PDA

View Full Version : மெழுகுவர்த்தி



vairabharathy
27-04-2009, 09:33 AM
மெழுகுவர்த்தி
தனக்காக அல்ல...
தன் இறப்புக்குப் பின்
இவ்வறை
இருட்டாகுமேயென
இத்தாய் அழுகிறாள்...

ஆமாம்...
வெண்ணிலாவை
விழுங்கிக் கொண்டிருக்கிறது
இச்சு10ரிய சுடர்...

எந்த
இராமன் சந்தேகித்தான்
இக்குலமகள்
தீக்குளிக்கிறாள்...

அய்யகோ!
இது
வளர்பிறையேயில்லா
வஞ்சிக்கப்பட்ட நிலவோ...

என்ன வியப்பு...
இந்த உடல்
எரிவதற்காக
எழுந்து நிற்கிறதே...

இது
இல்லறக் கடலின்
கலங்கரை விளக்கம்...

தன்
வேர்வையிலேயே
வேரூன்றியெரியும்
விருட்சம்...

சட்டம் வந்தும்
'சதி" ஒழியவில்லை
இந்த ரதி
எரிகிறாளே
என்ன நியாயம்..?
அழுகின்ற
இவ்வொற்றை நரம்பு
ஜுவனின்
அழகான கண்களெங்கே..?

மீண்டும்
'இருட்டறையில்
ஓர்
துயரச் சம்பவம்...!"

மெழுகுவர்த்தி !

நான்
அதிகம் நேசிக்கும்
அஃறிணையில்
இதுவும் ஒன்று...!

தேய்மானத்திலும்
ஓர்
நம்பிக்கைத்
தீர்மானம் காட்டும்...

தன்னையே
அர்ப்பணிக்கும்
இன்னொரு
தாய்...

இதோ
தன்
உடலையிழந்தவாறு
ஆவியாகும்
சுடர் தேவிக்கு
இக்கவித்துளி
என்
கண்ணீர் அஞ்சலி...

ஆதவா
27-04-2009, 11:09 AM
அஞ்சலிக்காக பயன்படும் மெழுகுவர்த்திக்கு ஒரு அஞ்சலி...
வித்தியாசமான சிந்தனைகளோடு சொற்களும் இணைந்து அழகான கவிதை பெற்றெடுத்திருக்கிறது.

///எந்த

இராமன் சந்தேகித்தான்

இக்குலமகள்

தீக்குளிக்கிறாள்...////

ரொம்பவும் ரசித்த வரிகள். மெழுகுவர்த்தி மாத்திரமல்ல. ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரையும் அறியாமலேயே உருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சிலர் மெழுகு பாதியிலேயே உடைந்து நரம்பறுந்து தொங்குவது போல சிதைந்து போகிறார்கள்.

வாழ்வின் இருட்டுகளில் மெழுகைப் போன்ற தியாகிகள் தேவைப்படுகிறார்கள். அல்லது காத்துக் கிடக்கிறார்கள்.

பின்குறிப்பு : மெழுகின் நடனம் எனக்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடியதொன்று.

வசீகரமான கவிதை. வைரபாரதி!