PDA

View Full Version : உணவாக ஒரு காத்திருப்பு..!!



ஓவியன்
27-04-2009, 09:17 AM
சகோதரர்களும் நண்பர்களும்
முன்னாலே காத்திருக்க,
நீளமான வரிசையில்
இறுதியாக என் காத்திருப்பு..!!

முடிவை நோக்கி நாம் நகர
முடிந்தவர்களின் வரிசை
எதிர் திசையில்
விலகி மறைகிறது..!!

விலகி மறையும் பொதிகளில்
தேடுகிறேன் என்
சினேகிதங்களின் எச்சங்களை...!!

இரத்தக் கறை படிந்த
அந்த பொலீத்தீன் பொதிகளில்
எனக்காகக் காத்திருப்பது
தோல்விகள் மட்டுமே..!!

நானும் பொதியாவேன்
பொதியாகையில்
என் ஓலமும்
அடங்கிடலாம் அலறும்
இயந்திர சப்தங்களில்....!!

என் எச்சங்களும்
தொலைந்து போகும்
என் சிநேகிதர்களைப் போலவே...!!

ஆனால்,
மீள, நாளையும் நகரும்
இன்னொரு வரிசை,
அதிலும்
இறுதியாகக் காத்திருப்பான்
என் தோழர்களில் ஒருவன்...!

ஆதவா
27-04-2009, 10:55 AM
என்னங்க ஓவியன்,... ஒருமாதிரியான சித்தாந்தத்தில் இறங்கிவிட்டதாகத் தோன்றுகிறது... :D (சும்மா...)

அந்த வரிசை முடிவில்லாமல் நீண்டு கிடைக்கிறது, தோல்வி வெற்றிகளின் ஏற்ற இறக்கங்களை யாருக்கும் தீர்மானிக்க இயலாமல்.. இறப்புநிலை என்பது ஒரு முடிவுப்புள்ளியல்ல. அது தொடர்ச்சியான பயணத்தின் இளைப்பாறல். ஆனால் தொடர்ச்சியான பயணத்தை எப்படி ஏற்படுத்துவது என்பதில்தான் மனிதனின் திறமையே இருக்கிறது.

வெகுநாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு கரு தோன்றியது. அதை கவிதைப் படுத்தும் முயற்சியில் தோல்வியுற்று கிடப்பில் போட்டிருந்தேன். அதன்படி, இறந்து போன தன் நண்பன் அவன் வரைந்து வைத்த ஓவிய வர்ணங்களின் வாசனை வழியே நுகரப்படுகிறான் என்று தன் மனதைத் தேற்றியவாறே நண்பன் சென்றுவிடுவான். நண்பனின் மனைவிக்கு தன் கணவன் இறந்ததாகவே தெரியாது. இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தவாறே எஞ்சியிருந்த வாழ்வை ஓட்டிக் கொண்டிருப்பாள். இதை எதற்காக சொல்கிறேனென்றால் இறப்பிற்குப் பிந்தைய வாழ்விற்காகத்தான் நமக்கு வாழ்நாட்கள் கொடுக்கப்படுகின்றன. உண்மையைச் சொல்லப்போனால் வாழும் நாட்கள் என்பது ஒரு வேலைக்கான கால இடைவெளி. அந்த வேலையின் முடிவு இறந்த பிறகு ஒளிப்பதாக இருக்கவேண்டும்!!

அதெல்லாம் இருக்கலாம்.... சிலருக்கு அந்த கால இடைவெளி பறிக்கப்பட்டால்???

இந்த கேள்விக்குத்தான் யாராலும் விடை சொல்ல முடிவதில்லை/

ஆனால் எதற்காக "உணவாக" என்று தலைப்பில் கொடுத்திருக்கிறீர்கள் என்று அனுமானிக்க முடியவில்லை.

உங்கள் கவிதையின் ஆழம் அதிகம். வாழ்த்துகள் ஓவியன்.

அமரன்
07-05-2009, 09:05 PM
ஊருல இருந்தால் உடன் இறைச்சி. ஊரு ஊரு வந்து பதப்படுத்திய இறைச்சி. சூப்பர் மார்க்கெட் பக்கம் அடிக்கடி போறீங்களா? பன்னிக்காய்ச்சல் வேறு உலவுதாம். எதுக்கும் பத்திரமாய் இருங்கோ.

பிற உயிருக்கு உணவாவதில் சில உயிர்களுக்கு மகிழ்ச்சி இருக்கக் கூடும். நல்ல கோணம் ஓவியன்.:icon_b:

ஆதவாவின் எண்ணக்கரு சிறப்பு.

ஓவியன்
08-05-2009, 11:05 AM
பலருக்கு உணவாவதற்காக கொலைக் களத்தில் வரிசையாகக் காத்திருக்கும் விலங்குகளின் பார்வையில் அமைக்கப் பட்ட கருவினைக் கச்சிதமாகக் கெளவிய அன்பு அமரனுக்கு நன்றிகள் பல, ஆதவா உங்கள் கோணம் அருமை, இந்தக் கவிதையை எழுதிப் பதிவிடுகையில் துளியளவிலும் உங்கள் கோணம் எனக்கு பிடிபடவில்லை....

உங்கள் பின்னூட்டம் இந்தக் கவிதையை இன்னும் செதுக்கியிருக்கலாமென எனக்கு கூறி நிற்கிறது....

நன்றிகள் பல...!!

பாரதி
16-05-2009, 04:14 PM
நடப்பு நிலையை அப்பட்டமாக காட்டும் காட்சிக்கவிதை. நன்று ஓவியன்.

ஐந்தறிவு ஜீவனும் ஆதரவு தந்து காத்திருக்கும்
அடிப்படை மனிதம் மறந்த ஆறறிவு மிருகங்களும்
ஆரவார கோஷத்துடன் அசைபோட்டே திரிந்திருக்கும்.

கண்ணீரும் காய்ந்ந்து போய் சோர்ந்திருக்கும்
உணவாக வேண்டுமென்று பட்டினியாகக் காத்திருக்கும்

கதறல் சத்தமெல்லாம் செவிடருக்கும் கேட்டிருக்கும்
பதறிப்போன மண்ணும் குருதியுரிஞ்ச மறுக்கும்

எல்லாம் முடிந்த பின்னர் எதை நினைத்து பிழைக்கும்
இயலாமை என்றேதான் எம்பேனா நகைக்கும்.

ஓவியன்
18-05-2009, 03:41 AM
விலங்குகள் வரிசையாக இங்கே,
மனிதர்கள் வரிசையாக சில இடங்களில்....

என்றுதான் எல்லாவற்றிற்கும் ஒரு விடை கிட்டுமோ....??

நல்லதோர் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பாரதி அண்ணா..!!

பென்ஸ்
27-05-2009, 07:16 PM
ஓவியன்...
விக்கிபீடியாவில் "Human" பக்கத்தில் conservation status நிலையை LC அதாவது லீஸ்ட் கன்சேர்ன் என்று கொடுத்து இருப்பார்கள்.....
எனக்கு அதை பார்த்தால் சிரிப்பு வரும்...
ஆனால் நம்மை சுற்றி நடப்பதை பார்க்கும் போது
அது முற்றிலும் உண்மை என்றே தோன்றும்...

காயத்திற்க்கு மருந்துண்டு...
மரணத்திற்க்கு..???