PDA

View Full Version : குடி !



தங்கவேல்
27-04-2009, 04:10 AM
இது சுவையான சம்பவம் அல்ல !

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடந்த இச்சம்பவம் ஒரு உண்மைச் சம்பவம். எனது நண்பன் ஒருவனுக்கு பிறந்த நாள். பிறந்த நாள் என்றால், தஞ்சாவூர் சென்று படம், ஹோட்டல், தண்ணீர் என்று கொண்டாடுவார்கள். வழக்கம் போல புது துணி உடுத்தி கம கமவென மணக்கும்படி வாசனை திரவியங்கள் பூசி நண்பர்கள் புடை சூழ ஒரு சேஞ்சுக்காக தஞ்சாவூர் செல்லாமல் அம்மாப்பேட்டைக்கு சென்றார்கள். நான் அவர்களோடு செல்லவில்லை.

நன்கு குடித்து விட்டு, சாப்பிட்டு விட்டு போதையில் பஸ் ஏறி இருக்கிறார்கள். பஸ்ஸின் பின் புறப் படிக்கட்டில் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன். ஏதோ ஒரு வளைவில் பஸ் வேகமெடுக்க, தடுமாறி பஸ்ஸின் படி வழியாக கீழே விழுந்து விட்டான். நண்பர்கள் பதறியடித்துக் கொண்டு பஸ்ஸை நிறுத்தி அவனைத் தூக்கி வந்து சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள்.
“எனக்கு ஒன்றுமில்லையடா” என்று சொல்லி சிரித்திருக்கிறான்.

சற்று நேரத்தில் அவனை அணைத்துப் பிடித்திருந்த மற்றொரு நண்பனின் தோளில் ஈரமாக உணர, என்னவென்று பார்த்திருக்கிறான். பின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடி சட்டையை நனைத்திருக்கிறது.

”ரத்தம்டா“ என்று மற்றொரு நண்பன் கூவ,

“ ஆ.. ரத்தமா” என்று பதறியபடி பின் தலையைத் தொட்டுப் பார்த்தபடி, ”அய்யோ” என்று அலறி இருக்கிறான் பிறந்த நாள் கண்ட நண்பன்.

“டேய்... என்னை எப்படியாவது காப்பாற்றி விடுடா. வீட்டில என் அப்பாவும், அம்மாவும் எனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்கடா, எப்படியாவது காப்பாற்றி விடுடா” என்று சொல்லியபடியே இவனது கையை இறுக்க பிடித்தவாறு மயங்கி போனான்.பஸ்ஸை வேகமாகச் செலுத்தி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.

ரத்தத்தையும் நிறுத்த முடியவில்லையாம். ஆல்கஹால் அவனது ரத்தத்தில் கலந்து இருந்ததால் ரத்தம் ஏற்ற முடியவில்லையாம். மயக்கத்திலேயே பிறந்த நாள் அன்று தன் இன்னுயிரை இழந்தான் என் நண்பன்.

காரில் அவனை எடுத்துக் கொண்டு சென்று அவர்களது வீட்டை அடைந்த போது நடந்ததை எழுதினால் படிக்கும் நமக்கு உயிரே போகும் படியாக இருக்குமென்பதால் விட்டு விடுகிறேன்.

நண்பன் கேக் வாங்கி வருவான், சாக்லெட் கொண்டு வருவான் என்று நண்பர்களுக்காக காத்துக் கிடந்தபோது போன் வந்தது. நண்பன் இறந்ததைச் சொன்னார்கள். இதயம் ஒரு நொடி துடிக்க மறந்து நின்றது.

தேவையா இந்தக் குடி !

குறிப்பு : தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜாவின் மகன் (வெகு அழகானவர்) நான் படித்த கல்லூரியின் மாணவர். இன்று அவரின் நினைவாக பஸ் நிறுத்துமிடம் கட்டி இருக்கிறார்கள். காரணம் பைக் ஆக்சிடென்ட்.

aren
27-04-2009, 05:19 AM
நெஞ்சை உருக்கும் செய்தி தங்கவேல்.

வருத்தங்கள்.

தாமரை
27-04-2009, 05:22 AM
உள்ளத்தை உலுக்கும் சம்பவம் தங்கவேல்.

என்ன சொல்வது? ஒன்றும் புரியவில்லை,

நேசம்
27-04-2009, 06:18 AM
யாரை குறை சொல்வது... பிறந்த நாள் அன்று மது அருந்தியவர்கலையா அல்லது கேடு கெட்ட இந்த சீரழிவை அறிமுகப்ப்டுத்திய சமுகத்தையா..... பிறந்த நாள் அன்று மகனை இழந்த பெற்றோர்களின் மனனிலை எப்படி இருந்து இருக்கும்

ஆதவா
27-04-2009, 07:32 AM
கொடுமை!!!!!! கண்ணீரைத் தவிர இதற்கு வேறு பதிலுமில்லை

செல்வா
27-04-2009, 07:50 AM
யாரை குறை சொல்வது... பிறந்த நாள் அன்று மது அருந்தியவர்கலையா அல்லது கேடு கெட்ட இந்த சீரழிவை அறிமுகப்ப்டுத்திய சமுகத்தையா.....

இரண்டையும் இல்லை.... போதையில் படிக்கட்டில் பயணம் செய்து அவரே அவருடைய சாவுக்குக் காரணமாகிவிட்டார்.....

ரங்கராஜன்
27-04-2009, 08:19 AM
பாவம் அவரது பெற்றோற்கள், பெத்து வளர்த்து படிக்கவைத்து மதுக்கு காவு கொடுத்து விட்டார்கள், திருந்துங்கப்பா

மதி
27-04-2009, 08:46 AM
குடி குடியை கெடுத்திருக்கிறது. வருந்தத்தக்க சம்பவம்.

xavier_raja
27-04-2009, 09:46 AM
இந்த குடியை போன்ற ஒரு மோசமான பழக்கம் வேறு எதுவுமில்லை. நான் அனுபவத்தில் உணர்ந்தது. ஆனாலும் என்னால் நிறுத்த முடியவில்லை.. இதுவரை மோசமாக எதுவும் நடந்துவிடவில்லை.. அந்த கேடுகெட்ட குடியை நிறுத்த முயற்சி செய்துவருகிறேன்.

தங்கவேல்
27-04-2009, 01:36 PM
இந்தக் குடி எனது வாழ்வில் மீண்டுமொருமுறை தன் கோர முகத்தைக் காட்டியது. கோவையிலிருக்கும் பிரபலமான ஹோட்டலின் நிரந்தர வாடிக்கையாளர் எனது நண்பர். அவருடன் இணைந்து நானும் செல்வேன். இரும்படிக்கும் பட்டறையில் கொசுவுக்கு என்ன வேலை என்கிறீர்களா ? சும்மா பேச்சுத் துணைக்கு செல்வேன். உடம்பு சரியில்லை என்று சொன்னால் கூட விடமாட்டார். கார் மாருதி பலினோ. காருக்கே ஃபுட், தண்ணீர், சிகரெட் சர்வீஸ் வந்து விடும். ஃபுல்லாக ஏற்றிக் கொள்வார். சைடிஸாக வரும் உணவுப் பண்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவேன். இடையில் அவரின் பேச்சுக்கெல்லாம் ஆமாம் சாமி போடுவேன். பின்னர் சிகரெட்டை பற்ற வைப்பேன். மாலை ஆறு மணியிலிருந்து இரவு பதினோறு மணி வரை தொடரும் இக்கச்சேரி. எல்லாம் முடிந்து புறப்பட வேண்டுமல்லவா ? அப்போது தான் எனக்கு அடிவயிற்றில் புளி சுரக்கும். ஆமாம். கார் 120 மைல் வேகத்தில் செல்லும். கார் செல்லும் வேகத்தைப் பார்த்து மகனைப் பார்ப்பேனா, பெண்டாட்டி சாப்பிடாமல் காத்துக் கொண்டிருப்பாளே என்று உள்ளுக்குள் நடு நடுங்கிப் போவேன். மெதுவா மெதுவா என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி வர அவரோ இன்னும் மிக வேகமாக காரை இயக்குவார்.

இச்சோதனை வாரத்திற்கு இருமுறை நடக்கும். இவரால் மனச்சோர்வேற்படும். என்ன செய்வது? மறுக்கவும் முடியாத இக்கட்டில் நான். காரணம், அவரின் கம்பெனியில் அல்லவா வேலை பார்க்கிறேன்.

இப்படியே சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் கோவை பிஎஸ்ஜிடெக் அருகில் வந்து கொண்டிருந்த கார் இடதும் வலதுமாக சென்று வர என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இன்றோடு முடிந்தது கதை என்று காருக்குள் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். நல்லவேளை காரின் பின்னாலோ முன்னாலோ எந்த வாகனமும் செல்லவில்லை. சிறிது நேரத்தில் கார் ஒரு நிலைக்கு வந்தது.

எப்படின்னே தெரியல்லை தங்கம் என்று சொல்லி விட்டு சற்று நேரம் காரை நிறுத்தினார்.

அப்போது மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஏய்யா, நீ தண்ணி அடிக்கிறாய். காரை கொண்டு போய் மோதுகிறாய். நியாயம். நான் என்னய்யா தப்புச் செய்தேன். உன்னோடு சேர்ந்து நானுமா போகனும். வெளியே பேசவில்லை.
அக்கம்பெனியில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டேன்.

இனிமேலும் இந்தக் குடி என்னை எங்கிருந்து தொந்தரவு செய்யப்போகிறதோ தெரியவில்லை.

karikaalan
28-04-2009, 09:09 AM
தங்கவேல்ஜி

முதல் சம்பவம் மிகவும் வருத்துகிறது.. அந்தக் குடும்பத்தினருக்கும், தங்களுக்கும் துக்கத்தைத் தாங்கிக்கொள்கிற சக்தியைத் தருமாறு அடியேன் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன்.

இரண்டாவதாகத் தாங்கள் விவரித்திருப்பதிலிருந்து தப்ப, கம்பெனியிலிருந்து ஓடுவதற்குப் பதிலாக, அந்த வண்டியை ஓட்டுவதற்கு வேறு யாரையும் (குடிக்காத) கூட அழைத்துக்கொள்வதுதானே!

===கரிகாலன்

அமரன்
28-04-2009, 09:17 AM
குடி உயிரையும் குடிக்கும். குடியை நிறுத்துவது நல்லது. முடியாதவர்கள் குறைப்பது நல்லது. முடியாதவர்கள் கவனமாக இருப்பது நல்லது. ஆல்ஹஹோல் இரத்தோட்டம் உள்ளிட்ட பலதை வேகப்படுத்த வல்லது.

தங்கவேல்
29-04-2009, 03:22 AM
கரிகாலன் அவரைத் தவிர வேறு யாரையும் அக்காரை ஓட்ட அனுமதிக்க மாட்டார். மேலும் தண்ணி அடிக்கும் சமாச்சாரம் வெளியே தெரியக்கூடாது என்றும் நினைப்பார்.

aren
29-04-2009, 03:50 AM
குடித்துவிட்டு வண்டியை ஓட்டுவது குற்றம். அவர்கள் இறப்பதற்கோ அல்லது மற்றவர்கள் இறப்பதற்கோ சாத்தியக்கூறுகள் அதிகம். அகையால் ஒருவர் குடிக்கும்பட்சத்தில் காரை ஓட்டாமல் இருப்பதே நல்லது. அப்படியில்லையென்றால் வேறு ஒரு யுக்தியை கையாளவேண்டும்.

ஒரு கிளாஸ் வைன் அல்லது ஒரு பெக் விஸ்கி அல்லது ஒரு கேன் பியர் நம் உடம்பிலிருந்து வெளியேற்ற குடல் குறைந்தது 90 நிமிடம் எடுத்துக்கொள்ளும். ஆகையால் ஒருவர் வெளியே சென்று குடிக்கும் சமயத்தில் இரண்டு டிரிங் அடித்தால் குறைந்தது மூன்று மணிநேரம் கழித்தே வண்டியை ஓட்டவேண்டும், அப்பொழுதுதான் குடல் உடலிலிருக்கும் ஆல்கஹாலை வெளியேற்றும். அப்படியில்லையென்றால் நாம் எந்த திசையில் வண்டியை செலுத்துகிறோம் என்று தெரியாமல் எது மேலேயாவது மோதிவிடும் அபாயம் இருக்கிறது.

மக்களே ஜாக்கிரதை.