PDA

View Full Version : அந்த நாட்கள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
29-03-2009, 06:05 AM
சலனற்றுக் கிடக்கும் குட்டை நீர்களில்
காற்றிடறிய வட்ட குமிழ்களுக்கிடையே
கரைந்தோடுகின்றன அந்த நாட்கள்
இலையுதிர் காலங்கழிந்து மரங்களீன்ற
பச்சிளம் பசுமிலைகளாய்
நிறை வயிறில் நின்று நிதானித்து எட்டிடும்
மழைக் காலத்து மாலை மேகங்களாய்
பல காலன் நீரை பதுசாய் அள்ளியேந்தி
கரை தேடி கொட்டிச் செல்லும்
ஊர் தூங்கிய இரவு நேரத்தலைகளாய்
ரம்மியமும் சுவையுங் கூடியதது
ஆடியடங்கியொடுங்கத் தேடும் ஊத இரவுகளில்
மெல்லிய படர் பனிகளினூடே
கம்மாயும் கட்டபொம்மன் கதையுமாய்
களைத்துத் தீர்த்த கனிய காலமது
எச்சிலூறும் எள்ளு ரொட்டிக்கும்
எகிறிச் செல்லும் வண்ணாத்திக்கும்
உயிர் தொலைத்த உன்னத மாலையது
பெருகிக் கிடக்கும் சோளங்காடுகளில்
கீறிக் கிழிக்கும் கருவேலந்தோப்புகளில்
அறிவியலும் கணக்கும் மறந்து
விவசாயமும் விலங்கியலுமறிந்த
விடுமுறை காலப் படலமது
சட்டியில் கொதிக்கும் அயிரைக்கும்
வட்டியில் ஓய்ந்த வள்ளியப்பனுக்கும்
பாவப்பட்ட பத்தாம்பசலிப் பருவமது
கலங்கிய குட்டை தெளிந்து தேர்கையில்
தெள்ளிய மனமிருக்கும் கலங்கியபடி!
உருண்டு திரண்ட ஊளைச் சதையும்
கிறுக்கியலைந்த சில கவிதைகளுமன்றி
பெரிதாய் மிஞ்சியதெதுவென்று
மெனக்கெட்டமர்ந்து யோசித்தபடி.

சிவா.ஜி
31-03-2009, 05:54 PM
பள்ளிப்பிராயத்து நினைவுகள், துள்ளித்திரிந்த நாட்களின் அசைபோடலினூடே....இன்றைய நிஜம் சொல்லி ஏங்கும் அருமையான கவிதை.

பாராட்டுக்கள் ஜுனைத். வரியமைப்பும், வார்த்தையாடலும் சொக்க வைக்கின்றன.

இளசு
31-03-2009, 09:48 PM
மழைக்குப் பதில் ''ஷவர் பாத்''
தூண்டிலுக்குப் பதில் '' கிரெடிட் கார்ட்''
நிம்மதிக்குப் பதில் பெருமூச்சு
கடைசல் உடலுக்குப் பதில் ஊளைச்சதை..

காலம் என்னும் குயவன்..
பிள்ளையார் பிடிக்க ஆரம்பித்து
குரங்கில் முடிக்கும் சோகக்கதை..
எனக்கும் இது சொந்தக்கதை!

ஜூனைத்தின் பார்வை கண்டு
அடடே எனக்கும் இப்பார்வை உண்டு
என வியக்காத நாளுண்டு????


பாராட்டுகள் ஜூனைத்!