PDA

View Full Version : மனத்தட்டுகள்



ஆதவா
03-04-2009, 04:37 PM
நிரம்பி வழியும் பகலை மெல்ல மெல்ல துடைக்கும் இரவு நேரத்தில் தெருவில் விளக்குகள் சிரித்துக் கொண்டிருந்தன. குதறப்பட்ட தார்ச்சாலையின் வெப்பம் அடங்கிக் கொண்டிருக்க, அத்தெருவையே இருள் கவ்வி தன்னுள் இழுத்துக் கொண்டிருந்தது. பகல் முழுக்க நன்கு புணரப்பட்ட தெருவின் அயர்ச்சியை இரவுக்கு முந்திய நேரத்தினில் காணலாம்.

சுப்பைய்யா காலனி என்றழைக்கப்பட்ட அப்பகுதியில் இறுதி தெருவின் விளிம்பில் அவ்வளவாக கவனிக்கப்படாத பிள்ளையார் கோவிலின் முன் பேசிக்கொண்டிருப்பதுதான் அந்த பெரியவரின் அன்றாட வழக்கம். அவரது உரையாடலைக் கவனிக்கவோ, கேட்கவோ எவரும் அங்கு இருக்கமாட்டார்கள். விளக்கு உமிழும் ஒளியை சிறைபிடிக்க பூச்சிகள் அலைவது போல, அவரது வார்த்தைகளை சிறைபிடிக்க மெளனம் அலைந்து கொண்டிருக்கும். கடந்து செல்லும் மனிதர்களின் கேலிக்குறியாக அப்பெரியவர் காணப்பட்டார். ஓயாமல் இரைந்து பொழுதுக்குள் கரைந்து செல்லும் சப்தங்களின் ஊடாக அவரது பேச்சுக்கள் நிறைந்திருக்கும் மிளிர்ந்து நடக்கும் வெறுமையின் அங்கங்கள் அவரது பேச்சை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கலாம். அல்லது வெறும் கல்லெனவே அமர்ந்திருக்கும் பிள்ளையாரிடம் அவர் பேச்சுவார்த்தை கொண்டிருக்கலாம். மெல்லிய குரல் கொண்டவராதலால் பெரும் நிசப்தங்களைக் கலைக்க அவரால் முடிவதில்லை. அருகே இருக்கும் எவருக்கும் அவ்வளவு எளிதில் அவரது குரல் சென்றடையாது. பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கண்கள் யாரையோ பார்த்துக் கொண்டிருப்பதாக இருக்கும். சிலசமயம் கண்களை மூடி மெளனமாக இருப்பார், அந்த சமயங்களில் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று எனக்குள் சம்மதமிட்டுக் கொண்டேன்.

அந்த பெரியவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கலாம். நன்கு கருத்த மேனி, மீசை, தாடியெல்லாம் நரைத்து சற்று சுருங்கிய முகத்தோடுதான் அவர் எப்போதும் இருப்பார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை.. சற்று பருமன்.. அவ்வளவுதான் அவரது மொத்த உருவமும். அந்தி சாய்ந்த பொழுதுகளில் எனது பள்ளிவேளை முடிந்தபிறகுதான் அவரை தினந்தோறும் சந்திக்க நேரிட்டது. முனைப் பிள்ளையாருக்கு எதிர் திசையில்தான் அவர் பேசிக் கொண்டிருப்பார். கை கால்களை அசைக்க மாட்டார், தனது புட்டத்தில் ஒட்டியவாறு இரு கைகளையும் கட்டிக் கொண்டு பேசுவார். அவரைக் காணும் பொழுதெல்லாம் மனதுக்குள் முளைக்கும் வியப்புக்கு மட்டும் அளவில்லாமல் இருந்தது. என்ன ஆனாலும் சாயங்காலங்களை அப்பிள்ளையார் கோவில்முன்பே கழிப்பார். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பதும் ஆச்சரியமாகவே தென்பட்டது ; எதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்? அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது ஆவிகளோடு பழக்கம் கொண்டவரா என்ற கேள்விகள் எழுந்தாலும் அவரிடம் பேசுவதற்கு எனக்கு தைரியம் போதவில்லை. பிள்ளையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட அவரிடம் எந்த ஒரு விசாரணையும் மேற்கொண்டதாக நான் கண்டதில்லை. எல்லோருடைய மனதிலும் அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என்ற வடிவம் அமர்ந்து கொண்டிருக்கலாம்.

அவரைப் பற்றி தெரிந்ததாக சொல்லுபவர்களெல்லாம் "சொத்து பிரச்சனை அதான் பைத்தியமாய்ட்டான் கிழவன்" என்றோ, " குடும்பத் தகறாரு.. கெழவன் உளறாரு" என்று நையாண்டி நிறைந்த சந்தேகங்களையோ அல்லது அவரவர் கருத்துக்களையோ நிரப்புவார்கள். பிள்ளையார் கோவில் பூசாரி சிலசமயம் அப்பெரியவரைத் திட்டியபடியே அர்ச்சனை செய்வதைக் கண்டிருக்கிறேன். பூசாரியின் கோபத்திற்கு இவர் என்ன செய்திருப்பார் என்பது தெரியவில்லை. விரோதம் என்பது முன்பின் தெரியாதவர்களோடு வருவதென்பதால் கோபம் ஏற்பட்டிருக்கலாம். பூசாரி ஒருமுறை தன் கையிலிருந்த சொம்பில் தேக்கி வைத்திருந்த நீரை உள்ளங்கையில் ஊற்றி அப்பெரியவரின் தலையில் தெளித்ததைப் பார்த்திருக்கிறேன். அக்கால கட்டத்தில் எதற்காக அப்படிச் செய்தார் என்று அறிந்து கொள்ள நினைக்கவில்லை.

பின்னொரு இரவில் அவரைப் பின் தொடர்ந்து செல்லவேண்டிய ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அத்தெருவின் மத்தியில் உள்ள எனது நண்பன் வீட்டுக்கு நான் தினமும் செல்வது வழக்கம். நானும் எனது நண்பனும் இணைந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆயத்தமானோம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவது அப்பெரியவருக்கு ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். இரண்டாவதாக அவர் ஆவிகளோடு பேசுபவர் என்று நண்பன் வீட்டு பால்காரர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இருவரும் அவரைப் பின் தொடர்ந்தோம். வழிநெடுகிலும் அவர் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டபடியே சென்றார். அவர் இயற்கையோடு பேசுபவர் போன்று மரங்கள் தென்பட்டால் நின்று பேசுவார். மரக்கிளைகளில் வேதாளம் தங்கியிருக்கும் என்ற நம்பிக்கைகளை வளர்த்து வைத்திருந்ததால் இனம்புரியாத அச்சத்தோடு மேலும் அவரைப் பின் தொடர்ந்தோம். இரு தெருவுக்குத் தள்ளி மூன்றாவது தெருவில் அவர் திரும்பினார். திரும்பியவர் எங்கள் இருவரையும் கவனித்தார். நாங்கள் வேறெங்கோ செல்வது போல நடந்து கொண்டோம். சற்று நேரத்திற்கெல்லாம் அவரது வீடும் வந்துவிட்டது. நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அவரது பெண்ணை அன்று பார்க்க முடியவில்லை (பிறிதொருநாள்தான் தெரிந்தது அப்பெண்ணுக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருப்பது!) இருவரும் வீடு திரும்பினோம். அவருக்காக நாங்கள் செலவிட்ட நாழிகைகள் இவ்வளவே!

பெரியவரின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சோகம், மனதை விட்டு நீங்காமல் அடம்பிடித்து இடம்பிடித்திருக்க வேண்டும். கேலிக்குறியாக இருந்த அவர், ஒருசில நாட்களில் கேள்விக்குறியாக மாறினார். ஒவ்வொருவருக்கும் மனத்தட்டுகள் ஒழுங்காக, நிரலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும். ஒழுங்கற்ற நிலையில் தட்டுகளின் இடமாற்றத்தினால் பெரியவரைப் போன்ற மனக்கோளாறுகள் ஏற்படுவதுண்டு! . ஒருநாள் அவர் இறந்து போனதாக அவரது வீட்டின் முன்பு பந்தல் கட்டியிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தானாக விதிக்கப்பட்டிருக்கும் கால இடைவெளிகளில் ஒருசிலர் மறைந்தும் வடுக்களை விட்டுச் செல்வார்கள். அப்பெரியவரின் இறப்பு அப்படியானதொரு வடுவை என் நெஞ்சில் இட்டுச் சென்றது. அவரது இறப்பு அவருக்குத் தெரியுமா எனும் கேள்வி இன்னும் என்னுள் எழும்பிக்கொண்டே இருக்கிறது. இறக்கும் ஒவ்வொருவருக்கும் தனது இறப்பு பற்றி தெரியவேண்டிய அவசியமில்லையெனினும் தான் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் அத்தருணங்கள் ஊஞ்சல் கட்டி ஆடுமா ஆடாதா?

இப்பொழுது பிள்ளையார் கோவிலின் முன்பு பேசிக்கொண்டிருக்க யாருமில்லை. அத்தெருவைக் கடந்து செல்லும் ஒவ்வொரு பொழுதுகளிலும் அப்பெரியவர் பேசிய வார்த்தைகள் மட்டுமே அக்கோவிலைச் சுற்றிக் கொண்டிருக்கும். வார்த்தைகள் என்பது உடைந்துபோன மெளனத்தின் குறியீடுகள். யாருக்கும் தெரியாமல் குறியீடுகள் அவருக்குள்ளே முடிச்சிட்டு முடிந்து போனதுதான் அவிழ்க்க முடியாத சூக்குமமாக எனக்குத் தெரிகிறது. என் மனத்தட்டுகளில் அது என்றுமே அவிழ்க்க முடியாததாகத்தான் இருக்கிறது!

அன்புடன்
ஆதவா!

பாரதி
04-04-2009, 07:32 AM
நம்முடைய உறவினர்களாக அல்லது தோழர்களாக இருப்பவர்கள் என்றில்லை ; என்றேனும் ஒரு நாள், ஒரு கணம் நம்மை அறியாமலே ஈர்க்கப்பட்டவர்களின் பிம்பம் என்றும் மனதில் இருக்கும். அசை போடும் சமயங்களில் தானிருப்பதை உணர்த்த அசைந்து கொடுக்கும்.

இந்தப்பெரியவரும் அப்படித்தான் இருந்திருப்பார் போலும். பிள்ளையாரிடம் தன்னுடைய குறையை முறையிட்டால், என்றாவது ஒரு நாள் நிச்சயம் அவர் வந்து தீர்த்து வைப்பார் என்றெண்ணிக்கூட பேசிக்கொண்டு இருந்திருக்கலாம். யார் கண்டது?

ஆனால் அவரைக்குறித்து தீர அறியாமலே வெளிப்பிம்பத்தை மட்டுமே அறிந்து மனத்தட்டில் எடை போடும் மனிதர்கள் அதிகம்தான் என்பதை உங்கள் வரிகள் காட்டி இருக்கின்றன. வதந்திகளில் வசதியாய் மனிதரைக்குறித்த வடிவத்தைக் கொண்டே எடைபோட முயலும் இந்த அவசர காலத்தில் அவர் யார், என்ன நடந்தது, ஏனிப்படி இருக்கிறார் என்பதை ஆராய யாருக்கு நேரம் இருக்கிறது?

தட்டுகள் உயர்கிறதா, தாழ்கிறதா என்பதை விட தராசு முள்ளையே அனைவரும் பார்ப்போம். இல்லையா..?

நல்ல வர்ணனை ஆதவா.

கவிதைக்குரிய வரிகள் கட்டுரைகளிலும் இடம் பெறுவது சற்றே வேறுபட்ட தோற்றத்தை தருகிறது. ஆயினும் உவமைகள் நன்று. மனதில் பதிந்திருக்கும் தட்டுகள் உங்கள் எழுத்து வெள்ளத்தில் தொடர்ந்து மிதந்து வரட்டும். உங்களுக்கு என் இனிய வாழ்த்தும் பாராட்டும்.

கீதம்
10-01-2011, 10:47 PM
மனத்தட்டில் பிரதிபலித்த பிம்பங்களை மன்றத்தட்டில் பரிமாறிப் படையலிட்டபோதும்... ஆ(ற்)றாமையால் அள்ளி ருசிக்கமுடியவில்லை.

மனதின் பிறழ்வுகள் அப்பெரியவரை அந்நியப்படுத்தினாலும் அவரைப் பொறுத்தவரை அவர் அவராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

மனதின் வலி எழுத்தின் வழியேப் பாய்ந்து வெளிப்படுகிறது. பாராட்டுகள் ஆதவா.