PDA

View Full Version : நிராசைகள்



த.ஜார்ஜ்
20-04-2009, 04:29 PM
'தரை இப்படி சுடுகிறது.ஒரு செருப்பு வாங்கினால் தேவலை...' பேச்சிமுத்து நாலைந்து நாளாக நினைத்துக் கொள்கிறானே தவிர எப்படி வாங்குவது என்றுதான் புரியவில்லை.கிடைக்கிற வருமானத்தில் குடும்பத்தின் பசியை போக்குவதா?செருப்பு வாங்குவதா என்று குழப்பமாயிருக்கிறது.

பேச்சிமுத்தின் 'மொபைல் டீ கடை'அந்த பகுதியில் சற்று பிரபலம்.ஒரு நாலு சக்கர வண்டியில் அவன் ஒரு ஸ்டார் ஹோட்டலையே நடத்திக்கொண்டிருந்தான்.அந்த வண்டி வாங்கிய கடனே இன்னும் முழுசாய் தீரவில்லை.இதில் கால் சுடுகிறது என்பதற்காக செருப்பு வாங்கி விடுவதென்ற புது ஆசை பேச்சிமுத்துவை ஆக்கிரமித்து தொலைத்துவிட்டது.

காலையில் ஆவி பறக்கிற காபியுடன் வண்டியை தள்ளிக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விடுவான்.பஸ்ஸை பிடிக்க காத்திருக்கிறவர்கள் அந்த அவசரத்திலும் இவனது காபி,டீயை ருசி பார்க்க தவறுவதில்லை.

பஸ் நிறுத்த கூட்டம் தீர்ந்த பிறகு ஒன்பது மணியளவில் கல்லூரி வாசலுக்குப் போனால் போதும்..அவனது வியாபாரம் விற்றுப் போகும்.ஆனால் இப்பொது பஸ் ஸ்டாண்டில் நிரந்தரமாக ஒரு பெட்டிக்கடையை அந்த நடேசன் திறந்துவிட்டான்.இவனது பஸ் ஸ்டாண்ட் வியாபாரம் படுத்துவிட்டது.வெறும் கல்லூரி வாசல் வியாபாரத்தை மட்டும் நம்பிதான் அவன் காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.

இவன்கூட நினைத்துக்கொள்கிறான். எப்படியாவது ஒரு லோன் வான்கி இந்த கல்லூரி வாசலில் பர்மனென்றாக ஒரு கடை வைத்துவிடவேண்டுமென்று! கஞ்சதனமில்லாமல் நினைத்துக்கொள்ள மட்டும்தான் முடிகிறது.தன்னைதானே சபித்துக் கொள்கிறான்.சே!இது என்ன பொழப்பு...!

கல்லூரி மாணவர்களை நம்பி பயனில்லை.பத்து ரூபாய் வியாபாரம் நடந்தால் ஒரு ரூபாய் நஷ்டத்தைதான் உருவாக்குகிறார்கள்.கொடுத்த கடனை திருப்பி கேட்க முடியாது.அப்படி கேட்டால் யாருக்கும் தெரியாமல் நாலு கண்ணாடி கிளாஸ்களை உடைத்துவிட்டு போய் விடுகிறார்கள்.இல்லையெனில் இவனது வண்டியின் சக்கரத்தில் பஞ்சர் ஏற்படுத்தி விடுகிறார்கள்.அவர்களை கையாள்வது கடினமாகத்தான் இருக்கிறது.

இன்று காலையில் புறப்பட்டதிலிருந்து செருப்பு ஆசைதான் மனம் பூரா வியாபித்து விடுகிறது.

இவன் வண்டியை தள்லிக்கொண்டு வருகிற போதே இன்று விடுமுறை என்று யாரோ சொன்னார்கள்.இவனுக்கு பகீரென்றாகிப் போகிறது.அப்படியானால் இன்று பட்டினியா..ஏன் விடுமுறை.எதற்கு விடுமுறைஎன்று எதுவும் தெரியவில்லை.ரோட்டில் போக்குவரத்து குறைந்த மாதிரியிருக்கிறது...

யோசித்துக் கொண்டு வந்தவனுக்கு பஸ் ஸ்டாண்ட் வந்ததும் திருப்தி வந்தது. நடேசன் பயல் இன்று கடை திறக்கவில்லை.இதில் கொஞ்ச நேரம் வியாபாரம் நடத்தலாம்.ஆனால் நெடுநேரம் நின்றுதான் பார்க்கிறான். பஸ் ஸ்டாண்டில் யாருமே வந்த மாதிரியில்லை.இவனுக்கு குழப்பமாயிருக்கிறது.

எதிர்பட்ட ஒருவரை விசாரித்தபோதுதான் உண்மை விளங்கிற்று. இவனுக்கு பிடித்தமான அரசியல் தலைவரை கைது பண்ணிவிட்டார்களாம்.இவனுக்கு வருத்தமாயிருந்தது.பாவம் நல்ல மனிதர்.அவரை போய் ஏன் கைது செய்தார்கள்.அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று ஆத்மார்த்தமாய் நினைத்துக் கொள்கிறான்.

ஆனாலும் இவனுக்கு இந்த லீவ் விட்ட சமாசாரம்தான் பிடிக்கவில்லை.யார் எக்கேடு கெட்டு போனால் என்ன.என் பிழைப்பை கெடுத்து என் குடும்பமே சாப்பிடமுடியாமல் பண்ணிவிட்டார்களே.என்று கோபம் வருகிறது.

வண்டியை தள்ளிக்கொண்டு கல்லூரிவாசலுக்கு புறப்படுகிறான்.வழியில் தென்படுகிற ஒவ்வொரு முகத்திலும் துக்கம் இருப்பதாக உண்ர்கிறான். நடமாடுகிற ஒன்றிரண்டுபேர் கூட இவனை புதிதாய் பார்க்கிற மாதிரி பார்க்க....

கல்லூரி வாசலுக்கு வந்து விட்டான்.மாணவர்கள் இன்னும் வகுப்புக்கு போகவில்லை.மரத்துக்கு கீழேகும்பல் கும்பலாய் நின்று ஏதேதோ பேசிக்கொண்டு....

ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதோ காரசாரமாக விவாதம் நடக்கிறது.மறைவில் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த சிலர் 'ஹோ'என்று கூவுகிறார்கள்...

பேச்சிமுத்து விவரம் புரியாமல் பார்த்துக்கொண்டே நிற்க...அந்த பிரதேசத்தில் திடீரென்று பரபரப்பு ஏற்படுகிறது...கும்பலாய் நின்றவர்கள் சரேலென மொத்தமானார்கள்.காலுக்கு கீழே கிடந்த கற்களை ஆளுக்கொன்றாய் தூக்கி கல்லூரி கண்ணாடி கதவுகளுக்கு குறி வைத்து எறிய...மற்றொரு கூட்டம் எறிந்த பந்து திரும்புகிற வேகத்தில் வாசல் நோக்கி விரைந்தது.

பேச்சிமுத்துவை ஏதோ ஒன்று பலமாய் இடிக்க...கீழே விழுந்ததுதான் தெரியும்..மயக்கமுற்று போகிறான். "தலைவரை விடுதலை செய்" என்ற கோஷம் கடைசியாய் காதில் கேட்டது.

நினைவு திரும்பி இவன் எழுந்து பார்த்த போது...இவனைச் சுற்றிலும் இவன் விரும்பிய மாடல்களிலெல்லாம் செருப்புகள் சிதறிக் கிடக்க பூரித்து போகிறான்.எழும்பி உட்கார்ந்தான்.. நாலைந்து சைக்கிள்கள் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன.இரண்டு பஸ்கள் சேதாரமாகி ரோட்டோரத்தில் நிற்க...அதோ அந்த மின்கம்பத்தினருகில் துண்டு துண்டாக...ஒரு இரும்பு குவியல்...அது என்னவாக இருக்கும்...

கண்ணை துடைத்துவிட்டு பார்வையை கூர்மையாக்கியவன் ....இடி விழுந்த மாதிரி அதிர்ந்தான்.அங்கே...அவனது மொபைல் டீ ஸ்டால் குப்பையாக நொறுங்கி கிடந்தது.

samuthraselvam
21-04-2009, 06:23 AM
அருமையான கதை ஜார்ஜ்....

உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா.... என்பதுபோல் ஆகிவிட்டது அவர் கதை பாவம்.....

சிவா.ஜி
21-04-2009, 07:36 AM
ஆழமான உணர்வுகளைச் சொல்லும் கதை. கதை நகர்ந்தவிதமும் அருமை. ஒரு உரையாடல்கூட இல்லாமல், கதையை அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள் ஜார்ஜ்.

பெரும் கலவரங்களில் பேச்சிமுத்துவைப்போன்ற பலர் பாதிக்கப்படுகிறார்கள். பாவம்....ஒருநாள் பிழைப்பு போச்சே என வருத்தப்பட்டவனுக்கு, இப்போது பிழைப்பே போச்சே....

பாராட்டுக்கள் ஜார்ஜ்.

தாமரை
21-04-2009, 08:14 AM
அன்றாடங்காய்ச்சியின் ஒவ்வொரு நாளும் ஒரு வரலாறுதான்.
சரியான ஒரு தருணத்தை படம் பிடித்து எழுதி இருக்கீங்க. கதை அருமை.

கும்பலாய் நின்றவர்கள் சரேலென மொத்தமாவது..

பூரித்துப் போகிறான்.. எழும்பி உட்கார்ந்தான்.. என்று காலம் மாற்றி எழுதுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கதை பட்டை தீட்டப்பட்ட வைரமா ஒளிரும்

த.ஜார்ஜ்
21-04-2009, 09:48 AM
தாமரை
நீங்கள் சுட்டிகாட்டியவற்றை குறித்துக் கொள்கிறேன்.நன்றி.

ஆக்கமிகு வரிகளால் வருடிய நண்பர் சமுத்திரசெல்வம்,சிவாவுக்கும் நட்புகளும் நன்றிகளும்

பூமகள்
21-04-2009, 09:53 AM
ஒரு கடைக்கோடி ஏழையின் வாழ்வியல் யதார்த்தத்தை மிக அற்புதமாக பதிவு செய்திருக்கிறீர்கள்..

உழைத்து முன்னேற வேண்டுமென்ற வேட்கை இருந்தும்.. வறுமையின் பசியையே வருமானம் தீர்க்காத இக்கட்டில் மாட்டிக் கொண்டு தினம் ஒரு யுகமாகும் இவர்களுக்கு..

ஒவ்வொரு நாளும் போராட்டத்தோடு வாழ்க்கையைத் தொடரும் இவர்களுக்கு இந்த சமூக அவலங்கள் ஏற்படுத்தும் சலனமோ வெகு அதிகம்..

நடுத்தர, மேல் தட்டு மக்களுக்கு அன்றைக்கு ஒரு பரபரப்பு செய்தி என்பதோடு முடிந்துவிடும் கலவரங்கள்... ஏழை வியாபாரிகளுக்கு அன்றைய உணவில் போடப்பட்ட மண்ணாகும்..

இதனை இத்தனை அழுத்தமாக பதிவு செய்தமைக்கு முதற்கண் பாராட்டுகள்...

சிறந்த எழுத்தாளராக உங்களை படம் பிடிக்கிறது... மென் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துகள். :)

Tamilmagal
21-04-2009, 10:44 AM
அன்றன்றாடு உழைத்துப் பிழைக்கும் சிலர் படும்துன்பத்தை இக்கதையின்மூலம் தெளிவாக கூறியுள்ளீர்கள்.
அரசியல் கரணங்களுக்காக அரசியலில் சம்பந்தபடாத சாதரன பொதுமக்கள் பாதிக்கபடுகிறார்கள் என்பதையும் புரியவைதுள்ளீர்கள்.

நல்ல கதை, வாழ்த்துக்கள்

பாரதி
21-04-2009, 02:09 PM
எந்த ஒரு கதை படித்ததும் சற்று யோசிக்க செய்கிறதோ அது அந்த படைப்பாளியின் வெற்றியைக் காட்டுகிறது.

நீங்கள் ஒரு நல்ல கதை சொல்லி என்பதில் எந்த அய்யமும் இல்லை.

எதிர்பார்த்திருந்தது, எதிர்பாராமல் கிடைக்கும் போது, எதிர்பாராமல் நடந்த நிகழ்வு ஆசையை மறக்கச்செய்து, வாழ்வை நிராசையாக்கிவிட்டதை பேச்சிமுத்துவின் மூலம் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்.

சமூகத்தின் மீதான உங்கள் அக்கறையும் இந்தகதையில் வெளிப்படுகிறது.

மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும் நண்பரே.

த.ஜார்ஜ்
22-04-2009, 07:56 AM
நன்றி.....தமிழ் மகள்,பாரதி
உங்கள் உணர்தலும் வாழ்த்தும் எனக்கும் உரமாகும் .
நன்றி

ஆதவா
26-04-2009, 04:05 AM
அருமையான கதை. நல்ல கதையோட்டம். தாமரை அண்ணா சொன்னது போல சில இடறல்கள்.. அவ்வளவே

இக்கதை இதற்கு முன் எழுதிய என் நினைவாகச் செய்யுங்கள் கதையை ஞாபகப்படுத்தியது. எனினும் சிறப்பாக இருக்கிறது.