PDA

View Full Version : நாம்



த.ஜார்ஜ்
13-04-2009, 02:20 PM
நேற்றைய யுத்தத்தில்
அறிமுகமானோம்.

கொள்கைகள் கிழித்த எல்லைகளில்
அமைதியிழந்த உத்தரவுகளோடு..
குற்றமற்ற பிணங்களிடையே
இன்னும் பசி தீரா ஆயுதங்களோடு...!

நீயோ நிராயுதபாணி.
சுட வேண்டும் உன்னை.
கொலைதான் என்றாலும்
எனக்கு விருது கிடைக்கும்.
நீ தியாகியாக்கப்படலாம்..!

வாழ்வின் கடைசி வினாடியில்
விழியில் கனவாய்
பையிலிருந்து குழந்தை படம் எடுத்து
முத்திக் கொண்டாய்.

எதிரியின் உறவு மற
என்ற தர்மம் மறந்து
சுட மறந்து...
சட்டென்று மனிதம் விழித்தேன்.

தேச துரோகமாம்.. நாம் இறந்து போனோம்.

இளசு
18-04-2009, 02:40 PM
ஓர் உன்னத மனிதநேயக் காட்சியை
நேரில் பார்க்கும் உணர்வை அளித்த கவிதை!

மனித உயிர்கள் எல்லாம் ஒரே தொகுப்பு - கடல் போல!
எல்லை பிரிவுகளாய் தடுப்புகள் கடலுக்குள்..
நீரே நீரை அழிக்கத் தூண்டும் அமைப்புகள்..


பறவைப்பார்வை பார்த்தால் நகைப்போம் இந்தச் செயற்கை கண்டு!

பாராட்டுகள் ஜார்ஜ்!

த.ஜார்ஜ்
20-04-2009, 05:40 AM
அன்பு நண்பர் இளசு...உங்கள் பகிர்வின் வரிகளும் அற்புதமானவை.பறவை பார்வையை நானும் பரிந்துரைக்கிறேன்.

ஆதவா
23-04-2009, 03:30 PM
யுத்தங்கள் அறிமுகப்படுத்துகின்றனவா என்ன. அவை ஏற்கனவே அறிமுகமானதொன்றை எதிர்க்க மட்டுமே விதிக்கப்பட்டவை.

மனிதனுக்கு ஆசை பிறந்த காலம் தொட்டு யுத்தங்கள் நிகழ்ந்து வருகின்றன. யுத்தங்கள் ஒருகாலத்தில் வீரத்தின் அடையாளமாக இருந்தது. மனித உயிர்கள் சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்களைப் போன்றும், வனங்களில் கொய்தெறியப்படும் பூக்களைப் போன்றும் நடத்தப்பட்டன.

யுத்தங்கள் யுத்தங்களாகவே இருக்கின்றன எப்பொழுதும்..

தேசங்கள் மூழ்கும் வரையிலும் யுத்தங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும்...

ஆனால்.... அங்கே மனிதம் விழிப்பது வீண்.... யுத்தவீரனுக்குண்டான லட்சணங்களை அவிழ்த்துவிடுவது அவமானம்..