PDA

View Full Version : நீ மறந்தவளின் நினைவுகள்....



Nanban
15-09-2003, 05:17 PM
நானும் என் தனிமையும்
அமர்ந்து பேசிக்
கொண்டிருக்கிறோம் -
பாலஸ்தீன, இஸ்ரேலிய
பிரச்னைகளை தீர்ப்பவர்கள் போல்...

என் தனிமையை
எப்படியாவது கொலை செய்துவிட
எண்ணம் கொண்டிருக்கிறேன் நான் -
அராபாத்தை கொலை செய்வதைத்
தீர்வாகக் கொண்ட இஸ்ரேலைப் போல்...

பின்லேடனின் நிழலைப் போல
என் தனிமை என்னை மிரட்டுகிறது -
நட்புடன் வந்து
நிலைகுலையைச் செய்யும்
மனித குண்டுகளாய்....

குரோதம் ஒன்றை வைத்தே
பேரம் நடக்கிறது....
ஒருவரின் அழிவிலே தான்
மற்றவரின் வாழ்வே!

என் தனிமை அறியவில்லை -
நான் வாழாமல்
தான் வாழ முடியாது என்பதை.

எனக்கும் தெரியும்
தனிமை இன்றேல்
எந்த கவிதைகளையும்
சுகங்களையும்
அசை போட்டு சுகம் பெற
இயலாது என்று...

புது வெள்ளம் பாயும்
வாய்க்கால் எலிகளாய்
பதுங்கி இருக்கும்
தனிமைத் துளிகள்
வெளிவந்து
எரிச்சலூட்டுகிறது -
எனக்கும் இடம் தா என்று.

உனக்கும் கொஞ்சம் இடம்
தருகிறேன் நிபந்தனையுடன் -
நீ மட்டும் வந்தால்.
அரசவையில் வீற்றிருக்க
ஆசனமும் தருகிறேன் -
நிபந்தனையுடன்.

எந்த ஒரு நிபந்தனையும்
என்னைக் கட்டாது -
ஏறிட்டு நோக்கும்
ஏளனப் பார்வையுடன்
மூக்கு விடைத்து
எந்தத் திசையில் பாயுமென்ற
கணிப்பிற்குட்படா காளையாய்
தனிமை கோபம் வீசி நிற்கிறது...

மத்துக் கடைசலின்
வெண்ணையாய்
திரளும் கோபம் -
கொலைவெறியுடன்
மது திராவகம் வீசுகிறேன் -
வயிற்றினுள்.

தனிமையே நீ
அமிழ்ந்து போ!!!
தடாகத் தாமரையாய்
தனிமை மிதக்கிறது -
அமிழ்ந்து போனவனாய் நான்.

கர்ப்பமுற்ற மேகமாய்
நான் கீழிறங்கி வந்து
கேட்கிறேன் -
உனக்கு என்ன வேண்டும்?

நான் வருவேன் - போவேன்
என்னிஷ்டமாய்...
எந்த நிபந்தனையுமின்றி
எனக்கும் ஒரு இடம் வேண்டும் -
நீ மறந்தவளின் நினைவுகளுக்கும் தான்.

இளசு
15-09-2003, 10:49 PM
" நீ மறந்தவளின் நினைவுகள் "
என்ன ஒரு சுகவேதனையான முரண்தொடை!
தேவதையின் பேய்நினைவுகளுடன்
அகிம்சை யுத்தம்
முடிந்து தொடரட்டும்!

என் பாராட்டுகள் நண்பன்!

அண்மையில் நீங்கள் எழுதிய கவிதைகளை
பெரும்பாலும் நான் (சரியாக? ) புரிந்து கொள்ள முடிவது
எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது.

என் இரசனை இந்த சில மாதங்களில் உயர்ந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் எளிமைப்படுத்தி எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்.
நுகர்வோனாய் என் சுயநலம் கலந்த நன்றி!

Nanban
16-09-2003, 07:53 AM
என் கவிதைகள் எளிமையாக ஆகிவிட்டது என்று பாராட்டியது குறித்து மிக்க நன்றி. எளிமையாக்க வேண்டும் என்று நான் எத்தனிக்கவில்லை. அதுவாக நிகழ்ந்திருக்கிறது. இதே எளிமையுடன் தொடர முயற்சிக்கிறேன்....

அதுபோலவே, தொடர்ந்து கவிதைகளை வாசித்து வருவதாலயே, உங்களை அறியாமலேயே, உங்கள் ரசனையும் உயர்ந்திருக்கும்.

எந்த ஒரு செயலையும் விரைந்து ஆற்றும் உங்கள் வேகம் கண்டு வியக்கிறேன்...

இக்பால்
16-09-2003, 08:50 AM
நடைமுறைக் கவிதையாக இருக்கிறதே!

தனிமை நீங்கள் இல்லாமல் வாழ முடியாது.
ஆனால் நீங்கள் தனிமை இல்லாமல் வாழலாம்.
பாவம் தனிமை.

ஒருவர் அழிவில்தான் மற்றவர் வாழ்வு.
ஆனால் வாழ்வதை பார்த்த பிறகு அழியலாமே!
பாவம் அழிவு.

வெளியில் வீச வேண்டியதை...
வயிற்றுக்குள் வீசி....
பாவம் வயிறு.

கவிதைக்குப் பாராட்டுக்கள். நல்ல வித்தியாசமான திறமைதான்.

-அன்புடன் அண்ணா.

Nanban
16-09-2003, 08:57 AM
மிக்க நன்றி, இக்பால் அவர்களே... உங்கள் விமர்சனம் கூட கவிதை நடையில் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.....

நன்றிகள்.....

இக்பால்
16-09-2003, 09:20 AM
எல்லாம் உங்கள் கவிதையை பார்த்த விளைவுதான்.-அன்புடன் அண்ணா.

karavai paranee
16-09-2003, 01:00 PM
வணக்கம்
நண்பனின் கவிதைகள் என்னால் புர்ந்துகொள்ள கடினமாகத்தான் இருக்கின்றது. ஏன் என்று தொயவில்லை. இருந்தாலும் இதமான கவிதை.

puppy
23-09-2003, 05:39 PM
நண்பனே...அருமை....வாழ்க்கையே முரண்பாடுகள் நிறைந்தது தான்..
அதை அழகாக சொல்லி விட்டீர்..இருந்தும் உலக விஷயங்கள்
தெரியாதவர்கள் கொஞ்சம் குழும்பி தான் போவார்கள்......வாழ்த்துக்கள்..

இ.இசாக்
23-09-2003, 05:44 PM
நல்ல சிந்தனையோட்டத்தோடு கவிதை நகர்கிறது
பாராட்டுக்கள் நண்பனே

சேரன்கயல்
24-09-2003, 04:37 AM
சுயத்தை சுரண்டிப்பார்க்கும் தளம் இந்த தனிமைதான்...
பயம் பூப்பெய்தச் செய்வதும் பலவேளைகளில் இந்த தனிமைதான்...
மறந்ததாய் சொல்லி மறக்காமல் இருக்கும் பல விடயங்கள் இந்தத் தனிமையில்தான் உரம் பெறுகின்றன...
அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பன்...வாழ்த்துக்கள்...

Nanban
24-09-2003, 11:00 AM
மறந்ததாய் சொல்லி மறக்காமல் இருக்கும் பல விடயங்கள் இந்தத் தனிமையில்தான் உரம் பெறுகின்றன...


கவிதையின் மொத்த சாராம்சமே இந்த வரிகள் தான். நன்றிகள் பல.