PDA

View Full Version : ஏ சர்வதேச சமூகமே! - கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள்



praveen
30-04-2009, 01:01 PM
சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?

வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்

கட்ட முடியவில்லையே
ஆனாலும்
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்

நன்றி-தமிழ் டோரண்ட்

நேசம்
30-04-2009, 01:24 PM
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்



நிச்சயமாக ஒரு காலம் இன வெறியர்கள் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்.தமிழனம் படும் அவலத்தை தனக்கே உரித்தான முறையில் தந்துள்ளார் வைரமுத்து.பகிர்தலுக்கு மிக்க நன்றி பிரவிண்

ரங்கராஜன்
02-05-2009, 03:49 PM
நன்றி பிரவீன்

அருமையான வரிகள், பகிர்தலுக்கு நன்றி

அமரன்
05-05-2009, 10:49 AM
அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்



செந்நிற விதைகள் வீழும்வரை இலங்கைக்கு விடியல் இல்லை.

உரத்துச் சொன்ன கவிப்பேரரசுக்கும் படிக்கக் கொடுத்த பிரவீனுக்கும் நன்றி.

samuthraselvam
06-05-2009, 04:21 AM
ஒவ்வொரு வரியும் அருமை பிரவீன்... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...