PDA

View Full Version : மரம்



பாரதி
05-04-2009, 03:49 PM
மரம்

மரம் முழுவதும்
பூக்களும் காய்களுமாய்
கனிகளும்தான்..
அங்கிங்கென்னாத படி
பறவைகளின் சத்தம்
பரவசக்கூச்சலாய்...
அடிக்கும் வெயிலையும்
அணைத்து தணலாக்கும்
அம்மரத்தின் அடிவாரம்.
அடியில் இருக்கும் வேரைக்கூட
விழுதுகள் தாங்கிப்பிடித்திருக்கும்.
காணுமிடமெங்கும்
பசுமை பசுமை..
காற்று வீசும் போதெல்லாம்
கலகலவென்று சிரித்துக்கொண்டே
இருந்தன இலைகள்.
காலம் மாறியது
காற்றும் வீசியது..
இப்போதெல்லாம்
காலடியில் மிதிபட்ட
காய்ந்த இலைகள்தான்
காணக்கிடைக்கின்றன.
இலைகளின் அடியில்
வேர்களும்...
கூடாக நின்றது மரம்..
கரையக்கற்ற குஞ்சுகள்
காற்றினூடாக கலந்து சென்றன.
விழுதுகளும் கூட
வேரை உறிஞ்சத்தொடங்கின.
எதிர்காலம் இனியில்லையென
மரத்திற்கு உரத்தையிட்டு
பறந்தன பறவைகள்.
வீடாக நினைத்தவை
வேறிடம் தேடின
இது இலையுதிர்காலம்
என்பதை அறியாமலே...
கூடாக இருப்பது கூடாரமாகும்
வசந்தம் வரும் என்பதை
உறுதியாய் உணர்ந்த
வேர்கள் மட்டும்
பார்வைக்களுக்கப்பால்...

சிவா.ஜி
05-04-2009, 05:37 PM
”குளத்திலே தண்ணியில்லே
கொக்குமில்லே மீனுமில்லே”

இந்த வரிகள் நினைவுக்கு வந்தன. செழித்த நிலையில் விருட்சம் விருப்பமாக இருந்தது. உதிர்ந்த நிலையில் உதறப்பட்டது. கெட்டியான வேரையறியாத பறவைகளும் பச்சையைத்தான் பார்த்தன....விலகின.

தாங்கிப்பிடிக்கும் வேர்கள் உள்ளவரை விழுதுகள் தலைவணங்கித்தான் ஆகவேண்டும்.

வசந்தம் வரும் நாளில்...தேடிவரும் பறவைகள் தெரிந்துகொள்ளும் விருட்சத்தின் வீரியத்தை.

நல் கருத்து கூறிவந்த மரம்...ஒரு போதிமரம். வாழ்த்துகள் பாரதி.

அமரன்
06-04-2009, 07:31 AM
இந்தக் கவிதை அகராதியில் பல்பொருள் ஒரு சொல்லாய் மரம்.

இலையுதிர்காலம் காலத்தின் கோலம்....

கூடுகள் பறவைகளின் உழைப்பு. மரத்துக்கு மரம் கட்ட வேண்டியது வாழ்வாதார இயல்பு.

வாழட்டும்... வாழ்த்தட்டும்.. வருகின்ற ஒவ்வொரு தலைமுறையும்.

நெடுநாட்களின் பின் உங்கள் கவிதை.

நன்றியும் பாராட்டும் அண்ணா.

பாரதிக் கவிவெள்ளம் தொடர்ந்து பாய என்னாசை.

ஆதவா
06-04-2009, 03:15 PM
அந்த கடைசி வரி!!! ரொம்பவே பாதித்தது!!

அப்பா மகன் !!! குடும்பம்... !!!

உதாசீனத்தைக் காட்டிலும் பெரிய தண்டனை வேறேதுமில்லை. மகன் தன் தந்தைக்குச் செய்யும் உதாசீனம் எக்கொடூரத்திலும் அடக்கவியலாதது!

சிவா.ஜி, அமரன் ஆகியோரின் பின்னூட்டங்கள் பலம்!!

அறிஞர்
06-04-2009, 03:37 PM
நான் இருக்கும் இடத்தில் கிட்டட்த்தட்ட 4-5 மாதங்கள் மரங்கள் பட்ட மரங்கள் போல வெறும் குச்சியாக இருக்கும். புதிதாய் பார்ப்பவர்களுக்கு இது பட்ட மரமாக தெரியும். ஆனால் அவை துளிர்த்து.. நிறம் மாறும் பொழுது... செழிப்பை சொல்ல இயலாது..

"பட்ட மரம் என்று எண்ணலாம்
ப்னீக்ஸ் பறவை போல் துளிர்ப்போம்"
என்பது மரம் சொல்லும் பதில்..


http://www.umaine.edu/teaching/images/Winter%20Tree.jpg

http://www.shutterandpupil.com/images/winter_tree.jpg

அறிஞர்
06-04-2009, 03:38 PM
அந்த கடைசி வரி!!! ரொம்பவே பாதித்தது!!

அப்பா மகன் !!! குடும்பம்... !!!

உதாசீனத்தைக் காட்டிலும் பெரிய தண்டனை வேறேதுமில்லை. மகன் தன் தந்தைக்குச் செய்யும் உதாசீனம் எக்கொடூரத்திலும் அடக்கவியலாதது!
! மாற்றான கண்ணோட்டம் அருமை..