PDA

View Full Version : முறிந்த சிறகு



ஆதவா
27-03-2009, 07:46 AM
வெகு நாட்களுக்குப் பிறகு
எனக்கொரு கடிதம் வந்தது
சுட்டெரிக்கும் வெறுமையின் மத்தியில்
எனக்கென தோன்றிவிட்ட மாயையை
அக்கடிதம் ஏற்படுத்தியிருந்தது
நிரம்பி வழியும் தனிமையின் நிழலை
அழித்துவிடுவதற்கேனும் கடிதம் வந்திருக்கலாம்
இன்னும் கிழித்துப் படிக்கவில்லை
இழந்து போனவர்களில் யாரோ ஒருவர்
இதை அனுப்பியிருக்கக் கூடும்
எதன் அடையாளமாகவேனும்
தெரிந்து கொள்ளும் ஆவலில்
கடிதத்தைக் கிழித்தேன்
அதனுள்
ஏதோவொரு பறவையின்
முறிந்த சிறகு கிடந்தது

அமரன்
27-03-2009, 08:49 AM
ஆதவா..
வழக்கமாக உங்கள் கவிதைகள் தொடக்கம் முதல் முடிவு வரை வாசகன் சிந்தனையை வல்லிழுப்புச் செய்து தன்னுடன் பிணைத்துக் கொள்ளும். விடுபடல் மிகவும் கடினமாக இருக்கும். இந்தக் கவிதையின் முடிவில் அந்தக் கடினம் இருக்கவில்லை. கையில் எடுத்த சிறகு காற்றில் மிதப்பது போல், முறிந்த சிறகெடுத்து பொருத்திக் கொண்டு வானத்தில் பறப்பது போல் சிந்தனையும்..

ஏகாந்த நேரத்தில் துரும்பும் எமக்குப் கரும்பாகத் தெரியும். இந்தக் கடிதமும் அப்படித்தான். எனக்கென ஒன்று என்பது உலக மாந்தர் ஒவ்வொருவரினதும் கனவு. முற்றும் துறந்தவன் கூட விரும்பியோ விரும்பாமலோ தனக்கென ஒன்று இல்லாமல் இருந்ததில்லை. அந்த ஒன்று இன்னொன்றை வருத்தி கிடைக்கிறது எனும்போது ஏகாந்த வலியுடன் இன்னும் ஒரு வலி அதிக வீரியத்துடன் இணைந்து கொடுமைப்படுத்தும் கொடூரம் எதிரிக்கும் கிடைக்கக்கூடாது.

அந்த ஒன்று "முறிபட்ட சிறகாய் "அல்லாமல் 'முறிந்த சிறகாய்' இருந்தால் ஒரு ஆதுரம் கிட்டும். அது துரோகிக்கும் கிடைக்க வேண்டும்.

எந்தவிதமான அழகுபடுத்தலும் இல்லாமல் அலங்கராத் தோரணைகளால் இம்சிக்காமல் இயல்பான அழகால் ஆளை மயக்கும் அழகிகளைக் காண்பதே தனிச்சுகந்தான். பாராட்டுகள் ஆதவா.

ஆதவா
27-03-2009, 11:05 AM
அமரன்.... உங்களது இந்த பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை... இந்த குட்டிக் கவிதைக்கு... பின்னே.... குறுந்தலைக்கு இவ்வளவு பெரிய மாலையா??? ஹி ஹிஹ் இ..

அழகாக அர்ச்சிக்கப்பட்டதைப் போன்று இப்போது உணர்கிறேன்.. அந்த உணர்வை உங்களது வலுமிகுந்த பதில் தந்திருக்கிறது!!

நன்றி அமரன்.!!!

இளசு
01-04-2009, 06:47 AM
தனிமை = சுற்றிச் சுட்டெரிக்கும்
கடிதம் = மாயக் குளிர் வட்டம்.

சொன்ன அழகு அசத்தல் ஆதவா..

---------------------------

உள்ளே தானிழந்து
உனக்கனுப்பிய சிறகு..

ஒட்டவைத்துப் பறக்க வைத்ததா?
ஒருவருக்கான சிறகு மற்றவருக்குப் பயனுள்ளதா?
பயனென்றால் - பறக்கவா? வெறுமனே வருடவா?

இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

இளசு
01-04-2009, 06:51 AM
.

எந்தவிதமான அழகுபடுத்தலும் இல்லாமல் அலங்கராத் தோரணைகளால் இம்சிக்காமல் இயல்பான அழகால் ஆளை மயக்கும் அழகிகளைக் காண்பதே தனிச்சுகந்தான்.

சுகிப்போர் பட்டியலில் நானும் இணைகிறேன் அமரா..

உன் அழகிய ரசனைக்கு வந்தனம்..:icon_b: