PDA

View Full Version : துயிலிடம் - மகுடேஸ்வரன்



nandabalan
26-03-2009, 04:52 PM
இங்கு பதிக்கலாமா கூடாத என்று தெரியவில்லை. ஒருவேளை தவறு என்று தெரிந்தால் தண்டனை எதுவும் தரவேண்டாம் நான் புதியவன்.

துயிலிடம் - மகுடேஸ்வரன் - 1999 இல் வந்த ஒரு கவிதை. படித்துப் பயப்படவேண்டாம்.

இறந்தவுடன் என்னை
எங்கே புதைப்பீர்களோ
அங்கே போயிருந்தேன்.
அதுவொரு
சரளைக்கல் பூமி.
மழை நாளில்
நீர் மேவிச் செல்லும்
ஓடக்கரை.
மற்றோர்புறம்
பனங்குருத்துக்களின் வரிசை.
உச்சிப் பனையொன்றில்
கொம்பேறி மூக்கனின்
அடை முட்டை.
அருகில்
உறங்கும் என் மூதாதைகளின்
நிச்சலனம்.
என் நிரந்தரத் துயிலிடம்
எனக்கு நிரம்பப் பிடித்தம்.
அது
இறுக்கமான மண் பகுதி.
அவ்வளவு எளிதில் இறங்காது.
ஐந்தடிக்குழி
என் மரணத்தில் உங்களுக்கு
மகிழ்ச்சியோ துக்கமோ
குழி தோண்டும்போது
களைத்து அழுவீர்கள்.
கவனம்
களைப்பில் நடை தள்ளாடி
குழி வீழ்வீர்கள்.
எழமாட்டீர்கள்.
புதைத்தவுடன்
போய்விடுங்கள்.
என் பதற்றங்களும் வேட்கைகளும்
பருத்த உலக்கையாய் மாறி
பிடரியில் இறங்குமுன்
போய்விடுங்கள்.
ஏனெனில்
மரணமுற்றவனின் தேடல்முன்
வாழ்பவனின் முனைப்புகள்
வெகு அற்பம்.
நாட்கள் கழிந்து
என் புதைமேடு மீது
முளைத்த ஆவாரம்பூவில்
ஒரு வண்டமரும்போது
என் ஆன்மா
அமைதி பெறலாம்.
அன்று வாருங்கள்
வணங்க.

சிவா.ஜி
26-03-2009, 05:00 PM
தண்டனையெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ....இது உங்களது சொந்த படைப்பாக இல்லாத பட்சத்தில்.....படித்ததில் பிடித்தது பகுதியில் பதிக்கனுங்க. அவ்ளவுதான். கவிதை அசத்தல்.