Log in

View Full Version : நினைவுப்பறைகள்



ஆதவா
30-03-2009, 05:31 AM
எனக்குள்ளேயும்
நினைவுக்குமிழ்கள் சட்டென்று வெடிக்கின்றன.
அவை நாளங்கள் வழி நுழைந்து
நாடக நடிகன் போல் நடிக்கின்றன.

அந்நொடி ஜனனத்தில்
மூடிய துயர் முன்னெடுக்கிறது
அதன் மரணத்தில்
மகிழ்வெனும் உயிர் தின்னெடுக்கிறது

அதன் எழுச்சியில்
முன்னகழ்ந்த வெளிச்சம் போனது
வீழ்ச்சியில்
பின்னிரவின் ரம்மியம் ஆனது

இது
என் ரவுத்திரத்திற்குப் பயந்தொதுங்கும்
உள்வெளிர் பூதம்.
நிறையின்றி தள்ளாடும்
நிர்சலன நெஞ்சத்தின் குறைவேதம்

0000000000000000

ஒவ்வொரு குமிழிகள் வெடிக்கும்போதும்
மாற்றங்கள் வேண்டுகிறேன்

குறைபிரசவ நினைவுக் குழந்தைகள்
தூக்கியெறிதல் வேண்டும்

ஞாபக அறையினை நன்கு துலக்கி
திறக்கமுடியா பூட்டினால் பூட்டவேண்டும்

காட்சிகள் பதியா காட்சிகள் வேண்டும்
காட்சி படுத்தும் கருவிகள் ஒழிய வேண்டும்

மறதியை ஆசனம் ஏற்றி
மறத்தலைத் தொழிலாக்க வேண்டும்

மறந்தினும் நினைவுகள்
மனதில் ஏற்க மறுக்க வேண்டும்

இவை மாற்றப்படாத நியதியாக்கப்படவேண்டும்

சிவா.ஜி
31-03-2009, 06:01 PM
எண்ணும் எண்ணங்கள்...எனை
திண்ணும் தியாலங்கள்
இன்னும் இவையெதற்கு
மண்னுள் மக்கும்
உதிர் சருகுகளைப்போல
மக்கிப்போகட்டும்....
மறதியெனும் நோயில்
சிக்கிப் போகட்டும்...............

என நினைவுகளை துரத்திவிட மறதியை துணைக்கழைக்கும் கவிஞனுக்கு....காட்சியை காட்சிப்படுத்தா கருவி கிடைக்கட்டும்.
என்றும் ஒரு புதுச்சிந்தனையில் கரு கிடைக்கட்டும்..
நித்தம் ஒரு கவி படைக்கட்டும்.

வாழ்த்துக்கள் ஆதவா. உங்களின் எழுத்தாளுமை பிரமிக்க வைக்கிறது.

இளசு
31-03-2009, 09:40 PM
நேற்று தின்ற ஒருவகைக் கனி..
ஒவ்வாதது... இனி ஒதுக்கு...

வேட்டையனாய் அலைந்த காலத்தில்
காத்து நின்ற அரண் - நினைவே!

-----------------------------

அடுத்த பௌர்ணமிக்கு அடைமழை தொடங்கும்..
காய்ந்த வைக்கோலை காபந்து செய்..
கழனி காக்கும் காளைக்கு உணவாய்..

நினைவுப் பறை முழங்கலால்
வளர்ந்தது நம் சமூக சங்கீதம்..

----------------------------------------

உயிர்த்தல், இருத்தல் தாண்டி
உளவேட்கை, விருப்பு, மேன்மை என
மனிதர் மாறிவிட்டார்..

நினைவுக் கிட்டங்கிகளில்
நல்லதும் கெட்டதுமாய் அதிக பொதிகள்..

வேண்டாம் என்று உதறிவிட முதுகுப் பொதிகளா என்ன?
மாண்டு போகும் நாள்மட்டும் சுமக்க வேண்டிய மூளைப் பொதிகள்..

சுமைகளும் சுகங்களுமாய் பயணம் தொடரட்டும்..

வாழ்த்துகள் ஆதவா..