PDA

View Full Version : இலக்கிய(ப்) பதுமை!



ஆதவா
06-04-2009, 02:54 AM
எழுதியவர் - மெல்போர்ன் கமல் - இக்கவிதையை யாராலும் விமர்சிப்பீர்களா?

எனது கோரிக்கை!!

இலக்கியப் பாவை போல்
தினமும் என் இதயத்துள்
வலம் வருபவள்; பல
இதமான கனவுகளால் என்
உளத்தை(த்) தினமும்
கலக்கியே திரிபவள்!

கார் வண்ணக் குழலழகி
காந்தள் மலர்(க்) கண்ணழகி
பார் போற்றும் பேரழகி; என்னில்
பாசம் கொண்ட ஓரழகி!

அந்தியிலே நிதம் வந்து
அழகான பல கனவுகளை, என்
சிந்தையிலே உதிக்க வைக்கும்
சின்ன இடைக் கவியழகி!
விந்தை பல புரிபவளாய் என்னுள்
வியாபித்திருக்கும் மேலழகி!
பந்து போல என் மனதை(த்)
துள்ள வைக்கும்
பச்சை நிறக் கண்ணழகி!


வேதத் திருமகள்; வேள்விப் பெருமகள்
காதற் கனி மகள்; என்
கவிதைக் கருமகள்,
நேசக் கொடி மகள் ; என் நெஞ்சக் கவி மகள்!
பாசப் பெரு மகள்; எந்தன் இதய(ப்)
பாரின் தனி மகள்!

அவள்.......


கண்கள் இரண்டிலும் பல வண்ணங்கள்
கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்
தொட்டாலே போதை தரும் பெண்ணழகி; எனை(த்)
தோகை போல் சிலிர்க்க வைக்கும் கண்ணழகி!


வல்லினம் போன்ற முத்துப் பற்கள்; உன்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிய சொற்கள்
மெல்லினம் போன்றது உன் பேச்சு; உன்
மேனியில் தான் உள்ளது என் மூச்சு
இடையினம் போல் நெளியும் இடை; என்
இதமான கேள்விக்கு(த்) தருமா அது விடை??


உயிர் மெய் போல் தொடரும் எம் உறவு
உன்னால் இனிமையாய்க் கழிகிறது என் இரவு!
முற்றாயுதம் உன் முகம்; நான்
முதலிலே தொட்டது உன் நகம்
அளபெடை போலிருக்கும் மூக்கு; அதன் பின்
ஆய்தக் குறுக்கம் போல் உன் நாக்கு!


குற்றியலுகரம் உன் குறு குறுப் பார்வைகள்; அவை
குறும்பான கதை சொல்லும் நினைவுப் போர்வைகள்
இடைச் சொல்லாய் தொடரும் உன் நினைவுகள்; அவை
இதமான சுகம் தரும் கனவுகள்!


கனவினுல் நனவிலும் கவிதைகள் தருபவள்
காலையும் மாலையும் நினைவினுள் வருபவள்
முல்லை மலர்ச் சிரிப்பழகி; முத்து மலர் உதட்டழகி
சின்ன இடைச் சிவப்பழகி; சிங்காரத் தேனழகி!


மகரக் குறுக்கம் போன்றது உன் மார்பு; அதில் நான்
விழி மூடித் தூங்கினால் இல்லைச் சோர்வு!
பாவையவள் மேனி ஒரு மோனை, உன்
பஞ்சு போன்ற விரல்கள் நான் மீட்டும் வீணை!
எளிமையான குணங்களால் நீ ஓர் எதுகை; எப்போதும்
எனை விட்டுப் பிரியக் கூடாது உன் இருகை!


என் இதயத்துள் நிறைந்தவள்
என் இனிமைக்குள் உறைந்தவள்!
உன் கன்னமதில் இருப்பது ஓர் மச்சம்; அதைக்
கை தொட்டுக் கிள்ளினால் இல்லை எச்சம்!


அன்பே நீ ஓர் இலக்கியப் பயிர்; உனை
அணைக்காமல் பிரியாது எந்தன் உயிர்!
உணர்வுகளைத் தூண்டுவதால் நீ ஓர் உம்மைத் தொகை
உனைப் பிரிந்திருக்கும் தனிமையே என் வாழ்வின் பகை!
நடையழகால் நீ ஒரு தனி வினை; என் வாழ்வில்
எப்போதும் பிரிவேனா இனி உனை???


நீயோ ஒரு இலக்கியப் பதுமை, உன்
நினைவுகளால் என்னுள் தினமும் பல பல புதுமை!
பஞ்சு போல் இருக்கும் உன் கைப் பகுதி; அதைப்
பற்றினால் என்றும் இல்லை என்னுள் விகுதி!


’நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!


’நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!

- மெல்போர்ன் கமல்

ராஜா
09-06-2009, 04:43 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..!

அனுபவிச்சுப் பாடியிருக்காரு.. பேரு கமலாச்சே..அதான் காதல் கட்டவிழ்ந்து கலக்குது..!