PDA

View Full Version : அன்பு மொழி (சிறுகதை)



இளசு
13-09-2003, 04:00 PM
அன்பு மொழி

அந்த செய்தி கேட்டு அவள் இடிந்துபோனாள்.

அலை அலையாய் பழைய நினைவுகள்....

தெருவில் சாமி ஊர்வலம் போக தோள் மீது தூக்கி
தீபாரதனை ஒளியில் ஜொலித்த தேவி முகம் காட்டிய அப்பா...


ஓடிப்போய் காலைக் கட்ட, அதிர்வில் பிளேடு கீறி சிகப்பாய்
உதிரம் எட்டிப்பார்த்தும், " என் செல்லக் குட்டூஸ், என்னடா வேணும்?" என ரோஜாவாய் முகம் மலரக் கேட்ட அப்பா..


குரல் உயர்த்தி அம்மா கண்டிக்கும்போதெல்லாம்
என் அனிச்ச மலர் மனசைக் காப்பாற்ற
புருவ உயர்த்தலில் அம்மாவை வாயடைக்க வைத்த அப்பா...


முட்டிச்சில் பெயர்ந்து நான் ஓவென்று அழ..
"போட்டியில் கலந்ததுதான் முக்கியம்...
அந்தப் பயணந்தான் வாழ்க்கை...
வெற்றி - தோல்வி இடைநிறுத்தங்கள்..
இலக்கு அல்ல" என்று உபதேசித்து
உள் தெம்பு வளர்த்து.....
அடுத்த வருடம் நான் வெல்ல...
என்னைத் தட்டி மட்டும் கொடுத்து

நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த அப்பா....

என்னை ஒரு மார்க்கில் முந்தும் அவன் மேல்
பொறாமை பொங்க, அவன் அப்பாவுக்கு டிரான்ஸ்·பர்
வந்து சேராதா என நான் வேண்டி வெம்ப...
"திறமை கண்டு திகைக்காதே.. புகையாதே..
நெருங்கி அவனிடம் தெரிந்து கொள்ள என்ன உண்டு..கற்றுக்கொள்"

என இன்றும் எனக்கு ஆத்மநண்பனாய் அவனிருக்க வழி செய்த அப்பா...


"பெரிய மனுஷி ஆயிட்டாடா உன் பொண்ணு..
நாலு பேருக்கு சொல்லி
நலங்கு சுத்த ஏற்பாடு பண்ணு" என்ற பாட்டியின்
நச்சரிப்பை என் மெல்லிய உணர்வு புரிந்து அடக்கி
ஒரு உடலியல் மாற்றத்தை

மனவியல் படித்த அறிஞன் போல் விளக்கிய அப்பா...


"லவ் லெட்டர் குடுத்துட்டாம்பா" என நான் அழ
என் மனம் முதலில் தெரிந்து,
நேசிக்கப்படுவது உன் பிழையல்ல..
அதே வித நேசம் திருப்பிப் பிறக்காவிட்டால்
அது தேசக்குற்றமும் அல்ல என என் குற்ற உணர்ச்சி துடைத்து

உலகத்தை நேர்ப்பார்வை பார்க்க வைத்த அப்பா...


"மேலே மேலே படிச்சா வரன் அமையறது கஷ்டங்க.."
என்ற அம்மாவிடம்,
"படிப்பு ஒரு பலம். சொந்தக்காலில் நிக்க தெம்பு தரும்
படிப்பே பெண்ணுக்கு முதல் வரன்"

என்று அழகாய்ச் சம்மதிக்க வைத்த அப்பா...


"மெழுகுச்சிலையாட்டாம் வளந்துட்டா...
மடியிலே நெருப்பிருக்காப்ல பயமா இருக்கு "
என்று பயந்த அம்மாவுக்கு நேர் எதிராய்...
அழகும் வளர்ச்சியும் ஆசிர்வதிக்கப்பட்டவை,
ஆராதிக்கப்பட வேண்டியவை என்று சொல்லி
என் கர்வம் குறைத்து தன்னிலை உணர்த்திய அப்பா...


அந்த வயதிலும் என் தலை கோதி
உச்சி தடவி....
உறக்கம் தழுவுமுன்னே காதருகில்
"செல்லக் குட்டூஸ்" என்று கிசுகிசுத்த இனிப்பை ஊற்றி
தூங்க வைத்த அப்பா...

அய்ன் ராண்ட் முதல் அபிராமி அந்தாதி வரை
சகலமும் படித்தபின் சர்வசுதந்திரமாய்
அலசிப் பேசி ஆத்மாவுக்கும் உணவூட்டிய அருமை அப்பா...

அவள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.
வெள்ளை உடைகள். ஆண்ட்டிசெப்டிக் வாசம்.
பரபரப்பும் இறுக்கமும் ஒருங்கே இணைந்த
அந்த இடத்துக்கே உரித்தான பிரத்தியேக நடமாட்டம்..

மனிதர்கள் கேஸ்- ஷீட்டுகளாய் மாறிவிட்ட மாய பூமி.
அவளுக்குள் ஓர் அவஸ்தையான அந்நியத்தனம் எப்போதும்
உற்பத்தி செய்யும் ஸ்தலம்.

ஸ்ட்ரோக் யூனிட்... தனியறையில் அப்பா..
வலது கை -கால் விழுந்து,
கூடவே பேச்சும் இழந்து விட்ட அப்பா...
இனி அவளை வருடும் பாசச்சொல் சொல்லி
அவளை வார்த்தையால் தழுவ முடியாத அப்பா..

நினைவு வேண்டுமானால் திரும்பலாமாம்.
மற்ற சாத்தியங்கள் துர்லபமாம்.

அவள் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது.
ஆனால், விழித்தாலும் இனி என்னோடு பேச மாட்டாராமே என் அப்பா?

மௌனமே பாரமாகி அப்படியே அப்பாவின் மார்பில்
சாய்ந்தவள் காதருகே அப்பாவின் இதய ஒலி...

"செல்லக் -குட்டூஸ்..செல்லக் -குட்டூஸ்"

ரவிஷா
13-09-2003, 04:20 PM
அன்பு நண்பரே,

இதை படித்ததும் திகைத்துவிட்டேன். என்ன ஒரு வார்த்தை விளையாடல்!
நீங்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் என்பதை உணர்ந்துகொண்டேன்.
வாழ்க உமது தமிழ் பக்குவம் .

இளசு
13-09-2003, 04:49 PM
நன்றி நண்பர் ரவிஷா அவர்களே..
இது என் முதல் முயற்சி.
உங்களைக் கவர்ந்ததில் மகிழ்கிறேன். நன்றி.

முத்து
13-09-2003, 10:23 PM
இளசு அண்ணா... அருமை...... தொடருங்கள் .. உங்கள் அருமையான படைப்புக்களை எங்களுக்காக...

இளசு
13-09-2003, 11:22 PM
நன்றி முத்து!
தொடர் தொல்லைக்கு தயார்தான் போல! :D

இக்பால்
14-09-2003, 05:37 AM
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வரும் மெல்லிய உணர்வுகளின்
சில புகைப்பட பதிவு. அருமை இளசு அண்ணா. தொடருட்டும்.
-அன்புடன் தம்பி இக்பால்.

இளசு
14-09-2003, 06:46 AM
நன்றி இளவல் இக்பால் அவர்களே.

பாரதி
14-09-2003, 09:20 AM
அன்பு அண்ணா,

அன்பு மொழியால் எங்களை அடைக்காக்கும் உங்களின் கதை நெஞ்சை நெகிழ வைத்தது.

பாசம் என்றால் என்ன என்கிற விசயத்தை இதயத்துடிப்பின் மூலம் உணர வைத்த இளசே .... பாராட்ட மொழி இல்லையே!

இளசு
14-09-2003, 01:00 PM
பாசமுள்ள பாரதிக்கு "வானத்தைபோல" அண்ணனின் நன்றி.

suma
14-09-2003, 02:43 PM
இளசு அண்ணா... அருமை.. தொடருங்கள்

இ.இசாக்
14-09-2003, 04:52 PM
இளசு அண்ணா,

கதையா..கவிதையாயென குழம்புகிறேன் கொஞ்ச நேரம்.
பிறகு உணர்கிறேன் இது பதிவுயென ஆம் அழகிய பதிவு
கதையாய்.

தொடருங்கள் அண்ணா!

இளசு
14-09-2003, 06:19 PM
இளசு அண்ணா... அருமை.. தொடருங்கள்

தங்கையின் பாராட்டு - தங்கப் பதக்கத்துக்கும் மேலே..
நன்றி சுமா!

இளசு
14-09-2003, 06:27 PM
இளசு அண்ணா கதையாய்.

பாசமும்
மனவேருக்கு
நீரும் போல!
நன்றி இளவலுக்கு...

poo
15-09-2003, 01:36 PM
இரண்டு நாள் வரவில்லை... இன்னமும் எழவில்லை..இதயத்து வலிகளிலிருந்து இன்னமும் மீளவில்லை. மனத்துயரோடு மன்றம் நுழைந்தேன். அலம்பலாய் மேய்ந்தவேளையில் அண்ணனின் உணர்வுக்குவியலை கதையென்ற பொய்த்தலைப்போடு
கண்டேன்..

கண்ணீர்த்துளிகள்...

இந்த பதில் எழுதும்முன் படித்துமுடித்தது நான்குமுறை.. இறுதியல்ல இது..

அந்த "செல்ல-குட்டூஸ்" மீண்டும் படியென கட்டளையிடுவதை கண்கூடாய் காண்கிறேன்..

கையில் ஒரு 10 மாத பெண்குழந்தை... அவளின் தகப்பன் பாசம்கண்டு வேலைக்கு வரும்முன்கூட அழுதுவிட்டு வந்தேன். என்போன்ற அப்பன்களுக்கு.. விடலை அப்பன்களுக்கு
விதிமுறைகள் சொல்லித்தந்துள்ளதாய் உணர்ந்தே மீண்டும் மீண்டும் படிக்கிறேன். என் செல்ல குட்டூஸை அந்த அப்பாவாய் வளர்க்க ஆசைஆசையாய் இருக்கிறது...அவள் இன்றே வளர்ந்து நாளையே அப்பாவென அழைக்கமாட்டாளாவென ஏங்கவைக்கிறது..

அண்ணா... என்போன்ற இளகிய உள்ளங்களுக்கு ஒரு எச்சரிக்கையோடு தொடங்கியிருந்தால் மனம் தேறின நிலையில் படித்திருப்பேன்..

உண்மையாய் சொல்கிறேன்.. ஏற்கனவே எனை ஆற்றும் பொறுப்பில் இருக்கும் தங்களின் தோளில் சுமையாய் இன்னொரு சோகம்...

எனக்குள் அழுதுத்துடிக்கும் உணர்வுகளை துடைக்க வாருங்கள்..
துடிப்போடு ஒரு பதிவில்!!

{கடந்த இருநாள் பிரிவு ஒரு முன்னோட்டமாய்... நிரந்தர பிரிவு வரும்நாள் விரைவில்!!.. அந்தக்கால வே(லை)..தனைகள் மீண்டும் தலைதூக்கிவிட்டன அண்ணா.. நேற்று ஒருநாள் எனக்களித்த டார்ச்சரில் தனியாளாய் இருந்திருந்தால் தன்மானம் பொங்கியிருக்கும்.. தலைநிறைய சுகமான சுமைகள் இருப்பதால் இதயத்தை இரும்பாக்க முயன்று இன்று கூனிக்குருகி அலுவல் நுழைந்துள்ளேன்!!!.. .. (இன்னமும் இறுதி முடிவு தெரியவில்லை!).. }

இளசு
15-09-2003, 10:28 PM
தம்பி பூவுக்கு
சோதனைகளை சொந்தத்துக்காக தாங்கும் உனக்கு
வேதனைகள் தீர்ந்து
சாதனைகள் ஆரம்பிக்க என் பிரார்த்தனைகளும் ஆசிகளும்.

When the going gets tough, Only the tough get going!
மனதில் உறுதி வேண்டும்.

இக்பால்
16-09-2003, 09:17 AM
சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும்
சேதம் சேலைக்குத்தானே.
துன்பம் இல்லாதவர் தரணியில் இல்லை.
இன்று உங்கள் கண்ணுக்கு சொகுசாக தெரிபவர்...
நேற்று கஷ்டப் பட்டவர்.
காலம் பதில் சொல்லும்.
ஒரு நாள் நீங்களே நம்பமாட்டீர்கள்... யாராவது
நீங்கள் இப்படி எல்லாம் கஷ்டப் பட்டீர்கள் என சொன்னால்.
உங்கள் சூழ்நிலை புரியாமல் சொல்லவில்லை...
சூழ்நிலை புரிந்துதான் சொல்கிறோம்.
இதை விட சிறப்பானதை அடையும் முன் ...
இதை விட்டு விட வேண்டாம்.
பொறுமை...பொறுமை...பொறுமை.
பொறுத்தவர் பூமி ஆள்வார்.
(பூமி ஆளா விட்டாலும் நிம்மதி மட்டுமாவது கிடைக்கும் அல்லவா?)
பட்ட காலிலேயே படும். (படுகிறது...படும்தான்)
உங்கள் உணர்வுகள் கிள்ளி, கிளறப் படும்போது...
ஒன்று சொல்லட்டுமா?...எங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.
நினைப்பதால் என்ன நிகழ்ந்து விடும்....கேட்க வேண்டாம்.
நினைத்துப் பாருங்கள்...
மனதில் சஞ்சலம் வேண்டாம். தன்னம்பிக்கை வேண்டும்.
சிரிங்க ... எனக்காக ... உங்கள் முகத்தில் சிரிப்பை எதிர்பார்த்து...
உங்களை நோக்கும் உயிர்களுக்காக...
தியாக வாழ்க்கை...உலகிலேயே சிறந்த வாழ்க்கை...தெரியுமா?
இப்பொழுது அந்த வாழ்க்கையிலே நீங்கள்.( நீங்களே சொன்னதுதான்)
-என்றும் அன்புடன் அண்ணா.

gankrish
16-09-2003, 09:58 AM
நண்பா இளசு இன்று தான் இதை படித்தேன். என்ன அருமையாக எழுதியுள்ளாய். உன் போன்றோர் எழுத்துக்களை படிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் ஆழ் மனது பாராட்டுக்கள்.

நண்பா நம் தம்பி பூவின் பிரச்சனை வெகு விரைவில் தீர நாம் எல்லோரும் பிரார்திப்போமாக.

பூ... கவலைபடாதே நீ என்றும் வாடா மலாராய் இருப்பாய்.

இளசு
17-09-2003, 08:16 PM
உன் போன்றோர் எழுத்துக்களை படிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

எங்கோ என்றோ படித்த/ கேட்ட கருத்துகளை வைத்து
சொற்சிலம்பம் ஆடும் என் ஆர்வக்கிறுக்கல்களை
முதல் வகுப்பு படிக்கும் மகன் எழுத்தாய் நினைத்து
உயர்த்திப்பேசும் உண்மை நண்பனே...

நீ படிக்க நான் படைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
இந்த தருணத்தில் உன்னையும் என்னையும் இணைத்த
தமிழ்த்தளம் தந்த தலைவனுக்கும் நான் நன்றி சொல்லியாக வேண்டும்!

இக்பால்
18-09-2003, 06:10 AM
இளசு அண்ணாவின் கருத்துக்கள் திறமையாகவும்,
ஆதரவாகவும், மிகப் பண்பட்டதாகவும் இருக்கக்
காண எனக்கும் ஆச்சரியம்தான். நன்றி அண்ணா.

ரவிஷா
18-09-2003, 02:33 PM
பூவே !
உன்னைக்காண மனம் விழைகின்றது
அடுத்த மாதம் மத்தியில்
நானும் மனோஜியும் புதுவையில்
விவாதிப்போம் விடைகாண்போம்
விரைவில் நேரில் காண்போம்

இளசு
19-09-2003, 12:18 AM
என் தம்பி பூவுக்கு ஆறுதல் தென்றல் வீசும் இம்மடல் தந்த
நண்பர் ரவிஷா அவர்களுக்கும், எங்கள் மனங்கவர் மனோஜி அவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்.

சேரன்கயல்
19-09-2003, 04:13 AM
நண்பர் பூவின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன்...
காட்டாற்று வெள்ளமாய், கண்ணியச் சீற்றம் கொண்டிருந்த நாட்கள் இப்போது கேலி பேசுகின்றன...என்ன செய்வது...தனி ஆள் என்பது வேறு தனக்கென ஒருவர் வந்த பின்னே கதை வேறு...என்னதான் இருந்தாலும்...தன்மானம் அசைக்கப் படும்போது நிச்சயம் பொங்கிவிடும் உணர்வுகள்..

"தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்
நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்
நீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு"

இந்த வரிகள்தான் அடி பட்ட வேளைகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்...

நண்பா பூ...
இரவுகள் எப்போதும் தொடர்வதில்லை...
மூடிய மேகம் விலகி வானம் தெளிவுபெறும் நாள் தொலைவில் இல்லை..
சுயத்தை சுமந்தபடி அந்த நாட்களை சுகிக்க காத்திரு...உன் அருகில் எண்ண அலைகளினூடாய் நாங்கள் அனைவரும் இருப்போம்...

குட்டிப் பூவுக்கு கட்டி முத்தங்கள்...

சேரன்கயல்
19-09-2003, 07:26 AM
இளசு...
உங்களின் கதையை முதலிலேயே படித்துவிட்டேன்...கருத்தை பதிக்கும் முன் மின் தடை...இப்பொழுது எழுத உட்கார்ந்தால் வார்த்தைகளும் தடைப்பட்டு நிற்கின்றன...
விரைவில் தந்தையாகப் போகும் ஆனந்த பதட்டத்தில் இருக்கும் என்னை ஆசுவசப்படுத்திய உங்களின் சிறுகதைக்கு நன்றிகள்...

இ.இசாக்
19-09-2003, 08:00 AM
தோழர் சேரன் அவர்களுக்கு முன் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்.

பாரதி
19-09-2003, 01:18 PM
அன்பு பூ,

கவலை வேண்டாம். சூரியக்கதிர் கண்ட பனித்துளியாய் உங்கள் கவலைகள் மறைந்திட வேண்டும் என்பது என் அவா.

பணிச்சூழலையும், அங்கிருக்கும் சங்கடங்களையும் மறந்து விடுங்கள். எனக்கும் அப்பிடிப்பட்ட சூழல்கள் பல முறை ஏற்பட்டுள்ளன.

"சாது - தேள்" கதையை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அது போல நினைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.

lavanya
19-09-2003, 01:41 PM
அருமையான கதை - அப்பா - மகளுக்கானதும் அம்மா - மகனுக்கானதுமான
உணர்வுகள் பாச வெளிப்பாடுகள் நெகிழ்வானவை. நேர்த்தியாக கதை சொன்ன விதம்
,சின்ன சின்ன நிகழ்வுகளை வெளிப்படுத்தி எழுதியவை பாராட்டத்தக்கவை.உங்களால்
சிறுகதையும் எழுத முடியும் என்பதை மன்றத்தில் நிரூபித்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

அன்பு மொழி - நெகிழ்வில் பேச முடியாத மொழி.

தம்பி பூவின் உணர்வுபூர்வமான பதிப்பும்,அதை தொடர்ந்த பதிப்புகள்
எல்லோர் மனதிலும் இருக்கும் மனிதத்தையும் சோகத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி
யிருக்கின்றது. எங்கோ ஒரு புள்ளியில் மன்றத்தின் சொந்தங்கள் மிக உன்னதமாய்
ஒன்று பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்த தலைவருக்கு
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்

poo
20-09-2003, 07:45 AM
என் நெஞ்சத்தில் மருந்துபோட வார்த்தைகளை ஆழ்மனதிலிருந்து கொட்டியுள்ள அன்பு உறவுகளுக்கு என்ன சொல்லி நன்றியினை உரித்தாக்குவது?!!

puppy
20-09-2003, 06:33 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........என்னத்தை சொல்ல.....
செல்ல இளசுவின் செல்ல குட்டூஸ்.......காதில செல்லமாக.....
ஒலிக்கிறது.........அன்பு மொழி கொஞ்சம் அழ வைத்து விட்டது.....
கதையின் வரிகள் அப்படி.......

அன்புடன்
பப்பி

இளசு
20-09-2003, 06:34 PM
அருமையான கதை .சிறுகதையும் எழுத முடியும் என்பதை மன்றத்தில் நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்
அன்பு மொழி - நெகிழ்வில் பேச முடியாத மொழி


என் இனிய தோழி லாவண்யா அவர்களுக்கு
நீங்கள் "படித்தேன்" என்று சொன்னாலே ஒரு படித்தேன் குடித்த பரவசம் வரும் எனக்குள்..
பாராட்டியும் விட்டீர்கள்.
என் நிலைமை என்ன சொல்வேன்..???
என் நன்றி மொழி - இன்று மௌன மொழி!
தாய் மண்ணே வணக்கம் தந்த தீட்சண்யாவுக்கு என் வணக்கம்!
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=937

இளசு
20-09-2003, 06:44 PM
Quote:
இளசு...
உங்களின் கதையை முதலிலேயே படித்துவிட்டேன்.
இதயம் கவர்ந்த இளவல் சேரனே
படித்ததை படைப்பாளிக்கு நாம் தெரிவிக்கும்
ஒரே உத்தி கருத்துதான்..
(நண்பர் நண்பன் முன்பு சொன்ன ஆதங்கம்..)
தொ(ல்)லை பேசி, கணினி ஊடல், மின் தடை, வார்த்தைச்சிக்கல்
பணி-இல்லச் சூழல் ...இவை மீறி
அவை வருபவை என்பதை அறிந்தவன் நான்..
அப்படி தடை தாண்டி வந்தவற்றை
நன்றியை மாற்றாய்த் தந்து பெற்று
நெஞ்சில் அடைகாத்து வைப்பவன் நான்!

நன்றி!

சொந்த வாழ்வின் சுகவரவுக்கு கட்டியமாய் என் வாழ்த்துகள்.

karikaalan
22-09-2003, 11:09 AM
இளவலே!

இன்றுதான் தங்களது இப்படைப்பைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான கதை. ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும். அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை அசைபோடச் செய்தன தங்களது எழுத்துக்கள். நன்றிகள்.

===கரிகாலன்

சேரன்கயல்
22-09-2003, 03:37 PM
வாழ்த்துகூறிய உள்ளங்களுக்கு இதயப் பூர்வ நன்றிகள்...
மன்றத்தாருக்குத்தான் முதலில் செய்தி சொல்வேன் (எனக்கு தெரிந்தவுடன்)

இளசு
22-09-2003, 04:03 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........என்னத்தை சொல்ல.....
செல்ல இளசுவின் செல்ல குட்டூஸ்.......காதில செல்லமாக.....
ஒலிக்கிறது
அன்புடன்
பப்பி
என் காதில் என்ன சித்தெறும்பு ம்? ஸ்ஸ்ஸஸாஆஆஅ!
எங்கள் பப்பி ஊற்றிய தேனால் வந்த வம்பு!!!

இளசு
22-09-2003, 04:06 PM
இளவலே!
ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும். அதனை அசைபோடச் செய்தன தங்களது எழுத்துக்கள்.
===கரிகாலன்

இளவல் மனம் இசைபாட

இளசு
22-09-2003, 04:08 PM
எங்கோ ஒரு புள்ளியில் மன்றத்தின் சொந்தங்கள் மிக உன்னதமாய்
ஒன்று பட்டு வந்து கொண்டிருக்கிறது.


மன்றத்தாருக்குத்தான் முதலில் .....

பாரதி
01-05-2008, 03:46 PM
இளசு அண்ணாவின் முதல் சிறுகதை முயற்சியை மீளவும் பார்வைக்கு கொண்டு வருவதில் மகிழ்கிறேன்.

meera
03-05-2008, 07:56 AM
அண்ணா மனதை தொட்ட கதை.எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு தந்தை கிடைத்தால் எப்படி இருக்கும்???

அழகாய்,அழுத்தமாய் பாசத்தை சொன்ன விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

பாரதி அண்ணா ஒரு அழகிய முத்தை தேடி தந்தமைக்கு நண்றி அண்ணா

அனுராகவன்
03-05-2008, 08:01 AM
ஆமாம் மீரா அவர்களே!!
நல்ல கதை..
என் வாழ்த்துக்கள்!!!

பூமகள்
03-05-2008, 10:48 AM
என்ன????????:eek::eek:
பெரியண்ணாவின் முதல் முயற்சியா?? :eek:
நம்பவே முடியவில்லை..:icon_b::icon_b:

விழியில் திரண்ட கண்ணீரை துடைத்த படியே.. :traurig001::traurig001:
பூவிதழ் வடிக்கும் வார்த்தைகள் இவை..!!

உளம் உருகி மனம் வெதும்பி
ஆத்மார்த்தமான ஓர் உணர்வை
உங்களின் பதிவுகள் தரத் தவறுவதில்லை..:icon_ush:

அது என்ன மாயமென்றே தெரியவில்லை..
அண்ணலின் பதிவுகள் அனைத்தும்
பூ மனத்தினை பாதித்து
அமரச் செய்துவிடுகின்றன வெகு நேரத்துக்கு....!!

அன்பு மொழி...

அழுகையில் முடிந்தாலும்.. கதை இன்னும் தொடர்ந்து மருத்துவத்துறை கண்டிராத அப்பாவின் மொழி கேட்கும் நாளாக்கி வைத்திருந்தாள் மனத்தின் பாரம் குறைந்திருக்குமே...!!

இப்போது.. கணத்த மனத்தோடு.. பூ தெம்பின்றி தேம்பி நிற்கிறதே..!!:frown:
:traurig001:
அண்ணலே... அசாத்திய சொல்லாடல்.. அழகிய கதை வடிவம்..!!:icon_b:

திஸ்கி கால பல பதிவுகள் வைரத்தினும் ஜொலிப்பு மிக்கதாக காணக் கிடைப்பது கண்டு அகமகிழ்கிறேன்.:)

மனோஜ்
10-05-2008, 05:19 PM
இளசு அண்ணாவின் முதல் படைப்பு முத்தான பதிப்பு
நன்றி அண்ணா

விகடன்
18-05-2008, 06:07 AM
கதையின் ஆரம்பத்தில் பலமாதிரியாக சிந்திக்க வைத்த கதை.
எப்படித்தான் சிந்தித்தாலும் இறுதி முடிவை சிந்திக்க தவறிவிட்டேன்.
ஒருவர் தவறி தரும் சோகத்தினை விட இப்படி இருந்து தரும் சோகம் பல மடங்கு அதிகம்.

வேலை நேரத்தில் இன்று ஒரு சிறுகதை படித்துவிடுவோம் என்று வந்த என் மனதை திருப்திப்படுத்தியதுடன் கனப்படுத்தியும் விட்டது.
நல்லதொரு சிறுகதை படித்த சந்தோஷத்துடன் செல்கிறேன்...

Keelai Naadaan
13-07-2008, 01:57 AM
அற்புதமான, அழகான, அன்பான, அருமையான வசனக் கவிதை தன்மையில் கதை.
ஒரு தகப்பனுக்கு பிள்ளையின் மேல் உள்ள பாசத்தை, சிரத்தையை அன்புமொழியாய் வடித்திருக்கிறீர்கள்.
கதையின் முடிவை படிக்கும் போது சற்று கலங்கிபோனேன்.
சிகிச்சைக்கு பிறகு அவர் (அப்பா) பேசுவார் அதுவரை பொறுத்திருக்க தான் வேண்டும் என சொல்ல தோன்றுகிறது.
முதல் கதையிலேயே முத்திரை பதித்திருக்கிறீர்கள்
அருமையான கதைக்கு நன்றிகள்.

தீபா
13-07-2008, 03:36 AM
என்ன சொல்ல?

ஒரு படைப்பு, கதை மாந்தரையும் கதைக் கருவையும் அழைத்துக் கொண்டுதான் பயணிக்கும் என்று இத்தனை நாளும் எண்ணிக்கொண்டிருந்தேன்.

உணர்வுகளின் நடத்தையை வார்த்தை என்ற ஆடையிட்டு மன்றம் ஏற்றமுடியுமா என்றால் முடியும் என்கிறது நடை. சேறில்லா தெளிவான ஓடை, எத்தனை கலக்கினாலும் சேறாகாது. இதுவும் அப்படித்தான்.

சில அப்பாக்கள் தன் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று மனப்புழுங்களில் கவிழ்ந்திருப்பார்கள். அன்பின் மொழி அறியா தனயர்கள் அக்கவிழ்தலின் புரியாமையாலும் அதை நிமிர்த்தும் உபாயம் அறியாமலும் விழித்துறங்குவார்கள்.

அப்பா..

தட்டிக்கொடுத்து, தூக்கிவிட்டு, உயர்த்தி, மகள் வென்றிட தான் தோற்று,

ஒரு காரணியாகத்தான் உபயோகப்படுகிறாரோ பாசம் மேவியிருக்கிறதோ.

இன்றும் கூட அப்பாவின் அனுபவங்கள் வியக்கிறது எனக்கு. எப்படி அறிந்தார்? ஏன் செய்யக்கூடாது எதைச் செய்யவேண்டும் என்று ஆழ விதைக்கிறார். என்றோ இழைத்த தவறுகளை மறந்து அடுத்த நாளைய பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறாரே! ஒவ்வொரு முறையும்..... எப்படி அம்மனம் இருக்கிறது??

அப்பாவாக இருந்து பார்க்கவேண்டும்...

நீங்கள் உணர்வுகளுக்கு நரம்பும் சதையும் கொடுத்து வயித்தியம் பார்க்கிறீர்கள். பிழைப்பது நாங்கள்.

வாழ்த்து சொல்ல தென்றலுக்கு அருகதையுண்டா?

mukilan
13-07-2008, 04:15 AM
அன்பினால் மட்டுமே யாரும் யாரையும் ஆக்கிரமிக்க முடியும் என்பதைத் தெற்றென விளக்கும் கதை.சிறு வயதில் இப்படி ஆத்மார்த்த நண்பனாக இல்லாத தகப்பனாக இருந்திருந்தால் அந்த மகளுக்கு நினைத்து நெக்குருகி வேண்டி இருக்கத் தேவையில்லை அல்லவா? எப்பொழுதும் தந்தைக்கும்-மகளுக்குமான பாசப்பிணைப்பு ஒரு அற்புதமான விடயம்தான். நண்பர் பூ சொல்லி உள்ளது போல விடலைத் தகப்பன்மார்கள் கற்றுக் கொள்ளப் பாடமாகிப் போன படைப்பு அண்ணா! உங்களின் முதல் முயற்சியா? நம்ப முடியவில்லை.. வில்லை..ல்லை.
காணக்கிடைக்காத தேனைத் தேடி எடுத்துக் கொடுக்கும் பாரதி அண்ணாவிற்கு என் நன்றி.

இளசு
13-07-2008, 06:50 AM
என்றோ படித்த, கேட்ட கருக்களை
எனக்குத் தெரிந்த தமிழில் மன்றப்பலகையில் கிறுக்கும் என்னை

அன்புமொழிகளால் நனைக்கும் நட்புகள்..சொந்தங்கள்...

மெலெழுப்பிய தம்பி பாரதி
அன்புத்தங்கைகள் மீரா, பூ
அன்பு அனு, கீழைநாடான்
இனிய இளவல்கள் மனோஜ், விராடன், முகில்ஸ்
கருத்து வீசிய தென்றல்..

அனைவருக்கும் என் நன்றிகள்..!

சிவா.ஜி
13-07-2008, 09:34 AM
ஆழ்கடலில் அமர்ந்திருந்த அற்புத முத்தை வெளிக்கொண்டுவந்த பாரதிக்கு மிக்க நன்றி.

அப்பா எனும் உயர் உறவை மேலும் உயர்த்திய கதை.

ஒவ்வொரு கட்டத்திலும் அந்த செல்ல குட்டூஸுக்கு தோழனாய், ஆசிரியனாய், ஆன்ம குருவாய்...அனைத்துக்கும் மேலாய் அன்பான ஆதர்ச அப்பாவாய் வாழ்ந்து வீழ்ந்துவிட்ட அந்த மாமனிதரை நினைத்து விழியோரம் வெள்ளம்.

பின்னூட்டத்தில் பூ சொன்னதைப் போல கதை என்ற பொய்த்தலைப்புடன் பதிந்திருக்கும் வாழ்வியல் படிமம். வரிக்கு வரி உணரவைக்கும் படிவம்.

வாழ்த்துகள் இளசு. எழுத்து என்பது எப்படியிருக்கவேண்டுமென எடுத்துக்காட்டாய் விளங்கும் பொக்கிஷம்.

ஓவியா
16-07-2008, 10:27 PM
ஒரு உண்மை கதையை விளக்கியது போல் உள்ளது. உணர்ச்சிகளோடு உணர்ந்து படிக்க கண்களில் நீர்தான் மிஞ்சுகிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

மிக்க நன்றி.

அப்பாவின் நிழலில் வளர்ந்ததால், அந்த 'செல்ல குட்டூஸின்' உணர்வு என்னை ரொம்பவே பாதிக்கின்றது.

இளசு
23-07-2008, 07:57 PM
சிவாவுக்கும் ஓவியாவுக்கும் என் பணிவான நன்றிகள்.

அறிஞர்
23-07-2008, 11:14 PM
வாவ்.... அப்பா-மகள் உறவில் ஏற்படும் நிகழ்வை
அழகாய் படம்பிடித்து காட்டிய வரிகள்..

வார்த்தை விளையாட்டு அருமை.....

இன்னும் நிறைய எழுதுங்கள் இளசு..

இளசு
23-07-2008, 11:41 PM
நன்றி அறிஞரே..

உங்கள் ''நினைத்துப் பார்க்கிறேன்- 5'' தொடர்ந்தால்
நானும் தருவேன்...!

MURALINITHISH
14-08-2008, 08:47 AM
இது போல் ஒரு அப்பா இருந்தால் அப்பாப்பா வென்று விடலாம் உலகை இது போலவே ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை அப்பா உறவு

ரங்கராஜன்
30-03-2009, 08:56 AM
இளசு அண்ணாவின் முதல் கதையா, சூப்பர். இப்பொழுது எல்லார் மனதிலும் உயர்ந்து நிக்கும் இளசு அண்ணாவின் முதல் முயற்சியை படிக்கும் பொழுது சிலிர்ப்பாக இருக்கிறது. அப்பா, பெண் என்பது பல மனப்போராட்டங்களை உடையது. அத்தகைய உறவின் வலியை அழகாக கொண்டு வந்து உள்ளீர்கள் அண்ணா, 2003 ஆம் ஆண்டிலே நீங்கள் ஒரு அபியும் நானும் கதையை சிறுகதையாக எழுதிவிட்டீர்கள், சூப்பர்.

samuthraselvam
30-03-2009, 10:37 AM
ஒரு பெண்ணின் இதயத்தோடு இணைந்து அவளின் உணர்வுகளோடு........

ஆஹா... அருமை அண்ணா....!!

மற்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் அதன் உணர்வுகளோடு கலந்து அதுவாகவே மாறிவிடுவோம் என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்தப் படைப்பு.....

ஓவியா
07-04-2009, 03:48 PM
ஒரு பெண்ணின் இதயத்தோடு இணைந்து அவளின் உணர்வுகளோடு........

ஆஹா... அருமை அண்ணா....!!

மற்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் அதன் உணர்வுகளோடு கலந்து அதுவாகவே மாறிவிடுவோம் என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்தப் படைப்பு.....

அதாவது இளசுவ கண்ணதாசன் போலனு சொல்லறீக அதானே ;)