PDA

View Full Version : முடிந்தும் முடியாத கதைகள்:கழுதையும், குருவியும்



பாரதி
02-04-2009, 05:24 PM
முடிந்தும் முடியாத கதைகள்: கழுதையும், குருவியும்

நாட்டுப்புறக் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. மூதாதையரின் குரல்கள் ஒளிந்திருக்கும் தொன்மையின் வசீகரம் நம்மை எளிதாக விழுங்கிவிடுகின்றன. கதை சொல்லுகிறவன் தோன்றித் தோன்றி மறைவான். புதிர்களோடு வாழ்வின் அனுபவங்கள் பிசுபிசுப்பாய் ஒட்டிக் கிடக்கின்றன. ரொம்ப எளிமையான சொல்லாடல்களும், கதைகளும் நவீன புத்திகளை சர்வசாதாரணமாக தாண்டிச் செல்கின்றன.


அறிவொளி காலத்தில் பேராசிரியர் மாடசாமி தொகுத்தளித்த இந்தக் கதைகள் எல்லாம் நம் பாரம்பரியத்தின் செல்வங்கள். இன்று அவைகளில் ஒரு கதையை கேட்போம்.

கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தமிட்டன.

ஒப்பந்தத்தில் ஆளுக்கொரு ஒரு உரிமை தரப்பட்டது. பயிரில் எந்தப்பகுதி யாருக்கு என்று தீர்மானிக்கும் முதல் உரிமை கழுதைக்கு. என்ன பயிரிடுவது என்று தீர்மானிக்கும் இரண்டாவது உரிமை குருவிக்கு.

ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. "விவசாயம் செய்ய ஆரம்பிப்போம். நண்பா! பயிரில் உனக்கு எந்தப் பகுதி வேண்டும்?" என்று குருவி கனிவோடு கேட்டது.

கழுதை விறைப்பாகச் சொன்னது. "பயிரின் கீழ்ப்பகுதி எனக்கு, மேல்பகுதி உனக்கு" என்று முதல் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது.

குருவி நெல்லைத் தேர்தெடுத்துப் பயிரிட்டது. கழுதைக்கு வைக்கோலும், குருவிக்கு நெல்மணியும் கிடைத்தன. கழுதை ஏமாந்தது.

அடுத்தமுறை கழுதை ஜாக்கிரதையாய்ச் சொன்னது. "இந்தமுறை மேல்பகுதி எனக்கு, கீழ்ப்பகுதி உனக்கு"

"சரி, சரி" என்று குருவி இணக்கமாய் ஒப்புக் கொண்டது. இந்தமுறை கடலை பயிரிட்டது. குருவிக்கு கடலையும், கழுதைக்குச் செடியின் இலைகளும் கிடைத்தன. ஏமாற்றத்தால் கழுதை தொங்கிப் போனது.

அடுத்தமுறை கழுதை பதில் சொல்ல ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டது. இறுதியில், "மேல்பகுதி, கீழ்ப்பகுதி இரண்டும் எனக்கு. நடுப்பகுதிதான் உனக்கு" என்றது.

குருவி நமுட்டுச் சிரிப்போடு பயிரைத் தேர்தெடுத்தது. கழுதை இந்த முறையும் ஏமாந்து போனது.

குருவி எந்த பயிரை தேர்தெடுத்தது?

சரி... நீங்கள் கழுதைப் பக்கமா... குருவிப் பக்கமா?

இந்தக் கதை எதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறது?
கதைகள் முடிந்தாலும், முடியவில்லை தானே?

நன்றி : http://mathavaraj.blogspot.com (http://mathavaraj.blogspot.com)

ஆதவா
02-04-2009, 06:01 PM
அந்த பயிர் கரும்பு!!!!

நாங்க முன்னமே படிச்சுட்டோம்ல!!! மாதவராஜின் எல்லா எழுத்துக்களும் மிக அருமையாக இருக்கும்!!! அவரது மாமனாரைப் போல!!! இல்லையா பாரதி அண்ணா??

பாரதி
05-04-2009, 03:34 PM
கருத்துக்கு மிக்க நன்றி ஆதவா.

ஆமாம் ஆதவா... பலரும் அறிந்தாலும் படிக்கையில் பலவிதமான எண்ணங்கள் தோன்றின.

நாம் முழுமையாக அறியாத மிகச்சிறந்த எழுத்தாளர்கள் எத்தனை எத்தனையோ...!

எழுத்துக்களினூடாக சிந்தனையையும் தூண்டும் வகையிலும் மனதில் நிற்கும் வகையிலும் கதை சொல்லும் / படைக்கும் திறமைசாலிகளுக்கு வந்தனங்கள்.

ஆமா... நீங்க எப்படி....? குருவியா..?