PDA

View Full Version : கனவின் பொருள் தேடி........



செல்வா
18-04-2009, 09:52 AM
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
சுற்றிலும் சூரியனின் ஒளிவெள்ளம்

சுட்டெரித்த சூரியன் திடுமென மறைகிறான்....
பனிபொழிந்து முழுக்க பனிப்பாலையானது
மண்பாலை முழுவதும் வெண்பாலையானது
முழுநிலா... ஒளிவெள்ளம் பொழிய
வெள்ளை உலகிலே
விழி விரியப் பார்த்தபடி நான்...
வெண்மை வெண்மை வெண்மை.....
எங்கும் எதிலும்....

வெண்மைக்குப் பங்கம் வந்திடக்கூடாதென்று
நட்சத்திரங்களும் நகர்ந்து விட்டன
வெண்மேகங்களும் தவழ்ந்து தாழ்ந்து
கருவானத்தை மறைத்து விட்டன

குளிர்ந்த தென்றல் இதமாய் என்
குழல் கலைத்தது...
எலும்பினுள் புகுந்த குளிரால் உடலெங்கும் பரவிய
நடுக்கம்....
ஒரு நொடிப் பரவசத்தைக் கொடுத்து நின்றது.
பற்கள் மட்டும்
பக்குவப் படாமல் படபடத்தபடியே...

கண்ணுக்குள் புகுந்த வெள்ளைமழை
கண்ணீர் மழையாய் கரைந்து விடக்கூடாதென
இமைவிரைந்து மூடிய அந்த ஒரு கணத்தில்...

மறுபடியும் விரைந்து வந்தான்
சுட்டெரித்த படியே சூரியன்
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
-----------------
இல்லை.... இல்லை இப்போது விரிக்க முடிகிறதே....
மெல்ல விரித்து ... சுற்றிலும் பார்த்தேன்....
சன்னலின் சீலையைத் தாண்டி ஒழுகும்
காலைச் சூரியனின் கீற்றுகள்
குளிரூட்டியின் ....லேசான இரைச்சலும்
மிதமான குளிரும்.....

இன்றுவரை
தேடிக் கொண்டிருக்கிறேன் இந்தக்
கனவின் பொருள் என்ன வென்று....

இளசு
18-04-2009, 02:16 PM
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்றுதான்..

உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்றுதான்..

-கண்ணதாசன் சொன்னது!

வெப்பம் தட்பமும்
வலியும் சுகமும்...
ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்..
ஒன்று மட்டும் - செல்லாக்காசு!
இரண்டும் சேர்ந்தால் - வாழ்க்கையின் மொத்த வரவு!

கனவுகள் தொடரட்டும் செல்வா!

அக்னி
15-02-2010, 11:29 AM
கனவு... விசித்திரம்...

எங்கெங்கோ அலைந்து, காட்சிகளாகி,
கண்விழிக்கும்போது
சூழ்நிலையோடு எங்கேயோ தொடர்புபடுவது
விளங்கமுடியாத விந்தைதான்.

கவிதையான கனவு, அழகு...

பாராட்டுக்கள் செல்வா...

இளசு அண்ணாவின் பின்னூட்டம், அருமையான வாழ்வியற் தத்துவம்...

இன்பக்கவி
15-02-2010, 01:30 PM
நன்றாக இருக்கு உங்கள் கனவு
வாழ்த்துக்கள்