PDA

View Full Version : மரத்தை வைத்து ஒரு பாடல்



pgk53
27-03-2009, 02:59 AM
இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டில் காணப்படுவது.
இதை இயற்றியவர் சுந்தர கவிராயர் என்பவர்.
இந்தப் பாடலில் பதினோரு இடங்களில் 'மரம்' என்னும் சொல் வரும்.
ஒவ்வொரு ;மரம்' என்னும் சொல்லும் ஒவ்வொரு வகையான மரத்தைக் குறிக்கும். அரசமரம், மாமரம், வேலமரம், வேங்கை மரம் என்று பலவித மரங்களாகக் கொள்ளவேண்டும்..

அத்துடன் பல பொருள்களும் மரம் என்ற சொல்லுக்கு உண்டு.
அவை அனைத்தையும் ஒருங்கினைத்து இயற்றப்பட்ட அழகிய பாடல்.
இதை அந்தக் காலங்களில் விடுகவியாகச் சொல்வது வழக்கம்.


மரமது மரத்தி லேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெ டுத்தார்


இதன் பொருள்:

மரமது - அரசமரம் –அரசன்

மரத்திலேறி - மாமரம் - மா -குதிரையையும் குறிக்கும்- குதிரையிலேறி
மரமதைத் தோளில வைத்து - வேலமரம்-வேல்;வேலைத் தோளில் தாங்கி
மரமது –அரசன்
மரத்தைக் கண்டு - வேங்கைமரம் - வேங்கை=புலி; புலியைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி - வேலினால் வேங்கையைக குத்தி

மரமது வழியே சென்று -அரசன் வந்த வழியே திரும்பிச சென்று

வளமனைக்கு ஏகும்போது - அரண்மனைக்குச செல்லும்போது

மரமது கண்ட மாதர் - அரசனைக் கண்ட மாதர்

மரமுடன் - ஆலமரம் – ஆல்

மரம் – அத்தி

மரமுடன் மரம்=ஆல்+அத்தி=ஆலத்தி எடுத்தார்.


இப்போது பொருளைச் சேர்த்துப் படித்துக்கொள்ளுங்கள்
அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் ஒரு வேங்கைப்புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்தவழியே திரும்பி தனது அரண்மனைக்குச்சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் மன்னனைக் கண்ட மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி எடுத்து வரவேற்றனர்.

படித்தீர்களா அன்பர்களே.
கவிஞரின் கற்பனை எப்படிச் சிறகடித்துப் பறந்துள்ளது என்று.
வாழ்க தமிழ் வளம்.

ஓவியன்
27-03-2009, 03:51 AM
அழகிய பாடலுக்குள் ஆயிரம் அர்த்தங்கள்,
பாடலைப் பகிர்ந்து அதற்கு பொருளையும் தந்த அண்ணாவுக்கு நன்றிகள் பல..!!

திரியினை கவிதைகள் பகுதியிலிருந்து, கவிதைப் பட்டறைப் பகுதிக்கு நகர்த்துகிறேன்...

tkpraj
27-03-2009, 04:28 AM
தமிழின் சிறப்பை வெளிக் காட்டும் ஒரு அருமையான பாடல்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

இளசு
28-03-2009, 06:34 AM
சுந்தரக் கவிராயரின் திறம்.. ஆஹா! அற்புதம்..!!

கொணர்ந்தமைக்கு நன்றி பிஜிகே அவர்களே!

ஆதவா
28-03-2009, 07:55 AM
இதற்கு யமகம் என்று பெயர்... முதல் சீர் ஒவ்வொரு அடியிலும் ஒரே சொல்லை திரும்ப வரவேண்டும். ஆனால் பொருள் மாறியிருக்க வேண்டும்!

கவிஞரின் வளம் பிரமிக்கிறது!!!

விகடன்
28-03-2009, 10:53 AM
விளக்கம் கொடுத்த பின்னரும் படித்து விளங்கிக்கொள்ள (எனக்கு) நேரமெடுக்கிறதே. இப்படி ஒன்றை படைக்க எண்ணி அதையும் சாதித்து முடித்துவிட்ட அந்தக் கவியின் புலமையை எப்படி நிர்ணயிப்பது.

மன்மதன்
28-03-2009, 01:27 PM
மரத்திற்கு இத்தனை மரம் இருக்கிறதா..

(மரம் - அர்த்தம் ..என்னுடைய அகராதியில்..ஹிஹி)


ஆலத்தி - ஆரத்தி எது சரியான வார்த்தை ?

பா.ராஜேஷ்
02-04-2009, 05:55 AM
அருமையான கவிதை.

ஆமாம். இந்த மரமண்டை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமாயிருக்கும்!!? ;)

Poravikarthick
23-07-2009, 02:42 PM
நன்றாக இருந்தது.

என்றும் அன்புடன்,
பொறவிகார்த்திக்

ஓவியன்
25-07-2009, 05:42 AM
இந்த மரமண்டை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமாயிருக்கும்!!? ;)

என்னுடைய தலை என்றும் அர்த்தப்படும்..!! :):D:)

puppy
27-07-2009, 06:37 AM
நன்றி பிஜிகே அவர்களே!!!! பகிர்ந்தமைக்கு நன்றி