PDA

View Full Version : 25 வருடங்களுக்கு முன் One-Touch



leomohan
03-04-2009, 09:56 AM
முதன் முதலாக எங்கள் வீட்டிற்கு ஒரு 2-in-1 வந்திருந்தது. National Panasonic. பழைய படங்களில்

இன்னும் காணலாம்.அனைவரும் தூர நின்று பார்க்கலாம். யாரும் வீட்டில் இல்லாத போது தொட்டுக் கொள்ளலாம்.

சத்தம் போடாமல் Play Stop Rewind Forward பொத்தான்களை அமுக்கி கொள்ளலாம். Record பட்டனை

தொட மட்டும் யாருக்கும் உரிமை இல்லை. வானோலி கேட்டுக் கொள்ளலாம்.

இப்படியான ஒரு வஸ்து எங்கள் வாழ்கையை மாற்றிவிட்டது. பள்ளிவிட்டு வந்ததும் அதனுடன் ஒரு romance.

ஒரு முறை அக்காவை பாட சொல்லிவிட்டு பதிவு செய்தார் எங்கள் சித்தப்பா. யாரும் சத்தம்போடக்கூடாது, யாரும்

இங்கே அங்கே போகக்கூடாது கதவை மூட திறக்க கூடாது போன்ற பல கட்டுபாடுகள். அனைவரும் அமைதியாக

உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க பாடல் பதிவானது. வானோலியில் அக்காவின் பாடல் கேட்டது போல ஒரு

பெரிய மகிழ்ச்சி.

அது தான் சத்தம் போடக்கூடாதே என்று பல நாட்கள் வானோலியில் வரும் பாடல்கள் பதிவாகும் போதும் வீட்டில்

மூச்சு. இவ்வாறு இருக்க சித்தப்பாவே தன் கட்டுபாடுகளை மீறி வானோலியில் வரும் பாடல்கள் பதிவு செய்யும் போது

பேசினால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்ல எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி. அப்புறம் என்ன முயன்று

பார்த்துவிடலாமே என்று ஹோஹோ என்று கத்தி தொண்டை தண்ணி தீர்த்துவிட்டு பதிவானதை மீண்டும் கேட்டால்

ஹோஹோ எல்லாம் waste தான்.

அப்புறம் எடக்கு முடக்கா செய்துவிட்டு அக்கா பாடல் ஒலிநாடாவில் எல்லாம் காலி. வீட்டில் ஒரே திட்டு. Coney

எனும் ஒலிநாடா. அழகாக இருக்கும். ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு தான். பிறகு தான் 90 நிமிட 60 நிமிட

Sony ஒலிநாடாக்கள். அதுவும் துபாயிலிருந்து அப்பாவின் நண்பர்கள் யாராவது வாங்கி வந்தால் தான். தி்ட்டி தீர்த்த

பிறகு வீட்டிற்கு வந்த மாமா அட ஏன் பசங்களை திட்டறீங்க இங்கே பாருங்க பின்னாடி ஒரு சின்ன Plastic

இருக்கும். இதை உடைச்சிட்டீங்கன்னா பாடல் பதிவு செய்தது அழியாது. Record button அமுக்கினாலும்

அமுக்க முடியாது. Read Onlyக்கு முதல் பாடம். ஆஹா. இது அற்புதமான விஷயமாச்சே என்று One-touch

பாடத்தில் சேர்த்துக் கொண்டோம்.

இருப்பதோ சொற்ப cassettes. இதை வைத்துக் கொண்டு 10 நிமிட பாடலக்காக பின்னால் இருக்கும் தடுப்பை

உடைப்பதா என்றே வருத்தப்பட்ட ஒரு மத்தியான நேரத்தில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு காபியுடன் வீட்டிற்கு வந்த

இன்னொரு மாமாவிடம் புலம்பியதில் அட இதுக்கு போய் ஏன் கவலைபடறீங்க, ஒரு சின்ன காகிதம் கொண்டு வாங்க

என்று சொன்னார். இன்னொரு பிரம்மாண்டமான விஷயம் நடக்கப்போகிறது என்று சரித்திர சிந்தனையுடன் நான் ஒரு

காகிதம் கொண்டு வந்து கொடுக்க அவர் அதை சிறியதாக மடித்து பின்னால் இருந்த துளையை அடைத்துவிட்டார்.

ஆஹா நான் என்ன மாங்காய் மடையனா ஒரு electronic சமாச்சாரத்தில் இவர் காகிதம் வைத்தால் அது புரிந்துக்

கொள்ளுமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் அந்த நாடாவை போட்டு Record ஐ தட்டினால்

எகிறிக் கொண்டிருந்த பொத்தான் இப்போது உலக சமாதான உடன்படிக்கை செய்துக் கொண்டது போல் அமைதியாக

உள்ளே சென்று பதிவு செய்ய துவக்க ஒரு ஆச்சர்யம் தான் எங்களுக்கு.

இவ்வாறா வீட்டில் வரும் பல குழந்தைகளின் நண்பனாகவும் பாட்டு நாடகம் வில்லுப்பாட்டு என்று நான் பள்ளியில்

அடிக்கும் கூத்துகளுக்கு ஒரு சரித்திர ஏடாகவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக National

Panasonic One-Touch Tape Recorder 2-in-1 எங்கள் வாழ்கையில் முக்கிய அங்கமாக ஆகிவிட்டது.

மிகவும் காதல் மிகுதியுடன் நான் ஒரு நாள் அதை கொஞ்சிக் கொண்டிருக்க ஏதோ கோளாறு ஆனது. நாம் தான்

எதிர்கால விஞ்ஞானியாயிற்றே என்று அதை நோண்டிக் கொண்டிருக்கும் போது 120-240 என்று ஒரு பொத்தான்

பின்புறத்தில் காண அட இதே இந்த பக்கம் தள்ளித்தான் பார்ப்போமே என்று செய்ய டப்பென்று சத்ததுடன் உயிர்

விட்டது எனதருமை ஒன்டச்.

அப்பாவின் நண்பர் வந்து அதை எடுத்துச் சென்று சரி செய்யது தர 50 ரூபாய் செலவிற்கு பிறகு கற்றுக் கொண்ட

மின்சார பாடம் 120-240க்கும் இருந்த வித்தியாசம்.

வானோலியில் கூத்தபிரான் நடத்தும் சிறுவர் சங்கமாகட்டும் இரவில் வரும் ஒரு மணி நேரம் நாடகமாகட்டும் ஒரு பட

பாடல்களாகட்டும் கோவாப்டெக்ஸ் கடையிலே சின்னக்குட்டி நாத்தனார் சில்லறையை மாத்தினார் கோவாப்டெக்ஸ்

கடையில் ஒரு டவலு வாங்கினார் எனும் பசுமையான விளம்பரங்களாகட்டும் சென்னைக்கும் திருச்சிக்கும் சும்மா திருகி திருகி குதித்ததாகட்டும் அவ்வபோது கிடைக்கும் இலங்கை வானோலி நிலையத்திற்காக Antenna வை நேராக பெரிதாக்கி நிறுத்தியதாகட்டும் அருமையான காலங்கள்.

என்னதான் மடிக்கணினியில் பதிவு செய்யும் வசதி வந்தாலும் எம்பி3 பாடல்கள் கேட்டாலும் cassette போட்டு

பதிவு செய்து அதில் சிறியதாக பெயர் எழுதி வைத்து Head Cleaning Cassette போட்டு வாரம் ஒரு நாள்

அதை சுத்தம் செய்து மேலே ஒரு அழகிய embroider செய்த மஞ்சள் துணி போட்டு வைத்து வீட்டில் வருபவர்கள்

எம் சாகசங்களை போட்டுக் காட்டி மகிழும் உணர்வுகள் என்றும் நினைவிலிருந்து நீங்காதவை.

One-touch you touched our lives என்று சொல்லத் தோன்றுகிறது.

பூமகள்
03-04-2009, 10:13 AM
நம் இளமைக் காலங்களில் நம்மோடு புலங்கிய ஒவ்வொரு பொருளுமே உயிர்பெற்று நம்மோடு உறவாடியது போன்ற ஒரு பிரம்மை வரும்..

ஒன் டச் உங்கள் உள்ளத்தினை டச் பண்ணியதில் ஆச்சர்யமில்லை...

மிக சுவையாக அதை பகிர்ந்து கொண்ட பாங்கு அருமை.. அந்த கால கட்டத்துக்கே என்னை கொண்டு போய் அசை போட வைத்தது அண்ணா..

எனக்கும் இது போன்றே சட்டர் டைப் மாடலில் அந்த காலத்தில் வந்த தொலைக்காட்சி பெட்டியும் அதன் பின் வெகு காலம் கழித்து.. போர்ட்டபில் தொலைக்காட்சி வந்த புதிதில் வாங்கிய சிவப்பு நிற தொலைக்காட்சியும் என்னோடே என்றும் இருக்க கூடாதா என்று ஏங்க வைத்ததை மறுக்க முடியாது..

பல காலங்கள் நான் பரிச்சைக்கு படித்துக் கொண்டிருக்க.. இரவு வெகு நேரம் அதுவும் என்னோடு சேர்ந்து எனக்குத் துணையாக தூர்தர்சனின் ஹிந்தி மொழியில் ஏதோ புலம்பிக் கொண்டிருக்கும்..


ஒவ்வொருமுறை அந்த பொருட்கள் நம்மை விட்டு செல்கையிலும்.. ஒரு பாரம் நம்மை அழுத்தும்.. அந்த அமுங்கிப் போன நினைவுகள் உங்கள் பதிவால் தட்டி எழும்பி பசுமையாக நினைவலையில் மோதுகின்றன..

மனம் தொடும் பதிவு.. அடிக்கடி உங்கள் பதிவுகள் காணக் கிடைக்க வேண்டுமென்ற ஏக்கங்களுடன் தங்கை இருக்கிறேன்..

பாராட்டுகள் அண்ணா. :)

leomohan
03-04-2009, 10:17 AM
நன்றி பூமகள்.

ஆம் எனக்கும் சில நேரம் அந்த பழைய பொருட்களை தேடி பிடித்து வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்று தோன்றும். நடப்பு வாழ்கை நினைவுக்கு கொண்டு நிதசர்சனத்தில் வாழ நினைவு படுத்தும்.

பாரதி
03-04-2009, 10:50 AM
வாங்க மோகன்! நலமா..?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு "டச்" பதிவு!

ஆனால் என்ன ஒரு ஆச்சரியமும் ஒற்றுமையும் எனில், நான் வாங்கிய முதல் கேசட் பிளேயர் நேசனல் பானாசோனிக்தான்! ஜப்பான் நாட்டில் செய்யப்பட்டு, தங்கக்கலரில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஸ்பீக்கர்களுடன் பார்க்கவே மகிழ்ச்சியை ஊட்டும். பொத்தான்கள் எல்லாம் வரிசையாக மேலே நடுவில் அமைக்கப்பட்டிருக்கும். நானும் பொத்தி பொத்திதான் வைத்திருந்தேன். நீங்கள் கூறியபடி கண்டபடி கத்தி அதை மீண்டும் நாம் கேட்கும் போது ஏற்படும் உணர்வை எப்படி சொல்ல..?

ஒரு முறை வீட்டில் மின்னழுத்தம் குறைவாக வந்து குமிழ் விளக்குகள் மட்டும் மினுங்குவது போல் எரிந்தன. அந்த நேரத்தில் நமக்கு ஒரு ஐடியா உதித்தது. உங்களைப் போல பின்புறம் இருந்த சொடுக்கியை 230லிருந்து 120க்கு மாற்ற.. ஆஹா.... அருமையாக பாடலைக் கேட்க முடிந்தது. சில நிமிடங்களில் முழு மின்னழுத்தம் வர, அதற்கு முன்னர் கேட்டிராத ஒரு சிறிய சப்தம் உள்ளிருந்து வந்தது. அவ்வளவுதான்!

ஒருவழியாக பழுது நீக்கி வைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர் என் அக்காள் பையன் தன் தொழில்திறமையை காண்பிப்பதாக சொல்லி எடுத்து சென்றான். பின்னர் ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது ஸ்பீக்கர்கள் மட்டும் இரண்டு மண்பானையில் வைக்கப்பட்டு ஏதோ ஒரு டெல்லி செட்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அந்த நேசனல் பானாசோனிக்கை காணவே இல்லை.

leomohan
03-04-2009, 10:56 AM
ஓஹோ பாரதி நீங்களும் 120-220 சோதனை செய்ததுண்டா. பலே.

நன்றி பாரதி. எப்போது நாம் பழைய விஷயங்களை மறப்பது. மறக்க முடியாது போல.

அமரன்
03-04-2009, 11:39 AM
வாங்க மோகன்.

சிறிய இடைவெளியின் பின்னர் புதிய எழுத்துகள் மூலம் சந்திக்கிறோம். பழய நினைவுகளை அசைபோடுவதைப் போல ஈந்த சந்திப்பும் மகிழ்ச்சியான தருணமே.

அன்று நடந்த ஒவ்வொரு அசைவையும் கண்முன் நிழலாடவைத்து நெஞ்சைத் தொடுகிறது.. உள்ளிருக்கும் ஒத்த நினைவுகளை தட்டி எழுப்புகிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் இந்த அனுபவம் கிட்டுவது நிச்சயம்.

என் சின்ன வயசில் எங்கள் வீட்டில் தடையின்றி இருந்தது வறுமை மட்டும்தான். மின்சார இணைப்பே இல்லாதபோது வானொலி எப்படி இருக்கும்? பக்கத்து வீட்டு வானொலியில்தான் பத்து வயது வரை பாடல்களை ஒட்டுக் கேட்டேன். ஒட்டுக் கேட்டதாலோ என்னவோ அந்த வயதில் கேட்ட பாடல்கள் இப்போதும் என்னுடன் ஒட்டி உள்ளன.

வீட்டில் ஓரளவுக்கு வசதி வந்தபோது எங்கள் பிரதேசத்தில் நிரந்தர மின் தடை. ஈழத்தின் வடக்கு வாழ் தமிழன் ஒவ்வொருவனும் மின்சாரத் தடைக்கு மத்தியில் குப்பி விளக்கையே உப்புக்கல் கலந்த எண்ணெயால் எரியவைத்த காலமது. மின்கலம் மூலம் கேட்கலாம் என்றால் எங்கள் பிரதேசத்துக்குள் மின்கலம் நுழைய தடை விதித்திருந்தது பொருளாதாரத் தடை.

சைக்களை மிதித்தும் தலைகீழாகப் போட்டு கையாள் சுழற்றியும் ரேடியோ கேட்கும் காலம் மலர்ந்தபோது பனசோனிக் rx செட் சந்தைக்கு வந்திருந்தது கொழுத்த நிலையுடன். நீங்கல் செய்த்த அத்தனை கரும்புக் குறும்பையும் செய்தேன்.. பாடங்கள் கற்றேன் - 220 - 240 கற்றல் தவிர.

xavier_raja
03-04-2009, 12:57 PM
அப்பொழுதெல்லாம் வெள்ளிகிழமை வரும் ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கு தவம் கிடப்போம். ஞாயிற்றிகிழமை படம் பார்ப்பதற்கும் அதே நிலைமைதான். அப்பொழுது இருந்த ஒரு ஆவல் இப்பொழுது இல்லை. காரணம் எதுவும் எப்போதும் கிடைப்பதால்தான்.

விகடன்
03-04-2009, 12:59 PM
படித்தேன் உங்கள் One-Touch இன் மேலிருந்த காதலை.
அவை எனது கடந்த காலத்தையும் வருடிச் சென்றுவிட்டது.

leomohan
03-04-2009, 04:44 PM
வாங்க மோகன்.

சிறிய இடைவெளியின் பின்னர் புதிய எழுத்துகள் மூலம் சந்திக்கிறோம். பழய நினைவுகளை அசைபோடுவதைப் போல ஈந்த சந்திப்பும் மகிழ்ச்சியான தருணமே.

அன்று நடந்த ஒவ்வொரு அசைவையும் கண்முன் நிழலாடவைத்து நெஞ்சைத் தொடுகிறது.. உள்ளிருக்கும் ஒத்த நினைவுகளை தட்டி எழுப்புகிறது. ஒவ்வொரு வாசகனுக்கும் இந்த அனுபவம் கிட்டுவது நிச்சயம்.

என் சின்ன வயசில் எங்கள் வீட்டில் தடையின்றி இருந்தது வறுமை மட்டும்தான். மின்சார இணைப்பே இல்லாதபோது வானொலி எப்படி இருக்கும்? பக்கத்து வீட்டு வானொலியில்தான் பத்து வயது வரை பாடல்களை ஒட்டுக் கேட்டேன். ஒட்டுக் கேட்டதாலோ என்னவோ அந்த வயதில் கேட்ட பாடல்கள் இப்போதும் என்னுடன் ஒட்டி உள்ளன.

வீட்டில் ஓரளவுக்கு வசதி வந்தபோது எங்கள் பிரதேசத்தில் நிரந்தர மின் தடை. ஈழத்தின் வடக்கு வாழ் தமிழன் ஒவ்வொருவனும் மின்சாரத் தடைக்கு மத்தியில் குப்பி விளக்கையே உப்புக்கல் கலந்த எண்ணெயால் எரியவைத்த காலமது. மின்கலம் மூலம் கேட்கலாம் என்றால் எங்கள் பிரதேசத்துக்குள் மின்கலம் நுழைய தடை விதித்திருந்தது பொருளாதாரத் தடை.

சைக்களை மிதித்தும் தலைகீழாகப் போட்டு கையாள் சுழற்றியும் ரேடியோ கேட்கும் காலம் மலர்ந்தபோது பனசோனிக் rx செட் சந்தைக்கு வந்திருந்தது கொழுத்த நிலையுடன். நீங்கல் செய்த்த அத்தனை கரும்புக் குறும்பையும் செய்தேன்.. பாடங்கள் கற்றேன் - 220 - 240 கற்றல் தவிர.


நன்றி அமரன். உங்கள் சிறுபிராயம் கதை மனதை நெருடியது. ஆனால் டேப்ரிக்கார்டர் அனுபவம் தவறாமல் கிடைத்ததற்கு சந்தோஷம். அதை அனுபவிக்காமல் இப்போது MP3 அனுபவித்தால் நேரிடையாக பத்தாவது படிப்பது போல் குழப்பமாக இருக்கும் :)

leomohan
03-04-2009, 04:46 PM
நன்றி சேவியர் ராஜா.

நன்றி விராடன்.

சிவா.ஜி
03-04-2009, 06:03 PM
அருமையான பகிர்வு மோகன். நான் தொழில்நுட்பம் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் எங்களுக்கு மிக தோழமையான சர்க்யூட் உள்ள ட்டூ-இன்-ஒன் பானாசோனிக் தான். வெகு சுலபமாக அதை சரி செய்து பணத்தை பெற்றுக்கொண்டு...கோவை செண்ட்ரல் தியேட்டரில் ஆங்கிலப்படம் பார்க்கப் போய்விடுவோம்.

நான் மிக விரும்பிய ஒலி உயர்வையும் கொடுத்தது அன்றைய இதே தயாரிப்புதான். கடந்த சொர்க்க காலங்களை நினைவு படுத்திய உங்கள் பதிவுக்கு நன்றிகள் மோகன்.

சாலைஜெயராமன்
04-04-2009, 06:56 PM
திரு மோகன் தங்கள் அனுபவத் தொடரில் என் நினைவலையிலிருந்து ஒரு சிறு துளி,

one touch panasonicக்கு முன்னோடி spool type ரிக்கார்டர்கள், முதன் முதலாக எங்கள் எதிர்வீட்டு பெரியதனக்கார செட்டியார் ஒருவர் மலேசியாவிலிருந்து ஒரு செட் கொண்டு வந்திருந்தார், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் உள்வீட்டில் அந்தக்காலப் பாடல்களை பெரிய ஒலி நாடாவில் மலேயாவில் பதிந்து வந்து அதன் மற்ற உபயோகம் தெரியாமல் வெறும் வானொலியைப் போல உபயோகப்படுத்தி வந்தார், அவருடன் மலேயாவில் இருந்து வந்த செட்டியாரின் நண்பர், அதன் மற்ற உபயோகமாக பதிவின் மகத்துவத்தை செட்டியாரின் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தாரின் அந்தக் காலத்துக்கே உரிய மிடுக்குடன் கூறி வந்தார், செட்டியாரின் கடைசிப் பையன் எங்கள் சக தோழன், அவன் எங்களை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தான், தள்ளி நின்று நாங்கள் பேசிய சப்தங்கள் எல்லாம் பதிவாய் இருந்தது. எங்கள் குரலை நாங்கள் கேட்ட போது மிக வெட்கப்படும்படியான குரலின் வித்தியாசம் எங்களை நாண வைத்திருந்தது. வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கோ செட்டியாரின் நண்பர் கூறிய "பேசற பொட்டி" யின் மிக நீண்ட ஒலி நாடாவில் எங்கள் பேச்சு எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய பேரவா. பல கெஞ்சல்கள், வேண்டுகோளுக்கிணங்கிய எங்கள் நண்பன் அவன் தந்தை வெளியே சென்றிருந்த சமயம் எங்களை உள்ளே அழைத்து பேசற பொட்டியை பெரிய வித்தைக் காரன் செய்யும் மாமாலங்கள் அனைத்தையும் செய்து எடுத்துக் காண்பித்து நாங்கள் காலையில் பேசிய பேச்சுக்களைப் பதிவு செய்ததை போட்டுக்காட்டினான். குறும்புக்கார எங்கள் கூட்டத்து நண்பன் ஒருவன் தன் குரலைத் தேடுமுகத்தான் டேப்பை வெளியில் எடுத்து பெரிய விஞ்ஞானியைப் போல ஆராய்ந்த வேளையில் செட்டியார் உள்ளே வரவும் ஒலி நாடா எங்கள் கால்களில் மாட்டி தெரு வரைக்கும் நீண்டு ஓடி வந்த வேகத்தில் எங்கள் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டது. அன்று செட்டியார் எங்கள் நண்பனுக்கு கொடுத்த அடி இன்று வரை மறக்க இயலாது.

நான் 1980 களில் பணியில் சேர்ந்ததும் முதன் முதல் சம்பளத்தில் நான் வாங்கியது National Panasonic Stereo வசதி கொண்ட செட் இன்னும் எங்கள் வீட்டில் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

TDK கேசட்டைத் தேடி அலைந்து பழைய பாடல்களைப் பதிவு செய்ய தவம் கிடந்து கேட்டு மகிழ்ந்த வாழ்வு மிகுந்த இன்பம் தந்த காலங்கள். இன்று விரல் நுனி அளவில் உள்ள MP3 ரிக்காடர்கள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம். ஆனால் அவை மிக எளிதாக இளைய தலைமுறைக்கு இன்று கிடைப்பதால் உண்மையின் அதன் பயன்பாட்டின் இன்பம் அவர்கள் அடைந்திருப்பார்களா - சந்தேகம்தான்.

பழைய நினைவினை அசை போட வைத்தது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

ஒரு கொசுறு செய்தி. என்னதான் Stereo வசதி இருந்தாலும் செட்டின் Speaker நல்ல ஒலியைத் தர இயலாததால் ஒரு சின்ன 20 Watts Amplifier செய்யச் சொல்லி, இரண்டு Philips Speaker தனியாக இணைக்கப்பட்டு Speaker Bass Effectக்காக இரண்டு பானைகளில் speaker ஐ அப்படியே திறந்த நிலையில் இட்டு பானையின் வெற்றிடத்தில் ஏற்படும் ஒலியின் மாறுபட்ட பரிணாமங்கள் கேட்கப் பரவசம் தந்த சொர்க்க நிலையின் தொடர்புச் சாதனங்களாக எனக்குத் தெரிந்த காலங்கள். பெரிய விஞ்ஞானிகள் தோற்றனர் போங்கள்.

சிவா.ஜி
04-04-2009, 07:05 PM
ஹா..ஹா...ஹா....படிச்சதும் சிரிப்பு தாங்க முடியல. உடம்பு முழுவதும் ஒலிநாடா சுற்றிக்கொண்டு அந்தப்பையனை நினைத்தாலே சிரிப்பாய் வருகிறது. பாவம் அந்த செட்டியார் பையன். நல்ல பூசை. இருக்காதா பின்ன. அந்தக் காலத்துல எவ்வளவு முக்கியமான சாதனம் அதை பாழ்படுத்தினால் கோபம் வராமல் இருக்குமா?

உங்கள் பகிர்வு அருமை சாலைஜெயராமன் அவர்களே.

அமரன்
04-04-2009, 10:24 PM
சாலை அய்யா! அருமையான அசை போடல்.

எங்கள் ஊரில் மிளகாய் காயப்போடும் போதும் இன்னபிற காய போடும் போதும் ஒலிநாடாவை உருவி எடுத்து தாறுமாறாக ஓடி கட்டி விடுவார்கள். காற்றுப் பட்டு எழும் ஒலியில் காக்காய் குருவி கிட்டவும் வராது. அந்த ஒலியையும் ஒளியையும் நினைவு கூற வைத்து விட்டீர்கள்.

விகடன்
05-04-2009, 05:43 AM
உண்மைதான் சாலைரமணன்.

அந்த பானை விடயத்தை வாசிக்கையில்த்தான் எனக்கும் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது....

நாங்கள் இடம்பெயர்ந்து வந்திருந்த காலத்தில் என் கைக்கு கிட்டியது ஒரு வோக்மந்தான். அதில் ரேடியோ வசதியும் இருந்தது. வீட்டில் பெரிதாக பாட்டுக்கள் கேட்க வேண்டும் என்று அக்காலங்களில் எனக்கு நிறையவே விருப்பமிருந்தது. பாட்டுக்க் கேட்கையில் யாருடைய வெளி சப்தங்களோ இரைச்சலோ கேற்கக்கூடாது என்றும் ஓர் அவா. அத்துடன், தனிப்பட்ட ஒருவர் இன்றி எல்லோரும் செய்துகள், நிகழ்ச்சிகள் கேட்கவேண்டுமென்று எண்ணி அந்தக் காலத்தில் புரியாத இலத்திரனியலையும் புரிந்து கொள்ள எத்தனித்தேன். அம்பிலிபையர் மின்சுற்று ஒன்றை அமைக்க விளைந்தேன். கையில் பலதரப்பட்ட சேர்க்கிட் மாதிரிகள் பெற்றுக்கொண்டேன். அதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வோர் உதிரிப்பாகங்களின் விலையினை கடையில் சென்று விசாரிப்பேன். இரண்டு மூன்றாந்தடவை சென்றதும் கடைக்காரன் கடுப்பாகிவிட்டான்.

இதற்கெல்லாம் அஞ்சினால் எப்படி நம்ம குறிக்கோளை அடையிறதாம்?

நானும் என் முயற்சியிலிருந்து நழுவாது தொடர்ந்து போராடினேன். விளைவாக இலங்கை மதிப்பின் 150 ரூபாவில் ($ 1.5) உருவாக்கிக்கொண்டேன். அதற்கு பின்னர் ஸ்பீக்கர் இரண்டு வாங்கினேன். அதற்கு தகுந்தாற்போல் பெட்டி தயார் செய்வதென்றால் அது பெருஞ்செலவாக இருந்தது. ஆகையால் செம்பு, பானை போன்றவற்றை உபயோகித்துக்கொண்டேன். என் சக மாணவர்கள் வைத்திருக்கும் பெரிய ரக ரேடியோ உபகரணங்களையெல்லாம் மிஞ்சிவிடும் சப்தத்தில் பாடியது அந்த வோக்மன்.

இக்காலங்களில் அப்படியான மின்சுற்றுக்களை வீடுகளில் வைத்திருக்க முடியாது காரணம், பாதுகாப்பு படை என்ற பெயரில் இயங்குவோர் அதை கண்டால் மேற்கொண்டு எதுவித விசாரணை இன்றி வைத்திருப்போர் அடித்துத் துன்புறுத்தப்படுவார்கள். அத்துடன் சிறையிலும் போடப்படுவார்கள். இப்படியான கசப்பான விடயங்கள் நிகழ்வதால் முன்னெச்சரிக்கையாக தீக்கு விருந்தாக்கிவிட்டோம்.

leomohan
05-04-2009, 07:25 AM
சாலை ஜெயராமன் மற்றும் விராடனின் அனுபவங்கள் அருமை.

சாலை ஜெயராமன் கதை சொல்லிய விதம் இன்னும் ஒவ்வொரு மனதிலும் ஒரு ஓன்-டச் கதை இருக்கும் போலிருக்கிறதே. அனைவரும் எடுத்துவிடலாமே.

அடுத்த கதை TVS-50 பற்றி தயாராகிக் கொண்டிருக்கிறது. :lachen001:

praveen
07-04-2009, 06:53 AM
நன்றி மோகன், நானும் அத்தனை வருடங்கள் பின்னோக்கி பார்த்ததில், நிறைய வேலைகள் செய்து பார்த்து அடி வாங்கியிருக்கிறேன். அது அத்தனையும் விவரிக்க நேரமில்லை, நீங்கள் 25 வருடம் சொன்னீர்கள், நான் 30 வருடங்கள் முன் சென்று விட்டேன், எனது தாய்மாமா அவர்கள் இரவல் தந்த ஒரு ரெக்கார்ட் பிளேயரில் பாடல் போட்டு மகிழ்ந்த காலம் நியாபகம் வருகிறது.

குறிப்பிட்ட வேகத்தில் ஓடவேண்டிய இசைத்தட்டுகளை, வேகம் கூட்டி (சோகப்பாடலை சிரிப்பு பாடலாகவும்), வேகம் குறைத்து (சந்தோசப்பாடலை சோகப்பாடலாகவும்) சுழல விட்டு மகிழ்வோம். அதில் கதை வசனம் மற்றும் சிரிப்பு கேட்டு இன்புற்றது நியாபகம் வருகிறது. அதில் 78(என்று நினைக்கிறேன்) அது தான் அதிக வேகம் அதில் சில பழைய பாடல் பாடுவதென்றால் ஒரு பாடலே முன்னும் பின்னும் இருக்கும், எனவே அது பாடி முடிந்தவுடன் துரிதகதியில் அடுத்த பக்கம் போடுவதில் என்னை மிஞ்ச ஆள் இல்லை :).

கேசட் வந்த பின் அதில் சிக்கல் எடுக்கிறேன் என்று முழுதும் உருவி வெளியே போட்டு பின் மெதுவாக பெண்சிலை உள்ளெ கொடுத்து சுற்றி (3 மனி நேரம் கூட ஆகும்) நேரத்தை கழித்திருக்கிறேன்.

ஆதவா
07-04-2009, 07:08 AM
வாங்க மோகன் சார்..

பாரதி அண்ணா சொன்ன்மாதிர் 'டச்' பதிவு இது!
எல்லோரும் தத்தம் அனுபவத்தைச் சொல்றாங்க.. நாமும் சொல்வோமே!

எனக்கு ரொம்ப ச்ச்சின்ன வயதா இருக்கும்பொழுது அப்பா பிலிப்ஸ் ஸ்டீரியோ 2 இன் 1 டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தார்.. அதில் உள்ள ரெக்கார்டரில் எப்படி பாடி பதிவேற்றுவது என்றூ சொல்லித்தந்தார். அப்போது, அஞ்சலி, புதுப்புதுராகங்கள் போன்ற படங்கள் வெளிவந்தன. நான் எல்லா கேஸட்களையும் எடுத்துப் போட்டு ரெக்கார்ட் செய்து.... ஹாஹா... அது ஒரு தனி சுகம்!! (உதை விழுந்ததை சொல்லமுடியாதுங்க!!! :D)

இப்போ அந்த டேப் ரெக்கார்டர் எங்க இருக்குனு தெரியலை!!

ஆதவா
07-04-2009, 07:14 AM
கேசட் வந்த பின் அதில் சிக்கல் எடுக்கிறேன் என்று முழுதும் உருவி வெளியே போட்டு பின் மெதுவாக பெண்சிலை உள்ளெ கொடுத்து சுற்றி (3 மனி நேரம் கூட ஆகும்) நேரத்தை கழித்திருக்கிறேன்.

ஹ்ஹிஹி..... நீங்களுமா?

அது என்னவோ பெரிய கண்டுபிடிப்பு மாதிரி இருக்கும்!! சுத்திகிட்டே இருப்பேன்!!! அப்பவே எனக்கு சந்தேகம்.... இந்த நாடாவுல எப்படி பாட்டு வருதுன்னு!! அப்பறமா மேக்னட் துகளோ என்னவோ எட்டாம் வகுப்பில சொல்லிக் கொடுத்தாங்க.. (அதுவும் இப்ப ஞாபகத்தில இல்ல)

Narathar
07-04-2009, 09:33 AM
மோஹனின் அதே நினைவலைகள் எனக்குள்ளும்.......

எங்க வீட்டில் வாங்கியது பனசோனிக்தான்.....

ஆனால் ஒரு கொடுமை அதற்கு முன்னால் அப்பா ஆசையாக வைத்திருந்த "ரேடியோவிற்கு" பனசோனிக்கின் வருகைக்கு பிறகு நானும் எனது ஒன்றுவிட்ட சகோதரர்களும் இட்ட பெயர் "பிணப்பெட்டி" ......... அது சிறிதுகாலம் எங்கள் வீட்டில் ஒரு மூலையில் கிடந்தது... காலப்போக்கில் அதை காணவில்லை!!!

இன்று சில பழம்பொருள் ஆவலர்கள் அதைப்போன்ற வானொலிகளை அழகுபடுத்தி வாசலில் வைத்திருக்கும் போது.... அந்த இங்கிலிஷ் "பிணப்பெட்டி"ய நினைத்து இப்போது வருந்துகின்றேன்