PDA

View Full Version : பயணத்தில் படிக்காதது



பாரதி
27-03-2009, 10:33 PM
தேதியில்லா குறிப்புகள்
பயணத்தில் படிக்காதது

வளைகுடா நாடுகளுக்கு சென்ற பிறகு பயணம் செய்வதென்பது தவிர்க்கவியலாததாகி விட்டது. ஆரம்பத்தில் இன்பச்சுற்றுலா செல்லும் சமயங்களில் பிடித்தமாக இருந்த பயணம் வேலைக்காக செல்லும் சமயங்களில் அலுப்பைத்தருவதாக மாறி விட்டது. என்றாலும் தொடர்வண்டிகளிலும், வானூர்திகளிலும் செல்லும் போது ஆர்வத்துடன் உடன்பயணிப்பவர்களையும், சுற்றுச்சூழலையும் கவனிப்பவனாக இருந்தேன். காலப்போக்கில் தூக்கம் என்பதே சுகமாகி விட்டது.

அபுதாபியில் வேலைக்கு சேர்ந்த புதிதில் திருச்சி அல்லது கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்களில் இருந்து ஷார்ஜா வழியாக சென்று வந்துகொண்டிருந்தேன். திருச்சி மற்றும் கோயம்புத்தூர் வானூர்தி நிலையங்களில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பிச்சையிட (சார்.. ஒரு 50 திர்ஹாம்ஸ் கொடுக்குறதுல உங்களுக்கு என்ன சார் குறஞ்சி போயிடும்...?) என்னால் இயலாததாலும், ஷார்ஜாவிலிருந்து பயணிப்பது சிரமமாக இருந்த காரணத்தாலும் என்னுடைய பயணத்தை சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து சென்று வருவதாக மாற்றிக்கொண்டேன்.

திருச்சி வானூர்தி நிலையத்தில் விமானம் கிளம்ப இரண்டுமணி நேரம் முன்னதாக மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதுவரைக்கும் பயணத்திற்கு வந்திருப்பவர்களுக்கு வெயிலோ, மழையோ இயற்கைதான் துணை. பரிசோதனை, பயணச்சீட்டிற்கு பிறகு காண வேண்டியதிருக்கும் குடியேற்றத்துறை அதிகாரிகளின் அலட்சியங்களை சொல்லி மாளாது. பின்னர் காத்திருந்து விமானத்தில் ஏறும் முன்னர் மறுபடியும் முழுமையான பரிசோதனை... இதற்கு பின்னரே ஒரு வழியாக விமானத்திற்கு செல்ல முடியும். ஆனாலும் அங்கு செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள் முழு திருப்தி அளிக்கக்கூடியவை. இப்படிப்பட்ட நிலையங்களை மட்டுமே கண்டிருந்த எனக்கு சென்னை விமான நிலையம் வியப்பை அளிப்பதாக இருந்தது. பயண நேர கணக்கின்றி எப்போது வேண்டுமெனிலும் நிலையத்தினுள் சென்று குளிரூட்டப்பட்ட இடங்களில் காத்திருக்க முடிந்தது. அதே போல பயணச்சீட்டு, குடியேற்றத்துறை - திரும்பி வரும் சமயங்களில் சுங்கத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் நடந்த கொண்ட விதம் மனநிறைவை அளிப்பதாக இருந்தது. ஆகவே பயண தூரம் அதிகமாக இருந்தாலும் சென்னை விமானநிலையம் என்னைக் கவர்ந்ததாகி விட்டது.

சென்னை திரிசூலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வானூர்திநிலையம் செல்ல சுரங்கப்பாதை அமைத்தபின்னர் பயணம் மிகவும் சுலபமாகி விட்டது. பெரும்பாலும் மின் தொடர்வண்டிகளில் ஏறி, திரிசூலம் நிலையத்தில் இறங்கி நடப்பதுதான் எனது வாடிக்கை. இப்போது சென்னை விமான நிலையத்தின் நுழைவாயில் முன்பாக மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இது முக்கிய சாலையில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திருக்கிறது என்பதில் ஐய்யமில்லை. ஆனால் வானூர்தி நிலையத்திற்கு அந்த மேம்பாலம் ஒரு ஆபத்தாக விளங்குகிறது என்பதும் உண்மை. மேம்பாலத்தில் இருந்து வானூர்தி நிலையத்தின் உள்ளே இருக்கும் பெரும்பாலான பகுதிகளை எளிதில் காண இயலும். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாவிடில் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினைகளைக்கூட எதிர் நோக்க வேண்டியதிருக்கலாம்.

மேலும் விமான நிலையத்தின் உள்ளும், முதல் பரிசோதனையின் போது கையில் எடுத்துச் செல்லும் பெட்டி என்று சொன்னால் அதை கதிரியக்க சோதனைக்கு உட்படுத்துவது இல்லை..!

பயணச்சீட்டு பெறுதல், குடியேற்றம் மற்றும் சுங்க அதிகாரிகளின் விசாரணை ஆகியவற்றைக் கடந்து மேல்தளத்தில் கடைகள், விமானத்திற்காக பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு செல்லும் வரை எதை வேண்டுமானாலும் நம்முடன் வைத்துக்கொள்ளும் பெட்டிகளில் கொண்டு செல்ல முடியும் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். மத்திய பாதுகாப்பு படையினர் வானூர்தி நிலையத்தின் பாதுகாப்பினை சில வருடங்களுக்கு முன்பிருந்து மேற்கொண்டு வருகின்றனர். சில பாதுகாப்பு அதிகாரிகள் முறையாக செயல்படுகின்றனர். ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதாக கூற இயலாது. இன்னும் முறையான பாதுகாப்பு இன்றியே சென்னை வானூர்திநிலையம் இருப்பதாக உணர்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் முயற்சி செய்தால், காத்திருக்கும் அறையில் இருக்கும் கடைகளில் பணிபுரிவோர் நினைத்தால் அல்லது உதவினால் பாதுகாப்புப்பரிசோதனை இன்றி எல்லாப் (..!?) பொருட்களையும் விமானத்திற்கே கூட எடுத்து சென்று விடமுடியும் என்று தோன்றுகிறது. இது குறித்து சிலமுறை சென்னை வானூர்தி நிலைய மேலாளருக்கு கடிதங்கள் எழுதியும் எந்தப்பயனும் இல்லை. அவ்வப்போது தொலைக்காட்சிகளில் "ஆறடுக்கு பாதுகாப்பு, ஏழடுக்கு பாதுகாப்பு....!" என்று செய்திகளில் கூறும் போது நகைக்கக்தான் தோன்றுகிறது.

இந்த நேரத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. சென்னை வழியாக சென்று வர ஆரம்பித்த காலத்தில், வானூர்தி நிலையத்தினுள் இருக்கும் கடைகளில், காகிதப்பைகளில் அடைக்கப்பட்ட மாம்பழச்சாறு போன்ற குளிர்பானங்களின் விற்பனை விலை 20 ரூபாயாக இருந்தது. வெளியில் வாங்கினால் 10 ரூபாய் மட்டுமே இருக்கும் அப்பானத்திற்கு ஏன் அவ்வளவு விலை என்று அங்கு விற்பனை செய்பவர்களிடம் கேட்டேன். வாடகையும் விலைவாசியுமே காரணம் என்று கூறினர். அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை என்பதே 10 ரூபாய் என்கிற போது எப்படி இந்த அளவிற்கு விற்கிறீர்கள்..? வானூர்தி நிலையமும் இந்தியாவினுள்தானே இருக்கிறது என்று விவாதம் செய்தேன். பயனில்லை.

"விமான நிலையங்களில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய உதவுங்கள்" என்று எழுதப்பட்டிருக்கும் பெட்டியின் அருகே வைத்திருக்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பெட்டியில் இட்டேன். நம் கடமை முடிந்தது, இனிமேல் விலையைக்கூட்டி விற்பதற்கு தடை விதிப்பார்கள் என்று எண்ணினேன். அடுத்த முறை சென்ற போது, அதே குளிர்பானத்தை பத்து ரூபாய்க்கு பதிலாக முப்பது ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் விடவில்லை... மறுபடியும் படிவம்... மறுபடியும் நம்பிக்கை.. அடுத்த முறை செல்லும் போது, அதே குளிர்பானம் நாற்பது ரூபாய் விற்கப்பட்டது. மீண்டும் படிவம்!... அடுத்த முறை சென்ற போது அதே குளிர்பானம் ஐம்பது ரூபாய்களாக விலை உயர்ந்திருந்தது! இம்முறை படிவத்தினை எடுக்க எனக்கு விருப்பமே இல்லை... படிவங்கள் போடப்பட்டிருந்த பெட்டி கவனிப்பாரற்று நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

குளிர்பானம் என்று மட்டுமில்லை, கொட்டைவடிநீர், இலைவடிநீர் முதற்கொண்டு அங்கு விற்கப்படும் இதர உணவுவகைகளின் விலைகளையும் படித்தால் புதிதாக வரும் பயணிகளுக்கு மயக்கம் வருவது நிச்சயம். புத்தகக்கடைகளும் அப்படியே..! அத்தனை புத்தகங்களின் விலையும் விண்ணை முட்டும். மோசர்பியர் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு, சாதாரணமாக கடைகளில் 20,30 அதிகபட்சம் 40 ரூபாய்க்கு விற்கப்படும் திரைப்பட குறுந்தகடுகளின் விலை அங்கே எவ்வளவு தெரியுமா...? நம்புங்கள் - கிட்டத்தட்ட 400 ரூபாய். ஹும்ம்... எங்கே போய் முறையிட...? என்று யோசித்துக்கொண்டே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்ததாக காத்திருக்கும் அறைக்கு சென்ற பின்னர் இந்தியன் வானூர்தி அதிகாரிகளைக் காண்பதோ, இந்திய வானூர்திகள் (வளைகுடா நாடுகளுக்கு) சரியான நேரத்திற்கு புறப்படும் செய்தியைக்கேட்பதோ வெகு அரிதானது. சில நேரங்களில் பலமணி நேரம் வரை எந்த அறிவிப்பும் இன்றி காத்திருந்ததும் உண்டுதான். இனிமேல் அவ்வாறு இருக்காது என்கிறார்கள், நம்புவோம்.

எந்த இருக்கையில் பயணம் செய்ய வேண்டும் என்பதை முன்னதாகவே இணையத்தின் மூலம் நிச்சயித்துக்கொண்டு விடுவேன். இறங்கிய உடன் முதல் ஆளாக வெளியில் வருவதற்கு வசதியான இருக்கையை பதிவு செய்து வைத்துக்கொள்வேன். ஆரம்ப காலம் தவிர்த்து பெரும்பாலான சமயங்களில் உணவிற்கு பின்னர் உறங்குவதுதான் வழக்கம். சில நேரங்களில் உடன் பயணிப்பவர்களால் தூங்காமல் உரையாடியே பயண நேரத்தை கழித்ததும் உண்டு. சிலருடன் செய்த பயண அனுபவங்கள் நினைவில் உள்ளன.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பாக ஒருவருடன் பயணிக்க நேர்ந்தது. அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் வந்திருந்தார். என்னுடைய இருக்கைக்கு அடுத்த இருக்கை அவருக்கானது. பயணத்தின் போது குழந்தை தூங்குவதற்கு தனியாக ஒரு தொட்டிலை எங்கள் இருக்கைகளின் முன்பாக விமான சிப்பந்திகள் பொருத்தினர்.

முதலில் ஆங்கிலத்தில் உரையாடலை ஆரம்பித்த அவர் என்னைப் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். குழந்தையின் மூக்கு சளியினால் அடைபட்டும், (அடிக்கடி துடைத்திருப்பார்கள் போலும்) சிவப்பாகவும் இருந்தது. அமெரிக்காவில் நிலவிய அதிகக்குளிர் காரணமாக குழந்தை அவ்விதம் இருப்பதாக கூறினார். அதன் பின்னர் அவர் தமிழில் பேசியவற்றின் சுருக்கம் :

"கொஞ்சம் இந்த பேக்கை மேலே வச்சுடுறேளா?"

"அவர் ஸ்டேட்ல ஐ.டி. கம்பெனியில பெரிய போஸ்ட்ல இருக்கார்."

"நான் மயிலாப்பூர்ல ஸ்கூல்ல டீச்சரா ஒர்க் பண்ணிண்டுருக்கேன்."

"ரெண்டு மூணு வாட்டி போயிட்டு வந்திருக்கேன். இந்தவாட்டி அவராலே வர முடியல."

"மேலேருந்து கொஞ்சம் பேக்க எடுத்து தரேளா... பால்புட்டி உள்ற இருக்கு."

"நான் போறச்சே பி..ஏ..ல (பிரிட்டீஸ் ஏர்வேஸ்) தான் போனேன். எனக்கு பிடிக்கவேயில்ல. அவாள்ளாம் இண்டியன்னா ஒரு மாதிரியா பாக்குறா. க்ரூ மெம்பர்ஸ்ண்ட கேட்டாலும் மதிக்கிறதேயில்ல. நம்மவாள்ளாம் படிச்சிருந்தாலும் அவா கண்டுக்குறதேயில்ல. கேட்டா ஆன்ஸர் கூட பண்ண மாட்டேன்றா.. அதனாலதான் என்ன நடந்தாலும் சரி இனி பி.ஏ..ல போக மாட்டேனுட்டேன்"

"நானும் பாத்துட்டேன், நம்மவாகிட்ட இருக்குற தெறம யார்கிட்டேயும் கெடயாது. என்ன வேலைன்னாலும் சின்சியரா செய்றதுல யாரும் கிட்ட வரமுடியாது."

"இந்த வாட்டி ஸ்டேட்ஸ்ல எங்க பார்த்தாலும் பனி... ஜில்லுன்னு -வெளியில கால வைக்கவே முடியாது பாருங்கோ. எல்லாம் இவனுக்காகதான். கார்ல ஏர்போர்ட் வரச்சே, பனியால ஆக்ஸிடெண்ட் ஆகிடுமோன்னு பயந்துண்டே வந்தேன்.."

"என்ன இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வராது. நம்ம ஊருதான் பெஸ்ட். ஃப்யூச்சர்ல எல்லாரும் நம்ம நாட்டுக்கு வேல கேட்டுண்டு வருவா பாருங்கோ."

"கொஞ்சம் பேக்க வச்சுடுறேளா.. ப்ளீஸ்?"

"எமிரேட்ஸ் எவ்வளவோ பரவால்ல. சாப்பாடெல்லாம் நன்னாருக்கு."

"ஆமா... இப்ப என்னவோ அனெளன்ஸ் பண்ணாளே.. என்ன சொல்றா..? ஒங்களுக்கு எப்படி இதெல்லாம் புரியறது? குடிபோதைல பேசறவா பேச்சு மாதிரின்னா கேக்குது. அனெளன்ஸ் செய்யறச்சே பொறுமையா செஞ்சா என்ன?"

"ஸ்கூல்ல கொழந்தைகளுக்கு நன்னா பாடம் எடுப்பேன்னு எனக்கு நல்ல பேரு."

"இவன கொஞ்சம் பாத்துக்கறேளா?"

"ஏன் சீட் பெல்ட்ட போடச்சொல்றா... இப்படி குலுங்குறதே..? ஃபிளைட்ல பிராப்ளமா?"

"பேக்க கொஞ்சம் எடுத்துத்தாங்கோளேன்."

"அட... தமிழ்படம் எல்லாம் இதுல வருதா...? எப்படிப் பாக்குறதுன்னு சொல்றேளா, ப்ளீஸ்..."

"ஒங்களுக்கு சிரமம் இல்லதானே...?"

இப்படியாக வழமையான பயணத்தூக்கம் அன்றைக்கு விடைபெற்றுப் போயிருந்தது.

இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் போது, பயணிகள் அனைவரும் குடியேற்றத்துறை அதிகாரிகளின் சோதனைக்காக ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்பது கட்டாயம். அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து விட்டு, கொஞ்சம் கண்ணயரலாமா என்று யோசித்தேன்.

"இத கொஞ்சம் ஃபில்லப் பண்ணித் தரேளா?" என்ற கேள்வியில் அந்த யோசனையும் மறைந்தது. "அதை அவரே செய்யலாமே" என்ற என் முகக்குறிப்பை அறிந்த அவர், "நீங்களே செஞ்சு கொடுங்கோ. ப்ளீஸ்" என்றார். பதில் பேசாமல், அவருடைய படிவத்தை பூர்த்தி செய்த பின் அந்தக்குழந்தையின் படிவத்தை பூர்த்தி செய்ய ஆரம்பித்தேன். தேவையான விபரங்களைக் காண அக்குழந்தையின் பாஸ்போர்ட் புத்தகத்தைப் பிரித்தேன்.

அது அமெரிக்க நாட்டு பாஸ்போர்ட்!

என்னுடைய வியப்பான வினாவிற்கு "இவன பெத்துக்குறதுக்குதான் ஸ்டேட்ஸ் போனேன். அங்க பொறந்ததால இவன் அமெரிக்கன் சிட்டிஜன் ஆயிட்டான். பின்னாடி நாங்க ஸ்டேட்ஸ்ல செட்டில் ஆகுறதுக்கும் வசதியா இருக்குமோல்லியோ...?" என்ற பதில் வந்தது.

பொதுவாக அனைவரும் பேறுகாலத்தில் தாய்வீட்டிற்கு வர விரும்புவதுதானே வழக்கம் - இப்படியொரு சிந்தனை இவர்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது.

அதுவரை "இண்டியன்னா மதிக்க மாட்டேன்றா... நம்ம ஊருதான் பெஸ்ட், ஃப்யூச்சர்ல எல்லாரும் நம்ம நாட்டுக்கு வேல கேட்டுண்டு வருவா" என்று பேசியதெல்லாம் எதற்காக என்று எனக்கு விளங்கவில்லை. உங்களுக்கு...?

==============================================================

தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்

ஆதவா
28-03-2009, 01:34 AM
மீண்டும் ஒருமுறை!!!!

படிவங்கள் பூர்த்தி செய்தபின் ஏறும் விலையேற்றம்.... நீங்கள் விலையைக் குறைக்கச் சொன்னீர்களா இல்லை ஏற்றச் சொன்னீர்களா.... (:D)

அந்த பெண்ணின் உரையாடல் நல்லா இருக்கிறது. கொஞ்சம் பயந்தவரா..... அமெரிக்க பாஸ்போர்ட் பெறுவதற்காகவே அங்கே சென்றிருக்கிறார் என்றால் அவரது மனதில் எவ்வளவு தூரம் இந்தியா விதை விதைத்திருக்கிறது என்பது புரிகிறது.. சிலர் தற்செயலாக அமெரிக்க பாஸ்போர்ட் எடுத்திருக்கிறார்கள் (அனிருத்) ஆனால் பிற்காலத்தில் வாழவேண்டும் என்பதற்காக என்றால்....????

பயண அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும்... உங்களது வித்தியாசம். மெல்ல கன்னத்தில் அறைகிறீர்கள்!!

பாரதி
28-03-2009, 01:57 AM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா.

வானூர்தி நிலையத்தில் பொருட்களை எவ்வளவு விலைக்கு விற்கிறார்கள் என்பதை விட - அதிகபட்ச சில்லறை விற்பனை விலை - என்று தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும் விலையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக விற்பது சட்டபடி சரியா..? பெரும்பாலான தொடர்வண்டி நிலையங்களில் விற்கப்படும் குடிநீரும் அதற்கான விலையைக்காட்டிலும் இரண்டு ரூபாய் அதிகமாக வைத்தே விற்பனை செய்கிறார்கள். காரணம் கேட்டால் குளிரூட்டுவதற்கான செலவு என்கிறார்கள். குளிரூட்டப்பட்ட நீர் தேவையில்லை என்று மறுத்தாலும் கூட விலையைக் கூட்டியேதான் விற்கிறார்கள். ஹும்.... என்ன சொல்வது?

உடன் பயணித்தவர் பயந்தவராக எனக்குத் தோன்றவில்லை. நிற வேற்றுமை குறித்தும், மேலை நாட்டவர் நடந்துகொள்ளும் விதம் குறித்தும், நம் நாட்டின் பெருமை குறித்தும், அத்தனை பேசியவர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக எவ்வளவு முன்னெச்சரிக்கையாக நடந்திருக்கிறார் (அல்லது ஒரு வேளை நடந்து கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்) என்று எண்ணும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.

பயண அனுபவங்கள் பல உண்டு ஆதவா. எப்போதேனும் கிறுக்கத் தோன்றும் சமயங்களில் மனதில் பட்டதை பதிக்கிறேன். இம்முறை மிக நீண்ட இடைவெளி.... அவ்வளவுதான்.

ஆதவா
28-03-2009, 02:53 AM
அண்ணா.... பாதுகாப்பிலேயே பெரிய ஓட்டை இருக்கிறது!!! இதிலெல்லாம் தலையிடாத அரசு சில்லறை விஷயத்திலெல்லாம் தலையிடும் என்று எப்படி எதிர்பார்க்க??

இளசு
31-03-2009, 08:50 PM
அன்பு பாரதி

மீண்டும் ஒரு தேதியில்லாக் குறிப்பு தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு முதல் வாழ்த்து!

எப்ப வரும், எப்படி வரும்னு எல்லாம் சொல்லமாட்டேன்..
அப்பப்போ வரும்போது வரும்...
என இத்தொடருக்கு நீ கட்டியம் சொல்லியிருந்தாலும்,
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் என் நச்சரிப்பு இதுபற்றி...
உன்னிடம் செய்தவன் என்ற முறையில் கூடுதல் மகிழ்ச்சி!

---------------------------------------------------

மருத்துவமனை எதிரில் ஊருக்கு அவசரத்தகவல் எழுதிப்போட வருவோரிடம்
''இங்லாண்டு கவரை''யே விலை ஏற்றி விற்பவர்கள் நாம்..

விமானம் ஏறும் அளவுக்கு வசதி உள்ளவர்களிடம்
எந்த வகையில் கொள்ளை அடித்தாலும்,
அது ராபின்ஹூட் தத்துவப்படி சரி என்னும் மனோபாவம் நமது..

எனவே விலைகள் பற்றி நீ எத்தனை முறை சொன்னாலும்
ஆதவன் சொன்னதுபோல் அத்தனைக்கத்தனை கூடுமே ஒழிய.......

----------------------------------------------------

பாதுகாப்பு குறித்த உன் கவலை நியாயமானது..
எடுத்துச் சொல்லும் வழி எனக்கும் தெரியவில்லை பாரதி..

இக்கட்டுரையை வாசிப்பவர்களில் யாராவது பாதுகாப்பு துறையில் முக்கிய பணியில்
இருந்தால்...... தக்க கவனம் ஈர்க்கப்படலாம்..

-----------------------------------------------

சகபயணி..
யார்தான் அவர்போல் இரட்டை மனநிலையில் இல்லாதவர்?

காதல் கவிதையில் என்றால் ஆதரவு
நம் வீட்டில் என்றால் கடும் எதிர்ப்பு!!!

பாரதம் உய்யவேண்டும் என்பதில் ஒரு பாதி மனமும்
வாரிசுக்கு வழிசெய்துகொள்வோம் என்பதில் மறுபாதி மனமும்..

அவர் என்ன செய்வார் பாவம்?



பெரும் ஆவணச் சேமிப்பாக திகழும் இத்தொடர் தொடர என் வாழ்த்தும் ஊக்கமும்..

----------------------------------------------------------

இப்பொதெல்லாம் விமானப்பயணங்களில் தூக்கமே என் தோழன்..
நீ சொல்லும் அந்த வரிசை பக்கமே போகமாட்டேன்..
குழந்தைகளுடன் தாய்மார்கள் அதிகம் புழங்கும் வரிசை அது..
பின் எப்படி தூங்க?

அறிஞர்
31-03-2009, 10:56 PM
மீண்டும் ரசித்து படித்தேன்.. பாரதி அண்ணா..
------
விமான நிலையத்தில் விலையேற்றத்தை தடுக்க இயலாது. இப்பொழுது தண்ணீர் பாட்டிலையும் உள்ளே எடுத்த செல்ல இயலாததால்... அதற்கும் 2 அல்லது 3 மடங்கு விலை கொடுத்து தான் வாங்கனும்..
----------
சென்னையில் ஆசிரியர் பணி செய்பவருக்கு விமானியின் ஆங்கிலம் புரியாதது, படிவம் நிரப்ப தெரியாதது ஆச்சரியத்தை தருகிறது.
--------
எனக்கும் பிரிட்டீஸ் ஏர்வேஸ்.. பிடிக்காது. அந்த அம்மிணி சொல்லும் கருத்துக்களுடன் ஒத்துபோகிறேன்.

பாரதி
01-04-2009, 06:46 AM
உங்கள் பின்னூட்டத்திற்கும் தொடர்ந்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அண்ணா, அறிஞர்.

இன்று மத்திய விமானத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல் அவர்களுக்கும், வானூர்தி பாதுகாப்பிற்கான பிரிவு, சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் ஆகியவற்றிற்கும் விளக்கமான மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இளசு
01-04-2009, 06:49 AM
இந்த உன் முயற்சி தளரா மனவளம் என்றுமே என்னைப் பிரமிக்க வைக்கிறது பாரதி..

உனக்கென வாய்த்த நற்பண்பு அது!

பாரதி
01-04-2009, 06:53 AM
அண்ணா, பகடி செய்கிறீர்கள்தானே...!!

இப்பதிவில்தான் வானூர்தி நிலையத்தின் விலைவாசி குறித்து எழுதி இருந்தேன்.

அதைப்படித்த பின்னர் இப்படிக்கூறினால் எப்படியண்ணா..?

இளசு
01-04-2009, 06:55 AM
விலை விஷயத்தில் மலைமோதிய வலி வந்தபின்னும்
பாலவிஷயத்தில் மீண்டும் முயலும் மனவளம் - பகடிக்குரியதா என்ன?

பாரதி, உன்னைக் கிண்டல் செய்ய வேறு எத்தனையோ உண்டு என்னிடம்.. ஹ்ஹ்ஹ்ஹா!

இந்த விஷயத்தில் என் பாராட்டும் வியப்பும் மட்டுமே..!

பாரதி
01-04-2009, 07:03 AM
விலைப்பாடம் படித்ததை நிறுத்தியதற்கு காரணம் இனிமேலும் அதன் விலையைக்கூட்டுவதற்கு நான் காரணமாகி விடக்கூடாதே!

இனிதான் பாலபாடம் படிக்க வேண்டும் அண்ணா.

(இன்றைக்கு ஓய்வா அண்ணா... உடனுக்குடன் பதில் வருகிறதே..!!)

aren
01-04-2009, 07:07 AM
நன்றாக வந்திருக்கிறது பாரதி. இன்னும் கொடுங்கள், ஆனால் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

குளிர்பானம் உள்ளே விலை அதிகம். சில சமயங்களில் நான் அந்த விலையுடன் ஒத்துப்போகிறேன். காரணம் விலைவாசிதான். லட்சக்கணக்கில் வாடகை கொடுக்கவேண்டும், அதுவும் அடுத்தமுறை அந்த கடையே ஏலத்தில் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை.

பாவம் எவ்வளவு விற்கப்போகிறார்கள் ஒரு நாளைக்கு. நாம் பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதால் குறைந்துபோய்விட மாட்டோம். அவர்களுக்கும் ஜீவனம் நடக்கவேண்டுமே. என்ன செய்வது.

அந்தப் பெண் தன்னுடைய கணவரின் ஊந்துததால் அமெரிக்கா சென்று குழந்தை பெற்றிருப்பார்களோ என்னவோ. அவர்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம், சில சமயங்களில் கணவரின் பிடிவாதத்தால் பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கிறது.

என் மனைவிக்கு இந்தியாவை அதுவும் சென்னையை விட்டுவிட்டு எங்கேயும் போக இஷ்டமில்லை. என்னுடைய 19 வருடங்களாக வெளிநாட்டில்தான் வசித்துவருகிறார். என்ன செய்வது.

எனக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய சர்வீஸ் நன்றாகவே இருக்கும்.

இளசு
01-04-2009, 07:09 AM
கடந்த புதன் முதல் ஃப்ளூ காய்ச்சல்.. ஆனாலும் பணிக்குச் சென்றபடியே..
நேற்று முக்கிய விரிவுரை...

நல்லபடி விரிவுரை முடிந்து... உடலும் காய்ச்சலுக்குப்பின் புதுத்தெம்பாகி
மன்றத்தில் விட்டதைக் கொஞ்சம் பிடித்து...

இதோ பணிக்குக் கிளம்பிவிட்டேன் பாரதி..

-----------------------------------

அண்ணன் உட்பட அனைத்து பயணிகள் நலனுக்காக
விலையேற்ற முயற்சிகளை இந்தமட்டும் முடித்துக் கொண்டமைக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனச் சொல்லும் அதே வேளையில்......
........................................................................

aren
01-04-2009, 07:10 AM
எனக்கு குழந்தை அழுதால் பிடிக்காது. அதுவும் குழந்தை அழும்பொழுது அதன் தாய் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சில சமயம் நான் நேரிடியாகவே எழுந்துபோய் அவர்களிடம் குழந்தையை கவனியுங்கள் என்று சொல்லியிருக்கிறேன், பல சமயங்களில் விமானப் பணிப்பெண்களிடம் சொல்லி கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்.

ஆகையால் முதல் இரண்டு மூன்று வரிசைகளை எடுக்கமாட்டேன்.

இளசு
01-04-2009, 07:12 AM
அன்பின் ஆரென்

பிரிட்டிஷ் ஏர்வேஸின் ரசிகர் மன்றத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
(அறிஞருக்கு பெப்பே...)

பாரதி
01-04-2009, 07:17 AM
விரிவான கருத்துகளுக்கு நன்றி ஆரென்.


நன்றாக வந்திருக்கிறது பாரதி. இன்னும் கொடுங்கள், ஆனால் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

குளிர்பானம் உள்ளே விலை அதிகம். சில சமயங்களில் நான் அந்த விலையுடன் ஒத்துப்போகிறேன். காரணம் விலைவாசிதான். லட்சக்கணக்கில் வாடகை கொடுக்கவேண்டும், அதுவும் அடுத்தமுறை அந்த கடையே ஏலத்தில் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை.

பாவம் எவ்வளவு விற்கப்போகிறார்கள் ஒரு நாளைக்கு. நாம் பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதால் குறைந்துபோய்விட மாட்டோம். அவர்களுக்கும் ஜீவனம் நடக்கவேண்டுமே. என்ன செய்வது.

நாம் பத்து ரூபாய் அதிகம் கொடுத்தால் சரி ஆரென். 12 ரூபாய் பானத்தை 50 ரூபாய்க்கு விற்பதை என்ன சொல்ல...? இப்போதெல்லாம் நான் வெளியில் இருந்தே குளிர்பானங்களையும் வாங்கிக்கொண்டுதான் உள்ளே நுழைகிறேன்.


அந்தப் பெண் தன்னுடைய கணவரின் உந்துதலால் அமெரிக்கா சென்று குழந்தை பெற்றிருப்பார்களோ என்னவோ. அவர்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம், சில சமயங்களில் கணவரின் பிடிவாதத்தால் பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கிறது.

என் மனைவிக்கு இந்தியாவை அதுவும் சென்னையை விட்டுவிட்டு எங்கேயும் போக இஷ்டமில்லை. என்னுடைய 19 வருடங்களாக வெளிநாட்டில்தான் வசித்துவருகிறார். என்ன செய்வது.

ஆஹா... இப்போதுதான் எனக்கு கொஞ்சம் விளங்குகிறது.


எனக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் மிகவும் பிடிக்கும். அவர்களுடைய சர்வீஸ் நன்றாகவே இருக்கும்.
நான் போனதில்லை... இதுவரை....!


கடந்த புதன் முதல் ஃப்ளூ காய்ச்சல்.. ஆனாலும் பணிக்குச் சென்றபடியே..
நேற்று முக்கிய விரிவுரை...

நல்லபடி விரிவுரை முடிந்து... உடலும் காய்ச்சலுக்குப்பின் புதுத்தெம்பாகி
மன்றத்தில் விட்டதைக் கொஞ்சம் பிடித்து...

இதோ பணிக்குக் கிளம்பிவிட்டேன் பாரதி..

கவனம் அண்ணா.. முதலில் உங்கள் உடல்நலத்தை கவனியுங்கள்.



-----------------------------------
அண்ணன் உட்பட அனைத்து பயணிகள் நலனுக்காக
விலையேற்ற முயற்சிகளை இந்தமட்டும் முடித்துக் கொண்டமைக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனச் சொல்லும் அதே வேளையில்......
........................................................................

மக்கள் தொலைக்காட்சி வாழ்க!

ரங்கராஜன்
01-04-2009, 07:47 AM
பாரதி அண்ணா

முதல் முறையாக உங்கள் எழுத்தை படித்தேன், ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது, தாமத்திற்கு மன்னிக்கவும். ஏன் இதை இத்தனை நாளாய் படிக்கவில்லை என்று வருந்தினேன். நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் என் கண் முன்னே நிகழ்ந்த மாதிரி இருந்தது உங்கள் எழுத்து.

ஏர்போர்ட் எதிரில் இருக்கும் மேம்பாலத்தை பற்றி நீங்கள் சொன்னது 100% உண்மை தினமும் அதை கடக்கும் பொழுது, பாலத்தின் மேலே வாகனத்தில் செல்லும் மக்கள் இடது ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு விமானத்தின் அழகை பார்ப்பார்கள். இன்னும் இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம், மெர்க்குரி பல்ப்பின் வெளிச்சத்தில் அழகாக இருக்கும். வாகனம் ஒட்டிக் கொண்டு செல்பவர்களும் அதை பார்க்க தவறுவது இல்லை, இதனால் விபத்துகள் நடக்கலாம். இதில் காவலுக்கு நிற்க்கும் போலீஸும் அவர்களை மறந்து விமானத்தை பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.......... என்னத்தை சொல்ல.

அந்த பெண்மணியுடனான உரையாடல் நன்றாக இருந்தது. உங்க பழைய பதிப்புகளையும் தேடி படிக்க போறேன்.

பாரதி
01-04-2009, 11:20 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி மூர்த்தி.

நீங்கள் கூறியது போல மேம்பாலத்தில் வாகன விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, நாச வேலைகள் செய்ய முயல்வோருக்கு அது வசதியாக இருந்து விடக்கூடாது என்ற அச்சம்தான் முக்கிய காரணம்.

மற்ற குறிப்புகளையும் படிக்கப்போறீர்களா? ஹும்.. என்னத்த சொல்ல... விதி வலியது.

சிவா.ஜி
01-04-2009, 03:38 PM
அன்பு பாரதி....என்னவென்று சொல்ல. சுவாரசியமான கட்டுரை. படிக்கப்படிக்க பிரமிப்பாக இருக்கிறது உங்கள் எழுத்தாற்றலைப் பார்த்து.

நான் மூன்று முறை மட்டுமே சென்னை விமான நிலையத்திலிருந்து பயணப்பட்டிருக்கிறேன். விலைகளைப்பார்த்து நொந்துகொண்டேதான் வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிரமாதித்தனாக நீங்கள் விடாமல் இட்ட படிவங்களின் விளைவுதான் நான் அவ்வளவு விலை கொடுத்து வாங்க காரணமாயிற்றா...? இருங்கள் உங்களை நேரில் கவனித்துக்கொள்கிறேன்...!!

விவரிப்புகள் பிரமிக்கவைக்கின்றன. அந்த டீச்சர் மாமியுடனான உரையாடல்கள் அசத்தல் ரகம். ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டி மாதிரி அவர் மாற்றி மாற்றி பேசியதை சுவாரஸியத்துடன் வாசித்தேன். ஆனால் அவர் சொன்னது உண்மைதான் எமிரேட்ஸ் எவ்வளவோ தேவலாம். ஏர் இந்தியாவை நினைத்தால்...வேண்டாம் ப்ரெஷர் தான் எகிறும்.

அந்த பால சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் மின்னஞ்சல் போர் வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாதுகாப்பு பிரச்சனை உடனடியாக அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும்.

தெளிவான நீரோடையின் ஓட்டம் உங்கள் எழுத்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாரதி. வாழ்த்துகள்.

umakarthick
01-04-2009, 04:04 PM
விமான நிலையங்களிலும் லஞ்சமா நம்ப முடிய வில்லை :(

பாரதி
01-04-2009, 04:24 PM
நான் மூன்று முறை மட்டுமே சென்னை விமான நிலையத்திலிருந்து பயணப்பட்டிருக்கிறேன்.
அன்பு சிவா, பாதுகாப்பு மற்றும் விலைவாசி தவிர்த்து, சென்னை விமானநிலையம்தான் சென்று வர சிறந்தது.


விலைகளைப்பார்த்து நொந்துகொண்டேதான் வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிரமாதித்தனாக நீங்கள் விடாமல் இட்ட படிவங்களின் விளைவுதான் நான் அவ்வளவு விலை கொடுத்து வாங்க காரணமாயிற்றா...? இருங்கள் உங்களை நேரில் கவனித்துக்கொள்கிறேன்...!!

திஸ்கி மன்றத்தில் அண்ணா எனக்கு இட்ட பெயரை இப்போது நீங்கள் மீண்டும் நினைவூட்டுகிறீர்கள் சிவா. ஒரு விதத்தில் மரத்தில் தொங்கும் வேதாளத்தை கீழே கொண்டுவர விக்ரமாதித்தன் முயற்சிக்க, விடுகதை போட்டு மீண்டும் மீண்டும் (மரத்தில்) ஏறும் விலைவாசியும் வேதாளம்தான் போலும்.

நேரில் சந்திக்கும் போது கவனிக்கத்(...!!) தயாராக இருங்கள் சிவா.


டீச்சர் மாமியுடனான உரையாடல்கள் அசத்தல் ரகம். ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டி மாதிரி அவர் மாற்றி மாற்றி பேசியதை சுவாரஸியத்துடன் வாசித்தேன். ஆனால் அவர் சொன்னது உண்மைதான் எமிரேட்ஸ் எவ்வளவோ தேவலாம். ஏர் இந்தியாவை நினைத்தால்...வேண்டாம் ப்ரெஷர் தான் எகிறும்.
சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அவருடைய உரையாடலை மட்டும் பதிவு செய்தேன். மற்றபடி திட்டமிட்ட நேரத்தில் பயணம் செய்ய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு எமிரேட்ஸ்தான் சரி.


அந்த பாலம் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் மின்னஞ்சல்போர் வெற்றிபெற வாழ்த்துகிறேன். பாதுகாப்பு பிரச்சனை உடனடியாக அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும்.
முயற்சிப்போமே சிவா... இல்லையா..?


தெளிவான நீரோடையின் ஓட்டம் உங்கள் எழுத்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாரதி.

பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி சிவா.


விமான நிலையங்களிலும் லஞ்சமா நம்ப முடிய வில்லை :(
அன்பு கார்த்திக்.. எந்த இடத்திலும் வானூர்தி நிலையத்தில் கையூட்டு பெறுவதாக குறிப்பிடவே இல்லையே! விலைவாசி அதிகம் என்றுதான் கூறி இருக்கிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி.

செல்வா
01-04-2009, 05:01 PM
ஆஹா..... நீ,,..............................ண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதியண்ணாவின் குறிப்புகள். இந்த முறை பயணக்கட்டுரை போன்று. சமூக நலத்தைத் தொட்டுச் செல்லும் செயல்கள் குறிப்புகள்.
ரொம்ப நல்லாருக்கு அண்ணா... வாழ்த்துக்கள்.
இளசு அண்ணாவோடு சேர்ந்து உங்களைத் தொந்தரவு செய்து எழுதவைப்பதில் எனக்கும் பெருமை... :)
சிவா அண்ணா... நான் மூன்று முறை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன் இதுவரை எந்தப் பிரச்சனையையும் சந்தித்ததில்லை... குறிப்பாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சேரவேண்டிய இடத்திற்குச் சேர்ந்திருக்கிறேன்.
என்னைக் கேட்டால் இலங்கை விமானச் சேவையை சிறந்தது என்பேன். பயணிகளைக் கவனிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.

சிவா.ஜி
01-04-2009, 05:47 PM
சிவா அண்ணா... நான் மூன்று முறை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன் இதுவரை எந்தப் பிரச்சனையையும் சந்தித்ததில்லை... குறிப்பாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சேரவேண்டிய இடத்திற்குச் சேர்ந்திருக்கிறேன்.
.

கொடுத்துவைத்தவரைய்யா நீங்கள்......ஆனால் நான்...:traurig001:

அன்புரசிகன்
01-04-2009, 06:38 PM
இதெல்லாம் சகஜமப்பா......... உங்களுக்காவது 20 30 தான் கூட்டி வித்திருக்கிறார். பல்கலையில் ஒரு பால் பக்கற்று 10 ரூபாய்க்கு குடித்ததை (கொத்மலே பிரான்ட்) கட்டுநாயக்க விமானநிலையத்தில் 150 ரூபாய் கொடுத்து வாங்கி கூடித்திருக்கிறேன். (அது 1 $) பெறுமதியானது. :D

அந்த பெண்மணியின் கூற்றுக்கு என்ன சொல்ல... மகனுக்கு அமெரிக்க கடவுச்சீட்டு எடுக்க நினைத்ததில் தவறில்லை. ஆனால் அதுக்குமுன்னம் அடித்த அட்வைஸூக்கு நீங்கள் சும்மா விட்டு வைத்துவிட்டீங்களே... ஏதாச்சும் பண்ணியிருக்கவேண்டாமா அண்ணா.............. :D

பாரதி
02-04-2009, 06:27 AM
இந்த முறை பயணக்கட்டுரை போன்று. சமூக நலத்தைத் தொட்டுச் செல்லும் செயல்கள் குறிப்புகள்.
ரொம்ப நல்லாருக்கு அண்ணா... வாழ்த்துக்கள்.
இளசு அண்ணாவோடு சேர்ந்து உங்களைத் தொந்தரவு செய்து எழுதவைப்பதில் எனக்கும் பெருமை... :)
சிவா அண்ணா... நான் மூன்று முறை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன் இதுவரை எந்தப் பிரச்சனையையும் சந்தித்ததில்லை... குறிப்பாக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சேரவேண்டிய இடத்திற்குச் சேர்ந்திருக்கிறேன்.

ஆமாம். கருத்திற்கும் தனிப்பட்ட முறையிலும் நன்றி செல்வா... உங்க கதை எங்கே...?கடந்த வருடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸில் 5 முறைக்கு 4 முறை மிகவும் தாமதமாகத்தான் சென்று சேர முடிந்தது.


இதெல்லாம் சகஜமப்பா......... உங்களுக்காவது 20 30 தான் கூட்டி வித்திருக்கிறார். பல்கலையில் ஒரு பால் பக்கற்று 10 ரூபாய்க்கு குடித்ததை (கொத்மலே பிரான்ட்) கட்டுநாயக்க விமானநிலையத்தில் 150 ரூபாய் கொடுத்து வாங்கி கூடித்திருக்கிறேன். (அது 1 $) பெறுமதியானது. :D
அன்பு... துபாய் விமான நிலையத்தில் ஒரு முறை காப்பி வாங்கி குடித்ததையே தனிக்கதையாக எழுதலாம்...ஹும்...


அந்த பெண்மணியின் கூற்றுக்கு என்ன சொல்ல... மகனுக்கு அமெரிக்க கடவுச்சீட்டு எடுக்க நினைத்ததில் தவறில்லை. ஆனால் அதுக்குமுன்னம் அடித்த அட்வைஸூக்கு நீங்கள் சும்மா விட்டு வைத்துவிட்டீங்களே... ஏதாச்சும் பண்ணியிருக்கவேண்டாமா அண்ணா.............. :D
நான் விட்டு வைப்பேனா அன்பு.?. அவர்களுடைய உடமைகளை எல்லாம் குடியேற்றத்துறை சோதனை வரைக்கும் கொண்டு வந்து வைத்தேனாக்கும்..!