PDA

View Full Version : பழைய நண்பன்



ஆதவா
05-04-2009, 11:38 AM
மறந்து போகாமல் அடிமனதின் ஆழத்தின் இன்னும் உரசிக்கொண்டிருக்கும் பழைய நண்பர்களை மீளக் காணவதில் உள்ள தனி சுகம் வேறெந்த உறவில் இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. பழைய நினைவுகள் எல்லாமே அச்சமயத்தில் குவிந்து ஒன்றோடொன்று மல்லுக்கட்டி இருவருக்குமிடையேயுண்டான உரையாடலில் முந்தி நிற்கும்.

ஆண் நண்பர்களின் உரையாடல் பெரும்பாலும் பெண்களைக் குறித்ததாக இருக்கிறது. சுண்டியிழுக்கும் ரசனைக்காரிகளின் வடிவம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றோ, திருமணத்திற்கு முந்திய அல்லது பிந்தைய வாழ்நிலை குறித்தோ பேசப்படுவதுண்டு. யாராவது ஒருவர் இடையில் நுழைந்து ஒரு நூலை மட்டும் உருவி பேச்சைத் திருப்ப முயலலாம். அப்பொழுது நாங்கள் இரவுகளைக் கொல்வதைக் குறித்தோ அல்லது கற்பனையில் அடங்காத காமத்தை எப்படிச் செயலாக்குவது என்பது குறித்தோ பேசிக் கொண்டிருப்போம்.

ஏதாவது ஒரு கடையின் வாசலில் அல்லது மூடப்பட்டிருக்கும் கடையின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசுவது வழக்கமாக இருக்கிறது. வாழ்வை முதுகில் சுமந்து கொள்ளாத பருவத்தில் எல்லோரும் இருப்பதால் எங்கள் முதுகுகள் கூன் விழுந்து போகாமல் இருக்கின்றன. பழைய நண்பர்களைப் பார்க்கும் பொழுது நான் முதலில் கவனிப்பது அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதுதான். திருமணம் நண்பர்களுக்கிடையான சிறு விரிசலை ஏற்படுத்தத் தயாராக நிற்கின்றன. பெண்களுக்கு அவ்விரிசலின் தீவிரம் மிக அதிகமாக இருக்கிறது,.

கிருஷ்ணனை எங்கள் பகுதி கோவில் திருவிழாவின் பொழுதுதான் பார்த்தேன். பழைய நண்பன் என்பதால் சட்டென அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாத தூரத்தில் இருந்தான். அவனது முகத்தில் அப்பொழுதுதான் மனைபுகுந்த புதுமனைவி போன்று சிரிப்பு குடியேறியிருந்தது. எப்படி இருக்கே டா என்று சொல்லிக் கொண்டே கைக்குலுக்கினான். இரத்தம் மீண்டும் புதுப்பித்துச் செல்லுகிறதோ என்று தோணும் அளவுக்கு மகிழ்ச்சி பீறிட்டது எனக்குள்ளும்.

அவனை இறுதியாக பள்ளியில்தான் பார்த்தது. பள்ளிக்கும் எனக்குமான தொடர்பு சட்டென்று அவிழ்ந்து விட்டதால் நண்பர்கள் எல்லோருமே வெகு தொலைவில் இருந்துவிட்டார்கள்.

பள்ளிக் காலத்தில் கிருஷ்ணன் ஒரு சராசரி மாணவன். பெரும்பாலும் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாலும் சிலமுறை தோல்விகண்டதுமுண்டு. அப்பொழுதெல்லாம் அதைப்பற்றிய கவலைகளை அவன் சுமந்து நடந்ததாக நான் பார்த்ததில்லை. எனக்கோ தோல்வி என்பது அவமானத்தின் பெரும் சின்னமாக இருந்தது. அதற்காகவே நான் கடுமையாக போராடவேண்டியிருந்தது.. கிருஷ்ணனது வீட்டினைப் போன்று தோல்விகளில் சுதந்திரம் எனக்கு யாரும் கொடுத்து வைத்திருக்கவில்லை.

கிருஷ்ணன், தன் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றிருக்கிறான். பரந்த பச்சைக் காடுகளின் வழியினூடாகவும் நாற்றங் கமழும் பீக்காடுகளைத் தாண்டியும் தான் அவனது வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. இன்னும் மக்களின் கண்களில் அகப்படாமல் பச்சை ஆடை போர்த்தியிருந்த அப்பகுதியின் ஒரு தூரத்தில் அவனது வீடு இருந்தது. அதை வீடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. கூரை வேயப்பட்டிருந்தது. வாசல் மிகக் குறுகலாகவும் உயரம் குறைந்ததாகவும் இருந்தது. இருவர் மட்டுமே படுக்கக்கூடிய இடத்தில் அவரது அப்பா, அம்மா, அவன் என மூவரும் குடியிருந்தார்கள். அவர்களது வீட்டின் பெரும்பாலான பொருட்கள் சமையல் பொருட்கள்தான். ஒரு ஆட்டோவில் அத்தனையும் ஏற்றிவிடலாம் அவ்வளவு குறைவு...

அவனை மீண்டும் பார்த்ததில் மெல்ல மெல்ல பல விஷயங்கள் வெளிவந்தன. கூரை வீடும், சுள்ளிக்காடும் ஒழிந்து மூளியானதை சற்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான். பல வேலைகளைச் செய்தவன் ஒருவேலைக்கும் உருப்படமாட்டான் என்பது போல, அவனுக்கு எந்த வேலையும் அமையவில்லை. திருவிழாவில் நண்பர்களோடு இணைந்து பணம் திரட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, கம்பம் நடுவது போன்ற காரியங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினான். கிடைக்கும் கூலி வெகு சொற்பம். வாழ்க்கையை நடத்த அது போதுமானதாக இருக்காது. ஆனால் இன்று இதைவிட்டால் வேறு வழியுமில்லை என்றான்.

திருமணம் ஆகாமல் தடைபடும் செவ்வாய் தோஷமும், அபகரிக்கப்பட்ட நிலமும், அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பும் அவனது வாழ்க்கைப் பாதையை சீரழித்ததாகக் கூறினான். உண்மைதான். நம் வாழ்க்கையை நம்மால் மட்டுமே தீர்மானிக்க முடிவதில்லை. வேறு சில கைகள் தூக்கி விட்டோ, வேறு சில கால்கள் உதைத்தோ நிர்ணயிக்கப்படுகிறது! கிருஷ்ணனோடு பேசியது சுமார் பத்து நிமிடங்கள்தான், அவனைப் பார்க்காதிருந்த இந்த பத்து வருட வாழ்க்கையை அந்த பத்து நிமிடத்தில் அடக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு ப்ரிண்டிங் பட்டறையின் முகவரியைக் கொடுத்துவிட்டு என் வீட்டுக்குச் சென்றேன். என் முதுகில் பத்துவருட வாழ்க்கையைச் சுமந்ததைப் போன்ற உணர்வு இன்னும் இருக்கிறது. பழைய நண்பர்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் என்று உள்ளூரச் சொன்னது அவனது கைபட்ட வியர்வைத் துளிகள்!

அன்புடன்
ஆதவா//

(முந்தைய திரிகளுக்கு பதிலளித்த பா.ராஜேஷ், இளசு, பாரதி மற்றும் பார்வையிட்டு அனைவருக்கும் நன்றி.. திரி திறப்பதற்கு நேரமெடுப்பதால் என்னால் அந்தந்த திரிகளில் நன்றி தெரிவிக்க முடியவில்லை)

பாரதி
07-04-2009, 01:24 PM
பழைய சோறு போன்று இந்தப்பதிவும் சுவையானதே. நட்பில் "பழைய" என்று உண்டா தெரியவில்லை. நாம் நேசிக்கும் நட்புகளின் வாழ்வில் நடக்கும் விடயங்கள் நம்மையும் பாதிக்கின்றன என்பதற்கு இப்பதிவும் ஒரு எடுத்துக்காட்டு.

அரசுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் செவ்வாய் தோஷமும் கைகோர்த்து வாழ்க்கைப்பாதையை வழிமறிப்பது குறித்த வாக்கியம் கவலையைத்தந்தாலும் நல்ல எழுத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பத்துவருட வாழ்க்கையை பத்து நிமிடத்தில் உணர்த்திய கிருஷ்ணனின் வேர்வைத்துளிகள் விரைவில் ஆவியாகட்டும். இயன்ற அளவில் உதவிய உங்களின் பரந்த மனப்பான்மையை பாராட்டுகிறேன் ஆதவா.

ஆதவா
07-04-2009, 04:26 PM
மிக்க நன்றி பாரதி அண்ணா!!

விகடன்
13-04-2009, 05:27 AM
நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். இதைக்கதை என்று பார்க்க முடியாமல் உள்ளது. எனக்கென்னவோ, உண்மையாக் நடந்த சம்பவத்தைத்தான் இங்கு பதிந்திருப்பதுபோல தென்படுகிறது.
எவ்வாறாக இருந்த போதிலும், பதிவும் கருவும் அபாரம்.

என்னுடன் படித்த பாடசாலை நண்பர்களை தேடிப்பிடிக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கும் வெகுவாக உள்ளது.அது எவ்வளவிற்கு சாத்தியமென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

ஆதவா
13-04-2009, 01:22 PM
இது உண்மை சம்பவம்தான் ஜாவா.. மிக்க நன்றி!!

த.ஜார்ஜ்
26-04-2009, 08:35 AM
அவன் என்னோடு கல்லூரியில் படித்தவன்.மிகவும் ஏழ்மையில் இருந்தாலும் எந்நேரமும் கலகலப்பாக இருப்பான்.ரசிக்க ரசிக்க பேசுவான்.எல்லா பாடங்களிலும் தோற்றுப் போனதற்கு விருந்து(பார்ட்டி) வைத்து கொண்டாடியவன்.அம்மா இறந்த நேரம்.'இனி எங்க அப்பா யாரை கட்டிபிடிச்சிட்டு படுப்பார்' என்று சிரித்தவன்.

கல்லூரி காலம் கடந்தபின் அவ்வப்போது விழா வாழ்த்துக்களை ஒரு தபால் அட்டையில் எழுதி தப்பும் தவறுமான முகவரியுடன் [வந்து சேர்ந்துவிடுகிறது!] அனுப்பிவைப்பான். பதிலுக்கு அனுப்ப அவன் முகவரி இருக்காது.

ஒருநாள் பஸ்ஸில் செல்கையில் எதேச்சையாய் காணமுடிந்தது.பிளாட்பாரத்தில் ஒருக்களித்து படுத்துக் கொண்டு வலது கையூன்றி தலைக்கு முட்டு கொடுத்து,காலாட்டிக் கொண்டே பீடி பிடித்துக் கொண்டு கிடந்தான்.தாடி,நீண்ட தலை முடி,அழுக்கேறிய உடை..அவனேதான்.அதிர்ச்சியாயிருந்தது.

பிறகொரு நாள் இரு சக்கர வண்டியில் அந்த பக்கம் போன பொது தேடினேன்.அவன் வீடு இருந்த இடத்தில் அடுக்குமாடி வியாபார கட்டடங்கள். "அது கஞ்சா கேசாச்சே,எங்க இருக்கும்னு யாருக்கு தெரியும்" காணகிடைக்கவில்லை.

ஆனால் இப்போதும் எனக்கு வாழ்த்து அட்டைகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.