ருசித்துவிட்டு கொழுப்பேறிப் பேசுகிறார்கள்.

"தம்பி நீ போய் தெம்புடன் வா, நீ விட்ட இடத்தில நான் இருக்கேன்" என்று ஒருவராவது சொல்லவில்லை.

ஏன்?????????????? பயம்.. தன் உயிர் மீதான பயம்.. சுய நலம்.. போராட்டத்தின் புனிதம் கெடுக்கும் இவர்களைத்தான் பைத்தியங்கள் என்று சொல்லல் வேண்டும்.

அன்புரசிகன்
04-05-2009, 10:41 AM
இப்போது புரிந்தது அமரா...

பலர் குளிரில் நடுங்குகிறார்கள். சிலர் காய்கிறார்கள்.. சிலர் காய்வதில் காய்கிறார்கள்... என்ன சொல்வதென்று தெரியவில்லை அமரா...

samuthraselvam
04-05-2009, 10:52 AM
இப்போ புரிந்தது அமர் அண்ணா... முதல் பகுதியை படித்ததும் பதிவை போட்டதால் தான் குழப்பம்...

மதி
04-05-2009, 11:08 AM
தொடருங்கள் அமரன்..

அமரன்
04-05-2009, 11:10 AM
தொடருங்கள் அமரன்..

முடிஞ்சுதுங்க..

சென்னை வெயில்ல உருகி ஓடித்தான் போயிட்டுது:)

மதி
04-05-2009, 11:15 AM
முடிஞ்சுதுங்க..

சென்னை வெயில்ல உருகி ஓடித்தான் போயிட்டுது:)
இருக்கலாம்.. இன்னுமொரு

பித்துப் பிடித்த மனசு..

பாரதி
04-05-2009, 01:52 PM
சில வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது இந்த அல்லது இதைப்போன்ற போராட்டங்களைக் காண முடிந்தது. பொதுவாக கூட்டமாக சேரும் சமயங்களில் அந்தக்கூட்டத்தின் உணர்வு கலந்திருப்பவர்களை ஆட்கொள்வது இயல்பே. அந்த சமயங்களில் உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்காமல், சிந்தித்து சரியான முறையில் எடுக்கப்படும் முடிவுகளே வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்.

உண்ணாவிரதம்.... உண்ணாவிரதம்...... இருந்தவர்களுக்குத்தான் அதன் வலிமை தெரியும்.

விசாரிக்காமல் விசரி என்றழைக்கும் கூட்டத்திலும்.... உயிரின் விலையையும், நிலையையும் அறிந்த, அதைக் காப்பதற்காகப் போராடுகிற அந்தப் பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அந்தப்பெண்ணின் முயற்சி வெற்றிபெறட்டும்; உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கையும் நிறைவேறட்டும்.

உணர்வுப்பூர்வமாக நீங்கள் கூறிய இந்த நிகழ்வு என்னையும் பாதித்திருக்கிறது.

பல நேரங்களில் மனிதத்தை, மனிதர்களை நாம் சரியாக புரிந்து கொள்வதே இல்லை.

உங்கள் எழுத்துகளை தொடர்ந்து எழுத இது சரியான தருணம் அமரன். எழுதுங்கள்.... எழுதுங்கள்.

அமரன்
04-05-2009, 02:38 PM
பொதுவாக தன் சாவை விட பிறர் சாவுதான் வலிமையான வலியைத் தரும்.

போர்க்களத்தில் ஒரு வீரனின் மரணம் செய்தியாக சேருகிறது. இன்னும் கொஞ்சம் நெருங்கினால் உடலமாக வந்தடைகிறது. அந்தத் தாக்கம் மனங்களால் உணரப்படத்தான் செய்யும்.

அதை விடக் கொடுமையானது அனுதினமும் அணு அணுவாக ஒருவன் சாவதை அருகிலிருந்து பார்ப்பது. குடும்பத்தின் பட்டினி போக்க, பட்டினி உள்ளிட்ட பல இன்னல்களை மட்டும் உண்டு பிழைக்க வந்த இடத்தில் உண்ணாமல் போராடுபவனை அருகிலிருந்து பார்த்தால் நிச்சயம் அறியலாம் வேதனையின் உச்சம்.

இங்கே நடக்கும் போராட்டங்களில் நாள் தோறும் கலந்து கொள்பவர்கள் உண்ணாநிலையிலிருந்து போராடுபவர்களின் உயிர்களில் அக்கறை உள்ள தமிழின உணர்வாளனாகத்தான் உள்ளார்கள். ஆனால் எப்பவாவது முகம் காட்டும் ஒரு சிலரோ..... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையை நாசுக்காகச் செய்கிறார்கள்.

ஆம் பாரதி அண்ணா.. பலதை எழுதுவதுக்கான தருணம் வந்துள்ளதாகவே உணர்கிறேன். ஆனால் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அப்படியே பாய விட்டால் சேதாரங்களும் அதிகமாகும் அச்சமும் உள்ளது. அதனால் யோசிக்கிறேன்.

பூமகள்
05-05-2009, 02:21 AM
எட்டி நின்றி ஏவி விடும் போலிக் கும்பல்..

கிட்ட இருந்து வலியில் பங்கெடுக்கும் நிஜ ஆதரவாளர்கள்..

இனத்துவேசத்திலும் மனித நேயம் மறக்காத பித்தான பெண்..

யாருக்கு "பித்து" பிடித்திருக்கிறதென தெளிவாக்கச் செய்த பதிவு...

இறங்கி போராட்டாவிட்டாலும்.. போராடும் போராளிகளின் மேல் கல்லெறியாமல் இருக்கலாம் அல்லவா??

போராட்டங்கள் நிச்சயம் நல்ல முடிவுக்கு வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு நானும் அவர்களோடு காத்திருக்கிறேன்..

நிஜம் எழுத தயக்கம் வேண்டாம் அமர் அண்ணா.. எங்களைப் போன்றோருக்கு அங்கு நடப்பதை நேரடியாக பார்த்துப் பங்கெடுக்க இயலாவிடினும் உங்கள் மூலம் தெரிந்து கொண்டு நிஜமறிய வழி செய்யுங்கள்...

உங்களின் மனம் படும் வேதனை அத்தனையிலும் நானும் பங்கெடுக்கிறேன்..